Jeyamohan's Blog, page 74
June 20, 2025
வெளிநாடுகளில் நான்
ஒரு கடிதம் வந்தது, மிக ஆக்ரோஷமானது. எனக்கு அவ்வப்போது இத்தகைய கடிதங்கள் வரும். அவற்றை அப்படியே பிரசுரித்துக்கொண்டிருந்தேன். என் நண்பர்கள் ‘வேண்டாம், அவற்றிலுள்ள வசைகள் மனதை தொந்தரவு செய்கின்றன’ என்றனர். ஆகவே இப்போது அவற்றை வெளியிடுவதில்லை. வழக்கமாக ஏப்ரல் 22 வாக்கில் என் பிறந்தநாளில் வாழ்த்துக்கள் வருவதை ஒட்டி ‘இன்னுமா நீ செத்து தொலையவில்லை’ வகை கடிதங்கள் வரும். அதிகமும் அவை மதக்காழ்ப்பு கொண்டவை. ஆனால் அறம், அரசியல் கொள்கை என ஏதாவது பாவனையைச் சூடிக் கொண்டிருக்கும். தமிழகத்தில் அந்தவகை கடிதங்கள் வரும் ஒரே எழுத்தாளன் நானே என நினைக்கிறேன் (எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை)
என்னை தங்கள் மதங்களுக்கு எதிரானவன் என்று கற்பனைசெய்துகொள்பவர்களின் கடிதங்கள்தான் மிகுதி. என்னை பிராமண எதிர்ப்பாளன் என்றும் ,இந்து வெறுப்பாளன் என்றும், பெரியாரிய எதிர்ப்பாளன் என்றும், கிறிப்டோ கிறிஸ்தவன் என்றும் பலவகையாக வசைபாடி கடிதங்கள் வருகின்றன. வசைகள் எனக்கு புதியவை அல்ல. அவற்றிலுள்ள அந்த ஆவேசம்தான் ஒவ்வொரு முறையும் கொஞ்சம் விந்தையாக இருக்கும். நாட்டிலுள்ள எத்தனையோ அநீதிகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லாதவர்கள் எந்த அதிகாரமும் இல்லாத ஓர் எழுத்தாளன் மேல் இத்தனை ஆவேசத்தை ஏன் காட்டுகிறார்கள்? எந்த அதிகாரமும் இல்லை என்பதுதான் உண்மையான காரணமா?
இந்தக் கடிதம் இன்னொரு வகை. என் லண்டன் பயணக் குறிப்பை ஒட்டி எழுதப்பட்டது. வெளிநாட்டுவாழ் தமிழர்கள் பிரபலங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அதை ‘பீற்றிக்கொள்வதற்காக’ நடத்தும் இலக்கிய அமைப்புகளை ‘ஏமாற்றி’ நான் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறேன் என்று குற்றம்சாட்டியிருந்தார் கடிதமெழுதிய பகைநண்பர். அதற்காக நான் அவர்களை நான் பொய்யாகப் புகழ்கிறேன். இது ஒரு மோசடி. இப்படி புகழுக்கு அலையும் ஆட்களை செருப்பாலடிக்கவேண்டும்…. (செப்பல் அடி! இது ஏதோ தொல்காப்பிய செய்யுள் இலக்கணம் என உண்மையில் நான் நினைத்தேன். ஓரிரு வடிகளுக்குப் பிறகுதான் பிடிகிடைத்தது) இப்படியே இன்னும் பல.
நான் அவருக்கு பதில் எழுதவில்லை. ஏனென்றால் அந்தப் பதிலால் எந்தப் பயனும் இல்லை. அதை எழுதுபவர் சீர்தூக்கி பார்த்து, உண்மையெனப் பட்டதை எழுதுபவர் அல்ல. ஏதோ ஒரு வெறுப்பு, அதற்கு இது ஒரு காரணம், அவ்வளவுதான். அந்தக் கடிதத்தின் மின்னஞ்சலை வைத்துப் பார்த்தால் அது மதக்காழ்ப்புதான். ஆனால் அதற்கு ஒரு முற்போக்கு- திராவிட முகமூடியை மாட்டிக்கொள்வது இப்போதைய மோஸ்தர். பிராமண சாதிக்காழ்ப்புக்குக்கூட இடதுசாரி முகமூடிகள் புழக்கத்தில் உள்ளன. நான் அதைப்பற்றி யோசிப்பதை விட்டுவிட்டேன். ஆனால் பின்னர் தோன்றியது, அது ஒரு பொதுப்புத்திப் பதிவாக இருக்கலாம் என. எங்காவது அது பேசப்பட்டிருக்கலாம். ஆகவே அதற்கான ஒரு பதிலை பொதுவெளியில் சொல்லலாம் என தோன்றியது.
முதல் விஷயம், தமிழகத்தில் இருந்து வெளிநாட்டுக்கு அழைக்கப்படுபவர்களில் சினிமா, டிவி சார்ந்தவர்களே மிகப்பெரும்பான்மை. பட்டிமன்றப் பேச்சாளர்கள், மதச்சொற்பொழிவாளர்கள் அடுத்தபடியாக. அண்மையில் சாதாரண மிமிக்ரி கலைஞர்கள், டிவிப் பாடகர்கள் அழைக்கப்படுகிறார்கள். எழுத்தாளர்கள் அல்லது அறிஞர்கள் அனேகமாக அழைக்கப்படுவதே இல்லை. அண்மையில்தான் ஓரிரு எழுத்தாளர்கள் அரிதாக நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். (அதிலும் என் பங்கு சிறிது உண்டு. இலக்கிய அமைப்புகள் எவரை எல்லாம் அழைக்கிறார்கள் என்று நான் கடுமையாகத் தொடர்ந்து எழுதி அந்த அமைப்புகளுக்கு ஓர் அழுத்தத்தை உண்டுபண்ணினேன் என நினைக்கிறேன்).
ஆனால் எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டால் மட்டுமே சிலர் கொதித்துக் கிளம்புகிறார்கள். அந்த எழுத்தாளர் தகுதியற்றவர் என்பார்கள். இன்னும் ’தரமான’ எழுத்தாளரை அழைத்திருக்க வேண்டும் என்பார்கள். அந்த எழுத்தாளர் மேல் இன்னின்ன குற்றச்சாட்டுகள் உள்ளன என்பார்கள். ஏதேதோ ‘அறிவார்ந்த’ காரணங்களை கண்டுபிடிப்பார்கள். வேறு எவர் அழைக்கப்பட்டாலும் தோன்றாத ஒவ்வாமை எழுத்தாளர்கள் வெளிநாட்டுக்கு அழைக்கப்பட்டால் ஒருவருக்குத் தோன்றுகிறது என்றால் அது என்ன வகையான மண்டை? அவர்களின் பிரச்சினை உண்மையில் என்ன?
தமிழகத்தில் டிவி, சினிமா, அரசியல் தளங்களைச் சேர்ந்தவர்கள் தவிர எவரையுமே முக்கியமானவர்களாக எண்ணாதவர்களே எண்ணிக்கையில் மிகுதி. மற்ற எவர் கொஞ்சம் கவனம் பெற்றாலும் அடிவயிற்றை எக்கி வசைபாட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஏனென்றால் டிவி, சினிமா, அரசியலாளர்களை இவர்கள் அஞ்சி வழிபடுகிறார்கள். நாக்கில் நீர் சொட்ட பின்னால் அலைகிறார்கள். நாளெல்லாம் அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எழுத்தாளன், அறிஞன் என்பவன் தங்களைப் போன்ற சமானியன்தான் என நினைக்கிறார்கள். ஏனென்றால் வாழ்க்கையில் எப்போதுமே இலக்கியம், அறிவியக்கம் என ஒன்றை இவர்கள் அறிந்ததே இல்லை. ஆகவே, அவன் எப்படி தனக்கில்லாத முக்கியத்துவத்தைப் பெறலாம் என திகைக்கிறார்கள். இதுதான் அடிப்படையான உணர்வு. இது இங்கே தமிழகத்திலும் உள்ளதுதான். வெளிநாட்டிலும் இதே மனநிலையுடன் குடியேறி, இதே பாமரத்தனத்துடன் வாழ்பவர்கள் நம்மவர்கள்.
சரி அதை விடுவோம். என்னைப் பற்றிச் சொல்கிறேனே, நான் இதுவரை எந்த தமிழ் அமைப்பின் அழைப்பையும் ஏற்று வெளிநாடு சென்றதில்லை. பல்வேறு தமிழ் அமைப்புகளில் இருந்து பலமுறை அழைப்பு வந்துள்ளது. முற்றிலும் தவிர்த்தே வந்திருக்கிறேன். காரணம் நான் அந்த அமைப்புகளின் கடுமையான விமர்சகன் என்பதுதான்.அமைப்புகள் எழுத்தாளனை அழைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு நானே அவ்வழைப்புகளை ஏற்கக்கூடாது, என் கோரிக்கையின் சாரம் இல்லாமலாகிவிடும்.
ஆனால் எனக்கு வெளிநாட்டுவாழ் தமிழர்கள், உள்நாட்டு தமிழர்கள் நடத்தும் எந்த ஒரு பண்பாட்டு -இலக்கிய அமைப்புகள் மேலும் எந்த எதிர்ப்பும் இல்லை. ‘அவரவர் பிழைப்பை அவரவர் பார்க்கும்’ ஒரு காலகட்டத்தில் இப்படி பண்பாட்டு அமைப்புகளை நடத்துவதே மிக அரிதான ஒரு பொதுச்செயல்பாடுதான். அதில் என்னதான் போதாமைகள் இருந்தாலும் அச்செயல்பாடுகள் வழியாகவே ஒரு பண்பாடு தன்னை தக்கவைத்துக் கொள்கிறது. ஆகவே அதில் ஈடுபடும் அனைவருமே என்னுடைய மதிப்பிற்குரியவர்கள்தான்.
என்னுடைய எல்லா செயல்பாடுகளோடும் கூடுமானவரை மற்ற அமைப்புகளை இணைத்துக்கொண்டு செல்லவே முயல்கிறேன். அதற்காக எப்போதுமே திறந்த உள்ளத்துடன் முயல்கிறேன். அப்படி எல்லா அமைப்புகளுக்கும் நானே எழுதியிருக்கிறேன். என் செயல்பாடுகள் மேல் கடும் காழ்ப்புகளை வெளியிட்டவர்கள், தடைகளைச் செய்தவர்களின் அமைப்புகளுக்குக் கூட கடிதங்கள் எழுதி ஆதரவு கோரியிருக்கிறேன். என் செயல்பாடுகளால் அவர்களின் உள்ளம் மாறியிருக்கலாமே. அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமலிருந்தாலும் என் செயல்பாடுகள் நிகழும், அதை நிகழ்த்தியும் காட்டுகிறேன். ஆனால் அவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மேலும் சிறப்பாக நிகழும். அவர்களும் தங்கள் செயல்பாடுகளை சிறப்பாக அமைக்க முடியும்.
நான் செய்த எல்லா வெளிநாட்டுப் பயணங்களும் என்னுடைய மிகநெருக்கமான நண்பர்களின் அழைப்பால்தான். சிலசமயம் அவர்கள் என்னை அழைக்க ஏதாவது அமைப்பின் கடிதங்களைப் பெற்றிருக்கலாம். என் நண்பர்களுடன் எனக்கிருக்கும் உறவு இலக்கியம் சார்ந்தது மட்டும் அல்ல. ஆண்டு முழுக்க நீடிக்கும் உரையாடல், தொடர்ந்து பல செயல்களில் இணைந்து செயல்படும் இசைவு, குடும்ப ரீதியான அணுக்கம் கொண்டவர்கள் அவர்கள். அண்மையில் இந்த நட்புகளை ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ என்னும் அமைப்பாகத் திரட்டிக்கொண்டிருக்கிறோம், அந்த அடையாளத்துடன் உலகளாவச் செயல்படுகிறோம். ஆக, இன்று என்னை அழைப்பது நானே உருவாக்கிய என் அமைப்புதான்.
வேறு அமைப்புகள் சார்ந்து பயணம் செய்கிறேனா? அவ்வப்போது உண்டு. அண்மையில் ஷார்ஜா புத்தகவிழாவுக்கு சென்றுவந்திருந்தேன். அது அந்த இலக்கியவிழாவின் அழைப்பு. என் மலையாளப் பதிப்பாளர் டிசி புக்ஸ் ஏற்பாடு செய்தது. சென்ற சில ஆண்டுகளாக இலக்கிய விழாக்களுக்குச் சென்றுகொண்டே இருக்கிறேன். அனேகமாக எல்லா இலக்கியவிழாக்களுக்கும் எனக்கு முப்பதாண்டுகளாகவே அழைப்பு வருவதுண்டு. என் பெயர் தெரியாத இந்திய இலக்கிய அமைப்புகல் மிக அரிதானவை. ஆனால் ஆங்கிலத்தில் என் நூல்கள் ஏதும் இல்லாத நிலையில் கலந்துகொள்வதில் பயனில்லை என்னும் எண்ணம் எனக்கிருந்தது. இன்று ஆங்கில நூல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் இன்று இந்தியா முழுக்க அறியப்படும் எழுத்தாளன். எல்லா மொழிகளிலும் மொழியாக்கங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அத்துடன் என் இலக்கிய முகவரும் பதிப்பாளரும் எனக்கு இலக்கியவிழாக்களில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதையும் உணர்த்துகிறார்கள்.
அமெரிக்காவிற்கு விசா கிடைக்க அங்குள்ள அமைப்பு ஒன்றின் அழைப்பு தேவை. ஆகவேதான் எழுத்தாளர்கள் அமைப்புகளின் அழைப்பை ஏற்கிறார்கள். நான் முதன்முதலாக அமெரிக்கா சென்றபோது அப்படி ஓர் அழைப்புக்காக அங்குள்ள தமிழ்ச்சங்கத்தை அணுகினார்கள் என் நண்பர்கள்- வெறும் ஒரு ‘லெட்டர்பேட் கடிதத்துக்காக’ மட்டும். அது மறுக்கப்பட்டது. அதன்பின் அவர்களே ஒரு லெட்டர்பேட் அமைப்பை உருவாக்கி அந்த அழைப்பின் பேரில் என்னை அழைத்தனர். அங்கே நான் சென்றபின் செல்லுமிடமெல்லாம் என் இணையதளம் வழியாக நான் வந்திருக்கும் செய்தியை அறிவித்து, நாங்களே சந்திப்புகளை உருவாக்கினோம். பெரும்பாலும் நண்பர்களின் இல்லங்களில். அரிதாக சமூகக் கூடங்களி. பல ஊர்களில் அங்குள்ள எந்த நிகழ்ச்சிக்கும் வராத கூட்டம் என்னுடன் உரையாட வந்தது. அந்த வாசகர்களைக் கொண்டே இன்று விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.
நான் சில இலக்கிய அமைப்புகள் நடத்திய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவற்றைப் பார்த்தபிறகுதான் இந்த வசையர் தன் கடிதத்தை எழுதியிருக்கிறார். ஆனால் நான் அந்த அமைப்புகளின் அழைப்பின் பேரில், அவர்களின் செலவில் அங்கே செல்லவில்லை. நான் உள்ளூரில் இருப்பதை அறிந்து அவர்கள் அழைத்தார்கள். அந்த அமைப்பில் இருக்கும் ஏதேனும் நண்பர் வேண்டியவர் என்றால் அவருக்காக அங்கே சென்று அந்த கூட்டங்களில் கலந்துகொண்டதுண்டு. அது நட்புக்காக மட்டுமே.
என்னை இன்று அழைப்பவர்கள் ‘பிரபலங்களுடன் இணைந்து நிற்க விரும்பும் சாமானியர்கள்’ அல்ல. நாங்கள் இன்று ஓர் இலக்கிய அமைப்பாக இணைந்திருக்கிறோம். இதிலுள்ள ஒவ்வொருவரும் சிறந்த வாசகர்கள். ஒருவேளை அமெரிக்காவிலோ பிறநாடுகளிலோ உள்ள மிகச்சிறந்த இலக்கியவாசகர்கள் கிட்டத்தட்ட அனைவருமே ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ என்னும் பொது அடையாளத்தின் கீழே ஒருங்கிணைந்திருக்கிறோம். ஆண்டு முழுக்க, அனேகமாக எல்லா வாரமும் இலக்கிய நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருக்கிறோம். இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இடைவிடாமல் இலக்கிய உரையாடல்நிகழ்வுகளை நடத்தும் ஒரே அமைப்பு எங்கள் அமைப்புதான். இலக்கியம், கலாச்சாரம் சேர்ந்து சர்வதேச அளவிலேயே செயல்பாடுகளை முன்னெடுக்கிறோம். ஆண்டுதோறும் அமெரிக்காவில் தத்துவ – இலக்கிய முகாம்கள் நிகழ்கின்றன. ஐரோப்பாவிலும் தொடரவிருக்கிறோம். அந்த வாசகர்கள் அளவுக்கு தகுதியும் ஈடுபாடும் கொண்டவர்கள் தமிழ்நாட்டிலேயே குறைவுதான்.
(இலக்கியவாசகர்களும் இலக்கியவாதிகளும் பேசிக்கொள்கிறார்கள். சந்திக்கிறார்கள். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார்கள். பயணங்கள் செய்கிறார்கள். இதில் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாத அரசியல் அடிமாட்டுத் தொண்டர்களுக்கு என்ன பிரச்சினை? நாங்கள் எங்காவது இவர்களின் அரசியல் சலம்பல்கள் நிகழும் இடங்களில் தலைகாட்டியிருக்கிறோமா?)
ஆகவே வசைபாடுபவர்களிடம் ஒரு கோரிக்கை. அவ்வப்போது அவர்கள் மற்ற எழுத்தாளர்களையும் வசைபாடலாமே. நான் வசைகள் வழியாகவே இத்தனை அறியப்படுகிறேன். புகழை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிப்பதுதானே முறை?
என்.சி. ரத்தினகுமாரி
பவளக்கொடியில் அல்லிராணியாக நடித்துப் புகழ்பெற்றார். 1955-ல், தங்கை என்.சி. சகுந்தலாவுடன் திண்டுக்கல்லுக்கு வந்தார். பல நாடகங்களில் முக்கிய வேடமேற்று நடித்தார். தங்கையின் மறைவிற்குப் பின் திண்டுக்கல்லையே வாழ்விடமாகக் கொண்டார். கலைமாமணி பாலயோகி வெங்கடேசன் குழுவில் சேர்ந்து ஆர்மோனியம் வாசித்தும் பின்பாட்டுப் பாடியும் கலைத் தொண்டாற்றினார்.

காவியம் – 61
கானபூதி சொன்னது. ராம்சரண் நாயக்கை அழைத்துக்கொண்டு நந்தகுமார் போஸ் பதினைந்து நாட்கள் வெவ்வேறு ஜமீந்தார்களையும், ஜாகீர்தார்களையும் பார்க்கக் கூட்டிச் சென்றார். பெரும்பாலான இடங்களில் அவர்கள் அவனுடைய ஜாதியைத்தான் கவனித்தார்கள். அவனைப் பார்த்ததுமே அவர்களின் ஆர்வம் வடிந்துவிடுவதை அவன் பார்த்தான். ஓரிரு வார்த்தை விசாரிப்புகளுக்குப் பிறகு அவனுடைய தந்தை பெயரைக் கேட்டார்கள்.
சாதியைத் தெரிந்துகொண்டதுமே ”ஏற்கனவே நாலைந்து பையன்களுக்கு உதவி செய்தாகிவிட்டது. மேற்கொண்டு பணம் இருப்பது போல் தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைத்தான் கொடுப்பது வழக்கம். நீங்கள் ஒரு மாதம் முன்னால் வந்திருந்தால் பார்த்திருக்கலாம். இப்போது பணமில்லை” என்றார்கள்.
தொடர்ச்சியாக அனைத்து இடங்களிலுமே அவ்வாறு மறுப்பு வந்தபோது அவன் நம்பிக்கை இழந்துவிட்டான். ஒரு கிராமத்திலிருந்து திரும்பி வரும்போது கசப்புடன் ”இவர்கள் யாரும் உதவி செய்யமாட்டார்கள் சார்” என்று அவன் சொன்னான்.
நந்தகுமார் போஸ் ”அப்படியில்லை .உதவி செய்கிறார்களா இல்லையா என்பது அவர்களுடைய பிரச்னை. எல்லா வாசல்களையும் நாம் தட்டிவிட்டோம் என்ற உறுதி நமக்கு வேண்டும்” என்றார்.
அவன் சோர்வுடன் முனகினான்.
“இதோ பார் ,வாழ்க்கை முழுக்க அப்படித்தான். நாம் தயங்கியோ நம்பிக்கை இழந்தோ நின்றுவிடக் கூடாது. அத்தனை வாசல்களையும் தட்டிவிட்டோம் என்று நமக்கே ஒரு நிறைவு இருக்கவேண்டும். புரிகிறதா?” என்றார்.
அவன் தலையசைத்தான்.
“நாம் எந்த அளவுக்கு முயற்சி செய்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு நிம்மதி இருக்கும். பிறகு ஒன்றும் நடக்கவில்லை என்றாலும் கூட நாம் அதை கடவுள் மேல் போட்டுவிடமுடியும். கடவுள் மேல் போட்டுவிட்டால் நமக்கு ஒன்று அமையாது போனாலும் பெரிய வருத்தமிருக்காது” என்றார்.
அவர்கள் பேசிக்கொண்டே நடந்தார்கள் “அத்துடன் நமக்கு இவர்கள் உதவவில்லை என்று இவர்கள் மேல் வருத்தத்தையோ கசப்பையோ நீ உருவாக்கிக் கொள்ளக்கூடாது. அவர்களுக்கு ஆயிரம் சிக்கல்கள் இருக்கலாம். நீயே யோசித்துப்பார். நம்மைவிட தாழ்ந்த நிலையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நம்மிடம் அவர்கள் உதவி கேட்டிருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் நாம் உதவி செய்திருக்கிறோமா என்ன? இதுவரைக்கும் நீ எத்தனை பேருக்கு சாப்பாட்டுக்கு பணம் கொடுத்திருப்பாய்? ஒருவேளை டீ வாங்கிக் கொடுத்திருப்பாய்? உன்னிடம் பணம் இருக்கவேண்டும், கொடுக்கும்படி ஒரு மனநிலையும் அந்த சமயத்தில் அமையவேண்டும் இல்லையா? நமக்கு உதவி செய்பவர்களிடம் நாம் பிரியத்துடன் இருக்கவேண்டும். உதவி செய்யாதவர்களை அப்போதே மறந்துவிடவேண்டும். அதுதான் வாழ்வதற்கான வழி” என்று அவர் சொன்னார்.
மேலும் நான்கு நாட்கள் அலைந்தபின் ஜெயின் ட்ரஸ்ட் ஒன்றில் அவனை உள்ளே வரச்சொன்னார்கள். நந்தகுமார் போஸ் அமர்ந்து, அவன் நின்றுகொண்டதும் அவனுடைய மார்க்கை வாங்கி நேமிசந்த் ஜெயின் பார்த்தார். வெண்ணிற காந்தி தொப்பியும் ,தடிமனான கண்ணாடியும் போட்ட; வெளிறிய பருமனான மனிதர். மதிப்பெண்ணை பார்த்துவிட்டு ”நீ குடியானவன்தானே?” என்றார்.
”ஆமாம்”
”இவ்வளவு மதிப்பெண் நீ எப்படி பெற்றாய்?” என்றபின், ”பார்த்து எழுதினாயா?” என்றார்.
அவன் முகம் சிவக்க ”இல்லை” என்றான். மூச்சுவாங்க ஆசிரியரைப் பார்த்தான்.
போஸ் ”அவன் உண்மையில் பொதுத்தேர்வில் கொஞ்சம் குறைவாகத்தான் மார்க் வாங்கியிருக்கிறான். எனக்குத் தெரிந்து கணிதத்தில் அவன் நூறுக்குக் குறைவாக மார்க் வாங்கினதே கிடையாது. ஐந்தாம் வகுப்பிலிருந்தே அப்படித்தான்” என்றார். “நான் அவன் மாநில அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் வருவான் என எதிர்பார்த்தேன்”
“இதோ பார், உனக்கு நான் பணம் தருகிறேன். ஆனால் நீ விரும்பினால் இங்கே கணக்குப் பிள்ளையாகச் சேர்ந்துகொள்ளலாம்” என்று நேமிசந்த் ஜெயின் சொன்னார்.
“அவன் படிக்கட்டும். இவ்வளவு மார்க் வாங்கி படிக்காமலிருந்தால் பிறகு அவன் மனக்குறைப் படுவான். படித்தால் உங்கள் பெயர் சொல்லிக்கொண்டு வாழ்வான். என்றென்றைக்கும் உங்கள் மேல் நன்றியுடன் இருப்பான். உங்களுடைய தலைமுறைகளை அவன் மனமார வாழ்த்துவான்” என்று போஸ் சொன்னார்.
தலைகுனிந்து மதிப்பெண் பட்டியலைப் பார்த்தபடி ஜெயின் புன்னகைத்தார். பிறகு கண்ணாடியைத் தூக்கிவிட்டு நிமிர்ந்து அவனைப்பார்த்து ”உனக்கு ஒரு கடிதம் தருகிறேன். பாட்னாவில் என்னுடைய கடை இருக்கிறது. அங்கே சென்று கணக்குப் பிள்ளையிடம் பணம் வாங்கிக்கொள். நாங்கள் உனக்கு ஓராண்டுக்கு நாநூறு ரூபாய் தருவோம். மூன்று ஆண்டுக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய். அது ஒவ்வொரு ஆண்டும் ஃபீஸ் கட்டுவதற்கும் பாடப்புத்தகங்களுக்கும் சரியாக இருக்கும். அவ்வளவுதான். அதற்குமேல் எந்தக் காரணத்துக்கும் எங்களிடம் வந்து நிற்கக்கூடாது” என்றார்.
”அவ்வளவு போதும். அதுவே பெரிய தொகை” என்று போஸ் கும்பிட்டார்.
”அந்தக் கடிதத்திலேயே எவ்வளவு தரவேண்டும் என்று எழுதியிருப்பேன். அந்தக் கடிதத்தை கணக்குப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு உன்னுடைய பெயரை அங்குள்ள பேரேட்டில் பதிவு செய்துவிடு. அங்கு இதேபோல அறுபது பேருக்கு நாங்கள் உதவி செய்கிறோம். அதில் உன் பெயர் இருந்தால் நீ அந்தப்பணத்தை வாங்க முடியும். ஒவ்வொரு முறையும் நேரில் போய் நின்று கையெழுத்துப் போட்டுத்தான் பணம் வாங்கவேண்டும். ரசீது எல்லாம் எங்களுக்கு தெளிவாக இருந்தாகவேண்டும், தெரிகிறதா?” என்றார்.
அவன் தலையசைத்தான்.
”சரி” என்று அவர் தலையசைத்து விடை கொடுத்தார்.
போஸ் அவனிடம் காலைத்தொட்டு வணங்கும்படி கைகாட்டினார். அவன் குனிந்து மேஜைக்கு அடியிலிருந்த அவர் காலைத்தொட்டு வணங்கினான். அவன் தலையைத் தொட்டு ”பகவான் பார்ஸ்வநாதரின் அருள் உன்னிடம் இருக்கட்டும். அறிவே உனக்கு வெளிச்சமாக இருக்கும்” என்றபின் அவர் அவன் கையைப் பிடித்துக்கொண்டு ”அஹிம்ஸோ பரமோ தர்மா. அதுதான் நான் உனக்கு சொல்லவேண்டியது. என்னுடைய அப்பாவும் அதைத்தான் என்னிடம் சொன்னார்” என்றார். பிறகு ”நீ இறைச்சி சாப்பிடுவாயா?” என்றார்.
அவன் ஆம் என்று தலையசைத்தான்.
“உங்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால் கூடுமானவரைக்கும் சாப்பிடாதே. எப்போதாவது சாப்பிட்டால் கூட அருகர்களிடம் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள். அஹிம்ஸோ பரமோ தர்மா என்று மட்டும் சொல்லிக்கொண்டே இரு. ஜீவஹிம்சை செய்யாமலிருப்பவர்களுக்கு தீர்த்தங்கரர்களின் ஆசீர்வாதம் உண்டு” என்று அவர் சொன்னார்.
போஸ் அவனை அவரே அழைத்துக்கொண்டு பாட்னாவுக்கு சென்று அந்தப்பணத்தை வாங்கினார். அவரே கல்லூரிக்குச் சென்று பணத்தைக்கட்டி அவனை சேர்த்துவிட்டார்.
திரும்பி வரும் வழியில் ”உன் அப்பாவிடம் சொல், நீ ஊரிலிருந்தால் உனக்கு எவ்வளவு செலவாகுமோ அதைவிட கொஞ்சம் கூடுதலாக ஹாஸ்டலில் தங்கிப்படிப்பதற்கு செலவாகும், அவ்வளவுதான். பெரும்பாலான செலவுகள் ஒரே ஒரு நபராலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றன. உனக்கு எந்தக்குறையும் வராது” என்றார்.
சட்டென்று அவன் சாலையிலேயே குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினான். அப்போதே அழத்தொடங்கினான்.
அவர் அவன் தோளைத்தொட்டு தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு ”நானும் இதே போன்று ஒரு ஜமீந்தாரின் பிச்சையால் தான் படித்து வந்தேன். எங்கோ யாரோ பிறருக்காக கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த உலகில் ஒருவரிடமிருந்து ஒருவர் அடித்துப் பிடுங்குவதும் ஏமாற்றுவதும்தான் அதிகம். ஆனால் எங்கோ சிலருக்கு கொடுக்கும் உள்ளமும் இருக்கிறது. சதி செய்யவும், அழிக்கவும் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். ஆனால் ஆபத்தில் வந்து கூடவே நின்றிருக்கவும் மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களை மட்டுமே உலகம் என்று நினைத்துக்கொண்டு வாழ்ந்தால் ஒரு நல்ல வாழ்க்கையை நாம் வாழ்ந்துவிடமுடியும். நான் கற்றுக்கொண்டது அதுதான். நல்லவர்கள் மட்டுமே அடங்கியதுதான் உலகம் என்று ஒரு சுபாஷிதம் இருக்கிறது. அதன்பொருள் இதுதான்” என்றார்.
அவன் கல்லூரியில் சேர்ந்த தகவல் ஊரில் செய்தியாகப் பரவியது. மறுநாளே அவன் அப்பாவைத் தேடி கடன்கொடுத்த டாகூரின் அடியாட்கள் வந்து நின்றுவிட்டார்கள். அவர் எங்கோ பணத்தை புதைத்து வைத்திருக்கிறார் என்று சொல்லி அவரை அடிக்கப் பாய்ந்தார்கள். அவர் கழுத்தில் துண்டைப்போட்டு இழுத்து வெளியே கொண்டுவந்து நிறுத்தி ”இப்போதே மிச்ச பணத்தை தோண்டி எடுத்துக்கொடு, அல்லது கல்லூரியில் கட்டிய பணத்தை திருப்பி வாங்கி எங்களுக்கு கொடு” என்றார்கள்.
“நான் வட்டி கட்டிக்கொண்டிருக்கிறேன், வட்டி கட்டிக்கொண்டிருக்கிறேன்” என்று அவர் அழுதுகொண்டே இருந்தார். “நான் பணம் கொடுக்கவில்லை. ஜெயின் முதலாளி கொடுத்தார்”
“அந்த முதலாளியிடம் பணத்தை வாங்கிக்கொடு” என ஒருவன் அவரை அறைந்தான்.
“அவனை விடாதீர்கள். அவன் பணத்தை புதைத்து வைத்திருக்கிறான் என்று எனக்கு அப்போதே சந்தேகம் இருந்தது” என்று ஒரு பெண் கத்தினாள். அவள் அவன் அப்பாவுக்கு கடன் ஏதும் கொடுத்தவள் அல்ல. அவர்களுக்கு அவள் உறவுமுறை மட்டும்தான்.
திடீரென்று ஒருவன் கையை ஓங்கிக்கொண்டு அவரை நோக்கி வந்து, அவர் முகத்தில் காறி உமிழ்ந்து ”திருட்டு நாயே வாங்கிய பணத்தை ஏமாற்றுகிறாயா?” என்றான்.
அவன் அப்பா கையை எடுத்துக் கும்பிட்டு அழுதபடியே நின்றிருந்தார் அவர்களே அவன் வீட்டுக்குள் நுழைந்து சட்டி பானைகளைத் தூக்கிப்போட்டு சுவர்களையும் தரையையும் உதைத்து பார்த்தார்கள். தொழுவம் முழுக்க ஆராய்ந்தார்கள். அதன் பிறகு ”மரியாதையாக அசலில் ஒரு பகுதியையும் கட்டு. பையன் படிக்கிறான், பணமில்லை என்று எப்போதாவது சொன்னாயென்றால் வந்து மாட்டையும் கன்றையும் ஓட்டிக்கொண்டு போய்விடுவோம்” என்று மிரட்டினார்கள்.
அவர்கள் போனபின் அவன் அப்பா கண்ணீர் விட்டபடியே இருந்தார்.
அவனுடைய பங்காளிகள் தெருவில் வந்து நின்று ”திருட்டுத்தனம் செய்துதான் பையனை படிக்க வைக்க வேண்டுமா? நேர்மையாக உழைத்து வாழ்பவர்களுக்கு இங்கு இடம் கிடையாது. அவர்கள் வறுமையில் தான் இருக்கவேண்டும். கொடுக்க வேண்டிய காசை கொடுக்காமல் ஏமாற்றி பையனை படிக்க வைப்பவர்களுக்கு அதில் என்ன பெருமை வேண்டியிருக்கிறது?” என்றெல்லாம் திட்டினார்கள்.
அவன் அம்மா ஆக்ரோஷமாக வெளியே சென்று ”ஆமாம் புதைத்து வைத்திருக்கிறோம். தங்கம் தங்கமாக புதைத்து வைத்திருக்கிறோம். யாருக்கடி சந்தேகம்? வந்து பாருங்கள் வந்து பாருங்களடி, புதைத்து வைத்திருக்கிறோம். அப்படித்தான் எடுப்போம். அப்படித்தான் செலவழிப்போம். ஏழடுக்கு மாளிகை கட்டுவோம். ஆகாய விமானத்தில் பறப்போம்” என்று கூச்சலிட்டாள்.
அவன் தங்கை பின்னால் சென்று ”அம்மா நீ பேசாமலிரு உள்ளே வா உள்ளே வா” என்று கண்ணீர் விட்டு அழுதாள்.
இரண்டு மூன்று நாட்களில் அவன் கல்லூரி செல்லவிருப்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அவன் டீக்கடைக்கு சென்றபோது அங்கிருந்த பெரியவர் ஒருவர் முதல் முறையாக எழுந்து சற்று விலகி வந்து அவன் அமர்வதற்கு இடம் கொடுத்தார். அவன் அமராமல் நின்றுகொண்டிருந்தான். டீக்கடைக்காரர் உட்காரும்படி கைகாட்டினார். அவன் எப்போதுமே அங்கே நின்றபடி தான் டீ குடிப்பதோ தைனிக் சமாச்சார் படிப்பதோ வழக்கம்.
அவர் மீண்டும் உட்காரச்சொன்னபோது அவன் புன்னகையுடன் உட்கார்ந்து கொண்டான். கையில் டீயுடன் செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தபோது மிகவும் வளர்ந்துவிட்டதாகவும், மிகவும் அதிகாரம் அடைந்து விட்டதாகவும் எண்ணிக் கொண்டான். அந்தப் புன்னகையை அவனால் அடக்கவே முடியவில்லை.
அவனை கல்லூரியில் சேர்த்துவிட முதல்நாள் வந்த அவன் அப்பா மிரண்டு போய்விட்டார். அவ்வளவு பெரிய கட்டிடங்களை அவர் பார்த்ததே இல்லை. ”கோட்டை மாதிரி இருக்கின்றன எல்லாம்” என்றார். ”அத்தனைபேரும் கால்சட்டை போட்டிருக்கிறார்கள்” என்று முணுமுணுப்பாகச் சொன்னார். அவனுக்கு அங்கே ஹாஸ்டலில் தனிப்படுக்கையும் அதன் மேல் மெத்தையும் உண்டு என்பது அவருக்கு மகிழ்ச்சிக்குப் பதிலாக மேலும் பதற்றத்தையே அளித்தது. “இதற்கெல்லாம் நிறைய பணம் கேட்பார்களா?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.
ராம்சரண் நாயக் பாட்னாவில் கல்லூரியில் சேர்ந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே அருகிலிருக்கும் ஜெயின் கடை ஒன்றில் மாலை நேரம் முழுக்க வேலை செய்வதற்காக சேர்ந்துவிட்டான். பாட்னாவில் எங்கே வேலை தேடுவது என்று முதலில் அவனுக்குத் திகைப்பு இருந்தது. மாணவர்களுக்கான விடுதியில் அவனுக்குக் கொடுக்கப்பட்ட கட்டிலில், பழைய மெத்தையில், தூசி நாற்றமடித்த போர்வையை மடியில் போட்டபடி அமர்ந்து அதைப்பற்றியே உழற்றிக் கொண்டிருந்தபோது சட்டென்று அந்த எண்ணம் தோன்றியது. அவனுக்கு உதவி செய்த அந்த ஜெயின் கடையிலேயே சென்று கேட்டாலென்ன என்று.
அன்று மாலை அங்கே சென்று நின்றான். அவனைப்பார்த்த வயதான கணக்குப்பிள்ளை முதலில் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. பிறகு “நீயா? பணம் வாங்கிவிட்டாயல்லவா?” என்றார்.
அவன் அருகே சென்று சட்டென்று எதிர்பாராதபடி அவர் காலைத்தொட்டு வணங்கினான். அவர் ”என்ன… என்ன…?” என்றுவிட்டு பின்னால் நகர்ந்தாலும் முகம் மலர்ந்துவிட்டது. அவர் ஒரு பிராமணர் என்று அவனுக்குத் தெரிந்தது.
”எனக்கு இங்கே ஏதாவது ஒரு வேலை வேண்டும். என்னுடைய கல்லூரி விடுதியிலிருந்து நடந்துசெல்லும் தொலைவில் இருந்தால் நன்றாக இருக்கும். கல்லூரி விடுதிக்கட்டணத்தை என்னால் கட்டமுடியாது ஏதாவது வேலை கிடைத்தால் அதைக் கட்டிவிடுவேன்” என்றான்.
”அதெப்படி நீ கல்லூரிக்குப் போய்விட்டு வேலைக்கு போகமுடியும்?” என்றார்.
”முழுச்சம்பளம் வேண்டியதில்லை. கல்லூரி ஐந்து மணி வரைக்கும்தான். நான் ஆறு மணிக்கெல்லாம் கடைக்கு வந்துவிடுவேன். கடை பத்துமணிக்கு மூடுவது வரை கடையில் வேலை செய்வேன். எனக்கு மூன்றிலொரு பங்கு சம்பளம் கொடுத்தால் கூட போதும்” என்றான்.
அவர் கண்ணாடியைத் தள்ளிவிட்டபடி யோசித்தார். பிறகு திரும்பி ”நீ எப்போது படிப்பாய்?” என்றார்.
”நான் விடுதியில் காலையில் எழுந்து படிப்பேன். கொஞ்ச நேரம் படித்தாலே என்னால் நன்றாகப் படிக்க முடியும்” என்றான்.
”நான் கேட்டுப்பார்க்கிறேன். இங்கே கடையில் வேலை செய்யும் பெண்கள் ஐந்து மணிக்கே போய்விடுகிறார்கள். மாலையில் அதே வேலையை தொடர்ந்து செய்வதற்கு யாராவது இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று ஜெயினிடம் சொல்கிறேன். நீ என்ன செய்வாய்? கணக்கு எழுதுவாயா?” என்றார்.
”கணக்கு எழுதத் தெரியாது, ஆனால் கற்றுக்கொள்வேன்.”
”எவ்வளவு நாளில் கற்றுக்கொள்வாய்?”
அவன் அவர் கண்களைப் பார்த்து, ”ஒரு வாரத்தில்…” என்றான்
”ஒரு வாரத்தில் நீ கணக்கு எழுதக்கற்றுக்கொள்வாயா?”
”கற்றுக்கொள்வேன்” என்றான்.
”கணக்கு எழுதுவதென்றால் நீ என்னவென்று நினைக்கிறாய்? ஆயிரக்கணக்கான ரூபாய்கள். அவ்வளவையும் தனியாகக் கூட்டி ஒவ்வொரு நாளும் ஸ்டேட்மெண்ட் போட்டு கையில் கொடுத்துவிட்டு வீட்டுக்கு செல்லவேண்டும். நான் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்” என்றார்.
”நான் அதைச் செய்கிறேன். எனக்கு எப்போதுமே கணக்கில் நூறு மார்க்தான்” என்றான்.
அவர் அவனைச் சிறிது நேரம் கூர்ந்து பார்த்துவிட்டு, ”இந்தக்காலத்திலே பையன்கள் விரைவாக இதையெல்லாம் செய்கிறார்கள். சரி, நான் சொல்கிறேன்” என்றார்.
அப்படித்தான் அவனுக்கு பிரேம்சந்த் ஜெயின் கடையில் கணக்குப்பிள்ளை வேலை கிடைத்தது. அவனுக்கு உதவிய நேமிசந்த் ஜெயினின் மருமகனின் கடை. அது ஒரு பெரிய துணிக்கடை. அங்கே காலையிலிருந்து மாலைவரை கிராமத்திலிருந்து வருபவர்கள் துணி வாங்குவார்கள். ஆறிலிருந்து எட்டு வரை உள்ளூர்க்காரர்கள் வருவார்கள். ஏழுமணிக்கு கோயிலில் பஜனையும் பூஜையும் முடிந்தவுடன் வரும் ஒரு கூட்டம் இரண்டு மணிநேரம் அந்தக் கடையில் நெரிபடும். ஒன்பது மணிக்கு கடையில் கூட்டம் குறைய ஆரம்பித்தவுடன் கணக்குகளை போடத்தொடங்கவேண்டும்.
மறுநாள் ஒட்டுமொத்த வியாபாரத்தின் கணக்கை எழுதுவதற்கு கணக்குப்பிள்ளை வரும்போது சாயங்காலத்தின் வியாபாரத்தை மட்டுமே தனியாக எழுதிக் கொடுத்துவிட்டால் அவருக்கு அது உதவியாக இருக்குமென்று அவனுக்காகப் பரிந்து பேசிய பிராமணக் கணக்குப்பிள்ளை பிரேம்சந்த் ஜெயினிடம் சொல்லி நம்பவைத்தார். அவரே அமர்ந்து பில்களை எப்படி ஒன்றாகச் சேர்த்து கணக்கு எழுதுவது என்று சொல்லிக்கொடுத்தார். அவன் மூன்று நாட்களிலேயே அதைக் கற்றுக்கொண்டான். மிக விரைவாகவே கணக்கை முடித்து பத்து மணிக்கு கடை மூடும்போது எழுதி மேசையில் வைத்துவிட்டு போனான். நாலைந்து நாட்களிலேயே கணக்குப்பிள்ளை ரகசியமாக ஜெயினிடம் ”பையனை விட்டுவிட வேண்டாம். நாலைந்து பேருக்கு அவன் சமம்” என்று சொன்னார்.
அவன் வாழ்க்கை மிக வேகமாக எளிமையாக ஆயிற்று. அவன் ஒவ்வொரு நாளும் கடையில் வேலை செய்து கல்லூரிக்கும் போய் வந்தான். முதல் முறையாக இரண்டு வேளை நாக்குக்கு ருசியாகவும் வயிறு நிறையவும் சாப்பிட ஆரம்பித்தான். அவனுடைய உடல் நிமிர்ந்து, கைகால்கள் உரம் பெற்றன. அவனுடைய கல்லூரியிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் ஜெயின் கடை இருந்தது. ஆகவே நான்கு மாதங்களுக்குப் பிறகு பத்து ரூபாய் முன்பணம் கொடுத்து ஒரு பழைய சைக்கிளை வாங்கிக் கொண்டான். அதன் பிறகு சிறகு முளைத்தவன் போலானான்.
வெள்ளிக்கிழமை ஜெயின் கடை விடுமுறை. அன்று மாலை சைக்கிளில் பாட்னா நகரைச் சுற்றிவந்து ஏதாவது ஒரு புதிய டீக்கடையில் டீயும் சமோசாவும் சாப்பிடுவதென்பது அவனுடைய இனிமையான ஒரு பழக்கமாக மாறியது. ஜெயின் அவனுக்கு முதலில் இருபது ரூபாய் கொடுத்தார். பின்னர் அதை அவரே நாற்பதாக்கினார். அவன் கேட்காமலேயே அறுபதாக்கினார். விடுதிக்கட்டணம் கட்டியது போக பத்து அல்லது பதினைந்து ரூபாய் அவனுக்கு அப்பாவுக்கு அனுப்ப முடிந்தது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் அவன் வீட்டுக்கு போனான். வீட்டுக்கு போகும்போது அவர் கையில் எப்போதுமே பதினைந்து ரூபாய் அல்லது இருபது கொடுத்துவிட்டுத்தான் திரும்பினான்.
அவன் அப்பாவால் முதலில் அதை நம்பவே முடியவில்லை. அவர் முதலில் அவனிடம் ”என்ன வேலையை செய்கிறாய்?” என்று கேட்டார்.
அவன் தான் செய்யும் வேலையை சொன்னவுடன் ”படிப்பில்லாமலேயே உனக்கு வேலை கிடைத்துவிட்டதா? இவ்வளவு நல்ல வேலை?” என்று கேட்டார். பிறகு ”நீ அங்குள்ள உணவகங்களில் தான் வேலை செய்யவேண்டும், பிறருடைய எச்சிலைத்தான் எடுக்கவேண்டும் என்று சொன்னார்களே?” என்றார்.
”உணவகங்களில் வேலை செய்வதொன்றும் தவறில்லை. எச்சிலை எடுத்தாலும் அதிலென்ன?” என்று அவன் கேட்டான்.
”அவர் நம்முடைய சாதிக்கு அது…” என்றார்.
”நம்முடைய சாதி பட்டினி கிடக்கலாம், ஆனால் உழைக்கக்கூடாது. அவ்வளவுதானே… எந்த முட்டாள் சொன்னால் என்ன? என்னுடைய சாதியைச் சேர்ந்த எவ்வளவோ பேர் ஓட்டலில் வேலை செய்கிறார்கள். அவர்களும் நன்றாகப் படிக்கிறார்கள்” என்றான்.
அவர் அதைக்கேட்டுக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் வெளியே சென்றுவிட்டார்.
இரண்டாவது ஆண்டு படிப்பின்போது அவன் ஊருக்குத் திரும்பும்போது அவன் நல்ல சட்டைகளை போட்டிருந்தான்; புதிய ஒரு பெட்டியும் வாங்கியிருந்தான். சலவை செய்த சட்டையைப் போட்டுக்கொண்டு தெருமுனையிலிருந்த டீக்கடைக்கு சென்றபோது அங்கிருந்த அத்தனை பேருமே எழுந்து அவனுக்கு வணக்கம் சொன்னார்கள். அவனுக்கு கூச்சமாகவும் குழப்பமாகவும் இருந்தாலும் ஒரு மங்கலான புன்னகையுடன் அனைவரையும் பார்த்து வணங்கிவிட்டு அமர்ந்து கொண்டான்.
அவனுடைய பங்காளிகள் அவனை ஓரக்கண்ணால் உறுத்துப் பார்த்தபடி கடந்து சென்றார்கள். அவர்கள் அவனுடைய அப்பாவின் தம்பியின் பிள்ளைகள். மிகச் சிறுவயதிலேயே அவர்கள் தன் குடும்ப எதிரிகள் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் ஒரு துண்டு நிலத்திற்காக அவன் அப்பாவுடன் சண்டை போட்டு மாறி மாறி அடித்துக்கொண்டவர்கள். அந்த நிலத்திலேயே ஒரு வரப்பை இருவருக்கும் பொதுவாக வைத்துக்கொண்டு விவசாயம் செய்தார்கள். அந்த வரப்பை இருபக்கமும் நின்றுகொண்டு செதுக்கி இடம் மாற்றினார்கள். புதியதாக வேலி போட்டார்கள். ஒவ்வொரு நாளும் வாய்ச்சண்டை போட்டார்கள். அவர் வயலுக்கு வரும் தண்ணீரை மண் வைத்து அடைத்தார்கள். அதற்கு அவர் தட்டிக்கேட்க போகும்போது கூட்டமாகச் சேர்ந்து வசைபாட வந்தார்கள்.
எந்த வகையிலெல்லாம் அவன் குடும்பத்துக்கு தொந்தரவு செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்தார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் வட்டிக்கார டாகூரிடம் சென்று அவன் குடும்பத்தில் நிறைய பணம் வருவதாக கோள்மூட்டினார்கள். அவன் போட்டிருக்கும் சட்டையை சுட்டிக்காட்டி ”இத்தனை நிறமுள்ள சட்டையை போடமுடியுமென்றால் வட்டிப்பணத்தை மட்டும் ஏன் கொடுக்க முடியாது? கொடுக்க மனமில்லாதவர்களுக்கு எத்தனை பணம் வந்தாலும் கை நீளாது” என்றார்கள். “ஒளித்து வைத்திருப்பவர்களிடம் கேட்காமல் எங்களிடம் வந்து கெடுபிடி செய்கிறீர்கள்” என்றார்கள்.
ஒவ்வொரு முறை அவன் வந்து சென்ற பிறகும் வட்டிக்கு பணம் கொடுத்த டாகூரின் அடியாட்கள் வீட்டுக்கு வந்து அவன் அப்பாவை வசைபாடி, வீட்டினுள் நுழைந்து கையிலிருக்கும் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு சென்றார்கள். உழவு மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுவேன் என்ற பயமுறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. அவன் அப்பா எப்போதும் அந்தப் பதற்றத்திலேயே இருந்தார்.
”மாட்டை அவர்கள் ஓட்டிக்கொண்டு போகமாட்டார்கள். மாட்டை ஓட்டிக்கொண்டு போனால் நீங்கள் இங்கே விவசாயம் செய்ய முடியாது. ஊரைவிட்டு தான் போகவேண்டும். நீங்கள் ஊரைவிட்டு போனால் யார் அவர்களுக்கு வட்டி கட்டுவார்கள்? அப்படியெல்லாம் பயமுறுத்துவார்கள். அதெல்லாம் ஒன்றுமில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகள்தான். பயப்படவேண்டாம்” என்று அவன் அப்பாவிடம் சொன்னான்.
அவர் பெருமூச்சுடன் முனகிவிட்டு கிளம்பி வெளியே சென்றார்.
கல்லூரியில் அவனுக்குக் கிடைத்த ஓரிரு நண்பர்களுடன் அங்கே ஓர் உலகத்தை உருவாக்கிக் கொண்டான். மதியம் ஒருமணி நேரம் அவனுக்குப் பொழுது கிடைத்தது. மதிய உணவை விடுதியில் கொடுப்பார்கள். அவன் சைக்கிள் வைத்திருந்ததனால் ஐந்து நிமிடத்தில் விடுதிக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு அதே வேகத்தில் கிளம்பி நூலகத்துக்கு வந்துவிடுவான். நாற்பது நிமிடம் அங்கே அமர்ந்து படிப்பான். ஏதாவது ஆசிரியர் வராமலானால் அந்த நேரமும் அவன் படித்தான். பிரேம்சந்தை அப்போதுதான் கண்டடைந்தான். இந்தி நாவல்கள் ஒவ்வொன்றாக படிக்கத் தொடங்கினான்.
பலபேரை படித்தாலும் கூட தன்னுடைய வாழ்க்கையை இலக்கியமாக எழுதியவர் என்று அவனுக்கு பிரேம்சந்தான் தெரிந்தார். ஆகவே பிரேம்சந்துக்கு நிகராக இந்தியில் எழுத்தாளர்களே இல்லை என்று அவன் நண்பர்களிடம் வாதிட்டுக்கொண்டிருந்தான்.
அவனுடைய நண்பனும் பாட்னாவைச் சேர்ந்தவனாகிய சிவ்குமார் யாதவ் ”அக்ஞேயா அளவுக்கு பிரேம்சந்த் நுட்பமாக எழுதவில்லை. பிரேம்சந்தின் எழுத்து வறுமையின் துயரத்தை அப்பட்டமாகச் சொல்கிறது. வறுமையும் பட்டினியும் எல்லாம் இல்லாமலாகிவிட்டால் மனிதனுக்கு என்ன பிரச்சினை இருக்குமோ அதையெல்லாம் அக்ஞேயா பேசுகிறார்” என்றான்.
“இன்னும் வராத பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் கற்பனையால் பேசுவது வீண்வேலை.” என்று அவன் சொன்னான்.
“இல்லை, இவை உண்மையிலேயே பாட்னாவிலும் டெல்லியிலும் வாழ்பவர்களின் சிக்கல்கள்” என்றான் யாதவ்.
“பணக்காரர்களின் பிரச்சினையை தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வமில்லை. நான் என்னைப் பற்றி தெரிந்துகொள்ளவே படிக்கிறேன்” என்று அவன் சொன்னான்.
அவர்கள் இரவுபகலாக விவாதித்துக் கொண்டார்கள். வெவ்வேறு இடங்களில் அமர்ந்து வகுப்புக்கான மணி அடிக்கும் வரை ஆவேசமாகப் பேசினார்கள். அவர்களைப் போன்றே மற்ற மாணவர்களும் ஆங்காங்கே அமர்ந்து அரசியலைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் சிவ்குமார் யாதவ் அவனிடம் ”இங்கே அத்தனை பையன்களும் பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். காக்காய் கூட்டங்கள் கத்திக்கொண்டே இருப்பது போலிருக்கிறது. பேசுவதற்காகத்தான் இவர்கள் கல்லூரிக்கு வந்திருக்கிறார்கள் போல” என்றான்.
“இங்கே இவர்களுக்குப் பேச்சுதான் விடுதலையின் அடையாளம். ஊரில் அவர்கள் யாரிடம் பேசமுடியும்? பேசினாலும் மீண்டும் மீண்டும் வறுமையையும், கடனையும், மழையையும் பற்றித்தானே பேசவேண்டும்? இங்கே பேச நண்பர்கள் அமைந்திருக்கிறார்கள். பேசுவதற்கு விஷயங்கள் கிடைக்கின்றன. எவ்வளவு விஷயங்கள். ஜனநாயகம், சோஷலிசம், கம்யூனிசம்” என்று ராம்சரண் நாயக் சொன்னான். “என்ன பேசுகிறார்கள் என்றே முக்கியமில்லை. அவர்களின் குரல்களைக் கேட்பதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது.”
அந்த குரல்களை ராம்சரண் நாயக் பின்னர் ஒருபோதும் மறக்கவே இல்லை. இரவில் எப்போது கண்களை மூடிக் கொண்டாலும் அந்த குரல்களை அவனால் கேட்க முடிந்தது. எங்கோ எப்போதோ வாழ்க்கையில் இருந்து மறைந்துபோய்விட்ட சிவ்குமார் யாதவிடம் அவன் பேசிக்கொண்டேதான் இருந்தான்.
“வரலாற்றில் எப்போதுமே மனிதர்களுக்கு இத்தனை பேச்சுக்கான வாய்ப்பே அமைந்ததில்லை. ஜனநாயகம் போல மானுடகுலத்திற்குப் பெரிய வரம் ஏதுமில்லை. சோறே இல்லாமலாகட்டும். ஆனால் பேச முடிகிறதே. பேசிப்பேசி நான் இங்கே இருக்கிறேன், நான் சிந்திக்கிறேன், நானும் ஒரு குரல்தான் என தனக்கே நிறுவிக்கொள்ள முடிகிறதே. எவ்வளவு பெரிய அதிருஷ்டம் அது…”
எங்கோ இருந்த சிவ்குமார் யாதவிடம் அவன் சொன்னான். “வரலாற்றை எவரும் அறிந்திருக்கவில்லைதான். ஆனால் இப்படி வரலாற்றை பேசி உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு முன்பு நமக்கெல்லாம் கிடைத்ததே இல்லை என்றும் எல்லாருக்கும் தெரியும். ஆகவேதான் பேசுவதற்கான எந்த வாய்ப்பையும் நம் ஆட்கள் தவறவிடுவதே இல்லை. இன்னும் இன்னும்தான் பேசுவார்கள். சினிமாவிலே பேசிக்கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளில் பேசுகிறார்கள். மேடைகளில் பேசுகிறார்கள். பேச்சுதான் எங்கும் காற்றுபோல நிறைந்திருக்கிறது. இது பேச்சின் யுகம். பேச்சுதான் இப்போதுள்ள தெய்வம்.”
”அன்று பேசியவர்கள் எல்லாம் இப்போது அதேபோலப் பேசுகிறார்களா?” என்று சிவ்குமார் யாதவ் கேட்டான். கல்லூரி முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கையில் ஒரு விபத்தில் லாரியில் சிக்கி சிவ்குமார் யாதவ் உயிர்துறந்ததை இருபத்திமூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் ராம்சரண் நாயக் அறிந்துகொண்டான். இறந்தவனின் கேள்விகள் மேலும் கூர்மை அடைந்திருந்தன. “சொல் ராம்சரண், நீ பேசிக்கொண்டா இருக்கிறாய்?”
“இல்லை” என்று ராம்சரண் நாயக் சொன்னான். “ஆனால் அடுத்த தலைமுறை பேசுகிறது. அவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்”
”எவ்வளவு நாள்?”
அது ஒரு பழைய தங்கும்விடுதி. லக்னோவின் புறநகர் பகுதியில் இருந்தது. வெளியே மிக அருகே இருந்த சாலை வழியாக கார்களும் லாரிகளும் சீறிச் சென்றுகொண்டே இருந்தன. அறைக்குள் அந்த வண்டிகளின் முகப்பொளி சன்னலுக்கு மேலே இருந்த வெண்டிலேட்டர் வழியாக வளைந்து பறந்து சுழன்றது.
“சொல், எவ்வளவு நாள் பேசுவார்கள்” என்றான் சிவ்குமார் யாதவ்.
அந்தக் கேள்வியையே ராம்சரண் நாயக் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் நல்ல போதையில் இருந்தான். அவனுடைய உடல் மெத்தையில் அழுந்திப் புதைந்தபடியே இருந்ததுபோல உணர்ந்தான். “சொல் ராம்” என்றான் சிவ்குமார், இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு செத்துப்போனவன் ஏளனத்துடன் கேட்டுக்கொண்டே இருந்தான்.
“தெரியவில்லை” என்றான் ராம்சரண். “எனக்கு மெய்யாகவே தெரியவில்லை…“ அவன் நாக்கு தடித்து வழவழப்பான எச்சிலில் புரண்டது. குழறிய குரலில் “தெரியவில்லை” என்று சொல்லிக்கொண்டே இருந்தான். அப்படியே தூக்கத்தில் தன்னை அழுத்திக்கொண்டான்.
(மேலும்)
காணொளிகள், கடிதம்
மரியாதைக்குரிய ஜெ,
காணொளிகளின் தேவை குறித்த பதிவை வாசித்தேன். அக்கருத்தை ஒற்றிய என்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள தோன்றியதால் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
பல காலமாக உங்களைப் பற்றி அறிந்திருந்தாலும் ஒரு வருடத்திற்கு முன்பு வரை உங்கள் எழுத்தை வாசித்ததில்லை. பொதுவாகவே வாசிப்புப் பழக்கம் உள்ளவன் என்றாலும் உங்கள் எழுத்தை வாசிக்காமல் போனதற்கு காரணம் பொதுவெளியில் உங்கள் மீது பூசப்பட்டுள்ள இந்துத்துவ சாயம். விவரம் தெரிந்த வயதிலிருந்தே சோசியலிச கருத்துகளில் இருந்த ஈடுபாடு காரணமாக அதைச் சார்ந்த வாசிப்புகளில் அதிகமாக ஈடுபட்டேன்.
தற்செயலாக டிவிட்டர் தளத்தில் நூறு நாற்காலிகள் கதைக்கான இணைப்பைப் பார்த்தேன். அதற்கு மேல் இதை விட சிறந்த சிறுகதை இல்லை என்ற கருத்தும் இருந்தது. சரி என்று இணைப்பைத் தொட்டு சென்று கதையைப் படித்தேன். தீவிர இலக்கியத்தை வாசித்து இருந்தாலும் இக்கதை அவற்றை விட ஒரு படி மேல் என்பது புரிந்தது. இப்படி ஒரு கதையை எழுதியவரும் பொது வெளியில் சங்கி என அழைக்கப்படுபவரும் ஒருவராக இருக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
YouTube algorithm உண்மையில் சிறந்த ஒரு தொழில்நுட்பம். ஒருவர் எந்த காணொளியை விரும்புவார், அவரது ஈடுபாட்டை மேம்படுத்த எந்த காணொளி தேவை என்பதைப் பயன்படுத்த தொடங்கிய சில மாதங்களிலேயே அறிந்து கொண்டு விடுகிறது. ரீல்சும் சார்ட்சம் வெறும் பாசாங்கு தான் என புரிந்து கொண்ட உடன் மனம் நமக்கான காணொளிகளை தேட துவங்குகிறது. நூறு நாற்காலிகள் வாசித்த ஒரு மாத இடைவெளியில் என்னுடைய YouTube feeds ல் வந்தது உங்களுடைய “அறிவியக்கமே நவீன நாட்டின் மையம்” என்ற காணொளி. மனதின் ஓரத்திலிருந்த தயக்கத்தையும் மீறி அந்த காணொளியைப் பார்த்தேன். அதில் எப்படி அமெரிக்கா அறிவியக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறது என்றும் இந்தியாவில் அறிவியக்கத்தின் நிலை மற்றும் தேவையைப் பற்றியும் விளக்கிக் கூறியிருந்தீர்கள். மேலும் உங்களை திராவிட இயக்கத்தவர் சங்கி என்றும் இந்துத்துவாவினர் திராவிடன் என்றும் அழைப்பதையும் குறிப்பிட்டிருந்தீர்கள்.
நிச்சயமாக எல்லா இயக்கத்திலும் bigots என்று சொல்லப்படக் கூடிய நபர்கள் இருப்பார்கள். தங்கள் கருத்தைத் தவிர வேறு எதையும் காது குடுத்து கேட்காதவர்கள் அல்லது முயற்சிக்காதவர்கள் . என்னுடைய bigotry தன்மையை அந்த காணொளி நீக்கியது என்று தான் கூற வேண்டும். நம் சிந்தனை உலகத்தில் தவிர வெளியே இருப்பவர்களிடமும் நல்லவை உள்ளன, கருத்துகள் உள்ளன. அவற்றை கூர்ந்து நோக்கி கற்றுப் பழகினாலொழிய நம்மால் தெரிந்து கொள்ள இயலாது என்ற உண்மையும் விளங்கியது.
ஒரு காணொளியில் மூளையைச் சாட்டையால் அடித்து தான் எழுப்ப வேண்டும் என கூறியிருப்பீர்கள். முழுமையறிவு பக்கத்தில் வரும் ஒவ்வொரு காணொளியும் என் மூளையைச் சாட்டையால் அடிப்பதாகத் தான் எனக்கு தோன்றுகிறது. மேலும் மேலும் வாசிப்பை நோக்கி என்னைச் செலுத்துவதும் அவைதான்.
அன்றாட வாழ்க்கையில் ஈடுபடும் பொழுது பல நேரங்களில் நம் அகத் தேடலை மறந்து இருக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படுகின்றன. ஒரு நாள் இரண்டு நாளாக சேர்ந்து நீண்ட நாள்கள் வாசிப்பைக் கைவிட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. அவ்வாறான நாள்களில் காணொளிகள் நம் உண்மையான தேடலை நோக்கி நம்மை செலுத்தும் சாதனங்களாக உள்ளன. என்னைப் பொறுத்த வரையில் என்னுடைய களம் இலக்கியம் தான் என்பதைத் தெளிவடையவும் வைத்துள்ளன.
நன்றிகளுடன்
கார்த்திக் ராஜா.
The idealism and practicalism
I am listening to your speeches regularly. I have an ipression about your mission. You are constantly battling against a specific mindset. Today the entire corporate-consumer culture is trying to craft a plain, standard, average personality out of our young generation. A personality without any private tastes or any particular mindsets. That is the ideal consumer essential for today’s trade world.
பறவை பார்த்தல், தாவரங்களை அவதானித்தல் பற்றிய குறிப்பான உரையை என் குழந்தைகளுக்கு அனுப்பி வைத்தேன். வழக்கம்போல அவர்கள் முதல் இரண்டு நிமிடம் மட்டும் பார்த்தார்கள். போர் என்று சின்னவன் சொல்லிவிட்டான். கண்டெண்டை தெரிஞ்சுக்கிட்டேன் என்று இன்னொருவன் சொன்னான்.
இணையத் தலைமுறைJune 19, 2025
செயற்கைநுண்ணறிவைக்கொண்டு நாவல் எழுதுவது
செயற்கைநுண்ணறிவைக் கொண்டு நாவலை எழுதிவிடலாம் என்று ஒரு நண்பர் சொன்னார். உண்மையில் எழுதமுடியுமா? அதன் மதிப்பு என்னவாக இருக்கும்? சரி, செயற்கை நுண்ணறிவு ஒரு நாவலை எழுதுவதற்கு எவ்வகையிலேனும் பயன்படுமா?
ஆத்மா எனும் காவியக்களம்
இந்த நாவல் ஒரு திரைப்படம் எடுக்கும்பொருட்டு எழுதப்பட்டது. 2010ல் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் வடிவை எழுதும்பொருட்டு நான் கோதாவரி அருகே உள்ள எலமஞ்சலி லங்கா என்னும் இடத்தில் ஒரு மாதகாலம் தங்கியிருந்தேன். எழுதிமுடிக்கப்பட்டபோது மணி ரத்னம் அந்த முயற்சியை கைவிடுவதாகச் சொன்னார். நடிகர்களின் தேர்வு சரிவர அமையவில்லை என்பதும், தஞ்சை உட்பட எந்த ஆலயத்திலும் படப்பிடிப்பு அனுமதி கிடைக்கவில்லை என்பதும்தான் காரணம். இன்னொரு சினிமா எடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது. ‘நீங்கள் திரைக்கதையாக எழுதவேண்டாம், ஒரு நாவலாக உங்கள் போக்கில் எழுதுங்கள். கட்டற்று எழுதுங்கள். தேவையானவற்றை எடுத்து நான் ஒரு சினிமாவாக ஆக்குகிறேன்’ என்று அவர் சொன்னார். அவ்வாறாக நான் இந்நாவலை எழுதினேன். அவர் சொன்னதுபோலவே கட்டற்று.
எனக்கு இந்நாவலின் கரு நாகர்கோயிலில் வாழ்ந்த ஃபாதர் தொம்பர் என்னும் கிறிஸ்தவ அருட்பணியாளரின் வாழ்விலிருந்து கிடைத்தது. இது அவரைப்பற்றிய கதைகளில் ஒன்று – அவர் ஒரு சிறுவனை ஒலிப்பதிவுக்கருவியில் பேசவைத்த அந்த தருணம். அது ஒரு ‘தஸ்தயேவ்ஸ்கியன்’ சந்தர்ப்பம் என்று நினைத்தேன். அன்று நான் தாந்தேயின் டிவைன் காமெடி காவியத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். புதிய மொழியாக்கத்தில் வெளிவந்த பைபிளையும். கூடவே லூவர் அருங்காட்சியகத்தின் ஓவியங்கள் அடங்கிய ஒரு பெரிய நூலையும். அவையனைத்தும் இணைந்து ஓர் ஒட்டுமொத்த உளஎழுச்சியை உருவாக்கின. எழுத எழுத நாவல் விரிந்தபடியே சென்றது.
இது செவ்வியல் அழகியல்கொண்ட படைப்பு. ஆகவே புதுமை (novelty) என்று சொல்லப்படும் அம்சம் இதில் இல்லை. மிகத்தொன்மையான கதைக்கரு, மிகத்தொன்மையான படிமங்கள், அவற்றின் மறுவடிவம் வழியாக உருவாகும் மானுட உச்சங்கள். இது உச்சநிலையில் இருந்து உச்சநிலை நோக்கிச் செல்லும் படைப்பு. அதன்பொருட்டு சாமானியதளங்களை, அன்றாடங்களை தவிர்த்துவிட்டிருக்கிறது. ஆகவே யதார்த்தத்தை கடந்து நீள்கிறது. மானுட ஆத்மா கொள்ளும் வலிகளின், பரவசங்களின் தீவிரநிலைகள் மட்டுமே இதிலுள்ளன. அவ்வகையில் இந்நாவல் காவியத்தன்மை (Epical) கொண்டது எனலாம். இன்னும் பொருத்தமாக இசைநாடகத்தன்மை (Operatic) கொண்டது என்று.
இந்நாவலின் திரைவடிவம் தமிழில் போதிய வரவேற்பைப் பெறவில்லை. அதற்கான முதன்மைக் காரணம் என நான் எண்ணுவது இத்தகைய ஒரு படைப்புக்காக சாமானிய ரசிகர்களை தயார்ப்படுத்தவில்லை என்பது. இது எந்தவகையான படம் என முன்னரே விளக்கவில்லை. தமிழ்மக்கள் ஒரு காதல்படத்தைப் பார்க்கும் உளநிலையுடன் இதை பார்க்க வந்து ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் இதன் கிறிஸ்தவத் தொன்மவியல் தமிழ்மக்களுக்குத் தெரியாது. ஆனால் அன்று அப்படி முற்றிலும் தெரியாமலிருக்கும் என நான் எண்ணவே இல்லை. படம் வெளிவந்தபின் பலரும் எழுதியதைப் பார்த்தபின்னர்தான் கிறிஸ்தவ மெய்யியலின் ஆரம்ப அரிச்சுவடிகூட இங்குள்ள விமர்சகர்கள், எழுத்தாளர்களுக்குக்கூட தெரியாது என புரிந்துகொண்டேன். மொத்தத் தமிழகத்திலும் அன்று அதற்கு ஒரே விதிவிலக்கு சாரு நிவேதிதா மட்டுமே. (ஆகவேதான் இன்று கிறிஸ்தவ இறையியலை பயிற்றுவிக்கும் வகுப்புகளை ஒருங்கிணைக்கிறேன். இப்போதும் இதுவரை எழுத்தாளர்கள் எவரும் ஆர்வம் காட்டவில்லை)
கடல் படம் தந்த சோர்வில் நான் இந்த நாவலை அதன்பின் ஒரு முறைகூட வாசித்துப் பார்க்கவில்லை. அண்மையில் இளம் ரசிகர்கள், குறிப்பாக கடல் வெளிவந்தபோது பள்ளிமாணவர்களாக இருந்தவர்கள், பலர் கடல் படம் பற்றி என்னிடம் ஆர்வமாகப் பேசுவதைக் கண்டேன். அந்த நாவலை பிரசுரிக்கலாம் என்னும் எண்ணம் உருவாகியது, அந்தப் படத்தை மேலும் விரிவாக்கம் செய்ய அது உதவியாக இருக்கும் என்று எண்ணினேன். மின்னஞ்சலில் மணி ரத்னத்துக்கு அனுப்பிய கோப்புகளாக அந்நாவல் என் கூகிள் கணக்கில் இருந்தது. அதை எடுத்து செப்பனிட்டு, சீர்மைப்படுத்தி இப்போது வெளியிட்டிருக்கிறேன்.
நாவல் வடிவம் வேறு, சினிமா ஊடகம் வேறு. நாவலுக்கு பக்க அளவு இல்லை. அதில் சொல்லமுடியாத விஷயங்களும் இல்லை. ஆகவே நாவல் உணர்ச்சிகரமான மொழிநடையில் நிகழ்வுகளையும், உணர்வுகளையும், எண்ணங்களையும் அள்ளிக்கொட்டிக்கொண்டே செல்கிறது. எல்லா நிகழ்வுகளையும் படமாக ஆக்கவேண்டும் என்றால் பல படங்கள் தேவையாகும். நாவல் மொழிக்கலை, ஆகவே இது மொழிசார்ந்தே நிகழ்கிறது. இதன் வடிவம் நாடகீயத்தன்னுரை (Dramatic monologue) என்னும் அமைப்பு கொண்டது. இரண்டு பேரின் தன்னுரைகள்தான் இவை. ஷேக்ஸ்பியர் முதல் தஸ்தயேவ்ஸ்கி வரை பலர் பயன்படுத்திய உத்தி இது.
மாறாக சினிமா அதற்கே உரிய தனித்தன்மையுடன் உள்ளது என்பதை சினிமா அறிந்தவர்கள் உணரலாம். அது நிகழ்வுகளை பெரிதாக்கவில்லை, மாறாக முடிந்தவரை சுருக்குகிறது, ஆனால் காட்சிப்படிமங்களாக ஆக்கிவிடுகிறது. இரண்டு உதாரணங்களை மட்டும் சொல்கிறேன். செலினா சாமை காட்டிக்கொடுக்கும் காட்சியில் செலினா மட்டும் ‘தெய்வீக ஒளி’ (Devine light) என்னும் பொன்னிற வெளிச்சத்தில் காட்டப்பட்டிருக்கிறார். இன்னொன்று, தாமஸுக்கு பியா பாவமன்னிப்பு அளிக்கும் இடத்தில் பின்னிப்பிணைந்திருக்கும் வேர்ச்செறிவு. அவை காட்சிகள் அல்ல. காட்சிப்படிமங்கள். கதைக்கு மணி ரத்னம் அளித்த தனிப்பட்ட விளக்கம் அது.
அதேபோல, ‘நான் அப்பான்னு நினைச்சிட்டேன்’ என தாமஸ் சர்ச்சில் சொல்லும் இடம். அங்கே நாவலில் மொழியாக இருந்த காட்சி கண்களுக்கு முன் மெய்யாக நிகழ்கிறது. மொழிவடிவை விட தீவிரமாக அதை நடிப்பு என்னும் நிகழ்த்துகலை காட்டிவிடுகிறது. படிமம், நிகழ்த்திக்காட்டுதல் இரண்டும்தான் சினிமாவின் ஆயுதங்கள். அதன் வழியாக அது காட்சிக்கலை என்னும் தன் தனித்தன்மையை நிறுவுகிறது. அவ்வாறு சில இடங்களில் நாவலின் மொழிவெளிப்பாட்டை சினிமாவாக கடல் கடந்துசென்றிருப்பதை காணலாம்.
சினிமா என்பது கண்களால் பார்க்கப்படும் ஒரு கலை. ஓவியம்போல. கடல் சினிமா ஒரு பிரம்மாண்டமான ஓவியத்தொகை போலவே ஒழுகிச்செல்வதை இன்று ரசிகர்கள் பார்க்கலாம். தமிழ்ச்சூழலில் நாம் சினிமாவை கதையோட்டம், உணர்ச்சிகர நிகழ்வுகள்,திருப்பம் என ரசிக்கப் பழகியிருக்கிறோம். சினிமாவிமர்சகர்கள்கூட கதைச்சுருக்கம், கதைமாந்தரின் இயல்பு பற்றி மட்டுமே எழுதுகிறார்கள். காட்சி தரும் அனுபவத்தை எழுதுவதில்லை. கடல் சினிமாவில் இறுதியில் ஆன்மாவின் கொந்தளிப்பே கடலின் கொந்தளிப்பாக ஆவதை, பிரம்மாண்டமான காட்சிச்சட்டகங்களில் சாத்தானும் புனிதரும் எதிரெதிராக தெரிவதை எல்லாம் அடுத்த தலைமுறையினர் உணர்ந்திருப்பதை இப்போது பார்க்கிறேன்.
சினிமாவின் எல்லைக்குட்பட்ட நேரம் காரணமாக அது சுருக்கமாக காட்டியாகவேண்டும். ஆகவே அது குறைத்தலின் கலை (Minimalist Art) ஆக உள்ளது. நேர்மாறாக நாவல் விரித்தலின் கலை. இந்நாவலின் விரித்து விரித்துச்செல்லும் பெரிய வடிவம் அழுத்தமான களமாக அமைந்து ஒருவேளை இனிமேல் கடல் சினிமாவை மேலும் துல்லியமாக ரசிக்கச் செய்யக்கூடும் என்று படுகிறது.
‘ஆத்மாவின் உலைக்களம்’ என்ற சொல் நித்ய சைதன்ய யதியின் ஓர் உரையில் வருகிறது. இந்நாவல் அதுதான். துயரின், கீழ்மையின் அடித்தட்டில் இருந்து மீட்பின், ஒளியின் உச்சம் வரை ஓர் ஆன்மா அலைக்கழியும் நீடுதொலைவுகளை தொட்டுணர முயன்ற படைப்பு இது. தெய்வமும், திரிந்த தெய்வமாகிய சாத்தானும் விளையாடும் களம்.
பத்தாண்டுகளுக்குப் பின் வாசித்தபோது இந்நாவல் என் அகத்தைக் கொந்தளிக்கச் செய்தது. நான் எழுதியதென்பதே எனக்கு மறந்துவிட்டது. கண்ணீருடன், அகவிம்மலுடன் நான் வாசித்துச்சென்ற உச்சதருணங்களின் ஒழுக்கு இந்நாவல். பிரம்மாண்டமான தேவாலயச் சுவர்ச் சித்திரங்கள் போல ஒரு தெய்வீகமான செவ்வியல் இதில் நிகழ்ந்துள்ளது. தாந்தேக்கும், தஸ்தயேவ்ஸ்கிக்கும், மேரி கொரெல்லிக்கும் என் காணிக்கை.
இந்நாவலை எழுத காரணமாக அமைந்த மணி ரத்னத்திற்கும், உடனிருந்த நண்பர் இயக்குநர் தனாவுக்கும், இந்நாவலை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் என் நன்றிகள்.
இந்நாவலை நான் இருவருக்குக் காணிக்கையாக்குகிறேன். குமரிமாவட்டத்திற்கு மீட்பின் அருளுடன் வந்த இரு மருத்துவர்களுக்கு. நெய்யூர் மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர் சாமர்வெல் என் அப்பாவின் காலில் வந்த பிளவை நோயை அறுவைசிகிழ்ச்சை செய்து அவர் உயிரை காத்தவர். சிறுவயதில் என் உயிரை மீட்டளித்தவர் மார்த்தாண்டம் மிஷன் ஆஸ்பத்திரி மருத்துவர் டாக்டர் பிளெச்சர்.
ஜெயமோகன்
20-3-2025
நாகர்கோயில்
கடல் வாங்கதொடர்புக்கு : contact@vishnupurampublications.comPhone : 9080283887
ஆர். எஸ். வெங்கட்ராமன்
வானொலியில் 20 ஆண்டுகள் செய்தித் துறைக்குத் தலைமை தாங்கி வழிநடத்தினார். இந்தியாவின் விடுதலை, குடியரசு தினம், இந்தியாவின் சீன, பாகிஸ்தான் போர்கள், பங்களாதேஷ் விடுதலை, எமர்ஜென்ஸி நாட்கள், இலங்கைக் கலவரங்கள் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களில், செய்திகளை கவனமாக மொழிபெயர்த்து அளிக்கும் பொறுப்பில் இருந்தார்.

காவியம் – 60

”குணாட்யர் என் வார்த்தைக்காகக் காத்து அமர்ந்திருந்தார்” என்று கானபூதி சொன்னது. “நான் அவரிடம் கேட்டேன், பீமனுக்கு துச்சாதனனின் ரத்தம் ஏன் இனித்தது?”
அவர் அக்கேள்வியை மிக அருகே தன் உள்ளத்துக்குள் இருந்து எழுவதுபோலக் கேட்டார். நான் குணாட்யரை நோக்கிக் குனிந்து “இதே பொழுதில் வேறெங்கோ ஒருவரிடம் இதே கேள்வியைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவர் ஒரு பதில் சொன்னார்…”
“அவர் சொன்ன பதில் எதுவாயினும் அது அவர் வாழும் காலத்திற்குரியது” என்று குணாட்யர் சொன்னார். “மனித நடத்தையில் எக்காலத்திற்கும் உரிய பதில் என்பது இல்லை”
“உங்கள் பதில் என்ன?”
“ஐவரிலும் ஆதிக்காட்டாளனுக்கு அணுக்கமானவன் பீமன். அந்தக் குருதியைச் சுவைத்தவன் அவனுக்குள் வாழும் அந்தக் காட்டாளன்தான்” என்று குணாட்யர் சொன்னார். “காட்டாளன் வாழாத மானுட உள்ளம் என்பது இல்லை”
“சரியான பதில்” என்று சொல்லி நான் அவர் கன்னத்தைத் தட்டினேன். “உன்னைப் போன்றவர்கள் என்னை தேடிவருவது அபூர்வத்திலும் அபூர்வம். இது தெய்வச்செயல். நான் உன் உள்ளத்தில் ஒரு துளி சிந்தாமல் என்னிடமுள்ள எல்லா கதைகளையும் கொட்டிவிடப்போகிறேன்”
“இது நான் கேள்வி கேட்கும் தருணம்” என்று குணாட்யர் சொன்னார். “தொடையில் அடிபட்டு குளத்தின் கரையில் சாகக்கிடக்கும்போது துரியோதனன் தான் ஏதேனும் பிழையைச் செய்ததாக உணர்ந்தானா என்பது என் கேள்வி”
“அந்தக் கேள்வி எதற்காக உன்னில் எழுகிறது?”
“நான் காலத்தை உதறிவிட்டபின் இங்கே அமர்ந்துகொண்டு அரசர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இமை அசைக்காமல் நூற்றெட்டுபேரை கழுத்தறுத்து ரத்தம் எடுக்க ஆணையிட்டவனும் அரசனே. அந்தப் பழியை தலைமுறைகளுக்குப் பின் உணர்ந்து, சாக்கியமுனியின் சொற்களில் அடைக்கலம் தேடி, கழுவாய் தேடிக்கொண்டவனும் அரசனே. இரண்டு அரசர்களின் செயல்களும் சரியே என்று சொல்லும் நெறிநூல்கள் உள்ளன, சான்றோரும் உள்ளனர். தர்க்கரீதியாகப் பார்த்தால் இரண்டும் சரியே. இரக்கமில்லாத அரசன் உறுதியான அரசை உருவாக்குகிறான், உறுதியான அரசு எளியோருக்குக் காவல். இரக்கம் நிறைந்த அரசன் எதிரிகளே இல்லாமல் ஆகிறான். எளியோர் அறம் அன்றி வேறு பாதுகாப்பே தேவையில்லாதவர்கள் ஆகிறார்கள். இரக்கத்திற்கும் கொடூரத்திற்கும் நடுவே ஊசலாடும் அரசர்களே பேரழிவை உருவாக்குபவர்கள்” என்றார் குணாட்யர்.
“உன் கேள்விக்கான விடையாக மீண்டும் அந்தக் கதையையே விரிவாக்குகிறேன்” என்று கதைசொல்லியாகிய நான் சொன்னேன். “ஒரே தெய்வத்தை உபாசனை செய்வதுபோன்றது ஒரே கதையிடம் எல்லா கேள்விகளையும் கேட்பது.”
“சொல்” என்றபடி குணாட்யர் சாய்ந்து அமர்ந்தார்.
“நான் அவரிடம் கதைசொல்லத் தொடங்கினேன்” என்று என்னிடம் கானபூதி சொன்னது. “அதே கதை, ஒரே சரடில் கோர்க்கப்படும் நிகழ்வுகளையோ, ஒரே புள்ளியில் வந்து முனைகொள்ளும் நிகழ்வுகளையோதான் நாம் கதை என்று சொல்கிறோம். அதாவது தர்க்கரீதியாக இணைக்கப்பட்ட நிகழ்வுகளை… இந்த தர்க்கத்தை கதைசொல்லியாகிய நானும் கதைகேட்பவனாகிய நீயும் உருவாக்கிக் கொள்கிறோம். இங்கே இப்படி இவை கதையென்று ஆகும் என்று தெரியாமல் எங்கோ அவை நிகழ்ந்துகொண்டிருந்தன. எவரெவரோ தங்கள் விருப்பப்படி நடப்பதாக எண்ணிக்கொண்டு அவற்றை நடித்துக்கொண்டிருந்தனர்.”
“இது தொலைவில், அப்பால் ஓர் உலகில் நிகழ்ந்த கதை என்று குணாட்யரிடம் நான் சொல்லத்தொடங்கினேன்” என்றது கானபூதி. “தன் பத்தொன்பதாவது வயதில் முதல் கொலையைச் செய்தான் ராம்சரண் நாயக். இருபதாவது வயதில் அவனிடம் அப்படி ஒரு கொலையை அவன் செய்யக்கூடும் என்று யாராவது சொல்லியிருந்தால் திகைத்துச் சிரித்திருப்பான். நம்பகமாக அதைச் சொல்லி அது உறுதியாக நிகழும் என்று அவனுக்குத் தெரிந்திருந்தால் அவன் உடைந்து அழுதிருப்பான். அப்போது அவனுடைய வாழ்க்கை வேறொன்றாக இருந்தது.”
கிராமத்திலிருந்து பாட்னாவுக்கு அவனை கல்லூரியில் கொண்டு வந்து சேர்த்த அவனது அப்பா கல்லூரியில் அவனுக்கு இடம் போட்ட பிறகு திரும்பும்போது ஏதோ சொல்ல மிகவும் தயங்கி, மீண்டும் யோசித்து, மீண்டும் தயங்கி, வழியிலேயே நின்றார். அவன் மிக மெதுவாக பின்னால் வந்து நின்றான். அவர் அவனைப் பார்க்காமல் ”இங்கேயே நீ ஏதாவது சிறிய வேலையைச் செய்ய முடியுமா? இந்தப் படிப்புக்கு பாதகம் வராமல்…” என்று கேட்டார்.
அவர் என்ன சொல்ல வருகிறார் என்று உடனே ராம்சரண் புரிந்துகொண்டான். ”நானும்கூட வேலை தேடுவதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இங்கே வேலைக்கு நிறைய ஆள் தேவைப்படும் இவ்வளவு பெரிய நகரத்தில்…” என்றான்.
அவர் ஆறுதல் அடைவது அவரது தோள்களின் தளர்வில் இருந்து தெரிந்தது.
”அது அவசியம் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் ஒருவேளை அவசியம் இருந்தால் அதை முன்பே நாம் யோசித்து வைப்பது நல்லதல்லவா? ஏனென்றால் இந்தக்காலத்தில் விவசாயத்தை யாரும் முழுமையாக நம்ப முடியாது மழையை மைத்துனனையும் நம்பக்கூடாது என்று சொல்வார்கள்” என்று சொல்லி திரும்பி அவனைப்பார்த்து சிரித்தார்.
அவன் அவருடைய அந்த சிரிப்பால் மனம் நெகிழ்ந்தான். எந்த அளவுக்கு அவருக்கு பதற்றம் இருக்கும் என்று அவனால் எண்ணிப்பார்க்க முடிந்தது. அவர் அவனிடம் எப்போதுமே சிரித்துப் பேசுவதில்லை. அவருடைய சிரிப்பு ஒருவகை அழுகை.
அவன் பதினொன்றாம் வகுப்பில் அவனுடைய ஊரிலேயே முதல் மதிப்பெண் எடுத்தபோது முதலில் அவர்தான் பதற்றம் அடைந்தார். அவருடைய தாயாதிகள் அடைந்த பதற்றத்துக்கு இணையானது அது. அவன் அந்த செய்தியை அவரிடம் சொன்னபோது அவருக்குச் சரியாகப் புரியவில்லை ”பாஸ் ஆகிவிட்டாயா?” என்று கேட்டார்.
”பாஸ் மட்டுமல்ல, என்னுடைய பள்ளியிலேயே நான்தான் முதல் மதிப்பெண்” என்று ராம்சரண் நாயக் சொன்னான்.
“பள்ளியிலேயே முதல் மதிப்பெண் இல்லையா…” என்று தன் உள்ளத்தில் அது பதியாதது போல திரும்பிக்கேட்டார்.
“ஆமாம்” என்று அவன் சொன்னான்.
அதன்பிறகே அவர் முகம் மலர்ந்து ”நல்லது, நல்லது” என்று சொன்னபின் எழுந்து அவன் தோளை அணைப்பது போல கைகளால் வளைத்து லேசாகத் தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டார். அந்தச் செயலால் அவரே நாணமடைந்ததுபோல உடனே விலகிச் சென்றார்.
அவனுடைய அம்மா அவனுக்கு என்ன வெற்றி வந்தது என்றே உள்வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் தன் பையன் அந்த ஊரே திகைக்குமளவு எதையோ செய்துவிட்டான் என்று புரிந்துகொண்டாள். ஆகவே கைகளைத் தட்டிக்கொண்டு, உரக்க கூவியபடி தெருவில் நின்று, ”என்னுடைய பையன் பாஸாகிவிட்டான். கவர்ன்மெண்டில் இருந்து அவனுக்கு பணம் கொடுக்கப் போகிறார்கள். பையன் பாஸாகிவிட்டான்! கவர்ன்மெண்டிலிருந்து பணம்கொடுக்கப் போகிறார்கள்!” என்று கூச்சலிட்டாள். தாயாதிகள் அதைக்கேட்க வேண்டுமென்பதுதான் அவளுடைய நோக்கமாக இருந்தது.
அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் அந்தச் செய்தி எதுவுமே புரியாமலும், குழப்பத்தையும் எரிச்சலையும் அளிக்கக்கூடியதாகவும்தான் இருந்தது. கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருந்த திவாகர் ஜா மட்டும் தான் அவனிடம் ”மிகச்சிறந்த விஷயம். படிப்பை விட்டுவிடாதே இந்தக் கிராமத்தில் எவருக்குமே படிப்பு சரியாக வரவில்லை. படிப்பு வருவது என்பது ஒரு பெரிய அருள்” என்று சொன்னான்.
மற்றவர்கள் என்ன ஏது என்று தெரியாமல் ஏதேதோ சொன்னார்கள்.
“உன்னை பாட்னாவில் கூப்பிட்டுக்கொள்வார்களா?” என்று ஒருவர் கேட்டார்.
“பணம் உனக்கு மட்டுமா? இல்லை கிராமத்தில் அனைவருக்குமாக பகிர்ந்து கொடுப்பார்களா?”
“நிறைய மார்க் வாங்கினால் உனக்குத் தேவையானது போக மிச்சத்தை பிறருக்கு கொடுக்க முடியுமா?” என்று கூட ஒருவர் கேட்டார்.
அவர் தன்னுடைய பேரனுக்கு மார்க் மிகவும் குறைவு என்பது மனதில் வைத்துக்கேட்கிறார் என்று அவனுக்குத் தெரிந்தபோது சிரிப்பை அடக்கிக்கொண்டு ”ஆமாம், நான் விற்கக்கூட முடியும்” என்றான்.
”விற்பதா?” என்று அவர் பல் இல்லாத வாயைத்திறந்து கண்களைச் சுருக்கிக்கொண்டு குழப்பமாகக் கேட்டார். ”என்ன விலைக்கு?”
இரண்டு நாட்களுக்குள்ளாகவே அவன் சாதித்தது என்ன என்று அந்த ஊருக்குத் தெரிந்தது. பதினெட்டு கிராமங்களிலிருந்து மாணவர்கள் வந்து பயிலும் உயர்நிலைப் பள்ளியில், தேர்வு எழுதிய நாற்பத்திரண்டு பேரில், அவனுக்குத் தான் முதலிடம் அவனைவிட குறைவான மார்க்கைத் தான் ஊரிலிருந்த பிராமணப் பையன்கள்கூடப் பெற்றிருந்தார்கள்.
“பிராமணர்களைவிட அதிக மார்க்கா? அது எப்படி?” என்று அவன் தெரு முழுக்க பேசிக்கொண்டார்கள்.
“இவன் அம்மா முன்பு அங்கே வேத்நாத் சர்மா வீட்டில் பால் ஊற்றிக்கொண்டிருந்தாள். அப்போதே அவள் கருவுற்றிருப்பாள். அதன்பிறகு தான் இவன் அப்பாவை திருமணம் செய்து கொண்டாள்” என்று ஒருவர் சொன்னார்.
“அது தவறொன்றும் இல்லை. பிராமணர்களிடம் குழந்தை பெற்றுக்கொள்வது முன்னரே இருந்த வழக்கம்தான்” என்று இன்னொருவர் சொன்னார்.
ஆனால் பிராமணர்களைவிட அதிக மதிப்பெண் என்பது திரும்பத் திரும்பப் பேசி உறுதியாக்கப்பட்டது. அவனுடைய அப்பா அச்செய்தியைக்கேட்ட உடனே அடைந்த முதல் தத்தளிப்பு அதன்பிறகு பெருகிக்கொண்டே வந்தது. மேற்கொண்டு என்ன படிப்பது என்று அவன் யோசித்துக்கொண்டிருக்கும்போது அவர் அதைப்பற்றி மட்டும் எதுவுமே சொல்லவில்லை.
ஒரு மாதம் சென்ற பிறகுதான் அவனை தெருவில் சந்தித்த பள்ளி வகுப்பாசிரியர் நந்தகுமார் போஸ் அவனிடம் ”நீ கல்லூரியில் சேரப்போகிறாய்தானே? விண்ணப்பங்கள் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். என்னிடம்கூட விண்ணப்பப் பிரதி இருக்கிறது” என்றார்.
ராம்சரண் நாயக் “அப்பா ஒன்றும் சொல்லவில்லை” என்றான்.
நந்தகுமார் போஸ் “ஒன்றும் சொல்லவில்லையா? இன்னும் பதினைந்து நாட்களுக்குள் விண்ணப்பத் தேதி முடிந்துவிடும். உனக்கு நல்ல மார்க் இருப்பதனால் இடம் கிடைப்பதில் சந்தேகமில்லை. ஆனால் தேதி தாண்டி விண்ணப்பித்தால் ஒருவேளை கிடைக்காமல் போகும். தனியார் கல்லூரிகள் இடங்களை முன்னரே நிரப்பிவிடுவார்கள். அரசாங்கக் கல்லூரிகளிலும் இடங்கள் இப்போதெல்லாம் உடனே நிறைந்துவிடுகின்றன. நீ அரசாங்கக் கல்லூரியில் தான் படிக்க முடியும். அங்குதான் கட்டணம் குறைவாக இருக்கும்” என்றார்.
அவன் தாழ்ந்து கொண்டே வந்தான். ”அப்பா என்னை கல்லூரியில் சேர்ப்பாரா என்று தெரியவில்லை” என்றான்.
“சேர்க்காமல் நீ என்ன செய்யப்போகிறாய்? வயல்வேலைக்கா போவாய்?”
”இல்லை… அவர் சென்ற ஆண்டே இந்த ஓர் ஆண்டு படிப்புக்குப்பிறகு நான் வேலைக்கு போக முடியுமல்லவா என்று கேட்டுக்கொண்டிருந்தார்.”
”வேலைக்கா?” என்றபின் அவர் சிரித்தார். ”பதினொன்றாம் வகுப்பு படித்தவனுக்கு என்ன வேலை கிடைக்கும்?”
”பதினொன்றாம் வகுப்பு படித்தவர்கள் அரசாங்க வேலைக்கு தேர்வு எழுதலாமே?” என்று அவன் சொன்னான்.
”அதையும் யோசித்து வைத்திருக்கிறாயா? எழுதலாம், அதுதான் தகுதி. ஆனால் அதை எழுதி ஜெயித்து வேலைக்கு போவதற்கு எப்படியும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும் .அது வரைக்கும்…”
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
”அதுவரைக்கும் நீ ஊரிலேயே கூலி வேலைக்கு போகலாம். அல்லது பாட்னாவில் போய் அங்கே ஏதாவது கடையில் கணக்குப்பிள்ளையாக அமரலாம். ஆனால் வாழ்க்கை அழிந்துவிடும். நீ பதினொன்றாம் வகுப்பில் தொட்டுத் தொட்டு ஜெயித்திருந்தால் அதுதான் நல்ல வழி. ஆனால் நீ வாங்கிய மதிப்பெண் எவ்வளவு என்று உனக்குத் தெரியாது. கணிதத்திலும் ஆங்கிலத்திலும் மாநில அளவில் ஐம்பது இடங்களுக்குள் வந்திருக்கிறாய். நீ கல்லூரிக்குப் போயே ஆகவேண்டும். நான் வேண்டுமானால் உன் அப்பாவிடம் வந்து பேசுகிறேன்” என்றார் நந்தகுமார் போஸ்.
ராம்சரண் நாயக் ”சென்ற ஆண்டே விவசாயத்தில் பெரிய லாபமில்லை. கடன் வாங்கித்தான் இந்த ஆண்டு விதைத்திருக்கிறார். இந்த ஆண்டும் என்ன வருமென்று தெரியாது. இதுவரைக்கும் மழை சீராக இல்லை. அவரிடம் இதைப்பற்றி பேசுவதற்கு எனக்கு தயக்கமாக இருக்கிறது” என்றான்.
”நிலம் இருக்கிறதல்லவா? அடமானம் வைத்து காசு வாங்கலாம். நீ நிலத்தை விற்று படித்தால் கூட அது ஒன்றும் தவறான முதலீடு கிடையாது. நான் வந்து உன் அப்பாவிடம் சொல்கிறேன்” என்று போஸ் சொன்னார்.
அவரே வந்து அப்பாவிடம் அதைப்பற்றி பேசும் வரை அவன் ஒன்றுமே சொல்லவில்லை. அவரே பேசட்டும், அதுவே சரியாக இருக்கும், அது எல்லாச் சங்கடங்களையும் தவிர்த்துவிடும் என்று அவன் நினைத்தான். அவன் அப்பா அவன் கண்களைப் பார்ப்பதையே தவிர்த்துக் கொண்டிருந்தார். வீட்டில் அவர் தங்குவது மிகக்குறைவாக இருந்தது. வயலில் இருந்த நேரம் போக எஞ்சிய நேரங்களை அருகிலிருந்த சிறிய டீக்கடையின் மரப்பெஞ்சில் அமர்ந்து செலவிட்டார்.
அவன் தூரத்திலிருந்து அவரைப்பார்த்தபோது அவர் நன்றாக ஒடுங்கி இருப்பதாகத் தோன்றியது. ஏற்கனவே அவர் ஒடுங்கிய உடல் கொண்டவர். நரம்பு மட்டுமே எலும்புகளின் மேல் சுற்றியிருக்கும்படியான தோற்றம். குழிந்த கன்னங்களும் குழிக்குள் ஈரமாக மின்னும் சிறிய கண்களும் கொண்டவர். பெரிய தலைப்பாகை கட்டி, அழுக்கு வெள்ளைச் சட்டையும் கச்சமாகச் சுற்றிய வேட்டியும் தோல் செருப்புமாக அவர் அமர்ந்திருக்கும்போது கைகள் மட்டும் புடைத்து பெரிய நரம்புகளுடன் பெரிதாக தனியாக ஒட்டவைத்ததுபோல இருந்தன. அவருடைய கைகளுக்கும் அவருக்கும் தொடர்பே இல்லாததுபோல தெரிந்தன. அவர் வெறுமே அமர்ந்திருக்கும்போதும் அவை இரண்டு பெரிய பாம்புகள் போல தனியாக ஏதோ செய்து கொண்டிருக்கும். ஒன்றை ஒன்று தொட்டு பின்னி விலகி மீண்டும் தழுவிக்கொண்டு.
கைவிரல்களால் தொட்டு பேரம் பேசிக்கொள்வதும் விலை சொல்வதும் சந்தையில் வழக்கமாக இருந்தது. ரகசியப் பேரம் என்றால் கைமேல் ஒரு துணியைப் போட்டுக்கொண்டு விரல்களால் தொடுவார்கள். அவருடைய இரண்டு கைகளும் ஒன்றையொன்று தொட்டு தொட்டு ஏதோ கணக்கிட்டுக் கொண்டும், பேரம் பேசிக்கொண்டும் இருந்தன. தொலைவில் நின்றுகொண்டு அவன் அந்தக் கைகளைப் பார்த்தபோது அவை என்ன பேசிக்கொள்கின்றன என்று கூட கொஞ்சம் முயன்றால் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றியது.
அப்பா பீடியை ஆழமாக இழுத்தபடி தலைகுனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது செருமி தரையில் துப்பிக்கொண்டார்.அந்த டீக்கடையில் ஒரு டீ என்பது மூன்று அவுன்ஸ் கூட இருக்காது. அதை வாங்கி கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு துளியாக நெடுநேரம் குடித்தார். மழை பிந்திக் கொண்டிருக்கும்போது அவர் அப்படித்தான் தனக்குள் ஒடுங்கிக்கொண்டே இருப்பார். எந்தக் கேள்விக்கும் சற்று நேரம் கழிந்துத்தான் பதில் சொல்வார். அவர் மிக ஆழத்தில் அவர் உடலுக்குள் இருப்பது போலவும், அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் எல்லாம் நீர் அடித்தளத்துக்குப் போய்விட்ட கிணற்றுக்குள் வாளி இறங்கும் அளவுக்கு நேரத்தை எடுத்துக்கொள்வதாகவும் அவனுக்குத் தோன்றும். வாளி கிணற்றுக்குள் பாறைகளை முட்டுகிறது. தண்ணீருக்காக துழாவுகிறது. சில சமயம் காலியாக, கொஞ்சம் வண்டலுடன் வெளிவருகிறது.
அம்மா அவன் அப்பாவை நன்கு தெரிந்து வைத்திருந்தாள். ஆகவே எதையும் உரக்க நாலைந்து முறை அவள் சொல்வாள். அவர் முன் சென்று நின்று இடுப்பில் கைவைத்துக் கொண்டு குனிந்து கத்துவாள். கைகளை பலமாக வீசியும், முகத்தில் தீவிரமான உணர்ச்சிகளை கொண்டு வந்தும், பொம்மலாட்டத்தின் பொம்மைகளை போன்ற அசைவுகளுடன் அவள் பேசுவாள். அவர் வெறித்த சிறிய கண்களுடன் அவளை சற்று நேரம் பார்த்தபிறகு தலையசைத்து அவள் சொல்வதற்கு பதில் சொல்வார். அவளே கேட்காமல் பெரும்பாலும் அவர் எதுவுமே சொன்னதில்லை. எப்போதாவது உத்தரவுகளைச் சொல்வதாக இருந்தால் இரண்டுமுறை செருமிவிட்டு, சுவரையோ தரையையோ பார்த்தபடி அதை முணுமுணுத்தார். அவர் தனக்குள் முணுமுணுக்கும் சொற்களைக் கூட அம்மா தவறவிடுவதில்லை.
நந்தகுமார் போஸ் அவரை பார்ப்பதற்காக வந்ததை அவன் தான் முதலில் பார்த்தான். அவர் தன்னுடைய வழக்கமான புத்தம்புதிய ராலே சைக்கிளில், வெள்ளை பைஜாமாவும் ஜிப்பாவும் கழுத்தில் காபிநிற மப்ளருமாக வந்துகொண்டிருந்தார். சாக்கடைகள் உடைந்து ஓடிய, புழுதியும் வைக்கோல் கூளமும் சாணியும் நிறைந்த தெருவினூடாக அவர் சைக்கிளை ஒடித்து ஒடித்து ஓட்டி வந்தார். பழைய நுகங்களையும் கொழுக்களையும் தெருவில் போட்டிருந்தார்கள். தொட்டிகளின் உடைசல்கள், மாட்டுவண்டிகள் என்று தெருவே நடமாட முடியாத அளவுக்கு நெரிசலாக இருந்தது. நிர்வாணமான குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. தெருவின் இருபக்கமும் மலம் கழித்து வைத்திருந்தார்கள். மாடுகள் தெருக்களில் கட்டப்பட்டு, அவற்றுக்கான தீவனமும் தெருக்களில் போடப்பட்டிருந்தது. சைக்கிளை ஒரு கட்டத்தில் ஓட்டமுடியாமல் இறங்கி உருட்டிக்கொண்டே வந்தார் போஸ்.
அவருக்கு தன் அப்பாவை தெரியாது என்று அதன்பிறகு நினைவு கூர்ந்த அவன் ஓடிச்சென்று அவரை எதிர்கொண்டு “வாருங்கள் சார்” என்று அழைத்தான்.
”உன் அப்பாவைப் பார்க்கத்தான் வந்தேன். எங்கே இருக்கிறார்?” என்றார்.
அவன் “அதோ அந்த டீக்கடையில் இருக்கிறார். அந்த பெஞ்சு முனையில் அமர்ந்து பீடி பிடித்துக்கொண்டிருக்கிறார்.”
”அவரா? அவருக்கென்ன, காச நோய் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டார்.
”இல்லை” என்றான்.
”சரிதான், வா” என்று சொல்லி அவர் சைக்கிளை உருட்டிக்கொண்டு செல்ல, மறுபக்கம் சைக்கிளைப் பிடித்தபடி அவன் கூடவே வந்தான்.
“அவரிடம் நான் எதுவும் இதுவரை பேசவில்லை” என்று அவன் சொன்னான்.
”அவருக்குத் தெரிந்திருக்கும். அவரிடம் யாராவது பேசாமல் இருந்திருக்கமாட்டார்கள்” என்று அவர் சொன்னார்.
“அவர் ஒன்றும் பேசவில்லை என்றால் அவரிடம் பணமில்லை என்று அர்த்தம்” என்று அவன் சொன்னான்.
”பார்ப்போம் வா” என்று சொன்னபடி போஸ் நடந்தார். சைக்கிளை டீக்கடை அருகே நிறுத்தி ஸ்டாண்ட் போட்டபோது அவன் சற்று விலகி மறுபக்கம் நின்றான். அவன் அப்பா அவனைப்பார்த்து ,கண்களால் ’யார்?’ என்று கேட்டார்.
ராம்சரண் நாயக் ”என்னுடைய ஆசிரியர், என்னுடைய வகுப்பாசிரியர்” என்றான்.
அப்பா எழுந்து, தலையில் இருந்த முண்டாசை எடுத்து உதறி கையில் வைத்தபடி வணக்கம் சொன்னார்.
”உட்காருங்கள்” என்று போஸ் சொன்னார். ”உங்களிடம் பேசத்தான் வந்தேன்.”
அப்பா தலையை அசைத்தார். அதன்பிறகு நினைவு கூர்ந்து திரும்பி, டீக்கடைக்காரரிடம் ஒரு டீ சொன்னார்.
போஸ் ”சீனி குறைவாக” என்று சொன்னபிறகு ”உங்களிடம் உங்கள் பையனைப்பற்றி பேசத்தான் வந்தேன்” என்று சொன்னார்.
அப்பா தலையசைத்தார்.
“உங்கள் பையன் வாங்கிய மதிப்பெண் எவ்வளவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவன் இந்த மாவட்டத்திலேயே பத்தாவது இடத்தில் வந்திருக்கிறான். மாநில அளவில் முதல் நூறு பேருக்குள் வந்திருக்கிறான். இதெல்லாம் சாதாரண சாதனை கிடையாது. அதிலும் உங்கள் சாதியில் இது மிகப்பெரிய விஷயம். உங்கள் சாதியில் இதுவரைக்கும் கல்லூரிக்கு சென்று படித்தவர்களில் அவன்தான் அதிக மார்க் வாங்கியிருப்பான் என்று நினைக்கிறேன்” என்றார்.
அவன் அப்பா கண்களை சுருக்கி முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் தலையசைத்தார். அல்லது அவர் முகத்தில் திகைப்பு போன்ற ஒரு உணர்ச்சி இருந்தது. அந்த உணர்ச்சி எப்போதுமே செதுக்கினது போல அவர் முகத்தில் நிரந்தரமாக இருப்பது.
”அவனைக் கல்லூரிக்கு அனுப்பவேண்டும்” என்று போஸ் சொன்னார்.
அவன் அப்பா அதற்கும் தலையசைத்தார்.
”கல்லூரியில் பெரிய கட்டணம் எதுவும் இருக்காது. தொடக்கத்தில் கொஞ்சம் பணம் வேண்டும். அதன்பிறகு ஆண்டுக்கு மூன்று முறை ஃபீஸ் கட்டினால் போதும். அங்கே குறைவான செலவில் ஹாஸ்டலில் நின்று படிக்க முடியும் பெரிய செலவிருக்காது.”
அவன் அப்பா செருமினார். உடனே அவருக்கு இருமல் வந்துவிட்டது இருமி துப்பிவிட்டு ”ஆனால் என்னிடம்…” என்று சொல்லி, ”நான் எல்லாரிடமும் இங்கு கடன் கேட்டுவிட்டேன்” என்றார். அவர் குரல் உடைந்தது.
“நீங்கள் உங்கள் நிலத்தை விற்று படிக்க வைத்தால் கூட அது தவறான முதலீடு கிடையாது. படிப்பை முடித்துவிட்டால் இதைப்போல ஐந்து மடங்கு நிலம் வாங்கும் அளவுக்கு அவனுக்கு வேலை கிடைக்கும்” என்று ஆசிரியர் சொன்னார்.
”நிலத்தை விற்க முடியாது. ஏற்கனவே நிலம் அடமானத்தில் இருக்கிறது. நான் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று அவர் சொன்னார். மீண்டும் ”என்னுடைய அப்பா காலத்திலேயே அது அடமானத்துக்குச் சென்றுவிட்டது. நான் வட்டி மட்டும் தான் கட்டிக்கொண்டிருக்கிறேன்…” என்றார்.
சிறிது நேரத்துக்குப்பிறகு போஸ் ”நான் இரண்டு மூன்று மிராசுதாரர்களிடம் பேசியிருக்கிறேன். அவர்கள் சிறிய தொகை அளிப்பார்கள். ஜெயின் ட்ரஸ்ட் ஒன்று இருக்கிறது. அவர்கள் உறுதியாக உதவுவார்கள். கல்லூரியில் சேர்வதற்கான தொகையை நானே ஏற்பாடு செய்து தருகிறேன். மாதாமாதம் ஓரளவுக்கு பணம் தேவைப்படும். அதை இங்கிருந்து நீங்கள் எப்படியாவது திரட்டி அனுப்பினால் போதும். இப்போது அது பிரமிப்பாக இருக்கும். ஆனால் எப்படியோ தொடங்கி அது முன்நகர ஆரம்பித்துவிட்டால் என்ன ஏதென்று தெரியாமலேயே மூன்று வருடங்கள் ஓடிவிடும். அவன் பட்டதாரி ஆகிவிடுவான். அதன்பிறகு உங்களுக்கு கவலை இல்லை” என்றார்.
”நான் வந்து கேட்கிறேன்” என்று அப்பா சொன்னார். ஆனால் அவர் நம்பிக்கை கொள்ளவில்லை என்று தெரிந்தது.
”நீங்கள் கேட்கவேண்டியதில்லை. பையனை அழைத்துக்கொண்டு நானே செல்கிறேன். நானே கேட்டால் கொடுப்பார்கள். நான் கற்பித்துக் கொடுத்த பையன்களிலேயே புத்திசாலியான பையன் இவன். இவன் கல்லூரிக்கு போவது எனக்கும் பெருமை” என்று நந்தகுமார் போஸ் சொன்னார்.
”அவர்கள் எங்கள் சாதிக்காரர்களுக்கு உதவுவார்களா?” என்று அவன் அப்பா கேட்டார். “நாங்கள் இந்த ஊருக்கே வந்தேறிகள்…”
”அதெல்லாமில்லை அவர்கள் தீண்டத்தகாத மக்களுக்கு மட்டும் தான் எதுவும் செய்யக்கூடாது, அது பாவம் என்று நினைக்கிறார்கள். மற்றபடி அனைவருக்கும் அவர்கள் அளிப்பார்கள். பிராமணர்களுக்கோ டாக்கூர்களுக்கோ கிடைக்கும் அளவுக்கு உங்களுக்கு உதவிகள் கிடைக்காது. ஆனால் ஏதோ கொஞ்சம் கிடைக்காமலும் இருக்காது. உங்கள் ஜாதியில் பணக்காரர்கள் என்று யாருமில்லை. கொஞ்சம் நிலம் வைத்திருப்பவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களிடம் மிச்சம் பணம் என்று எப்போதுமே இருப்பதில்லை. ஆனால் ஜெயின்கள் கொஞ்சம் உதவி செய்கிறார்கள்” என்றார்.
அவன் அப்பா ”ஏதாவது பணம் கிடைத்தால் மேற்கொண்டு நான் இங்கு ஏதாவது செய்கிறேன்” என்றார்.
ஆனால் அப்போதும் அவர் முகத்தில் மகிழ்ச்சியோ தெளிவோ இருக்கவில்லை. கண்கள் மேலும் சுருங்கி, உடல் மேலும் ஒடுங்கியது போலத்தான் இருந்தது.
டீயைக் குடித்துவிட்டு எழுந்த போஸ் ”நான் அவனைக்கூட்டிக்கொண்டு போய் பணம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.
அப்பா நடுங்கிக்கொண்டிருப்பதை ராம்சரண் நாயக் பார்த்தான். அவர் கைகளைக் கூப்பி நந்தகுமார் போஸுக்கு வணக்கம் சொன்னார். ஆசிரியர் கிளம்பிச் சென்றபின் அப்பா திரும்பி அவனைப் பார்த்தார். அவனை யாரென்றே தெரியாதவர் பார்ப்பதுபோல இருந்தது அது.
(மேலும்)
வைணவ வெளிச்சம்
வைணவ இலக்கிய அறிமுகம், வெள்ளி மலையில் எனது இரண்டாவது வகுப்பு. வெள்ளி மலையில் நிகழும் வகுப்புகள் பற்றிய ஒரு அறிமுகம் கிடைத்த பிறகு முதலில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த வகுப்புகள் இரண்டு, ஒன்று ஆலய கலை வகுப்பு இரண்டாவது வைணவ இலக்கியம்/பிரபந்த வகுப்பு.
வைணவ வெளிச்சம்You are also using modern communication methods to share your ideas. I think reading is an over rated habit.
Reading is outdated!Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
