மனு அறக்கட்டளை சார்பில் இன்று (28-ஜூன் 2025) வெளியிடப்படும் லோகமாதேவியின் இரு நூல்களுக்கு (தந்தைப்பெருமரம், கல்லெழும் விதை) எழுதிய முன்னுரை இருபதாம் நூற்றாண்டுக்கே உரிய ஓர் இலக்கியத்துறை என்பது அறிவியல் இலக்கியம். அறிவியல்புனைவு என ஒன்று உண்டு, அது இலக்கியத்திற்கான கருப்பொருட்களையும் படிமங்களையும் அறிவியலில் இருந்து எடுத்துக்கொள்வதுதான் அது. அறிவியல் இலக்கியம் என்பது அறிவியலையே இலக்கியமாக எழுதுவது. அறிவியலில் உள்ள தகவல்களும் கொள்கைகளும்தான் எழுதப்படும். கற்பனைக்கு இடமே இல்லை. ஆனால் அந்தத் தகவல்களையும் கொள்கைகளையும் கொண்டுவாசகனின் கற்பனையை விரிவாக்கி அறிவியலை புகட்டுபவை அறிவியல் இலக்கியங்கள்.நான் அப்படிப் படித்த முதல்நூல் சோவியத் ருஷ்ய வெளியீடான யாக்கோப் பெரெல்மான் எழுதிய
பொழுதுபோக்குப் பௌதீகம் என்னும் இரண்டு பகுதிகள் கொண்ட நூல். என் பள்ளிப்பருவத்தில் எந்த ஒரு மாயாஜாலப் படைப்பையும் விட என்னை ஆட்கொண்டது அந்த புத்தகம்தான். அந்நூலில் ஜூல்ஸ்வெர்ன் போன்ற அறிவியல் புனைவெழுத்தாளர்களை தொடர்ந்து மேற்கோள் காட்டியிருந்தார். பல நாவல்களை நான் முதன் முதலில் கேள்விப்பட்டதே அந்நூல் வழியாகத்தான்.தொடர்ந்து சோவியத் வெளியீடுகளான அறிவியல்நூல்கள் என்னை பெரிதும் கவர்ந்தன. ‘அனைவருக்குமான உடலியங்கியல்’ என்னும் நூலை செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்று பயின்றதை நினைவுகூர்கிறேன். அதன்பிறகு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பொதுவாசிப்புக்குரிய அறிவியல்நூல்கள் மேல் பெரும் பித்தே எனக்கு உருவாகியது. என்னை ஆங்கில அறிவியல் இலக்கியத்திற்குள் கொண்டுசென்ற நூல் டெஸ்மண்ட் மோரிஸ் எழுதிய நிர்வாணமான குரங்கு. இன்றுவரை அத்தகைய எழுத்துக்களின் தீவிரமான வாசகன் நான். அவற்றில் ரிச்சர்ட் ரிஸ்டாக், கார்ல் சகன் போன்ற அறிவியலாளர்கள் உண்டு. கொஞ்சம் கூடுதலான ஊகங்களை அளிக்கும் லயால் வாட்ஸன் போன்றவர்கள் உண்டு.பெரும்பாலும் புனைவா என்ற ஐயம் தோன்றச்செய்யும் எரிக் வான் டேனிகன் போன்றவர்களும் உண்டு.
தமிழில் அறிவியல் எழுத்துக்கு பலரும் சுஜாதாவை மேற்கோள் காட்டுவதுண்டு. எனக்கு சுஜாதாவின் நல்ல சிறுகதைகள், அதைவிட நாடகங்கள் மேல் பெருமதிப்புண்டு. தமிழின் சிறந்த சூழல்சித்தரிப்பாளர் என்ற எண்ணமும் உண்டு. ஆனால் அவர் மேலோட்டமான அறிவியல் எழுத்தாளர் , அறிவியல் எழுத்தைப் பொறுத்தவரை மிக மோசமான முன்னுதாரணம் என நினைக்கிறேன். நல்ல அறிவியல்நூல்கள் இல்லாத பொதுவாசிப்புச் சூழலில் அறிவியலை வேடிக்கையான துணுக்குச் செய்திகளாக கொண்டுசென்றவர். அறிவியல்கொள்கைகளை விளக்குவதற்கான மொழியோ புரிதலோ அவருடைய எழுத்தில் வெளிப்பட்டதில்லை.பாமரர்களுக்கும் அறிவியலைக் கொண்டுசெல்வது என்பது அறிவியலை பாமரத்தனமாக ஆக்குவதோ, பாமர மொழியில் அறிவியலைச் சொல்வதோ அல்ல. சுஜாதாவுக்கு அறிவியல் சுவாரசியமாக இருக்கமுடியும் என்ற நம்பிக்கை இருந்ததில்லை. ஆகவே அறிவியலை எப்போதுமே மிக மேலோட்டமாகவும், பெரும்பாலும் அரைகுறையாகவும்தான் அவர் சொன்னார். (அதை அவர் சுருக்கிச் சொல்வது என நினைத்துக்கொண்டார்) பாமரவாசகர்களைக் கவரும் வேடிக்கை, கிண்டல் ஆகியவற்றை ஊடாகக் கலந்துகொண்டார். பெரும்பாலும் அவருடைய வாசகர்கள் அவருடைய அறிவியலெழுத்தில் ரசித்தது அந்த சில்லறை வேடிக்கைகளைத்தான். அத்தகைய விடலைத்தனமான மொழியில் எழுதப்படும் அறிவியல் சார்ந்த எழுத்துக்களை ஏராளமாக உருவாக்கினார் என்பதனால்தான் அவர் மோசமான முன்னுதாரணம்.அறிவியல் இலக்கியம் சுவாரசியத்திற்காக அறிவியலுக்கு அப்பால் எதையும் நாடவேண்டியதில்லை. இந்தப் பிரபஞ்சத்தின் , இந்த உயிர்வெளியின் ஆழத்து மர்மங்களை நோக்கித் திறப்பது என்பதனாலேயே அறிவியல் பெரும் வசீகரம் கொண்டது. கற்பனையை அதன் எல்லை வரைக்கும் கொண்டுசெல்லக்கூடியது. தமிழில் அத்தகைய அறிவியல் சார்ந்த எழுத்துக்களை என்.ராமதுரை ஓரளவுக்கு எழுதியிருக்கிறார்.ஆனால் சூழியல் தளத்தில் தியடோர் பாஸ்கரன் எழுதிய நூல்களே மெய்யாகவே அறிவியல் இலக்கியம் என்று சொல்வதற்கான தகுதி கொண்டவை.தியடோர் பாஸ்கரன் வாசகனை மொழியால் கிச்சுகிச்சு மூட்டவில்லை. அவர் அவனுடைய முதிர்ச்சியை நம்பினார். அறிவியல் செய்திகளைக் கொண்டு வாசகனை திகைப்படையச் செய்யவுமில்லை. அறிவியலின் தரவுகளையும் கொள்கைகளையும் கூரிய மொழியில், தெளிவாக முன்வைத்தார். அதற்குரிய கலைச்சொற்களை தானே உருவாக்கினார் . தனியொருவராக சுற்றுச்சூழலியல் அறிவியலை தமிழ் வாசிப்புலகில் நிலைநிறுத்தினார். அறிவியல் செல்லும் அறிதலின் ஆழங்களை, அது உருவாக்கும் பிரபஞ்ச தரிசனங்களையே தியடோர் பாஸ்கரன் முன்வைத்தார். தமிழில் அவர் அதற்கு மகத்தான முன்னுதாரணம்.தியடோர் பாஸ்கரனின் வழியில் வந்த முதன்மையான அறிவியல் இலக்கிய ஆசிரியர் என்று லோகமாதேவியைச் சொல்வேன். அவர் தாவரவியல் நிபுணர், ஆய்வாளர், பேராசிரியர். தாவரங்களைப் பற்றிய அளப்பரிய ஆர்வத்தை தன் வாழ்க்கையாகக் கொண்டவர். தன் துறையில் பெரும் ஈடுபாடு கொண்ட ஓர் ஆசிரியர் என்ன செய்யமுடியும் என்பதற்கான சான்றாக அமையும் சிலரையே நாம் வாழ்க்கையில் சந்திக்க முடியும். லோகமாதேவி அத்தகையவர்களில் ஒருவர். அவ்வகையில் தமிழில் தாவரங்களைப் பற்றி பொதுவாசகர்களுக்காக உருவாக்கப்படும் இலக்கிய மரபு ஒன்று இனி உருவாகும் என்றால் அவரே அதன் முன்னுதாரணமும் முன்னோடியுமாகக் கருதப்படுவார்.லோகமாதேவி அறிவியல் திரட்டியுள்ள தரவுகளையும், அறிவியல் நிரூபித்துள்ள கொள்கைகளையும் மட்டும்தான் சொல்கிறார். ஆனால் அவற்றை இன்றைய வாழ்க்கைச்சூழலுடன் இணைத்துக்கொண்டு, நாம் அறிந்த நம் சூழலில் நாமறியாத என்னென்ன உள்ளது என்ற பிரமிப்பை உருவாக்கும்படி முன்வைக்கிறார். அந்தப் பிரமிப்பு இயற்கை என்னும் இந்த மாபெரும் உயிர்வெளி பற்றிய ஒரு மெய்யியல்தரிசனமாக வாசகனில் விரிவடைகிறது. அந்த தரிசனமே அவருடைய கட்டுரைகளை வாசிப்பவர்கள் அவற்றை இலக்கியமாகக் கொள்ளச் செய்கிறது.உதாரணமாக, ஒரு தாவரவியலாளரின் பார்வையில் பயிர் என்றும் களை என்றும் பேதமில்லை. எல்லாமே செடிகள்தான். களைகளும் ஓரு சூழலின் பிரிக்கமுடியாத பகுதிதான், அவையும் ஒருவகை தேசியச் செல்வம்தான், அரசு களைகளின் அழிவையும் கண்காணிக்கவேண்டும் என்று லோகமாதேவி சொல்லும் இடம். எனக்கு அது மெய்சிலிர்ப்பூட்டும் ஒரு வேதாந்த தரிசனமாகவே இருந்தது. களை,களையப்படவேண்டியதுஎன்னும் சொல்லே தாவரங்கள் மீதான பொறுப்பற்ற பார்வையை காட்டுவது என நினைத்தேன்.தமிழில் சூழியல் பற்றி பேசியவர்களே அதிகமும் இயற்கை பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக இயற்கையின் அழிவைப்பற்றிய அபாயமணியை அடிப்பவர்களாக, அதற்காக கொஞ்சம் அறிவியலை கடந்து செல்பவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக, சீமைக்கருவேலத்தை ஒரு மாபெரும் நோய்க்கூறாக அவர்கள் சித்தரிப்பதைச் சொல்லலாம். ஆனால் அவர்கள் சொல்லும் எந்த தீங்கையும் சீமைக்கருவேலம் இழைப்பதில்லை, அதற்கான ஒரு அறிவியல்சான்றுகூட உருவாக்கப்படவில்லை என்று லோகமாதேவி சொல்லுமிடத்தைக் குறிப்பிடலாம்.இயற்கையை காக்கும் பொறுப்புள்ளவனாக மனிதனை லோகமாதேவி சித்தரிக்கவில்லை. இயற்கை மேல் பரிவுணர்ச்சி (sympathy) கொள்ள மனிதனுக்கு தகுதி உண்டா என்ன? இயற்கையைப் புரிந்துகொள்ள, அதில் தன்னை இணைத்து உணர மட்டுமே அவருடைய கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. அவற்றிலுள்ளது ஓர் ஆழ்ந்த தன்மய உணர்வுதான் (empathy). உதாரணமாக நகரங்களில் செயற்கை மின்வெளிச்சத்தில் இரவெல்லாம் நின்றிருக்கும் தாவரங்கள் இரவும் பகலும் மாறிவருவதை உணரமுடியாதபடி ஆகின்றன, இது ஒரு சித்திரவதை, அவற்றின் உயிரியல்பே தாறுமாறாகிவிடுகிறது என்னும் குறிப்பைச் சுட்டிக்காட்டுவேன். இங்கே எவருமே யோசிக்காத ஒரு கோணம் அது.லோகமாதேவி ஒரு வாசகராக எனக்கு அறிமுகமானவர். கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தவரை கட்டுரைகள் எழுதும்படி கோரி, வற்புறுத்தி எழுதச் செய்தேன். ஏனென்றால் தமிழில் அறிவியல் இலக்கியம் உருவாகவேண்டும் என்னும் விழைவு எனக்கு இருந்தது. மிகமிகக் குறைவாகவே பொறுப்புணர்வுடன், அறிவார்ந்த நடையில், எழுதப்படும் அறிவியல் இலக்கியம் தமிழில் வெளிவருகிறது. அதற்கான வாசகர்கள் இங்கே இன்னும் பெருவாரியாக உருவாகவில்லை. அறிவியலை வேலைக்கான கல்வியாகவே நாம் கற்கிறோம், அறிவுத்தேடலுக்காக வாசிப்பதே இல்லை. ஆயினும் அறிவியக்கச் செயல்பாடு என்பது அது இயல்பானது என்பதனால், தேவை என்பதனால் நிகழவேண்டியதே ஒழிய சூழலின் ஆதரவு அதற்கு ஒரு பொருட்டு அல்ல என எண்ணினேன்.லோகமாதேவி என் இணையப்பக்கத்தில்தான் நீண்ட அறிவியல் கட்டுரைகளை எழுதினார். பல கட்டுரைகள் எனக்கு எழுதப்பட்ட கடிதங்கள். இன்று லோகமாதேவியின் பலநூல்கள் வெளிவந்துவிட்டன. அவர் ஓர் ஆய்வாளராக சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறார். தாவரவியல் வகுப்புகள் நடத்துகிறார். தமிழகத்தில் தேவையான,முற்றிலும் புதிய ஓர் அறிவுத்தளத்தை அறிமுகம் செய்யும் வாசகராகவும் அறியப்பட்டிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.ஜெயமோகன்(லோகமாதேவியின் நூலுக்கு எழுதிய முன்னுரை)
Published on June 27, 2025 11:35