காவியம் – 61

கானபூதி சொன்னது. ராம்சரண் நாயக்கை அழைத்துக்கொண்டு நந்தகுமார் போஸ் பதினைந்து நாட்கள் வெவ்வேறு ஜமீந்தார்களையும், ஜாகீர்தார்களையும் பார்க்கக் கூட்டிச் சென்றார். பெரும்பாலான இடங்களில் அவர்கள் அவனுடைய ஜாதியைத்தான் கவனித்தார்கள். அவனைப் பார்த்ததுமே அவர்களின் ஆர்வம் வடிந்துவிடுவதை அவன் பார்த்தான். ஓரிரு வார்த்தை விசாரிப்புகளுக்குப் பிறகு அவனுடைய தந்தை பெயரைக் கேட்டார்கள்.

சாதியைத் தெரிந்துகொண்டதுமே ”ஏற்கனவே நாலைந்து பையன்களுக்கு உதவி செய்தாகிவிட்டது. மேற்கொண்டு பணம் இருப்பது போல் தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைத்தான் கொடுப்பது வழக்கம். நீங்கள் ஒரு மாதம் முன்னால் வந்திருந்தால் பார்த்திருக்கலாம். இப்போது பணமில்லை” என்றார்கள்.

தொடர்ச்சியாக அனைத்து இடங்களிலுமே அவ்வாறு மறுப்பு வந்தபோது அவன் நம்பிக்கை இழந்துவிட்டான். ஒரு கிராமத்திலிருந்து திரும்பி வரும்போது கசப்புடன் ”இவர்கள் யாரும் உதவி செய்யமாட்டார்கள் சார்” என்று அவன் சொன்னான்.

நந்தகுமார் போஸ் ”அப்படியில்லை .உதவி செய்கிறார்களா இல்லையா என்பது அவர்களுடைய பிரச்னை. எல்லா வாசல்களையும் நாம் தட்டிவிட்டோம் என்ற உறுதி நமக்கு வேண்டும்” என்றார்.

அவன் சோர்வுடன் முனகினான்.

“இதோ பார் ,வாழ்க்கை முழுக்க அப்படித்தான். நாம் தயங்கியோ நம்பிக்கை இழந்தோ நின்றுவிடக் கூடாது. அத்தனை வாசல்களையும் தட்டிவிட்டோம் என்று நமக்கே ஒரு நிறைவு இருக்கவேண்டும். புரிகிறதா?” என்றார்.

அவன் தலையசைத்தான்.

“நாம் எந்த அளவுக்கு முயற்சி செய்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு நிம்மதி இருக்கும். பிறகு ஒன்றும் நடக்கவில்லை என்றாலும் கூட நாம் அதை கடவுள் மேல் போட்டுவிடமுடியும். கடவுள் மேல் போட்டுவிட்டால் நமக்கு ஒன்று அமையாது போனாலும் பெரிய வருத்தமிருக்காது” என்றார்.

அவர்கள் பேசிக்கொண்டே நடந்தார்கள் “அத்துடன் நமக்கு இவர்கள் உதவவில்லை என்று இவர்கள் மேல் வருத்தத்தையோ கசப்பையோ நீ உருவாக்கிக் கொள்ளக்கூடாது. அவர்களுக்கு ஆயிரம் சிக்கல்கள் இருக்கலாம். நீயே யோசித்துப்பார். நம்மைவிட தாழ்ந்த நிலையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.  நம்மிடம் அவர்கள் உதவி கேட்டிருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் நாம் உதவி செய்திருக்கிறோமா என்ன? இதுவரைக்கும் நீ எத்தனை பேருக்கு சாப்பாட்டுக்கு பணம் கொடுத்திருப்பாய்? ஒருவேளை டீ வாங்கிக் கொடுத்திருப்பாய்? உன்னிடம் பணம் இருக்கவேண்டும், கொடுக்கும்படி ஒரு மனநிலையும் அந்த சமயத்தில் அமையவேண்டும் இல்லையா? நமக்கு உதவி செய்பவர்களிடம் நாம் பிரியத்துடன் இருக்கவேண்டும். உதவி செய்யாதவர்களை அப்போதே மறந்துவிடவேண்டும். அதுதான் வாழ்வதற்கான வழி” என்று அவர் சொன்னார்.

மேலும் நான்கு நாட்கள் அலைந்தபின் ஜெயின் ட்ரஸ்ட் ஒன்றில் அவனை உள்ளே வரச்சொன்னார்கள். நந்தகுமார் போஸ் அமர்ந்து, அவன் நின்றுகொண்டதும் அவனுடைய மார்க்கை வாங்கி நேமிசந்த் ஜெயின் பார்த்தார். வெண்ணிற காந்தி தொப்பியும் ,தடிமனான கண்ணாடியும் போட்ட; வெளிறிய பருமனான மனிதர். மதிப்பெண்ணை பார்த்துவிட்டு ”நீ குடியானவன்தானே?” என்றார்.

”ஆமாம்”

”இவ்வளவு மதிப்பெண் நீ எப்படி பெற்றாய்?” என்றபின், ”பார்த்து எழுதினாயா?” என்றார்.

அவன் முகம் சிவக்க ”இல்லை” என்றான். மூச்சுவாங்க ஆசிரியரைப் பார்த்தான்.

போஸ் ”அவன் உண்மையில் பொதுத்தேர்வில் கொஞ்சம் குறைவாகத்தான் மார்க் வாங்கியிருக்கிறான். எனக்குத் தெரிந்து கணிதத்தில் அவன் நூறுக்குக் குறைவாக மார்க் வாங்கினதே கிடையாது. ஐந்தாம் வகுப்பிலிருந்தே அப்படித்தான்” என்றார். “நான் அவன் மாநில அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் வருவான் என எதிர்பார்த்தேன்”

“இதோ பார், உனக்கு நான் பணம் தருகிறேன். ஆனால் நீ விரும்பினால் இங்கே கணக்குப் பிள்ளையாகச் சேர்ந்துகொள்ளலாம்” என்று நேமிசந்த் ஜெயின் சொன்னார்.

“அவன் படிக்கட்டும். இவ்வளவு மார்க் வாங்கி படிக்காமலிருந்தால் பிறகு அவன் மனக்குறைப் படுவான். படித்தால் உங்கள் பெயர் சொல்லிக்கொண்டு வாழ்வான். என்றென்றைக்கும் உங்கள் மேல் நன்றியுடன் இருப்பான். உங்களுடைய தலைமுறைகளை அவன் மனமார வாழ்த்துவான்” என்று போஸ் சொன்னார்.

தலைகுனிந்து மதிப்பெண் பட்டியலைப் பார்த்தபடி ஜெயின் புன்னகைத்தார். பிறகு கண்ணாடியைத் தூக்கிவிட்டு நிமிர்ந்து அவனைப்பார்த்து ”உனக்கு ஒரு கடிதம் தருகிறேன். பாட்னாவில் என்னுடைய கடை இருக்கிறது. அங்கே சென்று கணக்குப் பிள்ளையிடம் பணம் வாங்கிக்கொள். நாங்கள் உனக்கு ஓராண்டுக்கு நாநூறு ரூபாய் தருவோம். மூன்று ஆண்டுக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய். அது ஒவ்வொரு ஆண்டும் ஃபீஸ் கட்டுவதற்கும் பாடப்புத்தகங்களுக்கும் சரியாக இருக்கும். அவ்வளவுதான். அதற்குமேல் எந்தக் காரணத்துக்கும் எங்களிடம் வந்து நிற்கக்கூடாது” என்றார்.

”அவ்வளவு போதும். அதுவே பெரிய தொகை” என்று போஸ் கும்பிட்டார்.

”அந்தக் கடிதத்திலேயே எவ்வளவு தரவேண்டும் என்று எழுதியிருப்பேன். அந்தக் கடிதத்தை கணக்குப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு உன்னுடைய பெயரை அங்குள்ள பேரேட்டில் பதிவு செய்துவிடு. அங்கு இதேபோல அறுபது பேருக்கு நாங்கள் உதவி செய்கிறோம். அதில் உன் பெயர் இருந்தால் நீ அந்தப்பணத்தை வாங்க முடியும். ஒவ்வொரு முறையும் நேரில் போய் நின்று கையெழுத்துப் போட்டுத்தான் பணம் வாங்கவேண்டும். ரசீது எல்லாம் எங்களுக்கு தெளிவாக இருந்தாகவேண்டும், தெரிகிறதா?” என்றார்.

அவன் தலையசைத்தான்.

”சரி” என்று அவர் தலையசைத்து விடை கொடுத்தார்.

போஸ் அவனிடம் காலைத்தொட்டு வணங்கும்படி கைகாட்டினார். அவன் குனிந்து மேஜைக்கு அடியிலிருந்த அவர் காலைத்தொட்டு வணங்கினான். அவன் தலையைத் தொட்டு ”பகவான் பார்ஸ்வநாதரின் அருள் உன்னிடம் இருக்கட்டும். அறிவே உனக்கு வெளிச்சமாக இருக்கும்” என்றபின் அவர் அவன் கையைப் பிடித்துக்கொண்டு ”அஹிம்ஸோ பரமோ தர்மா. அதுதான் நான் உனக்கு சொல்லவேண்டியது. என்னுடைய அப்பாவும் அதைத்தான் என்னிடம் சொன்னார்” என்றார். பிறகு ”நீ இறைச்சி சாப்பிடுவாயா?” என்றார்.

அவன் ஆம் என்று தலையசைத்தான்.

“உங்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால் கூடுமானவரைக்கும் சாப்பிடாதே. எப்போதாவது சாப்பிட்டால் கூட அருகர்களிடம் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள். அஹிம்ஸோ பரமோ தர்மா என்று மட்டும் சொல்லிக்கொண்டே இரு. ஜீவஹிம்சை செய்யாமலிருப்பவர்களுக்கு தீர்த்தங்கரர்களின் ஆசீர்வாதம் உண்டு” என்று அவர் சொன்னார்.

போஸ் அவனை அவரே அழைத்துக்கொண்டு பாட்னாவுக்கு சென்று அந்தப்பணத்தை வாங்கினார். அவரே கல்லூரிக்குச் சென்று பணத்தைக்கட்டி அவனை சேர்த்துவிட்டார்.

திரும்பி வரும் வழியில் ”உன் அப்பாவிடம் சொல், நீ ஊரிலிருந்தால் உனக்கு எவ்வளவு செலவாகுமோ அதைவிட கொஞ்சம் கூடுதலாக ஹாஸ்டலில் தங்கிப்படிப்பதற்கு செலவாகும், அவ்வளவுதான். பெரும்பாலான செலவுகள் ஒரே ஒரு நபராலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றன. உனக்கு எந்தக்குறையும் வராது” என்றார்.

சட்டென்று அவன் சாலையிலேயே குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினான். அப்போதே அழத்தொடங்கினான்.

அவர் அவன் தோளைத்தொட்டு தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு ”நானும் இதே போன்று ஒரு ஜமீந்தாரின் பிச்சையால் தான் படித்து வந்தேன். எங்கோ யாரோ பிறருக்காக கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த உலகில் ஒருவரிடமிருந்து ஒருவர் அடித்துப் பிடுங்குவதும் ஏமாற்றுவதும்தான் அதிகம். ஆனால் எங்கோ சிலருக்கு கொடுக்கும் உள்ளமும் இருக்கிறது. சதி செய்யவும், அழிக்கவும் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். ஆனால் ஆபத்தில் வந்து கூடவே நின்றிருக்கவும் மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களை மட்டுமே உலகம் என்று நினைத்துக்கொண்டு வாழ்ந்தால் ஒரு நல்ல வாழ்க்கையை நாம் வாழ்ந்துவிடமுடியும். நான் கற்றுக்கொண்டது அதுதான். நல்லவர்கள் மட்டுமே அடங்கியதுதான் உலகம் என்று ஒரு சுபாஷிதம் இருக்கிறது. அதன்பொருள் இதுதான்” என்றார்.

அவன் கல்லூரியில் சேர்ந்த தகவல் ஊரில் செய்தியாகப் பரவியது. மறுநாளே அவன் அப்பாவைத் தேடி கடன்கொடுத்த டாகூரின் அடியாட்கள் வந்து நின்றுவிட்டார்கள். அவர் எங்கோ பணத்தை புதைத்து வைத்திருக்கிறார் என்று சொல்லி அவரை அடிக்கப் பாய்ந்தார்கள். அவர் கழுத்தில் துண்டைப்போட்டு இழுத்து வெளியே கொண்டுவந்து நிறுத்தி ”இப்போதே மிச்ச பணத்தை தோண்டி எடுத்துக்கொடு, அல்லது கல்லூரியில் கட்டிய பணத்தை திருப்பி வாங்கி எங்களுக்கு கொடு” என்றார்கள்.

“நான் வட்டி கட்டிக்கொண்டிருக்கிறேன், வட்டி கட்டிக்கொண்டிருக்கிறேன்” என்று அவர் அழுதுகொண்டே இருந்தார். “நான் பணம் கொடுக்கவில்லை. ஜெயின் முதலாளி கொடுத்தார்”

“அந்த முதலாளியிடம் பணத்தை வாங்கிக்கொடு” என ஒருவன் அவரை அறைந்தான்.

“அவனை விடாதீர்கள். அவன் பணத்தை புதைத்து வைத்திருக்கிறான் என்று எனக்கு அப்போதே சந்தேகம் இருந்தது” என்று ஒரு பெண் கத்தினாள். அவள் அவன் அப்பாவுக்கு கடன் ஏதும் கொடுத்தவள் அல்ல. அவர்களுக்கு அவள் உறவுமுறை மட்டும்தான்.

திடீரென்று ஒருவன் கையை ஓங்கிக்கொண்டு அவரை நோக்கி வந்து, அவர் முகத்தில் காறி உமிழ்ந்து ”திருட்டு நாயே வாங்கிய பணத்தை ஏமாற்றுகிறாயா?” என்றான்.

அவன் அப்பா கையை எடுத்துக் கும்பிட்டு அழுதபடியே நின்றிருந்தார் அவர்களே அவன் வீட்டுக்குள் நுழைந்து சட்டி பானைகளைத் தூக்கிப்போட்டு சுவர்களையும் தரையையும் உதைத்து பார்த்தார்கள். தொழுவம் முழுக்க ஆராய்ந்தார்கள்.  அதன் பிறகு ”மரியாதையாக அசலில் ஒரு பகுதியையும் கட்டு. பையன் படிக்கிறான், பணமில்லை என்று எப்போதாவது சொன்னாயென்றால் வந்து மாட்டையும் கன்றையும் ஓட்டிக்கொண்டு போய்விடுவோம்” என்று மிரட்டினார்கள்.

அவர்கள் போனபின் அவன் அப்பா கண்ணீர் விட்டபடியே இருந்தார்.

அவனுடைய பங்காளிகள் தெருவில் வந்து நின்று ”திருட்டுத்தனம் செய்துதான் பையனை படிக்க வைக்க வேண்டுமா? நேர்மையாக உழைத்து வாழ்பவர்களுக்கு இங்கு இடம் கிடையாது.  அவர்கள் வறுமையில் தான் இருக்கவேண்டும். கொடுக்க வேண்டிய காசை கொடுக்காமல் ஏமாற்றி பையனை படிக்க வைப்பவர்களுக்கு அதில் என்ன பெருமை வேண்டியிருக்கிறது?” என்றெல்லாம் திட்டினார்கள்.

அவன் அம்மா ஆக்ரோஷமாக வெளியே சென்று ”ஆமாம் புதைத்து வைத்திருக்கிறோம். தங்கம் தங்கமாக புதைத்து வைத்திருக்கிறோம். யாருக்கடி சந்தேகம்? வந்து பாருங்கள் வந்து பாருங்களடி, புதைத்து வைத்திருக்கிறோம். அப்படித்தான் எடுப்போம். அப்படித்தான் செலவழிப்போம். ஏழடுக்கு மாளிகை கட்டுவோம். ஆகாய விமானத்தில் பறப்போம்” என்று கூச்சலிட்டாள்.

அவன் தங்கை பின்னால் சென்று ”அம்மா நீ பேசாமலிரு உள்ளே வா உள்ளே வா” என்று கண்ணீர் விட்டு அழுதாள்.

இரண்டு மூன்று நாட்களில் அவன் கல்லூரி செல்லவிருப்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அவன் டீக்கடைக்கு சென்றபோது அங்கிருந்த பெரியவர் ஒருவர் முதல் முறையாக எழுந்து சற்று விலகி வந்து அவன் அமர்வதற்கு இடம் கொடுத்தார். அவன் அமராமல் நின்றுகொண்டிருந்தான். டீக்கடைக்காரர் உட்காரும்படி கைகாட்டினார். அவன் எப்போதுமே அங்கே நின்றபடி தான் டீ குடிப்பதோ தைனிக் சமாச்சார் படிப்பதோ வழக்கம்.

அவர் மீண்டும் உட்காரச்சொன்னபோது அவன் புன்னகையுடன் உட்கார்ந்து கொண்டான். கையில் டீயுடன் செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தபோது மிகவும் வளர்ந்துவிட்டதாகவும், மிகவும் அதிகாரம் அடைந்து விட்டதாகவும் எண்ணிக் கொண்டான். அந்தப் புன்னகையை அவனால் அடக்கவே முடியவில்லை.

அவனை கல்லூரியில் சேர்த்துவிட முதல்நாள் வந்த அவன் அப்பா மிரண்டு போய்விட்டார். அவ்வளவு பெரிய கட்டிடங்களை அவர் பார்த்ததே இல்லை. ”கோட்டை மாதிரி இருக்கின்றன எல்லாம்” என்றார். ”அத்தனைபேரும் கால்சட்டை போட்டிருக்கிறார்கள்” என்று முணுமுணுப்பாகச் சொன்னார். அவனுக்கு அங்கே ஹாஸ்டலில் தனிப்படுக்கையும் அதன் மேல் மெத்தையும் உண்டு என்பது அவருக்கு மகிழ்ச்சிக்குப் பதிலாக மேலும் பதற்றத்தையே அளித்தது. “இதற்கெல்லாம் நிறைய பணம் கேட்பார்களா?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.

ராம்சரண் நாயக் பாட்னாவில் கல்லூரியில் சேர்ந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே அருகிலிருக்கும் ஜெயின் கடை ஒன்றில் மாலை நேரம் முழுக்க வேலை செய்வதற்காக சேர்ந்துவிட்டான். பாட்னாவில் எங்கே வேலை தேடுவது என்று முதலில் அவனுக்குத் திகைப்பு இருந்தது. மாணவர்களுக்கான விடுதியில் அவனுக்குக் கொடுக்கப்பட்ட கட்டிலில், பழைய மெத்தையில், தூசி நாற்றமடித்த போர்வையை மடியில் போட்டபடி அமர்ந்து அதைப்பற்றியே உழற்றிக் கொண்டிருந்தபோது சட்டென்று அந்த எண்ணம் தோன்றியது. அவனுக்கு உதவி செய்த அந்த ஜெயின் கடையிலேயே சென்று கேட்டாலென்ன என்று.

அன்று மாலை அங்கே சென்று நின்றான். அவனைப்பார்த்த வயதான கணக்குப்பிள்ளை முதலில் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. பிறகு “நீயா? பணம் வாங்கிவிட்டாயல்லவா?” என்றார்.

அவன் அருகே சென்று சட்டென்று எதிர்பாராதபடி அவர் காலைத்தொட்டு வணங்கினான். அவர் ”என்ன… என்ன…?” என்றுவிட்டு பின்னால் நகர்ந்தாலும் முகம் மலர்ந்துவிட்டது. அவர் ஒரு பிராமணர் என்று அவனுக்குத் தெரிந்தது.

”எனக்கு இங்கே ஏதாவது ஒரு வேலை வேண்டும். என்னுடைய கல்லூரி விடுதியிலிருந்து நடந்துசெல்லும் தொலைவில் இருந்தால் நன்றாக இருக்கும். கல்லூரி விடுதிக்கட்டணத்தை என்னால் கட்டமுடியாது ஏதாவது வேலை கிடைத்தால் அதைக் கட்டிவிடுவேன்” என்றான்.

”அதெப்படி நீ கல்லூரிக்குப் போய்விட்டு வேலைக்கு போகமுடியும்?” என்றார்.

”முழுச்சம்பளம் வேண்டியதில்லை. கல்லூரி ஐந்து மணி வரைக்கும்தான். நான் ஆறு மணிக்கெல்லாம் கடைக்கு வந்துவிடுவேன். கடை பத்துமணிக்கு மூடுவது வரை கடையில் வேலை செய்வேன். எனக்கு மூன்றிலொரு பங்கு சம்பளம் கொடுத்தால் கூட போதும்” என்றான்.

அவர் கண்ணாடியைத் தள்ளிவிட்டபடி யோசித்தார். பிறகு திரும்பி ”நீ எப்போது படிப்பாய்?” என்றார்.

”நான் விடுதியில் காலையில் எழுந்து படிப்பேன். கொஞ்ச நேரம் படித்தாலே என்னால் நன்றாகப் படிக்க முடியும்” என்றான்.

”நான் கேட்டுப்பார்க்கிறேன். இங்கே கடையில் வேலை செய்யும் பெண்கள் ஐந்து மணிக்கே போய்விடுகிறார்கள். மாலையில் அதே வேலையை தொடர்ந்து செய்வதற்கு யாராவது இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று ஜெயினிடம் சொல்கிறேன். நீ என்ன செய்வாய்? கணக்கு எழுதுவாயா?” என்றார்.

”கணக்கு எழுதத் தெரியாது, ஆனால் கற்றுக்கொள்வேன்.”

”எவ்வளவு நாளில் கற்றுக்கொள்வாய்?”

அவன் அவர் கண்களைப் பார்த்து, ”ஒரு வாரத்தில்…” என்றான்

”ஒரு வாரத்தில் நீ கணக்கு எழுதக்கற்றுக்கொள்வாயா?”

”கற்றுக்கொள்வேன்” என்றான்.

”கணக்கு எழுதுவதென்றால் நீ என்னவென்று நினைக்கிறாய்? ஆயிரக்கணக்கான ரூபாய்கள். அவ்வளவையும் தனியாகக் கூட்டி ஒவ்வொரு நாளும் ஸ்டேட்மெண்ட் போட்டு கையில் கொடுத்துவிட்டு வீட்டுக்கு செல்லவேண்டும். நான் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்” என்றார்.

”நான் அதைச் செய்கிறேன். எனக்கு எப்போதுமே கணக்கில் நூறு மார்க்தான்” என்றான்.

அவர் அவனைச் சிறிது நேரம் கூர்ந்து பார்த்துவிட்டு, ”இந்தக்காலத்திலே பையன்கள் விரைவாக இதையெல்லாம் செய்கிறார்கள். சரி, நான் சொல்கிறேன்” என்றார்.

அப்படித்தான் அவனுக்கு பிரேம்சந்த் ஜெயின் கடையில் கணக்குப்பிள்ளை வேலை கிடைத்தது. அவனுக்கு உதவிய நேமிசந்த் ஜெயினின் மருமகனின் கடை. அது ஒரு பெரிய துணிக்கடை. அங்கே காலையிலிருந்து மாலைவரை கிராமத்திலிருந்து வருபவர்கள் துணி வாங்குவார்கள். ஆறிலிருந்து எட்டு வரை உள்ளூர்க்காரர்கள் வருவார்கள். ஏழுமணிக்கு கோயிலில் பஜனையும் பூஜையும் முடிந்தவுடன் வரும் ஒரு கூட்டம் இரண்டு மணிநேரம் அந்தக் கடையில் நெரிபடும். ஒன்பது மணிக்கு கடையில் கூட்டம் குறைய ஆரம்பித்தவுடன் கணக்குகளை போடத்தொடங்கவேண்டும்.

மறுநாள் ஒட்டுமொத்த வியாபாரத்தின் கணக்கை எழுதுவதற்கு கணக்குப்பிள்ளை வரும்போது சாயங்காலத்தின் வியாபாரத்தை மட்டுமே தனியாக எழுதிக் கொடுத்துவிட்டால் அவருக்கு அது உதவியாக இருக்குமென்று அவனுக்காகப் பரிந்து பேசிய பிராமணக் கணக்குப்பிள்ளை பிரேம்சந்த் ஜெயினிடம் சொல்லி நம்பவைத்தார்.  அவரே அமர்ந்து பில்களை எப்படி ஒன்றாகச் சேர்த்து கணக்கு எழுதுவது என்று சொல்லிக்கொடுத்தார். அவன் மூன்று நாட்களிலேயே அதைக் கற்றுக்கொண்டான். மிக விரைவாகவே கணக்கை முடித்து பத்து மணிக்கு கடை மூடும்போது எழுதி மேசையில் வைத்துவிட்டு போனான். நாலைந்து நாட்களிலேயே கணக்குப்பிள்ளை ரகசியமாக ஜெயினிடம் ”பையனை விட்டுவிட வேண்டாம். நாலைந்து பேருக்கு அவன் சமம்” என்று சொன்னார்.

அவன் வாழ்க்கை மிக வேகமாக எளிமையாக ஆயிற்று. அவன் ஒவ்வொரு நாளும் கடையில் வேலை செய்து கல்லூரிக்கும் போய் வந்தான். முதல் முறையாக இரண்டு வேளை நாக்குக்கு ருசியாகவும் வயிறு நிறையவும் சாப்பிட ஆரம்பித்தான். அவனுடைய உடல் நிமிர்ந்து, கைகால்கள் உரம் பெற்றன. அவனுடைய கல்லூரியிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் ஜெயின் கடை இருந்தது. ஆகவே நான்கு மாதங்களுக்குப் பிறகு பத்து ரூபாய் முன்பணம் கொடுத்து ஒரு பழைய சைக்கிளை வாங்கிக் கொண்டான். அதன் பிறகு சிறகு முளைத்தவன் போலானான்.

வெள்ளிக்கிழமை ஜெயின் கடை விடுமுறை. அன்று மாலை சைக்கிளில் பாட்னா நகரைச் சுற்றிவந்து ஏதாவது ஒரு புதிய டீக்கடையில் டீயும் சமோசாவும் சாப்பிடுவதென்பது அவனுடைய இனிமையான ஒரு பழக்கமாக மாறியது. ஜெயின் அவனுக்கு முதலில் இருபது ரூபாய் கொடுத்தார். பின்னர் அதை அவரே நாற்பதாக்கினார். அவன் கேட்காமலேயே அறுபதாக்கினார். விடுதிக்கட்டணம் கட்டியது போக பத்து அல்லது பதினைந்து ரூபாய் அவனுக்கு அப்பாவுக்கு அனுப்ப முடிந்தது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் அவன் வீட்டுக்கு போனான். வீட்டுக்கு போகும்போது அவர் கையில் எப்போதுமே பதினைந்து ரூபாய் அல்லது இருபது கொடுத்துவிட்டுத்தான் திரும்பினான்.

அவன் அப்பாவால் முதலில் அதை நம்பவே முடியவில்லை. அவர் முதலில் அவனிடம் ”என்ன வேலையை செய்கிறாய்?” என்று கேட்டார்.

அவன் தான் செய்யும் வேலையை சொன்னவுடன் ”படிப்பில்லாமலேயே உனக்கு வேலை கிடைத்துவிட்டதா? இவ்வளவு நல்ல வேலை?” என்று கேட்டார். பிறகு ”நீ அங்குள்ள உணவகங்களில் தான் வேலை செய்யவேண்டும், பிறருடைய எச்சிலைத்தான் எடுக்கவேண்டும் என்று சொன்னார்களே?” என்றார்.

”உணவகங்களில் வேலை செய்வதொன்றும் தவறில்லை. எச்சிலை எடுத்தாலும் அதிலென்ன?” என்று அவன் கேட்டான்.

”அவர் நம்முடைய சாதிக்கு அது…” என்றார்.

”நம்முடைய சாதி பட்டினி கிடக்கலாம், ஆனால் உழைக்கக்கூடாது. அவ்வளவுதானே… எந்த முட்டாள் சொன்னால் என்ன? என்னுடைய சாதியைச் சேர்ந்த எவ்வளவோ பேர் ஓட்டலில் வேலை செய்கிறார்கள். அவர்களும் நன்றாகப் படிக்கிறார்கள்” என்றான்.

அவர் அதைக்கேட்டுக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் வெளியே சென்றுவிட்டார்.

இரண்டாவது ஆண்டு படிப்பின்போது அவன் ஊருக்குத் திரும்பும்போது அவன் நல்ல சட்டைகளை போட்டிருந்தான்; புதிய ஒரு பெட்டியும் வாங்கியிருந்தான். சலவை செய்த சட்டையைப் போட்டுக்கொண்டு தெருமுனையிலிருந்த டீக்கடைக்கு சென்றபோது அங்கிருந்த அத்தனை பேருமே எழுந்து அவனுக்கு வணக்கம் சொன்னார்கள். அவனுக்கு கூச்சமாகவும் குழப்பமாகவும் இருந்தாலும் ஒரு மங்கலான புன்னகையுடன் அனைவரையும் பார்த்து வணங்கிவிட்டு அமர்ந்து கொண்டான்.

அவனுடைய பங்காளிகள் அவனை ஓரக்கண்ணால் உறுத்துப் பார்த்தபடி கடந்து சென்றார்கள். அவர்கள் அவனுடைய அப்பாவின் தம்பியின் பிள்ளைகள். மிகச் சிறுவயதிலேயே அவர்கள் தன் குடும்ப எதிரிகள் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் ஒரு துண்டு நிலத்திற்காக அவன் அப்பாவுடன் சண்டை போட்டு  மாறி மாறி அடித்துக்கொண்டவர்கள். அந்த நிலத்திலேயே ஒரு வரப்பை இருவருக்கும் பொதுவாக வைத்துக்கொண்டு விவசாயம் செய்தார்கள். அந்த வரப்பை இருபக்கமும் நின்றுகொண்டு செதுக்கி இடம் மாற்றினார்கள். புதியதாக வேலி போட்டார்கள். ஒவ்வொரு நாளும் வாய்ச்சண்டை போட்டார்கள். அவர் வயலுக்கு வரும் தண்ணீரை மண் வைத்து அடைத்தார்கள். அதற்கு அவர் தட்டிக்கேட்க போகும்போது கூட்டமாகச் சேர்ந்து வசைபாட வந்தார்கள்.

எந்த வகையிலெல்லாம் அவன் குடும்பத்துக்கு தொந்தரவு செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்தார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் வட்டிக்கார டாகூரிடம் சென்று அவன் குடும்பத்தில் நிறைய பணம் வருவதாக கோள்மூட்டினார்கள். அவன் போட்டிருக்கும் சட்டையை சுட்டிக்காட்டி ”இத்தனை நிறமுள்ள சட்டையை போடமுடியுமென்றால் வட்டிப்பணத்தை மட்டும் ஏன் கொடுக்க முடியாது? கொடுக்க மனமில்லாதவர்களுக்கு எத்தனை பணம் வந்தாலும் கை நீளாது” என்றார்கள். “ஒளித்து வைத்திருப்பவர்களிடம் கேட்காமல் எங்களிடம் வந்து கெடுபிடி செய்கிறீர்கள்” என்றார்கள்.

ஒவ்வொரு முறை அவன் வந்து சென்ற பிறகும் வட்டிக்கு பணம் கொடுத்த டாகூரின் அடியாட்கள் வீட்டுக்கு வந்து அவன் அப்பாவை வசைபாடி, வீட்டினுள் நுழைந்து கையிலிருக்கும் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு சென்றார்கள். உழவு மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுவேன் என்ற பயமுறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. அவன் அப்பா எப்போதும் அந்தப் பதற்றத்திலேயே இருந்தார்.

”மாட்டை அவர்கள் ஓட்டிக்கொண்டு போகமாட்டார்கள். மாட்டை ஓட்டிக்கொண்டு போனால் நீங்கள் இங்கே விவசாயம் செய்ய முடியாது. ஊரைவிட்டு தான் போகவேண்டும். நீங்கள் ஊரைவிட்டு போனால் யார் அவர்களுக்கு வட்டி கட்டுவார்கள்? அப்படியெல்லாம் பயமுறுத்துவார்கள். அதெல்லாம் ஒன்றுமில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகள்தான். பயப்படவேண்டாம்” என்று அவன் அப்பாவிடம் சொன்னான்.

அவர் பெருமூச்சுடன் முனகிவிட்டு கிளம்பி வெளியே சென்றார்.

கல்லூரியில் அவனுக்குக் கிடைத்த ஓரிரு நண்பர்களுடன் அங்கே ஓர் உலகத்தை உருவாக்கிக் கொண்டான். மதியம் ஒருமணி நேரம் அவனுக்குப் பொழுது கிடைத்தது. மதிய உணவை விடுதியில் கொடுப்பார்கள். அவன் சைக்கிள் வைத்திருந்ததனால் ஐந்து நிமிடத்தில் விடுதிக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு அதே வேகத்தில் கிளம்பி நூலகத்துக்கு வந்துவிடுவான். நாற்பது நிமிடம் அங்கே அமர்ந்து படிப்பான். ஏதாவது ஆசிரியர் வராமலானால் அந்த நேரமும் அவன் படித்தான். பிரேம்சந்தை அப்போதுதான் கண்டடைந்தான். இந்தி நாவல்கள் ஒவ்வொன்றாக படிக்கத் தொடங்கினான்.

பலபேரை படித்தாலும் கூட தன்னுடைய வாழ்க்கையை இலக்கியமாக எழுதியவர் என்று அவனுக்கு பிரேம்சந்தான் தெரிந்தார். ஆகவே பிரேம்சந்துக்கு நிகராக இந்தியில் எழுத்தாளர்களே இல்லை என்று அவன் நண்பர்களிடம் வாதிட்டுக்கொண்டிருந்தான்.

அவனுடைய நண்பனும் பாட்னாவைச் சேர்ந்தவனாகிய சிவ்குமார் யாதவ் ”அக்ஞேயா அளவுக்கு பிரேம்சந்த் நுட்பமாக எழுதவில்லை. பிரேம்சந்தின் எழுத்து வறுமையின் துயரத்தை அப்பட்டமாகச் சொல்கிறது. வறுமையும் பட்டினியும் எல்லாம் இல்லாமலாகிவிட்டால் மனிதனுக்கு என்ன பிரச்சினை இருக்குமோ அதையெல்லாம் அக்ஞேயா பேசுகிறார்” என்றான்.

“இன்னும் வராத பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் கற்பனையால் பேசுவது வீண்வேலை.” என்று அவன் சொன்னான்.

“இல்லை, இவை உண்மையிலேயே பாட்னாவிலும் டெல்லியிலும் வாழ்பவர்களின் சிக்கல்கள்” என்றான் யாதவ்.

“பணக்காரர்களின் பிரச்சினையை தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வமில்லை. நான் என்னைப் பற்றி தெரிந்துகொள்ளவே படிக்கிறேன்” என்று அவன் சொன்னான்.

அவர்கள் இரவுபகலாக விவாதித்துக் கொண்டார்கள். வெவ்வேறு இடங்களில் அமர்ந்து வகுப்புக்கான மணி அடிக்கும் வரை ஆவேசமாகப் பேசினார்கள். அவர்களைப் போன்றே மற்ற மாணவர்களும் ஆங்காங்கே அமர்ந்து அரசியலைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் சிவ்குமார் யாதவ் அவனிடம் ”இங்கே அத்தனை பையன்களும் பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். காக்காய் கூட்டங்கள் கத்திக்கொண்டே இருப்பது போலிருக்கிறது. பேசுவதற்காகத்தான் இவர்கள் கல்லூரிக்கு வந்திருக்கிறார்கள் போல” என்றான்.

“இங்கே இவர்களுக்குப் பேச்சுதான் விடுதலையின் அடையாளம். ஊரில் அவர்கள் யாரிடம் பேசமுடியும்? பேசினாலும் மீண்டும் மீண்டும் வறுமையையும், கடனையும், மழையையும் பற்றித்தானே பேசவேண்டும்? இங்கே பேச நண்பர்கள் அமைந்திருக்கிறார்கள். பேசுவதற்கு விஷயங்கள் கிடைக்கின்றன. எவ்வளவு விஷயங்கள். ஜனநாயகம், சோஷலிசம், கம்யூனிசம்” என்று ராம்சரண் நாயக் சொன்னான். “என்ன பேசுகிறார்கள் என்றே முக்கியமில்லை. அவர்களின் குரல்களைக் கேட்பதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது.”

அந்த குரல்களை ராம்சரண் நாயக் பின்னர் ஒருபோதும் மறக்கவே இல்லை. இரவில் எப்போது கண்களை மூடிக் கொண்டாலும் அந்த குரல்களை அவனால் கேட்க முடிந்தது. எங்கோ எப்போதோ வாழ்க்கையில் இருந்து மறைந்துபோய்விட்ட சிவ்குமார் யாதவிடம் அவன் பேசிக்கொண்டேதான் இருந்தான்.

“வரலாற்றில் எப்போதுமே மனிதர்களுக்கு இத்தனை பேச்சுக்கான வாய்ப்பே அமைந்ததில்லை. ஜனநாயகம் போல மானுடகுலத்திற்குப் பெரிய வரம் ஏதுமில்லை. சோறே இல்லாமலாகட்டும். ஆனால் பேச முடிகிறதே. பேசிப்பேசி நான் இங்கே இருக்கிறேன், நான் சிந்திக்கிறேன், நானும் ஒரு குரல்தான் என தனக்கே நிறுவிக்கொள்ள முடிகிறதே. எவ்வளவு பெரிய அதிருஷ்டம் அது…”

எங்கோ இருந்த சிவ்குமார் யாதவிடம் அவன் சொன்னான். “வரலாற்றை எவரும் அறிந்திருக்கவில்லைதான். ஆனால் இப்படி வரலாற்றை பேசி உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு முன்பு நமக்கெல்லாம் கிடைத்ததே இல்லை என்றும் எல்லாருக்கும் தெரியும். ஆகவேதான் பேசுவதற்கான எந்த வாய்ப்பையும் நம் ஆட்கள் தவறவிடுவதே இல்லை. இன்னும் இன்னும்தான் பேசுவார்கள். சினிமாவிலே பேசிக்கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளில் பேசுகிறார்கள். மேடைகளில் பேசுகிறார்கள். பேச்சுதான் எங்கும் காற்றுபோல நிறைந்திருக்கிறது. இது பேச்சின் யுகம். பேச்சுதான் இப்போதுள்ள தெய்வம்.”

”அன்று பேசியவர்கள் எல்லாம் இப்போது அதேபோலப் பேசுகிறார்களா?” என்று சிவ்குமார் யாதவ் கேட்டான். கல்லூரி முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கையில் ஒரு விபத்தில் லாரியில் சிக்கி சிவ்குமார் யாதவ் உயிர்துறந்ததை இருபத்திமூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் ராம்சரண் நாயக் அறிந்துகொண்டான். இறந்தவனின் கேள்விகள் மேலும் கூர்மை அடைந்திருந்தன. “சொல் ராம்சரண், நீ பேசிக்கொண்டா இருக்கிறாய்?”

“இல்லை” என்று ராம்சரண் நாயக் சொன்னான். “ஆனால் அடுத்த தலைமுறை பேசுகிறது. அவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்”

”எவ்வளவு நாள்?”

அது ஒரு பழைய தங்கும்விடுதி. லக்னோவின் புறநகர் பகுதியில் இருந்தது. வெளியே மிக அருகே இருந்த சாலை வழியாக கார்களும் லாரிகளும் சீறிச் சென்றுகொண்டே இருந்தன. அறைக்குள் அந்த வண்டிகளின் முகப்பொளி சன்னலுக்கு மேலே இருந்த வெண்டிலேட்டர் வழியாக வளைந்து பறந்து சுழன்றது.

“சொல், எவ்வளவு நாள் பேசுவார்கள்” என்றான் சிவ்குமார் யாதவ்.

அந்தக் கேள்வியையே ராம்சரண் நாயக் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் நல்ல போதையில் இருந்தான். அவனுடைய உடல் மெத்தையில் அழுந்திப் புதைந்தபடியே இருந்ததுபோல உணர்ந்தான். “சொல் ராம்” என்றான் சிவ்குமார், இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு செத்துப்போனவன் ஏளனத்துடன் கேட்டுக்கொண்டே இருந்தான்.

“தெரியவில்லை” என்றான் ராம்சரண். “எனக்கு மெய்யாகவே தெரியவில்லை…“ அவன் நாக்கு தடித்து வழவழப்பான எச்சிலில் புரண்டது. குழறிய குரலில் “தெரியவில்லை” என்று சொல்லிக்கொண்டே இருந்தான். அப்படியே தூக்கத்தில் தன்னை அழுத்திக்கொண்டான்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 20, 2025 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.