வேதாந்தம் உலகியலுக்கு எதிரானதா?
வணக்கம், உங்களுடைய இந்த காணொளி பார்த்தேன். நன்றாக இருந்தது. ஆனால் எனக்கு மிகப்பெரிய முரண்பாடாக தோன்றிய விஷயம் இது:
யுவால் நோவா ஹராரி யின் வாழ்க்கை பார்வையானது ஒரு யூத, கிருத்தவ மனநிலையை ஆமாம் போட வைக்கும், அவர்களின் ஆழ் மனதோடு ஒத்திசைக்கும் என்று கூறினீர்கள். மற்றும் அவர்களின் விமோசனம், தீர்ப்பு நாள், மறுபிறப்பு எதிர்பார்ப்பு கோட்பாடுகள் எப்படி progress/utopia போன்ற கருத்துக்களை பெற்று எடுக்கும் என்று கூறினீர்கள். மிக நல்ல அனாலிசிஸ்.
கிருத்தவம் மற்றும் யுத மனநிலை மனித வாழ்வை பாவத்தின் வெளிப்பாடாக பார்க்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாழ்க்கை ஒரு சாபம் எனவும், கடவுளின் தண்டனை எனவும், விமோசனம் பெற வேண்டிய ஒரு நிலை எனவும், ஒரு சக்கரத்தில் மாட்டிகொண்ட எலி போல பதற்றம் நிறைந்த சூழலாகவும், சமாதானதிற்கு ஏங்கும் ஒரு நிலை போலவும் கருதுகிறது என்பது ஏற்கதக்கது.
மறுபடியும்: மிக நல்ல அனாலிசிஸ்.
ஆனால் சுற்றி நடக்கும் அனைத்தும் மாயை, இன்ப துன்பம், பிறப்பு, இறப்பு, நியாய அநியாயம் என்று சொல்லப் படும் அனைத்தும் “பிரம்மம்” என்னும் ஒருமையை உணராத அறியாயமை மனநிலை என்று கூறும் வேதாந்த தத்துவம் எந்த வகையில் உயர்ந்தது? குழந்தையின் சிரிப்பு இருக்கும் இந்த உலகத்தில்தான் தாங்க முடியாத பிரசவ வலியும் இருக்கிறது. இன்பம் அள்ளித்தரும் இந்த உலகில் துன்பத்திற்கும் பஞ்சம் இல்லை. ஒரு பக்கம் பூந்தோட்டம், மறுபக்கம் சாக்கடை கிடங்கு..ஆனால் எந்த வித்தில் இவை எல்லாம் மாயை என்ற கருத்து மேம்பட்டதாகும்? இரண்டும் வேண்டும், இரண்டையும் ஏற்க வேண்டும், அள்ளி பருகவேண்டும் என்று கூறும் தத்துவமே மேலானது அல்லவா? அடிப்படையில் இரண்டுக்கும் என்ன வேறுபாடு உள்ளது? முக்தி/விடுதலை போன்ற கருத்துக்களுக்கும் விமோசனம்/இறுதித்தீர்ப்பு போன்ற கருத்துக்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? அவர்களுக்கு வாழ்க்கை பாவம், விமோசனம் வேண்டும்.. இவர்களுக்கு வாழ்க்கை அறியாமை..அதில் இருந்து விழிப்பு/விடுதலை வேண்டும்.
இந்த இரண்டு தத்துவமும் அடிப்படையில் சுற்றி நடக்கும் வாழ்க்கை நிகழ்வுகளை வேறு வேறு வகையில் சிறுமை படுத்தும் நோக்கமே என்பது என் கருத்து! வாழ்கையை பொறுக்க முடியாதவர்களின் ஐடியலிசம். எதோ ஒரு ideal இந்த வாழ்கையை சமாளிக்க/சகித்துக்கொள்ள இந்த இரண்டு மதங்களுக்கும் தேவை படுகிறது என்பது என்னுடைய கருத்து.
வாழ்க்கை பொறுக்க முடியாத ஒரு மனநிலை தானே இதை அனைத்தையும் மாயை என்று சொல்லி அதில் பங்கு பெறாமல் ஆறுதல் அடைய முடியும்?
நான் “வேதாந்தம்” என்று குறிப்பிட்டு சொன்னதன் காரணம்: பிரம்மம் என்பதற்கு பல தத்துவங்களில் பல விதமாக உணரப்பட்டு இருக்கிறது. பிரம்மம் என்பது ஒருமை என்பதே எல்லா இந்திய தத்துவங்களும் ஒற்றுகொள்வதில்லை. ஆனால் இதை நீங்கள் மேலோட்டமாக அந்த காணொளியில் கிழக்கத்திய தத்துவம் என்று சொல்லிவிட்டீர்கள். ஆனால் நீங்கலே இன்னொரு காணொளியில் நான் சொன்னதை பற்றியும் பேசி இருக்கிறீர்கள். உங்களுக்கு தெரியாது என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை.
இது போன்று தத்துவங்களை perspectival அனாலிசிஸ் வேறு யாரும் தமிழில் செய்து நான் கேட்டது இல்லை. அனைவரும் இடது சாரி தத்துவம் பேசினால் தான் ஏதோ உண்மையின் பக்கம் இருப்பது போல பேசுகிறார்கள். மேற்கத்திய கோட்பாடுகள், அறிவியல் தகவல்களை பேசினால் ஏதோ ஒரு மிக உயர்ந்த இடத்தில் இருந்து பேசுவது போல் நினக்கிறார்கள். எந்த ஒருவருக்கும் தமிழ்சூழலிலே கருத்துக்கள் எங்கிருந்து வருகிறது, எந்த மனநிலை எந்த கருத்துக்களை பெற்று எடுக்கும், கருத்துக்களின் மதிப்பு போன்ற விஷயங்களை யாரும் பேசி கேட்டதே இல்லை(based on my very limited exposure to Tamil literature). முதல் முறை இது போன்ற ஒரு காணொளி பார்த்த சந்தோஷமே என்னை எதிர் கருத்து பதிவு செய்ய தூண்டியது.
நல்ல காணொளி. மிக்க நன்றி.
(என்னுடைய கருத்து, என்னுடைய அபிமானம் என்று பல இடங்களில் கூறி இருக்கிறேன்.. ஆனால் அவ்வளவு பெரிய அறிவாளி அல்ல நான். என் உலக பார்வை நான் படித்து, பெரிதும் பாதிக்கப்பட்டு, ஏற்றுகொண்ட, மறுத்த பெரிய பெரிய மனிதர்களின் தாக்கமே ஆகும்..)
நன்றி
சுவாமிநாதன்
அன்புள்ள சுவாமிநாதன்,
இந்திய ஞானமரபு, அத்வைதம் ஆகியவற்றைப் பற்றி நம் சூழலில் விவாதமே நிகழ்வதில்லை. அவற்றைப்பற்றிய கல்வி என்பது அனேகமாக இல்லை. இந்தியாவெங்கும் அப்படித்தான். இங்கே இருப்பவை இரண்டு தரப்புகள். ஒன்று, பக்தி மற்றும் நம்பிக்கை சார்ந்தது. அங்கே பெரும்பாலும் தத்துவமும் ஞானமும் மூத்தோர் உபதேசம் என்ற வகையில் கொள்ளப்படுகின்றன. பெரும்பாலும் மூடநம்பிக்கை, அசட்டுச் சார்புநிலைகளே அங்கே நமக்கு கிடைக்கின்றன.
இன்னொன்று, இங்கே நாத்திகம், மார்க்ஸியம் சார்ந்து சொல்லப்படுபவை. அவை முழுமையான நிராகரிப்புகள். தத்துவ நிலைபாடுகள்கூட அல்ல, வெறும் எதிர்ப்புகள். அவற்றைச் சொல்பவர்கள் தங்களை சிந்தனையாளர்கள் அல்லது சிந்தனைகளைக் கற்பவர்கள் என எண்ணிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இருப்பதும் உண்மையில் வெறும் கருத்தியல் நம்பிக்கைதான். மேற்குலகம் உருவாக்கிய கருத்துக்களை அவர்கள் மூர்க்கமாக நம்புகிறார்கள். அவை சரியாக இருக்கும் என எண்ணி அவற்றை அதே தர்க்கங்களுடன் முன்வைக்கிறார்கள்.
இந்த இரண்டு தரப்பும் இவர்களை எதிர்ப்பவர்களை தங்கள் எதிர்த்தரப்பு என முத்திரையடிக்கும். நீங்கள் இந்திய ஞானமரபின் உண்மையான பக்கங்களைச் சொல்லி, இந்து நம்பிக்கையாளர்களை எதிர்த்தால் அவர்கள் உங்களை இந்துவிரோதியான மார்க்ஸியர் என்பார்கள்.நீங்கள் இடதுசாரிகளின் கருத்தியல் அடிமைத்தனத்தைச் சுட்டிக்காட்டினால் இந்து வெறியர் என பட்டம் சூட்டப்படுவீர்கள்.
இந்தச் சூழலில்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். எனக்கான வட்டம் மிகச்சிறியதாக இருப்பது இதனால்தான். இந்த விவாதச்சூழலில் நீங்கள் வந்தமைக்கு வாழ்த்துகக்ள். நீண்டகாலமாக நான் முன்வைத்து விவாதித்துவரும் இந்த விஷயங்களை பொதுவெளியில் விவாதிப்பதில் அண்மையில் நம்பிக்கை இழந்துவிட்டேன். ஏனென்றால் இங்கே விவாதங்களில் எந்த முட்டாளும் வந்து தன்னம்பிக்கையுடன் பேச சமூகவலைத்தளச் சூழல் வழியமைக்கிறது. விளைவாக எல்லாமே வெட்டிவிவாதங்களாக ஆகிவிடுகின்றன.
ஆகவே திட்டவட்டமான வகுப்புகளே பயனுள்ளவை என நினைத்து 2022 முதல் அவ்வகுப்புகளை நடத்தி வருகிறேன். அவை மிகவும் பயனுள்ளவையாக உள்ளன என்பதைக் காண்கிறேன்.
*
உங்கள் கேள்விக்கு வருகிறேன். இந்திய தத்துவம், வேதாந்தம் ஆகியவற்றில் முறையான அறிமுகம் உடையவர்களின் கேள்வி அல்ல அது. எந்த முறையான அறிமுகமும் இல்லாமல் மேலைநாட்டு ஆய்வாளர் சிலர் (உதாரணம் ஆல்பர்ட் ஷ்வைட்ஸர்) சொன்ன மேலோட்டமான விமர்சனம் அது. அதை இங்கே நகல்குரல்களை எழுப்பும் இடதுசாரிகளும் நாத்திகர்களும் உரக்கக்கூவிக்கொண்டிருக்கிறார்கள்.
அத்வைதம் இந்த உலகவாழ்க்கை எந்தவகையிலும் பொய் அல்லது மாயை என்று சொல்லவில்லை. இங்குள்ள எதற்கும் அர்த்தமில்லை என்ற எதிர்மறைப்பார்வையை அது முன்வைக்கவில்லை.
தெளிவாக எடுத்த எடுப்பிலேயே அது வாழ்க்கை, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய அறிதல்களை இரண்டாகப் பிரிக்கிறது. சாமான்யம்- விசேஷம். சாமான்யம் என்பது உலகியல். அந்த உலகியல் தளத்தில் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் (அறம் ,பொருள் ,இன்பம், வீடு) என்னும் நான்குவகை விழுப்பொருட்களை (புருஷார்த்தங்களை) மனிதர்கள் கொள்ளவேண்டும் என்கிறது. அறநெறிகள் மற்றும் ஒழுக்கநெறிகளே தர்மம். புறவுலகம் சார்ந்த செல்வமும் அதிகாரமும் கடமைகளும் அர்த்தம். அகவாழ்க்கையாகிய காதல், குடும்பம் இரண்டும்தான் காமம். இவையனைத்தையும் துறந்துசெல்லுதல் வீடு.
இந்நான்குமே மனிதனுக்குத் தேவை என்றே வேதாந்த மரபு சொல்கிறது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் அந்தந்த காலகட்டத்தில் முறைப்படிச் செய்து, அவற்றின் இன்பதுன்பங்களை அடைந்து முதிர்வதே வாழ்க்கையாகும். ஒன்றை முழுமையாக அடைவது என்பது அதில் இருந்து விடுபடுவதும்தான். வயிறுநிறைய உண்டவர் உணவில் இருந்து விடுபடுகிறார். அவ்வாறு முதல் மூன்றில் இருந்தும் விடுபடுவதே வீடுபேறு.
ஈதல் அறம், ஈட்டல் பொருள்
காதலிருவர் கருத்தொருமித்து -ஆதரவு
பட்டதே இன்பம், பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.
(ஔவையார்)
மாயை பற்றிய உணர்வு, அதிலிருந்து ஆத்மஞானம், அதன் முடிவில் பிரம்மஞானம் என்பவை எல்லாம் விசேஷ தளத்தைச் சேர்ந்தவை. அன்றாட உலகியல் சார்ந்த உண்மைகள் அல்ல. அவற்றை பரமார்த்திகம், பரஞானம் என்றே எல்லா ஞானிகளும் சொல்கிறார்கள். ‘பர’ என்றால் ‘பிற’ என்று பொருள். அதாவது ‘வேறு’ ஞானம் அது. நாம் வாழும் உலகியலை வேதாந்தம் வியவகாரிகம் என்கிறது. புழக்கவுலகம். நாம் அறியும் எல்லா உண்மையும் வியவகாரிக சத்யம், பரமார்த்திக சத்யம் என்னும் இரண்டு நிலையில் உள்ளன.
நாம் எவரும் ஒற்றை உண்மையில் வாழ்வதில்லை. உதாரணமாக இப்படிச் சொல்கிறேன். நாம் அனைவரும் இன்றைய நவீன இயற்பியல் சொல்லும் கொள்கைகளை ஒட்டியா இந்த உலகில் வாழ்கிறோம்? இயற்பியலின்படி நாம் வாழும் இந்த பொருள்வயப் பிரபஞ்சம் மூலகங்களால் ஆனது, மூலகங்ங்கள் மூலக்கூறுகளால் ஆனவை, மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை. அணுக்கள் ஆற்றலின் துளிகள் அன்றி வேறில்லை. நம் உடலும் ஆற்றல் மட்டுமே. எதிரே உள்ள சுவரும் ஆற்றல்தான். அவ்வாறென்றால் நாம் ஏன் ஒரு சுவர் வழியாக அப்பால் செல்லமுடிவதில்லை?
இரண்டில் எது உண்மை? நம் உடல் ஒரு பொருள், சுவர் இன்னொரு பொருள், இரண்டுக்கும் எடையும் நிறையும் உள்ளன என்பது ஓர் உண்மை. இரண்டுமே வெறும் ஆற்றல்தான் என்பது இன்னொரு உண்மை. இரண்டு உண்மைகளும் ஒன்றையொன்று மறுப்பதில்லை. ஒரு பேருண்மையின் உள்ளே சிற்றுண்மை அமைந்துள்ளது. பரமார்த்திக உண்மையின் உள்ளே வியவகாரிக உண்மை அமைந்துள்ளது.
வியவகாரிக உண்மையில்தான் நாம் அனைவருமே வாழ்கிறோம், அதுவே நம்மால் செய்யக்கூடுவது. நாம் அனைவருமே உண்டு, உறங்கி, புணர்ந்து, குடும்பத்தைப் பேணி, உலகச்செயல்களில் ஈடுபட்டு, இன்ப துன்பங்களில் திளைக்கிறோம். இது வியவகாரிக உண்மை. ஆனால் பரமார்த்திக உண்மையையும் அறிந்திருப்பவர் வியவகாரிக உண்மையிலேயே இன்னும் ஒரு பங்கு தெளிவு உடையவர் ஆகிறார். கயிற்றுப் பாலத்தின்மேல் சமன் செய்து நடப்பவருக்கு ஒரு பிடிமானம் கிடைப்பதுபோன்றது அது. ஓர் உறுதிப்பாடு உருவாகிறது. இதைத்தான் வேதாந்தம் சொல்கிறது.

இப்படிச் சொல்கிறேன். இங்கே பணம் ஈட்டி, அதிகாரத்தை அடைந்து, காமத்தில் திளைத்து, குடும்பத்தைப் பேணி வாழ்கிறோம். நாம் வாழும் நகரிலுள்ள ஒரு கோடி வாழ்க்கையில் ஒன்று நம்முடையது. நம் சூழலில் உள்ள இயற்கையில் அந்த நகரமே ஒரு சிறு துளிதான். இந்த பூமியிலுள்ள இயற்கை என்பது சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் ஒன்றிலுள்ள ஒரு சிறிய நிகழ்வுதான். பலகோடி சூரியன்கள், பலகோடி பால்வழிகள் கொண்டது இந்தப்பிரபஞ்சம். நம்முடைய வெற்றிதோல்விகள், சுகதுக்கங்களுக்கு இந்தப் பிரபஞ்சத்தின் கணக்கில் என்னதான் அர்த்தம்? நாம் இருப்பதற்கும் இல்லாமலிருப்பதற்கும் ஏதாவது வேறுபாடு உண்டா என்ன?
நோய் வந்தால் நாம் பிரார்த்தனை செய்கிறோம். கடவுள் காப்பாற்றவேண்டும் என்கிறோம். நாம் சாப்பிடும் ஒரு ‘ஆண்டி பயாட்டிக்’ மாத்திரை நம் உடலுக்குள் பலகோடி பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் கொன்று அழிக்கிறது. நம் வேண்டுதலுக்கு என்ன பொருள்? ஆனால் வேண்டிக்கொள்ளக்கூடாது என்றில்லை. அது வியவகாரிகம். அங்கே நாம் வேண்டிக்கொள்ளலாம். அதனால் நமக்கு ஓர் உறுதி கிடைக்கலாம். பாமரர் அந்த வியவகாரிகத்திலேயே மூழ்கிகிடப்பார்கள். ஆனால் ஞானம் தேடுபவர் அந்த பரமார்த்திகத் தளத்தையும் அறிந்திருப்பார். கொஞ்சமாவது வேதாந்த ஞானம் உள்ளவர் இந்த வேறுபாட்டை உணர்ந்திருப்பார்.
இதுவும்கூட ‘அரிய’ உண்மை எல்லாம் அல்ல. அனைவருக்கும் தெரிந்ததே. ஒரு சாவின்போது, ஓர் எதிர்பாராத பெருநிகழ்வின்போது நாம் அனைவருமே சட்டென்று வியவகாரிக உலகம் எந்த அளவு பொய்யானது, மாயையானது என உணரத்தான் செய்கிறோம். எந்தச் சாவுமே நமக்கு அந்த அர்த்தமின்மையை பயங்கரமாக விரித்துக் காட்டிவிடுகிறது. அதனால்தான் நாம் அலறி அழுகிறோம். ஆனால் உடனே மீண்டும் வியவகாரிக உலகுக்கு வந்துவிடுகிறோம். பரமார்த்திகத்தில் சாமானியர் முழுமையாக வாழமுடியாது.
ஆகவே, இந்த தெளிவை அடையுங்கள். இந்து மெய்ஞானம், அதன் சாராம்சமான வேதாந்தம், ஒருபோதும் உலகியலை நிராகரிக்கவில்லை. மாறாக உலகியலை மிகச்சிறப்பாகச் செய்வது எப்படி என்றுதான் அது பேசிக்கொண்டிருக்கிறது. இந்திய வேதாந்தத்தின் மையநூலான கீதை ‘செயல்புரிக’ என்றுதான் ஆணையிடுகிறது. அதன் முதல் அத்தியாயமான சாங்கிய யோகம் உலகியல் செயலை சிறப்புறச் செய்யவேண்டும் என்றுதான் சொல்கிறது.

ஒவ்வொரு உலகியல் செயலையும் அதற்கான மிகச்சிறந்த வழிகளின்படிச் செய்யவேண்டும். ஆனால் நம்மால் செயல்புரியவே முடியும், அதன் விளைவுகள் நம் கையில் இல்லை. ஆகவே செயலைச் செய்ய சிறந்த வழி செய்வதை சிறப்பாகவும் நிறைவுறும்படியும் செய்வதும், விளைவை காலத்தின் கையில் கொடுத்து விடுவதும்தான்- கீதை சொல்வது இதைத்தான். சிறப்பாக செய்யப்பட்ட செயல் கர்மயோகம். கர்மயோகம் என செய்யப்படும் செயல் அச்செயலில் இருந்து நம்மை விடுவிக்கிறது. அதிலிருந்து நாம் மேலும் முன்னகர்கிறோம்.
இந்த உலகியல் செயலைச் சிறப்புறச் செய்ய அவசியமானது ஒன்று உண்டு. பிரபஞ்ச அளவில் நமக்கும் நம் செயலுக்கும் எல்லாம் என்ன அர்த்தம் என்ற ஒரு புரிதலும் நம்முள் இருப்பதுதான் அது. வியவகாரிகத்தைச் சிறப்பாகச் செய்வதற்கு பரமார்த்திகத்தில் ஒரு பிடி இருந்தாகவேண்டும் என்று ஆசிரியர்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.
நான் இடைவிடாமல் எழுதிக்கொண்டும், கற்பித்துக்கொண்டும், கற்றுக்கொண்டும் இருக்கிறேன். ஆனால் நான் இந்த பிரபஞ்சத்திலுள்ள ஒரு சிறு பாக்டீரியாவிடமிருந்து மேலானவன் அல்ல என்றும் அறிந்திருக்கிறேன். நான் செயலாற்றினாலும் செயலாற்றாவிட்டாலும் பிரபஞ்சத்தின் அளவில் அது ஒன்றுமே இல்லைதான். என் செயலுக்கு என்ன பயன் என்று என்னால் கணிக்கவே முடியாது. ஆனால் இச்செயலைச் செய்யவேண்டும் என்னும் உந்துதல் எனக்குள் உள்ளது. இதைச் செய்வதனால் நான் நிறைவை அடைகிறேன். ஆகவே செயலாற்றுகிறேன். ஆனால் இந்தச் செயலுடன் உள்ளூர ஒட்டாமலும் இருந்துகொண்டிருக்கிறேன். பிரபஞ்சப்புரிதலையும் கொண்டிருக்கிறேன். அதுவே வேதாந்தம் சொல்லும் வழி. இரட்டை உண்மைகளில் வாழ்வதுதான் ஞானம் என்பது. ஒரு இயற்பியல் அறிஞனுக்கு அணுப்பிரபஞ்சம் தெரியும், அவன் வாழும் வீடும் தெரிந்திருக்கும். ஓர் உயிரியல் அறிஞனுக்கு மனித உடல் என்பது பலகோடி உயிர்களின் தொகுப்பு என்று தெரிந்திருக்கும். கூடவே மனைவிமக்களை நேசிக்கவும் செய்வான். அதுபோலத்தான்.
வேதாந்த மெய்ஞானத்தை கற்பதற்கு தமிழகத்தில் முதன்மை ஆசிரியர் சுவாமி சித்பவானந்தர்தான். குறைந்தது அவர் நூல்களையாவது வாசிக்கலாம். நான் சொல்லும் இந்த விஷயங்களை சுவாமி மிகமிக விரிவாகப்பேசியிருக்கிறார்.
ஜெயமோகன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
