Jeyamohan's Blog, page 38
August 13, 2025
நீட்சேயின் இருளும் ஒளியும்
நீட்சேயின் தத்துவம் பற்றிய ஒரு சிறு உரையாடல், நீட்சேயின் இல்லத்திற்குச் சென்று அங்கே எடுத்தது, தொடர்விவாதமும். இந்த உரையாடலில் ஒரு கேள்வி எழுகிறது, நீட்சேயின் தத்துவம் பேசப்படும் வகுப்பில் ஆண்கள் பலர் பரபரப்பும் ஊக்கமும் அடைய பெண்கள் ஏன் ஒவ்வாமையை அடைகிறார்கள்? நீட்சேயில் இன்று நமக்கு கிடைக்கும் ஒளியும் இருளும் என்னென்ன?
இலக்கியவாதி வரலாற்றை வாசித்தல், வெ.வேதாசலம்- 2
ஒரு பொதுவாசகர் தன் காலகட்டத்தின் முதன்மை வரலாற்றாசிரியரை வாசிக்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில தன்னொழுங்குகள் உண்டு. ஒன்று, அவர் தன் இடத்தை வரையறை செய்துகொள்ள வேண்டும். வரலாற்றாசிரியருடன் நிகராக நின்று விவாதிக்க அவருக்கு உரிமையில்லை. ஏனென்றால் அதற்கான கருவிகள் அவரிடமில்லை. அந்நூலை ‘தெரிந்துகொள்வது’ மட்டுமே அவருடைய கடமை. அதை மறுக்கும் தரப்புக்காக இன்னொரு வரலாற்றாசிரியரையே அவர் நாடவேண்டும். அதேசமயம் தரவுகளைச் சரிபார்க்கலாம், அதற்கு நூல்களை நாடலாம்.
ஒரு வரலாற்றாய்வு நூலை ‘வாசிக்க’ பொதுவாசகனால் முடியாது. குறிப்பாக இன்றைய நுண்வரலாற்றாய்வு நூல்களை அப்படி வாசிப்பது அறவே முடியாது. அவை நுணுக்கமான தரவுகளால் ஆனவை. அதை வாசிக்கும் வழி ஒன்றுண்டு. வெவ்வேறு கேள்விகள் வழியாக அந்த நூலை சென்றடைந்துகொண்டே இருக்கவேண்டும். ஒரு வரலாற்றாய்வு நூலை நோக்கி தனது கேள்விகளை தொடுத்துக்கொள்ளும் வாசகன் மட்டுமே சுவாரசியத்தை கண்டடையவும் முடியும் .
வேதாசலம் அவர்களின் பாண்டிய நாட்டில் சமணசமயம் என்னும் நூலை நான் அணுகிய முறை ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடும். நான் ஒரு வினாவுடன் அதற்குள் சென்றேன். ‘மதுரையில் சமணம் எப்போது நுழைந்தது எந்த வழியாக நுழைந்தது?’
பரவலாக வட இந்தியா முழுக்க இருக்கும் சித்திரம் சரவண பெலகொளாவிலிருந்துதான் தமிழகத்திற்குள் சமணம் நுழைந்தது என்பது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு மேல்சித்தமூரில் பட்டாரகர் மடத்தில் தலைவரை சந்தித்தபோது இதே சித்திரத்தையே அவர் எனக்கு அளித்தார். சமணர்களின் அதிகாரபூர்வமான நூல்களில் இருக்கும் சித்திரமும் அதுதான். ஏனெனில் தென்னிந்தியாவில் தென்னிந்தியாவின் சமண மையங்கள் மூன்றுதான். வடக்கே கும்சாவும், நடுவே மூடுபிதிரியும், தெற்கே சிரவணபெலகொளாவும். நெடுங்காலம் அவையே தலைமையிடங்களாகவும் திகழ்ந்தன.
ஆனால் வேதாசலம் விரிவான கல்வெட்டு சான்றுகளின் அடிப்படையில் முற்றிலும் வேறொரு சித்திரத்தை அளிக்கிறார். அதாவது கிபி 5-6ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு வரும் கல்வெட்டுகளும் சான்றுகளும் மட்டுமே சிரவணபெலகொளாவில் உள்ளன .பொமு 4 ஆம் நூற்றாண்டிலேயே சிரவணபெளகொளாவில் சமணசமயம் வந்துவிட்டது என அங்குள்ள சமணர்கள், ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். பத்ரபாகு என்னும் சமண ஆசிரியருடன் சந்திரகுப்த மௌரியர் சிரவணபெளகொளாவுக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது, அங்கே சந்திரகுப்த மௌரியர் சமாதியானதாகவும், அங்கே அவருடைய சமாதியிடம் கோயிலாக (சந்திரகுப்தர் பஸதி) இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான தொல்லியல் சான்றுகள் ஏதுமில்லை. வேதாசலம் தொல்லியல் சான்றை முதன்மையாதாரமாகக் கொள்பவர்.
ஆனால் பாண்டியநாட்டில் சமணம் பற்றிய மிகப்பழமையான சான்றுகள் உள்ளன என்று வேதாசலம் சொல்கிறார். மதுரைக்கு அருகிலுள்ள மீனாட்சிபுரம்,(மாங்குளம்) அழகர்கோயில் ஆகிய இடங்களிலுள்ள தமிழ்பிராமி கல்வெட்டுகள் பொமு 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே தமிழகத்தில் சமணம் பரவியிருந்தமைக்கான சான்றுகள். பூலாங்குறிச்சியில் கிடைக்கும் சமணர் குறித்த கல்வெட்டு, கொங்கர்புளியங்குளம், திருவாதவூர் போன்ற ஊர்களிலுள்ள கல்வெட்டுகளையும் வேதாசலம் குறிப்பிடுகிறார்.
இந்த அடிப்படையில் தமிழ் இலக்கிய சான்றுகளையும் துணைகொண்டு வேதாசலம் சென்றடையும் முடிவென்பது தமிழகத்திற்கு, குறிப்பாக பாண்டிய நாட்டுக்குச் சமணம் வந்து சேர்ந்த வழி என்பது கலிங்கத்திலிருந்து கடல் வழியாகத்தான் என அசீம்குமார் முகர்ஜியின் முடிவை வேதாசலம் ஆதரிக்கிறார். கலிங்கத்திற்கு மிகத்தொல்காலத்திலேயே சமணம் சென்றிருக்கிறது. அங்கிருந்து அது வணிகர்களினூடாக தமிழகத்திற்கு துறைமுகங்களுக்கு வந்து அங்கிருந்து உள்நாட்டுக்கு பரவியிருக்கலாம்.
தொடர்ந்து ஆந்திரநிலத்தில் இருந்து பெருவழிகள் வழியாக தமிழகத்தின் வடபகுதிகளுக்குள் நுழைந்து பரவியிருக்கலாம். திகம்பர பிரிவு சமணம் கர்நாடக நிலத்தில் கங்கர்களின் ஆட்சிக்காலத்தில் அரசமதமாக ஆகி தமிழகத்தில் செல்வாக்கைச் செலுத்தியது என்கிறார் வேதாசலம். இவ்வாறு தமிழகத்தில் சமணம் இரண்டு அலைகளாக உள்நுழைந்தது என வகுக்கிறார். முதல் அலை பொமு 300ம், இரண்டாவது அலை பொயு 400ம் ஆக இருக்கலாம். அதாவது ஏறத்தாழ எழுநூறாண்டுகள் தொடர்ச்சியாகச் சமணம் தமிழகத்திற்குள் நுழைந்துகொண்டே இருந்துள்ளது.
இவ்வாறு சமணம் பாண்டியநாட்டில் வேரூன்றியமைக்கான காரணம் சமணமதம் பொதுவாக வணிகர்களின் மதம் என்பதும், சங்ககாலம் (பொமு 300முதல்) தமிழகத்தில் வணிகம், குறிப்பாக கடல்வணிகம் மேலோங்கிய காலகட்டம் என்பதும்தான் என்று வேதாசலம் வகுக்கிறார். சான்றாக கொற்கை, அழகன்குளம் போன்ற இடங்களில் கிடைத்துள்ள வடநாட்டு பண்பாடு சார்ந்த பளபளப்பான கரியவண்ண பானையோடுகளையும், மெகஸ்தனிஸ் மற்றும் சாணக்கியரின் நூல்குறிப்புகளையும் காட்டுகிறார். மௌரியர் காலகட்டத்து நாணயங்களும் பாண்டியர் நிலத்தில் நிறையவே கிடைத்துள்ளன.
இன்னொரு வினாவை மீண்டும் அதே நூல்மேல் தொடுத்துக்கொண்டேன். ‘சமணம் இந்தியாவெங்கும் வணிகர்களின் மதமாக அறியப்பட்டது. தமிழகத்திலும் அப்படித்தானா? எனில் தமிழகத்தில் வணிகர்கள் மிகப்பெரிய அதிகார வல்லமையுடன் திகழ்ந்த காலகட்டம் இருந்ததா?’ அதற்கான பதிலை வேதாசலம் விரிவான தரவுகளுடன் விளக்கிச் செல்வதை இந்நூலில் வாசித்தேன்.
பாண்டியநாட்டில் பொமு 300 முதல் பொயு 400 வரையிலான சமணப்பள்ளிகள் தமிழகத்தில் 16 இடங்களில் உள்ளன என்று வேதாசலம் சொல்கிறார். அவற்றில் அய்யனார்குளம், மறுகால்தலை ஆகிய இடங்களிலுள்ள பள்ளிகளைத் தவிர்த்து எஞ்சியவை முழுக்க மதுரையைச் சுற்றியுள்ள குன்றுகளில் அமைந்துள்ளன. அதைப்போல தமிழகத்தின் பிறபகுதிகளிலுள்ள (ஜம்பை ,காஞ்சிபுரம், புகளூர், செந்நாக்குன்று) பள்ளிகளும் அன்றைய பெரிய நகரங்களை ஒட்டிய குன்றுகளிலேயே காணப்படுகின்றன. மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் நகருக்குள் சமண இருக்கைகள் அமைந்திருந்த செய்தியைச் சொல்கின்றன.
மூவேந்தர்களின் தலைநகரங்கள், தலைநகரங்களுக்குச் செல்லும் பெருவழிகள், துறைமுகங்கள், மற்றும் குறிப்பிடத்தக்க வணிகநகரங்களை ஒட்டியே தமிழகத்தின் சமண மையங்கள் இருந்தன என்று வேதாசலம் சொல்கிறார். திருப்பரங்குன்றம் போன்ற புகழ்பெற்ற சமயப்பள்ளிகள் மதுரைக்குச் செல்லும் பெருவழியின் ஓரமாகவே அமைந்தவை. பூலாங்குறிச்சி பள்ளி சோழநாட்டில் இருந்து பாண்டியநாட்டுத் தலைநகர் மதுரைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இதற்குக் காரணம் இந்த சமணப்பள்ளிகள் மத மையங்களாக மட்டுமன்றி வணிகர்களின் மையங்களாகவும இருந்தன என்பதுதான். சமணம் வணிகர்களின் மதமாகத்தான் இந்தியா முழுக்க பரவியது என்ற சித்திரத்தை அது ஒத்திருக்கிறது.
சமணர்கள் தங்களுடைய வதிவிடங்களை பெரும்பாலும் நகரை ஒட்டி ஆனால் நகருக்கு வெளியே அமைத்துக்கொண்டமைக்குக் காரணம் அவர்களுடைய நோன்புக்கும் தவத்திற்கும் அத்தகைய ஒதுக்கிடங்கள் தேவையாக இருந்தன என்பதும், அதேசமயம் தேவையென்றால் நகரத்துக்குள் வந்து செல்லும் அளவிலேயே அவர்கள் தங்கள் குடியிருப்புகளை அமைத்துக்க்கொள்ளவேண்டும் என்பதும்தான். அதை இந்தியா முழுக்க நாம் பார்க்க முடியும். மிக அரிதாகவே முற்றிலும் தொலைவில், மக்கள் அணுகமுடியாக இடங்களில் சமணர்களின் உறைவிடங்கள் இருந்தன. மதுரைச் சுற்றியிருக்கும் எண்பெருங்குன்றங்களை பற்றி விரிவான ஒரு சித்திரத்தை அளிக்கும் வேதாசலம் இதை தெளிவாகவே நிறுவுகிறார்.
சமணப்பள்ளிகளில் வணிகக்குழுக்கள் தங்கிச்செல்லும் வழக்கம் இருந்தது என்பதையும், அவர்கள் அதன்பொருட்டு அப்பள்ளிகளுக்கு நன்கொடைகள் அளித்தனர் என்பதையும் வேதாசலம் விரிவாக ஆவணப்படுத்துகிறார். உதாரணமாக, மீனாட்சிபுரம் (மாங்குளம்) சமணப்பள்ளியின் தமிழ்பிராமிக் கல்வெட்டுகளில் வெள்ளறை நியமத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அழகர்மலை போன்ற இடங்களில் அமைந்த குகைகளிலுள்ள கல்வெட்டுகளில் பல்வேறு வணிகர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த கருத்தை டி.டி.கோஸாம்பி குறிப்பிடுவதையும் வேதாசலம் மேற்கோள் காட்டுகிறார்.
ஆனால் தன்னுடைய ஆய்வின் அடுத்த நகர்வாக தமிழகத்தில் தொடக்க காலத்திற்கு பிறகு சமணம் உழுகுடிகள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் மதமா மாறியதை வேதாசலம் விவரிக்கிறார். பொயு 400 முதல் பொயு 1400 வரையிலான காலகட்டத்தின் சமணப்பரவலின் சித்திரத்தை அளிக்கும்போது உத்தமப்பாளையம், குறண்டி, குப்பல்நத்தம், கழுகுமலை, எருவாடி போன்ற ஊர்களின் புதிய சமணநிலைகளை பட்டியலிடுகிறார். பொயு 750க்குப்பின் அமைக்கப்பட்ட சமணப்பள்ளிகள் ஊருக்குள்ளேயெ அமைந்ததை குறிப்பிட்டு அவை இன்று வேறுதெய்வங்களின் ஆலயங்களாக வழிபடப்படுவதை ஆவணப்படுத்துகிறார்.
அதாவது பிற்கால சமணம் என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை பெருவணிகர்களின் மதமாக இருக்கவில்லை என்கிறார். இந்த தகவல் பின்னர் இந்திய வெவ்வேறு ஆய்வாளர்கள் சொன்ன தகவல்களுடன் ஒருவகையில் ஒத்துச்செல்கிறது. தமிழகத்தின் மிகச்சிறிய சிற்றூர்களுக்குச் செல்லும் வழிகளின் ஓரங்களில் அமைந்த சமணப்பள்ளிகள் பல்வேறு வகைகளில் சிதைந்தும் சிறுதெய்வங்களாக வழிபடப்பட்டும் கிடைக்கின்றன.
சமணம் நோன்பாளர் மதம் என்ற பொருளிலேயே சிரமணம் என்று பெயர் பெற்றது என்றும், அதுவே சமணம் என்று திரிந்தது என்றும் ஒரு தரப்புண்டு .ஆனால் உழைப்பாளர் மதம் என்ற அளவிலேயே சிரமண மதம் என்று அழைக்கப்பட்டது என்று சொல்லும் ஆய்வாளர்களும் உண்டு. வேதாசலம் முதல் தரப்பைச் சொல்லி, இரண்டாவது கருத்தை நோக்கி நகர்ந்து, அதற்கான ஆதாரங்களை விரிவாக சுட்டுகிறார்.
இது ஒரு வரலாற்று கருதுகோள். அதற்கான தர்க்கங்களுடன் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ஒரு பொதுவாசகனைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமான தமிழக வரலாற்றுப் பண்பாட்டுச் சித்திரம் பற்றிய அவனுடைய உள்ளப்பதிவையே மாற்றிவிடக்கூடியது. சமணம் தமிழகத்தில் பொமு .3-4ம் நூற்றாண்டுகளில் வணிகர்மதமாக வந்தது. அதன்பின் அது களப்பிரர் ஆட்சிக்காலத்தில் அதிகாரமதமாக ஆகி பரவியது. அக்காலகட்டத்திலேயே உழைக்கும் மக்களின் மதமாக மாறியிருக்கிறது என்றால் களப்பிரர் ஆட்சிக்காலம் ஒருவகையில் அடித்தள மக்களின் ஆட்சிக்காலம் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.
சமணத் துறவிகள் களப்பிரர் ஆட்சிக்காலத்தில் அத்தனை நீதி நூல்களை இயற்றியதற்கும், மருத்துவ நூல்களை உருவாக்கியதற்கும் ,இலக்கண நூல்களை உருவாக்கியதற்கும் காரணம் சமணம் மக்கள் மதமாக இருந்தது என்பதே. கல்வி, மருத்துவம் ஆகியவை அதன் பணிகளாக இருந்திருக்கின்றன. திருக்குறளின் உருவாக்கத்திற்கான காரணமே இதுதான் என்ற முடிவை நோக்கி செல்ல வேண்டியிருக்கும். ஓர் எழுத்தாளனாக இது அளிக்கும் திறப்பு பெரியது.
அப்படியென்றால் களப்பிரர்கள் தோற்கடிக்கப்பட்டு பல்லவர்களும் சோழர்களும் பாண்டியர்களும் அடைந்த வெற்றி என்பது என்ன? அது சிரமண மதம் அதாவது உழைப்பாளர்களின் மதத்திற்கு எதிராக வைதிக மதங்கள் அடைந்த வெற்றியா? இன்னொரு கோணத்தில் அந்த வெற்றி உடனடியாக பக்தி இயக்கத்தால் தலைகீழாக்கப்பட்டு மீண்டும் உழைப்பாளி மக்கள் அல்லது சிரமண ஜாதிகள் பக்தி இயக்கம் வழியாக அதிகாரத்தை அடைந்ததா என்ன?
தமிழகத்தில் சமணம் ஆழமாக நிலைகொண்டு தோராயமாக ஆயிரம் ஆண்டுக்காலம் முதன்மை மதமாகவே நீடித்தது. பதினைந்தாம் நூற்றாண்டில், நாயக்கர் ஆட்சிக்காலம் வரை தமிழகத்தில் சமணம் செல்வாக்குடனேயே இருந்தது என்றும் வேதாசலம் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் சமணம் வேரூன்றி, வென்று, திகழ்ந்தமைக்கு என்ன காரணம்?
வேதாசலம் நான்கு காரணங்களைச் சொல்கிறார். பாண்டியநாட்டின் வெளியுறவுக் கொள்கைகள், அரச ஆதரவு, குடிமைச்சமூக அமைப்புக்களின் ஏற்பு, சமணசமயத்தின் மக்கள் நலப்பணிகள் (அல்லது மிஷனரி தன்மை). இவை ஒவ்வொன்றுக்கும் விரிவான தொல்லியல் ஆதாரங்களைக் காட்டுகிறார். முதலாம் இராஜசிம்ம பாண்டியன் சமண மதத்தைச் சேர்ந்த கங்க மன்னனுடன் மணவுறவு கொண்டு அவன் மகள் பூசுந்தரியை மணந்தான் என்னும் வேள்விக்குடிச் செப்பேடு, கங்கர்குலத்து இளவரசி பல்லவ மன்னனை மணந்து சமண சமயத்தை வளர்த்ததைக் குறிப்பிடும் ஹொசக்குடிச் செப்பேடு ஆகியவற்றை சுட்டிக்காட்டுகிறார்.
அதேபோல பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் குறண்டி சமணப்பள்ளி சிறப்புற்றிருந்ததைச் சொல்லும் கல்வெட்டு, ஶ்ரீமாறன் ஶ்ரீவல்லபன் என்னும் மன்னன் மதுரையாசிரியன் இளங்கௌதமனுக்கு ஆதரவளித்ததைக் குறிப்பிடும் சித்தன்னவாசல் கல்வெட்டு போன்ற தொல்லியல் சான்றுகளின் வழியாக பாண்டிய மன்னர்கள் தொடர்ச்சியாக சமணத்துக்கு ஆதரவளித்ததை வேதாசலம் நிறுவுகிறார். கழுகுமலைச் சமணப்பள்ளிக்கு பல்வேறு பொதுமக்கள் அளித்த கொடைகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதையும், பெரும்பழஞ்சி என்னும் ஊரைச்சேர்ந்தவர்கள் சமணர்களின் அறக்கொடைகளுக்கு ஆதரவளித்ததை காட்டும் கல்வெட்டுகளும் வேதாசலத்தால் மேற்கோள் காட்டப்படுகின்றன. வைதிகர்களான பிரமதேயத்து அந்தணர்களும் சமணப்பள்ளிகளை ஆதரித்தமைக்குக் கல்வெட்டுச் சான்றுகளை சுட்டிக்காட்டுகிறார் வேதாசலம்.
சமணமதத்தினர் செய்த அறச்செயல்கள் அந்த மதத்தை எப்படி பரவலாக தமிழ்மக்களிடையே கொண்டுசென்றன என்பதை பல்வேறு கல்வெட்டுச்சான்றுகள் வழியாக வேதாசலம் நிறுவுகிறார். சமணர்கள் வழிகளின் ஓரத்தில் அமைத்த அன்னசாலைகள் பற்றிய கல்வெட்டுக்களே அதிகமும் கிடைக்கின்றன. மீனாட்சிபுரம், கருங்காலக்குடிப் பள்ளி போன்ற தொடக்ககால சமண இருக்கைகள் பெருங்கற்காலச் சின்னங்கள் கொண்ட இடங்களில், ஊருக்கு அப்பால் அமைந்துள்ளன. சமணர்கள் இடுகாடுகளை ஒட்டிய பகுதிகளில் தங்கவேண்டும் என்னும் தொல்நூல்களின் நெறி கடைப்பிடிக்கப்பட்டிருப்பதை இது காட்டுகிறது. ஆனால் பிற்காலப் பள்ளிகள் எல்லாமே நகரங்களை ஒட்டி, பெருவழிகளை ஒட்டி, பிற்காலத்தில் சிற்றூர்ப்பாதைகளை ஒட்டி அமைந்துள்ளன. இது சமணம் மக்கள்மதமாக தன்னை மாற்றிக்கொண்டமைக்கான சான்று என வேதாசலம் கூறுகிறார்.
சமணம் அழிந்தமைக்கு என்ன காரணம் என்னும் கேள்வியை எழுப்பியபடி மீண்டும் இந்நூலுக்குள் சென்றேன். திருஞானசம்பந்தரிடம் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்ற செய்தியை சைவக்குரவர்களின் பாடல்களில் எங்கும் காணமுடியவில்லை என வேதாசலம் குறிப்பிடுகிறார். கல்வெட்டுச் சான்றுகளும் இல்லை. ஞானசம்பந்தர் காலத்திற்குப் பின் முந்நூறாண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி எழுதிய பாடல்களிலேயே அக்குறிப்பு உள்ளது. அனல்வாதம், புனல்வாதம் பற்றிய விவரிப்பை தொன்மமாக நம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். அதை சேக்கிழார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் விரிவாக்கியிருக்கிறார்.
தமிழகத்தில் சமணம் ஓர் அறிவியக்கமாக நீடித்ததை வேதாசலம் தொடர்ச்சியான சான்றுகள் வழியாக விளக்கிச் செல்கிறார். மதுரையில் பொயு 470 வாக்கில் அமைந்த திரமிள சங்கம் தேவநந்தி என்னும் சமணமுனிவர் உருவாக்கியது என்பதை தேவசேனரின் திகம்பர தர்சனம் என்னும் நூல் குறிப்பிடுவதை மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுவதில் தொடங்கி, பொயு 10 வரைக்கும் மதுரையில் சமணம் முதன்மையான அறிவியக்கமாக நீடித்ததை வேதாசலம் விரிவாகச் சொல்கிறார். தென்னிந்தியாவில் சமண சமய மூலச்சங்கத்தில் இருந்து தோன்றியவை யாவனிய சங்கம், திராவிட சங்கம் என்னும் இரண்டு துறவியர் அமைப்புகள். யாவனிய சங்கம் பொயு 5 முதல் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. திராவிட சங்கம் அல்லது திரமிள சங்கம் மதுரையில் பொயு 470ல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
ஜுவாலினிகல்பம் என்னும் நூலை திராவிடசங்கத்து வச்சிரநந்தி என்னும் முன்வர் பொயு 939ல் எழுதியுள்ளார். இவர் தனக்கு முன்பிருந்த ஆசிரியர் ஹேலாச்சாரியாரையும் அவருக்கு முன்பிருந்த ஐந்து ஆசிரியர்களின் பட்டியலையும் அளிக்கிறார். அப்படியென்றால் சம்பந்தரின் காலத்துக்கு பின்னரும், நம்பியாண்டார் நம்பிக்குப் பின்னரும் கூட சமணம் மதுரையில் வலுவாகவே இருந்துள்ளது. பொயு 10 ஆம் நூற்றாண்டில் பாண்டியநாட்டில் வாழ்ந்த சிரிவிசையக் குரத்தியார் என்னும் பெண் துறவி பாண்டியநாட்டு கழுகுமலை சமணத்தலத்தில் இரு கல்திருமேனிகலை செய்தளித்ததும் திருவண்ணாமலை போளூர் அரும்பலூரில் செம்புத்திருமேனி செய்தளித்ததும் கல்வெட்டுகளில் உள்ளன.
பாண்டியநாட்டு குறண்டி பாண்டியர் சோழர்களால் வெல்லப்பட்டபின் சோழர்களின் ஆட்சிக்காலத்திலும் புகழ்பெற்ற சமணப்பள்ளியாகவே நீடித்ததை வேதாசலம் குறிப்பிடுகிறார்.முதலாம் ராஜராஜசோழன் காலத்து வட்டெழுத்து பொறுப்புள்ள நாலூர் அவிச்சேரிப் பள்ளி (பந்தல்குடி) குதலாம் குலோத்துங்கன் காலகட்டத்து அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள கல்வெட்டு என தொடர்ச்சியாக சமணத்திற்கு சோழர்காலத்துச் செல்வாக்கு இருந்ததைப் பற்றிய சான்றுகளை அளிக்கிறார். பொயு 12 , பொயு13 ஆம் நூற்றாண்டுகளில் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் இருந்த சமணப்பள்ளி நாற்பத்தெண்ணாயிரம் பெரும்பள்ளி என அழைக்கப்ப்ட்டது. பொயு 13 ஆம் நூற்றாண்டில் மதுரையில் இருந்த பெரும்பள்ளி ஶ்ரீவல்லபப் பெரும்பள்ளி என அழைக்கப்பட்டது.
தென்பரங்குன்றத்தில், சமணருக்கு எதிரான கழுவேற்ற நிகழ்வு நடந்ததாகச் சொல்லப்படும் ஊரிலேயே, சமணப்பள்ளி இருந்துள்ளதை சித்தர்கள் நத்தம் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கல்வெட்டு சொல்கிறது. மதுரையில் பொயு 13 ஆம் நூற்றாண்டில் ஶ்ரீல்வல்லபப் பெரும்பள்ளிக்கு சித்தர்கள்நத்தம் பகுதியில் நிலங்கள் நிபந்தமாக விடப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு சொல்கிறது. அதாவது சம்பந்தர் காலம் முடிந்து அறுநூறாண்டுகள் கடந்து.
எனில் சமணம் வன்முறையால் அழிக்கப்பட்டது என்பது எவ்வகையிலும் பொருந்துவதல்ல. அதன் அழிவுக்கான காரணம் என்ன? சைவ, வைணவ மதங்களுக்குள் பக்தி இயக்கம் உருவாகி வலுவடைந்ததே என வேதாசலம் கூறுகிறார். தமிழக நாட்டுப்புறத் தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் சைவ, வைணவ மரபுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளிழுக்கப்பட்டன. ஆகவே மக்கள் சைவ , வைணவ மதங்களைத் தெரிவுசெய்தனர். துறவையும் நோன்பையும் வலியுறுத்தும் சமணம் பின்னடைவைச் சந்தித்தது. உறுதியாக, சமணர்கள் முன்னிறுத்திய புலால் உண்ணாமை மக்கள் சமணத்தைத் துறக்கக் காரணமாக அமைந்திருக்கக் கூடும்.
பாண்டியமன்னர்கள் ஓரளவே சமணத்துக்கு எதிரான போக்கை ஆதரித்துள்ளனர் என்கிறார். தொப்பலாக்கரை போன்ற ஊர்களில் பிற்காலப் பாண்டியர் காலத்தில்கூட சமணப்பள்ளிகள் உருவாயின. 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின் பாண்டியநாட்டில் புதிய சமணப்பள்ளிகள் உருவானதற்கான சான்றுகளைக் காணமுடியவில்லை என்று வேதாசலம் சொல்கிறார். ஆனால் பாண்டிநாட்டில் பொயு 16 ஆம் நூற்றாண்டிலேயே சமணம் வலுவாக இருந்தது என்பது கோட்டாறு கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது. இப்போதும் பாண்டியர்கால சமணக்கோயில்களில் வழிபாட்டில் எஞ்சியிருப்பது அனுமந்தக்குடி கோயில்தான் என்று வேதாசலம் சொல்கிறார்.
காலப்போக்கில் சமணசமயம் செல்வாக்கு குன்றி, கைவிடப்பட்ட சமணக்கோயில்கள் இடிக்கப்பட்டு சைவக்கோயில்கள் கட்ட அவற்றின் கட்டுமானப்பொருட்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதையும் வேதாசலம் விரிவாக ஆவணப்படுத்துகிறார். உதாரணமாக குறண்டி பள்ளி இடிபாடுகள் திருச்சுழியிலுள்ள பள்ளிமடம் காளநாதசுவாமி ஆலயத்தின் முன்மண்டபம் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன. தி.கல்லுப்பட்டிக்கு அருகிலுள்ள தேவன்குறிச்சி மலைப்பள்ளி இடுக்கப்பட்டு அதன் கற்கள், தீர்த்தங்காரர் உருவங்களுடன் அங்குள்ள சிவன்கோயில் கட்டுமானத்திற்கும் கிணறு ஒன்றின் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான கோயில்கள் முனியாண்டி உள்ளிட்ட நாட்டார் தெய்வங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு ஒரு வர்லாற்று நூல் நம்மில் உருவாக்கும் மேலதிகக் கேள்விகளுக்கு நாம் மீண்டும் இன்னொரு வரலாற்று நூலையே நாடவேண்டியிருக்கிறது. இவ்வாறு வெவ்வேறு கேள்விகளினூடாக இதுபோன்று ஒரு பெரிய நூலை அணுகும்போது அது தன்னை ஒரு வைரக்கல் போல புரட்டிப்புரட்டி வெவ்வேறு பக்கங்களை காட்டிக்கொண்டே இருப்பதைக் காணலாம். முடிவில்லாத கேள்விகளுடன் ஒவ்வொரு மூறையும் நான் சென்றடையும் ஒரு தளமாக இந்நூல் அமைந்திருக்கிறது.
ஒரு பொதுவாசகன் இத்தகைய நூலை நோக்கிச் சிறிய தரவுகளுக்காகவும், அடிப்படை வினாக்களுக்கு விடைதேடியும் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கவேண்டும். உதாரணமாக, இந்நூலில் உள்ள சமணப் படிமக்கலை வழிபாட்டு வரலாறு என்னும் பகுதி பிற்கால இந்து தெய்வ உருவங்களிலுள்ள சமணச் சிற்பக்கலையின் செல்வாக்கு பற்றிய என் பல கேள்விகளுக்கான விடைகளுடன் அமைந்திருந்தது. பாண்டியநாட்டின் சமணத்தலங்களை மலைப்பள்ளிகள், ஊர்ப்பள்ளிகள் என இரு பெரும்பிரிவுகளாக ஆக்கி அட்டவணையிட்டு ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகப் பதிவுசெய்துள்ளார் வேதாசலம். தமிழ்பிராமி கல்வெட்டுகள் உள்ள குகைத்தளப் பள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன். ஊர்ப்பள்ளிகள் மாவட்டவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளன.
இத்தகைய குறிப்புகளை வரலாற்றாசிரியர்கள் வாசிக்கும் முறை வேறு. பொதுவாசகன், அல்லது என்னைப்போன்ற புனைவெழுத்தாளன் வாசிக்கும் முறைவேறு. சமண சமயத்தில் பெண் துறவியர் குரத்தியர் என அழைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறென்றால் நாஞ்சில்நாட்டிலுள்ள குறத்தியறை என்னும் ஊரும், சிதறால் மலையிலுள்ள குறத்தியறையார் கல்வெட்டும் குரத்தி என்றே வாசிக்கப்படவேண்டும். பேரூர்க்குரத்தியார், மிழலூர்குரத்தியார், சேந்தன் குரத்தியார், ஏனாதி மாகாணக்குரத்தி என கழுகுமலையிலுள்ள பெண் துறவிகளை வாசிக்கையில் அவர்களின் முகங்கள் என் கற்பனௌ வழியாக ஓடிக்கொண்டே இருந்தன. அவர்களெல்லாம் யார்?
இன்றைக்கு அறுநூறாண்டுகளுக்கு முன்பு, அன்றிருந்த சாதியாதிக்க, ஆணாதிக்க வேளாண்மைச் சமூகத்தில் இருந்து அவர்கள் வெளியேறியிருக்கிறார்கள். உலகைத் துறந்து துவராடை அணிந்திருக்கிறார்கள். அல்லது திசையாடை அணிந்த அம்மணர்களா? அவர்கள் தமிழ்நிலம் முழுக்க நடந்தே அலைந்து சமணத்தைப் பரப்பியிருக்கிறார்கள். அவர்கள் அடைந்த விடுதலை அன்றிருந்த குடும்பப்பெண்கள் எவருக்குமே இருந்திருக்காது. உடைமையை அடைவதற்குத்தான் அன்று உரிமை இருக்கவில்லை, உடைமைகள் அனைத்தையும் கைவிடுவதற்கான உரிமை இருந்திருக்கிறது. அத்தனை பெரிய விடுதலை அருகே இருப்பதை அன்று இல்லங்களின் இருண்ட அறைகளில் இற்செறிப்பு காத்த கற்புடைய பெண்கள், அல்லது ஆண்களின் பாலியல் கருவிகளாக இழிவுபடுத்தப்பட்ட பரத்தையர் அறிந்திருந்தார்களா?
ஒரு புனைவினூடாக மட்டுமே நான் சென்று தொடவேண்டிய இடம் என்னும் எழுச்சியையே நான் அடைந்தேன். கூடவே மலையாள கவிஞர் கே.ஏ.ஜெயசீலனின் கவிதை ஒன்றும் நினைவில் எழுந்தது.
சுவர் மடிப்பில்
வாய் திறந்து அமர்ந்திருக்கிறது பல்லி
வரிசையாக வந்துகொண்டிருக்கும் சிறுபூச்சிகள்
அதைக்கண்டு திகைத்துச் செயலிழந்து
இருபக்கமும் விலகமுயன்று முடியாமல் தவித்து
பின்வரிசை உந்த
வேறுவழியில்லாமல்
அதன் வாய்க்குள் சென்றுகொண்டிருக்கின்றன
சுவரின் மீதிருந்து கால்களின் பிடியை விட்டு
உதிர்ந்துவிடலாம் என்னும்
நான்காவது வழி மட்டும்
எந்தப் பூச்சிக்கும் தோன்றவே இல்லை.
(மேலும்)
விஷ்ணுபுரம் விருந்தினர்- வசந்த் ஷிண்டே
இந்திய தொல்லியல் ஆய்வாளர். 2011 முதல் 2016 வரை ராக்கிகர்ஹி-ல் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சிப் பணியின் ஆய்வாளர்களில் ஒருவர். முதன்முதலில் ஹரப்பா மக்களின் மண்டை ஓட்டு தொடர்பான ஆய்வுகளை மறுசீரமைப்பு செய்தவர். அகழ்வாராய்ச்சியில் மரபணு சோதனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர்.

தமிழ்விக்கி தூரன் விழா: அனைவரும் வருக!
ஆண்டுதோறும் தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பாக கலைக்களஞ்சியத் தந்தை பெரியசாமி தூரன் நினைவாக ஆய்வாளர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறோம். தமிழ் விக்கி -தூரன் விருதுகள் இது வரை
2022 கரசூர் பத்மபாரதி (மானுடவியல் ஆய்வாளர்)2023 மு. இளங்கோவன் (பண்பாட்டு ஆய்வாளர்)2023 எஸ்.ஜே. சிவசங்கர் (வட்டாரப் பண்பாட்டு ஆய்வாளர்)(சிறப்பு விருது)2024 மோ.கோ. கோவைமணி (சுவடியியல் ஆய்வாளர்)ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முனைவர் வெ.வேதாசலம் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
விருதுவிழா வரும் ஆகஸ்ட் 16 (சனி) அன்று மாலை நிகழ்கிறது. வழக்கம்போல ஈரோடு நகர் அருகே கவுண்டச்சிப்பாளையம் (சென்னிமலை சாலை) ராஜ்மகால் திருமணமண்டபத்தில் இந்த விழா நடைபெறும்.
இவ்விழாவில் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்கிறார்கள். வரலாற்றாசிரியரும் தொல்லியலாளருமான முனைவர் எ. சுப்பராயலு கலந்துகொள்கிறார். கூடவே ஆந்திர நாட்டு தொல்லியலாளர் பேரசிரியர் வசந்த் ஷிண்டே கலந்துகொள்கிறார்.
எல்லா ஆண்டும்போல ஒருநாள் முன்னரே ஆகஸ்ட் 15 அன்று பிற்பகல் முதல் உரையாடல் அமர்வுகள் தொடங்குகின்றன.
அறிவுத்தளத்தில் செயல்படும் ஒருவருக்கு தொல்லியல், வரலாறு போன்ற களங்களில் என்ன நிகழ்கிறது என்று அறிவது அடிப்படைத்தேவை. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இன்று இல்லை. பொதுவாசகர்கள் அவ்வாறு அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக இந்த உரையாடல் அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை அரங்கினர் கேட்கும் வினாக்களுக்கு நிபுணர்கள் பதில் சொல்லும் வகையில் அமைந்துள்ளதனால் மிகச்சுவாரசியமான நிகழ்வுகளாகவே ஒவ்வொரு ஆண்டும் அமைந்து வருகின்றன. தமிழகத்தில் இத்தகைய ஓர் அரங்கு இதுவே முதல்முறை. வாசகர்கள், அறிவுச்செயல்பாட்டில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
உரையாடல் அரங்குகள் ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை (மாலை) ஆறுமுக சீதாராமன் (நாணயவியல் ஆய்வாளர்)முனைவர் வெ.வேதாசலம் (தொல்லியல் ஆய்வாளர், விருதுபெறுபவர்)ஜி. கண்ணபிரான் (வானியல் ஆய்வாளர்)உரையாடல் அரங்குகள் ஆகஸ்ட் 16 சனிக்கிழமை காலைவேலுதரன் (சிற்பவியல் ஆய்வாளர்)முனைவர் வசந்த் ஷிண்டே (தொல்லியல் ஆய்வாளர்)முனைவர் சுப்பராயலு (கல்வெட்டு ஆய்வாளர்)
வழக்கம்போல இந்த ஆண்டும் தமிழிசை அறிஞராகத் திகழ்ந்த பெரியசாமி தூரன் நினைவாக தமிழின் மிகச்சிறப்பான நாதஸ்வரக் கலைஞர்குழு ஒன்றை தெரிவுசெய்து அடையாளம் காட்டுகிறோம். ஒலிப்பெருக்கி இல்லாமல், மென்மையான இசையாக நாதஸ்வர இசை நிகழும்.
சிறப்பு நாதஸ்வரம் மயிலை எம்.கார்த்திகேயன், கோளேரி ஜி. வினோத்குமார் சிறப்பு தவில் அடையார் ஜி. சிலம்பரசன், கும்முடிப்பூண்டி ஆர்.ஜீவா தூரன் விழாவில் இசைக்கப்படும் பாடல்களை முன்னரே கேட்க இணைப்புநண்பர்கள் வெள்ளியன்றே வந்து கலந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறோம். தங்கும் வசதி- உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கும்வசதி விரும்புவோர் கீழ்க்கண்ட படிவத்தை நிரப்பி பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
தூரன் விழா , என் உரைகள்
தமிழ்விக்கி- தூரன் விருதுவிழா அரங்கில் நான் ஆற்றிய முந்தைய மூன்று உரைகள். ஒவ்வொன்றையும் ஒருவகையான வென்ற மனநிலையில் நின்றே ஆற்றியிருக்கிறேன். அவற்றை நிகழ்த்தியவர்கள் என் நண்பர்கள். அவர்களின் தோள்மேல் நின்றுகொண்டு அந்த உரைகளை ஆற்றியிருக்கிறேன். அவை அவர்களின் சொற்களும்கூட!
அன்புள்ள ஜெ
தமிழ்விக்கி- தூரன் விழா உரையைக் கேட்டேன். வழக்கம்போல அழகான உரை. சென்ற சில மாதங்களாக நீங்கள் வெளியிட்டுவரும் காணொளிகளாலோ என்னவோ உங்கள் உரையின் உச்சரிப்பு சீராக உள்ளது. மொழி பேச்சுமொழிக்குச் செல்லாமல் அச்சிடுவதற்குரிய வகையில் சீராக உள்ளது. ஒரு சொல் கூடுதல் இல்லாமல், எங்கும் திசைதிரும்பாமல் அழகாகச் சென்ற உரை ஒரு பெரிய கற்றலனுபவம்.
நியூயார்க்- வாசிங்டனில் நிகழவிருக்கும் நவீனத்தமிழ் இலக்கிய மாநாடு பற்றிச் சொன்னீர்கள். மகத்தான செய்தி. மனமார்ந்த வாழ்த்துக்கள். தம்மை முன்வைக்கும் சூழலில் தமிழை முன்வைக்கும் உங்களை வணங்குகிறேன்
சு. மதியழகன்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
தமிழ் விக்கி- தூரன் விழாவின் உரை மிகச்சிறப்பாக இருந்தது. இன்று, தமிழ்விக்கி ஒரு தவிர்க்கமுடியாத அறிவுச்சேகரம். ஒவ்வொரு நாளும் என்னைப்போன்ற கல்வியாளர்கள் எதையாவது தேடி வந்துகொண்டேதான் இருக்கிறோம். இங்கிருக்கும் முழுமையான தகவல்களை எங்குமே காணமுடிவதில்லை. அத்துடன் உசாத்துணையில் இருக்கும் இணைப்புகள் முழுமையான ஆய்வுக்குப்பின் வந்தவை. தமிழ்விக்கியின் மொழிநடை வாசிப்புக்கு சுவையானது. தகவல்கள் பகுக்கப்பட்டிருக்கும் மாறாத அமைப்பும் மிகப்பெரிய உதவி. முன்னுதாரணமான முயற்சி.
நியூயார்க் இலக்கியமாநாடு பற்றிச் சொன்னீர்கள். வாழ்த்துக்கள். செயற்கரிய செய்பவர் நீங்கள். நீங்கள் அறிவிக்கும்போது ஒவ்வொரு விஷயமும் அசாத்தியமானதாகத் தெரிகிறது. சாதித்துக்காட்டி கடந்துசென்றபடியே இருக்கிறீர்கள்.
செல்வ முத்துக்குமார்.
The art of letting-go- Jeyamohan

A couple of days back, my friend K.B.Vinod, a good reader, had come to meet me at my office. He is in the software industry. We got talking about my difficulties with making railway ticket reservations.
The art of letting-go- Jeyamohan
பொழுதுபோக்கு என்பதுதான் இந்த நூற்றாண்டின் ஒட்டுமொத்தமான பெரிய வணிகம் என்று அண்மையில் ஒரு செய்தி படித்தேன். உலக அளவில் உணவு உற்பத்தி, ஆடை உற்பத்தியை விட அதுவே மிகப்பெரிய தொழில். நம்புவது எளிது. ஏனென்றால் நாம் சராசரியாக உணவு, உடைக்குச் செலவழிப்பதை விட அதிகமாக இன்றைக்கு கேளிக்கைகளுக்குச் செலவழித்துக்கொண்டிருக்கிறோம்
பொழுது- கடிதம்August 12, 2025
இலக்கியவாதி வரலாற்றை வாசித்தல், வெ.வேதாசலம்-1
உலகமெங்கும் புனைவெழுத்தாளர்களின் முதன்மை ஈடுபாடாக இருப்பது வரலாறு அதன் பின் தத்துவம். தத்துவமும் வரலாறும் இரு சிறகுகள், அதைக்கொண்டே புனைவெழுத்து பறக்க முடியும் என்றொரு கூற்று உண்டு. விந்தையாக தமிழில் தீவிர இலக்கியப் பரப்பில் வரலாற்றாய்வு மேல் ஆர்வம் கொண்ட இலக்கியவாதிகள் மிக மிக அரிதானவர்கள். பெரும்பாலானவர்களுக்கு வரலாறு பற்றிய எந்த புரிதலும் இருப்பதில்லை. அடிப்படையான ஒரு ஆர்வம் கூட அவர்களிடம் இல்லை.
இந்த ஒரு காரணத்தினால் தான் தமிழில் திரும்பத்திரும்ப அகவயமான சிறுகதைகளே பெரும்பாலும் எழுதப்படுகின்றன. கணிசமான படைப்புகள் ஆண்பெண் உறவு எனும் சிறு வட்டத்திற்குள் அடங்குவதற்கான காரணம் இதுவேயாகும். வாழ்க்கையின் ஒரு பிரச்னையை காலம் முழுக்க அது என்னவாக இருக்கிறது என்று விரித்துப் பார்ப்பதற்கு வரலாறு தேவையாகிறது. அதன் அடிப்படைகள் மானுடத்திலும் இயற்கையிலும் காலவெளியிலும் எப்படி உள்ளன. என்று மேலும் விரிப்பதற்கு தத்துவம் தேவையாகிறது.
அவ்வாறு விரித்து நோக்கும் திறனின்மையால் வாழ்வின் கணங்களை அப்படியே பதிவு செய்வது இலக்கியம் என்று நம்மவர் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் இயலாமைக்கு உகந்தவகையில் இலக்கியத்திற்கான வரையறையை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைச் சொல்லிச் சொல்லி நிறுவிக்கொண்டும் இருக்கிறார்கள். தமிழில் வரலாறுக்கும் தத்துவத்துக்கும் எதிரான இலக்கியவாதிகளின் அபிப்பிராயங்கள் அடிக்கடிக் காதில் விழும். குறிப்பாக நவீனத்துவர்கள் தங்களைநோக்கித் தாங்களே சுருங்கிக்கொண்டவர்கள். தங்களுக்குள் சுழன்றுகொண்டிருக்கும் உலகத்தை மட்டுமே எழுதியவர்கள்.
இவர்களுக்கேற்ப தமிழில் வாசகர்களிலும் பெரும்பாலானவர்கள் வரலாறு, தத்துவம் ஆகியவற்றில் எந்த ஈடுபாடும் அடிப்படைப் பயிற்சியும் அற்றவர்கள். ஆகவே இவர்கள் எழுதும் இந்த எளிய நேரடி வாழ்க்கைப்பதிவுகளையே இலக்கியம் என்று நம்பும் ஒரு கூட்டமும் திரண்டுள்ளது. ஆகவே இவர்கள் அளிப்பதை அவர்கள் பெற்றுக்கொள்ள, அவர்களுக்கு உகந்ததை இவர்கள் அளிக்க ஒருவகையான கைமாற்றமாக இங்கு தத்துவமற்றதும் வரலாறற்றதுமான ஓர் எழுத்து உருவாகி நிலைகொண்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் சிறுகதை வடிவம் ஓங்கியிருப்பதற்கும் நாவல் வடிவம் பின் தங்கியிருப்பதற்கும் காரணமே இந்த வரலாறின்மை தான்.
தமிழில் வரலாற்றை எழுத்தின் பொருளாகக் கொண்டவர்கள் இரண்டு வகையான படைப்பாளிகள். கல்கி, சாண்டில்யன் வகையிலான வரலாற்று மிகுகற்பனைப் புனைவுகள் அல்லது கற்பனாவாத வரலாற்றுப்புனைவுகள் (Historical Romance) எனும் எழுத்துவகை வரலாற்றை தன்னுடைய முதன்மைப் பேசுபொருளாக கொண்டுள்ளது. சென்ற நூற்றாண்டில் உருவான தமிழ்த்தேசிய அரசியலின் ஒரு பகுதியாக தமிழர் தொன்மை குறித்த ஒரு பெருமிதம் தமிழ் உள்ளங்களில் உருவாக்கப்பட்டபோது இந்தியாவில் வேறெங்கும் இருப்பதை விட அதிகமான வரலாற்று மிகுபுனைவுகள் தமிழில் உருவாயின.
இந்தியத் தேசிய எழுச்சியே இந்தியாவின் வரலாற்றைப் பற்றிய மிகை கற்பனைகளை உருவாக்குவதனூடாகத்தான் திரண்டு வந்தது என்பது நாம் அறிந்ததே. புகழ்பெற்ற ஆனந்த மடம் (பங்கிம் சந்திர சட்டர்ஜஜி) கூட ஒரு வரலாற்று மிகுபுனைவேயாகும். வரலாற்று மிகுபுனைவு வரலாற்றிலுள்ள தொன்மங்களின் அழகியலுக்கு மிக அணுக்கமானது என்பதும் இந்த வகை எழுத்து மேலோங்கியமைக்குக் காரணம். ஆனந்தமடம் ஒரு புராணம் என்றாலும் அது சரிதான்.
இந்தியாவின் ஒவ்வொரு மொழியிலும் தொடக்ககால நாவல் என்பது வால்டர் ஸ்காட், அலெக்ஸாண்டர் டூமா போன்றவர்களின் நேரடிச் செல்வாக்கு கொண்ட வரலாற்று மிகுபுனைவாகவே இருந்திருக்கிறது. தமிழில் வரலாற்றை புனைவுக்கு எடுத்தாண்ட தொடக்ககால நாவல் என்றால் தி.சரவணமுத்துப் பிள்ளை எழுதிய மோகனாங்கியைச் சொல்லலாம். மலையாளத்தில் சி.வி.ராமன் பிள்ளையின் மார்த்தாண்டவர்மா, கன்னடத்தில் ஜி.வி.ஐயர் எழுதிய சாந்தலா போன்ற பல உதாரணங்கள்.
ஆனால் விரைவிலேயே அங்கெல்லாம் யதார்த்தவாத எழுத்து முறை மேலோங்கி ,அன்றாடச் சித்திரிப்பை நோக்கி புனைவு நகர்ந்தது. ஏனெனில் யதார்த்தவாதம் ஜனநாயக பண்புகளுக்கு மிக நெருக்கமானது சமுதாய சீர்திருத்த நோக்குக்கும் உகந்தது. யதார்த்தவாத எழுத்தில் சாதனைப் படைப்புகள் வங்கம், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் உருவாயின. தமிழில் அந்தவகையான எழுத்துமுறை புதுமைப்பித்தன் க.நா.சு வழியாகத் தொடங்கினாலும் அது எல்லைக்குட்பட்டதாகவே இருந்தது.
ஏனென்றால் தமிழில் அந்தக் காலத்தில்தான் தமிழர்களுக்குரிய தனி வரலாறு என்னும் கருத்தும், அவ்வரலாற்றுக்கு உள்ளுறையாக இருக்கும் சில பெருமித விழுமியங்கள் பற்றிய அக்கறையும் உருவாகத் தொடங்கின. அவற்றைப் பெருக்கி அரசியல் அதிகாரத்தையே பிடிக்கும் அளவுக்கு கட்சிகள் வளர்ச்சி கொண்டன. அதன் விளைவாக இங்கே தமிழர் பெருமிதம் சார்ந்து எழுதப்படும் வரலாற்று மிகபுனைவுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் அதிதீவிரமான வாசிப்பு இருந்தது. தமிழின் வரலாற்று மிகுபுனைவில் குறிப்பிடத்தக்கவை என்று எப்படியும் நூறு படைப்புகளைச் சொல்லமுடியும். இந்தியாவின் வேறெந்த மொழியிலும் இப்படி ஒரு வலுவான இலக்கிய வகைமையாக வரலாற்று மிகுபுனைவு இல்லை.
சென்ற இருபதாண்டுகளாக வார இதழ்களின் வீச்சு குறைந்தபோது மட்டும்தான் வரலாற்று மிகுபுனைவு சற்று பின்னடைவைச் சந்தித்தது. ஆயினும் கூட பாலகுமாரனின் ‘உடையார்’, சு.வெங்கடேசனின் ‘வேள்பாரி’ போன்ற வரலாற்று மிகுபுனைவுகளில் செவ்வியல்தன்மை கொண்டவை எனத்தக்க படைப்புகள் சென்ற சில ஆண்டுகளில் உருவாகி, மிகப்பெரிய அளவில் வாசக ஏற்பை பெற்றவையாகவே நீடிக்கின்றன.
வரலாற்று மிகுபுனைவு பொதுவாசிப்புக்குரிய எழுத்தின் ஒரு முதன்மையான வடிவமே .ஏதோ ஒருவகையில் உலக இலக்கியத்தில் அது இருந்துகொண்டும் இருக்கிறது. அது வாழ்க்கையல்ல, வாழ்க்கை குறித்த கற்பனைதான். ஆனால் அக்கற்பனைக்குள் அது தனக்கென சில விழுமியங்களை திரட்டிக்கொள்கிறது. சில அடிப்படைகளை கட்டமைத்துக்கொள்கிறது. அது ஒரு சமூகம் தன்னைத்தானே வரையறுத்துக் கொள்வதில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.
இன்னொரு வகையான வரலாற்று எழுத்தென்பது எழுத்தாளர்கள் தங்களுடைய சொந்த வாழ்வனுபவம் அல்லது தங்களுடைய குடும்பத்தின் அனுபவங்களிலிருந்து எழுதும் ஒருவகையான தன்னியல்பான வரலாற்றுத் தன்மை கொண்ட எழுத்து. ஒரு கிராமத்தின் வரலாறு அல்லது ஒரு பகுதியின் வரலாற்றை இலக்கியமாக ஆக்குவது. குறிப்பிட்ட அலகுக்குள் செயல்படும் வரலாறு இது. இதை சிறுவரலாறு அல்லது நுண்வரலாறு (Micro History) எனலாம்.
தமிழில் அவ்வாறு எழுதப்பட்ட நல்ல இலக்கியப் படைப்புகள் பல உள்ளன. கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், பூமணியின் பிறகு எனத்தொடங்கி ஒரு பட்டியலை நாம் போட முடியும் .ஆனால் இவை வரலாற்று பதிவுகளாக தன்னியல்பாக ஆகின்றனவே ஒழிய ஆசிரியருக்கு வரலாறு சார்ந்த ஒரு பிரக்ஞை இருப்பதாகவோ வரலாற்றின் முறைமையை ஒட்டி தன் புனைவை அளித்திருப்பதாக வோ அல்லது வரலாற்று எழுத்திலிருந்து தன்னுடைய புனைவிற்கான கருவிகளை எடுத்துக்கொண்டிருப்பதாகவோ கூறிவிட முடியாது.
வரலாற்று எழுத்தைப் பற்றிய பிரக்ஞையின்மையால் என்ன இழப்பு புனைவெழுத்திற்கு உருவாகிறது என்று பார்த்தால், முதன்மையாக வரலாற்றெழுத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அடிப்படையான மாற்றங்கள் தெரியாமல் இருப்பதனால் புனைவெழுத்து அதற்குரிய மாற்றங்களை தன் கட்டமைப்பிலும் பார்வையிலும் உருவாக்க முடியாமல் ஆகிறது. நம்முடைய வரலாற்று மிகுபுனைவு எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் வரலாற்றின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை எழுதிய ஸ்ரீநிவாஸ சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார் போன்றவர்களின் காலகட்டத்திலேயே நின்றுவிட்டவர்கள். திரும்பத் திரும்ப அந்த பெருவரலாற்றுச் சித்திரத்திலிருந்தே தங்களுடைய புனைவுக்கான அடிப்படைகளை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இது அவர்களுடைய புனைவை பெருமளவுக்கு குறுக்குகிறது, அல்லது புதிய வாய்ப்புகளை நோக்கி அவர்கள் முன்நகர்வதை தடுத்துவிடுகிறது.
வரலாற்று மிகுபுனைவுகளில் இயல்பாகவே இருக்கும் அம்சம் என்பது வீரவழிபாடு தான். தொடக்ககால வரலாற்று ஆசிரியர்கள் தாங்களும் அந்த வீர வழிபாட்டுப் பார்வையை கொண்டவர்கள். வரலாற்றிலேயே பொற்காலங்களை தேடுவதும், மாமன்னர்களையும் பெரிய ஆளுமைச்சித்திரங்களையும் கட்டமைப்பதும் அவர்களின் பார்வையாக இருந்தது. தமிழ் வரலாற்றுப்பரப்பில் ராஜராஜ சோழன் எப்படி ஒரு முதன்மை ஆளுமையாக மாறினார் என்று பார்த்தால் தொடக்க கால வரலாற்று ஆசிரியர்களிடம் இருந்த அந்த வீரவழிபாட்டுத்தன்மை அல்லது திருவுருவாக்கம் நமக்கு புரியவரும். அதைத்தான் நாம் கல்கியிலோ, சாண்டில்யனிலோ, பாலகுமாரன், சு.வெங்கடேசன் வரையிலோ பார்க்கிறோம். அதற்கப்பால் வரலாறு முன்நகர்ந்திருக்கிறது என்றும், நுண்வரலாற்று எழுத்தினூடாக இன்றைய வரலாற்று எழுத்துமுறை மேலும் மையமழிந்ததாகவும், மேலும் ஜனநாயகத்தன்மை கொண்டதாகவும் ஆகிவிட்டிருக்கிறது என்றும் அவர்களுக்குத் தெரியாமல் ஆகிறது.
நவீனப் படைப்பாளிகளில் பெரும்பாலானவர்களிடம் இல்லாத புரிதல் இது. வரலாற்று எழுத்து இன்று முன்பு போல வரலாற்றின் ஒட்டுமொத்த பெருஞ்சித்திரங்களை உருவாக்குவது அல்ல. வரலாற்றை ஒன்றுக்குள் ஒன்றுக்குள் ஒன்றென விரிந்துகொண்டே செல்லும் ஒரு முடிவிலா சுழற்சியாக, தனக்குள் தனக்குள் மடிந்துகொண்டே செல்லும் ஓர் ஆழமாக இன்றைய வரலாற்றெழுத்தாளர்கள் பார்க்கிறார்கள். நுண்வரலாற்றின் இயல்பு அது. இன்று சோழர் வரலாறு அல்ல, தஞ்சைபெரிய கோயிலின் வரலாறுதான் ஆய்வாளனின் ஆய்வுப்பொருள். அதிலுள்ள ஒரு சிற்பத்தின் வரலாறு, அச்சிற்பத்துடன் இணைந்துகொள்ளும் பண்பாட்டு உருவகங்களின் வரலாறு என அது விரியும்
நவீன எழுத்தாளர்களுக்கு நுண்வரலாறு குறித்த பிரக்ஞை இருக்கும் என்றால் ஒரு குறிப்பிட்ட பகுதியையோ, குறிப்பிட்ட வட்டத்தையோ சார்ந்து தங்கள் அனுபவங்களை ஒட்டி எழுதும் இலக்கிய படைப்பாளிகள் கூட தங்களுடைய பேசுபொருளை மிக ஆழத்திற்கு கொண்டு சென்று விட முடியும். அவற்றின் பல அடுக்குகளை அவர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் வாழ்க்கை மற்றும் பண்பாட்டுக் கூறுகளிலிருந்தே பெற்றுவிட முடியும்.
அவ்வாறு பெற்று எழுதப்பட்ட நவீன இலக்கியப்படைப்புகள் என் பார்வையில் எதுவுமே இல்லை. அதற்கான சிறு முயற்சியாவது இருந்த ஒரே படைப்பென்று பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் என்னும் நாவலை மட்டுமே சொல்ல முடியும். ஆனால் மிக விரைவிலேயே அந்த நாவல் ஆர்வமிழந்த எழுத்துமுறைக்கு சென்று தளர்வுறுவதைக்காண முடிகிறது. இன்று பார்க்கையில் நீல.பத்மநாபனின் தலைமுறைகளோ, சுந்தர ராமசாமியின் குழந்தைகள் ஆண்கள் பெண்களோ சற்று நுண்வரலாற்றுப் பிரக்ஞை இருந்திருந்தால் அடைந்திருக்க கூடிய பல்லடுக்குத்தன்மையும் ஆழமும் எத்தனை என்ற வியப்பும் இழப்புணர்வும் ஏற்படுகிறது.
வரலாற்றை ஒரு வரலாற்றாசிரியனாக அன்றி எழுத்தாளனாக மட்டுமே நின்று பார்க்கும் கோணமே என்னுடையது. இந்த எல்லையை எனக்கு நானே வகுத்துக்கொண்டதும் பல்வேறு குழப்பங்களிலிருந்து நான் விடுபட்டேன். ஒரு வரலாற்றுக் கேள்விக்கு வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பது மட்டுமே எனது பணியே ஒழிய, நானே அதற்கு விடை தேடுவது அல்ல. ஒரு வரலாற்றாசிரியனாக என்னை கற்பனை செய்துகொண்டு என்னுடைய குறைவான தகவல் அறிவைக்கொண்டு மிகுதியான நேரத்தை வீணடித்து ஆய்வுகள் எதிலும் ஈடுபடுவது அசட்டுத்தனம் என்பதை மிக இளமையிலேயே கற்றுகொண்டிருந்தேன்.
ஏனெனில் எனது இளமையில் நான் புனைவெழுத்திற்கு வரும் காலகட்டத்திலேயே கேரளத்தின் முதன்மையான வரலாற்றாசிரியர்கள் சிலருடன் நேரடியாக தொடர்பு கொண்டவனாக இருந்தேன். டாக்டர் எம்.கங்காதரன் அவர்கள் எனக்கு மிக அணுக்கமானவர், என் ஆசிரியர் என்றே அவரைக் குறிப்பிட முடியும் அவரிடமிருந்துதான் வரலாற்றெழுத்து என்பது எப்படி நுண்வரலாற்றெழுத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது என்ற செய்தியையும் நான் அறிந்தேன். அதன்பின் எல்லாக்காலகட்டத்திலும் வரலாற்றாசிரியர்களுடன் விவாதிக்கக்கூடியவனாக ,பெரும்பாலும் அன்றாடம் சந்திக்கக்கூடியவனாகவே இருந்திருக்கிறேன்.
வரலாற்றிலுள்ள ஒரு புதிர் வரலாற்றின் எல்லைக்குள் இருந்து வளர்ந்து ஒரு மானுடப்பிரச்னையாக ஆகுமென்றால், கற்பனையினூடாக அதற்கு விரிவையும் விளக்கத்தையும் அளித்து அதை புனைவாக ஆக்கலாம், அதுவே என்னுடைய வழி என்று நான் வரையறுத்துக்கொண்டேன். புனைவெழுத்துக்கு முழுமையான வரலாறு தேவையில்லை, வரலாற்றின் ஒரு சாத்திதக்கூறு, ஒரு முகாந்திரம் மட்டுமே போதுமானது. நான் புனைவில் எடுத்தாளும் வரலாறு அவ்வளவுதான்.
இதையே தத்துவத்தைப்பற்றியும் நான் அதையே சொல்வேன். தத்துவம் என்பது ஒரு எழுத்தாளனாக என்னுடைய கேள்விகளை அருவமாக பின்னிக்கொண்டிருக்காமல் திட்டவட்டமான மொழிபுகளினூடாக வகுத்துக்கொள்வதற்கும் விரிவாக்கிக்கொள்வதற்கும் நாம் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு கருவி மட்டும்தான் இந்த தன்வரையறை தத்துவத்தின் முடிவில்லாத நுண்சிக்கல்களுக்குள் சென்று என் பொழுதை வீணடிக்காமல் என்னைக் காத்தது. தத்துவம் ஒரு மெய்த்தேடல் கொண்ட தனிமனிதனாகவும் , எழுத்தாளனாகவும் எனக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டுமே அவற்றில் ஈடுபடுபவனாக ஆனேன்.
இந்தக் காரணத்தினால் மெய்யான வரலாற்றாசிரியர்கள் மீதும் தத்துவ ஆசிரியர்கள் மீதும் பெருமதிப்பு கொண்டவனாகவும், அவர்கள் ஆற்றும் பணி என்ன என்று தெரிந்தவனாகவும் இருக்கிறேன். அந்தக் கோணத்தில் நான் வாசித்து பயனடைந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவர் முனைவர் வேதாசலம் அவர்கள். பாண்டிய நாட்டில் சமணம் என்ற அவருடைய பெருநூல் கடந்த பலநாட்களாக என் கையில் உள்ளது.
ஓர் அறிவியக்கவாதியாகவும், புனைவெழுத்தாளனாகவும் நான் வரலாற்றில் தேடுவது என்ன? அறிவியக்கவாதியாக நான் என் சிந்தனைகளுக்கான வரலாற்றுப் பின்புலத்தையும், என் தர்க்கத்துக்கான வரலாற்றுச் சான்றுகளையும் தேடுகிறேன். இதை வரலாற்றுத்தன்மை (Historicity) என்று சொல்வேன். வரலாறு நான் சொல்வதையே சொல்கிறது என என் கருத்துக்களுக்கேற்ப வரலாற்றைக் குறுக்கும் வரலாற்றுவாதம் (Historicism) எனக்கு ஏற்புடையது அல்ல.
புனைவெழுத்தாளனாக நான் வரலாற்றில் தேடுவது முதன்மையாக மானுடத்தருணங்களைத்தான். மாலிக் காபூருக்காக வீரபாண்டியன் தன் சகோதரன் சுந்தரபாண்டியனைக் காட்டிக்கொடுத்தான் என்பதும், ரங்கப்ப நாயக்கன் ஆற்றல்மிக்கவனாக இருந்தாலும் தன் அண்ணன் திருமலை நாயக்கனுக்கு பணிந்தே இருந்தான் என்பதும் அளிக்கும் முரண்பாடுதான் என்னை தூண்டும் வரலாற்றுச்செய்திகள்.
அடுத்தபடியாக வலுவான படிமங்களை. வாதாபி கணபதி உண்மையில் எங்குள்ளது என்னும் செய்தி, அல்லது தஞ்சை பெரிய கோயிலின் சிற்பங்களில் ஏன் புத்தர் இருக்கிறார் என்பது எனக்கு முக்கியம். இறுதியாக வரலாறு தன்னை நிகழ்த்திக்கொள்வதிலுள்ள மாபெரும் தற்செயல் அளிக்கும் தரிசனம், அந்த தற்செயல் நிகழும்போதுள்ள நுணுக்கமான தர்க்க இசைவு அளிக்கும் திகைப்பு. நான் இதற்காகவே வரலாற்றாய்வை அணுகுகிறேன். என்னிடம் தமிழக வரலாற்றாய்வாளர்கள் பெரும்பாலானவர்களின் நூல்கள் உள்ளன. என் வாசிப்புமேஜையில் வரலாற்றாய்வு நூல் இல்லாமலிருப்பதே இல்லை.
ஒருவரலாற்று நூலை ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் படிக்க முடியாது. அவ்வாறு படிக்கத்தகுந்த முறையில் எழுதப்படும் வரலாற்று நூலென்பது பொது வாசகர்களுக்காக எழுதப்படும் ‘வரலாற்று விவரிப்பு நூல்’ மட்டுமே. மனு பிள்ளையின் ஐவரி த்ரோன் போலவோ, கா.அப்பாத்துரையின் தென்னாட்டுப் போர்க்களங்கள் போலவோ, ராஜமாணிக்கனாருடைய மதுரை நாயக்கர் வரலாறு போலவோ. அவை பொதுவாசகர்களுக்காக எழுதப்படுபவை. கதைத்தன்மை கொண்டவை. கதைத்தன்மை என்பது கற்பனைக்கு இடமளிக்கும் சித்தரிப்பும், தகவல்களை சீராக இணைத்து உருவாக்கப்படும் ஒழுக்கும் கொண்டது.
மாறாக, வரலாற்று நூல்கள் தகவல்கள் செறிந்தவையாகவும் தகவல்களை குறிப்பிட்ட வகையில் அடுக்கி அவற்றினூடாக தர்க்கபூர்வமாக சில முடிவுகளை நோக்கி செல்லக்கூடியவையாகவும்தான் எழுதப்படும். தென்பாண்டி நாட்டில் சமணம் என்ற நூல் அத்தகையது. பாண்டியநாட்டிலுள்ள சமணசமய தொல்லியல்சின்னங்களைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் தொகுத்தளிக்கும் நூல் அது. ஒருவகையில் ஒரு சிறு கலைக்களஞ்சியம். அத்தகைய நூலை ஒரு பொது வாசகர் எப்படி வாசிப்பது?
(மேலும்)
தமிழ்விக்கி நான்காமாண்டு
தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியம் தொடங்கப்பட்டு மூன்றாண்டு முடிந்து நான்காம் ஆண்டு நிகழ்கிறது. 2022 மே 8 அன்று தமிழ்விக்கி வாஷிங்டனில் தொடங்கப்பட்டது. இன்று அந்நிகழ்வுகள் அண்மைக்கால வரலாறாக ஆகிவிட்டிருக்கின்றன. நாங்கள் வெகுவாக முன்னகர்ந்துவிட்டிருக்கிறோம். எங்களை நிறுவிக்கொண்டிருக்கிறோம். அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கு நகர்ந்துள்ளோம்.
தமிழ்விக்கி உருவான காலம் மிக அண்மையதுதான், ஆனால் அன்று உருவாக்கப்பட்ட வம்புகள், எதிர்ப்புகள் எல்லாம் வரலாற்றில் துளியிலும் துளியாகக்கூட எஞ்சப்போவதில்லை. அது எப்போதுமே அப்படித்தான், வரலாறு எப்போதுமே சாதனைகளால் மட்டுமேயானது. தமிழ்க் கலைக்களஞ்சியம் உள்ளது, பெரியசாமித் தூரன் பெயர் உள்ளது, அன்று எழுந்த அரசியல்சார்ந்த வசைகளும் ஏளனங்களும் என்னென்ன என்று தேடினாலும் கிடைப்பதில்லை, தூரன் வருந்தி எழுதிய சில வரிகளில் இருந்தே அவற்றை ஊகிக்கமுடிகிறது.
இது எதையாவது நிகழ்த்த எண்ணும் அனைத்து இளைஞர்களுக்குமான பாடம். நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் உங்களுக்கு ஆதரவும் உருவாகும், பலமடங்கு சில்லறை எதிர்ப்புகளும் உருவாகும். அது மானுட இயல்பு. இந்தியா மிகத்தொன்மையான சமூகம், நாம் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு வாழ்பவர்கள். ஆகவே நம்மில் ஒருவர் வேறுபட்டிருப்பதை நாம் ஏற்பதில்லை. அவரை அழிக்க முயல்வோம். அதை கடந்துதான் எதையேனும் இங்கே எய்த முடியும்.
சென்ற இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் எங்கள் செயல்பாடுகளுடன் இணைந்துள்ளனர். அவர்கள் பலருக்கு தமிழ்விக்கி கடந்துவந்த பாதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்காக ஒரு சுருக்கமான அறிமுகமாக இந்த இணைப்புகளை அளிக்கிறேன்.
தமிழ்விக்கி என ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் எண்ணம் உருவானதற்குக் காரணம் தமிழ் விக்கிப்பீடியாவின் இயல்பான எல்லைதான். அதில் எவர் வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் திருத்தலாம். தன் சொந்த மொழிக்கொள்கைக்கு ஏற்ப பதிவுகளை மாற்றலாம். தரவுகளை திரிக்கலாம், வெட்டிச்சுருக்கலாம்.
எண்ணிப்பாருங்கள். க.நா.சுப்ரமணியம் தமிழ்ச்சிந்தனைகளின் தலைமகன்களில் ஒருவர். அவர் பற்றிய இந்த தமிழ்விக்கி பதிவு எத்தனை உழைப்புக்குப் பின் உருவாக்கப்பட்டிருக்கும். இதை விக்கிபீடியா பதிவுடன் ஒப்பிடுங்கள். எல்லா தரப்பைச் சேர்ந்த எல்லா முதன்மை ஆளுமைகள் பற்றிய பதிவும் இவ்வாறே அமைந்திருப்பதை எவரும் காணமுடியும். க.நா.சுவின் உலகுக்கு நேர் எதிரான உலகைச் சேர்ந்தவரான தேவநேயப் பாவாணர் பற்றிய கட்டுரையும் மிகப்பெரிய உழைப்பின் அடிப்படையில் உருவானது.
இவை இலக்கிய ஆர்வமும், தொடர்பயிற்சியும் கொண்டவர்கள் பலரின் கூட்டு முயற்சியால் எழுதப்பட்டவை. தொடர்ந்து பிழைகள் களையப்பட்டு இவை மேம்படுத்தவும் படுகின்றன. இவற்றை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவேன் என்றால், இந்தக் கட்டுரைகளை இவை பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாத ஒருவர் வந்து தனக்குத் தோன்றியபடி திருத்தவோ அழிக்கவோ சுருக்கவோ முடியும் என்றால், அந்த உழைப்புக்கு என்ன மதிப்பு? எவர் தொடர்ச்சியாக ஆர்வம் கொள்ள முடியும்?
விக்கியில் எழுதுபவருக்கு தனிப்பட்ட அடையாளம் இல்லை. சாதனை உணர்வு உருவாவதில்லை. ஆனால் பயனுள்ள ஒன்றைச் செய்தோம் என்னும் நிறைவு உண்டு. ஒரு மறைந்த எழுத்தாளரை வரலாற்றில் பதிவுசெயய்யும்போது மிக அவசியமான ஒன்றைச் செய்தோம் என்னும் பெருநிறைவை நான் அடைவதுண்டு. நான் அவரை தெரிவுசெய்வது என் நாற்பதாண்டுக்கால வாசிப்பால். இலக்கியத் தகுதியால். அப்படி தமிழ் விக்கிபீடியாவில் நான் எழுதும்போது எதுவுமே தெரியாத ஒரு பரமமூடன் வந்து அவர் ஒன்றும் முக்கியமானவர் அல்ல என்று அதை வெட்டிச்சுருக்க முடியும் என்றால் எனக்கு என்ன மதிப்பு? ஒருவன் வந்து காழ்ப்புடன் மேலதிகமாக நான்கு வரி வசையை சேர்த்துவிடலாமென்றால் அறிவுலகப்பணி என்பதன் பொருள் என்ன?

அத்துடன் இன்னொன்றும் உள்ளது. தமிழ் விக்கிபீடியாவில் ஒருவர் தன்னைப்பற்றி மிகையாக எதை வேண்டுமென்றாலும் எழுதலாம். ஓர் அறிஞர், ஒரு படைப்பாளி அவ்வாறு எழுதிக்கொள்ள மாட்டார். அத்துடன் அறிஞர் பற்றிய எழுத்தை அவர் மேல் காழ்ப்புகொண்டவர்கள் அழிப்பார்கள், சுருக்குவார்கள். பிறர் பற்றிய பதிவு அப்படியே இருக்கும். விளைவாக ஒன்றும் தெரியாமல் பொதுவாக தேடுபவர் அறிஞர் பற்றி எதிர்மறை எண்ணம் கொள்வார், சாதாரணமானவர் பற்றி மிகைமதிப்பும் கொள்வார். செயற்கை நுண்ணறிவு அறிஞர் பற்றிய வசைகளையும் சாமானியர் பற்றிய மிகையான கூற்றையும் காட்டுவதும் இதனால்தான்.
இதை அயல்மொழிச்சூழலில் இருந்து தமிழை அணுகுபவர்களிடம் காண்கிறேன். பலர் பொது விக்கிபீடியா பதிவைக்கொண்டு எந்தத் தகுதியும் அற்றவர்களை உயர்வாக நினைக்கிறார்கள். அறிஞர், கலைஞர்களை பற்றி எதிர்மறைப்பார்வை கொண்டுள்ளனர். தமிழ்விக்கிதான் சரியான வழிகாட்டலை இன்று அளிக்கிறது. தமிழ்விக்கி கறாராக ஒவ்வொருவரையும் அவர் செயல்படும் தளம் சார்ந்து மதிப்பிடுகிறது. அவர் அந்த தளத்தில் என்ன செய்துள்ளார் என்பதையே குறிப்பிடுகிறது. உண்மையில் இதுதான் தமிழ்ச்சூழலையும் ஆளுமைகளையும் சரியாக அறிமுகம் செய்வது, நமக்கும் பிறருக்கும். இதை தமிழ் விக்கியின் பதிவுகள் வழியாக எவரும் அறியலாம்.
ஆகவேதான் முறையான ஆசிரியர்குழுவும், தகுதிச்சோதனை செய்யப்பட்ட பங்களிப்பாளர் அணியும் கொண்ட ஓர் இணையக் கலைக்களஞ்சியம் தேவைப்பட்டது. தமிழ்விக்கி அதன் விளைவாகவே உருவானது. இன்று எவரும் இந்த தளத்தின் பதிவுகளை பிற பதிவுகளுடன் ஒப்பிடும் அடிப்படை அறிவுகொண்ட எவரும் உணரமுடியும்.
இதிலுள்ள மதிப்பீடுகள் தமிழ்விக்கி ஆசிரியர்குழுவுடையவை அல்ல, தமிழ்ச்சூழலில் பொதுவாக ஏற்கப்பட்டவைதான். ஆசிரியர் குழு அதை மதிப்பிட்டு சான்றளிக்கிறது. உதாரணமாக, ஒருவர் நவீனத் தமிழிலக்கியச் சூழலில் பங்களிப்பாற்றியவர் என்றால் அவர் அதில் என்ன பங்களிப்பாற்றினார் என்றே பார்க்கிறோம். (பார்க்க சி.சு.செல்லப்பா) ஒருவர் திராவிட இயக்கவாதி என்றால் அதில் அவர் பங்களிப்பு என்ன என்று பார்க்கிறோம். (பார்க்க இளங்குமரனார்) ஒருவர் கல்வியாளர் என்றால் கல்வித்துறையில் அவர் பங்களிப்பையே பார்க்கிறோம். (பார்க்க பொற்கோ)
இந்த நான்காண்டுகளிலேயே இந்த இணையக் கலைக்களஞ்சியத்தின் இடம் என்ன, பயன் என்ன என்பது ஐயமில்லாமல் நிறுவப்பட்டுவிட்டது. இந்தக் கனவை முன்னெடுக்க உதவிய நண்பர்கள் பலர். நிதி, உழைப்பு என மிகப்பெரிய ஆதரவு இதற்கு தேவைப்படுகிறது. இப்படி ஒரு பெருஞ்செயல் இத்தனை ஆண்டுகள் எந்த விதமான அமைப்பு ஆதரவு இல்லாமல் நிகழ்வதென்பது சாமானியமானது அல்ல, இந்தியச் சூழலில் வேறெங்கும் நிகழ்வதும் அல்ல. இதை அரசு செய்திருக்குமென்றால் பலகோடி ரூபாய் இதற்குள் செலவாகியிருக்கும்.
தமிழ்ச்சூழலில் மிகமிகச் சிறப்பாக நடத்தப்படும் இணையப்பக்கம் தமிழ்விக்கிதான், தொழில்நுட்பரீதியாகவும். ஏனென்றால் இதிலுள்ள மொத்த உழைப்பும் இலவசமாக அளிக்கப்படுவது. சேவைப்பணி அளவுக்கு எந்த பணியும் சிறப்பாக அமைவதில்லை என்பது என் அனுபவம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி. நாம் இணைந்து ஒரு வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
தமிழ் விக்கி தொடக்கவுரை தமிழ் விக்கி- விழா தமிழ் விக்கி- முதல்பதிவு தமிழ் விக்கி -சில கேள்விகள் தமிழ் விக்கி -அறிவிப்பு தமிழ் விக்கி பயனற்றதா? கடிதம் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் துவக்கவிழா புகைப்படங்கள் தமிழ்விக்கி மலேசியா தொடக்கம்
தமிழ்விக்கி தொடங்கப்பட்டபோது ஏராளமான அவதூறுகள், வசைகள், ஏளனங்கள் பொழிந்தன. ஏறத்தாழ 135 வசைக்கட்டுரைகள் வெளிவந்தன என தமிழ்விக்கியின் கணக்கு. பலவகையான தடைகள் உருவாக்கப்பட்டன. தொடக்கவிழாவுக்கு வருவதாகப் பெயர் தந்திருந்தவர்கள் அனைவருமே விழாவுக்கு ஒரு நாள் இருக்கையில் வரவில்லை என சொல்லிவிட்டனர். அவர்களுக்கு பிழையான செய்திகள் அளிக்கப்பட்டன. தமிழ்விக்கியை அரசு தடைசெய்யவேண்டும் என்றுகூட எழுதினார்கள். இன்று தமிழ்விக்கியின் இடம் என்ன என்பது ஐயமற நிறுவப்பட்டுவிட்டது.
இன்று, அன்று ஐயங்களையும் கசப்புகளையும் கொட்டியவர்கள், எதிர்ப்புகளை உருவாக்கியவர்கள் அனைவரையும் நோக்கி மீண்டும் நட்புக்கரங்களை நீட்டுகிறோம். இப்போது தமிழ்விக்கியின் விரிவான பதிவுகளை நோக்கும் எவருக்கும் அதன் தேவை என்ன, அதன்பின்னுள்ள அறிவியக்கம் என்ன என்பது தெரிந்திருக்கும். இந்தச் செயற்கை நுண்ணறிவின் காலகட்டத்தில் தமிழ்விக்கி போன்ற ஒரு பதிவு இல்லை என்றால் என்னாகும் என்றும் அவர்களால் ஊகிக்கமுடியும். பழைய சீற்றங்களை கைவிட்டு எங்கள் எதிர்காலத் திட்டங்களில் அவர்களும் பங்கெடுத்து உதவவேண்டும் என கோருகிறோம்.
ஏதேனும் வகையில் தமிழிலக்கியம் – பண்பாட்டுக்குப் பங்களிப்பாற்றுபவர்கள் மிகமிகக் குறைவானவர்களே. அவர்கள் அனைவருமே இலட்சியவாதிகள்தான். அரசியல் சார்ந்து பேசுபவர்களின் உண்மையான ஆர்வம் அரசியலே ஒழிய இலக்கியமோ பண்பாடோ அல்ல. ஏதேனும் செயலாற்றுபவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்கச் சிலர் மட்டுமே.
ஆகவே அரசியல்களுக்கு அப்பால், எல்லா கருத்துவேறுபாடுகளுடனும் இலக்கியம் மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.
தமிழ்விக்கி – ஒரு பேட்டி தமிழ் விக்கி -ஒரு வெற்றிப்பயணம் தமிழ் விக்கி -ஒரு வெற்றிப்பயணம் தமிழ்விக்கி,நண்பர்களும் பகைவர்களும் தமிழ் விக்கி வம்புகள்இன்ஷிராஹ் இக்பால்
இன்ஷிராஹ் இக்பால் (பிறப்பு: 1991) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், ஆசிரியர். அகில இலங்கை தேசிய கவி சம்மேளனம் 2013-ம் ஆண்டு நடத்திய விருது விழாவில் ‘காவியப் பிரதீப கவிச்சுடர்’ பட்டம்.

கடல், ஒரு காணொளி
கடல் திரைப்படமாக வந்து பத்தாண்டுகளுக்குப் பின் நாவல் வடிவம் வெளியாகியுள்ளது. அதன் தீவிரத்தை வாசித்துணர்ந்தவர்களின் கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் ஒன்று இந்த உளப்பதிவு. பாவம்- மீட்பு என்னும் இரு எல்லைகளுக்கு இடையே ஆடும் ஓர் ஆத்மாவின் அகக்கடல் அது. அதை உணர்ந்து பேசியிருக்கிறார்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
