ஸ்வர்ணமஞ்சரி, சைதன்யா, நவீனதத்துவம்
நீலி இதழ் சார்பில் இன்று நிகழவிருக்கும் சைதன்யாவின் உரையாடலை வழிநடத்துபவர் ஸ்வர்ண மஞ்சரி. இந்த உரையாடல் சைதன்யா பெண் தத்துவ இயலாளர்களைப் பற்றி எழுதிய கட்டுரைகளை ஒட்டி அறவியல் – தத்துவம் சார்ந்து நிகழும். பொதுவாக எந்த தத்துவ விவாதத்திலும் பெண் தத்துவ அறிஞர்கள் பேசப்படுவதே இல்லை. சைதன்யா குறிப்பிடும் இந்த தத்துவ அறிஞர்கள் பற்றி நானறிந்து தமிழில் முதல்முறையாக அவள் வழியாகவே பேசப்படுகிறது. நான் முன்னர் அவர்களை கேள்விப்பட்டதுமில்லை.
பொதுவிவாதங்களில் அவர்கள் தவிர்க்கப்பட்டதில் ஆண்நோக்கு அரசியல் உள்ளது என்று சொல்லப்படுவதை எளிதில் மறுத்துவிடமுடியாது. உண்மையில் இந்தப் பெண் தத்துவசிந்தனையாளர்கள் தத்துவத்தை அறவியலுடன் பிணைத்து முன்வைத்தனர். ஆனால் சென்ற இருநூறாண்டுகளில் உயர்தத்துவம் அறவியலை வேறொரு துறையாக எண்ணி மிக அருவமான கருத்துநிலைகளைப் பற்றிய விவாதங்களை நோக்கிச் சென்றது. பொருள் உருவாக்கம், அதிகாரம் என அதன் பேசுபொருட்களே வேறு. ஆகவேதான் இந்த சிந்தனையாளர்கள் மையவிவாதங்களுக்குள் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
ஆனால் அறவியலை தத்துவத்தில் இருந்து பிரிப்பதே ஓர் ஆணாதிக்க அரசியல் என்று சொல்லும் பெண்ணியர்கள் இன்று உருவாகி வந்துள்ளனர். சைதன்யா அறவியலையே தத்துவத்தின் மையம் என எண்ணுகிறாரோ என எனக்கு தனிப்பட்ட விவாதங்களில் தோன்றியதுண்டு. அதைச்சார்ந்த ஒரு விவாதம் இது.
ஸ்வர்ணமஞ்சரி இன்று இந்த விவாதத்தை ஒருங்கிணைக்கிறார். ஒரு நோக்கில், தமிழ்ச்சூழலில் தத்துவம் என்பதே முழுக்கமுழுக்க ஆண்களின் உலகமாகவே இருந்துள்ளது. பெண்கள் அந்த எல்லைக்குள் நுழைந்ததே இல்லை. ஒரு குரல்கூட இல்லை. மரபான தத்துவமும் சரி , நவீன தத்துவமும் சரி. பெண்கள் உணர்ச்சிகரமானவர்கள், தர்க்கநோக்கை நம்பாதவர்கள் என்னும் விளக்கமும் அதற்கு அளிக்கப்படுவதுண்டு. அதுவும் ஓர் ஆண்நோக்கு விளக்கமாக இருக்கலாம். இன்று இளம் பெண்கள் இந்த விவாதத்தை நிகழ்த்துவது தமிழ்ச்சூழலைப் பொறுத்தவரை ஒரு புதிய தொடக்கம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
