காவியம் – 68
கானபூதி சொன்னது. பிரதிஷ்டானபுரியின் சொல்லவையான காவியப் பிரதிஷ்டானத்தில் இடம்பெறவேண்டும் என்னும் கனவுடன் சோமசர்மன் என்னும் பிராமணன் தெற்கே காஞ்சீபுரத்தில் இருந்து ஓராண்டுக்காலம் நடந்து வந்து சேர்ந்தான். அவன் காஞ்சியின் புகழ்பெற்ற கடிகாஸ்தானம் என்னும் வித்யாசபையில் வியாகரணமும், காவியமும், அலங்காரமும் கற்றிருந்தான். அந்த சபையில் அவன் வரகவி என்று புகழப்பட்டான். அவனுடைய ஞானத்திற்கான இடம் இருப்பது பிரதிஷ்டானபுரியிலேயே என அவனைக் கற்பித்த ஆசிரியர்கள் சொன்னார்கள். அவர்களை வணங்கி ஆசிபெற்று அவன் பிரதிஷ்டானபுரிக்குக் கிளம்பினான்.
பிரதிஷ்டானபுரி அவனைத் திகைக்கச் செய்தது. ’நகரேஷு காஞ்சி’ என்று வேதங்கள் புகழும் பெருநகரில் பிறந்தவன் என அவன் தன்னைப் பற்றி எண்ணியிருந்தான். ஆனால் பிரதிஷ்டானபுரியுடன் ஒப்பிடும்போது காஞ்சி ஒரு சிறுகிராமம் போலத் தோன்றியது. அந்நகரம் ஒரு பெரிய சுழிபோல அவனை பலநாட்கள் சுழற்றியடித்தது. அந்தணன் என்பதனால் அவனுக்குச் சத்திரங்களில் உணவும் படுக்க இடமும் கிடைத்தது. அந்நகரை புரிந்துகொண்டு, அதன் காவியசபைக்குள் நுழையவேண்டும் என்று அவன் எண்ணினான். பல மாதங்களுக்குப் பின் அவனுக்கு புரிந்தது, அங்கே எவரும் எவரையும் கவனிப்பதில்லை என்று. ஒவ்வொருவரும் தங்களை எங்கேயாவது புகுத்திக்கொள்ள முட்டி மோதிக்கொண்டிருந்தார்கள். ஆகவே ஒவ்வொருவரையும் அவர்கள் தங்கள் எதிரிகளாகவே எண்ணினார்கள்.
சோமசர்மன் பலமுயற்சிகளுக்குப் பின்னர் ஒரு முடிவுக்கு வந்தான். அந்நகரின் காவியசபையின் முதல் வட்டத்திற்குள் நுழைவதுதான் மிகக்கடினம். அதற்கு எந்நேரமும் முயன்றபடி பல ஆயிரம்பேர் இருந்தனர், அவர்களே ஒரு முள்வேலியாக ஆகி பிறர் உள்நுழையமுடியாதபடிச் செய்தனர். அவர்களுடன் முட்டிமோதி அவர்களில் ஒருவனாக ஆவது வீண்வேலை. அந்த வட்டத்திற்குள் ஒரு சிறுவிரிசல் வழியாகவே நுழைய முடியும். அந்த விரிசலைக் கண்டடையவேண்டும். அதற்கு ஏதேனும் ஒரு இடத்தை தேர்வுசெய்து அங்கேயே முழுமூச்சாக முயலவேண்டும்.
சோமசர்மன் கோதாவரியின் கரையில் ஒவ்வொரு நாளும் காலையில் குளிக்கும்போது அங்கே குளிக்கவரும் பண்டிதர்களை கூர்ந்து கவனித்தான். தேவமித்ர சதகர்ணியின் காவியசபையில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு புலவருக்கும் அவர் இருக்கும் வட்டத்திற்குரிய அடையாளங்கள் இருந்தன. அந்தச் சபையின் ரஜதமாலா என அழைக்கப்பட்ட மூன்றாவது வட்டத்தில் இருந்த நூற்றியெட்டு புலவர்களில் ஒருவரான பிரபாவல்லபர் தன் தந்தை மறைந்தபின் அந்த இடத்தை அடைந்திருந்தார். இளைஞரான அவருக்கு இரண்டு மாணவர்கள் மட்டுமே இருந்தார்கள். அவரை சோமசர்மன் தேர்வுசெய்தார்.
சோமசர்மன் சென்று பிரபாவல்லபரை வணங்கி தன்னை அவருடைய மாணவனாகச் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டார். தன் வயதை ஒத்த ஒருவர் வந்து அவ்வாறு கோரியது பிரபாவல்லபரை திகைக்கச் செய்தது. “நான் காஞ்சியின் கடிகாஸ்தானத்தில் கற்றவன். உங்கள் தந்தையின் புகழை அறிந்து அவரை தேடி வந்தேன். அவர் மறைந்துவிட்டார் என்பதனால் அவராக எண்ணி உங்கள் அடிகளில் பணிகிறேன்” என்று சோமசர்மன் சொன்னார்.
பிரபாவல்லபருக்கு புதியவர் மேல் சந்தேகம் இருந்தாலும் சபைக்கு அவரைப்போன்ற ஒருவரை மாணவராக அழைத்துச் செல்வது தனி மதிப்பை அளிக்கும் என்று நினைத்தார். ஆகவே மாணவராகச் சேர்த்துக் கொண்டார். சோமசர்மன் தன் கல்வியையோ கவித்திறமையையோ பிரபாவல்லபருக்கு முழுக்கக் காட்டாமல், அவருக்கு பணிவிடைசெய்வதில் கவனமாக இருந்தார். பிரபாவல்லபர் எண்ணுவதை எண்ணி முடிப்பதற்குள் செய்தார். ஆனாலும் பிரபாவல்லபர் அவரை ரகசியமாகக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
ஒரு முறை பிரபாவல்லபர் நகரத்தின் ஞானசத்திரங்களில் ஒன்றில் தொல்கவிஞர் சீர்ஷபிந்துவின் கவிதை ஒன்றை தன்னிடம் பாடம்கேட்க வந்த இளைஞர்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அருகே அமர்ந்து சோமசர்மர் ஏடு எடுத்துக் கொடுத்தார். ’யாழிசைத்து வரும் வண்டுக்கு இதழ்களில் நிறைந்த தேனுடன் காத்திருக்கும் வண்ணமலர்கள் காம்போஜத்தின் இல்லத்தரசியர்’ என்ற வரியை அவர் “வண்டு என்பது இங்கே நகரத்தின் அரசன். பெண்கள் அவனுக்காக மதநீருடன் காத்திருக்கிறார்கள்” என்று விளக்கியபோது சோமசர்மர் அறியாமல் ஒருமுறை அசைந்தார். அக்கணமே தான் சொன்னது எவ்வளவு பெரிய பிழை என்றும், அதை சோமசர்மர் உணர்ந்துவிட்டார் என்றும் பிரபாவல்லபருக்குத் தோன்றியது.
அந்த சபையில் இருந்த ஓர் இளைஞனே “இல்லத்தரசியர் என்று கவிஞர் சொல்லிவிட்டார். ஆகவே அது காமத்தால் காத்திருப்பது அல்ல. யாழ் மீட்டிவரும் வண்டு பிக்ஷை ஏற்கவரும் முனிவர். அவருக்கு தானம் கொடுப்பதற்காக கலங்களில் தேனுடன் நிற்கின்றனர் குலப்பெண்கள் என்றுதான் பொருள் கொள்ள முடியும்” என்றான்.
பிறர் “ஆமாம், அதுதான் சரியாகப் படுகிறது” என்றனர்.
பிரபாவல்லபர் திகைத்து “அதெப்படி? காம்போஜத்தின் அரசன்…” என்று ஏதோ சொல்லத் தொடங்கி நடுக்கத்துடன் நின்றுவிட்டார்.
சோமசர்மர் ஊடே புகுந்து “நீங்கள் எடுப்பது வழக்கமான அர்த்தம். என் ஆசிரியர் அளித்தது சிறப்பு அர்த்தம்” என்றார். “அரசன் என்பவன் இந்திரன். வண்டு வடிவில் இந்திரன் வருவதை ஏற்கனவே வியாசகாவியமும் சொல்கிறது. வண்டுக்காக மலர்கள் தேனுடன் காத்திருக்கின்றன என்பது இந்திரனுக்காக மகளிர் காத்திருப்பதற்குச் சமானம் என்பது அந்தவகையில் சரிதான். இந்திரன் தேவன், அவனை எண்ணினால் மானுடமகளிருக்கு கற்பு குறைவுபடுவதில்லை…” என்றார்.
”ஆம்” என்று பிரபாவல்லபர் சொன்னார்.
ஆனால் அன்று திரும்பும்போது அவர் அதைப்பற்றி சோமசர்மரிடம் எதையுமே பேசவில்லை. மறுநாள் மிக இயல்பாக உரையாடி அந்த நிகழ்வைக் கடந்தும் சென்றார். ஆனால் அவர் தன்னை அடையாளம் கண்டுகொண்டார் என்று சோமசர்மரும் உணர்ந்திருந்தார்.
ஓராண்டுக்காலம் கடந்தபோது சோமசர்மர் தன் எச்சரிக்கையுணர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்.பிரபாவல்லபரிடம் உரிமை எடுத்துக்கொண்டு சற்று கேலிசெய்யவும்கூட துணிந்தார். பிரபாவல்லபர் சோமசர்மரின் மேல் பெரும் மதிப்பு கொண்டவராக தன்னைக் காட்டிக்கொண்டார்.
அரசரின் முதல்மகன் வீரியவர்மன் சூரியபுத்ர சதகர்ணி என்ற பெயரில் பட்டத்து இளவரசனாக அமர்த்தப்பட்டதை ஒட்டி பிரதிஷ்டானபுரியில் பன்னிரண்டுநாள் திருவிழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி இசையரங்குகளும், நடன அரங்குகளும், நாடக அரங்குகளும் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. வாக்பிரதிஷ்டானத்தில் எட்டு காவியங்கள் முன்வைக்கப்பட்டு அவற்றில் இரண்டு ஏற்பு பெற்றன. முதன்மைக்கவிஞர்கள் நீள்கவிதைகளையும் பிரபந்தங்களையும் அவையில் முன்வைத்தனர்.
பன்னிரண்டாம் நாள் வாக்பிரதிஷ்டான சபையையும், அரசரையும் பட்டத்து இளவரசரையும் புகழ்ந்து எவர் வேண்டுமென்றாலும் கவிதை பாடலாம் என்று அறிவிக்கப்பட்டது. அங்கே தலைக்கோலன் அளிக்கும் முதலடியை ஒட்டி அப்போதே கவிதை புனையப்பட்டு உடனே பாடப்படவேண்டும்.
‘இத்தனை வண்ணங்கள் என்றால் என்ன செய்வேன்?.’ என்னும் முதலடி அறிவிக்கப்பட்ட அதே கணத்தில் சோமசர்மன் எழுந்து கைதூக்கினார். சபை வியந்து திரும்பிப் பார்த்தது. பாடுக என்று தலைக்கோலன் கைகாட்டினான்.
சோமசர்மன் “இத்தனை வண்ணங்களென்றால் என்ன செய்வேன்? வாக்பிரதிஷ்டான மலர்ச்சோலையில் வழிதவறிவந்த பச்சோந்தி நான்!” என்றார்.
சபையில் வியப்பொலி எழுந்தது. ஆனால் அவர் அடுத்த வரியைச் சொல்வதற்குள் பிரபாவல்லபர் தலையில் ஓங்கி அறைந்தபடி எழுந்து “வித்வத்சபை என்னை மன்னிக்கவேண்டும். இவர் என் மாணவர் என்பதற்காக நான் வருந்துகிறேன்… இவர் காஞ்சியில் கடிகாஸ்தானத்தில் பயின்றவர். அந்த சிறுதோணியைக்கொண்டு இந்த கோதாவரியைக் கடக்கமுடியாது என்று பலமுறை சொன்னேன்” என்று கைகூப்பினார்.
சோமசர்மர் மேற்கொண்டு பேச முயல அதை தடுத்தபடி பிரபாவல்லபர் சொன்னார். “இந்தக் காவியசபை மலர்வனம். ஆனால் பச்சோந்திக்கு இந்த மலர்கள் பொருட்டே அல்ல. அது இங்கே பூச்சிகளை பிடித்து உண்ண வந்திருக்கிறது. இதிலுள்ள விரசம் இந்தச் சபைக்கு ஒவ்வாமையை அளிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. தேனுண்ணவரும் வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்களுக்காக காத்திருக்கும் மலர்கள் இவை” என்றார்.
வாக்பிரதிஷ்டானத்தில் ஒரு சிறிய வழியை காட்டிவிட்டால்போதும் என பிரபாவல்லபர் அறிந்திருந்தார். அத்தனைபேரும் எழுந்து சோமசர்மரின் கவிதைவரியை ஏளனம் செய்யத் தொடங்கினார்கள். “பச்சோந்தி மலர்களை கண்டு முக்கி முக்கி ஏதோ சொல்ல முயல்கிறது” என்று ஒருவர் சொல்ல அரசனும் உரக்கச் சிரித்தான். “பச்சோந்தி தன்னை உடும்பாக நினைத்துக் கொள்கிறது” “உடும்பு அல்ல முதலை” என குரல்கள் எழுந்தன.
அவச்சுவை கொண்ட பாடலை முன்வைத்தமைக்காக சோமசர்மரை முதற்புலவரான கிரீஷ்மர் தண்டித்தார். சோமசர்மர் தன் ஆடைகளை அவிழ்த்துவிட்டு கோவணம் மட்டும் அணிந்து வாயில் எழுத்தாணியைக் கவ்விக்கொண்டு பச்சோந்தி போல தாவித்தாவி அந்தச் சபையில் இருந்து விலகவேண்டும் என்று ஆணையிடப்பட்டது. அவ்வாறே வெளியேறிய சோமசர்மனை வெளியே கூடியிருந்த இளம்புலவர்கள் சிரித்துக் கூச்சலிட்டுக்கொண்டே தூக்கி தலைக்குமேல் சுழற்றி வீசி விளையாடினார்கள். குடிகாரர்கள் அவர் மேல் கள்ளைக் கொட்டினார்கள்.
ஒரு மதுக்கடையின் மூலையில் விடியவிடியக் குடித்துக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்த சோமசர்மர் பின்னர் பிரதிஷ்டானபுரியின் மையவீதிகளில் தென்படவே இல்லை. அவர் கோதாவரிக்கரையில் உழவர்களின் குடில்களை ஒட்டி ஒரு குடிசை கட்டிக்கொண்டார். அவர்களுக்கு எண்ணும் எழுத்தும் கற்பித்து வாழ்ந்தார். அவர்கள் அவருக்குத் தேவையான கொடைகளை அளித்தனர்.
சோமசர்மன் உழவர்குலத்தைச் சேர்ந்த மானஸி என்னும் பெண்ணை முறைப்படி மணந்து கொண்டார். அவள் மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். வத்ஸன், குல்மாகன் என இரண்டு மகன்கள். மூன்றாவதாக சுருதார்த்தை என்னும் மகள். சோமசர்மன் பழைய நிகழ்வுகளை தன் மகன்களிடம் மட்டும் ரகசியமாகச் சொன்னார். ”நான் இறந்தால் என்னிடமிருக்கும் சுவடிகளை எல்லாம் என்னுடன் சேர்த்து எரித்துவிடுங்கள். அதுவரை இச்செய்திகளை எவரும் அறியவேண்டியதில்லை” என்றார்.
சுருதார்த்தைக்கு பதினைந்து வயதிருக்கையில் அவள் கருவுற்றாள். அந்தக் கருவுக்கு தந்தை யார் என்று கேட்டபோது அவள் பதில் சொல்ல உறுதியாக மறுத்துவிட்டாள். சோமசர்மன் அவரே ஜாதகத்தைப் பார்த்து அவள் எப்படிக் கருவுற்றாள் என்று கண்டடைந்தார். பாதாள நாகமான வாசுகியின் தம்பி கீர்த்திசேனன் என்னும் நாகம் அவள் கோதாவரியில் நீராடிக்கொண்டிருக்கையில் நீருக்கு அடியில் இருந்து அவளைப் பார்த்து காமம் கொண்டது. காலடிகளைத் தொடர்ந்து வந்து இரவில் வீட்டுக்குள் நுழைந்து அவளைப் புணர்ந்தது. அவள் கீர்த்திசேனனின் குழந்தையைப் பெற்றாள்.
அக்குழந்தைக்கு குணபதி என்று சோமசர்மன் பெயரிட்டார். அந்தக் குழந்தை இரண்டு வயது வரை பேச்சு வராமல், நடக்கவும் முடியாமல் இருந்தது. ஒருநாள் சுருதார்த்தை தன் குழந்தையை எடுத்துக்கொண்டு கோதாவரிக்குச் சென்று நீரில் பாய்ந்துவிட்டாள். அவள் கோதாவரிக்குச் செல்வதைக் கண்டு கூச்சலிட்டு துரத்திவந்த சோமசர்மன் கூடவே பாய்ந்து அவளைப் பிடிக்க முயன்றாலும் அவள் நீருடன் சென்றுவிட்டாள். ஆனால் அவர் கையில் இன்னொரு குழந்தை சிக்கியது.
அதுவும் இரண்டு வயதான ஆண் குழந்தை. அவர் அக்குழந்தையை கரைக்கு கொண்டுவந்து படிக்கட்டில் போட்டார். அவருடைய மகன்கள் வத்ஸனும் குல்மாகனும் அக்குழந்தையை குனிந்து பார்த்தார்கள். அது சமர் சாதிக்குழந்தை என்று வத்ஸன் அடையாளம் கண்டான். ஆனால் அப்போது அந்தக் குழந்தை மயக்கநிலையில் வேதச்சொல் ஒன்றை முணுமுணுத்தது. “மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:” என்று அது சொன்னது.
திகைப்புடன் அக்குழந்தையை பார்த்த சோமசர்மன் தன் மகன்களிடம் ”இவன்தான் சுருதார்த்தையின் மகன்… இவனை எடுத்துக்கொண்டு ஏதாவது புதிய இடத்திற்கு போய்விடுங்கள். அங்கே இவன் உங்கள் தங்கைமகன் என்று சொல்லி வளர்த்து வாருங்கள். இவனுக்கு முன்னறிவு உள்ளது. எல்லாவற்றையும் இவனே கற்றுக்கொள்வான். அவன் வளர்ந்து வரும்போது என் கதையை அவனிடம் சொல்லி அச்சுவடிகளை அவனுக்குக் கொடுங்கள்” என்றார். அதன்பின் கோதாவரியில் பாய்ந்து தானும் ஜலசமாதி ஆனார்.
”அவர்கள் இருவரும் அக்குழந்தையுடன் பிரதிஷ்டானபுரியின் இன்னொரு பகுதியில் குடியேறினார்கள். அவனையே குணபதி என்று பெயரிட்டு வளர்த்தனர். அவன் ஏழுவயதுக்குள் நான்கு வேதங்களையும் கற்றான். பன்னிரண்டு வயதுக்குள் இலக்கணங்களை முழுமையாகக் கற்றான். பதினேழு வயதில் அவன் கற்காத எந்த நூலுமே இல்லை என்ற நிலையை அடைந்தான்” என்று கானபூதி சொன்னது.
“இந்தக் கதையை இப்படியே கதாசரிதசாகரத்தின் கதைகள் நடுவே வைத்துவிடலாம்” என்று நான் சொன்னேன். “காவியமா நாட்டுப்புறக் கதையா என்று தெரியாதபடி உள்ளது”
“ஆம், கதைகளில் பல செய்திகள் மறைக்கப்படும்போதுதான் அவை இத்தனை மாயங்களும் தற்செயல்களும் கொண்டவையாக ஆகின்றன” என்று கானபூதி சொன்னது. “இந்தக் கதையில் இருந்து எழும் கேள்விகள் இரண்டு. நான் கேட்கலாமா?”
“கேள்” என்று நான் சொன்னேன். “நான் எந்தக் கேள்விக்கும் பதிலைச் சொல்லிவிட முடியும் என்று நினைக்கிறேன்”
“சொல், யமி எவரிடமிருந்து கருவுற்றாள்?”
“பாதாள அரசன் வாசுகியின் தம்பியாகிய கீர்த்திசேனன். அவன் கோதாவரியில் வாழ்பவன்”. சிரித்துக்கொண்டு “அந்தக்கதையின் அதே தர்க்கம்தான் இதற்கும்” என்றேன்.
“உண்மை” என்று கானபூதி சிரித்தது.
“எல்லாம் எத்தனை எளிதாக ஆகிவிட்டன” என்று நானும் சிரித்தேன்.
சிரிப்பு மறைந்து முகம் இறுக “இரண்டாவது கேள்விக்கு நீ சரியான பதிலைச் சொல்லவில்லை என்றால் இந்த உரையாடல் இத்துடன் முடியும்” என்றது கானபூதி.
“சொல்” என்றேன்
“மால்யன், குணபதி, குணாட்யர் என்று உருமாறிய அந்த மனிதன் எங்கிருக்கிறார்?”
“நான்தான் அவர்” என்று நான் சொன்னேன். மிகமெல்ல, மந்திரம் போலச் சொன்னேன். “நான்தான் குணாட்யன்”
”ஆம், கண்டுபிடித்துவிட்டாய்” என்று சொல்லி சக்ரவாகி என் தோள்மேல் ஏறி அமர்ந்தது. “தொடக்கம் முதலே எங்களுக்குத் தெரியும். இந்தக் கதை அதை நோக்கியே புனைந்து கொண்டுசெல்லப்பட்டது”
“உண்மையில் குணாட்யரின் கதையில் நிறைய வேறுபாடுகள் உண்டு…”என்றது சூக்ஷ்மதரு. “சோமதேவரின் கதாசரிதசாகரத்தின் கதை உனக்குத் தெரியுமே…இந்தக் கதை உனக்காக உருவாக்கப்பட்டது. நீ வந்தடைந்துவிட்டாய்…”
ஆபிசாரன் என்னை தொட்டு உலுக்கி “நீ உன்னை குணாட்யர் என உணர்வது ஒரு பெரிய பொறி… அதில் சிக்கிக் கொள்ளாதே” என்றது.
நான் கானபூதியிடம் “இப்போது உன்னிடம் கேள்விகேட்பது என் முறை” என்றேன். ஆனால் கானபூதி வேறெங்கோ அமர்ந்திருப்பதுபோலத் தோன்றியது. நான் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அதன் உருவம் மரத்தில் மறைந்தது.
“உன்னைச் சிக்கவைத்துவிட்டு விலகிவிடுகிறது, விடாதே” என்று ஆபிசாரன் சொன்னது. “அது மீண்டும் வந்து உனக்குக் கதைசொல்லியாகவேண்டும். அந்தக் கதை வழியாகவே நீ இப்போதுள்ள இந்தப் பொறியில் இருந்து வெளியே செல்லமுடியும்… அது வந்தே ஆகவேண்டும் என்பதுபோல ஒரு கேள்வியைக் கேள்…உடனே கேள்”
நான் வாயெடுப்பதற்குள் சக்ரவாகி “இதோபார், அது சொல்லவேண்டிய எல்லா கதைகளையும் சொல்லிவிட்டது. இனி அது தேவையில்லை. நீ உன் பணியைத் தொடங்கு” என்றது.
“என்ன பணி?”என்றேன்.
“முட்டாள், நீ ராதிகாவிடம் என்ன சொன்னாய்? உன்னை ஒரு கவிஞன் என்றாய், பெருங்காவியம் ஒன்றை எழுதப்போவதாகச் சொன்னாய்” சக்ரவாகி சொன்னது.
“ஆமாம்” என்று நான் பெருமூச்சுடன் சொன்னேன்.
“தொடங்கு….இதுதான் அந்தத் தருணம். உனக்குள் கானபூதி சொன்ன கதைகள் நிறைந்திருக்கின்றன. எந்தக் கதையும் கதைக்கடல் அலையே என்று அறிந்துவிட்டாய். இங்கிருப்பது ஒற்றைக்கதை என தெளிந்துவிட்டாய். ஒரு கதையின் ஒரு புள்ளியை விரித்து விரித்து வரலாறும் பண்பாடும் வாழ்வுமாக ஆக்க கற்றுக்கொண்டுவிட்டாய். இனி என்ன? தொடங்கு…”என்றது சக்ரவாகி
“அந்த முதற்சொல், அதைச் சொல்லிக்கொண்டே இரு. தொடங்கிவிடும்” என்றது சூக்ஷ்மதரு.
ஆபிசாரன் “நில், தொடங்குவது எளிது… குணாட்யர் என்ன ஆனார். அதைத் தெரிந்துகொண்டு தொடங்கு. உன்னை இழுத்துவிடப்பார்க்கிறார்கள். இன்னும்கூட உனக்கு வாய்ப்பிருக்கிறது. கானபூதி வரட்டும். அதற்குரிய ஒன்றைக் கேள்”
நான் “கதைசொல்லும் பிசாசாகிய கானபூதியே” என்று அழைத்தேன். “குணாட்யர் செய்த பிழை என்ன?”
மரத்தில் எந்த அசைவும் தெரியவில்லை.
“சொல், குணாட்யர் செய்த பிழைதான் என்ன?”
மெல்ல மரத்தில் கானபூதியின் இரு கண்கள் மட்டும் தெளிந்து வந்தன. “என்ன பிழை?” என்றது.
“அதைத்தான் கேட்டேன், அவர் செய்த பிழை என்ன?”
“பிழை என்று நான் சொல்லவில்லையே”
“சரி, ஏன் பிழை அல்ல என்று சொல்”
“நீ சூழ்ச்சிக்காரன்” என்றபடி கானபூதி தோன்றியது. “நான் ஒரு கதையைத்தான் மீண்டும் சொல்லமுடியும்…”
“சொல்”
“என் மரத்தடியில் வந்தமராத எந்த ஞானியுமில்லை” என்றது கானபூதி “ஏனென்றால் ஞானமும் முக்தியும் எல்லாம் கதைகளின் வழியாகவே சாத்தியமாகும். நான் கதைகளின் தலைவன்”
கானபூதி சொன்னது. என் மரத்தடியில் களைப்புடன் வந்தமர்ந்து முழங்காலை மடித்து அதன்மேல் கையையும் தலையையும் வைத்து அமர்ந்திருந்த முதியவர் அருகே நான் அவருடைய நிழல்போல தோன்றினேன். பின்னர் உருத்திரட்டி எழுந்து நின்று அவரை பார்த்தேன். அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, ஒருகணம் கழித்து புன்னகைத்து, ”கதைகளின் அரசனான கானபூதிக்கு வணக்கம்” என்றார்.
“மகாசூதரான உக்ரசிரவஸுக்கு வணக்கம்” என்று நான் சொன்னேன்.
“நான் உயிர்துறக்கும்பொருட்டு சென்றுகொண்டிருக்கிறேன். என் தந்தை சென்ற அதே பாதை இது. அவருடைய ஆசிரியர் வால்மீகியும் இவ்வழியேதான் சென்றார்” என்றார்
“ஆம், அவர்களை நான் சந்தித்தேன். ஆதிகவி உயிர்துறந்த அதே இடத்தில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள்” என்றேன்.
“என் தந்தை உங்களிடம் என்ன சொன்னார்? எனக்காக எதையேனும் சொல்லிச் சென்றாரா?” என்று உக்ரசிரவஸ் கேட்டார்.
“இல்லை, ஆனால் வால்மீகிக்கும் ரோமஹர்ஷ்ணருக்கும் சொன்னவற்றை நான் உங்களுக்கும் சொல்லமுடியும்”
“என்ன?” என்றார் உக்ரசிரவஸ்.
“உங்கள் கேள்விக்கான விடையை”
“என்ன கேள்வி? என்னிடம் அப்படிக் கேள்வி ஏதுமில்லை”
”மேயும் விலங்குகள் ஏன் நுனிப்புற்களையே தின்கின்றன? அதுதானே உங்கள் கேள்வி” என்றேன். “வேர் மீண்டும் முளைக்கவேண்டும், அதற்காகத்தான்”
அவர் சலிப்புடன் “ஆம்” என்றார். கால்களை நீட்டிக்கொண்டு “சொற்களின் சுமை” என்றார். ”நூறாண்டுக்காலம் சொற்களை அள்ளிக்கொட்டிக்கொண்டிருந்தேன். அகம் வரண்டுவிட்டது. போதும். இந்த உடலை மண்ணில் சாய்க்க விரும்புகிறேன்”
“நீங்கள் சொன்னவை மறைவதை, சொல்லாதவை முளைப்பதை, ஒவ்வொன்றும் உருமாறுவதை பார்த்தபடியே வந்தீர்கள் இல்லையா?”
“ஆம், அதைத்தான் என் வாழ்க்கை முழுக்க பார்த்துவந்தேன். நான் சொன்னவற்றை மீண்டும் மீண்டும் சொன்னேன். நான் சொல்லாதவற்றைத் திருத்தினேன். கண்ணுக்குத் தெரியாத மாபெரும் சக்தி ஒன்றுடன் வீணாகப்போரிட்டுக்கொண்டே இருந்தேன்” என்றார் உக்ரசிரவஸ்.
“பாடபேதம் என்பது சூரியனுக்கு ஒளி போல. சூரியனை அந்த ஒளிதான் மறைக்கமுடியும்” என்று நான் சொன்னேன்.
“மூலம் என ஒன்று இங்கே எங்குமில்லை. பாரதநிலம் முழுக்க பல்லாயிரம் பாடபேதங்கள் மட்டுமே உள்ளன” என்றார் உக்ரசிரவஸ்.
“நான் உங்களுக்கு குணாட்யரின் கதையைச் சொல்கிறேன்” என்று நான் உக்ரசிரவஸிடம் சொன்னேன். “பிரதிஷ்டானபுரியின் தலைமைக் கவிஞராக திகழ்ந்தவர். வாதில் தோற்று, அறிந்த மொழிகள் அனைத்தையும் உதறி, ஐம்புலன்களையும் இழந்தவராக இங்கே வந்து இந்த மரத்தடியில் அமர்ந்தார். அவருக்கு நான் முதல்வேதச் சொல்லில் தொடங்கி அனைத்துக் கதைகளையும் சொன்னேன்”.
உக்ரசிரவஸ் என்னை கூர்ந்து நோக்கிக்கொண்டு தலையசைத்தார். நான் எங்கே செல்கிறேன் என்று அவர் யோசிக்கிறார் என்று புரிந்துகொண்டு நான் புன்னகைத்தேன். குணாட்யரைப் பற்றிச் சொல்லத்தொடங்கினேன்.
குணாட்யருக்கு நான் சொன்ன கதைகள் முடிந்தன. காற்று நின்றபின் கொடி படிவதுபோல என் நாக்கு ஓய்ந்தது. அவரையே உற்றுநோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன்.
என் கதைகளைக் கேட்டுக்கேட்டு எடைமிகுந்து வந்த குணாட்யர் ஒரு கட்டத்தில் மண்ணில் புதைந்தவர்போல அமர்ந்திருந்தார். “இது அழிவில்லாத பெருங்கதை. இதை நான் காவியமாக இயற்றவிருக்கிறேன். இது இங்கே இருக்கவேண்டும். இதுவே உண்மை என நிலைகொள்ள வேண்டும்” என்று அவர் நெஞ்சில் கைவைத்து கண்ணீருடன் சொன்னார். “இந்த உண்மையைக் கொண்டுதான் இங்குள்ள மற்ற அத்தனையும் மதிப்பிடப்படவேண்டும். அனைத்துக்கும் அடித்தளமாக நிலைகொள்ளும் பூமி போல.”
மண்ணில் அமர்ந்து பூமிஸ்பர்ஸமாக கைவைத்து, மறுகையை நெஞ்சில் சேர்த்து தன் பெருங்காவியத்தின் முதல் வரியை குணாட்யர் சொன்னார். “ப்ருத்வி ஏவ மாதா” . புவியே முதலன்னை.
கானபூதி சொன்னது. “இந்தப் பூமியில் இயற்றப்பட்டதிலேயே பெரிய காவியத்தை அவர் இயற்றும்போது நான் மட்டுமே உடனிருந்தேன்”
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
