காவியம் – 60

”குணாட்யர் என் வார்த்தைக்காகக் காத்து அமர்ந்திருந்தார்” என்று கானபூதி சொன்னது. “நான் அவரிடம் கேட்டேன், பீமனுக்கு துச்சாதனனின் ரத்தம் ஏன் இனித்தது?”
அவர் அக்கேள்வியை மிக அருகே தன் உள்ளத்துக்குள் இருந்து எழுவதுபோலக் கேட்டார். நான் குணாட்யரை நோக்கிக் குனிந்து “இதே பொழுதில் வேறெங்கோ ஒருவரிடம் இதே கேள்வியைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவர் ஒரு பதில் சொன்னார்…”
“அவர் சொன்ன பதில் எதுவாயினும் அது அவர் வாழும் காலத்திற்குரியது” என்று குணாட்யர் சொன்னார். “மனித நடத்தையில் எக்காலத்திற்கும் உரிய பதில் என்பது இல்லை”
“உங்கள் பதில் என்ன?”
“ஐவரிலும் ஆதிக்காட்டாளனுக்கு அணுக்கமானவன் பீமன். அந்தக் குருதியைச் சுவைத்தவன் அவனுக்குள் வாழும் அந்தக் காட்டாளன்தான்” என்று குணாட்யர் சொன்னார். “காட்டாளன் வாழாத மானுட உள்ளம் என்பது இல்லை”
“சரியான பதில்” என்று சொல்லி நான் அவர் கன்னத்தைத் தட்டினேன். “உன்னைப் போன்றவர்கள் என்னை தேடிவருவது அபூர்வத்திலும் அபூர்வம். இது தெய்வச்செயல். நான் உன் உள்ளத்தில் ஒரு துளி சிந்தாமல் என்னிடமுள்ள எல்லா கதைகளையும் கொட்டிவிடப்போகிறேன்”
“இது நான் கேள்வி கேட்கும் தருணம்” என்று குணாட்யர் சொன்னார். “தொடையில் அடிபட்டு குளத்தின் கரையில் சாகக்கிடக்கும்போது துரியோதனன் தான் ஏதேனும் பிழையைச் செய்ததாக உணர்ந்தானா என்பது என் கேள்வி”
“அந்தக் கேள்வி எதற்காக உன்னில் எழுகிறது?”
“நான் காலத்தை உதறிவிட்டபின் இங்கே அமர்ந்துகொண்டு அரசர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இமை அசைக்காமல் நூற்றெட்டுபேரை கழுத்தறுத்து ரத்தம் எடுக்க ஆணையிட்டவனும் அரசனே. அந்தப் பழியை தலைமுறைகளுக்குப் பின் உணர்ந்து, சாக்கியமுனியின் சொற்களில் அடைக்கலம் தேடி, கழுவாய் தேடிக்கொண்டவனும் அரசனே. இரண்டு அரசர்களின் செயல்களும் சரியே என்று சொல்லும் நெறிநூல்கள் உள்ளன, சான்றோரும் உள்ளனர். தர்க்கரீதியாகப் பார்த்தால் இரண்டும் சரியே. இரக்கமில்லாத அரசன் உறுதியான அரசை உருவாக்குகிறான், உறுதியான அரசு எளியோருக்குக் காவல். இரக்கம் நிறைந்த அரசன் எதிரிகளே இல்லாமல் ஆகிறான். எளியோர் அறம் அன்றி வேறு பாதுகாப்பே தேவையில்லாதவர்கள் ஆகிறார்கள். இரக்கத்திற்கும் கொடூரத்திற்கும் நடுவே ஊசலாடும் அரசர்களே பேரழிவை உருவாக்குபவர்கள்” என்றார் குணாட்யர்.
“உன் கேள்விக்கான விடையாக மீண்டும் அந்தக் கதையையே விரிவாக்குகிறேன்” என்று கதைசொல்லியாகிய நான் சொன்னேன். “ஒரே தெய்வத்தை உபாசனை செய்வதுபோன்றது ஒரே கதையிடம் எல்லா கேள்விகளையும் கேட்பது.”
“சொல்” என்றபடி குணாட்யர் சாய்ந்து அமர்ந்தார்.
“நான் அவரிடம் கதைசொல்லத் தொடங்கினேன்” என்று என்னிடம் கானபூதி சொன்னது. “அதே கதை, ஒரே சரடில் கோர்க்கப்படும் நிகழ்வுகளையோ, ஒரே புள்ளியில் வந்து முனைகொள்ளும் நிகழ்வுகளையோதான் நாம் கதை என்று சொல்கிறோம். அதாவது தர்க்கரீதியாக இணைக்கப்பட்ட நிகழ்வுகளை… இந்த தர்க்கத்தை கதைசொல்லியாகிய நானும் கதைகேட்பவனாகிய நீயும் உருவாக்கிக் கொள்கிறோம். இங்கே இப்படி இவை கதையென்று ஆகும் என்று தெரியாமல் எங்கோ அவை நிகழ்ந்துகொண்டிருந்தன. எவரெவரோ தங்கள் விருப்பப்படி நடப்பதாக எண்ணிக்கொண்டு அவற்றை நடித்துக்கொண்டிருந்தனர்.”
“இது தொலைவில், அப்பால் ஓர் உலகில் நிகழ்ந்த கதை என்று குணாட்யரிடம் நான் சொல்லத்தொடங்கினேன்” என்றது கானபூதி. “தன் பத்தொன்பதாவது வயதில் முதல் கொலையைச் செய்தான் ராம்சரண் நாயக். இருபதாவது வயதில் அவனிடம் அப்படி ஒரு கொலையை அவன் செய்யக்கூடும் என்று யாராவது சொல்லியிருந்தால் திகைத்துச் சிரித்திருப்பான். நம்பகமாக அதைச் சொல்லி அது உறுதியாக நிகழும் என்று அவனுக்குத் தெரிந்திருந்தால் அவன் உடைந்து அழுதிருப்பான். அப்போது அவனுடைய வாழ்க்கை வேறொன்றாக இருந்தது.”
கிராமத்திலிருந்து பாட்னாவுக்கு அவனை கல்லூரியில் கொண்டு வந்து சேர்த்த அவனது அப்பா கல்லூரியில் அவனுக்கு இடம் போட்ட பிறகு திரும்பும்போது ஏதோ சொல்ல மிகவும் தயங்கி, மீண்டும் யோசித்து, மீண்டும் தயங்கி, வழியிலேயே நின்றார். அவன் மிக மெதுவாக பின்னால் வந்து நின்றான். அவர் அவனைப் பார்க்காமல் ”இங்கேயே நீ ஏதாவது சிறிய வேலையைச் செய்ய முடியுமா? இந்தப் படிப்புக்கு பாதகம் வராமல்…” என்று கேட்டார்.
அவர் என்ன சொல்ல வருகிறார் என்று உடனே ராம்சரண் புரிந்துகொண்டான். ”நானும்கூட வேலை தேடுவதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இங்கே வேலைக்கு நிறைய ஆள் தேவைப்படும் இவ்வளவு பெரிய நகரத்தில்…” என்றான்.
அவர் ஆறுதல் அடைவது அவரது தோள்களின் தளர்வில் இருந்து தெரிந்தது.
”அது அவசியம் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் ஒருவேளை அவசியம் இருந்தால் அதை முன்பே நாம் யோசித்து வைப்பது நல்லதல்லவா? ஏனென்றால் இந்தக்காலத்தில் விவசாயத்தை யாரும் முழுமையாக நம்ப முடியாது மழையை மைத்துனனையும் நம்பக்கூடாது என்று சொல்வார்கள்” என்று சொல்லி திரும்பி அவனைப்பார்த்து சிரித்தார்.
அவன் அவருடைய அந்த சிரிப்பால் மனம் நெகிழ்ந்தான். எந்த அளவுக்கு அவருக்கு பதற்றம் இருக்கும் என்று அவனால் எண்ணிப்பார்க்க முடிந்தது. அவர் அவனிடம் எப்போதுமே சிரித்துப் பேசுவதில்லை. அவருடைய சிரிப்பு ஒருவகை அழுகை.
அவன் பதினொன்றாம் வகுப்பில் அவனுடைய ஊரிலேயே முதல் மதிப்பெண் எடுத்தபோது முதலில் அவர்தான் பதற்றம் அடைந்தார். அவருடைய தாயாதிகள் அடைந்த பதற்றத்துக்கு இணையானது அது. அவன் அந்த செய்தியை அவரிடம் சொன்னபோது அவருக்குச் சரியாகப் புரியவில்லை ”பாஸ் ஆகிவிட்டாயா?” என்று கேட்டார்.
”பாஸ் மட்டுமல்ல, என்னுடைய பள்ளியிலேயே நான்தான் முதல் மதிப்பெண்” என்று ராம்சரண் நாயக் சொன்னான்.
“பள்ளியிலேயே முதல் மதிப்பெண் இல்லையா…” என்று தன் உள்ளத்தில் அது பதியாதது போல திரும்பிக்கேட்டார்.
“ஆமாம்” என்று அவன் சொன்னான்.
அதன்பிறகே அவர் முகம் மலர்ந்து ”நல்லது, நல்லது” என்று சொன்னபின் எழுந்து அவன் தோளை அணைப்பது போல கைகளால் வளைத்து லேசாகத் தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டார். அந்தச் செயலால் அவரே நாணமடைந்ததுபோல உடனே விலகிச் சென்றார்.
அவனுடைய அம்மா அவனுக்கு என்ன வெற்றி வந்தது என்றே உள்வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் தன் பையன் அந்த ஊரே திகைக்குமளவு எதையோ செய்துவிட்டான் என்று புரிந்துகொண்டாள். ஆகவே கைகளைத் தட்டிக்கொண்டு, உரக்க கூவியபடி தெருவில் நின்று, ”என்னுடைய பையன் பாஸாகிவிட்டான். கவர்ன்மெண்டில் இருந்து அவனுக்கு பணம் கொடுக்கப் போகிறார்கள். பையன் பாஸாகிவிட்டான்! கவர்ன்மெண்டிலிருந்து பணம்கொடுக்கப் போகிறார்கள்!” என்று கூச்சலிட்டாள். தாயாதிகள் அதைக்கேட்க வேண்டுமென்பதுதான் அவளுடைய நோக்கமாக இருந்தது.
அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் அந்தச் செய்தி எதுவுமே புரியாமலும், குழப்பத்தையும் எரிச்சலையும் அளிக்கக்கூடியதாகவும்தான் இருந்தது. கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருந்த திவாகர் ஜா மட்டும் தான் அவனிடம் ”மிகச்சிறந்த விஷயம். படிப்பை விட்டுவிடாதே இந்தக் கிராமத்தில் எவருக்குமே படிப்பு சரியாக வரவில்லை. படிப்பு வருவது என்பது ஒரு பெரிய அருள்” என்று சொன்னான்.
மற்றவர்கள் என்ன ஏது என்று தெரியாமல் ஏதேதோ சொன்னார்கள்.
“உன்னை பாட்னாவில் கூப்பிட்டுக்கொள்வார்களா?” என்று ஒருவர் கேட்டார்.
“பணம் உனக்கு மட்டுமா? இல்லை கிராமத்தில் அனைவருக்குமாக பகிர்ந்து கொடுப்பார்களா?”
“நிறைய மார்க் வாங்கினால் உனக்குத் தேவையானது போக மிச்சத்தை பிறருக்கு கொடுக்க முடியுமா?” என்று கூட ஒருவர் கேட்டார்.
அவர் தன்னுடைய பேரனுக்கு மார்க் மிகவும் குறைவு என்பது மனதில் வைத்துக்கேட்கிறார் என்று அவனுக்குத் தெரிந்தபோது சிரிப்பை அடக்கிக்கொண்டு ”ஆமாம், நான் விற்கக்கூட முடியும்” என்றான்.
”விற்பதா?” என்று அவர் பல் இல்லாத வாயைத்திறந்து கண்களைச் சுருக்கிக்கொண்டு குழப்பமாகக் கேட்டார். ”என்ன விலைக்கு?”
இரண்டு நாட்களுக்குள்ளாகவே அவன் சாதித்தது என்ன என்று அந்த ஊருக்குத் தெரிந்தது. பதினெட்டு கிராமங்களிலிருந்து மாணவர்கள் வந்து பயிலும் உயர்நிலைப் பள்ளியில், தேர்வு எழுதிய நாற்பத்திரண்டு பேரில், அவனுக்குத் தான் முதலிடம் அவனைவிட குறைவான மார்க்கைத் தான் ஊரிலிருந்த பிராமணப் பையன்கள்கூடப் பெற்றிருந்தார்கள்.
“பிராமணர்களைவிட அதிக மார்க்கா? அது எப்படி?” என்று அவன் தெரு முழுக்க பேசிக்கொண்டார்கள்.
“இவன் அம்மா முன்பு அங்கே வேத்நாத் சர்மா வீட்டில் பால் ஊற்றிக்கொண்டிருந்தாள். அப்போதே அவள் கருவுற்றிருப்பாள். அதன்பிறகு தான் இவன் அப்பாவை திருமணம் செய்து கொண்டாள்” என்று ஒருவர் சொன்னார்.
“அது தவறொன்றும் இல்லை. பிராமணர்களிடம் குழந்தை பெற்றுக்கொள்வது முன்னரே இருந்த வழக்கம்தான்” என்று இன்னொருவர் சொன்னார்.
ஆனால் பிராமணர்களைவிட அதிக மதிப்பெண் என்பது திரும்பத் திரும்பப் பேசி உறுதியாக்கப்பட்டது. அவனுடைய அப்பா அச்செய்தியைக்கேட்ட உடனே அடைந்த முதல் தத்தளிப்பு அதன்பிறகு பெருகிக்கொண்டே வந்தது. மேற்கொண்டு என்ன படிப்பது என்று அவன் யோசித்துக்கொண்டிருக்கும்போது அவர் அதைப்பற்றி மட்டும் எதுவுமே சொல்லவில்லை.
ஒரு மாதம் சென்ற பிறகுதான் அவனை தெருவில் சந்தித்த பள்ளி வகுப்பாசிரியர் நந்தகுமார் போஸ் அவனிடம் ”நீ கல்லூரியில் சேரப்போகிறாய்தானே? விண்ணப்பங்கள் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். என்னிடம்கூட விண்ணப்பப் பிரதி இருக்கிறது” என்றார்.
ராம்சரண் நாயக் “அப்பா ஒன்றும் சொல்லவில்லை” என்றான்.
நந்தகுமார் போஸ் “ஒன்றும் சொல்லவில்லையா? இன்னும் பதினைந்து நாட்களுக்குள் விண்ணப்பத் தேதி முடிந்துவிடும். உனக்கு நல்ல மார்க் இருப்பதனால் இடம் கிடைப்பதில் சந்தேகமில்லை. ஆனால் தேதி தாண்டி விண்ணப்பித்தால் ஒருவேளை கிடைக்காமல் போகும். தனியார் கல்லூரிகள் இடங்களை முன்னரே நிரப்பிவிடுவார்கள். அரசாங்கக் கல்லூரிகளிலும் இடங்கள் இப்போதெல்லாம் உடனே நிறைந்துவிடுகின்றன. நீ அரசாங்கக் கல்லூரியில் தான் படிக்க முடியும். அங்குதான் கட்டணம் குறைவாக இருக்கும்” என்றார்.
அவன் தாழ்ந்து கொண்டே வந்தான். ”அப்பா என்னை கல்லூரியில் சேர்ப்பாரா என்று தெரியவில்லை” என்றான்.
“சேர்க்காமல் நீ என்ன செய்யப்போகிறாய்? வயல்வேலைக்கா போவாய்?”
”இல்லை… அவர் சென்ற ஆண்டே இந்த ஓர் ஆண்டு படிப்புக்குப்பிறகு நான் வேலைக்கு போக முடியுமல்லவா என்று கேட்டுக்கொண்டிருந்தார்.”
”வேலைக்கா?” என்றபின் அவர் சிரித்தார். ”பதினொன்றாம் வகுப்பு படித்தவனுக்கு என்ன வேலை கிடைக்கும்?”
”பதினொன்றாம் வகுப்பு படித்தவர்கள் அரசாங்க வேலைக்கு தேர்வு எழுதலாமே?” என்று அவன் சொன்னான்.
”அதையும் யோசித்து வைத்திருக்கிறாயா? எழுதலாம், அதுதான் தகுதி. ஆனால் அதை எழுதி ஜெயித்து வேலைக்கு போவதற்கு எப்படியும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும் .அது வரைக்கும்…”
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
”அதுவரைக்கும் நீ ஊரிலேயே கூலி வேலைக்கு போகலாம். அல்லது பாட்னாவில் போய் அங்கே ஏதாவது கடையில் கணக்குப்பிள்ளையாக அமரலாம். ஆனால் வாழ்க்கை அழிந்துவிடும். நீ பதினொன்றாம் வகுப்பில் தொட்டுத் தொட்டு ஜெயித்திருந்தால் அதுதான் நல்ல வழி. ஆனால் நீ வாங்கிய மதிப்பெண் எவ்வளவு என்று உனக்குத் தெரியாது. கணிதத்திலும் ஆங்கிலத்திலும் மாநில அளவில் ஐம்பது இடங்களுக்குள் வந்திருக்கிறாய். நீ கல்லூரிக்குப் போயே ஆகவேண்டும். நான் வேண்டுமானால் உன் அப்பாவிடம் வந்து பேசுகிறேன்” என்றார் நந்தகுமார் போஸ்.
ராம்சரண் நாயக் ”சென்ற ஆண்டே விவசாயத்தில் பெரிய லாபமில்லை. கடன் வாங்கித்தான் இந்த ஆண்டு விதைத்திருக்கிறார். இந்த ஆண்டும் என்ன வருமென்று தெரியாது. இதுவரைக்கும் மழை சீராக இல்லை. அவரிடம் இதைப்பற்றி பேசுவதற்கு எனக்கு தயக்கமாக இருக்கிறது” என்றான்.
”நிலம் இருக்கிறதல்லவா? அடமானம் வைத்து காசு வாங்கலாம். நீ நிலத்தை விற்று படித்தால் கூட அது ஒன்றும் தவறான முதலீடு கிடையாது. நான் வந்து உன் அப்பாவிடம் சொல்கிறேன்” என்று போஸ் சொன்னார்.
அவரே வந்து அப்பாவிடம் அதைப்பற்றி பேசும் வரை அவன் ஒன்றுமே சொல்லவில்லை. அவரே பேசட்டும், அதுவே சரியாக இருக்கும், அது எல்லாச் சங்கடங்களையும் தவிர்த்துவிடும் என்று அவன் நினைத்தான். அவன் அப்பா அவன் கண்களைப் பார்ப்பதையே தவிர்த்துக் கொண்டிருந்தார். வீட்டில் அவர் தங்குவது மிகக்குறைவாக இருந்தது. வயலில் இருந்த நேரம் போக எஞ்சிய நேரங்களை அருகிலிருந்த சிறிய டீக்கடையின் மரப்பெஞ்சில் அமர்ந்து செலவிட்டார்.
அவன் தூரத்திலிருந்து அவரைப்பார்த்தபோது அவர் நன்றாக ஒடுங்கி இருப்பதாகத் தோன்றியது. ஏற்கனவே அவர் ஒடுங்கிய உடல் கொண்டவர். நரம்பு மட்டுமே எலும்புகளின் மேல் சுற்றியிருக்கும்படியான தோற்றம். குழிந்த கன்னங்களும் குழிக்குள் ஈரமாக மின்னும் சிறிய கண்களும் கொண்டவர். பெரிய தலைப்பாகை கட்டி, அழுக்கு வெள்ளைச் சட்டையும் கச்சமாகச் சுற்றிய வேட்டியும் தோல் செருப்புமாக அவர் அமர்ந்திருக்கும்போது கைகள் மட்டும் புடைத்து பெரிய நரம்புகளுடன் பெரிதாக தனியாக ஒட்டவைத்ததுபோல இருந்தன. அவருடைய கைகளுக்கும் அவருக்கும் தொடர்பே இல்லாததுபோல தெரிந்தன. அவர் வெறுமே அமர்ந்திருக்கும்போதும் அவை இரண்டு பெரிய பாம்புகள் போல தனியாக ஏதோ செய்து கொண்டிருக்கும். ஒன்றை ஒன்று தொட்டு பின்னி விலகி மீண்டும் தழுவிக்கொண்டு.
கைவிரல்களால் தொட்டு பேரம் பேசிக்கொள்வதும் விலை சொல்வதும் சந்தையில் வழக்கமாக இருந்தது. ரகசியப் பேரம் என்றால் கைமேல் ஒரு துணியைப் போட்டுக்கொண்டு விரல்களால் தொடுவார்கள். அவருடைய இரண்டு கைகளும் ஒன்றையொன்று தொட்டு தொட்டு ஏதோ கணக்கிட்டுக் கொண்டும், பேரம் பேசிக்கொண்டும் இருந்தன. தொலைவில் நின்றுகொண்டு அவன் அந்தக் கைகளைப் பார்த்தபோது அவை என்ன பேசிக்கொள்கின்றன என்று கூட கொஞ்சம் முயன்றால் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றியது.
அப்பா பீடியை ஆழமாக இழுத்தபடி தலைகுனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது செருமி தரையில் துப்பிக்கொண்டார்.அந்த டீக்கடையில் ஒரு டீ என்பது மூன்று அவுன்ஸ் கூட இருக்காது. அதை வாங்கி கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு துளியாக நெடுநேரம் குடித்தார். மழை பிந்திக் கொண்டிருக்கும்போது அவர் அப்படித்தான் தனக்குள் ஒடுங்கிக்கொண்டே இருப்பார். எந்தக் கேள்விக்கும் சற்று நேரம் கழிந்துத்தான் பதில் சொல்வார். அவர் மிக ஆழத்தில் அவர் உடலுக்குள் இருப்பது போலவும், அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் எல்லாம் நீர் அடித்தளத்துக்குப் போய்விட்ட கிணற்றுக்குள் வாளி இறங்கும் அளவுக்கு நேரத்தை எடுத்துக்கொள்வதாகவும் அவனுக்குத் தோன்றும். வாளி கிணற்றுக்குள் பாறைகளை முட்டுகிறது. தண்ணீருக்காக துழாவுகிறது. சில சமயம் காலியாக, கொஞ்சம் வண்டலுடன் வெளிவருகிறது.
அம்மா அவன் அப்பாவை நன்கு தெரிந்து வைத்திருந்தாள். ஆகவே எதையும் உரக்க நாலைந்து முறை அவள் சொல்வாள். அவர் முன் சென்று நின்று இடுப்பில் கைவைத்துக் கொண்டு குனிந்து கத்துவாள். கைகளை பலமாக வீசியும், முகத்தில் தீவிரமான உணர்ச்சிகளை கொண்டு வந்தும், பொம்மலாட்டத்தின் பொம்மைகளை போன்ற அசைவுகளுடன் அவள் பேசுவாள். அவர் வெறித்த சிறிய கண்களுடன் அவளை சற்று நேரம் பார்த்தபிறகு தலையசைத்து அவள் சொல்வதற்கு பதில் சொல்வார். அவளே கேட்காமல் பெரும்பாலும் அவர் எதுவுமே சொன்னதில்லை. எப்போதாவது உத்தரவுகளைச் சொல்வதாக இருந்தால் இரண்டுமுறை செருமிவிட்டு, சுவரையோ தரையையோ பார்த்தபடி அதை முணுமுணுத்தார். அவர் தனக்குள் முணுமுணுக்கும் சொற்களைக் கூட அம்மா தவறவிடுவதில்லை.
நந்தகுமார் போஸ் அவரை பார்ப்பதற்காக வந்ததை அவன் தான் முதலில் பார்த்தான். அவர் தன்னுடைய வழக்கமான புத்தம்புதிய ராலே சைக்கிளில், வெள்ளை பைஜாமாவும் ஜிப்பாவும் கழுத்தில் காபிநிற மப்ளருமாக வந்துகொண்டிருந்தார். சாக்கடைகள் உடைந்து ஓடிய, புழுதியும் வைக்கோல் கூளமும் சாணியும் நிறைந்த தெருவினூடாக அவர் சைக்கிளை ஒடித்து ஒடித்து ஓட்டி வந்தார். பழைய நுகங்களையும் கொழுக்களையும் தெருவில் போட்டிருந்தார்கள். தொட்டிகளின் உடைசல்கள், மாட்டுவண்டிகள் என்று தெருவே நடமாட முடியாத அளவுக்கு நெரிசலாக இருந்தது. நிர்வாணமான குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. தெருவின் இருபக்கமும் மலம் கழித்து வைத்திருந்தார்கள். மாடுகள் தெருக்களில் கட்டப்பட்டு, அவற்றுக்கான தீவனமும் தெருக்களில் போடப்பட்டிருந்தது. சைக்கிளை ஒரு கட்டத்தில் ஓட்டமுடியாமல் இறங்கி உருட்டிக்கொண்டே வந்தார் போஸ்.
அவருக்கு தன் அப்பாவை தெரியாது என்று அதன்பிறகு நினைவு கூர்ந்த அவன் ஓடிச்சென்று அவரை எதிர்கொண்டு “வாருங்கள் சார்” என்று அழைத்தான்.
”உன் அப்பாவைப் பார்க்கத்தான் வந்தேன். எங்கே இருக்கிறார்?” என்றார்.
அவன் “அதோ அந்த டீக்கடையில் இருக்கிறார். அந்த பெஞ்சு முனையில் அமர்ந்து பீடி பிடித்துக்கொண்டிருக்கிறார்.”
”அவரா? அவருக்கென்ன, காச நோய் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டார்.
”இல்லை” என்றான்.
”சரிதான், வா” என்று சொல்லி அவர் சைக்கிளை உருட்டிக்கொண்டு செல்ல, மறுபக்கம் சைக்கிளைப் பிடித்தபடி அவன் கூடவே வந்தான்.
“அவரிடம் நான் எதுவும் இதுவரை பேசவில்லை” என்று அவன் சொன்னான்.
”அவருக்குத் தெரிந்திருக்கும். அவரிடம் யாராவது பேசாமல் இருந்திருக்கமாட்டார்கள்” என்று அவர் சொன்னார்.
“அவர் ஒன்றும் பேசவில்லை என்றால் அவரிடம் பணமில்லை என்று அர்த்தம்” என்று அவன் சொன்னான்.
”பார்ப்போம் வா” என்று சொன்னபடி போஸ் நடந்தார். சைக்கிளை டீக்கடை அருகே நிறுத்தி ஸ்டாண்ட் போட்டபோது அவன் சற்று விலகி மறுபக்கம் நின்றான். அவன் அப்பா அவனைப்பார்த்து ,கண்களால் ’யார்?’ என்று கேட்டார்.
ராம்சரண் நாயக் ”என்னுடைய ஆசிரியர், என்னுடைய வகுப்பாசிரியர்” என்றான்.
அப்பா எழுந்து, தலையில் இருந்த முண்டாசை எடுத்து உதறி கையில் வைத்தபடி வணக்கம் சொன்னார்.
”உட்காருங்கள்” என்று போஸ் சொன்னார். ”உங்களிடம் பேசத்தான் வந்தேன்.”
அப்பா தலையை அசைத்தார். அதன்பிறகு நினைவு கூர்ந்து திரும்பி, டீக்கடைக்காரரிடம் ஒரு டீ சொன்னார்.
போஸ் ”சீனி குறைவாக” என்று சொன்னபிறகு ”உங்களிடம் உங்கள் பையனைப்பற்றி பேசத்தான் வந்தேன்” என்று சொன்னார்.
அப்பா தலையசைத்தார்.
“உங்கள் பையன் வாங்கிய மதிப்பெண் எவ்வளவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவன் இந்த மாவட்டத்திலேயே பத்தாவது இடத்தில் வந்திருக்கிறான். மாநில அளவில் முதல் நூறு பேருக்குள் வந்திருக்கிறான். இதெல்லாம் சாதாரண சாதனை கிடையாது. அதிலும் உங்கள் சாதியில் இது மிகப்பெரிய விஷயம். உங்கள் சாதியில் இதுவரைக்கும் கல்லூரிக்கு சென்று படித்தவர்களில் அவன்தான் அதிக மார்க் வாங்கியிருப்பான் என்று நினைக்கிறேன்” என்றார்.
அவன் அப்பா கண்களை சுருக்கி முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் தலையசைத்தார். அல்லது அவர் முகத்தில் திகைப்பு போன்ற ஒரு உணர்ச்சி இருந்தது. அந்த உணர்ச்சி எப்போதுமே செதுக்கினது போல அவர் முகத்தில் நிரந்தரமாக இருப்பது.
”அவனைக் கல்லூரிக்கு அனுப்பவேண்டும்” என்று போஸ் சொன்னார்.
அவன் அப்பா அதற்கும் தலையசைத்தார்.
”கல்லூரியில் பெரிய கட்டணம் எதுவும் இருக்காது. தொடக்கத்தில் கொஞ்சம் பணம் வேண்டும். அதன்பிறகு ஆண்டுக்கு மூன்று முறை ஃபீஸ் கட்டினால் போதும். அங்கே குறைவான செலவில் ஹாஸ்டலில் நின்று படிக்க முடியும் பெரிய செலவிருக்காது.”
அவன் அப்பா செருமினார். உடனே அவருக்கு இருமல் வந்துவிட்டது இருமி துப்பிவிட்டு ”ஆனால் என்னிடம்…” என்று சொல்லி, ”நான் எல்லாரிடமும் இங்கு கடன் கேட்டுவிட்டேன்” என்றார். அவர் குரல் உடைந்தது.
“நீங்கள் உங்கள் நிலத்தை விற்று படிக்க வைத்தால் கூட அது தவறான முதலீடு கிடையாது. படிப்பை முடித்துவிட்டால் இதைப்போல ஐந்து மடங்கு நிலம் வாங்கும் அளவுக்கு அவனுக்கு வேலை கிடைக்கும்” என்று ஆசிரியர் சொன்னார்.
”நிலத்தை விற்க முடியாது. ஏற்கனவே நிலம் அடமானத்தில் இருக்கிறது. நான் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று அவர் சொன்னார். மீண்டும் ”என்னுடைய அப்பா காலத்திலேயே அது அடமானத்துக்குச் சென்றுவிட்டது. நான் வட்டி மட்டும் தான் கட்டிக்கொண்டிருக்கிறேன்…” என்றார்.
சிறிது நேரத்துக்குப்பிறகு போஸ் ”நான் இரண்டு மூன்று மிராசுதாரர்களிடம் பேசியிருக்கிறேன். அவர்கள் சிறிய தொகை அளிப்பார்கள். ஜெயின் ட்ரஸ்ட் ஒன்று இருக்கிறது. அவர்கள் உறுதியாக உதவுவார்கள். கல்லூரியில் சேர்வதற்கான தொகையை நானே ஏற்பாடு செய்து தருகிறேன். மாதாமாதம் ஓரளவுக்கு பணம் தேவைப்படும். அதை இங்கிருந்து நீங்கள் எப்படியாவது திரட்டி அனுப்பினால் போதும். இப்போது அது பிரமிப்பாக இருக்கும். ஆனால் எப்படியோ தொடங்கி அது முன்நகர ஆரம்பித்துவிட்டால் என்ன ஏதென்று தெரியாமலேயே மூன்று வருடங்கள் ஓடிவிடும். அவன் பட்டதாரி ஆகிவிடுவான். அதன்பிறகு உங்களுக்கு கவலை இல்லை” என்றார்.
”நான் வந்து கேட்கிறேன்” என்று அப்பா சொன்னார். ஆனால் அவர் நம்பிக்கை கொள்ளவில்லை என்று தெரிந்தது.
”நீங்கள் கேட்கவேண்டியதில்லை. பையனை அழைத்துக்கொண்டு நானே செல்கிறேன். நானே கேட்டால் கொடுப்பார்கள். நான் கற்பித்துக் கொடுத்த பையன்களிலேயே புத்திசாலியான பையன் இவன். இவன் கல்லூரிக்கு போவது எனக்கும் பெருமை” என்று நந்தகுமார் போஸ் சொன்னார்.
”அவர்கள் எங்கள் சாதிக்காரர்களுக்கு உதவுவார்களா?” என்று அவன் அப்பா கேட்டார். “நாங்கள் இந்த ஊருக்கே வந்தேறிகள்…”
”அதெல்லாமில்லை அவர்கள் தீண்டத்தகாத மக்களுக்கு மட்டும் தான் எதுவும் செய்யக்கூடாது, அது பாவம் என்று நினைக்கிறார்கள். மற்றபடி அனைவருக்கும் அவர்கள் அளிப்பார்கள். பிராமணர்களுக்கோ டாக்கூர்களுக்கோ கிடைக்கும் அளவுக்கு உங்களுக்கு உதவிகள் கிடைக்காது. ஆனால் ஏதோ கொஞ்சம் கிடைக்காமலும் இருக்காது. உங்கள் ஜாதியில் பணக்காரர்கள் என்று யாருமில்லை. கொஞ்சம் நிலம் வைத்திருப்பவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களிடம் மிச்சம் பணம் என்று எப்போதுமே இருப்பதில்லை. ஆனால் ஜெயின்கள் கொஞ்சம் உதவி செய்கிறார்கள்” என்றார்.
அவன் அப்பா ”ஏதாவது பணம் கிடைத்தால் மேற்கொண்டு நான் இங்கு ஏதாவது செய்கிறேன்” என்றார்.
ஆனால் அப்போதும் அவர் முகத்தில் மகிழ்ச்சியோ தெளிவோ இருக்கவில்லை. கண்கள் மேலும் சுருங்கி, உடல் மேலும் ஒடுங்கியது போலத்தான் இருந்தது.
டீயைக் குடித்துவிட்டு எழுந்த போஸ் ”நான் அவனைக்கூட்டிக்கொண்டு போய் பணம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.
அப்பா நடுங்கிக்கொண்டிருப்பதை ராம்சரண் நாயக் பார்த்தான். அவர் கைகளைக் கூப்பி நந்தகுமார் போஸுக்கு வணக்கம் சொன்னார். ஆசிரியர் கிளம்பிச் சென்றபின் அப்பா திரும்பி அவனைப் பார்த்தார். அவனை யாரென்றே தெரியாதவர் பார்ப்பதுபோல இருந்தது அது.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
