மைத்ரி -அந்திமழை மதிப்புரை
உத்தராகாண்ட் மாநிலத்தில் இமய மலைகளின் சரிவில் கர்வால் நிலப்பகுதியில் நடக்கும் கதை இது.
மூன்று நாட்களில் நிகழும் காதல் கதை. பயணம், காதல் இரண்டுமே உற்சாகம் தருபவை. இவை இரண்டும் இணைந்துவிட்டால் எழுகின்ற உணர்ச்சிப்பெருக்கை சொல்லவும் கூடுமோ? இளம் எழுத்தாளர் அஜிதன் விளையாடி இருக்கிறார்.
ருத்ரபிரயாக்கிலிருந்து சோன்பிரயாக் வரை பேருந்தில் செல்லும் வழியில் மைத்ரி என்ற பெண்ணை சந்திக்கிறான் ஹரன்.
அவர்கள் இருவருக்கும் இடையே உருவாகும் உறவின் போக்கினை மிக அழகான மொழியில் சித்திரித்து, பெண்மையின் மாபெரும் ஆளுமைக்கு முன்னால் ஆண் ஒன்றுமே இல்லாத கூடு மட்டுமே என உணர வைத்துச் செல்லும் நாவல் இது.
மந்தாகினி நதிக்கரையில் இது நடப்பதும் இமயத்தின் சரிவில் வளர்ந்திருக்கும் தேவதாரு மரக்காடுகளின் வழியாக வளர்ந்து செல்வதும் இந்த எளிய காதல் கதைக்கு பல்வேறு ஆழமான அடுக்குகளைத் தருகின்றன. கர்வால் நிலப்பகுதியின் பண்பாட்டுச் சித்திரங்களை தமிழில் இந்த அளவுக்கு அழகாக எந்த நாவலும் சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை.
ஒரு பிராந்தியத்தின் வாழ்க்கையைப் பற்றிய சித்திரத்தை நமக்குக் கடத்துவதன்மூலம் இந்நாவல் முக்கியமானதொன்றாக மாறுகிறது. அதே சமயம் ஆணுக்குப் பெண் எதிர்பார்ப்பின்றி எதையும் கொடுத்துக்கொண்டே இருக்கிறாள், அந்த விரிந்து உயர்ந்த மலைகளைப்போல, வானுயர்ந்த தேவதாரு மரங்களைப் போல, ஓடிக்கொண்டேயிருக்கும் மந்தாகினி நதியைப்போல என்று உணர்த்துவதன்மூலம் மைத்ரி, ஹரனுக்குள் ஒரு பிரளயத்தை உருவாக்கச் செய்கிறாள். அவன் அடைவது ஒரு பிரிவுத் துயர் என்பதைத் தாண்டி, வேறொரு வாழ்வியல் அனுபவம்.
செம்மறி ஆடுகளுக்கு இயற்கையான குழந்தை முகம் உண்டு என்பதுபோன்ற திடீரென முளைத்து, கைபிடித்து நிற்க வைக்கும் வரிகளும் இந்நாவலில் சிறப்பியல்பு.
– மதிமலர்
(அந்தி மழை)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
