ஆய்வாளரை முன்வைத்தல்

விஷ்ணுபுரம் விருது பெறும் படைப்பாளியை இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக முன்வைத்து வாசகர்களுக்கு அறிமுகம் செய்வது எங்கள் வழக்கம். அதையே தமிழ்விக்கி விருதிலும் கடைப்பிடிக்கிறோம். வேதாசலம் அவர்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய நானும் என் நண்பர்களும் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம். அவருடைய பேட்டிகள் வெளியாகியுள்ளன அவரைப்பற்றிய கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அவருக்குச் சிறப்பு மலர் வெளியாகியுள்ளது. அவரைப்பற்றிய ஒரு நூலும் வெளியாகிறது.
பொதுவாக நம் ஊடகச்சூழல் அறிவியக்கவாதிகளை முழுமையாகப் புறக்கணிக்கும் தன்மை கொண்டது. அதிகாரத்துடன் தொடர்டபுடையவர்கள் அவர்களின் அரசியல் காரணமாக முன்னிறுத்தப்படுவார்கள். ஆய்வாளர்களின் இடம் இன்னும் குறைவு. இதை வாசகர்கள் பார்க்கலாம், எல்லா சின்னச் சின்ன விஷயத்துக்கும் ஏதேனும் ஒரு கருத்தைச் சொல்லியே ஆகவேண்டும் என்னும் வெறியுடன் இருக்கும் நம் சமூக ஊடக அறிவுஜீவிகள் வேதாசலம் அவர்களுக்கு ஓர் எளிய வாழ்த்தைக்கூட சொல்லவில்லை. ஆனால் ஏதேனும் வம்பு சிக்குமென்றால் ஆளுக்கொரு கருத்துடன் ஓடிவருவார்கள்.
இச்சூழலில் ஓர் அறிவியக்கவாதியை வாசகர்களிடம் கொண்டுசேர்ப்பதென்பது பெரும்பணி. அதன்பொருட்டே இத்தனை முயற்சிகள். சிலருக்கு இந்த செயல்பாடு சற்று மிகையான பிரச்சாரம் என்றுகூட தோன்றலாம். ஆனால் தமிழ்ச்சூழலில் வேறுவழியே இல்லை. இந்த செயல்பாட்டின் விளைவாக சில நூறு இளைஞர்களுக்கு வேதாசலம் அவர்களின் நூல்கள் சென்று சேர்ந்துள்ளன. பலர் வாசித்து எதிர்வினையாற்றினார்கள். பலருக்கு உண்மையான வரலாற்றாய்வு என்றால் என்ன என்பதே இப்போதுதான் புரியவந்திருக்கிறது. எங்கள் நோக்கம் அதுவே.
வரலாற்றாய்வு என்பது ஊடகப்பரபரப்பு கொண்டது அல்ல- அது அரசியல். மெய்யான வரலாற்றாய்வுக்கு அதற்கே உரிய விறுவிறுப்பு உண்டு. ஆகவேதான் வரலாற்றாசிரியர்கள் அதற்குள்ளேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். அந்த ஆய்வின்பத்தை இந்நிகழ்வுகளின் வழியாக சிலருக்குக் கொண்டுசென்று சேர்ப்பதையே நாங்கள் உத்தேசிக்கிறோம். ஆண்டுதோறும் ஆய்வாளர்களை முன்வைத்து நாங்கள் செய்யும் பணியின் நோக்கம் அதுதான்.
நண்பர்கள் விழாவுக்கு வந்து வேதாசலம் அவர்களுக்கு நம் மரியாதையை செலுத்தவேண்டும் என அழைக்கிறேன்.
வேதாசலம், கடிதங்கள் வேதாசலம், கடிதம் வேதாசலம்,வாழ்த்துக்கள்- ஒரு கேள்வி. வேதாச்சலம், கடிதம் வேதாசலமும் வாசகர்களும் – ஒரு கேள்வி வேதாசலம், தமிழ்விக்கி விருது – கடிதங்கள் நம் வரலாற்றாசிரியர்கள் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறார்கள்? வெ.வேதாசலம்- கடிதம் பாண்டியநாடும் வேதாசலமும் தமிழ்விக்கி- தூரன் விருது: வெ.வேதாசலம் வேதாசலம், மின்னஞ்சல் எதற்காக? வேதாசலத்துக்கு விருது- கடிதம்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
