Jeyamohan's Blog, page 36
August 17, 2025
சே. கல்பனா
சே.கல்பனா கல்வித்துறை சார்ந்து மரபிலக்கியம் மற்றும் நவீன இலக்கியத்தில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வருகிறார்.
சே.கல்பனா
நிழல்களின் ஆடல், கடிதம்
அன்பு ஆசிரியருக்கு,
அன்பின்பாலும் தங்கள் படைப்புகள் என்னுள் ஏற்படுத்தும் எண்ண இடறல்களாலும் அவற்றைப்பற்றி உரையாடவும் தெளிவு பெறவும் பல முறை முயன்றும் எனது நினைவுக் குறைகளாலும் வாசிப்பு தடைகளாலும் கடிதமாக மின்னஞ்சலாக மாறாமல் அப்படியே விட்டிருக்கிறேன். எல்லாவற்றுக்குமான இழுவைத்தன்மை ரப்பரைபோல ஒரு எல்லையில் விடுபட்டுத்தானே ஆக வேண்டும். இந்த முறை காவியமும் நீலநிழலும் அந்தத்தடையை உடையச் செய்திருக்கிறது.
காவியம் படிக்க ஆரம்பிக்கும்போது என் பால்ய நினைவுகள் அந்த நிழலைப் போல பீடித்தாட்டியது. விக்கிரமாதித்ததனும் வேதாளமும் அதன் கதைகளும் விடாது ஆட்டும் முருங்கை மரமும் அதை தன் தோளில் தூக்கிச் செல்லும் அம்புலிமாமாவின் புகைப்படங்களும் நாவலுக்குள் செல்லவிடாமல் தடுத்தபடியே இருந்தது. ஆரம்ப அத்தியாயங்களின்போது ஒருமுறை இருமுறை மும்முறை என முயன்றபடிதான் என்னை நான் அதில் ஈடுபடுத்திக்கொண்டேன். குணாட்யர் உள்ளே வந்தபின் முயற்சி எளிதாகியது. நாவல் கூறும் தத்துவ விசாரங்கள் மனம் புரிந்து ஏற்றாலும் அவற்றை தெளிவான வார்த்தைகளாக வரையறுக்க நம் பிற வாசகர்களைப் போல இயலவில்லை. இனி பின்னாளில் நமக்கு வந்தால் வரம். வராவிடில் சாபம் என்று ஏற்பேன்.
காவிய நிழல்களின் பிடியிலிருந்து விலகி இருளுக்குள் செல்ல மனம் தவித்தது. அதற்குள்ளாக நீலநிழல் என்னை பிடித்தாட் கொண்டுவிட்டது. வைரவேல் நாயக்கரும் அவர்தம் மீசையும் அதை அவர் வருடும் விதமும் என்னுள் இல்லாத மீசையை என்னுள்இருப்பாக்கி வெறுமனவும் நீவச் செய்தது இரத்தத்தின் பிசுபிசுப்பை கைகளில் உணர்ந்தபடிதான் இந்த குறுநாவலை முடித்தேன். தன்நிழலுடன் அவர் ஆடும் பலவித ரூப ஆட்டங்களே நம்மையும் அதில் ஒருவராக்கி விளையாட வைத்து விட்டது. ஒருவரின் இரக்கமற்ற தன்மையையே பிரதானமாக்கி அததற்கான நியாயங்களைக் கற்பித்து வாசிக்கும் வாசகர்களையும் ஏற்கச் செய்வது ஆசிரியரின் திறன். ஒரு பிரமிப்பூட்டும் திரையனுபவமாக ஆவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் இக்குறுநாவல் கொண்டிருக்கிறது.
அறம் படித்தவர்கள் கண்டிப்பாக திகைக்கத்தான் நேரிடும். அதன் பாத்திரங்களுக்கு முழு நேரெதிரான பாத்திரங்களாக வைரவேல் நாயக்கரும் வெள்ளையனும் வருகிறார்கள். அதிலிருந்த கருணையும் அன்பும் இரக்கமும் இதில் அறவேனும் இல்லை. ஆனால் நிழல் வருவதால் நம்மால் விடுபட இயலாமல் போகிறது. இருவேறு படைப்புகளை ஒப்பிட மனம் விழையவில்லை. இருப்பினும் அதன் குணாம்சத்தை வெளிப்படுத்த இதுதான் வழி. மிக்க நன்றி ஆசானுக்கு என் நினைவிலிருந்து மீளா அரியபடைப்புகள்
எப்படியோ கடிதத்தை முடித்துவிட்டேன். மனமே இப்போதுதான் வில்லிலிருந்து விடுபட்ட அம்பின் சுதந்திரத்துடன் இருக்கிறது.
ராமசாமி பிரீதி
மைத்ரி -அந்திமழை மதிப்புரை
உத்தராகாண்ட் மாநிலத்தில் இமய மலைகளின் சரிவில் கர்வால் நிலப்பகுதியில் நடக்கும் கதை இது.
மூன்று நாட்களில் நிகழும் காதல் கதை. பயணம், காதல் இரண்டுமே உற்சாகம் தருபவை. இவை இரண்டும் இணைந்துவிட்டால் எழுகின்ற உணர்ச்சிப்பெருக்கை சொல்லவும் கூடுமோ? இளம் எழுத்தாளர் அஜிதன் விளையாடி இருக்கிறார்.
ருத்ரபிரயாக்கிலிருந்து சோன்பிரயாக் வரை பேருந்தில் செல்லும் வழியில் மைத்ரி என்ற பெண்ணை சந்திக்கிறான் ஹரன்.
அவர்கள் இருவருக்கும் இடையே உருவாகும் உறவின் போக்கினை மிக அழகான மொழியில் சித்திரித்து, பெண்மையின் மாபெரும் ஆளுமைக்கு முன்னால் ஆண் ஒன்றுமே இல்லாத கூடு மட்டுமே என உணர வைத்துச் செல்லும் நாவல் இது.
மந்தாகினி நதிக்கரையில் இது நடப்பதும் இமயத்தின் சரிவில் வளர்ந்திருக்கும் தேவதாரு மரக்காடுகளின் வழியாக வளர்ந்து செல்வதும் இந்த எளிய காதல் கதைக்கு பல்வேறு ஆழமான அடுக்குகளைத் தருகின்றன. கர்வால் நிலப்பகுதியின் பண்பாட்டுச் சித்திரங்களை தமிழில் இந்த அளவுக்கு அழகாக எந்த நாவலும் சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை.
ஒரு பிராந்தியத்தின் வாழ்க்கையைப் பற்றிய சித்திரத்தை நமக்குக் கடத்துவதன்மூலம் இந்நாவல் முக்கியமானதொன்றாக மாறுகிறது. அதே சமயம் ஆணுக்குப் பெண் எதிர்பார்ப்பின்றி எதையும் கொடுத்துக்கொண்டே இருக்கிறாள், அந்த விரிந்து உயர்ந்த மலைகளைப்போல, வானுயர்ந்த தேவதாரு மரங்களைப் போல, ஓடிக்கொண்டேயிருக்கும் மந்தாகினி நதியைப்போல என்று உணர்த்துவதன்மூலம் மைத்ரி, ஹரனுக்குள் ஒரு பிரளயத்தை உருவாக்கச் செய்கிறாள். அவன் அடைவது ஒரு பிரிவுத் துயர் என்பதைத் தாண்டி, வேறொரு வாழ்வியல் அனுபவம்.
செம்மறி ஆடுகளுக்கு இயற்கையான குழந்தை முகம் உண்டு என்பதுபோன்ற திடீரென முளைத்து, கைபிடித்து நிற்க வைக்கும் வரிகளும் இந்நாவலில் சிறப்பியல்பு.
– மதிமலர்
(அந்தி மழை)
விபாசனாவின் வழி
பல சுமைகளுடனும், துயரங்களுடனும் பயணித்து இப்போது சமுதாயத்தில் வீடு, வாசல், மகனுக்கு ஒரு வேலை என நிம்மதி அடைந்தாலும் வாழ்க்கையில் கடந்துவந்த பாதையில் பயம், பதட்டம் இருந்தது. நானும் ஒரு அரசு வேலையில் இருந்தாலும் தன்னம்பிக்கை இல்லாமல், மனதில் நிறைய கேள்விகள் இருந்தன.
Understanding Western literature and art requires a thorough introduction to Western music. Unfortunately here the individuals talking about Western music are musicians who only know the technicalities of that music.
Music, philosophy, and literatureAugust 16, 2025
வரலாறும் குடிமைச்சமூகமும்
இந்தியாவில் நமக்குள்ள பெரிய பிரச்சினையே நமக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது என்பதுதான். அதை மறக்கவும் முடியாது, முழுக்க தெரிந்துகொள்ளவும் முடியாது. அதைப் பயன்படுத்தி எவர் எந்த வெறியைக் கிளப்பினாலும் அது பற்றிக்கொண்டுவிடுகிறது…
வரலாற்றை கற்றல்
வரலாற்றைத் தெரிந்துகொள்வது எப்படி என பல கடிதங்கள். அவற்றிலுள்ள ஒரு மனநிலை என்பது இதுதான். ‘சரியான’ வரலாற்றைச் சொல்லும் ‘சரியான’ நூல்கள் சில உள்ளன. அவற்றில் ஒன்றையோ இரண்டையோ வாசித்தால் ‘சரியான’ வரலாற்று புரிதல் அமைந்துவிடும் என்று எண்ணுகிறார்கள்.
அப்படி ஒரு ‘சரியான’ வரலாறு இல்லை. ‘சரியான’ வரலாற்று நூலும் இல்லை. நாம் முழுக்க நம்பி அப்படியே ஏற்கத்தக்க வரலாற்றாசிரியரும் இருக்க முடியாது
வரலாறு என்பது ஒரு பெரிய விவாதக்களம். அது எப்போதுமே பலவகையான பார்வைகளும், முடிவுகளும் கொண்டதாகவே இருக்கமுடியும். ஒரு வரலாற்று மாணவன் எந்த ஒரு விஷயத்திலும் ‘முற்றறுதியான’ முடிவை கொள்ளவே முடியாது. அதை உணர்ந்தவனே உண்மையில் வரலாற்றை கற்கிறான்.
ஆகவே வரலாற்றில் ‘ஐயத்திற்கு இடமற்ற’ முடிவுகளைச் சொல்லும் எவரையும் அவன் வரலாற்றாசிரியனாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. அவர்கள் அரசியல்வாதிகள் அல்லது பண்பாட்டு அடிப்படைவாதிகள். அவர்கள் வரலாற்றில் ஏதேனும் ஒரு கருத்தை நிறுவி, அதைக்கொண்டு சில அடையாளங்களை உருவாக்கி, அந்த அடையாளங்களைப் பயன்படுத்தி மக்களை திரட்டி அதிகாரத்தை அடைய முயல்கிறார்கள். அதிகாரத்துக்கான வழி என்பது ‘தம்மவரை’ தொகுப்பதும் அவர்களுக்கு ‘பிறரை’ சுட்டிக்காட்டி வெறுப்பை உருவாக்குவதும்தான். அதற்குத்தான் எங்கும் வரலாறு அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது.
வரலாறு என்றால் என்ன என்பதைப் பற்றிய ஒரு தெளிவு நம்மிடம் இருக்கவேண்டும். சென்றகாலம் என்பது நம்மால் நினைத்தே பார்க்கமுடியாத அளவுக்கு பெரியது. கோடானுகோடி மனிதர்கள், கோடானுகோடி நிகழ்வுகள். அவற்றில் அனைத்தையும் நாம் அறியமுடியாது. நாம் அனைத்தையும் அறிய முயல்வதும் இல்லை. நாம் நம் ஆர்வத்துக்குரிய சிலவற்றையே அறிய முயல்கிறோம். அவ்வாறு அறிந்தவற்றை தொகுத்து ஒரு தொடர்ச்சியான ‘கதையை’ உருவாக்கிக்கொள்கிறோம். அதுதான் வரலாறு.
அதாவது வரலாறு என்பது ‘நிகழ்ந்தது’ அல்ல. நிகழ்ந்தவற்றில் இருந்து நாம் உருவாக்கிக்கொண்ட ஒன்றுதான். நாம் ஏன் அவ்வாறு ஒரு வரலாற்றை உருவாக்கிக்கொள்கிறோம் என்பதே கேள்வி. அவற்றை அறிவதனால் இன்று, இப்போது நமக்கு என்ன பயன் என்பதே முக்கியம்.
நாம் ஏன் வரலாற்றை அறிய முயல்கிறோம்? நாம் வாழும் வாழ்க்கைக்கு அறிவுசார்ந்த தொடர்ச்சி என்பது ஏதும் இல்லை. விலங்குகளின் வாழ்க்கையை அவை அறிவுசார்ந்து தொகுத்துக்கொண்டிருக்கவில்லை. அவற்றுக்கு இருப்பது உயிரியல் தொடர்ச்சி மட்டும்தான். நமக்கும் அது மட்டும்தான் தொடர்ச்சி. அறிவார்ந்த தொடர்ச்சி என்பது நாமே உருவாக்கிக்கொண்டது.
மனிதர்கள் அறிவார்ந்து யோசிக்க, சிந்தனைகளை ஏதேனும் வகையில் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்து ஐம்பதாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கலாம். அதாவது புதிய கற்காலத்தில் அது தொடங்கியிருக்கலாம். அதில் இருந்தே வரலாறு என்பது தொடங்குகிறது என்று சொல்லலாம். அவர்கள் தங்கள் நினைவுகளை தங்கள் வாரிசுகளிடம் அளித்திருக்கலாம். ஓவியங்களாகவும் அடையாளங்களாகவும் பதிவுசெய்திருக்கலாம். அவ்வாறுதான் மனிதர்களுக்கு மட்டும் அறிவார்ந்த ஒரு தொடர்ச்சி உருவானது. அதையே பண்பாடு என்று சொல்கிறோம். பண்பாட்டின் நினைவுகளையே வரலாறு என்கிறோம்.
ஏன் அது தேவைப்பட்டது? நாம் கூடி வாழ ஆரம்பித்தோம். அதற்கு நமக்கு பொது அடையாளங்கள் தேவைப்பட்டன. குடும்பம், வம்சம், இனக்குழு, கிராமம் போன்ற அடையாளங்கள். அந்த அடையாளங்களை நிலைநிறுத்தவேண்டும் என்றால் அதற்கு வரலாறு தேவை. இங்கேதான் நாம் நீண்டகாலமாக வாழ்கிறோம், இவர்களெல்லாம் நம் ஆட்கள், நாம் இப்படியெல்லாம் வாழ்கிறோம் என நாமே வரையறுக்கவேண்டியுள்ளது. அதன் அடிப்படையில்தான் ‘நாம்’ என்னும் அடையாளம் உருவாகிறது. அதற்காகவே வரலாறு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
தொன்மையான வரலாறு என்பது ‘பிறப்புத்தொடர்ச்சி வரலாறு’ அல்லது ‘வம்ச வரலாறு’ (Genealogical history) மட்டும்தான். அதுவே வளர்ந்து நாடுகளின் வரலாறு ஆக மாறியது. அரசர்களின் வரலாறுகளாக ஆகியது. நூறாண்டுகளுக்கு முன்பு வரைக்கும்கூட வரலாறு என்பதே ஆட்சியாளர்களின் வரலாறுதான். மதவரலாறு அதன்பின் உருவானது. அதன் பின்னர்தான் மக்களின் வரலாறு, பண்பாடுகளின் வரலாறுகள் எழுதப்பட்டன. பொருளியல் வரலாறு, கலைவரலாறு, சிந்தனை வரலாறு, இலக்கிய வரலாறு என வெவ்வேறுவகை வரலாறுகள் அதன்பின் உருவாகி வந்தன. இன்று பொருட்களின் வரலாறு, தொழில்நுட்பத்தின் வரலாறு என்றெல்லாம் நுண்வரலாறுகள் உருவாகியுள்ளன.
வரலாற்றை உருவாக்கும் பார்வைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. முதலில் வரலாறு குடும்ப, இனக்குழு, அடையாளங்களை வரையறை செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்டது. பின்னர் வட்டார அடையாளம், இன அடையாளம், மொழி அடையாளம் ஆகியவற்றை வரையறை செய்யும்பொருட்டு உருவாக்கப்பட்டது. பின்னர் தேசம், அரசு ஆகியவற்றை கட்டமைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. இன்றைய வரலாறு மானுடம் என்னும் உலகளாவிய பொதுத்தன்மையை உருவாக்கும் பொருட்டே எழுதப்படுகிறது.
இன்று எழுதப்படும் சிறந்த வரலாறு என்பது மானுடகுலத்தின் வளர்ச்சியையும் ஒருங்கிணைப்பையும் முன்வைப்பதாகவே இருக்கமுடியும். மானுடகுலத்தின் கலை, இலக்கியம், தொழில்நுட்பம் போன்ற ஒவ்வொன்றும் எப்படி வளர்ந்து வந்துள்ளது என்று ஆராய்ந்து நிறுவுவதாகவே அது அமையமுடியும்.
இன்றைய வரலாறு இரண்டு. தொகைவரலாறு (Macro History) நுண் வரலாறு (Micro History). நுண்வரலாறு என்பது வரலாற்றின் ஒரு சிறிய அலகை பற்றி மட்டும் எழுதுவது. உதாரணமாக, ஒரு சிற்றூரின் வரலாற்றை எழுதுவது, அல்லது கலப்பை போன்ற ஒரு பொருளின் வரலாற்றை எழுதுவது நுண்வரலாறு. தொகை வரலாறு என்பது உலகளாவ மானுடகுலத்தின் வரலாற்றை எழுதுவது. நுண்வரலாறுகளை தொகுத்து ஒட்டுமொத்தமாக எழுதுவது.
ஒரு நுண்வரலாறு தொகைவரலாற்றில் சரியாக சென்று அமையவேண்டும். தர்க்கபூர்வமாகச் சரியாக இருக்கவேண்டும். தொகைவரலாறு என்பது எல்லா நுண்வரலாறுகளையும் கருத்தில்கொண்டிருக்கவேண்டும்.
ஆகவே வரலாறு என்பது ‘எழுதிவைக்கப்பட்ட ஒன்று’ அல்ல. எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒன்று. அதை எப்படி எழுதுகிறார்கள் என்பதையே ஒரு வாசகன் கவனிக்கவேண்டும். எந்த நோக்கத்துடனும் எழுதப்படுவது வரலாறு அல்ல. அது மதப்பெருமைக்கோ, தேசியப்பெருமைக்கோ, பண்பாட்டுப்பெருமைக்கோ எழுதப்படுவது அல்ல. வரலாறு வரலாறாகவே நிலைகொள்வது. அதன் தரவுகள் புறவயமானவையா, அதன் முறைமை சர்வதேசத்தன்மைகொண்டதா என்பதையே அவன் கருத்தில்கொள்ளவேண்டும். வரலாறு என்பது விவாதங்களால் நிலைநிறுத்தப்படுவது. ஆகவே தன்முனைப்போ, மிகையுணர்ச்சியோ இல்லாமல் நிதானமாக விவாதிப்பவர் மட்டுமே வரலாற்றாசிரியர் என கொள்ளத்தக்கவர். வசைகளின் மொழியில் பேசுபவர் உள்நோக்கம் கொண்ட அரசியல்வாதி மட்டுமே.
வரலாறு எந்நிலையிலும் விவாதமாகவே நீடிக்கும். அந்த விவாதத்தில் நாம் இருந்துகொண்டே இருக்கவேண்டும். அதுவே வரலாற்று வாசகனின் நிலை.
செ.து.சஞ்சீவி
கவிஞர்களும் கலைஞர்களும் எந்த அக்கறையுமின்றி புறக்கணிக்கப்படும் தமிழ்ச்சூழலில் அரிதாக ஒரு கவிஞனின் ஆளுமையால் கவரப்பட்டு தன் வாழ்க்கையையே அக்கவிஞனுக்காக அளித்தவர்களும் இருக்கிறார்கள். கம்பதாசனின் கவிதைகளை பதிப்பித்த சிலோன் விஜயேந்திரன் அப்படிப்பட்ட ஒருவர். மறைந்த தமிழ் ஒளியின் கவிதைகளை பதிப்பிப்பதற்காகவே வாழ்ந்த செ.து. சஞ்சீவி இன்னொருவர்.

தமிழ்விக்கி- தூரன் விழா, நிறைவின் களைப்புடன் சில படங்கள்
இன்று தமிழ்விக்கி தூரன் விருது விழா நிறைவு. 15 காலை நான் ஈரோட்டில் வந்து இறங்கியபோது தொடங்கிய விழா மனநிலை இன்று விருதுவிழா முடிந்து ஒவ்வொருவராக விடைபெற்றுச்சென்றபின் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தபின் படுக்கையறைக்கு வந்தபோது களைப்புடன் நிறைவுக்கு வந்தது. உண்மையில் விருதளிப்பு நிகழ்வின்போதே களைத்திருந்தேன். இந்த முறை சென்ற ஆண்டைவிட வருகையாளர் மிகுதி. ஆகவே ஊக்கமும், பேச்சும் மிகுதி. தீவிரம் களைப்பையும் கொண்டுவந்துவிடுகிறது.
இன்று எதையும் எழுத முடியவில்லை. நாளையும் இங்கேதான் இருக்கவிருக்கிறேன். ஈரோடு கிருஷ்ணன் வழிகாட்டலில் நிகழும் கல்லூரி மாணவர்களுக்கான இலக்கிய- சிந்தனைப் பயிற்சி வகுப்புகளின் நிறைவுக்கான உரை மற்றும் சான்றிதழ் வழங்குதல். நாளை ஏதேனும் எழுத முடியுமென நினைக்கிறேன். மோகன் தனிஷ்க் எடுத்த ‘நல்ல’ புகைப்படங்களுடன்.
வேதாந்தம் என்னும் மழை
இந்து மதத்தின் உள்முரண்பாடுகள் அல்லது உள் விவாதங்கள் உருவாக்கும் நுட்பமான தத்துவ மாறுபாடுகளை வேதாந்தம் எனும் ஒற்றைத் தரிசனத்தை முன்வைப்பதனூடாக நான் மறுதலித்து விடுகிறேன் என்ற ஒரு குற்றச்சாட்டு ஒவ்வொரு முறை வேதாந்தத்தைப் பற்றி நான் சொல்லும்போதும் உருவாகி வருவதுண்டு. தொடர்ந்து அது குறித்த விளக்கங்களை அளித்து வருகிறேன்.
வேதாந்தம் என்னும் மழைIf you are using AI to learn and improve your GK and linguistic skills, it is actually helpful. There are effective training methods to teach our students to use AI for education.
AI and education.August 15, 2025
இன்று தமிழ்விக்கி விருதளிப்பு விழா
நேற்று (15 ஆகஸ்ட் 2025) முதல் நடந்துவரும் தமிழ் விக்கி தூரன் விருது விழா இன்று (16 ஆகஸ்ட் 2025) காலை 930 முதல் தொடங்குகிறது. வெவ்வேறு அமர்வுகளும் இசை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. மாலையில் விருதளிப்பு விழாவுடன் நிறைவு. இடம் ராஜ்மகால் திருமணமண்டபம். கவுண்டச்சிப்பாளையம், சென்னிமலை சாலை, ஈரோடு
2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி தூரன் விருது கல்வெட்டு- வரலாற்று ஆய்வாளர் வெ.வேதாசலம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பாக கலைக்களஞ்சியத் தந்தை பெரியசாமி தூரன் நினைவாக ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் விருது இது. தமிழ் விக்கி -தூரன் விருதுகள் இது வரை
2022 கரசூர் பத்மபாரதி (மானுடவியல் ஆய்வாளர்)2023 மு. இளங்கோவன் (பண்பாட்டு ஆய்வாளர்)2023 எஸ்.ஜே. சிவசங்கர் (வட்டாரப் பண்பாட்டு ஆய்வாளர்)(சிறப்பு விருது)2024 மோ.கோ. கோவைமணி (சுவடியியல் ஆய்வாளர்)ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன
நேற்று (15 ஆகஸ்ட் 2025) முதல் நிகழ்ந்து வரும் இந்த விழாவின் இறுதிநாள் இன்று. காலை 930 மணிக்கு தொல்லியல் ஆய்வாளர், சிற்ப ஆர்வலர் வேலுதரன் பங்கேற்கும் அரங்கு நிகழ்கிறது. காலை 10 30 மணிக்கு ஆய்வாளர் முனைவர் வசந்த் ஷிண்டே வாசகர்களுடன் உரையாடுகிறார். மதியம் 12 மணிக்கு மூத்த ஆய்வாளர் எ.சுப்பராயலு வாசகர்களுடன் உரையாடுகிறார். ( எ.சுப்பராயலு)
இந்த அமர்வுகள் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆய்வுநிபுணர்கள் விளக்கமளிக்கும் வகையாக அமைந்தவை. ஆகவே சலிப்பற்ற நிகழ்வுகள். கூடவே நாமறியாத உலகங்களை திறப்பவை. இந்தப்பேரறிஞர்களுடனான உரையாடலென்பது நம் சூழலில் பொதுவான அறிவியக்கவாதிகளுக்கு மிக அரிதாகவே அமையும் வாய்ப்பு. அதை வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என விரும்புகிறேன்.
மதியம் 2 மணிக்கு வழக்கமாக நிகழும் நாதஸ்வர இசைநிகழ்வு. தமிழிசை முன்னோடிகளில் ஒருவரான தூரன் நினைவாக நிகழும் இந்த இசையரங்கம் இப்போது தமிழக இசைச்சூழலில் கவனிக்கப்படக்கூடிய ஒன்றாக ஆகியுள்ளது. நாதஸ்வர- தவிலிசை பின்னணியில் இருந்து வந்த யோகேஸ்வரன் ராமநாதன் தலைமையிலான குழுவால் தெரிவுசெய்யப்படும் தமிழகத்தின் தலைசிறந்த இளம் இசைக்கலைஞர்கள் இந்த இசையை வாசிக்கிறார்கள். தூரனின் பாடல்களே வாசிக்கப்படும்.
இந்த இசைநிகழ்வு ஒலிப்பெருக்கி இன்றி, அமர்ந்து கேட்கும்படியாக நிகழ்த்தப்படும். இசைப்பழக்கம் இல்லாதவர்கள்கூட இந்த இசைநிகழ்வில் வாசிக்கப்படும் பாடல்களை முன்னரே கேட்டுவிட்டு வந்தால் இசையை ரசிக்க முடியும்.
சிறப்பு நாதஸ்வரம் மயிலை எம்.கார்த்திகேயன், கோளேரி ஜி. வினோத்குமார் சிறப்பு தவில் அடையார் ஜி. சிலம்பரசன், கும்முடிப்பூண்டி ஆர்.ஜீவா தூரன் விழாவில் இசைக்கப்படும் பாடல்களை முன்னரே கேட்க இணைப்புமாலை நிகழும் பரிசளிப்பு விழாவில் வேதாசலத்திற்கு ஆந்திரநாட்டு அறிஞர் வசந்த் ஷிண்டே, மூத்த ஆய்வாளர் சுப்பராயலு ஆகியோர் பரிசளிக்கிறார்கள். தமிழக ஆய்வாளர்களை இந்திய அளவில் கொண்டுசெல்லவேண்டும் என்னும் நோக்குடன் வெளிமாநில ஆய்வாளர்களை நாங்கள் அழைப்பது வழக்கம். தமிழ் ஆய்வுகளின் ஆங்கில மொழியாக்கங்களை வெளியிடும் நோக்கமும் எதிர்காலத்தில் உண்டு.
நம் சூழலில் ஆய்வுகள் பொதுமக்களால் புரிந்துகொள்ளப்படுவதில்லை. தங்கள் அரசியலுக்கு பொருந்திவராத ஆய்வுகளை அரசியல்வாதிகள் பொருட்படுத்துவதில்லை. ஆய்வாளர்கள் புறக்கணிப்புக்கும் தனிமைக்கும் ஆளாகும் சூழலே உள்ளது. ஆய்வாளர்களுக்கான முதன்மை விருதாக இன்று இருப்பது தமிழ்விக்கி தூரன் விருதுதான். இந்த விருதுவிழாவில் கலந்துகொள்வது நம் அறிவியக்கத் தலைமகன்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
