வேதாசலம், மின்னஞ்சல் எதற்காக?
வேதாசலம் அவர்களுக்கு தமிழ்விக்கி விருது அளிக்கப்படவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய பாண்டியநாட்டு ஊர்கள் பற்றிய நூலை நான் ஓர் ஆய்வுக்காக வாசித்தேன். மிகப்பெரிய பணிகளை ஆற்றியிருக்கிறார்.
இன்று ஆய்வாளர்கள் என அறியப்படுபவர்கள்பெரும்பாலும் எளிமையான கட்டுரைகளை இதழ்களில் தொடர்ச்சியாக எழுதுபவர்களோ, அல்லது அரசியல் விவாதங்களில் ஈடுபடுபவர்களோதான். அரசியல் சண்டைகள் இங்கே இடைவிடாமல் நடக்கின்றன. அந்த சண்டைகளில் ஏதாவது ஒரு தரப்புக்கு பயன்படும்படியாக எதையாவது மிக எளிமையாகவும், மிக தீவிரமாகவும் சொன்னாலொழிய ஆய்வாளர்களுக்கு கவனிப்பே இல்லை.
வேதாசலம் போன்றவர்கள் இச்சூழலில் எந்த மதிப்பும் இல்லை. அவர்களை இன்னொரு ஆய்வாளர் தவிர எவருமே அறிந்திருப்பதுமில்லை.
தமிழகச் கல்விச்சூழலில் இன்று ஆய்வு என்பதே கேலிக்கூத்தாகியுள்ளது. முனைவர் பட்ட ஆய்வு என்பது எப்படியாவது ஒப்பேற்றப்படும் ஒரு பட்டம்தான். அது ஆசிரியர் பணிக்கு அவசியம் என ஆனதுமே கடனே என்று செய்யப்படும் ஆய்வுகளே நிகழ்கின்றன. ஆகவே உண்மையான ஆய்வுக்கு எந்த மதிப்பும் இல்லை.
அரசியல்வாதிகளுக்கு உண்மையான தொல்லியல் ஆய்வுகள் மேல் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் தொல்லியல் ஓர் அறிவுத்துறை. அதற்கான நுணுக்கமான மெதடாலஜி அதற்கு உண்டு. அதில் அதிரடிகளுக்கெல்லாம் இடமில்லை. அதிரடிபேசும் நபர்களை ஆய்வாளர்களாக ஏற்றுக்கொள்வதே நமது வழக்கம்.
வேதாசலம் போன்றவர்கள் இச்சூழலில் இத்தனை பெரிய பணியைச் செய்திருப்பதை எண்ணினால் ஒரு பெரிய நம்பிக்கை உருவாகிறது. எந்நிலையிலும் ஆய்வும் இருக்கும் ஆய்வாளர்களும் இருப்பார்கள் என்ற உறுதிப்பாடு உருவாகிறது. தமிழகத்தில் இன்று இருப்பதுபோல தொல்லியல், வரலாற்று ஆய்வுக்கு எந்த இடமும் இல்லாத ஒரு சூழல் இனி வரப்போவதே இல்லை.
இந்த விருது அவருக்கு ஒரு சிறு நம்பிக்கையை அளித்திருக்கும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
பிகு அவருடைய விருது அறிவிப்பில் மின்னஞ்சல் அளிக்கப்பட்டுள்ளது. அது அவருடைய தனிப்பட்ட விவரம் அல்லவா?
எஸ்.கோவர்தனன்
அன்புள்ள கோவர்தனன்,
நீங்களே சொல்லிவிட்டீர்கள், இன்று தமிழகத்தில் மெய்யான ஆய்வாளர்கள் எந்தச்சூழலில் பணியாற்றுகிறார்கள் என்று. இங்கே மிகச்சிலர் அவருடைய நூல்களை வாசித்திருக்கலாம். மிகச்சிலர் மேற்கொண்டு அவரை அறியவும் விரும்பலாம். அவர்கள் அவருக்கு ஒரு வாழ்த்து சொல்வார்கள் என்றால் அவருக்கு சிலராவது தன்னை வாசிக்கிறார்கள் என்னும் நம்பிக்கை உருவாகும். தமிழ் சீரிய இலக்கியவாதிகள், ஆய்வாளர்களுக்கு அப்படி ஒரு நான்குபேர் சொல்வதைப்போல உண்மையான விருது வேறு ஏதுமில்லை.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
