புத்தகக் குழுமங்கள்- குழந்தைகளுக்கான மீட்பியக்கம்.

மின்னணு அடிமைத்தனமும் மீட்பும்

எண்பதுகளில் நூல்குழுமம் (Book club) எனும் அமைப்பு சர்வதேச அளவில் மிகப்புகழ் பெற்றிருந்தது. கேரளத்தில் எல்லா நூலகங்களிலும், நூல்விற்பனையகங்களிலும் அவை நடைபெற்றன. ருஷ்ய கலாச்சார மையம் போன்ற அமைப்புகளும் நூல்குழுமங்களை நடத்தின.

ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த நூல்களைப் படிக்கும் வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை ஒருவருடன் ஒருவர் பகிர்வதற்காக உருவாக்கிக்கொண்ட சிறிய கூடுகைகள்  ‘புக் கிளப்’ எனப்பட்டன. உதாரணமாக மிகத்தொன்மையான நூல்குழுமம் என்பது உலகெங்கும் கிடைத்து வந்துகொண்டிருந்த தொல்லியல் தடயங்களை ஒருவரோடொருவர் விவாதித்து பரிசீலித்து புரிந்துகொள்ளும் பொருட்டு லண்டனில் உருவாக்கப்பட்ட ராயல் ஆர்கியாலஜிகல் கிளப் என்பது. பின்னர் அதுதான் இன்று உலகமெங்கும் கிளைவிரித்து மாபெரும் அறிவியக்கமாக நின்றிருக்கும் ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியாக மாறியது. இவ்வாறு தாவரவியல், சிற்பவியல், மொழியியல் என பல்வேறு துறைகளுக்கு புக் கிளப்கள் உருவாயின.

ஆனால் சென்ற இருபதாண்டுகளாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் குழந்தைகளுக்கான நூல்குழுமம் என்பது ஒரு புதிய கருத்துருவமாக மீண்டும் உருவாகி வந்துகொண்டிருக்கிறது. பெற்றோர் குழந்தைகளை அந்த புத்தகக் குழுக்களுக்கு அழைத்துக்கொண்டு சென்று இளமையிலேயே குழந்தைகளை புத்தக உலகுக்குள் அறிமுகம் செய்கிறார்கள். அங்கே குழந்தைகள் எழுந்து பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளை புத்தக வாசிப்பிலிருந்து விலக்கி நவீன மின்னணு சூதாட்டங்களுக்கும், சமூக வலைத்தள ஊடாட்டங்களுக்கும் பழக்கப்படுத்தும் ஒரு பெரும் சூழல் நம்மைச்சுற்றி உருவாகி வந்திருக்கிறது. பலகோடி ரூபாய் முதலீடு கொண்ட மாபெரும் வணிகம் அது. குழந்தைகளை உள்ளே இழுத்து வெளியேற முடியாமல் வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்ட செயலிகள் அவை. தொடர்பியல், ஊடகவியல் நிபுணர்களால் அவை உருவாக்கப்படுகின்றன. அவை குழந்தைகளை இழுத்து மாபெரும் சராசரிகளாக ஆக்கிக்கொண்டே இருக்கின்றன. அவற்றை வெல்வது எளிதல்ல. சூழலில் இருந்து அவை குழந்தைகளை நோக்கி வந்துகொண்டே இருக்கின்றன, ஆகவே குழந்தைகளை அவற்றிலிருந்து விலக்குவதும், அவற்றை நோக்கிச் சென்றுவிட்ட குழந்தைகளை தடுப்பதும் இயலவே இயலாதது. அவற்றுக்கு இணையான மாற்று உலகம் ஒன்றை குழந்தைக்கு அளிப்பதே ஒரே வழி. அவ்வாறுதான் நூல்குழுமங்கள் மீண்டும் உருவாகி வந்துள்ளன.

இன்றைய செயற்கை நுண்ணறிவுக் காலகட்டத்தில் சராசரி வேலைகளை எல்லாம் செயற்கை நுண்ணறிவு செய்யும் என்னும்போது ஒரு சராசரி அறிவை அடையும் ஒருவர் தன்னைப் பயனற்றவர் ஆக்கிக்கொள்கிறார் என்றுதான் பொருள். ஒருவருக்கான தனித்திறன் என்ன, அவர் மட்டுமே செய்யும் பணி என்ன என்பதுதான் இன்றைய முதன்மைக்கேள்வியாக இருக்கிறது. அந்த தகுதியை அடையவேண்டும் என்றால் ஒருவ அனைவரும் ஈடுபடும் எதிலும் ஈடுபடாமல் இருப்பதுதான் ஒரே வழி. சமூக வலைத்தளங்கள் வழியாகவோ, நவீன மின்னணு துறை வழியாகவோ ஒருவர் தன் தனித்திறனை அடையவே முடியாது. ஏனெனில் அவை பலகோடி பேருக்காக உருவாக்கப்பட்டவை. பலகோடி ரூபாய் முதலீடு கொண்டவை.

தனித்திறன் என்பது தனக்கான துறையை கண்டடைதல், அதில் தனக்கான சிந்தனைமுறையை உருவாக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றின் வழியாகத்தான் உருவாகும். தனக்கான ஓர் உலகை புத்தக வாசிப்பின் வழியாகவே ஒரு குழந்தை கண்டடைய முடியும். ஆனால் இன்றைய சூழல் புத்தக வாசிப்புக்கு முற்றிலும் எதிராக இருக்கும்போது அவர்களை புத்தக வாசிப்பில் எப்படி கொண்டு செல்வது, எப்படி அதற்குள் செயல்படவைப்பது என்பது உலகமெங்கும் எழுந்துள்ள வினா. அதற்காகவே அறிவை வழிபடும் நாடுகளில் பெற்றோரும் கல்வியியலாளர்களும் முட்டிமோதுகிறார்கள்.

பெற்றோர் கொடுக்கும் அழுத்தத்தால் எந்தக் குழந்தையும் படிப்பதில்லை. பெற்றோரின் முன்னுதாரணத்தால் மட்டுமே குழந்தை படிக்க முடியும். அப்போது கூட அதன் சூழல் அதை வெளியே இழுத்துக்கொண்டே இருக்கும். குழந்தையின் சராசரி நண்பர் வட்டம் புத்தகத்திலிருந்து விலக்கி அவர்கள் ஈடுபடும் சராசரி செயல்களை நோக்கி அக்குழந்தையை ஆற்றுப்படுத்திக்கொண்டே இருக்கும். கேலி, கிண்டல் வழியாகவும் விமர்சனம் வழியாகவும் கூட்டு அழுத்தம் வழியாகவும் நூல்களைப் படிக்கும் குழந்தையை நூல்களைப் படிக்காத  குழந்தை சமூகவலைத்தள உலகம், மின்னணுவிளையாட்டு உலகம் நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கும்.

அதிலிருந்து வாசிக்கும் குழந்தைகளை காப்பாற்றிக் கொள்வதற்காக அக்குழந்தைகளை அதே ரசனை கொண்ட பிற குழந்தைகள் அடங்கிய ஒரு வாசிப்புக் குழுமத்திற்குள் கொண்டு செல்லலாம். அத்தகைய ’புக் கிளப்’ஸ் குழந்தைகளை மிகவும் ஊக்கத்துடன் வாசிப்புக்குக் கொண்டு செல்கிறது என்று கண்டடையப்பட்டுள்ளது. ஏனெனில் அங்கே குழந்தை வெறும் பார்வையாளர் அல்லது பங்கேற்பாளர் மட்டுமல்ல. அக்குழந்தை அங்கே தன் வெளிப்பாட்டை நிகழ்த்துகிறது. ஒரு ஐந்தாம் வகுப்புக் குழந்தை தான் படித்த ஒரு நூலைப் பற்றி பதினைந்து பேர் கொண்ட ஒரு சபையில் எழுந்து பேசுகிறது என்றால் பிறகு ஒருபோதும் அது அந்த சுவையிலிருந்து வெளியே செல்லாது. ஏனெனில் அது அதற்குள் இருக்கும் ஓர் ஆணவத்தை நிறைவு செய்கிறது. மேலும் முன்செல்லவேண்டும் என்கிற துடிப்பை உருவாக்குகிறது. செயலூக்கம் படைப்பூக்கம் அளிக்கும் நிறைவை அக்குழந்தை அறிந்துவிட்டது. அதன்பிறகு தொடர்ந்து அங்கு அது பேசவும் விவாதிக்கவும் தொடங்கிவிடும்.

நூல்களைச் சார்ந்து விவாதிக்கும்  ஒரு குழந்தை அறிவுலக விவாதமென்ற அந்த மாபெரும் இயக்கத்துடன் தன்னை தொடர்புறுத்திக் கொண்டதென்றால், அதன்பிறகு அதற்கு சராசரித்தனம் கொண்ட விளையாட்டுகள் எதிலும் ஆர்வம் இருக்காது. இந்த புக் கிளப்ஸ் குழந்தைகளுக்காகவும், வெவ்வேறு அகவையினருக்காக உலகம் முழுக்க இன்று தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன. அவை இன்று இணையத்தை பயன்படுத்தியும் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

அத்தகைய புத்தகக் குழுக்களை மிகச் சிறுபான்மையினரே நாடுகிறார்கள் என்பது ஓர் உண்மை. ஏனெனில் அவற்றுக்கு இன்றைய நவீன ஊடகங்களின் பிரச்சார வல்லமை இல்லை. ஒருவகையான தலைமறைவு இயக்கங்களாகவேதான் அவை நடக்க வேண்டியிருக்கிறது. அண்மையில் பெங்களூர் சென்றபோது அங்கே ஒரு புத்தகக்கடையில் ஒரே சமயம் ஐந்து வெவ்வேறு புக்கிளப்ஸ்களின் உரையாடல் அமர்வுகள் நடந்துகொண்டிருப்பதையும், பெரும்பாலானவற்றில் சிறுவர்கள் அமர்ந்திருப்பதையும் பார்த்தேன். சென்னையில் அவ்வாறு எங்காவது நடக்கிறதா என்று விசாரித்தபோது நான் அறிந்தவரை எங்கும் நிகழவில்லை என்றே தெரிந்தது.

அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது மானஸா பதிப்பகம் தொடங்கப்படும்போது அடையாறில் அதற்கு உருவாகியிருக்கும் புதிய அலுவலகத்தில் இவ்வாறு புத்தக விவாதங்களை வாரந்தோறும் நிகழ்த்தினால் என்ன என்று பேசினேன். அவை புத்தக வாசிப்புக்கும் உதவும் ஒரு புத்தகச் சமூகத்தை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி எழுப்பவும் உதவும்.

ஆனால் எந்த செயலும் முதலில் தமிழ்ச் சமூகத்திலிருந்து புறக்கணிப்பையும் எதிர்ப்பையுமே உருவாக்கும். ஏனெனில் நம்முடைய சமூகம் பெரும்பாலும் நடுத்தர வர்க்க மனநிலைகளால் ஆனது.  ‘எல்லாரையும்போல் இருப்பது’ ‘நாலுபேரைப்போல் நடந்துகொள்வது’ என்பதுதான் நம்முடைய வாழ்க்கைக்கொள்கை. அனைவரும் குழந்தைகளிடம் செல்போன் எடுத்துக் கொடுத்தால் நாமும் எடுத்துக்கொடுக்கும் பண்பாடு நம்முடையது. ஆகவே தனியாக எந்த ஒன்றைச் செய்தாலும் அது ஏதோ வகையில் தேவையற்றது என்ற எண்ணமும், அர்த்தமற்ற எதிர்ப்பும்தான், அசட்டுக் கேலியும்தான் நம் சமூகத்திலிருந்து கிளம்பும்.

அதைக்கடந்து இத்தகைய செயல்களை செய்து நிலை நிறுத்துவதற்கு ஒரு பிடிவாதம், எளிதில் தளராமை தேவை. ஒவ்வொன்றும் கணந்தோறும் தாவிச்சென்றுகொண்டே இருக்கும் இன்றைய உலகில் Consistency என்பதுதான் பிற அனைத்தையும் விட முதன்மையான தகுதியாக இருக்கிறது. அது குழந்தைகளிடம் வாசிப்பிலும் இருக்கவேண்டும். இந்த வகையான வாசிப்பு அமைப்புகளை உருவாக்கி நடத்துவதிலும் இருக்கவேண்டும். அவ்வாறு ஒரு தொடர் புத்தக இயக்கம் ஒன்றை மானஸா பதிக்கம் சார்பில் நடத்த முடியுமென்றால் அது வெற்றியாகவே அமையும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.