ஆத்மா எனும் காவியக்களம்
இந்த நாவல் ஒரு திரைப்படம் எடுக்கும்பொருட்டு எழுதப்பட்டது. 2010ல் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் வடிவை எழுதும்பொருட்டு நான் கோதாவரி அருகே உள்ள எலமஞ்சலி லங்கா என்னும் இடத்தில் ஒரு மாதகாலம் தங்கியிருந்தேன். எழுதிமுடிக்கப்பட்டபோது மணி ரத்னம் அந்த முயற்சியை கைவிடுவதாகச் சொன்னார். நடிகர்களின் தேர்வு சரிவர அமையவில்லை என்பதும், தஞ்சை உட்பட எந்த ஆலயத்திலும் படப்பிடிப்பு அனுமதி கிடைக்கவில்லை என்பதும்தான் காரணம். இன்னொரு சினிமா எடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது. ‘நீங்கள் திரைக்கதையாக எழுதவேண்டாம், ஒரு நாவலாக உங்கள் போக்கில் எழுதுங்கள். கட்டற்று எழுதுங்கள். தேவையானவற்றை எடுத்து நான் ஒரு சினிமாவாக ஆக்குகிறேன்’ என்று அவர் சொன்னார். அவ்வாறாக நான் இந்நாவலை எழுதினேன். அவர் சொன்னதுபோலவே கட்டற்று.
எனக்கு இந்நாவலின் கரு நாகர்கோயிலில் வாழ்ந்த ஃபாதர் தொம்பர் என்னும் கிறிஸ்தவ அருட்பணியாளரின் வாழ்விலிருந்து கிடைத்தது. இது அவரைப்பற்றிய கதைகளில் ஒன்று – அவர் ஒரு சிறுவனை ஒலிப்பதிவுக்கருவியில் பேசவைத்த அந்த தருணம். அது ஒரு ‘தஸ்தயேவ்ஸ்கியன்’ சந்தர்ப்பம் என்று நினைத்தேன். அன்று நான் தாந்தேயின் டிவைன் காமெடி காவியத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். புதிய மொழியாக்கத்தில் வெளிவந்த பைபிளையும். கூடவே லூவர் அருங்காட்சியகத்தின் ஓவியங்கள் அடங்கிய ஒரு பெரிய நூலையும். அவையனைத்தும் இணைந்து ஓர் ஒட்டுமொத்த உளஎழுச்சியை உருவாக்கின. எழுத எழுத நாவல் விரிந்தபடியே சென்றது.
இது செவ்வியல் அழகியல்கொண்ட படைப்பு. ஆகவே புதுமை (novelty) என்று சொல்லப்படும் அம்சம் இதில் இல்லை. மிகத்தொன்மையான கதைக்கரு, மிகத்தொன்மையான படிமங்கள், அவற்றின் மறுவடிவம் வழியாக உருவாகும் மானுட உச்சங்கள். இது உச்சநிலையில் இருந்து உச்சநிலை நோக்கிச் செல்லும் படைப்பு. அதன்பொருட்டு சாமானியதளங்களை, அன்றாடங்களை தவிர்த்துவிட்டிருக்கிறது. ஆகவே யதார்த்தத்தை கடந்து நீள்கிறது. மானுட ஆத்மா கொள்ளும் வலிகளின், பரவசங்களின் தீவிரநிலைகள் மட்டுமே இதிலுள்ளன. அவ்வகையில் இந்நாவல் காவியத்தன்மை (Epical) கொண்டது எனலாம். இன்னும் பொருத்தமாக இசைநாடகத்தன்மை (Operatic) கொண்டது என்று.
இந்நாவலின் திரைவடிவம் தமிழில் போதிய வரவேற்பைப் பெறவில்லை. அதற்கான முதன்மைக் காரணம் என நான் எண்ணுவது இத்தகைய ஒரு படைப்புக்காக சாமானிய ரசிகர்களை தயார்ப்படுத்தவில்லை என்பது. இது எந்தவகையான படம் என முன்னரே விளக்கவில்லை. தமிழ்மக்கள் ஒரு காதல்படத்தைப் பார்க்கும் உளநிலையுடன் இதை பார்க்க வந்து ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் இதன் கிறிஸ்தவத் தொன்மவியல் தமிழ்மக்களுக்குத் தெரியாது. ஆனால் அன்று அப்படி முற்றிலும் தெரியாமலிருக்கும் என நான் எண்ணவே இல்லை. படம் வெளிவந்தபின் பலரும் எழுதியதைப் பார்த்தபின்னர்தான் கிறிஸ்தவ மெய்யியலின் ஆரம்ப அரிச்சுவடிகூட இங்குள்ள விமர்சகர்கள், எழுத்தாளர்களுக்குக்கூட தெரியாது என புரிந்துகொண்டேன். மொத்தத் தமிழகத்திலும் அன்று அதற்கு ஒரே விதிவிலக்கு சாரு நிவேதிதா மட்டுமே. (ஆகவேதான் இன்று கிறிஸ்தவ இறையியலை பயிற்றுவிக்கும் வகுப்புகளை ஒருங்கிணைக்கிறேன். இப்போதும் இதுவரை எழுத்தாளர்கள் எவரும் ஆர்வம் காட்டவில்லை)
கடல் படம் தந்த சோர்வில் நான் இந்த நாவலை அதன்பின் ஒரு முறைகூட வாசித்துப் பார்க்கவில்லை. அண்மையில் இளம் ரசிகர்கள், குறிப்பாக கடல் வெளிவந்தபோது பள்ளிமாணவர்களாக இருந்தவர்கள், பலர் கடல் படம் பற்றி என்னிடம் ஆர்வமாகப் பேசுவதைக் கண்டேன். அந்த நாவலை பிரசுரிக்கலாம் என்னும் எண்ணம் உருவாகியது, அந்தப் படத்தை மேலும் விரிவாக்கம் செய்ய அது உதவியாக இருக்கும் என்று எண்ணினேன். மின்னஞ்சலில் மணி ரத்னத்துக்கு அனுப்பிய கோப்புகளாக அந்நாவல் என் கூகிள் கணக்கில் இருந்தது. அதை எடுத்து செப்பனிட்டு, சீர்மைப்படுத்தி இப்போது வெளியிட்டிருக்கிறேன்.
நாவல் வடிவம் வேறு, சினிமா ஊடகம் வேறு. நாவலுக்கு பக்க அளவு இல்லை. அதில் சொல்லமுடியாத விஷயங்களும் இல்லை. ஆகவே நாவல் உணர்ச்சிகரமான மொழிநடையில் நிகழ்வுகளையும், உணர்வுகளையும், எண்ணங்களையும் அள்ளிக்கொட்டிக்கொண்டே செல்கிறது. எல்லா நிகழ்வுகளையும் படமாக ஆக்கவேண்டும் என்றால் பல படங்கள் தேவையாகும். நாவல் மொழிக்கலை, ஆகவே இது மொழிசார்ந்தே நிகழ்கிறது. இதன் வடிவம் நாடகீயத்தன்னுரை (Dramatic monologue) என்னும் அமைப்பு கொண்டது. இரண்டு பேரின் தன்னுரைகள்தான் இவை. ஷேக்ஸ்பியர் முதல் தஸ்தயேவ்ஸ்கி வரை பலர் பயன்படுத்திய உத்தி இது.
மாறாக சினிமா அதற்கே உரிய தனித்தன்மையுடன் உள்ளது என்பதை சினிமா அறிந்தவர்கள் உணரலாம். அது நிகழ்வுகளை பெரிதாக்கவில்லை, மாறாக முடிந்தவரை சுருக்குகிறது, ஆனால் காட்சிப்படிமங்களாக ஆக்கிவிடுகிறது. இரண்டு உதாரணங்களை மட்டும் சொல்கிறேன். செலினா சாமை காட்டிக்கொடுக்கும் காட்சியில் செலினா மட்டும் ‘தெய்வீக ஒளி’ (Devine light) என்னும் பொன்னிற வெளிச்சத்தில் காட்டப்பட்டிருக்கிறார். இன்னொன்று, தாமஸுக்கு பியா பாவமன்னிப்பு அளிக்கும் இடத்தில் பின்னிப்பிணைந்திருக்கும் வேர்ச்செறிவு. அவை காட்சிகள் அல்ல. காட்சிப்படிமங்கள். கதைக்கு மணி ரத்னம் அளித்த தனிப்பட்ட விளக்கம் அது.
அதேபோல, ‘நான் அப்பான்னு நினைச்சிட்டேன்’ என தாமஸ் சர்ச்சில் சொல்லும் இடம். அங்கே நாவலில் மொழியாக இருந்த காட்சி கண்களுக்கு முன் மெய்யாக நிகழ்கிறது. மொழிவடிவை விட தீவிரமாக அதை நடிப்பு என்னும் நிகழ்த்துகலை காட்டிவிடுகிறது. படிமம், நிகழ்த்திக்காட்டுதல் இரண்டும்தான் சினிமாவின் ஆயுதங்கள். அதன் வழியாக அது காட்சிக்கலை என்னும் தன் தனித்தன்மையை நிறுவுகிறது. அவ்வாறு சில இடங்களில் நாவலின் மொழிவெளிப்பாட்டை சினிமாவாக கடல் கடந்துசென்றிருப்பதை காணலாம்.
சினிமா என்பது கண்களால் பார்க்கப்படும் ஒரு கலை. ஓவியம்போல. கடல் சினிமா ஒரு பிரம்மாண்டமான ஓவியத்தொகை போலவே ஒழுகிச்செல்வதை இன்று ரசிகர்கள் பார்க்கலாம். தமிழ்ச்சூழலில் நாம் சினிமாவை கதையோட்டம், உணர்ச்சிகர நிகழ்வுகள்,திருப்பம் என ரசிக்கப் பழகியிருக்கிறோம். சினிமாவிமர்சகர்கள்கூட கதைச்சுருக்கம், கதைமாந்தரின் இயல்பு பற்றி மட்டுமே எழுதுகிறார்கள். காட்சி தரும் அனுபவத்தை எழுதுவதில்லை. கடல் சினிமாவில் இறுதியில் ஆன்மாவின் கொந்தளிப்பே கடலின் கொந்தளிப்பாக ஆவதை, பிரம்மாண்டமான காட்சிச்சட்டகங்களில் சாத்தானும் புனிதரும் எதிரெதிராக தெரிவதை எல்லாம் அடுத்த தலைமுறையினர் உணர்ந்திருப்பதை இப்போது பார்க்கிறேன்.
சினிமாவின் எல்லைக்குட்பட்ட நேரம் காரணமாக அது சுருக்கமாக காட்டியாகவேண்டும். ஆகவே அது குறைத்தலின் கலை (Minimalist Art) ஆக உள்ளது. நேர்மாறாக நாவல் விரித்தலின் கலை. இந்நாவலின் விரித்து விரித்துச்செல்லும் பெரிய வடிவம் அழுத்தமான களமாக அமைந்து ஒருவேளை இனிமேல் கடல் சினிமாவை மேலும் துல்லியமாக ரசிக்கச் செய்யக்கூடும் என்று படுகிறது.
‘ஆத்மாவின் உலைக்களம்’ என்ற சொல் நித்ய சைதன்ய யதியின் ஓர் உரையில் வருகிறது. இந்நாவல் அதுதான். துயரின், கீழ்மையின் அடித்தட்டில் இருந்து மீட்பின், ஒளியின் உச்சம் வரை ஓர் ஆன்மா அலைக்கழியும் நீடுதொலைவுகளை தொட்டுணர முயன்ற படைப்பு இது. தெய்வமும், திரிந்த தெய்வமாகிய சாத்தானும் விளையாடும் களம்.
பத்தாண்டுகளுக்குப் பின் வாசித்தபோது இந்நாவல் என் அகத்தைக் கொந்தளிக்கச் செய்தது. நான் எழுதியதென்பதே எனக்கு மறந்துவிட்டது. கண்ணீருடன், அகவிம்மலுடன் நான் வாசித்துச்சென்ற உச்சதருணங்களின் ஒழுக்கு இந்நாவல். பிரம்மாண்டமான தேவாலயச் சுவர்ச் சித்திரங்கள் போல ஒரு தெய்வீகமான செவ்வியல் இதில் நிகழ்ந்துள்ளது. தாந்தேக்கும், தஸ்தயேவ்ஸ்கிக்கும், மேரி கொரெல்லிக்கும் என் காணிக்கை.
இந்நாவலை எழுத காரணமாக அமைந்த மணி ரத்னத்திற்கும், உடனிருந்த நண்பர் இயக்குநர் தனாவுக்கும், இந்நாவலை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் என் நன்றிகள்.
இந்நாவலை நான் இருவருக்குக் காணிக்கையாக்குகிறேன். குமரிமாவட்டத்திற்கு மீட்பின் அருளுடன் வந்த இரு மருத்துவர்களுக்கு. நெய்யூர் மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர் சாமர்வெல் என் அப்பாவின் காலில் வந்த பிளவை நோயை அறுவைசிகிழ்ச்சை செய்து அவர் உயிரை காத்தவர். சிறுவயதில் என் உயிரை மீட்டளித்தவர் மார்த்தாண்டம் மிஷன் ஆஸ்பத்திரி மருத்துவர் டாக்டர் பிளெச்சர்.
ஜெயமோகன்
20-3-2025
நாகர்கோயில்
கடல் வாங்கதொடர்புக்கு : contact@vishnupurampublications.comPhone : 9080283887
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
