Jeyamohan's Blog, page 37
August 15, 2025
தமிழ்க் கலைக்களஞ்சியம்
தமிழில் வெளியான முதல் நவீனக் கலைக்களஞ்சியம். இந்திய மொழிகளில் வெளிவந்த முதல் கலைக்களஞ்சியமும் இதுதான். டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் தமிழகத்தின் கல்வியமைச்சராக இருந்தபோது பெரியசாமித் தூரன் ஆசிரியராக இருந்து இந்த கலைக்களஞ்சியத்தை தயாரித்து வெளியிட்டார்
தமிழ் கலைக்களஞ்சியம்ஆய்வாளரை முன்வைத்தல்

விஷ்ணுபுரம் விருது பெறும் படைப்பாளியை இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக முன்வைத்து வாசகர்களுக்கு அறிமுகம் செய்வது எங்கள் வழக்கம். அதையே தமிழ்விக்கி விருதிலும் கடைப்பிடிக்கிறோம். வேதாசலம் அவர்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய நானும் என் நண்பர்களும் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம். அவருடைய பேட்டிகள் வெளியாகியுள்ளன அவரைப்பற்றிய கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அவருக்குச் சிறப்பு மலர் வெளியாகியுள்ளது. அவரைப்பற்றிய ஒரு நூலும் வெளியாகிறது.
பொதுவாக நம் ஊடகச்சூழல் அறிவியக்கவாதிகளை முழுமையாகப் புறக்கணிக்கும் தன்மை கொண்டது. அதிகாரத்துடன் தொடர்டபுடையவர்கள் அவர்களின் அரசியல் காரணமாக முன்னிறுத்தப்படுவார்கள். ஆய்வாளர்களின் இடம் இன்னும் குறைவு. இதை வாசகர்கள் பார்க்கலாம், எல்லா சின்னச் சின்ன விஷயத்துக்கும் ஏதேனும் ஒரு கருத்தைச் சொல்லியே ஆகவேண்டும் என்னும் வெறியுடன் இருக்கும் நம் சமூக ஊடக அறிவுஜீவிகள் வேதாசலம் அவர்களுக்கு ஓர் எளிய வாழ்த்தைக்கூட சொல்லவில்லை. ஆனால் ஏதேனும் வம்பு சிக்குமென்றால் ஆளுக்கொரு கருத்துடன் ஓடிவருவார்கள்.
இச்சூழலில் ஓர் அறிவியக்கவாதியை வாசகர்களிடம் கொண்டுசேர்ப்பதென்பது பெரும்பணி. அதன்பொருட்டே இத்தனை முயற்சிகள். சிலருக்கு இந்த செயல்பாடு சற்று மிகையான பிரச்சாரம் என்றுகூட தோன்றலாம். ஆனால் தமிழ்ச்சூழலில் வேறுவழியே இல்லை. இந்த செயல்பாட்டின் விளைவாக சில நூறு இளைஞர்களுக்கு வேதாசலம் அவர்களின் நூல்கள் சென்று சேர்ந்துள்ளன. பலர் வாசித்து எதிர்வினையாற்றினார்கள். பலருக்கு உண்மையான வரலாற்றாய்வு என்றால் என்ன என்பதே இப்போதுதான் புரியவந்திருக்கிறது. எங்கள் நோக்கம் அதுவே.
வரலாற்றாய்வு என்பது ஊடகப்பரபரப்பு கொண்டது அல்ல- அது அரசியல். மெய்யான வரலாற்றாய்வுக்கு அதற்கே உரிய விறுவிறுப்பு உண்டு. ஆகவேதான் வரலாற்றாசிரியர்கள் அதற்குள்ளேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். அந்த ஆய்வின்பத்தை இந்நிகழ்வுகளின் வழியாக சிலருக்குக் கொண்டுசென்று சேர்ப்பதையே நாங்கள் உத்தேசிக்கிறோம். ஆண்டுதோறும் ஆய்வாளர்களை முன்வைத்து நாங்கள் செய்யும் பணியின் நோக்கம் அதுதான்.
நண்பர்கள் விழாவுக்கு வந்து வேதாசலம் அவர்களுக்கு நம் மரியாதையை செலுத்தவேண்டும் என அழைக்கிறேன்.
வேதாசலம், கடிதங்கள் வேதாசலம், கடிதம் வேதாசலம்,வாழ்த்துக்கள்- ஒரு கேள்வி. வேதாச்சலம், கடிதம் வேதாசலமும் வாசகர்களும் – ஒரு கேள்வி வேதாசலம், தமிழ்விக்கி விருது – கடிதங்கள் நம் வரலாற்றாசிரியர்கள் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறார்கள்? வெ.வேதாசலம்- கடிதம் பாண்டியநாடும் வேதாசலமும் தமிழ்விக்கி- தூரன் விருது: வெ.வேதாசலம் வேதாசலம், மின்னஞ்சல் எதற்காக? வேதாசலத்துக்கு விருது- கடிதம்தமிழ்விக்கி- தூரன் விருது, கடிதம்
இந்த வருட தூரன் விருதாளர் திரு. வேதாசலம் அவர்களைப் பற்றிய குருகு சிறப்பிதழ் மிக நன்றாக வந்துள்ளது. ஆய்வாளரின் நேர்காணல், சமகால நேர்காணல்களுள் மிகத் தீவிரமான, சரியான ஒன்று. அவரது பாண்டிய நாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல் குறித்த நவீனின் அறிமுக கட்டுரையும் வாணதிராயர்கள் குறித்த தாமரைக்கண்ணனின் கட்டுரையும் இணையாகவே அடர்ந்திருந்தது. இதன் வாசிப்பின்பத்திற்காகவே மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
தூரன் விருது அறிவிப்பு வரும் வரைக்குமே வேதாசலம் அவர்களைப் பற்றியோ அவரது ஆய்வுகளைப் பற்றியோ எதுவுமே தெரியாது. மகத்தான பெரும்செயல் சிறிதும் ஓசையின்றி நிகழ்ந்துள்ளது. இதை வெளிக்கொணர்ந்து கௌரவிக்கும் உங்களுக்கு நன்றிகள் பல.
சங்கரன் இ.ஆர்.
அன்புள்ள ஜெ,
தூரன் விருது பெற்றிருக்கும் வெ.வெங்கடாசலம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.அவருடைய இரண்டு நூல்களை இந்த விருது அறிவித்தபிறகு வாசித்தேன். ஒன்று, தவ்வை பற்றிய அவருடைய நூல். இன்னொன்று, பாண்டியநாட்டில் சமணம். இரண்டுமே மிகமுக்கியமானவை. மிக விரிவான தரவுகள். கலைக்களஞ்சியம் அளவுக்குச் செறிவானவை.
குறைவான தகவல்களுடன் ஏராளமான பேச்சுடன் கூடிய நூல்களையே வரலாற்றுநூல் என வாசித்துக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு இந்நூல்களை வாசிப்பது கடினமாக இருக்கலாம். ஆனால் மெய்யான ஆர்வத்துடன், தொடர்ச்சியாக வாசித்ததால் ஒரு பெரிய உலகம் திறந்துகொண்டது. வரலாற்றாய்வு என்றால் என்ன என்று தெரிந்துகொண்டேன்.
இதற்கு முன் நான் வேதாசலம் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. இந்த விருதுதான் அவரை எனக்கு அறிமுகம் செய்தது. பிற அறிஞர்களின் நூல்களையும் வாங்கி வைத்துள்ளேன். இந்த விருது ஒரு பெருஞ்செயலை தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருக்கிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ராகவேந்தர் ராஜா
இன்னொரு நிலத்தின் சிகரம்
வாக்னர் குறித்த ஓர் இசை– தத்துவ வகுப்பு தமிழில் நிகழ்வது அரிய விஷயம். அனேகமாக அப்படி ஒரு நிகழ்ச்சி இதற்கு முன் தமிழில் நிகழ்ந்ததில்லை என நினைக்கிறேன். முக்கியமான முன்னெடுப்பு. அஜிதனுக்கும், முழுமையறிவு அமைப்புக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
இன்னொரு நிலத்தின் சிகரம்This deficiency is very obvious in their talk on art. A class with decent cultural affiliations for literary readers is a novel idea, and I hope young people are using this opportunity well.
A rare opportunityAugust 14, 2025
இன்று தமிழ்விக்கி- தூரன் விருதுவிழா தொடக்கம்.
இன்று தமிழ்விக்கி – தூரன் விருது விழா ஈரோடு ராஜ் மகால் (கவுண்டச்சிப்பாளையம், சென்னிமலை ரோடு) அரங்கில் மாலை நான்கு மணிக்குத் தொடங்குகிறது. காலை முதலே வெவ்வேறு ஊர்களில் இருந்து நண்பர்கள் வரத்தொடங்கிவிடுவார்கள். மாலை 4 மணிக்கு ஆறுமுக சீதாராமன் நடத்தும் நாணயவியல் குறித்த அரங்கு நிகழும். மாலை ஆறு மணிக்கு முனைவர் வெ.வேதாசலம் நடத்தும் தொல்லியல் கல்வெட்டு ஆய்வு குறித்த அரங்கம் நிகழும்.
இந்த அரங்குகள் சொற்பொழிவுகளாக நிகழாது. வாசகர்களின் ஐயங்கள், வினாக்களுக்கு இந்த அறிஞர்கள் அளிக்கும் பதில்களாலானவை. ஆகவே சலிப்பின்றிச் செல்லக்கூடியவை. மூன்று மணிநேரத்திற்குள் இரண்டு அறிஞர்களை நேருக்குநேர் பார்த்து உரையாடும் வாய்ப்பு அமைகிறது. தொல்லியல் போன்ற துறைகளை நம்மால் இப்படித்தான் முதல் அறிமுகம் செய்துகொள்ள முடியும். நாம் அவற்றைப் பற்றி வெவ்வேறு வகையான கற்பனைகளையும் தயக்கங்களையும் கொண்டிருப்போம். அவை உடைந்து நாம் ஒரு புதிய உலகுக்குள் நுழைவோம். நாம் அறிந்த பெரும்பாலான ஆய்வாளர்கள் இப்படி ஒரு தொடக்கம் வழியாக உள்ளே நுழைந்து வாழ்நாள் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு களத்தைக் கண்டடைந்தவர்கள்தான்.
மாலையில் இரவு 7 மணிக்கு ஜி.கண்ணபிரான் வானியல் ஆய்வு சார்ந்து ஓர் அறிமுக நிகழ்வை நடத்துகிறார். இரவு ஒன்பது மணிக்கு தொலைநோக்கி வழியாக வானைப்பார்க்கும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வானியலார்வம் என்பது நம் அன்றாடத்தில் இருந்து நம்மை விடுவித்து வேறொரு அறிவுலகுக்குக் கொண்டுசெல்லும் அனுபவம். சென்ற நூற்றாண்டு வரை அறிஞர்கள் அனைவருக்குமே வானியல் ஆர்வம் இருந்தது. சாமானியர்களும் வானியலை அறிந்திருந்தனர். அந்த தொடர்ச்சி இன்று அறுபட்டுள்ளது. அதை உருவாக்குவதே நோக்கம்.
ஆண்டுதோறும் தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பாக கலைக்களஞ்சியத் தந்தை பெரியசாமி தூரன் நினைவாக வழங்கப்பட்டு வரும் தமிழ் விக்கி -தூரன் விருதுகள் இது வரை
2022 கரசூர் பத்மபாரதி (மானுடவியல் ஆய்வாளர்)2023 மு. இளங்கோவன் (பண்பாட்டு ஆய்வாளர்)2023 எஸ்.ஜே. சிவசங்கர் (வட்டாரப் பண்பாட்டு ஆய்வாளர்)(சிறப்பு விருது)2024 மோ.கோ. கோவைமணி (சுவடியியல் ஆய்வாளர்)ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முனைவர் வெ.வேதாசலம் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வுக்கு வருகை தரும் நண்பர்கள் முன்னரே பதிவுசெய்துகொண்டிருந்தால் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூத்த படைப்பாளிகள் பங்குகொள்கிறார்கள். ஒருங்கமைக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு வெளியே மூத்தபடைப்பாளிகளுடன் உரையாடுவதற்கும் இது ஓர் அரிய வாய்ப்பு.
சிறிய அளவில் 2022ல் தொடங்கிய இந்த விருதுவிழா இன்று கோவை விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு நிகரான ஒன்றாக மாறியுள்ளது. நண்பர்கள் கூடுவதும், அறிவுசார்ந்த செயல்களில் ஈடுபடுவதும்போல நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்ள, நம்பிக்கை கொள்ள இன்னொரு வழி இல்லை. ஆர்வமுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
நாளை இசைக்கப்படும் பாடல்கள்
பெரியசாமி தூரன் தமிழிசை முன்னோடிகளில் ஒருவர். அவர் நினைவாக வழங்கப்பட்டு வரும் தமிழ்விக்கி- தூரன் விருது இந்த ஆண்டு வெ.வேதாசலம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழும் விழாவில் வழக்கம்போல நாதஸ்வர இசை நிகழ்வு உள்ளது. தூரனின் தமிழிசைப் பங்களிப்பைப் போற்றும் முகமாக தொடர்ச்சியாக தமிழ்ப்பண்பாட்டின் முதன்மையான இசைக்கருவியான நாதஸ்வரத்தை முன்வைத்து வருகிறோம்.
இந்த ஆண்டு
சிறப்பு நாதஸ்வரம் மயிலை எம்.கார்த்திகேயன், கோளேரி ஜி. வினோத்குமார் சிறப்பு தவில் அடையார் ஜி. சிலம்பரசன், கும்முடிப்பூண்டி ஆர்.ஜீவாஆகியோரின் இசைநிகழ்வு நடைபெறுகிறது.
பொதுவாக நாம் மரபிசை நிகழ்வுகளில் மிகக்குறைவாகவே கலந்துகொள்கிறோம். புதிய தலைமுறையினருக்கு மரபிசை அறிமுகமும் மிகக்குறைவு. இன்றைய போட்டிமிக்க படிப்புமுறை அந்தவகையான கலைப்பயிற்சிகளுக்கு உகந்ததாக இல்லை. ஓர் அகவைக்குப் பின்னரே நமக்கு கலை- இலக்கிய நாட்டம் உருவாகிறது. அந்தவகையினரை முன்னில்கண்டுதான் இந்நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
மரபிசை அறிமுகம் அல்லது இசைநிகழ்வுகளில் கலந்துகொண்ட அனுபவம் இல்லாமல் நாதஸ்வர இசையைக் கேட்பது கடினம். நமக்கு நாதஸ்வர இசை வெறும் மங்கல இசை என்ற எண்ணமும் உள்ளது. திருமணம் போன்ற விழாக்களில் நாதஸ்வர இசையை வெறும் சூழலோசையாகவே நாம் கேட்கிறோம்- உண்மையில் பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறோம். பலசமயம் திருமண நிகழ்வுகளில் எளிய சினிமாப்பாடல்களே இசைக்கப்படுகின்றன. அத்துடன் அவை மிகுந்த ஓசையுடன் இருப்பதனால் நம்மால் அமர்ந்து கேட்க முடிவதுமில்லை.
இந்த விழாவில் நாதஸ்வரம் மங்கலச் சூழலுக்கான இசையாக முன்வைக்கப்படவில்லை. இங்கே நிகழவிருப்பது ஓர் இசையரங்கு. அவையினர் முன் இரண்டு மணிநேரம் நாதஸ்வர இசை நிகழ்த்தப்படும். ஒலிப்பெருக்கி ஏதுமின்றி அவையினரின் செவிகளுக்கு உகந்த முறையில் அமையும். தூரன் அவர்களின் கீர்த்தனைகளும், இசைவிரிவாக்கமும் நிகழ்த்தப்படும்.
இந்நிகழ்வை இசையறிமுகமும், இசைநிகழ்வு அனுபவமும் இல்லாதவர்கள் ரசிப்பது எப்படி? அதற்குத்தான் வாசிக்கப்படும் பாடல்களை முன்னரே அறிமுகம் செய்கிறோம். இந்தப் பாடல்களை முன்னரே சிலமுறை கேட்டால் நம் செவிக்கு அவை பழகிவிடுகின்றன. கருவியிசையைப் பொறுத்தவரை அந்தப் பாடல் நமக்கு தெரியும் என்றால் கருவியின் இசையொலி பாடலின் சொற்களாக நம் செவிகளுக்குக் கேட்கத் தொடங்கும். அது ஓர் அரிய அனுபவம். நம்மால் மிக எளிதாக இசைக்குள் செல்லமுடியும்.
தமிழகத்தின் முதன்மையடையாளங்களில் ஒன்று நாதஸ்வர இசை. நாதஸ்வரக் கலைஞர்களை அறிந்துவைத்திருப்பது, முக்கியமானவர்களை உரியமுறையில் கௌரவிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த இசையை கேட்கும்படி நம் செவிகளைப் பழக்குவது. நம் வழித்தோன்றல்களுக்கு அறிமுகம் செய்வது. இல்லையேல் இன்னொரு தலைமுறைக்குள் நாம் இந்த மாபெரும் மரபை, நமக்கு மட்டுமே உரிய தனி அழகியலை இழந்துவிடுவோம். இந்நிகழ்வு சில இளம் நண்பர்களுக்காவது செவிகள் திறக்கவேண்டும் என்னும் நோக்கம் கொண்டது.
இசைக்குள் நுழைவது மிக எளிது. அடிப்படையான சில தயாரிப்புகளைச் செய்துவிட்டு செவிகளை ஒப்படைத்து அரங்கில் அமர்ந்திருந்தாலே போதும். நாம் உள்ளே நுழைந்துவிடுவோம். நம் வாழ்நாள் முழுக்க நீளும் ஓர் உலகம் நமக்காக உருவாகத் தொடங்கிவிடும். இசையின் வழியாக நாம் பண்பாட்டின் எல்லா நுண்ணிய பக்கங்களுக்குள்ளும் நம்மையறியாமலேயே நுழைந்துவிடுவோம். நாதஸ்வர இசைதான் நம் ஆலயக்கோபுரங்கள், நம்மைச்சூழ்ந்திருக்கும் மலைகள், நம் நிலம், நம் ஆறுகள்.
நல்வரவு
ஜெ
வணக்கம் ஜெ,
பெரியசாமி தூரன் விருது-2025 விழாவில் நாம் ஒருங்கிணைத்து உள்ள சிறப்பு நாதஸ்வர தவில் இசை நிகழ்ச்சியில் வாசிக்க இருக்கும் கீர்த்தனைகள் விபரம். இசை குழுவினர் குறித்த தகவல்கள் தனி மின்னஞ்சலில் அனுப்பி உள்ளேன்.
– யோகேஸ்வரன் ராமநாதன் (இசை ஒருங்கிணைப்பாளர்)
நிகழ்வுமுறை :
அ): முதல் கீர்த்தனை முதல் கடைசி மங்களம் வாசிப்பது வரை இரண்டு மணி நேரம் கச்சேரி முழுமைக்கும், பெரியசாமி தூரன் அவர்களின் கீர்த்தனைகள் மட்டுமே வாசிக்கப்படும்.
ஆ) : இவ்வருடத்திற்கான பாடல் பட்டியல் கடந்த இருவருடங்களில் இசைக்கப்படாத புது பாடல்களை கொண்டது.
[பார்க்க
இ): கீர்த்தனைகளின் பட்டியல், ராகம், அந்த பாடலுக்கான யூடியூப் லிங்க் மூன்றையும் கீழே தொகுத்து அளித்துள்ளோம்.
ஈ): ராக ஆலாபனை : முதன்மை ராக ஆலாபனை ”தோடி” ராகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும்.
உ): ராகமாலிகை : ராகமாலிகையில் வாசிக்கப்பட இருக்கும் ராகங்கள்: 1.நீலாம்பரி, 2.ரஞ்சனி, 3.சஹானா, 4.சௌராஷ்டகம், 5.மத்யமாவதி
கீர்த்தனைகள்
பட்டியல்
:
1. கீர்த்தனை: மங்கள விநாயகனே. ராகம் : ராமப்ரியா. தாளம் : மிஸ்ர சாபு
[MS Subbulakshmi-Mangala Vinayakane-Ramapriya-misra chapu-Periasamy Thooran]
2. கீர்த்தனை: தில்லையில் ஆடும். ராகம் : இந்தோளம். தாளம் : ஆதி
[Periyasamy Thooran Compositions | Natarajar Songs. 17 நிமிடம் 45 வினாடி முதல்…]
3. கீர்த்தனை: ஸாமகான ப்ரியே. ராகம் : ஆனந்தபைரவி. தாளம் : ஆதி
[sAmagAna priyE – Anandabhairavi – ML Vasanthakumari]
4. கீர்த்தனை: ஆதி சங்கரர் பாதம். ராகம் : பூர்விகல்யாணி. தாளம் : மிஸ்ர சாபு
[TV Sankaranarayanan – Adi shankarar pAdam – pUrvikalyANi – periyasAmy tUran – YouTube]
5. கீர்த்தனை: அப்பா உன்னை மறவேனே. ராகம் : பிலஹரி. தாளம் : ஆதி
6): முதன்மை ராக ஆலாபனை. ராகம் : தோடி.
[தொடர்ந்து ஸ்வர குறைப்பு மற்றும் தனி ஆவர்த்தனம்]
கீர்த்தனை: ஆடும் பெருமானே. தாளம்:ஆதி
(Aadum Perumane || Prema Rangarajan || Periasamy Throoran)
7. கிளிக்கண்ணி[காவடிசிந்து]: தெய்வ குழந்தை
[ தெய்வ குழந்தை பேரை–பெரியசாமி தூரன் பாடல்– Daiva kuzhandai perai – Shri Periyasami Thooran song ]
8. கீர்த்தனை: தொட்டு தொட்டு பேச வறான். ராகம் : பெஹக். தாளம் : ஆதி
[ Thottu Thottu – Anubhavam | Bombay S.Jayashri – Carnatic Vocal | Behag – Adi Classical Song ]
9. கும்மி பாட்டு: சின்ன குழந்தையை
[Samarpanam Album by Periyasami Thooran.12 நிமிடம் 55 வினாடி முதல்…]
10.ராகமாலிகா: 1.நீலாம்பரி, 2.ரஞ்சனி, 3.சஹானா, 4.சௌராஷ்டகம், 5.மத்யமாவதி
Attachments area
Preview YouTube video sAmagAna priyE – Anandabhairavi – ML Vasanthakumari
சமூக மாற்றம் மற்றும் வலங்கை – இடங்கை பிரிவு- எ.சுப்பராயலு
முனைவர் எ. சுப்பராயலு
தமிழ் கல்வெட்டுகளில் பொ.யு. 11 ஆம் நூற்றாண்டிலிருந்தும், ஆங்கிலேயே ஆவணங்களிலும் (பொ.யு. 18 – 19 ஆம் நூற்றாண்டு) காணப்படும் வலங்கை – இடங்கை என்னும் சொல்லாட்சி, இரண்டு எதிர் தரப்பான சமூக பிரிவை குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பற்றி மிக சமீபத்தில் தன் ஆய்வை எழுதிய ஆய்வாளர் பர்டன் ஸ்டெயின் (Burton Stein) அதற்கு முன் கூறப்பட்ட அனைத்து பார்வையை தொகுத்தும், அதன் மேல் விமர்சனப்பூர்வமான கருத்துகளையும் தன் நூலில் (Peasant State and Society in Medieval South India, Burton Stein) எழுதியுள்ளார்.
பர்டன் ஸ்டெயின் தன் நூலில் இவ்விரு பிரிவுகளும் ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவையோ, சாதியையோ சேர்ந்தவர்கள் இல்லையென்றும், வெவ்வேறு சமூக குழுக்கள், சாதிகளிலிருந்து ஒருங்கிணைக்கப் பெற்ற சாத்தியமான சமூக பிரிவுகள் என்ற முடிவை முன்வைக்கிறார். அதே நேரம் வலங்கை – இடங்கை பிரிவைப் பற்றி பரவலாக நம்பப்படும் கருத்தான வலங்கை பிரிவினர் விவசாயம், நிலம் சார்ந்த தொழில் செய்பவர்கள், இடங்கை பிரிவினர் வணிக, கைவினைஞர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்னும் கருத்தையும் முன்வைக்கிறார். காலனிய நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட இந்த கருத்து ஒரு ஸ்டீரியோடைப்பாக நிலைப்பெற்றாலும் பர்டன் ஸ்டெயின் அவரே ஆராய்ந்து கொடுத்த நம்பகமான ஆதாரங்களுக்கு எதிராக இது அமைகிறது.
பொ.யு. 18 – 19 அறிக்கைகளிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஸ்டெயின் உருவாக்கிய அட்டவனையில், வடக்கு தமிழகத்திலிருந்தும், கர்நாடக, ஆந்திர மாநிலங்களிருந்தும் என மொத்தம் அறுபத்தியெட்டு முக்கிய சாதிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பத்து சாதிகளே இடங்கை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வலங்கை என பிரிக்கப்பட்ட மற்ற சாதி பிரிவுக்குள்ளும் கணிசமானவர்கள் வணிகர்களாகவும், கைவினைஞர்களாகவும் இருப்பது காணமுடிகிறது. உண்மையில் ஸ்டெயின் தன் வாதத்திலுள்ள பலவீனத்தை உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதனை பின்வருமாறு நியாயப்படுத்துகிறார்,
பின்னால் கிடைத்த சான்றுகளின் படி சில நெசவாளர்கள் இடங்கை பிரிவில் இருந்தாலும், பெரும்பானவர்கள் வலங்கைப் பிரிவிலேயே காணப்படுகின்றனர். நெசவாளர்கள் இடங்கை பிரிவுடன் இணைய போதுமான காரணங்கள் கிடைக்கவில்லை. எண்ணெய் வணிகர்களைப் போல் நெசவாளர்களுக்கு சந்தைக்கான பரந்த அளவில் உற்பத்தியும் வினியோகமும் தேவைப்படவில்லை.
என்கிறார்.
எந்த வித முன்முடிவுகளும் இல்லாமல் நாம் கல்வெட்டு ஆதாரங்களை நோக்கும் போது “விவசாயி எதிரீடாக வணிகர்” என்னும் பகுப்பு வலங்கை – இடங்கை பிரிவுக்கு பொருந்தாது என்பதையே அறிய முடிகிறது.
முதற் காரணம் இடங்கை சார்ந்து பொ.யு. 14 – 15 ஆம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் கல்வெட்டுகள், இடங்கையில் முக்கிய பங்கு வகித்தவர்கள் பள்ளி அல்லது வன்னியர் சாதியினர் எனக் குறிப்பிடுகிறது. வன்னியர்கள் இந்த ஆயிரமாண்டு கால வரலாற்றில் ஒருபோதும் வணிகர்களாகவோ, கைவினைஞர்களாகவோ பணியாற்றியதில்லை என்பது தெளிவு. வன்னியர் இனத்தைப் பற்றி முதலில் கிடைக்கக் கூடிய சான்றென்பது அவர்கள் பொ.யு. 11 ஆம் நூற்றாண்டில் சோழ படையில் ராணுவ பிரிவில் இருந்தார்கள் என்றும் பின்னர் இருநூறாண்டுகளில் விவசாயிகளாக மாறினர் என்றும் அறிய முடிகிறது. இந்நாள் அவர் அதே சமூக நிலையை அச்சாதியினர் கொண்டுள்ளனர்.
இரண்டாவது காரணம் பொ.யு. 11 – 13 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாடு – இலங்கையில் கிடைக்கக்கூடிய பல்வேறு அய்யவோலே (Ayyavole) வணிகர் குழு சார்ந்த கல்வெட்டுகள் அவர்களை வலங்கை பிரிவினர் என்றே குறிப்பிடுகிறது.
இலங்கையிலுள்ள பதவியா, வாகல்கட, விகாரேகின்னா ஆகிய ஊர்களில் கிடைக்கப்பெற்ற வணிகக் குழுக் கல்வெட்டுகள் பொ.யு. 11 – 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அதில் சில வணிகக் குழுவிலுள்ள வணிகர்களின் பெயர்களுக்கு முன்பாக வலங்கை என்னும் பெயர் காணப்படுகிறது. அதே போல் மதுரை மாவட்டத்திலுள்ள நத்தம் கோவில்பட்டியில் பொ.யு. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வணிகர் குழுக் கல்வெட்டு பின்வருமாறு காணப்படுகிறது,
பல மண்டலங்களிலுள்ள நாட்டு செட்டி, தன்ம செட்டி மற்றும் செம்பியன் சேனாபதி ஆண்டன், வைகுண்ட நாடாள்வன் என்னும் வலங்கை மிகாம-விரகங்க-பிள்ளை, ராஜாதிராஜ-வலங்கை-நபோர்பதி, மேலும்… என 18 பூமியின் வீரக்குடியார்
என்ற குறிப்பு உள்ளது. வீரக்குடியார் பிரிவில் வரும் பெயர்களின் முன்னே காணப்படும் வலங்கை என்னும் சொல் கவனிக்கத்தக்கது. வீரக்குடியார் எனக் கோவில்பட்டி கல்வெட்டில் காணப்படும் வணிகக் குழுக்கள் இலங்கையிலுள்ள வணிகக் குழுக் கல்வெட்டிலும், கர்நாடகத்திலுள்ள சில கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. இவர்கள் ராணுவதினராகவும், வணிகர்களின் பாதுகாவலர்களாகவும் அறியப்படுகின்றனர். வீரக்குடியினர் பற்றிக் குறிப்பிடப்படும் பெரும்பாலான கல்வெட்டுகள் எரிவீரப்பட்டிணம் என்னும் காவற்படை நகரத்தை சார்ந்தே உள்ளது.
மேற்சொல்லப்பட்ட கல்வெட்டு ஆதாரங்களின் படி வலங்கை பிரிவினர் நில உரிமையாளர்கள் என்றும், இடங்கை பிரிவினர் வணிகர் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்வது பொய்யாகிறது. குறைந்தபட்சம் வரலாற்றின் ஆரம்பகாலத்தில் இந்த பகுப்பு தவறாகிறது. கிடைக்கப்படும் வரலாற்று தகவல்களிலிருந்து வலங்கை – இடங்கை என வகைப்படுத்துதல் சோழர் கால ராணுவப் பிரிவிலிருந்தே காணப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் சோழ நாட்டை ஆண்ட முதலாம் ராஜராஜனின் (985 – 1014) காலத்திலேயே முதலில் வலங்கை என்னும் பெயர் கிடைக்கிறது. அவனே படையெடுப்புக்காக பெரும் ராணுவத்தை உருவாக்கிய முதல் அரசன். பின் பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பாதியில் வலங்கை – இடங்கை மகாமை என்னும் உள்ளூர் வரி உருவாகியது. இவ்வரி அந்தராயப் பிரிவான ஆயம், பாட்டம் வரிகள் கொண்ட அறுவடை செய்யாதவர்களிடம் வசூலிக்கப்படும். எந்த சாதிப் பிரிவுகள் வலங்கையிலும், இடங்கையிலும் வரி செலுத்தினர் என்ற தெளிவான வரையறை கிடைக்காவிட்டாலும், பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இடங்கை பிரிவு உருவாகிவிட்டது அறிய முடிகிறது. ஆனால் அக்காலத்திலும் வலங்கை பிரிவுக்கான ராணுவ பிரிவுகள் மட்டுமே கிடைத்த கல்வெட்டுகள் சிலவற்றில் உள்ளன. உதாரணமாக, தென் கர்நாடக பகுதியான கோலாரில் பொ.யு. 1073ல் கிடைக்கப்பட்ட கல்வெட்டில் சோழ மண்டலம், ஜெயம்கொண்டசோழ மண்டலம் பகுதிகளிலிருந்து உருவான விவசாயக் கூட்டமைப்பின் பெரிய ராணுவ குழுவான வலங்கை மகாசேனை சோழ அரசின் படைப்பிரிவின் பெரும் பகுதியாக விளங்கியது.
புகழ்பெற்ற வேலைக்கார கல்வெட்டு (இலங்கையிலுள்ள பொலொனார்வாவில் கிடைத்தது – பொ.யு. 12 ஆம் நூற்றாண்டு) வேலைக்காரப் படைப்பிரிவில் வலங்கை, இடங்கை, சிறுதனம், பிள்ளைகள்தனம், வடுகர், மலையாளர், பரிவாரக் கொண்டம், பலகலனை போன்ற பிரிவுகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. நீலகண்ட சாஸ்திரி இப்பிரிவுகள் வேலைக்கார ராணுவத்தின் பிரிவுகளைக் குறிப்பிடவில்லை என்றும், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மூல சமூகக் குழுவை மட்டுமே குறிப்பிடுகிறது என்றும் கூறுகிறார்.
‘சிலர் சாதி அல்லது சாதிக் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர், சிலர் தகுதி அடிப்படையில், சிலர் இனம், தொழில் சார்ந்து’
இதில் சாதிக் குழுக்கள் எனக் குறிப்பிடுவது பொருத்தமாக இல்லை. இக்குழுக்களுக்கு சாதி நிலையை குறிப்பிடுவது பொருத்தமாகாது. பொ.யு. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அப்படி சொல்வது பின்னாளில் நிகழ்ந்த சமூக வளர்ச்சியின் போக்கை தவறாக முற்காலத்தில் குறிப்பிடுவதாகும். பொலொனார்வா கல்வெட்டு அல்லது அதற்கு இணை காலத்தில் கிடைத்த சோழர் கல்வெட்டு எதிலும் மேலே குறிப்பிட்ட பிரிவுகள் ராணுவ பிரிவுகளன்றி வேறு எந்த சாதிய, இனப் பிரிவுக்கான சாத்தியமாக கருதுவதற்கு இடமில்லை.
தமிழ் சமூகத்தில் பொ.யு. 9 – 10 ஆம் நூற்றாண்டிலிருந்தே சாதி ஒரு அடிப்படை சமூக அலகாக உள்ளது. அதில் சாதிய அடுக்குமுறை தோன்றுவது பொ.யு. 11 ஆம் நூற்றாண்டிலிருந்து. முதலாம் ராஜராஜனின் இரண்டு கல்வெட்டுகள் (பொ.யு. 1014) நிலக்கிழார் (ஊர் இருக்கை), வணிகர் (கம்மண்ண சேரி), பறையர் (பறை சேரி) என தனி சாதிக் குடிகள் உருவாகியிருந்ததைக் குறிப்பிடுகிறது. கங்கைக்கொண்டசோழபுரத்தில் காணப்படும் வீரராஜேந்திரனின் நீண்ட கல்வெட்டு திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் இதே போல் அமைந்த குடியேற்றங்களைக் குறிப்பிடுகிறது (பொ.யு. 1068). பிராமணர்களுக்கு கீழ் படிநிலை சாதியினர் என ஒரு பொது வரையறையில் குறிப்பிடும் சில தரவுகளும் கிடைக்கின்றன. இந்த படிநிலை அடுத்த இருநூறாண்டுகளில் இன்னும் விரிவாக்கப்பட்டுள்ளது.
பதினொன்றாம் நூற்றாண்டின் முற்பாதியில் சோழ பேரரசின் ராணுவ விரிவாக்கத்தின் போது நாட்டின் புறப்பகுதியில் உள்ள பழங்குடிகளின் தற்காப்பு கலையின் ஆற்றலை விவரிக்கிறது. இது சோழ அரசு தன் ராணுவத்திற்காக பழங்குடியில் ஆள் சேர்த்துள்ளதைக் காட்டுகிறது. பல படைப்பிரிவின் வில்லாளிகள் இந்த புறப்பகுதியிலிருந்து சேர்க்கப்பட்டுள்ளனர். எல்லா வெற்றிகரமான ராணுவ பிரிவைப் போலவும் சோழர்களின் ராணுவத்திலுள்ளவர்களும் மைய பண்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு, சோழ அரசிற்கு வளமை சேர்த்துள்ளனர். போரின் போது நிகழ்த்தப்பட்ட கொள்ளையாலும், பிற வருமானங்களையும் ராணுவ மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். கராஷிமா, தனி நபர் நிலம் என்னும் கொள்கை இக்காலத்தில் அறிமுகமானதற்கு நாட்டின் இந்த புதிய வளமும் முக்கிய காரணமெனக் குறிப்பிடுகிறார். இந்நிகழ்விற்கு ஆதாரம் சேர்க்கும் வகையில் முன்பில்லாத வகையில் பழங்குடி நாட்டார் சமூகம் நிலைத்த சமூகமாக இணைந்துள்ளது.
இந்த தொடர்பு சம்பந்தமாக பொ.யு. 1318 ஆண்டை சேர்ந்த பாண்டிய கல்வெட்டு ஒன்று ஆடுதுறையில் கிடைத்துள்ளது. அதில் சோழர் கால பொ.யு. 1122 ஆம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியர் கல்வெட்டு, பள்ளி மக்கள் காணி (மரபாக வரும் நில அதிகாரம்) நிலத்தை வடக்கு பக்கமுள்ள வறண்ட பகுதியில் பல கிராமத்தில் வைத்துள்ளனர் எனக் குறிப்பிடுகிறது. இம்மக்களை பள்ளி நாட்டார் அல்லது பன்நாட்டார் எனக் குழுவாகக் குறிக்கிறது. பள்ளி என்னும் சாதி மறவர், கள்ளர்களைப் போல் போர் சமூகத்தினர். அவர்களின் வீரப்பண்பு மேற்சொன்ன கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு வில்லுக்கு ஒரு பணம் அவர்கள் பெற்றனர் என்ற குறிப்பு வருகிறது. இறுதியில் சாபமிடும் தொனியில் வரக்கூடிய ஒரு வரி பள்ளி நாட்டாரை யாராவது எதிர்த்தால் அவன் வீரனல்ல என குழுவிலிருந்து நீக்கப்படுகிறான் (நம்மில் ஒரு வீரன் அல்லவாகுக). இவை மூலம் பள்ளி நாட்டார்கள் வீரர்களாக இருந்து நில உடைமையாளர்களான சித்திரம் கிடைக்கிறது. நாட்டார் எனப் பள்ளிக்கு பின் வரும் பெயர் நில உடைமையையே காட்டுகிறது. நாட்டார் என்னும் சொல் இதற்கு முற்காலத்தில் நில உடைமை கொண்டிருந்த நாடு என்னும் சிறு பிரதேசத்தைக் கொண்ட வேளாண் சமூகத்தினரைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. இத்தரவுகள் மூலம் பள்ளி இனத்தவர் வேளாண் சமூகமாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டது புலனாகிறது. பாண்டியரின் இக்கல்வெட்டு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தருகிறது. கல்வெட்டு பரந்த பகுதியில் (10000 சதுர கிலோமீட்டர்) வாழும் பள்ளி இன மக்களின் எல்லைகளாகக் கிழக்கே வீரநாராயணன் ஏரி, மேற்கே பச்சைமலை, தெற்கு காவேரி, வடக்கு பெண்ணை நதி அமைந்த குறிப்பை அளிக்கிறது. தென்னார்காடு தொடங்கி காவேரிக்கு வடக்கே உள்ள திருச்சி வரை இவர்கள் இருந்ததை அறிய முடிவதோடு பரந்த பிரதேசத்தில் அவர்களின் சமூக ஒருங்கிணைப்பையும் பார்க்க முடிகிறது.
இதே பகுதியில் சுருதிமான் என்றழைக்ககூடிய மற்றொரு போர் சமூகமும் பின்னாளில் வேளாண் சமூகமானது. பொ.யு. 1015ல் சுருதிமான்களைப் பற்றி முதல் குறிப்பு கிடைக்கிறது. முன்னிலை போர் வீரன் ஒருவன் கடக்கம் (கர்நாடகத்திலுள்ள மன்யகேதா/மல்கேட் பகுதி) போர் களத்தில் தன் உயிரை அரசனுக்காக கொடுத்ததன் கல்வெட்டு இது. உரட்டூர் நாட்டு நாட்டார் உறுப்பினராக சுருதிமான் ஒருவன் இருந்ததன் கல்வெட்டு பொ.யு. 1141ல் கிடைத்துள்ளது. பொ.யு. 1150ல் உடையான் என்னும் நிலமுடையவன் பற்றியும், நாடாள்வான் என்னும் நாட்டைக் காப்பவன் பற்றியும் குறிப்பு உள்ளது. சுருதிமான் இனத்தில் பெரும் நிலமுடையவர்கள் பற்றிய குறிப்பு பொ.யு. 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கிடைக்கிறது.
சுருதிமான் போலவே நத்தமான், மலையமான் என்ற இரு சமூகத்தினரும் பின்னாளில் நாட்டார் நிலையை எய்தியுள்ளனர். வாலிகண்டபுரத்தில் பொ.யு.1227ல் கிடைத்த கல்வெட்டில் யாதவ குலத்தலைவர் (மேய்ச்சல் சமூக மக்கள்) என்றும் சித்திரமேழி பெரியநாடு (அழகிய ஏர் கலப்பையைக் கொண்ட பெரிய நாடு அல்லது நாட்டார்) என்றும் நத்தமான் குறிப்பிடப்படுகிறார். நத்தமானுக்கு அடுத்து மலையமான் குறிப்பிடப்படுகிறார். மேலும் சில மேய்ச்சல் சமூகத்தினர் நில உடைமையாளர் ஆனதன் சான்றுகள் கிடைத்துள்ளன. பொ.யு. 1184ஐ சேர்ந்த ஶ்ரீரங்கம் கல்வெட்டு வள்ளுவப்பாடி (முசிரி, திருச்சி மாவட்டம்) கிராமத்தில் வாங்கிய வரியை அக்கிராமத்தின் மேல் காணி உரிமைக் கொண்ட ஶ்ரீகோபாலர்கள் வாங்கி ஶ்ரீரங்கம் கோவிலுக்கு வழங்கியதைக் கூறுகிறது. கல்வெட்டில் கையெழுத்திட்டவர்கள், வள்ளுவநாட்டில் உள்ள ஐம்பது கிராமத்தின் நில உடைமையாளர்கள். இவர்கள் அரசுக்கு வரி செலுத்துவதற்கான சுமையை ஏற்றுக் கொண்டனர். கையெழுத்திட்டவர்களின் பெயரும், ஶ்ரீகோபாலன் என்ற பெயரும் இவர்கள் மேய்ச்சல் சமூகத்தினர் குறிப்பாக மாட்டிடையர்கள் என்பதைக் காட்டுகிறது.
மேற்சொன்ன அனைத்து ஆதாரங்கள் மூலம் வலங்கை – இடங்கையின் பிரிவுகள் வரலாற்றில் ஒரே போல் இருக்கவில்லை என அறிய முடிகிறது. முதலில் ராணுவ பிரிவுக்காக வகுக்கப்பட்டு பின் காலப்போக்கில் சமூக பிரிவாக மாறியது. பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும், பதிமூன்றாம் நூற்றாண்டிலும் கிடைத்த கல்வெட்டுகளில் மட்டுமே இடங்கை என்னும் சொல் சாதியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. சுவாரஸ்யமாக, சாதி உருவாக்கத்தின் தெளிவான வெளிப்பாடு இடங்கை பிரிவில் காணப்படுகிறது. மேலே சொன்ன நிலவுடைமை சாதிகளான பள்ளி (வன்னியர்), சுருதிமான், நத்தமான் என அனைவரும் ராணுவ பிரிவிலிருந்தோ, மேய்ச்சல் சமூகமாக இருந்தோ பின்னாளில் எழுந்தவர்கள். பொ.யு. 1218 ஆண்டை சேர்ந்த உரட்டூர் கல்வெட்டு இடங்கை பிரிவின் ஒற்றுமை ஒப்பந்தத்தில் சுருதிமான்களின் தோற்றத் தொன்மம் பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் அவர்கள் ஐந்து நாட்டில் குடியேறியது பற்றியும் இடங்கை பிரிவோடு தொடர்பு கொண்டது பற்றியும் வருகிறது. இவர்களை ‘ஐஞ்சு நாட்டார்’ என்றழைத்தனர். நாடாள்வான் என்ற திருக் கொண்ட சில சுருதிமான்கள் மட்டுமே இந்த குறிப்பிட்ட இடங்கை பிரிவின் ஒற்றுமை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்கள்.
வாலிகண்டபுரம் கல்வெட்டு (பொ.யு. 1227) தொன்னூற்றி எட்டு இடங்கை பிரிவின் ஒற்றுமை ஒப்பந்தத்தைக் குறிப்பிடுகிறது. இதில் பிராமணர், ஆரியர், நத்தமான், மலையமான், அந்தணர், பன்நாட்டார், வன்னியர்-நாகரர், கைக்கோளர் அடங்குவர். இதில் பிராமணர்களுக்கு அடுத்தப்படியான நிலையில் நத்தமான், மலையமான் இடம்பெற்றுள்ளனர். ஆரியர்கள் பிராமணர்களின் உபசாதியாக இருக்கலாம். அதே ஆண்டில் மேற் சொன்ன கல்வெட்டிற்கு முன்னோடியாக வரஞ்சரம் கல்வெட்டில் இடங்கை பிரிவுக்கு மலையமான், நத்தமான் வருகையும், அவர்கள் கண்ணும், கையுமாக எப்போதும் அப்பிரிவில் இருப்பேன் என எடுத்துக் கொண்ட உறுதிமொழியையும், அந்தணர், ஆகயர், நியாயட்டார், கைக்கோளர், வணிகர், பன்நாட்டார், சாலியர் என பிற பிரிவினர் அதற்கான ஒப்புதலை அளித்துள்ளனர். மேற் சொன்ன இரண்டு கல்வெட்டு குறிப்புகளும் இணைந்து நத்தமான், மலையமான் பிரிவினர் இடங்கை குழுவில் புதிய நிலவுடைமையாளர்களாக வந்து முக்கிய பங்கு வகித்தனர் என்பதை அறிய முடிகிறது. அதே போல் பன்நாட்டார் எனக் குறிப்பிடப்படும் வன்னியர்/பள்ளி இனத்தவர் வாணியர், கைக்கொல்லருக்கு கீழாகக் கருதப்பட்டனர் (வாணியர் – எண்ணெய், கைக்கோளர் – நெசவு).
மேற்சொன்ன அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் போது பன்னிரெண்டாம், பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜியத்தின் புறப்பகுதியில் வாழ்ந்த போர் சமூகத்தினர், நாடோடி, ஆயர் பின்னாளில் நிலவுடைமை சாதியினராக வளர்ந்தது ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. இம்மாற்றத்திற்கான தொடக்கம் பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்தே சோழ ஏகாதிபத்தியத்தின் ராணுவ நடவடிக்கைகள் மூலம் தொடங்கிவிட்டன. இதற்கு நிகராகவே சாதி அமைப்பும் முதிர்ச்சி பெறத் தொடங்கின. ஒவ்வொரு சாதியின் அடையாளமும் தெளிவாக வரையறுக்கப்பட்டன. சாதியினிடையே தரவரிசை ஒன்றும் உருவாகியது. நிலவுடைமை சமூகத்தினர் இதில் முன்னிலை பெற்றனர். இக்காலகட்டத்தில் புதிய நிலவுடைமை சாதிகள் எழுந்து வருவதை பழைய நிலவுடைமை சாதிகள் வெறுத்திருக்கக் கூடும். இந்த நோக்கில் பார்த்தால் இடங்கை ஒற்றுமை ஒப்பந்தத்தில் புதிய நிலவுடைமை சாதிகள் முக்கிய பங்காற்றியது, பழைய நிலவுடைமை சமூகத்திற்கு போட்டியாகவே நிகழ்ந்துள்ளது என அறிய முடிகிறது. நிலவுடைமை சமூகத்தின் இந்த இருன்மை நிலைக்கான சான்று விஜயநகர காலத்தில் காணக் கிடைக்கவில்லை.
பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பாதியில் விஜயநகர காலத்தில் வலங்கை – இடங்கை பிரிவுக்கான மேலும் துலக்கமான ஆதாரங்கள் கிடைக்கின்றன. பொ.யு. 1429ல் கிடைக்கும் கல்வெட்டு தொடரில் இரு பிரிவினரைப் பற்றி இணைந்து வரும் குறிப்புகள் பெரும்பாலும் அதிக வரிக்கு எதிரான போராட்டத்தைப் பற்றியதாக உள்ளன. விஜயநகர அமைச்சர்களுக்கு எதிராகவும், ராணுவத்தினருக்கு எதிராகவும், பிராமண, வேளாள நிலவுடைமையாளர்கள் எதிராகவும் தங்களுக்கு விதிக்கப்பட்ட அதிக விரிக்காக இரு சாராரும் இணைந்து செய்த கலகம் பற்றிய விவரம் இதில் உள்ளன. இவற்றின் மூலம் வலங்கை – இடங்கை பிரிவில் விவசாயிகள், கைவினைஞர்கள், வணிகர் சாதியினர், பிற சேவை சாதியினர் இணைந்திருந்தனர் என அறிய முடிகிறது.
எனவே, வலங்கை – இடங்கை பிரிவென்பது தோன்றிய போது ராணுவ பிரிவாகவும் பின் வேளாள நாட்டார் என்னும் பழைய நிலவுடைமை சமூகத்திற்கும், புதிய நிலவுடைமை சமூகத்திற்குமான பிரிவாக மாறியது என்றே கருத வாய்ப்புள்ளது. பின் பதிநான்காம், பதினைந்தாம் நூற்றாண்டில் பொது பெயரிடலாக அனைத்து உற்பத்தியாளர்களையும் குறிப்பதாக ஆகியது. வலங்கை – இடங்கை பிரிவு ஒரு கறாரான பிரிவாக இல்லாமல் தமிழ்நாட்டின் இடைக்கால சமூகத்தில் தொடர் மாற்றத்திற்கு உட்பட்ட ஒன்றாகவே திகழ்ந்துள்ளனர். இக்கருத்து விஜயநகர காலத்திற்கு பின்னும், பிரிட்டிஷ் ராஜ்யம் என பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தரவுகளை மேல் சொன்னவற்றுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பர்ட்டன் ஸ்டெயின் சொன்னவை மேற்கத்திய பார்வையிலிருந்து எழுந்தவை அது சோழர் காலத்திற்கு மிக அன்னியமானது.
(தமிழாக்கம் ஜி.எஸ்.எஸ்.வி நவின்)
ஆலயம் அறிதல்- ப.ராமநாதன்
இதற்கு தூண்டுகோலாக இருந்தது, தாங்கள் தினசரி பதிவு செய்யும் அற்புதமான காணொளிகள். தங்களை பற்றி ஓரளவே நான் இதற்கு முன்னால் தெரிந்து வைத்திருந்தேன். தாங்கள் ஆற்றும் பணி மகத்தானது.பாரதி இன்று பாடி இருந்தால் “வெள்ளிமலையின் ” மீதுலாவுவோம் என்று கூட பாடி இருக்கலாம்.
ஆலயம் அறிதல்- ப.ராமநாதன்
Whatever we draw, we cannot deviate away from the original modes of our magnificent cave paintings. It shows the truth: the tradition of art is not a system developed by man in the process of culture. Instead, art created human culture.
The eye is the keyநாயகி, சென்னையில் ஒரு விழா
சென்னையில் சுதந்திரப்போராட்ட வீரர்களின் மனைவியரின் தியாகத்தை நினைவுககூரும்படி ஒரு விழா
இடம் கவிக்கோ அரங்கம்.
நாள் ஆகஸ்ட் 15 .
நேரம் மாலை 4
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
