Jeyamohan's Blog, page 33

August 22, 2025

விக்டோரியா அறியாதது…

போலந்தைச் சேர்ந்த ’விளாகர்’ (காட்சிப்பதிவர்?) ஆன விக்டோரியா என்பவர் இந்தியாவுக்கு ஒரு ‘சோலோ டிரிப்’ வந்துவிட்டு இன்ஸ்டாவில் தொடர் பதிவுகள் போட்டிருந்தார். அதை மலையாள கௌமுதி இதழ் எடுத்து ஒரு கட்டுரையாக வெளியிட்டிருந்தது. வெவ்வேறு படங்களுக்குக் கீழே விக்டோரியா சுருக்கமான குறிப்புகளை எழுதியிருந்தார்.

விக்டோரியாவுக்கு இந்தியாவிலுள்ள பேருந்து,ரயில் பயணங்கள் வசதியானவையாக தோன்றின. இந்தியாவில் இமைய மலையடிவாரங்களும் தெற்கே உள்ள பசுமைமாறாக் காடுகளும் பிடித்திருந்தன. உணவில் பெரிய சிக்கல் இல்லை. ஆனால் ‘ஒருபோதும் இந்தியாவில் ஒரு தனிநபர் பயணத்தை நான் பரிந்துரைக்க மாட்டேன்’ என்று சொல்லியிருந்தார்.

அவருடைய முதல் ஒவ்வாமை இங்கே ஆட்டோ, டாக்சி ஓட்டுபவர்கள் மற்றும் வழிகாட்டிகளின் நடத்தை. அவர்கள் மொய்த்துக்கொண்டார்கள், மிரட்டினார்கள், வசைபாடினார்கள். பெரும்பாலும் வழிப்பறி மனநிலையிலேயே இருந்தார்கள். பிச்சைக்காரர்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு தெரியவில்லை. பிச்சைக்காரர்களும் வசைபாடினார்கள். தனியாக வந்த பெண் என தெரிந்ததும் பாலியல் மீறலிலும் ஈடுபட்டார்கள்.

அதைவிட விக்டோரியாவை கசப்படையச் செய்தது, இங்குள்ள அசுத்தம். அத்தனை நீர்நிலைகளும் குப்பைமலைகளுடன், கெட்டுப்போய் நாற்றமடிக்கும் நீருடன் இருந்தன. மேலும் மேலும் குப்பைகளைக் கொண்டுசென்று நீர்நிலைகளில் கொட்டிக்கொண்டிருந்தார்கள். நடுச்சாலைகளில் குப்பைகள் குவிந்து கிடந்தன. படித்தவர்கள் கூட குப்பைகளை கண்டபடி வீசினார்கள். சாக்கடைகள் அடைத்து சாலைகளிலெங்கும் அதன் நாற்றம். அதைப்பற்றி கவலையே படாமால் அதன்மேல் நடந்தார்கள்.

இந்தியா இரண்டு பகுதிகளாலானது என்று விக்டோரியா சொன்னார். உயர்குடிகள் வாழும் ஓர் உலகம் உண்டு. அங்கே அழுக்கும் சீரழிவும் ஏதுமில்லை. தூய்மையானது, ஆடம்பரமானது. இன்னொன்று குப்பைமலைகள் நடுவே அமைந்தது. முதல் உலகம் மிகச்செலவேறியது என்றார்.

அதைப்பற்றி விக்டோரியாவின் குறிப்புக்கு மக்கள் ஆற்றிய எதிர்வினை பற்றித்தான் எனக்கு அக்கறை. எதிர்வினைகள் இரண்டுவகை. ஒன்று அவரை வசைபாடுவது. இரண்டு அவருக்கு ஆலோசனை சொல்வது. வசைபாடுபவர்கள் அவர் ஐரோப்பிய மேட்டிமைவாதத்தை முன்வைக்கிறார் என்றனர். ஆலோசனை சொல்பவர்கள் ‘இந்தியப் பண்பாடு தொன்மையானது. ஐரோப்பியர் உடைகளை அணிய தொடங்கு முன்னரே வேதங்கள் எழுதப்பட்டுவிட்டன’ என்றனர். ‘இந்தியாவில் மாபெரும் கலைச்செல்வங்கள் உள்ளன. அவற்றைப் பாருங்கள்’ என்றனர். ‘இந்திய மக்கள் நல்லவர்கள், விருந்தோம்புபவர்கள்’ என்றனர். ‘இந்தியாவில் பாலியல் ஒழுக்கம் உண்டு. ஐரோப்பா போல அல்ல’ என்றனர். இப்படி பல.

நமக்கே உரிய இரண்டு தொழில்நுட்பங்களை விக்டோரியா புரிந்துகொள்ளவில்லை. அந்த எதிர்வினைகள் அந்த இரண்டு தொழில்நுட்பத்தின் சொல்வடிவங்கள் மட்டுமே. ஒன்று திரைத்தொழில்நுட்பம். இதை சுவர்த்தொழில்நுட்பம் என்றும் சொல்வார்கள். அதாவது சாக்கடை, குப்பை, அழுக்கு ஆகியவற்றை ஆள்வோர், விருந்தினர் கண்ணுக்குப் படாமல் திரையோ, சுவரோ கட்டி மறைப்பது. டெல்லியில் மோடிஜியும் இங்கே ஸ்டாலினப்பாவும் அதைச் செய்கிறார்கள் என நாமறிந்ததே.

இரண்டாவது தொழில்நுட்பம் செண்ட் தொழில்நுட்பம் என அறியப்பட்டாலும் நடைமுறையில் அது பிளீச்சிங் பவுடர் தொழில்நுட்பமே. அதன்படி மேற்படி இடங்களின் மேல் பிளீச்சிங் பவுடரை கொட்டுவது. பிளீச்சிங் பவுடராலேயே ஒரு கோடு வரைந்து அதற்கு அப்பால் ‘நாகரீகத்திற்குள்’ வராது என அறிவித்துவிடுவது. ஒரு விஐபி வருகிறார் என்றால் வழியெல்லாம் பிளீச்சிங் பௌடர் வட்டங்கள் இருக்கும். முன்பு கோடு போட்டனர்க். அது செலவேறியது என்று இப்போது கூடையில் பிளீச்சிங் பௌடரை போட்டு வைத்து வைத்து எடுக்கிறோம். அந்த பிளீச்சிங் பௌடரிலும் கலப்படம், பெரும்பகுதி சுண்ணாம்புத்தூள்தான். இதன் வழியாக நாம் நம் கலாச்சாரத்தையே பிளீச்சிங் செய்து வருகிறோம்.

போலந்துக்காரர்கள் இப்படி இந்தியாவுக்கு அடிக்கடி வருவது நல்லது அல்ல. பாருக்குள்ளே நல்ல நமது நாடுதான் உலகிலேயே திறந்தவெளிக் கழிப்பிடம் உடைய ஒரே நிலம். சால்மனெல்லாவின் சரணாலயம். போலந்துக்காரிகளின் கால்கள் வழியாக சால்மனெல்லா அங்கே சென்று குளிருக்கும் தாக்குப்பிடிக்க ஆரம்பித்துவிட்டால் வம்பு. இதைத்தான் நம் மகாகவி  ’வெளித்திசை மிலேச்சர் பாதமும் பொறுப்பளோ பாரத தேவி!’ என்று பாடியிருக்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2025 11:35

எஸ்.சுரேஷ்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதையாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். தொடர்ந்து கட்டுரைகள், சிறுகதைகள் எழுதிவருகிறார்.

எஸ்.சுரேஷ் எஸ்.சுரேஷ் எஸ்.சுரேஷ் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2025 11:32

தமிழ்விக்கி- தூரன் விருது, கடிதங்கள்

தமிழ் விக்கி- தூரன் விழா உரைகள் தமிழ்விக்கி-தூரன் விருது விழா -2025 தமிழ்விக்கி தூரன் விழா 2025 (தொடர்ச்சி) ஈரோட்டின் இசைப்பொழிவு

 

அன்புள்ள ஜெ,

வேதாசலம் அவர்கள் தன் உரையில் ஒரு விஷயம் போகிறபோக்கில் சொன்னார். இந்த விருதை ஏற்கக்கூடாது என்று அவரிடம் எவரோ சொன்னார்களாம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராம் ரமேஷை விஷ்ணுபுரம் விருதுக்கு அழைத்தபோதும் சிலர் தடுத்தார்கள் என்று அவரே மேடையில் சொன்னார். பூமணிக்கு விருது வழங்கியபோது அதை ஏற்கவேண்டாம் என்று அவரிடம் சொன்னார்கள் என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள்.

தமிழ்விக்கிக்கு வந்த இடையூறுகளையும், அதைக் கடந்து அது நிலைகொண்டதையும் பற்றி எழுதியிருந்தீர்கள்.தமிழ்விக்கியின் பணிகள், விஷ்ணுபுரம் அமைப்பின் பணிகள் மிக வெளிப்படையாக உள்ளன. இந்த பெரும்பணிகளை இன்று வேறு எவருமே செய்வதாகவும் தெரியவில்லை. இருந்தாலும் ஏன் இதை தடுக்கவேண்டும் என நினைக்கிறார்கள் என்பது புரியவில்லை. மிகுந்த பெருந்தன்மையுடன் தடுப்பவர்களும் இணைந்து செயல்படவேண்டும் என்று நீங்கள் எழுதியதை வாசித்தேன். 

இன்றைக்கும் இணையத்தில் கசப்புகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். உங்களுடன் இணைந்து செயல்படும் அனைவரையும் அடிமைகள், அறிவிலாத கூட்டம் என்றெல்லாம் இழிவுசெய்கிறார்கள். அதன்வழியாக அவர்கள் உங்களிடமிருந்து விலகிச்சென்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்காகத் திட்டமிட்டு அந்தவகையான ஏளனத்தைச் செய்துகொண்டே இருக்கிறார்கள்.

இந்த வகையான வசைகளைக் கொட்டும்கும்பலை பார்த்தால் இவர்களெல்லாம் யார் என்ற திகைப்பு உருவாகிறது. ஒரு நல்ல படைப்பை எழுதியவர்கூட அக்கும்பலில் இல்லை. வெறும் வீணர்கூட்டம். ஆனால் இந்த வீணர்கூட்டத்தை எதிர்த்து, கடந்துதான் இங்கே எல்லா நல்ல செயல்களும் நடைபெற்றுள்ளன என்றும் நினைக்கிறேன். 

சாந்தகுமார் ஜி

அன்புள்ள ஜெ,

சென்ற சில ஆண்டுகளாக தமிழ்விக்கி, தூரன் விருது, விஷ்ணுபுரம் விருது ஆகியவை பற்றி இருந்து வந்த எரிச்சல்கள் அடங்கிவிட்டன என்று தெரிகிறது. யாராவது சிலர் எதையாவது சொல்லி பொருமிக்கொண்டே இருப்பதுதான் வழக்கம். இப்போது என் பார்வைக்கு ஒன்றும் வரவில்லை. கண்கூடாக இந்த அமைப்பும் செயல்பாடுகளும் வளர்ந்துவிட்டன. சாதனைகள் கண்முன் நின்றிருக்கின்றன. இனி புலம்பிப்பயனில்லை என நினைக்கிறார்கள் என நினைக்கிறேன். பெரும்பாலானவர்கள் இப்போது இந்த விருது செய்திகளை அப்படியே கண்டும் காணாமலும் போய்விடுவதைத்தான் பார்க்கமுடிகிறது. ஆழமான அமைதியே காணக்கிடைக்கிறது. அதுவே வெற்றிக்கான அடையாளம்தான்.

கே.ராஜேஸ்வர்.

 

படங்கள் மோகன் தனிஷ்க்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2025 11:31

An extraordinary start

நம் குழந்தைகளின் அகவுலகம் கட்டுரை வாசித்தேன். நம் குழந்தைகளின் அகவுலகை தீர்மானிப்பது ஆசிரியர்களோ.கல்வி நிறுவனங்களோ அல்ல.மாறாக பெற்றோர்கள்.தனியார் கல்வி நிறுவனங்களில் பணத்தை கட்டிக்கொண்டு என் குழந்தைக்கு தேவையான கல்வியை கொடு என்பதுதான் இன்று நடக்கிறது. இடையில் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்வி சம்பந்தமான மென் பொருட்களை உருவாக்கி அதை கல்வி முதலாளிகளிடம் சந்தைப்படுத்தி வருகிறது. குழந்தைகளின் அகம், கடிதம்

 

The class on Wagner in Tamil Nadu is likely the first of its kind, and I am surprised that nearly 25 people have paid to attend it. It truly challenges the long-standing apathy of Tamil intellectuals.

An extraordinary start

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2025 11:30

August 21, 2025

இந்து முல்லாக்களும் வைரமுத்துவும்

ஶ்ரீரங்கம் ஜீயர் ஒருவர் வைரமுத்துவை வெளியே நடமாட அனுமதிக்கக்கூடாது என அறிவித்திருக்கிறார். (ராமரை இழிவாகப் பேசிய வைரமுத்துவை நடமாட விடக்கூடாது: மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை)இவர் இந்துமதத்தின் தலைவர் அல்ல. இந்து நம்பிக்கையாளர்களின் பொதுவான பிரதிநிதி கூட அல்ல.

தமிழ்நாட்டில் வைணவப்பிராமணர்கள் (ஐயங்கார்கள்) ஒரு மிகச்சிறுபான்மை. அவர்களில் வடகலை, தென்கலை என இரு பிரிவு, அவற்றுக்குள் பல பிரிவுகள். அவற்றில் ஒரு பிரிவின் ஜீயர் இவர். ஒரு சாதிக்குறுங்குழு தலைவர், அவ்வளவுதான். இவருடைய மடத்துக்கு இவருடைய சாதியினர் தவிர வேறு எவர் சென்றாலும் இழிவுபடவேண்டியிருக்கும்.

அதிகம்போனால் ஆயிரம்பேர் இவருடைய மடத்தில் நம்பிக்கையாளர்களாக இருக்கலாம். இவர் இந்த வன்முறைப்பேச்சை எழுப்பியிருக்கிறார். இதற்குப் பின்னாலுள்ள எண்ணம் என்ன? மத்தியில் தங்களுக்குச் சாதகமான ஓர் அரசு உள்ளது என்னும் எண்ணமே முதலில். தமிழகத்தில் ஓர் அரசியல்கட்சி தனக்கு உதவிக்கு வரும் என்னும் நம்பிக்கை அடுத்து. அந்த அரசியல்கட்சி உருவாக்கும் பிரச்சாரத்துடன் இணைந்து தன் கீழ்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

‘இந்து முல்லாக்கள் உருவாக அனுமதிக்கலாகாது’ என நான் திரும்பத் திரும்ப பல ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஏனென்றால் வட இந்தியாவில் அவர்கள் உருவாகி ஆற்றல்பெற்றுள்ளனர். கேரளத்திலும் கர்நாடகத்திலும் அவர்கள் ஓங்கியுள்ளனர். தமிழகத்திலும் அவர்கள் நிலைகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ஜீயர் ஒரு வெறிகொண்ட இந்துப் பழமைவாதியின் குரலாக ஒலிக்கிறார். பத்தாண்டுகளுக்கு முன்புகூட இவர் இப்படிப் பேசியிருக்க மாட்டார். பேசினால் அதற்கு இந்த இடம் அமைந்திருக்காது.

இந்த இந்துமுல்லாக்கள் சுதந்திர சிந்தனைக்கு எதிரானவர்கள். முன்னோக்கிய எந்த வளர்ச்சிக்கும் எதிரானவர்கள். இவர்களை மீறித்தான் நாம் இன்று அடைந்துள்ள சமூகசுதந்திரம், பொருளியல் வளர்ச்சி, ஆன்மிக மலர்ச்சி ஆகியவற்றை அடைந்திருக்கிறோம். இவர்கள் மீண்டும் நம்மை இருளுக்குள் மூழ்கடிக்க விரும்புகிறார்கள்.

இவர்களைப் போன்றவர்களுக்கு எளிமையான மதப்பற்றால், அரசியல்நோக்கால் ஆதரவளித்த நாடுகள் அதன் மிகப்பெரிய விலையை அளித்துக்கொண்டிருக்கின்றன. அவை மதப்போரால் அழிந்து இடிபாடுகளாகக் கிடக்கின்றன. நாம் இப்போதுதான் மூன்றுவேளைச் சோறு சாப்பிட ஆரம்பித்துள்ளோம். இந்த வெறியர்களிடம் ஏதேனும் அதிகாரம் அளிக்கப்பட்டால் நம்மை அந்நிலைக்குக் கொண்டுசென்றுவிடுவார்கள்.

ஏனென்றால் இவர்களால் வெறியை மட்டுமே பரப்ப முடியும். இன்று வைரமுத்து மீது வன்முறையை ஏவும் இவர்கள் ஏதேனும் அதிகாரம் கிடைத்தால் அடுத்து வைணவத்திலேயே தங்கள் எதிர்க்குழுமேலும் அதே வன்முறையை ஏவுவார்கள். இன்று கீழ்த்தரமாக ஒருவரை ஒருவர் வசைபாடிக்கொள்ளும் இவர்கள் ஒருவரை ஒருவர் அழித்து நம்மையும் அழிப்பார்கள். எண்ணிப்பாருங்கள் இந்த வெறிக்கும்பல் நாளை இதே கொலைவெறியுடன் சைவர்களை தாக்கமாட்டார்களா? இங்கே சைவமும் வைணவமும் ஒன்றையொன்று மறுத்தும் விவாதித்தும்தானே வளர்ந்தன?

இந்த வெறி அடிப்படையில் இந்து மெய்ஞானத்துக்கு எதிரானது. இந்து ஞானம் மேல் நம்பிக்கை கொண்ட எவரும் இந்த வெறியை அருவருத்து ஒதுக்கியாகவேண்டும். இந்து மெய்யியல் என்பது எந்நிலையிலும் ஒற்றைப்படையான நம்பிக்கையாக, ஆசாரமாக இருந்ததில்லை. அது வெவ்வேறு கொள்கைகள் ஒன்றுடனொன்று முரண்பட்டு விவாதிப்பதன் வழியாக வளர்ந்தது. அந்த விவாதம் இந்தவகையான வெறியர்களால் அழிக்கப்படும் என்றால் இந்து மதம் அழியும். உறுதியான இந்துவாக, அத்வைதியாக, இந்தக் கீழ்மையை கண்டிக்கிறேன்.

எண்ணிப்பாருங்கள், சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு பிராமண கதாகாலட்சேபக்காரர் பிராமண மேட்டிமைவெறியுடன் பேசினார்.அனைத்து பிற தமிழ் இந்துக்களையும் இழிவுசெய்தார். அன்று இந்த இந்துமுல்லாக்கள் எங்கே சென்றனர்? அதை இவர்கள் மௌனத்தால் ஆதரித்தனர். இன்று கிளம்பி வருகிறார்கள். அன்று அந்த சாதிவெறியர் மேல் எவரும் இந்த வன்முறைக்கூச்சலை எழுப்பவில்லை. அப்படியென்றால் உண்மையில் இங்கே வெறியர்கள் எவர்? எதை வளரவிடுகிறோம்?

இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா?

எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம் 

இந்துமதமும் தரப்படுத்தலும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2025 11:35

‘ழ’ தேவநாதன்

அ. தேவநாதன், மக்களிடையே ழகர உச்சரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகப் பல கூட்டங்களை நடத்தினார். இதழ்களில் எழுதினார். ”‘ழ’கர ஒலியை எப்போது எல்லாத் தமிழர்களும் சரியாகப் பேசுகிறார்களோ, அப்போது தான் அது ’செம்மொழி’ ஆகும்” என்ற கருத்தைக் கொண்டிருந்தார். ழகரத்தைப் பிழையின்றிப் பேசவேண்டும் என்பதற்காக ஓர் அமைப்பைத் தோற்றுவித்து, இறுதிவரை அதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவராக அ. தேவநாதன் அறியப்படுகிறார்.

அ.தேவநாதன் அ.தேவநாதன் அ.தேவநாதன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2025 11:33

தமிழ்விக்கி- தூரன் விழா,கடிதம்

ள்

தமிழ் விக்கி- தூரன் விழா உரைகள் தமிழ்விக்கி-தூரன் விருது விழா -2025 தமிழ்விக்கி தூரன் விழா 2025 (தொடர்ச்சி) ஈரோட்டின் இசைப்பொழிவு

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

நான் தமிழ்விக்கி தூரன் விழாவுக்கு 16 காலை வந்திருந்தேன். 15 வரமுடியாத நிலை. அந்த கூடமே நிறைந்து சிரிப்பும் பேச்சும் அதிர்ந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அத்தனை இளைஞர்கள். அனைவருமே இலக்கியவாசகர்கள், அறிவுஜீவிகள் என்று அவர்கள் கேட்ட கேள்விகளில் இருந்து தெரிந்தது. ஷிண்டேயின் ஆய்வேட்டிலிருந்து வரை கேள்விகள் வந்துகொண்டே இருந்தன. இத்தனை அறிவார்ந்த விவாதம் நிகழும் ஒரு சபை இன்றைக்கு உண்மையில் தமிழகத்தில் எங்குமே இல்லை. எந்தக் கல்லூரியிலும் இல்லை என்று என் கல்லூரி அனுபவங்களில் இருந்தே சொல்லிவிடமுடியும்.

இங்கே வந்திருந்த எவருக்கும் எந்த கட்டாயமும் இல்லை என்பதுதான் வேறுபாடு. சொந்த அறிவுத்தாகத்தால் வந்தவர்கள். யாருக்கும் ஸ்காலர்ஷிப் இல்லை. பயணப்படியெல்லாம் இல்லை. சொந்தச்செலவில் வந்திருந்தார்கள். அவர்களிடமிருந்த அந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பார்த்து நானெல்லாம் இழந்திருந்த நம்பிக்கையை மீண்டும் அடைந்தேன். அங்கே வந்திருந்த ஆய்வாளர்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

திரு சுப்பராயலு அவர்களின் உரை மிக முக்கியமான ஒன்று. அந்த கூட்டத்தில் இருந்த ஆர்வத்தைப் பார்த்துத்தான் அவர் அதைச் சொல்லியிருக்கவேண்டும். வரலாற்றாய்விலே பரபரப்பான செய்திகளுக்கு இடமில்லை. வரலாற்றாய்வாளன் எந்தக் கண்டுபிடிப்புக்கும் முழுச்சொந்தம் கொண்டாடக்கூடாது. வரலாற்றாய்வில் அவசரத்துக்கே இடமில்லை.

கீழடி பற்றி செய்திகளை எல்லாம் அவர் சொன்னது நம மிகமிகக் கூர்ந்து கவனிக்கவேண்டிய விஷயம். இதையெல்லாம் இன்றைக்கு அவரைப்போன்ற ஒரு சூப்பர்சீனியர்தான் நமக்கெல்லாம் சொல்லமுடியும். இன்றைய அரசியல்சூழல் அப்படி. எல்லாப்பக்கமும் வரலாற்றுமோசடிகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் காலம் அல்லவா?

மிகச்சிறப்பான விழா. இப்படி ஒரு விழா வரலாற்றாய்வுக்கு நிகழ்வது என்பதே தமிழில் அரிது. அதிலும் விஐபிகளை கூட்டிவைத்து அவர்களின் உளறல்களைக் கொண்டாடிக்கொண்டு ஆய்வாளர்களை ஓரம்கட்டும் நிகழ்வுகளைக் கண்டு சலித்த எனக்கெல்லாம் உண்மையான ஆய்வாளர்கள் மட்டுமே முன்வைக்கப்பட்ட இந்த விழா இனிய அதிர்ச்சியாகவே இருந்தது.

இந்த விழாவில் ஒவ்வொரு எழுத்தாளராக வந்து ஆய்வாளர்களை கௌரவித்ததை ஓர் அரிய நிகழ்வாகவே பார்க்கிறேன். ஆய்வாளர்களின் நூல்களை எழுத்தாளர்கள் வாங்கிப்படிப்பதும் ஒரு பெரிய திருப்புமுனை. அதை நிகழ்த்திய உங்கள் அமைப்புக்கு நன்றி.

க.மயில்வாகனம்

அன்பிற்குரிய ஜெ

தூரன் விழாவன்று ஒலித்த இசையை நான் என் வாழ்க்கை முழுக்க மறக்கப்போவதில்லை. நாதச்வரத்தை நான் நாதத்துடன் கேட்டதே இல்லை. ஸ்வரத்தையும் கவனித்ததில்லை. என் வரையில் அது ஓசைதான். இசை அல்ல. மைக் இல்லாதபோது அந்த இசையின் தூய முழக்கத்தை கேட்டேன். கனவுலகில் இருப்பதுபோல் இருந்தது. சுவர்களெல்லாம் இசையாக ஆவதுபோல் இருந்தது. மகத்தான இசை. இசைக்கலைஞர்களை பாதம் பணிந்து வாழ்த்துகிறேன்.

ஜெயக்குமார் ராகவ்

 

படங்கள் மோகன் தனிஷ்க்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2025 11:31

கல்வி, செயற்கைநுண்ணறிவு- கடிதம்

கல்வியின் வருங்காலம் கல்வித்துறை பற்றி… இன்றைய கல்வியின் சிக்கல்கள் கல்வி, கடிதம்

வணக்கம் ஜெ,

இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். தங்களின் வலைத்தளத்தில் வரும் கட்டுரைகளை அவ்வப்போது வாசித்து வருகிறேன். அண்மையில் மிக நெருங்கிய ஒருவரின் மகள் படிக்கும் பள்ளியில் (அந்த ஊரின் புகழ் பெற்ற பள்ளிகளில் ஒன்று) நடந்த சம்பவம் இது.

நான்காம் வகுப்பு ஆங்கில பாடத்தில் creative writing என்ற பகுதிக்கு ஆசிரியர் மாணாக்கருக்குக் கொடுத்துள்ள வழிமுறை இது (வீட்டுப்பாடத்திற்காக).

மாணவர்களைப் பெற்றோரின் கைபேசியை வாங்கி அதில் ChatGPTயை பதிவிறக்கம் செய்து வீட்டுப்பாட தலைப்பைக் உள்ளீடாகக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அதில் வரும் பத்திகளை பார்த்து எழுதி வரும்படியும் கூறியிருக்கிறார்.

(பிள்ளைகள் சுயமாக எழுதினால் பிழைகள் அதிகமாக இருக்கிறதென்றும் ChatGPT பயன்படுத்தினால் அத்தனை பிழைகள் வராதென்றும், திருத்துவதற்கு எளிமையாக இருக்கும்  என்றும் அன்று வகுப்பில் கூறியிருக்கிறார்!)

நான் அறிவியலில் முனைவர் படிப்பில் உள்ளேன். இதைக் கேட்ட எனக்கு இதில் உள்ள hypocrisyயைக் கண்டு சிரிப்பும் பதற்றமும் ஏற்படுகிறது. ஆராய்ச்சித் துறையில் செயற்கை நுண்ணறிவை எந்த அளவிற்கு பயன்படுத்தலாம் என்பதைக் குறித்து அவ்வப்போது விவாதம் செய்பவர்கள் நாங்கள். இந்நிலையில் ஆரம்ப கல்வி நிலையங்களில் இவ்வாறு நடப்பது பயம் தருகிறது.

பள்ளிக்கல்வியில் இது போன்ற விஷயங்கள் நடப்பது சரியா தவறா என புரியவில்லை. தாங்கள் சமீபக்காலத்தில் கல்வியின் வருங்காலத்தைக் குறித்து எழுதி வருகிறீர்கள். இச்சூழ்நிலையில் இதைக்குறித்த தங்களது கருத்து என்ன?

நன்றி,

மனீஷ.

அன்புள்ள மனீஷ்,

இது ஏற்கனவே நடந்துவந்த ஒன்றின் நீட்சிதான். சுயமாக எழுதும் குழந்தைகளை விட மனப்பாடம் செய்து அச்சு அசலாக எழுதும் குழந்தைகள் அதிக மதிப்பெண் பெறுவதாகவே நம் கல்விமுறை உள்ளது. ஏன்? விடை மதிப்பிடுவது எளிது. முழுமையாக வாசிக்கவேண்டியதில்லை. விளைவாக சுயசிந்தனையே இல்லாமல் நம் குழந்தைகள் பள்ளிகளில் பயில்கின்றனர்.

‘அசைன்மெண்ட்’ போன்றவற்றில் இணையத்தில் இருந்து வெட்டி ஒட்டி எழுதுவதை ‘மிக உயர்தர’ கல்லூரிகளில்கூட இயல்பானதாக எடுத்துக் கொள்கிறார்கள். இன்று அவை அப்படியே செயற்கை நுண்ணறிவுக்குச் சென்றுவிட்டன. இப்போது பள்ளிகளிலேயே வீட்டுப்பாடங்களைச் செயற்கை நுண்ணறிவைக்கொண்டு எழுதிக்கொண்டுவர ஆசிரியர்களே ஊக்குவிப்பது சாதாரணமாகிவிட்டது.பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அதைக் கற்பிப்பதும் நடக்கிறது.

வழக்கம்போல சரியான கல்வியை மேற்கு தங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும். நாம் எண்ணிக்கைபலத்தால் மட்டுமே தாக்குப்பிடிப்போம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2025 11:31

விபாசனாவில் மலர்தல்

மூன்று வகுப்புகளின்பின்பும் எழுதிவைத்த குறிப்புகளை மீண்டும் வாசித்தேன். முதல் வகுப்பில் மூச்சில் நிலைகொள்ளுதல் எனும் பயிற்சி முதன்மையாக இருந்திருக்கிறது. இரண்டாவது வகுப்பின்போது அபிதம்ம பிடகத்திலிருந்து நிறைய மேற்கோள்கள் காட்டினார். மூன்றாவது வகுப்பில் மாணவர்களோடான உரையாடல்கள் மிகுதி. இம்முறை வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் நித்யவனத்திற்கு முதல்வரவென்று அறிந்தேன். 

விபாசனாவில் மலர்தல்

 

It is the typical element in the Indian educational system, which can be a major problem in the future when AI becomes the main player in the intellectual ground. Our students cannot summarize the essence of anything.

AI and education 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2025 11:30

August 20, 2025

அஞ்சலி: திருப்பனந்தாள் ஆதீனம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்- மு. இளங்கோவன்

வணக்கம் ஜெ.

நேற்று(19.08.2025), திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் அதிபர் தவத்திரு “கயிலை மாமுனிவர்” முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் பரிபூரணம் அடைந்தார்கள்.

நான் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றபொழுது(1987-1992) மாணவப் பருவத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு அவர்களின் திருக்கையால் பல பரிசுகளை வாங்கியுள்ளேன். பெரும்பான்மையான பரிசுகளை முதலாண்டில் நான் வாங்கியதால் அடுத்த ஆண்டுகளில் நடைபெறும் விழாக்களில் மொத்தமாக அறிவிக்கச்செய்து, அனைத்துப் பரிசுகளையும் ஒரே தவணையில் எனக்குக் கொடுத்து, மகிழ்ச்சியடைவார்கள்.

நான் எழுதிய மாணவராற்றுப்படை என்ற என் முதல் நூலினை அவர்களுக்கு அந்நாளில் படையல் செய்தேன்(1990). அவர்களின் திருக்கை வழக்கமாக ஐந்நூறு ரூபாய் பரிசாக வழங்குமாறு அந்நாளில் காறுபாறு சுவாமிகளாக விளங்கிய தவத்திரு குமாரசாமித் தம்பிரான் அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

படிப்பு முடிந்து, பணிக்குச் சென்ற பிறகும் திருப்பனந்தாள் செல்லும்பொழுது அவர்களைக் கண்டு வணங்கி வருவதை வழக்கமாக வைத்திருந்தேன். அவர்களின் அருளாட்சிக்காலத்தில் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் அவர்கள் ஆற்றிய பணிகளைக் கணக்கிட்டுச் சொல்ல இயலாது. அவற்றின் தொகை மிகுதியாக இருக்கும்.

எம் அருகமைந்த ஊர்களில் நடைபெறும் திருக்குடமுழுக்கு விழாக்களுக்குத் தேவைப்படும் மருந்துகளைக் கொடையாக வழங்குவதுடன், அக் குடமுழுக்கு விழாக்களைத் தலைமையேற்று நடத்துவதில் ஆர்வம் காட்டியவர்கள். சைவ சமய நூல்களைக் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைப்பதற்கு வழிகண்டவர்கள். சமய மாநாடுகளுக்குப் பெரும்பொருள் நல்குவதை வழக்கமாகக் கொண்டவர்கள். காசிக்குச் செல்லும் அன்பர்கள் காசித்திருமடத்தில் தங்கி, வழிபாடு செய்வதற்கு உதவுவார்கள். யாரும் எளிதில் அணுகி வணங்கி மகிழலாம்.

தவத்திரு கயிலை மாமுனிவர் அவர்களின் உரையை ஒருமுறை ஆவணப்படுத்தி வைத்திருந்தேன். காசித்திருமடம் குறித்தும், அதன் ஆதிமுதல்வர் குமரகுருபர சுவாமிகள் குறித்தும் எங்கள் அடிகளார் எடுத்துரைக்கும் உரையைத் தாங்கள் கேட்டு மகிழ்வதுடன் தங்கள் வாசகர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

 

அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2025 20:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.