Jeyamohan's Blog, page 39

August 13, 2025

தூரன் விழா , என் உரைகள்

தமிழ்விக்கி- தூரன் விருதுவிழா அரங்கில் நான் ஆற்றிய முந்தைய மூன்று உரைகள். ஒவ்வொன்றையும் ஒருவகையான வென்ற மனநிலையில் நின்றே ஆற்றியிருக்கிறேன். அவற்றை நிகழ்த்தியவர்கள் என் நண்பர்கள். அவர்களின் தோள்மேல் நின்றுகொண்டு அந்த உரைகளை ஆற்றியிருக்கிறேன். அவை அவர்களின் சொற்களும்கூட!

அன்புள்ள ஜெ

தமிழ்விக்கி- தூரன் விழா உரையைக் கேட்டேன். வழக்கம்போல அழகான உரை. சென்ற சில மாதங்களாக நீங்கள் வெளியிட்டுவரும் காணொளிகளாலோ என்னவோ உங்கள் உரையின் உச்சரிப்பு சீராக உள்ளது. மொழி பேச்சுமொழிக்குச் செல்லாமல் அச்சிடுவதற்குரிய வகையில் சீராக உள்ளது. ஒரு சொல் கூடுதல் இல்லாமல், எங்கும் திசைதிரும்பாமல் அழகாகச் சென்ற உரை ஒரு பெரிய கற்றலனுபவம்.

நியூயார்க்- வாசிங்டனில் நிகழவிருக்கும் நவீனத்தமிழ் இலக்கிய மாநாடு பற்றிச் சொன்னீர்கள். மகத்தான செய்தி. மனமார்ந்த வாழ்த்துக்கள். தம்மை முன்வைக்கும் சூழலில் தமிழை முன்வைக்கும் உங்களை வணங்குகிறேன்

சு. மதியழகன்

 

அன்புள்ள ஜெ

நலம்தானே?

தமிழ் விக்கி- தூரன் விழாவின் உரை மிகச்சிறப்பாக இருந்தது. இன்று, தமிழ்விக்கி ஒரு தவிர்க்கமுடியாத அறிவுச்சேகரம். ஒவ்வொரு நாளும் என்னைப்போன்ற கல்வியாளர்கள் எதையாவது தேடி வந்துகொண்டேதான் இருக்கிறோம். இங்கிருக்கும் முழுமையான தகவல்களை எங்குமே காணமுடிவதில்லை. அத்துடன் உசாத்துணையில் இருக்கும் இணைப்புகள் முழுமையான ஆய்வுக்குப்பின் வந்தவை. தமிழ்விக்கியின் மொழிநடை வாசிப்புக்கு சுவையானது. தகவல்கள் பகுக்கப்பட்டிருக்கும் மாறாத அமைப்பும் மிகப்பெரிய உதவி. முன்னுதாரணமான முயற்சி.

நியூயார்க் இலக்கியமாநாடு பற்றிச் சொன்னீர்கள். வாழ்த்துக்கள். செயற்கரிய செய்பவர் நீங்கள். நீங்கள் அறிவிக்கும்போது ஒவ்வொரு விஷயமும் அசாத்தியமானதாகத் தெரிகிறது. சாதித்துக்காட்டி கடந்துசென்றபடியே இருக்கிறீர்கள்.

செல்வ முத்துக்குமார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 13, 2025 11:31

The art of letting-go- Jeyamohan

A couple of days back, my friend K.B.Vinod, a good reader, had come to meet me at my office. He is in the software industry. We got talking about my difficulties with making railway ticket reservations.

The art of letting-go- Jeyamohan

 

 

பொழுதுபோக்கு என்பதுதான் இந்த நூற்றாண்டின் ஒட்டுமொத்தமான பெரிய வணிகம் என்று அண்மையில் ஒரு செய்தி படித்தேன். உலக அளவில் உணவு உற்பத்தி, ஆடை உற்பத்தியை விட அதுவே மிகப்பெரிய தொழில். நம்புவது எளிது. ஏனென்றால் நாம் சராசரியாக உணவு, உடைக்குச் செலவழிப்பதை விட அதிகமாக இன்றைக்கு கேளிக்கைகளுக்குச் செலவழித்துக்கொண்டிருக்கிறோம்

பொழுது- கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 13, 2025 11:30

August 12, 2025

இலக்கியவாதி வரலாற்றை வாசித்தல், வெ.வேதாசலம்-1

உலகமெங்கும் புனைவெழுத்தாளர்களின் முதன்மை ஈடுபாடாக இருப்பது வரலாறு அதன் பின் தத்துவம். தத்துவமும் வரலாறும் இரு சிறகுகள், அதைக்கொண்டே புனைவெழுத்து பறக்க முடியும் என்றொரு கூற்று உண்டு. விந்தையாக தமிழில் தீவிர இலக்கியப் பரப்பில் வரலாற்றாய்வு மேல் ஆர்வம் கொண்ட இலக்கியவாதிகள் மிக மிக அரிதானவர்கள். பெரும்பாலானவர்களுக்கு வரலாறு பற்றிய எந்த புரிதலும் இருப்பதில்லை. அடிப்படையான ஒரு ஆர்வம் கூட அவர்களிடம் இல்லை. 

இந்த ஒரு காரணத்தினால் தான் தமிழில் திரும்பத்திரும்ப அகவயமான சிறுகதைகளே பெரும்பாலும் எழுதப்படுகின்றன. கணிசமான படைப்புகள் ஆண்பெண் உறவு எனும் சிறு வட்டத்திற்குள் அடங்குவதற்கான காரணம் இதுவேயாகும். வாழ்க்கையின் ஒரு பிரச்னையை காலம் முழுக்க அது என்னவாக இருக்கிறது என்று விரித்துப் பார்ப்பதற்கு வரலாறு தேவையாகிறது. அதன் அடிப்படைகள் மானுடத்திலும் இயற்கையிலும் காலவெளியிலும் எப்படி உள்ளன. என்று மேலும் விரிப்பதற்கு தத்துவம் தேவையாகிறது. 

அவ்வாறு விரித்து நோக்கும் திறனின்மையால் வாழ்வின் கணங்களை அப்படியே பதிவு செய்வது இலக்கியம் என்று நம்மவர் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் இயலாமைக்கு உகந்தவகையில் இலக்கியத்திற்கான வரையறையை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைச் சொல்லிச் சொல்லி நிறுவிக்கொண்டும் இருக்கிறார்கள். தமிழில் வரலாறுக்கும் தத்துவத்துக்கும் எதிரான இலக்கியவாதிகளின் அபிப்பிராயங்கள் அடிக்கடிக் காதில் விழும். குறிப்பாக நவீனத்துவர்கள் தங்களைநோக்கித் தாங்களே சுருங்கிக்கொண்டவர்கள். தங்களுக்குள் சுழன்றுகொண்டிருக்கும் உலகத்தை மட்டுமே எழுதியவர்கள்.  

இவர்களுக்கேற்ப தமிழில் வாசகர்களிலும் பெரும்பாலானவர்கள் வரலாறு, தத்துவம் ஆகியவற்றில் எந்த ஈடுபாடும் அடிப்படைப் பயிற்சியும் அற்றவர்கள். ஆகவே  இவர்கள் எழுதும் இந்த எளிய நேரடி வாழ்க்கைப்பதிவுகளையே இலக்கியம் என்று நம்பும் ஒரு கூட்டமும் திரண்டுள்ளது. ஆகவே இவர்கள் அளிப்பதை அவர்கள் பெற்றுக்கொள்ள, அவர்களுக்கு உகந்ததை இவர்கள் அளிக்க ஒருவகையான கைமாற்றமாக இங்கு தத்துவமற்றதும் வரலாறற்றதுமான ஓர் எழுத்து உருவாகி நிலைகொண்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் சிறுகதை வடிவம் ஓங்கியிருப்பதற்கும் நாவல் வடிவம் பின் தங்கியிருப்பதற்கும் காரணமே இந்த வரலாறின்மை தான்.

தமிழில் வரலாற்றை எழுத்தின் பொருளாகக் கொண்டவர்கள் இரண்டு வகையான படைப்பாளிகள். கல்கி, சாண்டில்யன் வகையிலான வரலாற்று மிகுகற்பனைப் புனைவுகள் அல்லது கற்பனாவாத வரலாற்றுப்புனைவுகள் (Historical Romance) எனும் எழுத்துவகை வரலாற்றை தன்னுடைய முதன்மைப் பேசுபொருளாக கொண்டுள்ளது. சென்ற நூற்றாண்டில் உருவான தமிழ்த்தேசிய அரசியலின் ஒரு பகுதியாக தமிழர் தொன்மை குறித்த  ஒரு பெருமிதம் தமிழ் உள்ளங்களில் உருவாக்கப்பட்டபோது இந்தியாவில் வேறெங்கும் இருப்பதை விட அதிகமான வரலாற்று மிகுபுனைவுகள் தமிழில் உருவாயின. 

இந்தியத் தேசிய எழுச்சியே இந்தியாவின் வரலாற்றைப் பற்றிய மிகை கற்பனைகளை உருவாக்குவதனூடாகத்தான் திரண்டு வந்தது என்பது நாம் அறிந்ததே. புகழ்பெற்ற ஆனந்த மடம் (பங்கிம் சந்திர சட்டர்ஜஜி) கூட ஒரு வரலாற்று மிகுபுனைவேயாகும். வரலாற்று மிகுபுனைவு வரலாற்றிலுள்ள தொன்மங்களின் அழகியலுக்கு மிக அணுக்கமானது என்பதும் இந்த வகை எழுத்து மேலோங்கியமைக்குக் காரணம். ஆனந்தமடம் ஒரு புராணம் என்றாலும் அது சரிதான்.

இந்தியாவின் ஒவ்வொரு மொழியிலும் தொடக்ககால நாவல்  என்பது வால்டர் ஸ்காட், அலெக்ஸாண்டர் டூமா போன்றவர்களின் நேரடிச் செல்வாக்கு கொண்ட வரலாற்று மிகுபுனைவாகவே இருந்திருக்கிறது. தமிழில் வரலாற்றை புனைவுக்கு எடுத்தாண்ட தொடக்ககால நாவல் என்றால் தி.சரவணமுத்துப் பிள்ளை எழுதிய மோகனாங்கியைச் சொல்லலாம். மலையாளத்தில் சி.வி.ராமன் பிள்ளையின் மார்த்தாண்டவர்மா, கன்னடத்தில் ஜி.வி.ஐயர் எழுதிய சாந்தலா போன்ற பல உதாரணங்கள். 

ஆனால் விரைவிலேயே அங்கெல்லாம் யதார்த்தவாத எழுத்து முறை மேலோங்கி ,அன்றாடச் சித்திரிப்பை நோக்கி புனைவு நகர்ந்தது. ஏனெனில் யதார்த்தவாதம் ஜனநாயக பண்புகளுக்கு மிக நெருக்கமானது சமுதாய சீர்திருத்த நோக்குக்கும் உகந்தது. யதார்த்தவாத எழுத்தில் சாதனைப் படைப்புகள் வங்கம், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் உருவாயின. தமிழில் அந்தவகையான எழுத்துமுறை புதுமைப்பித்தன் க.நா.சு வழியாகத் தொடங்கினாலும் அது எல்லைக்குட்பட்டதாகவே இருந்தது.

ஏனென்றால் தமிழில் அந்தக் காலத்தில்தான் தமிழர்களுக்குரிய தனி வரலாறு என்னும் கருத்தும், அவ்வரலாற்றுக்கு உள்ளுறையாக இருக்கும் சில பெருமித விழுமியங்கள் பற்றிய அக்கறையும் உருவாகத் தொடங்கின. அவற்றைப் பெருக்கி அரசியல் அதிகாரத்தையே பிடிக்கும் அளவுக்கு கட்சிகள் வளர்ச்சி கொண்டன. அதன் விளைவாக இங்கே தமிழர் பெருமிதம் சார்ந்து எழுதப்படும் வரலாற்று மிகபுனைவுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் அதிதீவிரமான வாசிப்பு இருந்தது. தமிழின் வரலாற்று மிகுபுனைவில் குறிப்பிடத்தக்கவை என்று எப்படியும் நூறு படைப்புகளைச் சொல்லமுடியும். இந்தியாவின் வேறெந்த மொழியிலும் இப்படி ஒரு வலுவான இலக்கிய வகைமையாக வரலாற்று மிகுபுனைவு இல்லை.

சென்ற இருபதாண்டுகளாக வார இதழ்களின் வீச்சு குறைந்தபோது மட்டும்தான் வரலாற்று மிகுபுனைவு சற்று பின்னடைவைச் சந்தித்தது. ஆயினும் கூட பாலகுமாரனின்  ‘உடையார்’, சு.வெங்கடேசனின் ‘வேள்பாரி’ போன்ற வரலாற்று மிகுபுனைவுகளில் செவ்வியல்தன்மை கொண்டவை எனத்தக்க படைப்புகள் சென்ற சில ஆண்டுகளில் உருவாகி, மிகப்பெரிய அளவில் வாசக ஏற்பை பெற்றவையாகவே நீடிக்கின்றன. 

வரலாற்று மிகுபுனைவு பொதுவாசிப்புக்குரிய எழுத்தின் ஒரு முதன்மையான வடிவமே .ஏதோ ஒருவகையில் உலக இலக்கியத்தில் அது இருந்துகொண்டும் இருக்கிறது. அது வாழ்க்கையல்ல, வாழ்க்கை குறித்த கற்பனைதான். ஆனால் அக்கற்பனைக்குள் அது தனக்கென சில விழுமியங்களை திரட்டிக்கொள்கிறது. சில அடிப்படைகளை கட்டமைத்துக்கொள்கிறது. அது ஒரு சமூகம் தன்னைத்தானே வரையறுத்துக் கொள்வதில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.

இன்னொரு வகையான வரலாற்று எழுத்தென்பது எழுத்தாளர்கள் தங்களுடைய சொந்த வாழ்வனுபவம் அல்லது தங்களுடைய குடும்பத்தின் அனுபவங்களிலிருந்து எழுதும் ஒருவகையான தன்னியல்பான வரலாற்றுத் தன்மை கொண்ட எழுத்து. ஒரு கிராமத்தின் வரலாறு அல்லது ஒரு பகுதியின்  வரலாற்றை இலக்கியமாக ஆக்குவது.  குறிப்பிட்ட அலகுக்குள் செயல்படும் வரலாறு இது. இதை சிறுவரலாறு அல்லது நுண்வரலாறு (Micro History) எனலாம்.

தமிழில் அவ்வாறு எழுதப்பட்ட நல்ல இலக்கியப் படைப்புகள் பல உள்ளன. கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், பூமணியின் பிறகு எனத்தொடங்கி ஒரு பட்டியலை நாம் போட முடியும் .ஆனால் இவை வரலாற்று பதிவுகளாக தன்னியல்பாக ஆகின்றனவே ஒழிய ஆசிரியருக்கு வரலாறு சார்ந்த ஒரு பிரக்ஞை இருப்பதாகவோ வரலாற்றின் முறைமையை ஒட்டி தன் புனைவை அளித்திருப்பதாக வோ அல்லது வரலாற்று எழுத்திலிருந்து தன்னுடைய புனைவிற்கான கருவிகளை எடுத்துக்கொண்டிருப்பதாகவோ கூறிவிட முடியாது. 

வரலாற்று எழுத்தைப் பற்றிய பிரக்ஞையின்மையால் என்ன இழப்பு புனைவெழுத்திற்கு உருவாகிறது என்று பார்த்தால், முதன்மையாக வரலாற்றெழுத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அடிப்படையான மாற்றங்கள் தெரியாமல் இருப்பதனால் புனைவெழுத்து அதற்குரிய மாற்றங்களை தன் கட்டமைப்பிலும் பார்வையிலும் உருவாக்க முடியாமல் ஆகிறது. நம்முடைய வரலாற்று மிகுபுனைவு எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் வரலாற்றின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை  எழுதிய ஸ்ரீநிவாஸ சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார் போன்றவர்களின் காலகட்டத்திலேயே நின்றுவிட்டவர்கள். திரும்பத் திரும்ப அந்த பெருவரலாற்றுச் சித்திரத்திலிருந்தே தங்களுடைய  புனைவுக்கான அடிப்படைகளை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இது அவர்களுடைய புனைவை பெருமளவுக்கு குறுக்குகிறது, அல்லது புதிய வாய்ப்புகளை நோக்கி அவர்கள் முன்நகர்வதை தடுத்துவிடுகிறது. 

வரலாற்று மிகுபுனைவுகளில் இயல்பாகவே இருக்கும் அம்சம் என்பது வீரவழிபாடு தான். தொடக்ககால வரலாற்று ஆசிரியர்கள் தாங்களும் அந்த வீர வழிபாட்டுப் பார்வையை கொண்டவர்கள். வரலாற்றிலேயே பொற்காலங்களை தேடுவதும், மாமன்னர்களையும் பெரிய ஆளுமைச்சித்திரங்களையும் கட்டமைப்பதும் அவர்களின் பார்வையாக இருந்தது. தமிழ் வரலாற்றுப்பரப்பில் ராஜராஜ சோழன் எப்படி ஒரு முதன்மை ஆளுமையாக மாறினார் என்று பார்த்தால் தொடக்க கால வரலாற்று ஆசிரியர்களிடம் இருந்த அந்த வீரவழிபாட்டுத்தன்மை அல்லது திருவுருவாக்கம் நமக்கு புரியவரும். அதைத்தான் நாம் கல்கியிலோ, சாண்டில்யனிலோ, பாலகுமாரன், சு.வெங்கடேசன் வரையிலோ பார்க்கிறோம். அதற்கப்பால் வரலாறு முன்நகர்ந்திருக்கிறது என்றும், நுண்வரலாற்று எழுத்தினூடாக இன்றைய வரலாற்று எழுத்துமுறை மேலும் மையமழிந்ததாகவும், மேலும் ஜனநாயகத்தன்மை கொண்டதாகவும் ஆகிவிட்டிருக்கிறது என்றும் அவர்களுக்குத் தெரியாமல் ஆகிறது. 

நவீனப் படைப்பாளிகளில் பெரும்பாலானவர்களிடம் இல்லாத புரிதல் இது. வரலாற்று எழுத்து இன்று முன்பு போல வரலாற்றின் ஒட்டுமொத்த பெருஞ்சித்திரங்களை உருவாக்குவது அல்ல. வரலாற்றை ஒன்றுக்குள் ஒன்றுக்குள் ஒன்றென விரிந்துகொண்டே செல்லும் ஒரு முடிவிலா சுழற்சியாக,  தனக்குள் தனக்குள் மடிந்துகொண்டே செல்லும் ஓர் ஆழமாக இன்றைய வரலாற்றெழுத்தாளர்கள் பார்க்கிறார்கள். நுண்வரலாற்றின் இயல்பு அது. இன்று சோழர் வரலாறு அல்ல, தஞ்சைபெரிய கோயிலின் வரலாறுதான் ஆய்வாளனின் ஆய்வுப்பொருள். அதிலுள்ள ஒரு சிற்பத்தின் வரலாறு, அச்சிற்பத்துடன் இணைந்துகொள்ளும் பண்பாட்டு உருவகங்களின் வரலாறு என அது விரியும்

நவீன எழுத்தாளர்களுக்கு நுண்வரலாறு குறித்த பிரக்ஞை இருக்கும் என்றால் ஒரு குறிப்பிட்ட பகுதியையோ, குறிப்பிட்ட வட்டத்தையோ சார்ந்து தங்கள் அனுபவங்களை ஒட்டி எழுதும் இலக்கிய படைப்பாளிகள் கூட தங்களுடைய பேசுபொருளை மிக ஆழத்திற்கு கொண்டு சென்று விட முடியும். அவற்றின் பல அடுக்குகளை அவர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் வாழ்க்கை மற்றும் பண்பாட்டுக் கூறுகளிலிருந்தே பெற்றுவிட முடியும். 

அவ்வாறு பெற்று எழுதப்பட்ட நவீன இலக்கியப்படைப்புகள் என் பார்வையில் எதுவுமே இல்லை. அதற்கான சிறு முயற்சியாவது இருந்த ஒரே படைப்பென்று பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் என்னும் நாவலை மட்டுமே சொல்ல முடியும். ஆனால் மிக விரைவிலேயே அந்த நாவல் ஆர்வமிழந்த எழுத்துமுறைக்கு சென்று தளர்வுறுவதைக்காண முடிகிறது. இன்று பார்க்கையில் நீல.பத்மநாபனின் தலைமுறைகளோ, சுந்தர ராமசாமியின் குழந்தைகள் ஆண்கள் பெண்களோ சற்று நுண்வரலாற்றுப் பிரக்ஞை இருந்திருந்தால் அடைந்திருக்க கூடிய பல்லடுக்குத்தன்மையும் ஆழமும் எத்தனை என்ற வியப்பும் இழப்புணர்வும் ஏற்படுகிறது.

வரலாற்றை ஒரு வரலாற்றாசிரியனாக அன்றி எழுத்தாளனாக மட்டுமே நின்று பார்க்கும் கோணமே என்னுடையது. இந்த எல்லையை எனக்கு நானே வகுத்துக்கொண்டதும் பல்வேறு குழப்பங்களிலிருந்து நான் விடுபட்டேன். ஒரு வரலாற்றுக் கேள்விக்கு வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பது மட்டுமே எனது பணியே ஒழிய, நானே அதற்கு விடை தேடுவது அல்ல. ஒரு வரலாற்றாசிரியனாக என்னை கற்பனை செய்துகொண்டு என்னுடைய குறைவான தகவல் அறிவைக்கொண்டு மிகுதியான நேரத்தை வீணடித்து ஆய்வுகள் எதிலும் ஈடுபடுவது அசட்டுத்தனம் என்பதை மிக இளமையிலேயே கற்றுகொண்டிருந்தேன்.

ஏனெனில் எனது இளமையில் நான் புனைவெழுத்திற்கு வரும் காலகட்டத்திலேயே கேரளத்தின் முதன்மையான வரலாற்றாசிரியர்கள் சிலருடன் நேரடியாக தொடர்பு கொண்டவனாக இருந்தேன். டாக்டர் எம்.கங்காதரன் அவர்கள் எனக்கு மிக  அணுக்கமானவர், என் ஆசிரியர் என்றே அவரைக் குறிப்பிட முடியும் அவரிடமிருந்துதான் வரலாற்றெழுத்து என்பது எப்படி நுண்வரலாற்றெழுத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது என்ற செய்தியையும் நான் அறிந்தேன். அதன்பின் எல்லாக்காலகட்டத்திலும் வரலாற்றாசிரியர்களுடன் விவாதிக்கக்கூடியவனாக ,பெரும்பாலும் அன்றாடம் சந்திக்கக்கூடியவனாகவே இருந்திருக்கிறேன்.

வரலாற்றிலுள்ள ஒரு புதிர் வரலாற்றின் எல்லைக்குள் இருந்து வளர்ந்து ஒரு மானுடப்பிரச்னையாக ஆகுமென்றால், கற்பனையினூடாக அதற்கு விரிவையும் விளக்கத்தையும் அளித்து அதை புனைவாக ஆக்கலாம், அதுவே என்னுடைய வழி என்று நான் வரையறுத்துக்கொண்டேன். புனைவெழுத்துக்கு முழுமையான வரலாறு தேவையில்லை, வரலாற்றின் ஒரு சாத்திதக்கூறு, ஒரு முகாந்திரம் மட்டுமே போதுமானது. நான் புனைவில் எடுத்தாளும் வரலாறு அவ்வளவுதான். 

இதையே தத்துவத்தைப்பற்றியும் நான் அதையே சொல்வேன். தத்துவம் என்பது ஒரு எழுத்தாளனாக என்னுடைய கேள்விகளை அருவமாக பின்னிக்கொண்டிருக்காமல் திட்டவட்டமான மொழிபுகளினூடாக வகுத்துக்கொள்வதற்கும் விரிவாக்கிக்கொள்வதற்கும் நாம் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு கருவி மட்டும்தான் இந்த தன்வரையறை தத்துவத்தின் முடிவில்லாத நுண்சிக்கல்களுக்குள் சென்று என் பொழுதை வீணடிக்காமல் என்னைக் காத்தது. தத்துவம் ஒரு மெய்த்தேடல் கொண்ட தனிமனிதனாகவும் , எழுத்தாளனாகவும் எனக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டுமே அவற்றில் ஈடுபடுபவனாக ஆனேன்.

இந்தக் காரணத்தினால் மெய்யான வரலாற்றாசிரியர்கள் மீதும் தத்துவ ஆசிரியர்கள் மீதும் பெருமதிப்பு கொண்டவனாகவும், அவர்கள் ஆற்றும் பணி என்ன என்று தெரிந்தவனாகவும் இருக்கிறேன். அந்தக் கோணத்தில் நான் வாசித்து பயனடைந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவர் முனைவர் வேதாசலம் அவர்கள். பாண்டிய நாட்டில் சமணம் என்ற அவருடைய பெருநூல் கடந்த பலநாட்களாக என் கையில் உள்ளது.

ஓர் அறிவியக்கவாதியாகவும், புனைவெழுத்தாளனாகவும் நான் வரலாற்றில் தேடுவது என்ன? அறிவியக்கவாதியாக நான் என் சிந்தனைகளுக்கான வரலாற்றுப் பின்புலத்தையும், என் தர்க்கத்துக்கான வரலாற்றுச் சான்றுகளையும் தேடுகிறேன். இதை வரலாற்றுத்தன்மை (Historicity) என்று சொல்வேன். வரலாறு நான் சொல்வதையே சொல்கிறது என என் கருத்துக்களுக்கேற்ப வரலாற்றைக் குறுக்கும் வரலாற்றுவாதம் (Historicism) எனக்கு ஏற்புடையது அல்ல.

புனைவெழுத்தாளனாக நான் வரலாற்றில் தேடுவது முதன்மையாக மானுடத்தருணங்களைத்தான். மாலிக் காபூருக்காக வீரபாண்டியன் தன் சகோதரன் சுந்தரபாண்டியனைக் காட்டிக்கொடுத்தான் என்பதும், ரங்கப்ப நாயக்கன் ஆற்றல்மிக்கவனாக இருந்தாலும் தன் அண்ணன் திருமலை நாயக்கனுக்கு  பணிந்தே இருந்தான் என்பதும் அளிக்கும் முரண்பாடுதான் என்னை தூண்டும் வரலாற்றுச்செய்திகள்.

அடுத்தபடியாக வலுவான படிமங்களை. வாதாபி கணபதி உண்மையில் எங்குள்ளது என்னும் செய்தி, அல்லது தஞ்சை பெரிய கோயிலின் சிற்பங்களில் ஏன் புத்தர் இருக்கிறார் என்பது எனக்கு முக்கியம். இறுதியாக வரலாறு தன்னை நிகழ்த்திக்கொள்வதிலுள்ள மாபெரும் தற்செயல் அளிக்கும் தரிசனம், அந்த தற்செயல் நிகழும்போதுள்ள நுணுக்கமான தர்க்க இசைவு அளிக்கும் திகைப்பு. நான் இதற்காகவே வரலாற்றாய்வை அணுகுகிறேன். என்னிடம் தமிழக வரலாற்றாய்வாளர்கள் பெரும்பாலானவர்களின் நூல்கள் உள்ளன. என் வாசிப்புமேஜையில் வரலாற்றாய்வு நூல் இல்லாமலிருப்பதே இல்லை.

ஒருவரலாற்று நூலை ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் படிக்க முடியாது. அவ்வாறு படிக்கத்தகுந்த முறையில் எழுதப்படும் வரலாற்று நூலென்பது பொது வாசகர்களுக்காக எழுதப்படும் ‘வரலாற்று விவரிப்பு நூல்’ மட்டுமே.  மனு பிள்ளையின் ஐவரி த்ரோன் போலவோ, கா.அப்பாத்துரையின் தென்னாட்டுப் போர்க்களங்கள் போலவோ, ராஜமாணிக்கனாருடைய மதுரை நாயக்கர் வரலாறு போலவோ. அவை பொதுவாசகர்களுக்காக எழுதப்படுபவை. கதைத்தன்மை கொண்டவை. கதைத்தன்மை என்பது கற்பனைக்கு இடமளிக்கும் சித்தரிப்பும், தகவல்களை சீராக இணைத்து உருவாக்கப்படும் ஒழுக்கும் கொண்டது.

மாறாக, வரலாற்று நூல்கள் தகவல்கள் செறிந்தவையாகவும் தகவல்களை குறிப்பிட்ட வகையில் அடுக்கி அவற்றினூடாக தர்க்கபூர்வமாக சில முடிவுகளை நோக்கி செல்லக்கூடியவையாகவும்தான் எழுதப்படும். தென்பாண்டி நாட்டில் சமணம் என்ற நூல் அத்தகையது. பாண்டியநாட்டிலுள்ள சமணசமய தொல்லியல்சின்னங்களைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் தொகுத்தளிக்கும் நூல் அது. ஒருவகையில் ஒரு சிறு கலைக்களஞ்சியம். அத்தகைய நூலை ஒரு பொது வாசகர் எப்படி வாசிப்பது?

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2025 11:35

தமிழ்விக்கி நான்காமாண்டு

தமிழ்விக்கி தூரன் விழா: அழைப்பிதழ், வருகைப்பதிவு தமிழுடன் இசை!

தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியம் தொடங்கப்பட்டு மூன்றாண்டு முடிந்து நான்காம் ஆண்டு நிகழ்கிறது. 2022 மே 8 அன்று தமிழ்விக்கி வாஷிங்டனில் தொடங்கப்பட்டது. இன்று அந்நிகழ்வுகள் அண்மைக்கால வரலாறாக ஆகிவிட்டிருக்கின்றன. நாங்கள் வெகுவாக முன்னகர்ந்துவிட்டிருக்கிறோம். எங்களை நிறுவிக்கொண்டிருக்கிறோம். அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கு நகர்ந்துள்ளோம்.

தமிழ்விக்கி உருவான காலம் மிக அண்மையதுதான், ஆனால் அன்று உருவாக்கப்பட்ட வம்புகள், எதிர்ப்புகள் எல்லாம் வரலாற்றில் துளியிலும் துளியாகக்கூட எஞ்சப்போவதில்லை. அது எப்போதுமே அப்படித்தான், வரலாறு எப்போதுமே சாதனைகளால் மட்டுமேயானது. தமிழ்க் கலைக்களஞ்சியம் உள்ளது, பெரியசாமித் தூரன் பெயர் உள்ளது, அன்று எழுந்த அரசியல்சார்ந்த வசைகளும் ஏளனங்களும் என்னென்ன என்று தேடினாலும் கிடைப்பதில்லை, தூரன் வருந்தி எழுதிய சில வரிகளில் இருந்தே அவற்றை ஊகிக்கமுடிகிறது.

இது எதையாவது நிகழ்த்த எண்ணும் அனைத்து இளைஞர்களுக்குமான பாடம். நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் உங்களுக்கு ஆதரவும் உருவாகும், பலமடங்கு சில்லறை எதிர்ப்புகளும் உருவாகும். அது மானுட இயல்பு. இந்தியா மிகத்தொன்மையான சமூகம், நாம் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு வாழ்பவர்கள். ஆகவே நம்மில் ஒருவர் வேறுபட்டிருப்பதை நாம் ஏற்பதில்லை. அவரை அழிக்க முயல்வோம். அதை கடந்துதான் எதையேனும் இங்கே எய்த முடியும்.

சென்ற இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் எங்கள் செயல்பாடுகளுடன் இணைந்துள்ளனர். அவர்கள் பலருக்கு தமிழ்விக்கி கடந்துவந்த பாதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்காக ஒரு சுருக்கமான அறிமுகமாக இந்த இணைப்புகளை அளிக்கிறேன்.

தமிழ்விக்கி என ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் எண்ணம் உருவானதற்குக் காரணம் தமிழ் விக்கிப்பீடியாவின் இயல்பான எல்லைதான். அதில் எவர் வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் திருத்தலாம். தன் சொந்த மொழிக்கொள்கைக்கு ஏற்ப பதிவுகளை மாற்றலாம். தரவுகளை திரிக்கலாம், வெட்டிச்சுருக்கலாம்.

எண்ணிப்பாருங்கள். க.நா.சுப்ரமணியம் தமிழ்ச்சிந்தனைகளின் தலைமகன்களில் ஒருவர். அவர் பற்றிய இந்த தமிழ்விக்கி பதிவு எத்தனை உழைப்புக்குப் பின் உருவாக்கப்பட்டிருக்கும். இதை விக்கிபீடியா பதிவுடன் ஒப்பிடுங்கள். எல்லா தரப்பைச் சேர்ந்த எல்லா முதன்மை ஆளுமைகள் பற்றிய பதிவும் இவ்வாறே அமைந்திருப்பதை எவரும் காணமுடியும். க.நா.சுவின் உலகுக்கு நேர் எதிரான உலகைச் சேர்ந்தவரான தேவநேயப் பாவாணர் பற்றிய கட்டுரையும் மிகப்பெரிய உழைப்பின் அடிப்படையில் உருவானது.

இவை இலக்கிய ஆர்வமும், தொடர்பயிற்சியும் கொண்டவர்கள் பலரின் கூட்டு முயற்சியால் எழுதப்பட்டவை. தொடர்ந்து பிழைகள் களையப்பட்டு இவை மேம்படுத்தவும் படுகின்றன. இவற்றை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவேன் என்றால், இந்தக் கட்டுரைகளை இவை பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாத ஒருவர் வந்து தனக்குத் தோன்றியபடி திருத்தவோ அழிக்கவோ சுருக்கவோ முடியும் என்றால், அந்த உழைப்புக்கு என்ன மதிப்பு? எவர் தொடர்ச்சியாக ஆர்வம் கொள்ள முடியும்?

விக்கியில் எழுதுபவருக்கு தனிப்பட்ட அடையாளம் இல்லை. சாதனை உணர்வு உருவாவதில்லை. ஆனால் பயனுள்ள ஒன்றைச் செய்தோம் என்னும் நிறைவு உண்டு. ஒரு மறைந்த எழுத்தாளரை வரலாற்றில் பதிவுசெயய்யும்போது மிக அவசியமான ஒன்றைச் செய்தோம் என்னும் பெருநிறைவை நான் அடைவதுண்டு. நான் அவரை தெரிவுசெய்வது என் நாற்பதாண்டுக்கால வாசிப்பால். இலக்கியத் தகுதியால். அப்படி தமிழ் விக்கிபீடியாவில் நான் எழுதும்போது எதுவுமே  தெரியாத ஒரு பரமமூடன் வந்து அவர் ஒன்றும் முக்கியமானவர் அல்ல என்று அதை வெட்டிச்சுருக்க முடியும் என்றால் எனக்கு என்ன மதிப்பு? ஒருவன் வந்து காழ்ப்புடன் மேலதிகமாக நான்கு வரி வசையை சேர்த்துவிடலாமென்றால் அறிவுலகப்பணி என்பதன் பொருள் என்ன?

30.12.21 அ.கா.பெருமாள் இல்லத்தில் தமிழ்விக்கி ஆசிரியர்குழு முதல்கூட்டம்

அத்துடன் இன்னொன்றும் உள்ளது. தமிழ் விக்கிபீடியாவில் ஒருவர் தன்னைப்பற்றி மிகையாக எதை வேண்டுமென்றாலும் எழுதலாம். ஓர் அறிஞர், ஒரு படைப்பாளி அவ்வாறு எழுதிக்கொள்ள மாட்டார். அத்துடன் அறிஞர் பற்றிய எழுத்தை அவர் மேல் காழ்ப்புகொண்டவர்கள் அழிப்பார்கள், சுருக்குவார்கள். பிறர் பற்றிய பதிவு அப்படியே இருக்கும். விளைவாக ஒன்றும் தெரியாமல் பொதுவாக தேடுபவர் அறிஞர் பற்றி எதிர்மறை எண்ணம் கொள்வார், சாதாரணமானவர் பற்றி மிகைமதிப்பும் கொள்வார். செயற்கை நுண்ணறிவு அறிஞர் பற்றிய வசைகளையும் சாமானியர் பற்றிய மிகையான கூற்றையும் காட்டுவதும் இதனால்தான்.

இதை அயல்மொழிச்சூழலில் இருந்து தமிழை அணுகுபவர்களிடம் காண்கிறேன். பலர் பொது விக்கிபீடியா பதிவைக்கொண்டு எந்தத் தகுதியும் அற்றவர்களை உயர்வாக நினைக்கிறார்கள். அறிஞர், கலைஞர்களை பற்றி எதிர்மறைப்பார்வை கொண்டுள்ளனர். தமிழ்விக்கிதான் சரியான வழிகாட்டலை இன்று அளிக்கிறது. தமிழ்விக்கி கறாராக ஒவ்வொருவரையும் அவர் செயல்படும் தளம் சார்ந்து மதிப்பிடுகிறது. அவர் அந்த தளத்தில் என்ன செய்துள்ளார் என்பதையே குறிப்பிடுகிறது. உண்மையில் இதுதான் தமிழ்ச்சூழலையும் ஆளுமைகளையும் சரியாக அறிமுகம் செய்வது, நமக்கும் பிறருக்கும். இதை தமிழ் விக்கியின் பதிவுகள் வழியாக எவரும் அறியலாம்.

ஆகவேதான் முறையான ஆசிரியர்குழுவும், தகுதிச்சோதனை செய்யப்பட்ட பங்களிப்பாளர் அணியும் கொண்ட ஓர் இணையக் கலைக்களஞ்சியம் தேவைப்பட்டது. தமிழ்விக்கி அதன் விளைவாகவே உருவானது. இன்று எவரும் இந்த தளத்தின் பதிவுகளை பிற பதிவுகளுடன் ஒப்பிடும் அடிப்படை அறிவுகொண்ட எவரும் உணரமுடியும்.

இதிலுள்ள மதிப்பீடுகள் தமிழ்விக்கி ஆசிரியர்குழுவுடையவை அல்ல, தமிழ்ச்சூழலில் பொதுவாக ஏற்கப்பட்டவைதான். ஆசிரியர் குழு அதை மதிப்பிட்டு சான்றளிக்கிறது. உதாரணமாக, ஒருவர் நவீனத் தமிழிலக்கியச் சூழலில் பங்களிப்பாற்றியவர் என்றால் அவர் அதில் என்ன பங்களிப்பாற்றினார் என்றே பார்க்கிறோம். (பார்க்க சி.சு.செல்லப்பா) ஒருவர் திராவிட இயக்கவாதி என்றால் அதில் அவர் பங்களிப்பு என்ன என்று பார்க்கிறோம். (பார்க்க இளங்குமரனார்) ஒருவர் கல்வியாளர் என்றால் கல்வித்துறையில் அவர் பங்களிப்பையே பார்க்கிறோம். (பார்க்க பொற்கோ)

இந்த நான்காண்டுகளிலேயே இந்த இணையக் கலைக்களஞ்சியத்தின் இடம் என்ன, பயன் என்ன என்பது ஐயமில்லாமல் நிறுவப்பட்டுவிட்டது. இந்தக் கனவை முன்னெடுக்க உதவிய நண்பர்கள் பலர். நிதி, உழைப்பு என மிகப்பெரிய ஆதரவு இதற்கு தேவைப்படுகிறது. இப்படி ஒரு பெருஞ்செயல் இத்தனை ஆண்டுகள் எந்த விதமான அமைப்பு ஆதரவு இல்லாமல் நிகழ்வதென்பது சாமானியமானது அல்ல, இந்தியச் சூழலில் வேறெங்கும் நிகழ்வதும் அல்ல. இதை அரசு செய்திருக்குமென்றால் பலகோடி ரூபாய் இதற்குள் செலவாகியிருக்கும்.

தமிழ்ச்சூழலில் மிகமிகச் சிறப்பாக நடத்தப்படும் இணையப்பக்கம் தமிழ்விக்கிதான், தொழில்நுட்பரீதியாகவும். ஏனென்றால் இதிலுள்ள மொத்த உழைப்பும் இலவசமாக அளிக்கப்படுவது. சேவைப்பணி அளவுக்கு எந்த பணியும் சிறப்பாக அமைவதில்லை என்பது என் அனுபவம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி. நாம் இணைந்து ஒரு வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் விக்கி தொடக்கவுரை தமிழ் விக்கி- விழா தமிழ் விக்கி- முதல்பதிவு தமிழ் விக்கி -சில கேள்விகள் தமிழ் விக்கி -அறிவிப்பு தமிழ் விக்கி பயனற்றதா? கடிதம் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் துவக்கவிழா புகைப்படங்கள் தமிழ்விக்கி மலேசியா தொடக்கம்

தமிழ்விக்கி தொடங்கப்பட்டபோது ஏராளமான அவதூறுகள், வசைகள், ஏளனங்கள் பொழிந்தன. ஏறத்தாழ 135 வசைக்கட்டுரைகள் வெளிவந்தன என தமிழ்விக்கியின் கணக்கு. பலவகையான தடைகள் உருவாக்கப்பட்டன. தொடக்கவிழாவுக்கு வருவதாகப் பெயர் தந்திருந்தவர்கள் அனைவருமே விழாவுக்கு ஒரு நாள் இருக்கையில் வரவில்லை என சொல்லிவிட்டனர். அவர்களுக்கு பிழையான செய்திகள் அளிக்கப்பட்டன. தமிழ்விக்கியை அரசு தடைசெய்யவேண்டும் என்றுகூட எழுதினார்கள். இன்று தமிழ்விக்கியின் இடம் என்ன என்பது ஐயமற நிறுவப்பட்டுவிட்டது.

இன்று, அன்று ஐயங்களையும் கசப்புகளையும் கொட்டியவர்கள், எதிர்ப்புகளை உருவாக்கியவர்கள் அனைவரையும் நோக்கி மீண்டும் நட்புக்கரங்களை நீட்டுகிறோம். இப்போது தமிழ்விக்கியின் விரிவான பதிவுகளை நோக்கும் எவருக்கும் அதன் தேவை என்ன, அதன்பின்னுள்ள அறிவியக்கம் என்ன என்பது தெரிந்திருக்கும். இந்தச் செயற்கை நுண்ணறிவின் காலகட்டத்தில் தமிழ்விக்கி போன்ற ஒரு பதிவு இல்லை என்றால் என்னாகும் என்றும் அவர்களால் ஊகிக்கமுடியும். பழைய சீற்றங்களை கைவிட்டு எங்கள் எதிர்காலத் திட்டங்களில் அவர்களும் பங்கெடுத்து உதவவேண்டும் என கோருகிறோம்.

ஏதேனும் வகையில் தமிழிலக்கியம் – பண்பாட்டுக்குப் பங்களிப்பாற்றுபவர்கள் மிகமிகக் குறைவானவர்களே. அவர்கள் அனைவருமே இலட்சியவாதிகள்தான். அரசியல் சார்ந்து பேசுபவர்களின் உண்மையான ஆர்வம் அரசியலே ஒழிய இலக்கியமோ பண்பாடோ அல்ல. ஏதேனும் செயலாற்றுபவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்கச் சிலர் மட்டுமே.

ஆகவே அரசியல்களுக்கு அப்பால், எல்லா கருத்துவேறுபாடுகளுடனும் இலக்கியம் மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

தமிழ்விக்கி – ஒரு பேட்டி தமிழ் விக்கி -ஒரு வெற்றிப்பயணம் தமிழ் விக்கி -ஒரு வெற்றிப்பயணம் தமிழ்விக்கி,நண்பர்களும் பகைவர்களும் தமிழ் விக்கி வம்புகள்

தமிழ் விக்கி, வாசகர்கள் என்ன செய்யலாம்?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2025 11:35

இன்ஷிராஹ் இக்பால்

இன்ஷிராஹ் இக்பால் (பிறப்பு: 1991) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், ஆசிரியர். அகில இலங்கை தேசிய கவி சம்மேளனம் 2013-ம் ஆண்டு நடத்திய விருது விழாவில் ‘காவியப் பிரதீப கவிச்சுடர்’ பட்டம்.

இன்ஷிராஹ் இக்பால் இன்ஷிராஹ் இக்பால் இன்ஷிராஹ் இக்பால் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2025 11:33

கடல், ஒரு காணொளி

கடல் திரைப்படமாக வந்து பத்தாண்டுகளுக்குப் பின் நாவல் வடிவம் வெளியாகியுள்ளது. அதன் தீவிரத்தை வாசித்துணர்ந்தவர்களின் கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் ஒன்று இந்த உளப்பதிவு. பாவம்- மீட்பு என்னும் இரு எல்லைகளுக்கு இடையே ஆடும் ஓர் ஆத்மாவின் அகக்கடல் அது. அதை உணர்ந்து பேசியிருக்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2025 11:31

Organizing – A letter

I have been watching your videos and reading your articles for more than a year, and I am so impressed by the way you present Vedantic ideas and issues of contemporary life. But what impressed me more is your success in organizing many people all over the world and getting things done

Organizing- A letter

உங்களின் வலைத்தளத்தில் “நான் இந்துவா?” என்ற கேள்விக்கான பதிலைப் படித்தேன். உணர்ச்சிவசப்பட வைத்தது. முக்கியமாக “உங்களுக்குக் கருப்பசாமி அல்லது சுடலைமாடனைப் பற்றி என்ன தெரியும்? ஏதாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா?” என்ற வரிகள் ஓங்கி மண்டையில் அடித்தாற் போல இருந்தது

நாட்டார் தெய்வங்களும் சம்ஸ்கிருதமும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2025 11:30

August 11, 2025

எகிப்திலிருந்து கற்றவை

எகிப்தின் மக்களையும் பண்பாட்டையும் பற்றிய சிறு உரை இது. ஒரு பயணியாக எகிப்துக்குச் சென்று, ஏற்கனவே நூல்கள் மற்றும் பயணக்குறிப்புகளுடன் இணைத்துக்கொண்டு அங்குள்ள வாழ்க்கையைப் பற்றிய அவதானிப்புகளை அடைவதுதான் இது. இந்த அவதானிப்புகள் பலசமயம் மிகக்கச்சிதமானவையாக, எதிர்காலத்தைக்கூட ஊகிக்கக்கூடியதாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஏனென்றால் நாம் ஒரு வருகையாளராக ‘பற்றற்ற’ நிலையில் அந்நிலத்தையும் வாழ்க்கையையும் பார்க்கிறோம். எகிப்து பலவகையிலும் நமக்கு அணுக்கமானது. அங்கே நான் கண்டவை எல்லாமே இந்தியாவுக்கான பாடங்களும்கூடத்தான்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2025 11:36

சென்னையில் இளம்பெண்களுக்கான நாவல் பயிற்சி முகாம்

சைதன்யாவும் அவள் தோழி கிருபா கிருஷ்ணனும் தொடங்கியிருக்கும் பெண்ணெழுத்துக்கான ஆங்கிலப் பதிப்பகமான Manasa Publications P Ltd சார்பாக ஒரு நாவல்போட்டியை அறிவித்துள்ளனர். 25 வயதுக்குக் குறைவான பெண்கள், மாணவிகளுக்காக ஒரு போட்டி. பிற பெண்களுக்கான இன்னொரு போட்டி. விருது ரூ 1 லட்சம். நூல்களை மானசா பதிப்பகம் வெளியிடும்.

அதன்பொருட்டு ஒரு நாவல் பயிற்சி முகாம் வரும் ஆகஸ்ட் 30, 31 ஆம் தேதிகளில் சென்னை அடையாறில் மானசா பதிப்பகம் அலுவலகத்தில் நிகழ்கிறது. நான் பயிற்சியை அளிக்கிறேன்.

இது எழுத எண்ணுபவர்கள் எழுதும் முறை, கருவை விரித்தெடுக்கும் முறை, நாவலை இறுதியாகத் தொகுத்துக்கொள்ளும் முறை ஆகியவற்றை எப்படி செய்வது என்பதற்கான பயிற்சி. காலை முதல் மாலை வரை ஒருநாள் பயிற்சி.

25 வயதுக்குக் குறைவான Young Adult களுக்கான வகுப்பு ஆகஸ்ட் 30. பிறருக்கான வகுப்பு ஆகஸ்ட் 31. முன்பதிவு செய்யவேண்டியது அவசியம். நபர் ஒருவருக்கு உணவுக்கான செலவு ரூ 300 கட்டவேண்டியிருக்கும்.

எழுத ஆர்வமுள்ள மாணவிகளை குறிப்பாக வரவேற்கிறோம்.

மேலதிகத் தகவல்களுக்கு connect@manasapublications.com. 7904952722

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2025 11:36

புக் பிரம்மா இலக்கிய விழா

நேருக்குநேர்

இந்த ஆண்டு புக்பிரம்மா விழாவுக்கு என் குடும்பத்தில் இருந்து மூன்றுபேர் வந்திருந்தோம். மானசா பதிப்பகத்துக்காகச் சைதன்யா. அஜிதனுக்கு ஓர் அரங்கு இருந்தது. நான் மூன்று அரங்குகளில் பேசினேன். அஜிதன், அவன் மனைவி தன்யா, சைதன்யா ஆகியோர் சென்னையில் இருந்து ஜி.எஸ்.எஸ்.வி.நவின், கிருபாலட்சுமி ஆகியோருடன் பெங்களூர் வந்தனர். கிருபாலட்சுமி பதிப்பாளர்களுக்கான ஓர் அரங்கின் தொகுப்பாளர்.

நான் நாகர்கோயிலில் இருந்து ஆகஸ்ட் ஏழாம் தேதி கிளம்பி பெங்களூர் சென்றேன். என் ரயில் ஒன்பதரை மணிக்குத்தான் பெங்களூர் விஸ்வேஸ்வரய்யா நிலையத்திற்குச் செல்லும். என் முதல் அரங்கு முதல்நாள் முதல் அரங்கு, மைய அரங்கும்கூட. பதினொரு மணிக்குச் சென்று சேர்வது கடினம். ஆகவே ஆர்.எம்.சதீஷ்குமார் (பெங்களூர் விஷ்ணுபுரம் வட்டம்) ஓசூருக்கு வந்தார். நான் காலை ஏழு மணிக்கே ஓசூரில் இறங்கி அவருடன் இணைந்துகொண்டேன். காரில் ஒன்பது மணிக்கெல்லாம் நிகழ்ச்சி நடந்த புனித யோவான் கல்லூரிக்கு வந்து சேர்ந்துவிட்டோம். அவர்களின் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில்தான் அனைவருக்கும் தங்குமிடம்.

தொடக்க அரங்கு புக்கர் விருது பெற்ற பானு முஷ்டக்கை கௌரவிக்கும் நோக்கம் கொண்டது. பானு முஷ்டக் புக்கர் பெறுவதற்குக் காரணம் ஜூரிகளில் ஒருவராக இருந்த கொரிய எழுத்தாளர் இலக்கியம் என்பது ஒரு களச்செயல்பாடாக மட்டுமே இருக்கவேண்டும் என்னும் எண்ணம் கொண்டவராக இருந்ததும், பானு முஷ்டக்கை ஒரு நேரடிக் களச்செயல்பாட்டாளராக தொடர்ச்சியாக முன்வைத்ததும்தான் . இஸ்லாமியப் பெண் + களச்செயல்பாட்டாளர் என்பது இன்று ஓர் உலகளாவிய ‘ஃபார்முலா’.

பானு முஷ்டக் ஒரு வழக்கறிஞர்தான். கேட்ட அனுபவங்களை நேரடியாகக் கதையாக்கியவர். அக்கதைகள் கன்னடத்தில் தட்டையான மொழி கொண்ட அனுபவப்பதிவுகளாகவே பார்க்கப்பட்டன என்றனர். அவற்றை தீபா பஸ்தி நவீன ஆங்கிலப் புனைவுமொழியில் மொழியாக்கம் செய்து முன்வைத்தார். புக்கர் வரை சென்றமைக்கு அந்த மொழியாக்கமே முதன்மைக் காரணம் என்னும் பேச்சு கன்னடச்சூழலில் எழுந்தது. மொழிபெயர்ப்பாளர் தொடர்ச்சியாக வேறு அரங்குகளில் புகழப்பட்டார்.

பானு முஷ்டக் அதனால் கடுமையாகச் சீண்டப்பட்டிருக்கிறார் என தெரிந்தது. மேடையில் மொழிபெயர்ப்பாளருக்கு எதிராக வெடித்தார். மொழிபெயர்ப்பாளர் தன்னை ஓர் ‘இணை எழுத்தாளர்’ என கருதக்கூடாது, அவரோ மற்றவர்களோ அப்படிச் சொல்வது காப்புரிமைச் சட்டப்படி குற்றம், வழக்கு தொடுப்பேன் என்றெல்லாம் குமுறினார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பதறிவிட்டார். நல்லவேளையாக தீபா பஸதி மேடையில் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அந்த அரங்கில் முழுமையாகவே அமைதியாக இருந்தார். ஆகவே முதல்மேடையில் ரசாபாசமான விவாதம் நிகழவில்லை. தீபாவின் அந்த உறுதி எனக்கு பிடித்திருந்தது.

என் அரங்கில் தமிழின் சார்பில் நானும் தமிழவனும் கலந்துகொண்டோம். சுசித்ரா ராமச்சந்திரன் தொகுத்து வழங்கினார். கன்னடத்தில் இருந்து ஜெயந்த் காய்கினி, தெலுங்கில் இருந்து மிருணாளினி, மலையாளத்தில் இருந்து கே.ஆர்.மீரா. இந்திய இலக்கியத்தின் பன்மொழிச்சூழல் குறித்த விவாதம். புக்பிரம்மா அமைப்பின் மைய நோக்கம் மொழிகளுக்கிடையேயான உரையாடல்தான்.

கிரீஷ் காசரவள்ளி

கூடுதலாக நான் இரண்டு விஷயங்கள் சொன்னேன். ஒன்று, பன்மொழிச்சூழல் எழுத்தாளர் தன் மொழியை இன்னொரு மொழியினூடாகப் பார்க்க வழிசெய்கிறது. ஆகவே தேய்வழக்குகளை தவிர்க்கமுடிகிறது. மொழிக்கலவை அழகியல்ரீதியாக ஒரு புதிய மொழிப்பிராந்தியத்தை, அதன் வேடிக்கையை உருவாக்க உதவுகிறது.

பொதுவாக இந்த வகை மேடைகள் எழுத்தாளர்களை ‘ஷோகேஸ்’ செய்வதுதானே ஒழிய தீவிர விவாதங்கள் நிகழமுடியாது. ஆகவே உறுதியாகச் சில விஷயங்களை மேலதிகச் சிந்தனைக்காக சொல்லிவைப்பதே சிறப்பானது. நான் இரண்டு விஷயங்கள் சொன்னேன். தூய்மை, தெளிவு என்னும் இரண்டு விஷயங்களும் இலக்கியத்துக்கு எதிரானவை. கலப்பு, மயக்கம் என்னும் இரண்டு விஷயங்களே மேலான இலக்கியத்தை உருவாக்குகின்றன. நான் தொடர்ந்து பேசிவரும் கருத்துக்கள்தான் அவை.

ஜெயந்த் காய்கினி உணர்ச்சிகரமாக தன் பன்மொழித்தன்மையைப் பேசினார். (அவர் கொங்கிணியை தாய்மொழியாகக் கொண்டவர், கன்னடத்தில் எழுதுபவர். பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களுக்கு கன்னடப் பாடல்களை அவர்தான் எழுதியிருக்கிறார். அவரை கன்னட அசோகமித்திரன் என்று சொல்லமுடியும். மென்மையான கேலி கொண்ட அடக்கமான கதைகளை எழுதியவர்)

தமிழகத்தில் இருந்து எழுத்தாளர்கள் தியடோர் பாஸ்கரன், சுகுமாரன், பெருமாள் முருகன், யுவன் சந்திரசேகர், பா.ராகவன், மருதன், சுனில் கிருஷ்ணன், க.மோகனரங்கன், எதிர்வு சிவக்குமார், கமலாலயன், குணா கந்தசாமி, அ.ராமசாமி,சல்மா, ரம்யா (நீலி இணைய இதழ்), எல்.சுபத்ரா, லாவண்யா சுந்தரராஜன், அகரமுதல்வன், லட்சுமி சரவணக்குமார், மயிலன் சின்னப்பன், இமையம், அரிசங்கர்,எம்.கோபாலகிருஷ்ணன், செந்தில் ஜெகந்நாதன், லட்சுமிஹர், நித்யா எஸ், சித்ரா பாலசுப்ரமணியம், பச்சையப்பன், என்.சொக்கன், சுப்ரமணி ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தெள்ளே யெனுகு வெளியீடு

ஆய்வாளர்கள் ரவிக்குமார், பாலுச்சாமி (பாரதிபுத்திரன்), திருமூலர் முருகன், எம்.ஏழுமலை, கே.பி.அம்பிகாபதி, ஆர்.காமராசு, கிருங்கை சேதுபதி, பெரியசாமி ராஜா, என்.ரத்னகுமார், பக்தவத்ஸலபாரதி ஆகியோரும் வெவ்வேறு பண்பாட்டு ஆய்வு அமர்வுகளில் கலந்துகொண்டார்கள். நான் பாலுச்சாமியை இதுவரை நேரில் சந்தித்ததில்லை, இப்போதுதான் பார்த்தேன்.

அஜிதனுக்கு இது முதல் இலக்கிய விழாவின் அரங்கு. முதன்மையான பேரரங்கில் பால் சகரியா(மலையாளம்), எச்.எஸ்.சிவப்பிரகாஷ் (கன்னடம்), வோல்கா (தெலுங்கு) மூத்த எழுத்தாளர்களுடன் கலந்துகொண்டான். குரலில் பணிவும் கொஞ்சம் நடுக்கமும் இருந்தாலும் விரிவான பார்வையுடன், சுருக்கமான சொற்களில் தன் கருத்தை முன்வைத்தான். அரங்கில் தன்னியல்பான கைத்தட்டல் எழுந்தது. இந்திய அரங்கில் அத்தகைய இளம் குரல்கள் அரிதாகவே எழுகின்றன. அதிலும் இலக்கியவாதியாக எழும் குரல்கள் மேலும் குறைவு.

பன்றிவேட்டை வெளியீடு

இந்த விழாவில் நான் கண்ட ஒன்று, தமிழ்விக்கியின் பங்கு. இன்று கூகிள் தமிழ்விக்கி பதிவுகளை 90 சதவீதம் சரியாக மொழியாக்கம் செய்து காட்டிவிடுகிறது. வேற்று மொழி எழுத்தாளர்கள் தமிழ் எழுத்தாளர்களை விரிவாக தமிழ்விக்கி வழியாகவே அடையாளம் கண்டுகொண்டார்கள். அத்தகைய விரிவான பதிவு பலமொழிகளில் நவீன எழுத்தாளர்களுக்கு இல்லை. தமிழ்விக்கி நாங்கள் நடத்தும் கலைக்களஞ்சியம் என்றே தெரியாமல் என்னிடம் பலர் அதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தனர். பங்ளாபீடியா போல அது தமிழக அரசு நடத்துவது என்று இரண்டுபேர் சொன்னார்கள்.

சரி, ஒருவர் தனக்கான ஒரு இணையப்பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாமே? அல்லது விக்கிபீடியா பக்கம் இருக்கலாமே? என்ன பிரச்சினை என்றால் அவை எல்லாமே ஒரே மாதிரி இருக்கும். வெறும் தகவல்களுடன். பல சமயம் கல்வியாளர்கள் மிகப்பெரிய தன்வரலாற்றுக் குறிப்பை வைத்திருப்பார்கள். எல்லாமே ஒரே போல புகழ்மொழிகளுடன், வெவ்வேறு பட்டங்கள் மற்றும் சிறப்புகளுடன் இருக்கும்.  செயற்கைநுண்ணறிவை கேட்டால் அனைவரைப்பற்றியும் ஒரே போன்ற புகழ்மொழியைத்தான் சொல்லும், காரணம் இந்த பதிவுகள்.

ஓர் இலக்கிய விழாவின் அமைப்பாளருக்குத் தேவை ஒருவரின் உண்மையான இடம் என்ன, அவருடைய சரியான பங்களிப்பு என்ன என்பதைப் பற்றிய மதிப்பீடு. பலசமயம் அதை தனிப்பட்ட முறையில் விசாரித்தே அறிகிறார்கள். இந்தியச் சூழலில் அதுவும் கடினமானது. அமைப்பாளர்கள் தங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒருவரிடம் புதியவர்களை பரிந்துரைக்கக் கேட்பார்கள். அந்த பரிந்துரைப்பவர் ஒரு சிறுவட்டத்திற்குள் இருந்து பரிந்துரைக்கத் தொடங்குவார். அவர் ஓர் அதிகாரமாக ஆவார். அவரை நம்பி அழைக்கவேண்டியதுதான்.

தமிழ்விக்கி எந்த கருத்தியல் பாரபட்சமும் இல்லாமல் ஒருவர் செயல்படும் களத்தில் அவருடைய பங்களிப்பு என்ன, அவர் இடம் அவருடைய தரப்பில் என்ன என்று சொல்லி தரவுகளை அளிக்கிறது. ஓர் ஆசிரியர்குழுவால் சேகரிக்கப்பட்டு ஏற்கப்பட்ட தரவுகளும் ,பரிந்துரைகளும்தான் அவை.  தமிழ்விக்கி மேல் தமிழில் பலருக்கு உள்ள சீற்றமும் அது அந்த மதிப்பீட்டையும் அளிக்கிறது என்பதே.

இந்த விழாவை ஒட்டியும் சிறு விவாதம், மனுஷ்யபுத்திரன் பதிப்பாளராக விழாவுக்கு அழைக்கப்பட்டதை அவமதிப்பாக எண்ணி அவர் எழுதியிருந்ததை நண்பர்கள் சுட்டிக்காட்டினர். இந்த விழாவின் விருந்தினர் பட்டியல் எத்தனை விரிவானது என்று எவரும் பார்க்கமுடியும், அதில் அரசியலோ முன்முடிவுகளோ இருக்க வாய்ப்பில்லை என உணரவும் முடியும். ஆனால் இத்தனை பெரிய ஒரு பட்டியலில் கொஞ்சம் இயந்திரத்தன்மையும் வந்துவிடும்.

மனுஷ்யபுத்திரன் பதிப்பாளராக மட்டும் அழைக்கப்பட்டது பிழைதான். ஆனால் இத்தகைய பிழைகள் இன்றி எந்த விழாவையும் நடத்தமுடியாது. விஷ்ணுபுரம் விழாக்கள் சிறியவை, ஆகவே கூடுமானவரை பிழைகள் இல்லை. பெரிய விழாக்களில் பல அடுக்குகளாக பலர் பணியாற்றுவார்கள். அனைவரும் தகுதியானவர்கள் என சொல்லமுடியாது. அனைவரையும் முழுமையாக ஒருங்கிணைப்பதும் இயல்வதில்லை. இதையே தமிழக அரசின் விழாக்கள் பற்றியும் சொல்வேன்.

நாங்கள் விழாக்களை நடத்துபவர்கள், ஆகவே எந்தெந்த விததில் எல்லாம் பிழை நிகழும் என எண்ணி எண்ணி திருத்திக்கொண்டே இருப்போம். விஷ்ணுபுரம் விழாக்கள் மிகக்கச்சிதமானவை, ஆனால் எல்லா ஆண்டும் ஏதேனும் பிழையும் நிகழ்ந்திருக்கும். எத்தனை கவனமாக இருந்தாலும் ஏதோ ஒன்று நிகழும். இத்தகைய விழாக்கள் எவையாயினும் அவற்றுக்குப் பின்னாலுள்ள நல்லெண்ணம், அவற்றின் விளைவாக நிகழும் இலக்கிய மாற்றம் ஆகியவற்றை மட்டுமே கருத்தில்கொண்டு அணுகுவதே முறையானது.

இப்பிழை எப்படி நிகழ்கிறது? எவரை அழைக்கலாம் என்னும் கேள்வியை அமைப்பாளர்கள் பலரிடம் கேட்பதுண்டு. பெயர்கள் மட்டுமே அளிக்கப்படும். புக்பிரம்மா விழாவில் நாலைந்துபே பெயர்களை பரிந்துரை செய்தனர் என அறிந்தேன். மனுஷ்யபுத்திரன் கவிஞர், பதிப்பாளர் என அதில் இருந்திருக்கும். நிகழ்வுப்பட்டியல் தயாரிப்பவர் பதிப்பாளர் அரங்குக்கு ஆள்தேவை என்றால் சட்டென்று மனுஷ்யபுத்திரன் பெயரை சேர்த்துவிடுவார். இது இயந்திரத்தனமாக நிகழ்வது.

மனுஷ்யபுத்திரன் எத்தகைய பெருங்கவிஞர் என அந்த அயல்மொழியினருக்கு தெரிய வாய்ப்பில்லை. இணையத்தில் விரிவாகத் தேடினாலோ, எவரிடமாவது கேட்டிருந்தாலோ தெரிந்திருக்கும். நான் எந்த அரங்கிலும் தமிழின் பெருங்கவிஞர் என அவரைச் சொல்வதுண்டு. ஆனால் விழா அமைப்பாளர்கள் கிட்டத்தட்ட நாநூறு விருந்தினரையும் அப்படி விரிவாகத் தேட வாய்ப்பில்லை.அதனால் நிகழும் பிழை இது.

தமிழ்விக்கியின் இடம் அங்கேதான். இந்த பட்டியல் தயாரிக்கப்படும்போது மனுஷ்யபுத்திரனுக்கு தமிழ்விக்கி பதிவு இல்லை. அவர் தமிழ்விக்கி பற்றி கடுமையான எதிர்மனநிலையில் இருந்தார். ஆகவே அவர் பற்றிய தரவுகள் கிடைக்கவில்லை. பின்னர் வெவ்வேறு இடங்களில் சேகரித்தே அவர் பற்றிய பதிவு போடப்பட்டது. இன்று அவர் எவர் என எவருக்கும் அப்பதிவு காட்டிவிடும் (See மனுஷ்ய புத்திரன்)

இந்த அரங்குகளில் தீவிர விவாதம் நிகழமுடியாது என்பதை பங்கேற்பவர் அறியலாம். இவை இலக்கியவிழாக்கள்தான். தமிழ் எழுத்தாளர்கள் பிறமொழி எழுத்தாளர்களுடன் அறிமுகம் கொள்ள, உரையாட இது ஒரு வாய்ப்பு. தமிழ் எழுத்தாளர்களை இந்திய மொழிச்சூழலில் முன்வைப்பதற்கான வாய்ப்பு. அடிப்படையான சில கருத்துக்களை முன்வைக்கலாம். கூடுமானவரை சுருக்கமாக அவற்றை முன்வைக்கவேண்டும். ஒருவருக்கு கூட்டு அரங்கில் கிடைப்பது அதிகபட்சம் பத்து நிமிடங்களே.

இத்தகைய அரங்குகளில் பொதுவாக கடுமையான எதிர்விமர்சனங்களுக்கு இடமில்லை. ஏனென்றால் அவற்றை விவாதித்து நிறுவ வாய்ப்பில்லை. கூடுமானவரை தமிழில் என்ன நிகழ்கிறது என சொல்லவேண்டும். எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லவேண்டும். திரும்பத் திரும்ப அப்படி உச்சரிக்கப்படும் பெயர்களே நிலைகொள்கின்றன. “Presenting the trend and names’ என்பதே இங்கே நாம் செய்யவேண்டியது. சென்ற ஆண்டு தொடக்கநிகழ்வில் நான் ஏழுநிமிடங்களில் முழுமையாகவே அதை அளித்தேன். தமிழ் எழுத்தாளர்களுக்கு பொதுவாக இத்தகைய விழா அரங்குகள் பழக்கமில்லை. அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியதுதான்.

லட்சுமி சரவணக்குமாரின் பன்றிவேட்டை நாவலின் வெளியீட்டுவிழா அங்கே அரங்கில் (மீண்டும்) நிகழ்ந்தது. நூலை நான் வெளியிட்டு ஒரு சில சொற்களில் அவரை அறிமுகம் செய்தேன். அகரமுதல்வனும் , லட்சுமி சரவணக்குமாரும் பேசினார்கள். வெவ்வேறு அரங்குகளில் தமிழிலக்கியம் குறித்த உரையாடல்கள் நிகழ்ந்தன. அதையொட்டிய வெளிவிவாதங்களும் நிகழ்ந்துகொண்டிருந்தன. நண்பர்களை ஆங்காங்கே சந்தித்துக்கொண்டே இருந்தோம்.

நான் ஓரிரு மலையாளம், தெலுங்கு அரங்குகளில் அமர்ந்திருந்தேன். பதஞ்சலி சாஸ்திரி எழுதிய ஒரு சிறுகதையின் நாடகவடிவத்தைப் பார்த்தேன்.மூன்று இசைநிகழ்வுகள், ஒரு கதகளி நிகழ்வை பார்த்தேன். கூடுமானவரை தெலுங்கு, கன்னட எழுத்தாளர்களைச் சந்திக்கவும் பேசவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன். அண்மையில் என் படைப்புகள் தெலுங்கிலும் கன்னடத்திலும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதனால் அறிமுகமும் உரையாடலும் எளிதாக இருக்கிறது. இப்போது கிட்டத்தட்ட தென்னிந்தியாவெங்கும் இலக்கியச் சூழலில் நன்கு அறியப்படுகிறேன் என நினைக்கிறேன்.

 

இந்த அறிமுகங்கள் இருமுகம் கொண்டவை. நானும் அவர்களை அறிமுகம் செய்துகொள்கிறேன். என்னுடைய பார்வைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. உதாரணமாக, தெலுங்கு இலக்கியச் சூழலைப் பற்றிய என் எண்ணம் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. தெலுங்கில் இலக்கியம் என்பது தீவிரமானதாக இல்லை என்னும் எண்ணம் எனக்கிருந்தது. ஆனால் இன்று தென்னிந்தியாவிலேயே தெலுங்கு மொழியில்தான் இலக்கியத்தை மிகத்தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது.

என் வெள்ளையானை நாவலின் தெலுங்கு மொழியாக்கம் (எஸ்.குமார்) தெள்ள ஏனிகு அரங்கில் வெளியிடப்பட்டது. நான், அவினேனி பாஸ்கர், எஸ்.குமார் ஆகியோர் பேசினோம். நான் சாயா புக்ஸில் அமர்ந்து தெலுங்கு வாசகர்களைச் சந்தித்து, நூல்களில் கையெழுத்திட்டு கொடுத்தேன். ‘நீங்கள் இன்று கிட்டத்தட்ட ஒரு தெலுங்கு எழுத்தாளர்’ என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

இந்த ஆண்டுக்கான புக்பிரம்மா விருது மலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீராவுக்கு வழங்கப்பட்டது. முதல்நாள் எங்களுடன் அமர்வில் இருக்கையிலேயே அதைச் சொல்லிவிட்டனர். கே.ஆர்.மீரா தமிழில் அவருடைய நாவல்கள் வழியாக பரவலாக அறியப்பட்டவர்.

தேவதேவன் பார்வையாளராக வந்திருந்தார். என் அறையில் என்னுடன் மூன்றுநாட்கள் தங்கினார். இந்த விழாவில் பெரும்பகுதி உரையாடல் தெலுங்கு எழுத்தாளர்கள், வாசகர்களுடன் நிகழ்ந்தது.(நான் செல்போன் பார்த்துக்கொண்டு செல்கையில் அஜிதன் முன்னால் வந்து ‘நமஸ்காரண்டி’ என்றான். நான் நமஸ்காரம் என பேச ஆரம்பித்து, திடுக்கிட்டு, பின் சிரித்துவிட்டேன்.) ஒன்பதாம்தேதி இரவு மழை ஓய்ந்தபின் ஓர் காலியான அரங்கில் ஒரு நீண்ட உரையாடல். பத்தாம் தேதி இரவில் பிரசாத் சூரி உள்ளிட்ட நான்கு இளம் தெலுங்கு எழுத்தாளர்கள் அறைக்கு வந்தனர். இரவு ஒரு மணி வரை பேசிக்கொண்டிருந்தோம்.

எந்த விழாவையும்போல அரட்டைகள், டீக்கடைப்பேச்சுக்கள், திரும்பத் திரும்ப தெரிந்தவர்களைச் சந்திக்கும் சிரிப்புகள் என மூன்றுநாட்கள் கொண்டாட்டமான மனநிலை. மூன்றாம் நாள் பிரிதலில் சோர்வு. ஆனால் உடனே உற்சாகம், இன்னும் நான்கு நாட்களில் ஈரோட்டில் தூரன் விழாவில் அனைவரையும் மீண்டும் சந்திக்கவிருக்கிறேன்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2025 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.