தமிழ்விக்கி நான்காமாண்டு
தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியம் தொடங்கப்பட்டு மூன்றாண்டு முடிந்து நான்காம் ஆண்டு நிகழ்கிறது. 2022 மே 8 அன்று தமிழ்விக்கி வாஷிங்டனில் தொடங்கப்பட்டது. இன்று அந்நிகழ்வுகள் அண்மைக்கால வரலாறாக ஆகிவிட்டிருக்கின்றன. நாங்கள் வெகுவாக முன்னகர்ந்துவிட்டிருக்கிறோம். எங்களை நிறுவிக்கொண்டிருக்கிறோம். அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கு நகர்ந்துள்ளோம்.
தமிழ்விக்கி உருவான காலம் மிக அண்மையதுதான், ஆனால் அன்று உருவாக்கப்பட்ட வம்புகள், எதிர்ப்புகள் எல்லாம் வரலாற்றில் துளியிலும் துளியாகக்கூட எஞ்சப்போவதில்லை. அது எப்போதுமே அப்படித்தான், வரலாறு எப்போதுமே சாதனைகளால் மட்டுமேயானது. தமிழ்க் கலைக்களஞ்சியம் உள்ளது, பெரியசாமித் தூரன் பெயர் உள்ளது, அன்று எழுந்த அரசியல்சார்ந்த வசைகளும் ஏளனங்களும் என்னென்ன என்று தேடினாலும் கிடைப்பதில்லை, தூரன் வருந்தி எழுதிய சில வரிகளில் இருந்தே அவற்றை ஊகிக்கமுடிகிறது.
இது எதையாவது நிகழ்த்த எண்ணும் அனைத்து இளைஞர்களுக்குமான பாடம். நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் உங்களுக்கு ஆதரவும் உருவாகும், பலமடங்கு சில்லறை எதிர்ப்புகளும் உருவாகும். அது மானுட இயல்பு. இந்தியா மிகத்தொன்மையான சமூகம், நாம் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு வாழ்பவர்கள். ஆகவே நம்மில் ஒருவர் வேறுபட்டிருப்பதை நாம் ஏற்பதில்லை. அவரை அழிக்க முயல்வோம். அதை கடந்துதான் எதையேனும் இங்கே எய்த முடியும்.
சென்ற இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் எங்கள் செயல்பாடுகளுடன் இணைந்துள்ளனர். அவர்கள் பலருக்கு தமிழ்விக்கி கடந்துவந்த பாதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்காக ஒரு சுருக்கமான அறிமுகமாக இந்த இணைப்புகளை அளிக்கிறேன்.
தமிழ்விக்கி என ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் எண்ணம் உருவானதற்குக் காரணம் தமிழ் விக்கிப்பீடியாவின் இயல்பான எல்லைதான். அதில் எவர் வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் திருத்தலாம். தன் சொந்த மொழிக்கொள்கைக்கு ஏற்ப பதிவுகளை மாற்றலாம். தரவுகளை திரிக்கலாம், வெட்டிச்சுருக்கலாம்.
எண்ணிப்பாருங்கள். க.நா.சுப்ரமணியம் தமிழ்ச்சிந்தனைகளின் தலைமகன்களில் ஒருவர். அவர் பற்றிய இந்த தமிழ்விக்கி பதிவு எத்தனை உழைப்புக்குப் பின் உருவாக்கப்பட்டிருக்கும். இதை விக்கிபீடியா பதிவுடன் ஒப்பிடுங்கள். எல்லா தரப்பைச் சேர்ந்த எல்லா முதன்மை ஆளுமைகள் பற்றிய பதிவும் இவ்வாறே அமைந்திருப்பதை எவரும் காணமுடியும். க.நா.சுவின் உலகுக்கு நேர் எதிரான உலகைச் சேர்ந்தவரான தேவநேயப் பாவாணர் பற்றிய கட்டுரையும் மிகப்பெரிய உழைப்பின் அடிப்படையில் உருவானது.
இவை இலக்கிய ஆர்வமும், தொடர்பயிற்சியும் கொண்டவர்கள் பலரின் கூட்டு முயற்சியால் எழுதப்பட்டவை. தொடர்ந்து பிழைகள் களையப்பட்டு இவை மேம்படுத்தவும் படுகின்றன. இவற்றை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவேன் என்றால், இந்தக் கட்டுரைகளை இவை பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாத ஒருவர் வந்து தனக்குத் தோன்றியபடி திருத்தவோ அழிக்கவோ சுருக்கவோ முடியும் என்றால், அந்த உழைப்புக்கு என்ன மதிப்பு? எவர் தொடர்ச்சியாக ஆர்வம் கொள்ள முடியும்?
விக்கியில் எழுதுபவருக்கு தனிப்பட்ட அடையாளம் இல்லை. சாதனை உணர்வு உருவாவதில்லை. ஆனால் பயனுள்ள ஒன்றைச் செய்தோம் என்னும் நிறைவு உண்டு. ஒரு மறைந்த எழுத்தாளரை வரலாற்றில் பதிவுசெயய்யும்போது மிக அவசியமான ஒன்றைச் செய்தோம் என்னும் பெருநிறைவை நான் அடைவதுண்டு. நான் அவரை தெரிவுசெய்வது என் நாற்பதாண்டுக்கால வாசிப்பால். இலக்கியத் தகுதியால். அப்படி தமிழ் விக்கிபீடியாவில் நான் எழுதும்போது எதுவுமே தெரியாத ஒரு பரமமூடன் வந்து அவர் ஒன்றும் முக்கியமானவர் அல்ல என்று அதை வெட்டிச்சுருக்க முடியும் என்றால் எனக்கு என்ன மதிப்பு? ஒருவன் வந்து காழ்ப்புடன் மேலதிகமாக நான்கு வரி வசையை சேர்த்துவிடலாமென்றால் அறிவுலகப்பணி என்பதன் பொருள் என்ன?

அத்துடன் இன்னொன்றும் உள்ளது. தமிழ் விக்கிபீடியாவில் ஒருவர் தன்னைப்பற்றி மிகையாக எதை வேண்டுமென்றாலும் எழுதலாம். ஓர் அறிஞர், ஒரு படைப்பாளி அவ்வாறு எழுதிக்கொள்ள மாட்டார். அத்துடன் அறிஞர் பற்றிய எழுத்தை அவர் மேல் காழ்ப்புகொண்டவர்கள் அழிப்பார்கள், சுருக்குவார்கள். பிறர் பற்றிய பதிவு அப்படியே இருக்கும். விளைவாக ஒன்றும் தெரியாமல் பொதுவாக தேடுபவர் அறிஞர் பற்றி எதிர்மறை எண்ணம் கொள்வார், சாதாரணமானவர் பற்றி மிகைமதிப்பும் கொள்வார். செயற்கை நுண்ணறிவு அறிஞர் பற்றிய வசைகளையும் சாமானியர் பற்றிய மிகையான கூற்றையும் காட்டுவதும் இதனால்தான்.
இதை அயல்மொழிச்சூழலில் இருந்து தமிழை அணுகுபவர்களிடம் காண்கிறேன். பலர் பொது விக்கிபீடியா பதிவைக்கொண்டு எந்தத் தகுதியும் அற்றவர்களை உயர்வாக நினைக்கிறார்கள். அறிஞர், கலைஞர்களை பற்றி எதிர்மறைப்பார்வை கொண்டுள்ளனர். தமிழ்விக்கிதான் சரியான வழிகாட்டலை இன்று அளிக்கிறது. தமிழ்விக்கி கறாராக ஒவ்வொருவரையும் அவர் செயல்படும் தளம் சார்ந்து மதிப்பிடுகிறது. அவர் அந்த தளத்தில் என்ன செய்துள்ளார் என்பதையே குறிப்பிடுகிறது. உண்மையில் இதுதான் தமிழ்ச்சூழலையும் ஆளுமைகளையும் சரியாக அறிமுகம் செய்வது, நமக்கும் பிறருக்கும். இதை தமிழ் விக்கியின் பதிவுகள் வழியாக எவரும் அறியலாம்.
ஆகவேதான் முறையான ஆசிரியர்குழுவும், தகுதிச்சோதனை செய்யப்பட்ட பங்களிப்பாளர் அணியும் கொண்ட ஓர் இணையக் கலைக்களஞ்சியம் தேவைப்பட்டது. தமிழ்விக்கி அதன் விளைவாகவே உருவானது. இன்று எவரும் இந்த தளத்தின் பதிவுகளை பிற பதிவுகளுடன் ஒப்பிடும் அடிப்படை அறிவுகொண்ட எவரும் உணரமுடியும்.
இதிலுள்ள மதிப்பீடுகள் தமிழ்விக்கி ஆசிரியர்குழுவுடையவை அல்ல, தமிழ்ச்சூழலில் பொதுவாக ஏற்கப்பட்டவைதான். ஆசிரியர் குழு அதை மதிப்பிட்டு சான்றளிக்கிறது. உதாரணமாக, ஒருவர் நவீனத் தமிழிலக்கியச் சூழலில் பங்களிப்பாற்றியவர் என்றால் அவர் அதில் என்ன பங்களிப்பாற்றினார் என்றே பார்க்கிறோம். (பார்க்க சி.சு.செல்லப்பா) ஒருவர் திராவிட இயக்கவாதி என்றால் அதில் அவர் பங்களிப்பு என்ன என்று பார்க்கிறோம். (பார்க்க இளங்குமரனார்) ஒருவர் கல்வியாளர் என்றால் கல்வித்துறையில் அவர் பங்களிப்பையே பார்க்கிறோம். (பார்க்க பொற்கோ)
இந்த நான்காண்டுகளிலேயே இந்த இணையக் கலைக்களஞ்சியத்தின் இடம் என்ன, பயன் என்ன என்பது ஐயமில்லாமல் நிறுவப்பட்டுவிட்டது. இந்தக் கனவை முன்னெடுக்க உதவிய நண்பர்கள் பலர். நிதி, உழைப்பு என மிகப்பெரிய ஆதரவு இதற்கு தேவைப்படுகிறது. இப்படி ஒரு பெருஞ்செயல் இத்தனை ஆண்டுகள் எந்த விதமான அமைப்பு ஆதரவு இல்லாமல் நிகழ்வதென்பது சாமானியமானது அல்ல, இந்தியச் சூழலில் வேறெங்கும் நிகழ்வதும் அல்ல. இதை அரசு செய்திருக்குமென்றால் பலகோடி ரூபாய் இதற்குள் செலவாகியிருக்கும்.
தமிழ்ச்சூழலில் மிகமிகச் சிறப்பாக நடத்தப்படும் இணையப்பக்கம் தமிழ்விக்கிதான், தொழில்நுட்பரீதியாகவும். ஏனென்றால் இதிலுள்ள மொத்த உழைப்பும் இலவசமாக அளிக்கப்படுவது. சேவைப்பணி அளவுக்கு எந்த பணியும் சிறப்பாக அமைவதில்லை என்பது என் அனுபவம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி. நாம் இணைந்து ஒரு வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
தமிழ் விக்கி தொடக்கவுரை தமிழ் விக்கி- விழா தமிழ் விக்கி- முதல்பதிவு தமிழ் விக்கி -சில கேள்விகள் தமிழ் விக்கி -அறிவிப்பு தமிழ் விக்கி பயனற்றதா? கடிதம் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் துவக்கவிழா புகைப்படங்கள் தமிழ்விக்கி மலேசியா தொடக்கம்
தமிழ்விக்கி தொடங்கப்பட்டபோது ஏராளமான அவதூறுகள், வசைகள், ஏளனங்கள் பொழிந்தன. ஏறத்தாழ 135 வசைக்கட்டுரைகள் வெளிவந்தன என தமிழ்விக்கியின் கணக்கு. பலவகையான தடைகள் உருவாக்கப்பட்டன. தொடக்கவிழாவுக்கு வருவதாகப் பெயர் தந்திருந்தவர்கள் அனைவருமே விழாவுக்கு ஒரு நாள் இருக்கையில் வரவில்லை என சொல்லிவிட்டனர். அவர்களுக்கு பிழையான செய்திகள் அளிக்கப்பட்டன. தமிழ்விக்கியை அரசு தடைசெய்யவேண்டும் என்றுகூட எழுதினார்கள். இன்று தமிழ்விக்கியின் இடம் என்ன என்பது ஐயமற நிறுவப்பட்டுவிட்டது.
இன்று, அன்று ஐயங்களையும் கசப்புகளையும் கொட்டியவர்கள், எதிர்ப்புகளை உருவாக்கியவர்கள் அனைவரையும் நோக்கி மீண்டும் நட்புக்கரங்களை நீட்டுகிறோம். இப்போது தமிழ்விக்கியின் விரிவான பதிவுகளை நோக்கும் எவருக்கும் அதன் தேவை என்ன, அதன்பின்னுள்ள அறிவியக்கம் என்ன என்பது தெரிந்திருக்கும். இந்தச் செயற்கை நுண்ணறிவின் காலகட்டத்தில் தமிழ்விக்கி போன்ற ஒரு பதிவு இல்லை என்றால் என்னாகும் என்றும் அவர்களால் ஊகிக்கமுடியும். பழைய சீற்றங்களை கைவிட்டு எங்கள் எதிர்காலத் திட்டங்களில் அவர்களும் பங்கெடுத்து உதவவேண்டும் என கோருகிறோம்.
ஏதேனும் வகையில் தமிழிலக்கியம் – பண்பாட்டுக்குப் பங்களிப்பாற்றுபவர்கள் மிகமிகக் குறைவானவர்களே. அவர்கள் அனைவருமே இலட்சியவாதிகள்தான். அரசியல் சார்ந்து பேசுபவர்களின் உண்மையான ஆர்வம் அரசியலே ஒழிய இலக்கியமோ பண்பாடோ அல்ல. ஏதேனும் செயலாற்றுபவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்கச் சிலர் மட்டுமே.
ஆகவே அரசியல்களுக்கு அப்பால், எல்லா கருத்துவேறுபாடுகளுடனும் இலக்கியம் மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.
தமிழ்விக்கி – ஒரு பேட்டி தமிழ் விக்கி -ஒரு வெற்றிப்பயணம் தமிழ் விக்கி -ஒரு வெற்றிப்பயணம் தமிழ்விக்கி,நண்பர்களும் பகைவர்களும் தமிழ் விக்கி வம்புகள்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
