புக் பிரம்மா இலக்கிய விழா

இந்த ஆண்டு புக்பிரம்மா விழாவுக்கு என் குடும்பத்தில் இருந்து மூன்றுபேர் வந்திருந்தோம். மானசா பதிப்பகத்துக்காகச் சைதன்யா. அஜிதனுக்கு ஓர் அரங்கு இருந்தது. நான் மூன்று அரங்குகளில் பேசினேன். அஜிதன், அவன் மனைவி தன்யா, சைதன்யா ஆகியோர் சென்னையில் இருந்து ஜி.எஸ்.எஸ்.வி.நவின், கிருபாலட்சுமி ஆகியோருடன் பெங்களூர் வந்தனர். கிருபாலட்சுமி பதிப்பாளர்களுக்கான ஓர் அரங்கின் தொகுப்பாளர்.
நான் நாகர்கோயிலில் இருந்து ஆகஸ்ட் ஏழாம் தேதி கிளம்பி பெங்களூர் சென்றேன். என் ரயில் ஒன்பதரை மணிக்குத்தான் பெங்களூர் விஸ்வேஸ்வரய்யா நிலையத்திற்குச் செல்லும். என் முதல் அரங்கு முதல்நாள் முதல் அரங்கு, மைய அரங்கும்கூட. பதினொரு மணிக்குச் சென்று சேர்வது கடினம். ஆகவே ஆர்.எம்.சதீஷ்குமார் (பெங்களூர் விஷ்ணுபுரம் வட்டம்) ஓசூருக்கு வந்தார். நான் காலை ஏழு மணிக்கே ஓசூரில் இறங்கி அவருடன் இணைந்துகொண்டேன். காரில் ஒன்பது மணிக்கெல்லாம் நிகழ்ச்சி நடந்த புனித யோவான் கல்லூரிக்கு வந்து சேர்ந்துவிட்டோம். அவர்களின் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில்தான் அனைவருக்கும் தங்குமிடம்.
தொடக்க அரங்கு புக்கர் விருது பெற்ற பானு முஷ்டக்கை கௌரவிக்கும் நோக்கம் கொண்டது. பானு முஷ்டக் புக்கர் பெறுவதற்குக் காரணம் ஜூரிகளில் ஒருவராக இருந்த கொரிய எழுத்தாளர் இலக்கியம் என்பது ஒரு களச்செயல்பாடாக மட்டுமே இருக்கவேண்டும் என்னும் எண்ணம் கொண்டவராக இருந்ததும், பானு முஷ்டக்கை ஒரு நேரடிக் களச்செயல்பாட்டாளராக தொடர்ச்சியாக முன்வைத்ததும்தான் . இஸ்லாமியப் பெண் + களச்செயல்பாட்டாளர் என்பது இன்று ஓர் உலகளாவிய ‘ஃபார்முலா’.
பானு முஷ்டக் ஒரு வழக்கறிஞர்தான். கேட்ட அனுபவங்களை நேரடியாகக் கதையாக்கியவர். அக்கதைகள் கன்னடத்தில் தட்டையான மொழி கொண்ட அனுபவப்பதிவுகளாகவே பார்க்கப்பட்டன என்றனர். அவற்றை தீபா பஸ்தி நவீன ஆங்கிலப் புனைவுமொழியில் மொழியாக்கம் செய்து முன்வைத்தார். புக்கர் வரை சென்றமைக்கு அந்த மொழியாக்கமே முதன்மைக் காரணம் என்னும் பேச்சு கன்னடச்சூழலில் எழுந்தது. மொழிபெயர்ப்பாளர் தொடர்ச்சியாக வேறு அரங்குகளில் புகழப்பட்டார்.
பானு முஷ்டக் அதனால் கடுமையாகச் சீண்டப்பட்டிருக்கிறார் என தெரிந்தது. மேடையில் மொழிபெயர்ப்பாளருக்கு எதிராக வெடித்தார். மொழிபெயர்ப்பாளர் தன்னை ஓர் ‘இணை எழுத்தாளர்’ என கருதக்கூடாது, அவரோ மற்றவர்களோ அப்படிச் சொல்வது காப்புரிமைச் சட்டப்படி குற்றம், வழக்கு தொடுப்பேன் என்றெல்லாம் குமுறினார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பதறிவிட்டார். நல்லவேளையாக தீபா பஸதி மேடையில் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அந்த அரங்கில் முழுமையாகவே அமைதியாக இருந்தார். ஆகவே முதல்மேடையில் ரசாபாசமான விவாதம் நிகழவில்லை. தீபாவின் அந்த உறுதி எனக்கு பிடித்திருந்தது.
என் அரங்கில் தமிழின் சார்பில் நானும் தமிழவனும் கலந்துகொண்டோம். சுசித்ரா ராமச்சந்திரன் தொகுத்து வழங்கினார். கன்னடத்தில் இருந்து ஜெயந்த் காய்கினி, தெலுங்கில் இருந்து மிருணாளினி, மலையாளத்தில் இருந்து கே.ஆர்.மீரா. இந்திய இலக்கியத்தின் பன்மொழிச்சூழல் குறித்த விவாதம். புக்பிரம்மா அமைப்பின் மைய நோக்கம் மொழிகளுக்கிடையேயான உரையாடல்தான்.

கூடுதலாக நான் இரண்டு விஷயங்கள் சொன்னேன். ஒன்று, பன்மொழிச்சூழல் எழுத்தாளர் தன் மொழியை இன்னொரு மொழியினூடாகப் பார்க்க வழிசெய்கிறது. ஆகவே தேய்வழக்குகளை தவிர்க்கமுடிகிறது. மொழிக்கலவை அழகியல்ரீதியாக ஒரு புதிய மொழிப்பிராந்தியத்தை, அதன் வேடிக்கையை உருவாக்க உதவுகிறது.
பொதுவாக இந்த வகை மேடைகள் எழுத்தாளர்களை ‘ஷோகேஸ்’ செய்வதுதானே ஒழிய தீவிர விவாதங்கள் நிகழமுடியாது. ஆகவே உறுதியாகச் சில விஷயங்களை மேலதிகச் சிந்தனைக்காக சொல்லிவைப்பதே சிறப்பானது. நான் இரண்டு விஷயங்கள் சொன்னேன். தூய்மை, தெளிவு என்னும் இரண்டு விஷயங்களும் இலக்கியத்துக்கு எதிரானவை. கலப்பு, மயக்கம் என்னும் இரண்டு விஷயங்களே மேலான இலக்கியத்தை உருவாக்குகின்றன. நான் தொடர்ந்து பேசிவரும் கருத்துக்கள்தான் அவை.
ஜெயந்த் காய்கினி உணர்ச்சிகரமாக தன் பன்மொழித்தன்மையைப் பேசினார். (அவர் கொங்கிணியை தாய்மொழியாகக் கொண்டவர், கன்னடத்தில் எழுதுபவர். பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களுக்கு கன்னடப் பாடல்களை அவர்தான் எழுதியிருக்கிறார். அவரை கன்னட அசோகமித்திரன் என்று சொல்லமுடியும். மென்மையான கேலி கொண்ட அடக்கமான கதைகளை எழுதியவர்)
தமிழகத்தில் இருந்து எழுத்தாளர்கள் தியடோர் பாஸ்கரன், சுகுமாரன், பெருமாள் முருகன், யுவன் சந்திரசேகர், பா.ராகவன், மருதன், சுனில் கிருஷ்ணன், க.மோகனரங்கன், எதிர்வு சிவக்குமார், கமலாலயன், குணா கந்தசாமி, அ.ராமசாமி,சல்மா, ரம்யா (நீலி இணைய இதழ்), எல்.சுபத்ரா, லாவண்யா சுந்தரராஜன், அகரமுதல்வன், லட்சுமி சரவணக்குமார், மயிலன் சின்னப்பன், இமையம், அரிசங்கர்,எம்.கோபாலகிருஷ்ணன், செந்தில் ஜெகந்நாதன், லட்சுமிஹர், நித்யா எஸ், சித்ரா பாலசுப்ரமணியம், பச்சையப்பன், என்.சொக்கன், சுப்ரமணி ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆய்வாளர்கள் ரவிக்குமார், பாலுச்சாமி (பாரதிபுத்திரன்), திருமூலர் முருகன், எம்.ஏழுமலை, கே.பி.அம்பிகாபதி, ஆர்.காமராசு, கிருங்கை சேதுபதி, பெரியசாமி ராஜா, என்.ரத்னகுமார், பக்தவத்ஸலபாரதி ஆகியோரும் வெவ்வேறு பண்பாட்டு ஆய்வு அமர்வுகளில் கலந்துகொண்டார்கள். நான் பாலுச்சாமியை இதுவரை நேரில் சந்தித்ததில்லை, இப்போதுதான் பார்த்தேன்.
அஜிதனுக்கு இது முதல் இலக்கிய விழாவின் அரங்கு. முதன்மையான பேரரங்கில் பால் சகரியா(மலையாளம்), எச்.எஸ்.சிவப்பிரகாஷ் (கன்னடம்), வோல்கா (தெலுங்கு) மூத்த எழுத்தாளர்களுடன் கலந்துகொண்டான். குரலில் பணிவும் கொஞ்சம் நடுக்கமும் இருந்தாலும் விரிவான பார்வையுடன், சுருக்கமான சொற்களில் தன் கருத்தை முன்வைத்தான். அரங்கில் தன்னியல்பான கைத்தட்டல் எழுந்தது. இந்திய அரங்கில் அத்தகைய இளம் குரல்கள் அரிதாகவே எழுகின்றன. அதிலும் இலக்கியவாதியாக எழும் குரல்கள் மேலும் குறைவு.

இந்த விழாவில் நான் கண்ட ஒன்று, தமிழ்விக்கியின் பங்கு. இன்று கூகிள் தமிழ்விக்கி பதிவுகளை 90 சதவீதம் சரியாக மொழியாக்கம் செய்து காட்டிவிடுகிறது. வேற்று மொழி எழுத்தாளர்கள் தமிழ் எழுத்தாளர்களை விரிவாக தமிழ்விக்கி வழியாகவே அடையாளம் கண்டுகொண்டார்கள். அத்தகைய விரிவான பதிவு பலமொழிகளில் நவீன எழுத்தாளர்களுக்கு இல்லை. தமிழ்விக்கி நாங்கள் நடத்தும் கலைக்களஞ்சியம் என்றே தெரியாமல் என்னிடம் பலர் அதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தனர். பங்ளாபீடியா போல அது தமிழக அரசு நடத்துவது என்று இரண்டுபேர் சொன்னார்கள்.
சரி, ஒருவர் தனக்கான ஒரு இணையப்பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாமே? அல்லது விக்கிபீடியா பக்கம் இருக்கலாமே? என்ன பிரச்சினை என்றால் அவை எல்லாமே ஒரே மாதிரி இருக்கும். வெறும் தகவல்களுடன். பல சமயம் கல்வியாளர்கள் மிகப்பெரிய தன்வரலாற்றுக் குறிப்பை வைத்திருப்பார்கள். எல்லாமே ஒரே போல புகழ்மொழிகளுடன், வெவ்வேறு பட்டங்கள் மற்றும் சிறப்புகளுடன் இருக்கும். செயற்கைநுண்ணறிவை கேட்டால் அனைவரைப்பற்றியும் ஒரே போன்ற புகழ்மொழியைத்தான் சொல்லும், காரணம் இந்த பதிவுகள்.
ஓர் இலக்கிய விழாவின் அமைப்பாளருக்குத் தேவை ஒருவரின் உண்மையான இடம் என்ன, அவருடைய சரியான பங்களிப்பு என்ன என்பதைப் பற்றிய மதிப்பீடு. பலசமயம் அதை தனிப்பட்ட முறையில் விசாரித்தே அறிகிறார்கள். இந்தியச் சூழலில் அதுவும் கடினமானது. அமைப்பாளர்கள் தங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒருவரிடம் புதியவர்களை பரிந்துரைக்கக் கேட்பார்கள். அந்த பரிந்துரைப்பவர் ஒரு சிறுவட்டத்திற்குள் இருந்து பரிந்துரைக்கத் தொடங்குவார். அவர் ஓர் அதிகாரமாக ஆவார். அவரை நம்பி அழைக்கவேண்டியதுதான்.
தமிழ்விக்கி எந்த கருத்தியல் பாரபட்சமும் இல்லாமல் ஒருவர் செயல்படும் களத்தில் அவருடைய பங்களிப்பு என்ன, அவர் இடம் அவருடைய தரப்பில் என்ன என்று சொல்லி தரவுகளை அளிக்கிறது. ஓர் ஆசிரியர்குழுவால் சேகரிக்கப்பட்டு ஏற்கப்பட்ட தரவுகளும் ,பரிந்துரைகளும்தான் அவை. தமிழ்விக்கி மேல் தமிழில் பலருக்கு உள்ள சீற்றமும் அது அந்த மதிப்பீட்டையும் அளிக்கிறது என்பதே.
இந்த விழாவை ஒட்டியும் சிறு விவாதம், மனுஷ்யபுத்திரன் பதிப்பாளராக விழாவுக்கு அழைக்கப்பட்டதை அவமதிப்பாக எண்ணி அவர் எழுதியிருந்ததை நண்பர்கள் சுட்டிக்காட்டினர். இந்த விழாவின் விருந்தினர் பட்டியல் எத்தனை விரிவானது என்று எவரும் பார்க்கமுடியும், அதில் அரசியலோ முன்முடிவுகளோ இருக்க வாய்ப்பில்லை என உணரவும் முடியும். ஆனால் இத்தனை பெரிய ஒரு பட்டியலில் கொஞ்சம் இயந்திரத்தன்மையும் வந்துவிடும்.
மனுஷ்யபுத்திரன் பதிப்பாளராக மட்டும் அழைக்கப்பட்டது பிழைதான். ஆனால் இத்தகைய பிழைகள் இன்றி எந்த விழாவையும் நடத்தமுடியாது. விஷ்ணுபுரம் விழாக்கள் சிறியவை, ஆகவே கூடுமானவரை பிழைகள் இல்லை. பெரிய விழாக்களில் பல அடுக்குகளாக பலர் பணியாற்றுவார்கள். அனைவரும் தகுதியானவர்கள் என சொல்லமுடியாது. அனைவரையும் முழுமையாக ஒருங்கிணைப்பதும் இயல்வதில்லை. இதையே தமிழக அரசின் விழாக்கள் பற்றியும் சொல்வேன்.
நாங்கள் விழாக்களை நடத்துபவர்கள், ஆகவே எந்தெந்த விததில் எல்லாம் பிழை நிகழும் என எண்ணி எண்ணி திருத்திக்கொண்டே இருப்போம். விஷ்ணுபுரம் விழாக்கள் மிகக்கச்சிதமானவை, ஆனால் எல்லா ஆண்டும் ஏதேனும் பிழையும் நிகழ்ந்திருக்கும். எத்தனை கவனமாக இருந்தாலும் ஏதோ ஒன்று நிகழும். இத்தகைய விழாக்கள் எவையாயினும் அவற்றுக்குப் பின்னாலுள்ள நல்லெண்ணம், அவற்றின் விளைவாக நிகழும் இலக்கிய மாற்றம் ஆகியவற்றை மட்டுமே கருத்தில்கொண்டு அணுகுவதே முறையானது.
இப்பிழை எப்படி நிகழ்கிறது? எவரை அழைக்கலாம் என்னும் கேள்வியை அமைப்பாளர்கள் பலரிடம் கேட்பதுண்டு. பெயர்கள் மட்டுமே அளிக்கப்படும். புக்பிரம்மா விழாவில் நாலைந்துபே பெயர்களை பரிந்துரை செய்தனர் என அறிந்தேன். மனுஷ்யபுத்திரன் கவிஞர், பதிப்பாளர் என அதில் இருந்திருக்கும். நிகழ்வுப்பட்டியல் தயாரிப்பவர் பதிப்பாளர் அரங்குக்கு ஆள்தேவை என்றால் சட்டென்று மனுஷ்யபுத்திரன் பெயரை சேர்த்துவிடுவார். இது இயந்திரத்தனமாக நிகழ்வது.
மனுஷ்யபுத்திரன் எத்தகைய பெருங்கவிஞர் என அந்த அயல்மொழியினருக்கு தெரிய வாய்ப்பில்லை. இணையத்தில் விரிவாகத் தேடினாலோ, எவரிடமாவது கேட்டிருந்தாலோ தெரிந்திருக்கும். நான் எந்த அரங்கிலும் தமிழின் பெருங்கவிஞர் என அவரைச் சொல்வதுண்டு. ஆனால் விழா அமைப்பாளர்கள் கிட்டத்தட்ட நாநூறு விருந்தினரையும் அப்படி விரிவாகத் தேட வாய்ப்பில்லை.அதனால் நிகழும் பிழை இது.
தமிழ்விக்கியின் இடம் அங்கேதான். இந்த பட்டியல் தயாரிக்கப்படும்போது மனுஷ்யபுத்திரனுக்கு தமிழ்விக்கி பதிவு இல்லை. அவர் தமிழ்விக்கி பற்றி கடுமையான எதிர்மனநிலையில் இருந்தார். ஆகவே அவர் பற்றிய தரவுகள் கிடைக்கவில்லை. பின்னர் வெவ்வேறு இடங்களில் சேகரித்தே அவர் பற்றிய பதிவு போடப்பட்டது. இன்று அவர் எவர் என எவருக்கும் அப்பதிவு காட்டிவிடும் (See மனுஷ்ய புத்திரன்)
இந்த அரங்குகளில் தீவிர விவாதம் நிகழமுடியாது என்பதை பங்கேற்பவர் அறியலாம். இவை இலக்கியவிழாக்கள்தான். தமிழ் எழுத்தாளர்கள் பிறமொழி எழுத்தாளர்களுடன் அறிமுகம் கொள்ள, உரையாட இது ஒரு வாய்ப்பு. தமிழ் எழுத்தாளர்களை இந்திய மொழிச்சூழலில் முன்வைப்பதற்கான வாய்ப்பு. அடிப்படையான சில கருத்துக்களை முன்வைக்கலாம். கூடுமானவரை சுருக்கமாக அவற்றை முன்வைக்கவேண்டும். ஒருவருக்கு கூட்டு அரங்கில் கிடைப்பது அதிகபட்சம் பத்து நிமிடங்களே.
இத்தகைய அரங்குகளில் பொதுவாக கடுமையான எதிர்விமர்சனங்களுக்கு இடமில்லை. ஏனென்றால் அவற்றை விவாதித்து நிறுவ வாய்ப்பில்லை. கூடுமானவரை தமிழில் என்ன நிகழ்கிறது என சொல்லவேண்டும். எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லவேண்டும். திரும்பத் திரும்ப அப்படி உச்சரிக்கப்படும் பெயர்களே நிலைகொள்கின்றன. “Presenting the trend and names’ என்பதே இங்கே நாம் செய்யவேண்டியது. சென்ற ஆண்டு தொடக்கநிகழ்வில் நான் ஏழுநிமிடங்களில் முழுமையாகவே அதை அளித்தேன். தமிழ் எழுத்தாளர்களுக்கு பொதுவாக இத்தகைய விழா அரங்குகள் பழக்கமில்லை. அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியதுதான்.
லட்சுமி சரவணக்குமாரின் பன்றிவேட்டை நாவலின் வெளியீட்டுவிழா அங்கே அரங்கில் (மீண்டும்) நிகழ்ந்தது. நூலை நான் வெளியிட்டு ஒரு சில சொற்களில் அவரை அறிமுகம் செய்தேன். அகரமுதல்வனும் , லட்சுமி சரவணக்குமாரும் பேசினார்கள். வெவ்வேறு அரங்குகளில் தமிழிலக்கியம் குறித்த உரையாடல்கள் நிகழ்ந்தன. அதையொட்டிய வெளிவிவாதங்களும் நிகழ்ந்துகொண்டிருந்தன. நண்பர்களை ஆங்காங்கே சந்தித்துக்கொண்டே இருந்தோம்.
நான் ஓரிரு மலையாளம், தெலுங்கு அரங்குகளில் அமர்ந்திருந்தேன். பதஞ்சலி சாஸ்திரி எழுதிய ஒரு சிறுகதையின் நாடகவடிவத்தைப் பார்த்தேன்.மூன்று இசைநிகழ்வுகள், ஒரு கதகளி நிகழ்வை பார்த்தேன். கூடுமானவரை தெலுங்கு, கன்னட எழுத்தாளர்களைச் சந்திக்கவும் பேசவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன். அண்மையில் என் படைப்புகள் தெலுங்கிலும் கன்னடத்திலும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதனால் அறிமுகமும் உரையாடலும் எளிதாக இருக்கிறது. இப்போது கிட்டத்தட்ட தென்னிந்தியாவெங்கும் இலக்கியச் சூழலில் நன்கு அறியப்படுகிறேன் என நினைக்கிறேன்.
இந்த அறிமுகங்கள் இருமுகம் கொண்டவை. நானும் அவர்களை அறிமுகம் செய்துகொள்கிறேன். என்னுடைய பார்வைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. உதாரணமாக, தெலுங்கு இலக்கியச் சூழலைப் பற்றிய என் எண்ணம் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. தெலுங்கில் இலக்கியம் என்பது தீவிரமானதாக இல்லை என்னும் எண்ணம் எனக்கிருந்தது. ஆனால் இன்று தென்னிந்தியாவிலேயே தெலுங்கு மொழியில்தான் இலக்கியத்தை மிகத்தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது.
என் வெள்ளையானை நாவலின் தெலுங்கு மொழியாக்கம் (எஸ்.குமார்) தெள்ள ஏனிகு அரங்கில் வெளியிடப்பட்டது. நான், அவினேனி பாஸ்கர், எஸ்.குமார் ஆகியோர் பேசினோம். நான் சாயா புக்ஸில் அமர்ந்து தெலுங்கு வாசகர்களைச் சந்தித்து, நூல்களில் கையெழுத்திட்டு கொடுத்தேன். ‘நீங்கள் இன்று கிட்டத்தட்ட ஒரு தெலுங்கு எழுத்தாளர்’ என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
இந்த ஆண்டுக்கான புக்பிரம்மா விருது மலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீராவுக்கு வழங்கப்பட்டது. முதல்நாள் எங்களுடன் அமர்வில் இருக்கையிலேயே அதைச் சொல்லிவிட்டனர். கே.ஆர்.மீரா தமிழில் அவருடைய நாவல்கள் வழியாக பரவலாக அறியப்பட்டவர்.
தேவதேவன் பார்வையாளராக வந்திருந்தார். என் அறையில் என்னுடன் மூன்றுநாட்கள் தங்கினார். இந்த விழாவில் பெரும்பகுதி உரையாடல் தெலுங்கு எழுத்தாளர்கள், வாசகர்களுடன் நிகழ்ந்தது.(நான் செல்போன் பார்த்துக்கொண்டு செல்கையில் அஜிதன் முன்னால் வந்து ‘நமஸ்காரண்டி’ என்றான். நான் நமஸ்காரம் என பேச ஆரம்பித்து, திடுக்கிட்டு, பின் சிரித்துவிட்டேன்.) ஒன்பதாம்தேதி இரவு மழை ஓய்ந்தபின் ஓர் காலியான அரங்கில் ஒரு நீண்ட உரையாடல். பத்தாம் தேதி இரவில் பிரசாத் சூரி உள்ளிட்ட நான்கு இளம் தெலுங்கு எழுத்தாளர்கள் அறைக்கு வந்தனர். இரவு ஒரு மணி வரை பேசிக்கொண்டிருந்தோம்.
எந்த விழாவையும்போல அரட்டைகள், டீக்கடைப்பேச்சுக்கள், திரும்பத் திரும்ப தெரிந்தவர்களைச் சந்திக்கும் சிரிப்புகள் என மூன்றுநாட்கள் கொண்டாட்டமான மனநிலை. மூன்றாம் நாள் பிரிதலில் சோர்வு. ஆனால் உடனே உற்சாகம், இன்னும் நான்கு நாட்களில் ஈரோட்டில் தூரன் விழாவில் அனைவரையும் மீண்டும் சந்திக்கவிருக்கிறேன்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
