காவியம் – 52

ரோமஹர்ணன் வியாசவனத்தைச் சென்றடைந்த அன்றுதான் வியாசருக்குத் தொலைவிலிருந்து ஒரு செய்தி வந்து சேர்ந்திருந்தது. பாஞ்சாலத்தின் அரசன் துருபதனுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தியுடனும் அக்குழந்தையின் ஜாதகக்குறிப்புடனும் ஒரு சூதன் வந்திருந்தான். யாஜர், உபயாஜர் என்னும் இரண்டு அதர்வவேத வல்லுநர்கள் நடத்திய பதினெட்டுநாள் நீண்ட வேள்வியின் பயனாக துருபதனின் மனைவி கருவுற்றிருந்ததை வியாசர் முன்னரே அறிந்திருந்தார். அங்கிருந்து குழந்தையின் ஜாதகம் வருவதற்காக ஒவ்வொரு நாளும் காத்திருந்தார்.
ஜாதகத்தைப் பார்த்ததும் அவர் சோர்வுற்று தனியாகச் சென்று ஓடைக்கரையில் அமர்ந்திருந்தபோதுதான் ரோமஹர்ஷணன் வந்திருக்கும் செய்தியை வைசம்பாயனன் சென்று அவரை அறிவித்தான். அவர் எவரையும் பார்க்கவிரும்ப மாட்டார், உடனே அந்த இளம் நிஷாதனை திருப்பி அனுப்பிவிடுவார் என அவன் எண்ணினான். ஆகவே வியாசரைப் பணிந்து “காட்டுமிராண்டி போலிருக்கிறான். அழுக்கும் கந்தலுமாக தெரிகிறான். உச்சரிப்பிலும் கல்வி கற்ற தடையங்கள் தெரியவில்லை” என்றான்.
வியாசர் “அவன் பெயர் என்ன?” என்றார்.
“ரோமஹர்ஷணன் என்றான்”
வியாசர் கண்களில் ஆர்வத்துடன் “வரச்சொல் அவனை” என்றார்.
அவன் வந்து பணிந்து நின்றதும், அவன் தன்னை அறிமுகம் செய்வதற்கு முன்னரே “உன் குருமரபு என்ன?” என்றார்.
அவன் “நான் வால்மீகியின் மாணவரான லோமஹர்ஷணரின் மரபைச் சேர்ந்தவன். என் தந்தை லோமஹர்ஷணரிடம் காவியம் பயின்றவன்” என்றான்.
“ஆதிகவியின் மரபில் வந்த நீ என்னிடம் எதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறாய்?” என்று வியாசர் கேட்டார்.
“அதர்மத்தின் வழிகளைப் பற்றி” என்று ரோமஹர்ஷணன் சொன்னான். “ஏனென்றால் வேறொரு காலம் தொடங்கிவிட்டது என்று உணர்கிறேன்”
தன் கையிலிருந்த ஜாதகத்தை அவனிடம் தந்து “இதைப் பார்த்துச் சொல். என்ன பொருள் இதற்கு?” என்று வியாசர் கேட்டார்.
அவன் அதை வாங்கி ஒருமுறை பார்த்துவிட்டு “பஞ்சாக்னி” என்றான்.
வியாசர் ”அதாவது…” என்றார்.
”இவள் நெருப்பு வடிவம், அழிப்பவள்”
“அந்த அழிவை தடுக்கமுடியுமா?” என்று வியாசர் கேட்டார்.
“ஐந்து பருப்பொருட்களில் நீர் நெருப்பை அணைப்பது. மண்ணும் நெருப்பை கட்டுப்படுத்துவது. காற்று வளர்ப்பது. வானம் அணையாத நெருப்புகளை மட்டுமே கொண்டது” என்று ரோமஹர்ஷணன் பதில் சொன்னான்.
“நீ அஸ்தினபுரியின் கதையை அறிந்திருப்பாய். அங்கே இந்த தீயை அணைப்பவர் எவர்?” என்றார் வியாசர்.
“பாண்டுவின் மனைவியாகிய அரசி குந்தி காற்று, மாருதர்கள் உலவும் பெரும்புல்வெளிகளைச் சேர்ந்தவள். இந்த நெருப்பை வளர்ப்பவள். திருதராஷ்டிரரின் மனைவியாகிய காந்தாரி நிலம். இந்த நெருப்பை அவள் கட்டுப்படுத்த முடியும். இதை அணைக்கும் நீர் அந்தக் குலத்தில் இல்லை” என்று ரோமஹர்ஷணன் சொன்னான்.
“நீரை நான் வரவழைக்க முயல்கிறேன். பகீரதனைப் போல வானத்துக் கங்கையை இறக்குகிறேன்” என்றார் வியாசர்.
ரோமஹர்ஷணன் ஒன்றும் சொல்லவில்லை.
“நீ என்னுடன் இரு” என்று அவர் சொன்னார்.
அவ்வாறாக அவன் அவருடைய பிரியத்திற்குரிய மாணவனாக ஆனான். அவருடன் இருந்து அவருடைய ஒவ்வொரு சொல்லையும் நினைவில் நிறுத்திக் கொண்டான். அவர் அஸ்தினபுரிக்குச் சென்றபோதெல்லாம் அவனும் உடன் சென்றான். அவனை அவர் தன் முதன்மை மாணவன் என சபைகளில் அறிமுகம் செய்துவைத்தார்.
வியாசரின் பிற மாணவர்கள் அவன்மேல் ஒவ்வாமையும் சீற்றமும் கொண்டிருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவனை அவர்கள் விலக்கியே வைத்திருந்தார்கள். தங்களுக்கு நோன்புகளும் நெறிகளும் பூஜைவிதிகளும் உள்ளன என்றும், நிஷாதனாகிய அவன் அவையேதும் இல்லாதவன் என்பதனால் அவனிடம் இருந்து தாங்கள் சற்று விலகியிருப்பதாகவும் அவர்கள் வியாசரிடம் சொன்னார்கள். “இவன் என்றோ ஒருநாள் தன்னுடைய இருட்டின் கதைகளை அவர் சொன்னதாகச் சொல்லி அலையப்போகிறான்” என்று வைசம்பாயனன் சொன்னான். பிறருக்கும் அந்த எண்ணம் இருந்தது.
இந்திரப்பிரஸ்தம் அமைந்தபோது அங்கே நிகழ்ந்த ராஜசூய வேள்விக்கு ரோமஹர்ஷணன் வியாசருடன் சென்றிருந்தான். அந்நகரின் பிரம்மாண்டமான தோற்றம் அனைவரையும் திகைக்கச் செய்தது. “இது ஆயிரமாண்டுக்காலம் இங்கே நிலைகொள்ளப்போகும் நகரம்!” என்று வைசம்பாயனன் வியப்புடன் சொன்னான்.
“பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய கோட்டை இதுதான்” என்று சுமந்து சொன்னான்.
“இல்லை, யாதவர்களின் துவாரகை இதைப்போலவே பெரியது” என்று அத்ரி சொன்னான்.
“ஆனால் அது ஆரியவர்த்ததிற்குள் இல்லை. இது ஆரியவர்த்தத்தின் நெஞ்சில் அமைந்துள்ளது” என்று ஜைமினி பதில் சொன்னான்.
வியாசர் அதைக் கேட்டார். தன்னருகே நின்றிருந்த ரோமஹர்ஷணனிடம் “நீ என்ன நினைக்கிறாய்?” என்றார்.
“ஆசுரம்” என்று அவன் பதில் சொன்னான்.
அவன் சொல்வதென்ன என்று அவர் புரிந்துகொண்டு பெருமூச்சுவிட்டார். மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
தனித்திருக்கையில் அவன் வியாசரிடம் சொன்னான். “வளர்ந்து பெருகுபவை நீடிக்கும். அவற்றை வளரச் செய்த சக்திகளே அவற்றை தாங்கி நிறுத்தும். கட்டப்பட்டு பெருகியவை அவற்றைக் கட்டியவர்களின் இறுதித்துளி ஆற்றலையும் உறிஞ்சிக்கொண்டவை. அவற்றை தாங்கிநிறுத்த கூடுதல் ஆற்றல்தேவை. அது அவர்களிடம் இருக்காது.”
வியாசர் மேலும் மேலும் துயரமடைந்தபடியே சென்றார். அந்த வேள்வியிலேயே யாகசாலை முதல்வனாக துவாரகையின் யாதவமன்னன் கிருஷ்ணன் அமர்த்தப்பட்டதை சிசுபாலன் எதிர்த்துப்பேச, கிருஷ்ணன் அவரைக் கொன்றான். ரத்தத்தில் யாகசாலை நனைந்தது. அந்நகருக்கு எதிரான போர் அங்கேயே தொடங்கிவிட்டது.
அது பெரும்போரில் முடிந்தது. யாதவ அரசன் கிருஷ்ணன் அந்தப்போரை தானே முன்னெடுத்துச் செய்து, முடித்து வென்றான். அசுரர்களையும் நிஷாதர்களையும் பிறரையும் தன்னுடன் அணிசேர்த்துக்கொண்டு அவன் க்ஷத்ரியர்களின் பெரும்படையை அழித்தான். அஸ்தினபுரியையும் பிறநாடுகளையும் யாதவர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.
“க்ஷத்ரியர்கள் வெல்லப்பட்டாக வேண்டும். கண்கூடான ஆற்றல் அவர்களுக்குக் காட்டப்பட்டாகவேண்டும். சதிகளாலோ, விதியாலோ, அல்லது வரலாற்றின் ஏதேனும் விடுபடல்களாலோ தாங்கள் அதிகாரம் இழக்கவில்லை என்றும்; ஆற்றலை இழந்தமையால்தான் அதிகாரம் இழந்தோம் என்றும் அவர்கள் அப்போது மட்டும்தான் ஏற்றுக்கொள்வார்கள். ஆற்றலுடையவர்களுக்கு ஆற்றலற்றவர்கள் முழுமையாக அடங்கினால் மட்டுமே நிலத்தில் அமைதி உருவாகும். அரசியலில் அமைதி உருவானாலொழிய உழவும் தொழிலும் கலையும் அறிவும் செழிக்காது” என்று ரோமஹர்ஷ்ணன் சொன்னான்.
“ஆமாம், ஆனால் அழிவுகள் என்னை நெஞ்சுபிளக்கச் செய்கின்றன. இருபக்கங்களிலும் சிந்தியது என் ரத்தம்தான். ஆனால் இப்படித்தான் வரலாறு முன்னால் செல்லும். இப்படித்தான் எப்போதும் நிகழ்ந்திருக்கிறது. இனியும் இதுவே நிகழும். வல்லவன் வெல்வது என்பது இயற்கையின் நியதி. வல்லவன் அறத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்பது தெய்வங்களின் ஆணை. அதை மீறுவார்கள் என்றால் அவர்களும் வீழ்த்தப்படுவார்கள்” என்று வியாசர் சொன்னார்.
அவர் தன் மாணவர்களிடம் வியாசவனத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். நீண்டநாள் ஆழ்ந்த துயரில் இருந்த அவர் அப்போதுதான் சற்று மீண்டு வந்திருந்தார்.
“அறம் வெல்வது அத்தனை எளிதாக நிகழ்வதில்லை. அறமும் அறமீறலும் அத்தனை தெளிவானவையும் அல்ல. தாமரைநூலை தையல் ஊசியால் பிரித்தெடுப்பது போல அறத்தை அன்றாடத்தில் இருந்து பிரித்தெடுக்க வேண்டும். அதை நீதிநூல்கள் செய்ய முடியாது. அறியப்பட்ட அறத்தை நடைமுறைத் தேவைக்காக வகுத்துரைப்பதே அவற்றின் பணி. அறத்தை உரைக்கக் காவியங்களால்தான் முடியும்” என்றார் வியாசர். “ஒன்று இன்னொன்றாகிக் கொண்டே இருக்கும் நிலையில்தான் இங்கே ஒவ்வொன்றும் இருந்துகொண்டிருக்கின்றன. நிலையென ஏதுமில்லாத இவ்வுலகில் அறமோ, மீறலோ கூட நிலையானவை அல்ல. அறம் அறமீறலாக, அறமீறல் அறமாக உருமாறிக்கொண்டே இருக்கும் வாழ்வின் விந்தையைக் காட்ட கதைகளால் மட்டுமே இயலும். கதைகளைக் கதைகளால் சமன்செய்தும் கதைகளைக்கோத்தும் செல்லும் காவியத்தால் மட்டுமே அறத்தை உரைக்கமுடியும்.”
வியாசர் தொடர்ந்தார். “காவியம் அறம் என்ன என்று உரைப்பதில்லை, அறத்தின் முன் மானுடரை தனித்தனியாக நிறுத்திக் காட்டுகிறது. ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்வின் தருணங்களில் நடந்துகொண்டவையும் நிகழ்த்தியவையும் அறத்தின் பின்புலத்தில் உண்மையில் என்ன மதிப்புகொண்டவை என்பதை காவியத்தை பயில்பவர்கள் உணரமுடியும். வாழ்க்கையின் ஒரு தருணத்தில் அதைப்போன்ற ஒரு காவியத்தருணத்தை எளிய மனிதர்கள்கூட உணரவேண்டும். அதிலிருந்து தனக்கான நெறியை அவர்கள் உருவாக்கிக் கொள்ளவேண்டும்”
“அப்படியென்றால் அக்காவியம் எல்லா வாழ்க்கைச் சந்தர்ப்பங்களும் கொண்டதாக இருக்கவேண்டும், ஒன்றுகூட மிச்சமின்றி சொல்லப்பட்டதாக அமையவேண்டும்” என்று வியாசர் சொன்னார். “நான் அவ்வாறு ஒன்றை இயற்றவிருக்கிறேன். அதன்பொருட்டே நான் பிறந்து, நூல்பயின்றேன் என உணர்கிறேன். இந்தப் போரும் அதன் பின்புலமும் என்னை திகைக்கச் செய்தன. இந்தப்போரைத் தடுக்க என்னால் முடிந்தவரை முயன்றேன். அது மிகப்பெரிய மலைப்பாறை சரிவில் உருள்வதுபோல தன் வழியை தானே தெரிவுசெய்து செல்வதைக் கண்டபோது மலைத்து செயலற்றுவிட்டேன். அதன் முடிவில் துயரம் தாங்காமல் சோர்ந்து விழுந்தும் விட்டேன். ஆனால் இப்போது தெரிகிறது, இவையனைத்தும் எனக்கு ஏற்கனவே நன்றாகத் தெரிந்தவைதான் என்று. நான் இவையனைத்தையும் கதைகளாக அறிந்திருக்கிறேன். என் கனவில் அவை இருந்தன. அவை எனக்குள் எப்படி வந்தன என்றும், எவரிடமிருந்து வந்தன என்றும் எண்ணி எண்ணி சலித்து அம்முயற்சியை கைவிட்டேன். ஆனால் நான் இதையெல்லாம் காவியமாக ஆக்கவேண்டும் என்பதே எனக்கிடப்பட்டிருக்கும் ஆணை என்று மட்டும் தெளிவு கொண்டிருக்கிறேன்.”
மாணவர்கள் அனைவரும் ஊக்கமடைந்தனர். வியாசர் தன் காவியத்தை எழுதத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் சரஸ்வதி யாமத்திலேயே அவர் நூறு செய்யுட்களை சொன்னார். அவரது மாணவர்கள் அவற்றை எழுதிக்கொண்டார்கள். அன்றே அவற்றை அவர்கள் மனப்பாடம் செய்துகொண்டார்கள். வியாசர் எஞ்சிய பொழுதெல்லாம் முற்றிலும் அமைதியிலாழ்ந்து தனித்து அமர்ந்திருந்தார். தொலைவிலிருந்து பார்க்கையில் அவர் உடலிலும் முகத்திலும் அக்காவியம் நிகழ்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. அதை மாணவர்கள் மரங்களின் மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். காவியதேவர்கள் அவரை ஆட்கொண்டிருக்கிறார்கள் என்றனர். அவர் கைதொட்டால் செடிகளில் மலர்கள் மலர்ந்தன, கூழாங்கற்கள் வண்ணம் கொண்டன, புழுக்கள் சிறகு கொண்டு வண்ணத்துப் பூச்சிகளாக மாறின என்று சொல்லிக்கொண்டார்கள்.
ஆனால் வியாசர் நிழல்களால் சூழப்பட்டிருந்தார் என்பதை ரோமஹர்ஷ்ணன் கண்டான். அவரைச் சுற்றி எப்போதுமே ஒன்றுக்கும் மேற்பட்ட நிழல்கள் இருந்தன. அவை அவருடைய உடலில் இருந்து விடுபட்டு தன்னியல்பாக அசைந்தன. அவர்மேல் வளைந்து அவரை தழுவிக் கொள்பவை போலவும், அவர் செவிகளில் பேசுபவை போலவும் தெரிந்தன. அவற்றை அவர் விலக்க முற்பட்டார். சிலசமயம் சீற்றத்துடன் அவற்றை அடித்து விரட்ட முயன்றார். பலசமயம் முழுமையாகவே தன்னை அவற்றிடம் ஒப்படைத்துவிட்டு துயரம் நிறைந்த முகத்துடன் அமர்ந்திருந்தார். அவருடைய உதடுகள் அசைந்தபடியே இருந்தன. அவர் தூங்கும்போதும் அவை அசைந்தன. ஒரு முறை அவர் தூங்கும் அறையில் அருகே அமர்ந்திருந்த ரோமஹர்ஷணன் அவர் சொன்ன ஒரு சொல்லைத் தெளிவாகவே கேட்டான். அது பைசாசிக மொழியில் அமைந்திருந்தது.
அந்தக் காவியத்தை இயற்றி முடிக்க அவருக்கு நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆயின. அவர் தன் நூற்றியிருபதாவது வயதில் அக்காவியத்துடன் ஜனமேஜயனின் சபைக்குச் சென்றார். அங்கே அந்தக் காவியம் சான்றோர்கள், அறிஞர்கள் கூடிய சபையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. ஏழாண்டுக்காலம் தொடர்ச்சியாக அந்த காவியம் அங்கே வாசிக்கப்பட்டு அவை முன் வைக்கப்பட்டது. அதன் மீது விவாதங்கள் நடைபெற்றன.
துரியோதனனின் அடங்காத மண்மீதான வெறி, பண்டவர்களின் உரிமை, பதினான்கு ஆண்டுகள் அவர்கள் காடுகளில் அலைந்தது, கால்கடுக்க தூது சென்ற யாதவ மன்னன் கிருஷ்ணனின் பணிகள், அவை ஒவ்வொன்றும் வீணாகி போர் சூழ்ந்து வந்தது என அவருடைய காவியம் விரிந்துகொண்டே சென்றது. ’மழைமுகிலை புயல்காற்று சுமந்து வரும்போது சுவர்கள் கட்டி தடுக்கமுடியுமா என்ன?’ என்று வியாசரின் காவியம் கேட்டது. பல்லாயிரம் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தங்களுக்குரிய பிறப்புநியாயங்கள் கொண்டிருந்தன. தங்களுக்குரிய பாதைகளும் கொண்டிருந்தன. ஆனால் அவை தெய்வ ஆணையை ஏற்றவை போல இணைந்து, ஒன்றையொன்று செலுத்திக்கொண்டு, ஒற்றைப் பாதையென்றாகிப் போரை நோக்கிச் சென்றன.
“எவர் கையில் எவர் இறப்பார் என்றுகூட முடிவாகியிருந்தது. ஒவ்வொருவரும் பிறப்பதற்கு முன்னரே அவர்கள் அப்பிறவியில் ஆற்றவேண்டியது என்ன என்பதை பெற்றோரும் குலமும் முடிவுசெய்துவிட்டிருந்தன. அதை நிகழ்த்துவது மட்டுமே ஒவ்வொருவருக்கும் செய்யக்கூடுவதாக இருந்தது” என்றது அக்காவியம். களத்தில் பிதாமகர் தன் கைகளால் பேரர்களைக் கொன்று குவித்தார். தந்தையாகிய பீமனின் கைகளால் தனையர்களாகிய இளங்கௌரவர்கள் இறந்தனர். உடன்பிறந்தார் உடன்பிறந்தாரைக் கொன்று வெற்றிகொண்டாடினர். ஆசிரியர்களை மாணவர்கள் கொன்றனர். மதிப்புக்குரிய முதியவர்களின் தலையை வெட்டி பந்தாக விளையாடினர்.
எந்தப் போர்க்காவியமும் இறுதியில் பெரும் புலம்பலாக ஆகிவிடுகிறது. கண்ணீருடன் வியாசமகாகாவியம் அரற்றியது ’போர்நெறிகள் முதலில் மறைந்தன. பின்னர் அறநெறிகள் அழிந்தன. இறுதியாக மானுடநெறியும் சிதைந்தது. துயின்று கொண்டிருந்த இளஞ்சிறுவர் கூடாரங்களோடு கொளுத்தப்பட்டனர். தோற்றவர்கள் நிலத்தை இழந்தனர், வென்றவர்கள் பெரும்பழியை ஈட்டிக்கொண்டனர். எந்த நிலத்தின்பொருட்டு போரிட்டு ரத்தம் சிந்தினார்களோ அந்த நிலத்தை கைவிட்டுவிட்டு பாண்டவர்கள் காட்டுக்குச் சென்றனர். ஒன்றும் மிஞ்சவில்லை, கண்ணீரும் வஞ்சமும் கதைகளும் தவிர.’
ஒவ்வொரு நிகழ்வுக்கும் அவையில் கொந்தளிப்பு எழுந்தது. பாண்டவர்களின் அரக்கு மாளிகை கொளுத்தப்பட்டபோது. துருபதனின் அவையில் இருந்து கர்ணன் சிறுமையுடன் இறங்கி விலகியபோது. ஆனால் வியாசர் திரௌபதி அவையில் சிறுமை செய்யப்பட்டதை விவரித்தபோது பலர் சீற்றத்துடனும் தவிப்புடனும் எழுந்து நின்றுவிட்டார்கள். “மண்ணையும் பெண்ணையும் போற்றுபவர்கள் வாழ்வார்கள். உடைமை கொள்பவர்கள் அழிவார்கள்” என்ற வரியை அவர் சொல்லி முடித்ததும் அறிஞரான கௌதமர் எழுந்து “அரசன் மண்ணை உரிமை கொள்ளவேண்டும் என்றுதான் தொன்மையான நெறிநூல்கள் சொல்கின்றன” என்றார்.
“அந்த நெறிநூல்களை அகற்றவேண்டிய காலம் வந்துவிட்டது. அழியாத வேதச் சொல் ’மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:’ என்றே சொல்கிறது” என்று வியாசர் சொன்னார்.
சபையிலிருந்து வெவ்வேறு குரல்கள் எழுந்து வந்தன. அந்த கதைத்தருணம் பல்வேறு வகையில் அவர்கள் கேட்டும், பேசியும் வந்தது என்பதனால் அனைவருக்கும் சொல்வதற்கு ஏதேனும் இருந்தது. முதியவரும், தொன்மையான பரத்வாஜ குருமரபைச் சேர்ந்தவருமான அக்னிவர்ண பரத்வாஜர் எழுந்ததும் அனைவரும் அமைதியடைந்தார்க்ள்.
பரத்வாஜர் “இவை நடந்து நீண்டகாலம் ஆகிறது. இப்போது இவை நினைவுகள் மட்டுமே. கடந்தகாலத்தில் இருந்து நாம் எவர் செய்தது சரி, எவர் செய்தது பிழை என்று தேடக்கூடாது. நாம் தேடவேண்டியது இன்றைய நமது வாழ்க்கைக்கு நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்பதைப்பற்றி மட்டுமே” என்றார். “வியாசருக்கு நான் சொல்லிக் கொள்ளவேண்டியது இதுதான். இந்தக் கடந்தகாலப் பேரழிவை நாம் பார்க்கும்போது இன்று நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முதன்மையான ஒன்று இருப்பதை ஏன் மறந்துவிடுகிறோம்? ஏன் அதைச் சங்கடமான ஒன்றாக எண்ணி நமக்குள் மறைத்துக் கொள்கிறோம்?”
அந்த சபையில் இருந்த அனைவருக்கும் அவர் சொல்லப்போவது என்ன என்று தெரிந்திருந்தது என்பதை அந்த அமைதி காட்டியது
“இன்று அனைவரும் அதை உணர்ந்திருக்கின்றனர். அதனாலேயே புதிய நெறிகளைச் சொல்லும் புதிய ஸ்மிருதிகளும் உருவாகியிருக்கின்றன” என்றார் பரத்வாஜர். “ஆனால் இந்தக் காவியம் அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை… ஏன்?”
“நீங்கள் சொல்லவந்ததைச் சொல்லலாம் பரத்வாஜரே” என்றார் வியாசர்.
“இரண்டு பெண்களின் அடங்காக் காமம் அல்லவா இத்தனை அழிவுக்கும் காரணம்? ஒருத்தி தீ என்றால் இன்னொருத்தி காற்று. இருவரும் கட்டற்றவர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் தூண்டி வளர்த்தனர். அவர்களின் வம்சத்தவர் இங்கே அரசுவீற்றிருக்கிறார்கள் என்பதனால் அவர்கள் கற்புநெறியைக் கடந்தவர்கள் என்பதை நாம் மறக்கவேண்டியதில்லை. ஒருத்திக்கு ஏழு கணவர்கள். உலகம் அறிந்த கணவனிடமிருந்து அவள் குழந்தை பெறவில்லை, உலகமறியாத ஏழுபேரிடமிருந்து குழந்தை பெற்றாள். இன்னொருத்திக்கு ஐந்து கணவர்கள், ஆனால் உலகம் அறியாத ஆறாவது கணவனை அவள் உள்ளத்தில் வைத்திருந்தாள்… அவர்கள்தான் பேரழிவை உருவாக்கியவர்கள். அவர்களின் கட்டற்ற தன்மையால்தான் அவர்களின் குலம் போரிட்டு அழிந்தது. குருக்ஷேத்திரமே ரத்தத்தால் நனைந்தது”
“பெண்ணின் காமம் கட்டுக்குள் வைக்கப்பட்டலொழிய அழிவைத் தடுக்கமுடியாது” என்று தொடர்ந்து பரத்வாஜர் சொன்னார். “பெண்ணும், பொன்னும், மண்ணும் உரிய காவலுடன் மட்டுமே இருந்தாகவேண்டும். அவை எவருடையவை என்பது வகுக்கப்பட்டிருக்கவேண்டும். ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ரியமர்ஹதி. பெண்ணுக்கு சுதந்திரத்திற்கான தகுதி இல்லை. நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இது ஒன்றே. இதைச் சொல்லாததனால் இந்தக் காவியம் பொய்யானது…”
சபையில் இருந்து எழுந்த கூட்டமான ஏற்புக்குரல்களை வியாசர் கேட்டார். அவர் எழுந்து கைகூப்பியபடி பலமுறை பேசமுயன்றபோதும் சபை அமைதியடையவில்லை. இறுதியாக ஜனமேஜயன் கைதூக்கியபோது அமைதி திரும்பியது.
வியாசர் “நான் இதை மறுக்கக் கூடாது. நூலாசிரியன் இதில் சொல்ல ஒன்றுமில்லை. இதைப் பற்றி என் மாணவர்கள் விளக்கட்டும்” என்று சொல்லி வைசம்பாயனை நோக்கி கைகாட்டினார்.
வைசம்பாயனன் எழுந்து “தர்மசாஸ்திரங்களின்படி, எந்நிலையிலும் தன் முன்னோரைக் கண்காணிக்கவும் மதிப்பிடவும் எவருக்கும் உரிமை இல்லை. தன் காலகட்டத்திற்குரிய நெறிகளை ஒவ்வொருவரும் தாங்களே வகுக்கலாம். ஆனால் அதைக்கொண்டு முன்னோரை ஆராயக்கூடாது. முன்னோர் வாழ்வது அவர்களுக்குரிய காலத்தில் என்பதை மறக்கவேண்டியதில்லை” என்றான்.
அடுத்ததாக எழுந்த ஜைமினி “காவியாலங்கார சாஸ்திரங்களின்படி காவியம் தனக்கான விதிகளின்படித்தான் இயங்கமுடியும். நிகழ்ந்தது என்ன என்று அது சொல்லும். அதற்கான யுக்திகளை அதுவே உருவாக்கிக் கொள்ளும். காவியத்திலிருந்து நெறிகளை அந்தந்த காலத்திற்கு உரியவகையில் உருவாக்கிக்கொள்வது வழிவழியாக வரும் தலைமுறைகளின் பணி. இவை நிகழ்ந்தவை, இவ்வாறே நிகழ்ந்தவை, இதை மட்டுமே காவிய ஆசிரியன் சொல்லமுடியும்” என்றான்.
சுமந்து “நியாயசாஸ்திரத்தின்படி அவர்கள் இருவரும் அக்னியும் காற்றும். அந்த சக்திகளின் இயல்பையே அவர்கள் வெளிக்காட்ட முடியும். அதை காவிய ஆசிரியன் மாற்றமுடியாது” என்றான்.
அத்ரி “காவியமீமாம்சையின் படி ஒரு காவியத்தின் நாயகர்களும் நாயகிகளும் அந்தச் சூழலாலும், அதன் பிற கதைமாந்தரின் இயல்புகளாலும், அந்நிகழ்வுகளின் இணைப்புகளாலும்தான் தங்கள் இயல்பை பெறுகிறார்கள். காவியகதியே கதாபாத்திரங்களின் விதி. தங்களுக்கென மாறாத இயல்புகள் கொண்ட காவியநாயகியர், நாயகர்கள் இருக்கமுடியாது” என்றான்.
வியாசர் ரோமஹர்ஷணனிடம் கைகாட்ட அவன் எழுந்து “உலகவழக்கப்படி, எது ஆற்றலுள்ளதோ அது கட்டற்றதும்கூட. ஆற்றலே வெல்லும், நீடிக்கும். ஆற்றல் கட்டுப்படுத்தப்படும் என்றால் அச்சமூகம் தன்னைச் சிறையிடுகின்றது என்றே பொருள். அன்னையரின் காமமும் குரோதமும் மோகமும் அவர்களின் உயிரின் ஆற்றல்.” என்றான்.
சபையிலிருந்து அவன் சொற்களை எதிர்க்கும் ஒலிகள் எழுந்தன. கைகளை நீட்டியபடி சிலர் எழுந்தார்கள். ஜனமேஜயன் கையசைத்து அவர்களை அமரும்படி ஆணையிட்டான்.
ரோமஹர்ஷ்ணன் “பிறநான்கு பூதங்களுக்கும் அடிப்படையானது பிருத்வி. நிலத்தின்மேல்தான் நீர் ஓடுகிறது, அக்னி வளர்கிறது, காற்று வீசுகிறது, வானமும் நிலத்தால் அளவிடப்பட்டாலொழிய மனிதர்களுடன் தொடர்பு கொள்வதில்லை” என்றான். “அழுக்கென்று நாம் நினைப்பவை எவையும் மண்ணுக்கு அழுக்கல்ல. அவை மண்ணை அடையும்போது அமுதமாகிந்றன. தாவரங்களில் அவை உயிராகி, தளிரும் மலரும் தேனும் காயும் கனியும் ஆகின்றன. மண்ணையே அழுக்கு என நினைப்பவர்களும் கூட அதில் விளைவனவற்றையே உண்ணவேண்டும்” என்றான்.
பரத்வாஜர் வியாசரிடம் “உங்களுடைய இந்த ஐந்தாவது மாணவன் எந்தக் குலத்தைச் சேர்ந்தவன்?” என்றார்.
“இவன் வால்மீகியின் மரபைச் சேர்ந்த ரோமஹர்ஷணரின் வழிவந்தவன்…”
“நிஷாதனுக்குரிய சொற்களைச் சொன்னான். அவற்றுடன் நான் விவாதிக்க விரும்பவில்லை” என்றார் பரத்வாஜர். ”ஆனால் ஒரு காவியம் தனக்கான நெறிகளை தானே உருவாக்கிக் கொள்கிறது என்பதில் எனக்கும் ஏற்புதான். இது காவியம், நெறிநூல் அல்ல என்று கொண்டால் மறுப்பில்லை” என்றார்.
சபை அதை ஏற்றுக்கொண்டது. அந்த சபையில் ஜய என்னும் வியாசரின் காவியம் அரங்கேறி நிறைவுற்ற விழா பன்னிருநாட்கள் நடைபெற்றது. பல்லாயிரம்பேர் வந்து விருந்துண்டார்கள். அந்நூலின் நிகழ்வுகள் கலைகளாக நடிக்கப்பட்டன, பாடல்களாக பாடப்பட்டன. அக்காவியத்தைக் கற்பிக்க நான்கு கல்விச்சாலைகள் அமைக்கப்பட்டு வைசம்பாயனும், அத்ரியும், சுமந்துவும் ,ஜைமினியும் அவற்றுக்குத் தலைமையேற்றனர். அவற்றில் நூற்றுக்கணக்கான கவிஞர்களும் சூதர்களும் இணைந்து பாடம் கேட்டார்கள். பாரதநிலம் முழுக்க அச்செய்தி பரவி நான்கு திசைகளில் இருந்தும் மாணவர்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.
வியாசர் விழா முடிந்ததும் தன் மகன் தங்கிய சுகவனத்திற்கே திரும்பிச் சென்றார். அங்கே சென்ற சிலநாட்களிலேயே நோயுற்று நினைவழிந்தார். ஏழாண்டுகளுக்குப் பின் ஒரு வைகாசிமாதப் பௌர்ணமி நாளில் விண்புகுந்தார். அவர் மறைந்த நாளை அவரை தங்கள் முதல் ஆசிரியராக ஏற்றுக்கொண்ட பல்லாயிரம் பேர் பாரத நிலம் முழுக்க ஆசிரியரை வணங்கும் நாளாக கொண்டாடத் தொடங்கினார்கள்.
”ரோமஹர்ஷணர் ஜனமேஜயனின் சபையில் இருந்து மறைந்துபோனார். அவர் தண்டகாரண்யத்தில் ஒரு சிறு கல்விச்சாலையை அமைத்தார். அங்கே அவருக்கு மாணவர்கள் அமைந்தார்கள். அவர் வியாசரின் காவியத்தை அங்கே மாணவர்களுக்குக் கற்பித்தார்” என்று கானபூதி சொன்னது. ”நீ கேட்ட கேள்விக்கு பதிலை நான் சொல்லிவிட்டேன். அதையே உன்னிடம் கேள்வியாக நான் கேட்கிறேன்”
நான் புன்னகைத்து “கேள்” என்றேன்.
“சொல், நான் சொன்ன கதையில் எந்த இடத்தில் குணாட்யர் சீற்றமடைந்து உன்னைப் போல கதை கேட்டது போதும் என்று எழுந்து சென்றார்?” என்றது கானபூதி. “எந்தக் கேள்வியைக் கேட்டபடி அவர் திரும்பவும் வந்தார்”
“வியாசருக்கு பரத்வாஜர் சொன்ன மறுப்பின்போது” என்று ஆபிசாரன் என் செவியில் சொன்னது.
நான் அதனிடம் “அல்ல” என்றபின் கானபூதியிடம் “வியாசர் தன் பிற நான்கு மாணவர்களுக்கும் ரோமஹர்ஷணருக்குச் சமானமான இடம் அளித்தபோது.” என்று சொன்னேன். “அதுதான் வியாசரிடம் இருந்த பிழை. அந்தப் பிழையால்தான் அவருடைய காவியம் எட்டுத்திசைகளுக்கும் இழுக்கப்பட்டு சிதைக்கப்பட்டது.”
“ஆம், உண்மை” என்றது கானபூதி “ஆனால் அதனால்தான் அது பாரதம் என்றே பெயர் பெற்று அனைவருக்கும் உரியதாக நீடித்தது. சொல், இரண்டாவது கேள்விக்கான விடை என்ன?”
“வியாசரை மீண்டும் ரோமஹர்ஷணர் சந்தித்தாரா என்ற கேள்வியுடன் அவர் திரும்ப வந்தார்” என்றேன். “தன் பிழையை வியாசர் இறுதியிலாவது உணர்ந்தாரா என்றுதான் குணாட்யர் அறிய விரும்பியிருப்பார்”
“ஆமாம். சரியான பதில்” என்று சொன்ன கானபூதி என் தோள்மேல் கைபோட்டு அணைத்துக்கொண்டு “நீ இனியவன், உனக்குக் கதை சொல்வது மகிழ்ச்சியானது” என்றது.
“சொல், குணாட்யரின் கேள்விக்கு நீ என்ன சொன்னாய்?” என்று நான் கேட்டேன்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
