இலக்கியவாதி வரலாற்றை வாசித்தல், வெ.வேதாசலம்- 2
ஒரு பொதுவாசகர் தன் காலகட்டத்தின் முதன்மை வரலாற்றாசிரியரை வாசிக்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சில தன்னொழுங்குகள் உண்டு. ஒன்று, அவர் தன் இடத்தை வரையறை செய்துகொள்ள வேண்டும். வரலாற்றாசிரியருடன் நிகராக நின்று விவாதிக்க அவருக்கு உரிமையில்லை. ஏனென்றால் அதற்கான கருவிகள் அவரிடமில்லை. அந்நூலை ‘தெரிந்துகொள்வது’ மட்டுமே அவருடைய கடமை. அதை மறுக்கும் தரப்புக்காக இன்னொரு வரலாற்றாசிரியரையே அவர் நாடவேண்டும். அதேசமயம் தரவுகளைச் சரிபார்க்கலாம், அதற்கு நூல்களை நாடலாம்.
ஒரு வரலாற்றாய்வு நூலை ‘வாசிக்க’ பொதுவாசகனால் முடியாது. குறிப்பாக இன்றைய நுண்வரலாற்றாய்வு நூல்களை அப்படி வாசிப்பது அறவே முடியாது. அவை நுணுக்கமான தரவுகளால் ஆனவை. அதை வாசிக்கும் வழி ஒன்றுண்டு. வெவ்வேறு கேள்விகள் வழியாக அந்த நூலை சென்றடைந்துகொண்டே இருக்கவேண்டும். ஒரு வரலாற்றாய்வு நூலை நோக்கி தனது கேள்விகளை தொடுத்துக்கொள்ளும் வாசகன் மட்டுமே சுவாரசியத்தை கண்டடையவும் முடியும் .
வேதாசலம் அவர்களின் பாண்டிய நாட்டில் சமணசமயம் என்னும் நூலை நான் அணுகிய முறை ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடும். நான் ஒரு வினாவுடன் அதற்குள் சென்றேன். ‘மதுரையில் சமணம் எப்போது நுழைந்தது எந்த வழியாக நுழைந்தது?’
பரவலாக வட இந்தியா முழுக்க இருக்கும் சித்திரம் சரவண பெலகொளாவிலிருந்துதான் தமிழகத்திற்குள் சமணம் நுழைந்தது என்பது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு மேல்சித்தமூரில் பட்டாரகர் மடத்தில் தலைவரை சந்தித்தபோது இதே சித்திரத்தையே அவர் எனக்கு அளித்தார். சமணர்களின் அதிகாரபூர்வமான நூல்களில் இருக்கும் சித்திரமும் அதுதான். ஏனெனில் தென்னிந்தியாவில் தென்னிந்தியாவின் சமண மையங்கள் மூன்றுதான். வடக்கே கும்சாவும், நடுவே மூடுபிதிரியும், தெற்கே சிரவணபெலகொளாவும். நெடுங்காலம் அவையே தலைமையிடங்களாகவும் திகழ்ந்தன.
ஆனால் வேதாசலம் விரிவான கல்வெட்டு சான்றுகளின் அடிப்படையில் முற்றிலும் வேறொரு சித்திரத்தை அளிக்கிறார். அதாவது கிபி 5-6ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு வரும் கல்வெட்டுகளும் சான்றுகளும் மட்டுமே சிரவணபெலகொளாவில் உள்ளன .பொமு 4 ஆம் நூற்றாண்டிலேயே சிரவணபெளகொளாவில் சமணசமயம் வந்துவிட்டது என அங்குள்ள சமணர்கள், ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். பத்ரபாகு என்னும் சமண ஆசிரியருடன் சந்திரகுப்த மௌரியர் சிரவணபெளகொளாவுக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது, அங்கே சந்திரகுப்த மௌரியர் சமாதியானதாகவும், அங்கே அவருடைய சமாதியிடம் கோயிலாக (சந்திரகுப்தர் பஸதி) இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான தொல்லியல் சான்றுகள் ஏதுமில்லை. வேதாசலம் தொல்லியல் சான்றை முதன்மையாதாரமாகக் கொள்பவர்.
ஆனால் பாண்டியநாட்டில் சமணம் பற்றிய மிகப்பழமையான சான்றுகள் உள்ளன என்று வேதாசலம் சொல்கிறார். மதுரைக்கு அருகிலுள்ள மீனாட்சிபுரம்,(மாங்குளம்) அழகர்கோயில் ஆகிய இடங்களிலுள்ள தமிழ்பிராமி கல்வெட்டுகள் பொமு 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே தமிழகத்தில் சமணம் பரவியிருந்தமைக்கான சான்றுகள். பூலாங்குறிச்சியில் கிடைக்கும் சமணர் குறித்த கல்வெட்டு, கொங்கர்புளியங்குளம், திருவாதவூர் போன்ற ஊர்களிலுள்ள கல்வெட்டுகளையும் வேதாசலம் குறிப்பிடுகிறார்.
இந்த அடிப்படையில் தமிழ் இலக்கிய சான்றுகளையும் துணைகொண்டு வேதாசலம் சென்றடையும் முடிவென்பது தமிழகத்திற்கு, குறிப்பாக பாண்டிய நாட்டுக்குச் சமணம் வந்து சேர்ந்த வழி என்பது கலிங்கத்திலிருந்து கடல் வழியாகத்தான் என அசீம்குமார் முகர்ஜியின் முடிவை வேதாசலம் ஆதரிக்கிறார். கலிங்கத்திற்கு மிகத்தொல்காலத்திலேயே சமணம் சென்றிருக்கிறது. அங்கிருந்து அது வணிகர்களினூடாக தமிழகத்திற்கு துறைமுகங்களுக்கு வந்து அங்கிருந்து உள்நாட்டுக்கு பரவியிருக்கலாம்.
தொடர்ந்து ஆந்திரநிலத்தில் இருந்து பெருவழிகள் வழியாக தமிழகத்தின் வடபகுதிகளுக்குள் நுழைந்து பரவியிருக்கலாம். திகம்பர பிரிவு சமணம் கர்நாடக நிலத்தில் கங்கர்களின் ஆட்சிக்காலத்தில் அரசமதமாக ஆகி தமிழகத்தில் செல்வாக்கைச் செலுத்தியது என்கிறார் வேதாசலம். இவ்வாறு தமிழகத்தில் சமணம் இரண்டு அலைகளாக உள்நுழைந்தது என வகுக்கிறார். முதல் அலை பொமு 300ம், இரண்டாவது அலை பொயு 400ம் ஆக இருக்கலாம். அதாவது ஏறத்தாழ எழுநூறாண்டுகள் தொடர்ச்சியாகச் சமணம் தமிழகத்திற்குள் நுழைந்துகொண்டே இருந்துள்ளது.
இவ்வாறு சமணம் பாண்டியநாட்டில் வேரூன்றியமைக்கான காரணம் சமணமதம் பொதுவாக வணிகர்களின் மதம் என்பதும், சங்ககாலம் (பொமு 300முதல்) தமிழகத்தில் வணிகம், குறிப்பாக கடல்வணிகம் மேலோங்கிய காலகட்டம் என்பதும்தான் என்று வேதாசலம் வகுக்கிறார். சான்றாக கொற்கை, அழகன்குளம் போன்ற இடங்களில் கிடைத்துள்ள வடநாட்டு பண்பாடு சார்ந்த பளபளப்பான கரியவண்ண பானையோடுகளையும், மெகஸ்தனிஸ் மற்றும் சாணக்கியரின் நூல்குறிப்புகளையும் காட்டுகிறார். மௌரியர் காலகட்டத்து நாணயங்களும் பாண்டியர் நிலத்தில் நிறையவே கிடைத்துள்ளன.
இன்னொரு வினாவை மீண்டும் அதே நூல்மேல் தொடுத்துக்கொண்டேன். ‘சமணம் இந்தியாவெங்கும் வணிகர்களின் மதமாக அறியப்பட்டது. தமிழகத்திலும் அப்படித்தானா? எனில் தமிழகத்தில் வணிகர்கள் மிகப்பெரிய அதிகார வல்லமையுடன் திகழ்ந்த காலகட்டம் இருந்ததா?’ அதற்கான பதிலை வேதாசலம் விரிவான தரவுகளுடன் விளக்கிச் செல்வதை இந்நூலில் வாசித்தேன்.
பாண்டியநாட்டில் பொமு 300 முதல் பொயு 400 வரையிலான சமணப்பள்ளிகள் தமிழகத்தில் 16 இடங்களில் உள்ளன என்று வேதாசலம் சொல்கிறார். அவற்றில் அய்யனார்குளம், மறுகால்தலை ஆகிய இடங்களிலுள்ள பள்ளிகளைத் தவிர்த்து எஞ்சியவை முழுக்க மதுரையைச் சுற்றியுள்ள குன்றுகளில் அமைந்துள்ளன. அதைப்போல தமிழகத்தின் பிறபகுதிகளிலுள்ள (ஜம்பை ,காஞ்சிபுரம், புகளூர், செந்நாக்குன்று) பள்ளிகளும் அன்றைய பெரிய நகரங்களை ஒட்டிய குன்றுகளிலேயே காணப்படுகின்றன. மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் நகருக்குள் சமண இருக்கைகள் அமைந்திருந்த செய்தியைச் சொல்கின்றன.
மூவேந்தர்களின் தலைநகரங்கள், தலைநகரங்களுக்குச் செல்லும் பெருவழிகள், துறைமுகங்கள், மற்றும் குறிப்பிடத்தக்க வணிகநகரங்களை ஒட்டியே தமிழகத்தின் சமண மையங்கள் இருந்தன என்று வேதாசலம் சொல்கிறார். திருப்பரங்குன்றம் போன்ற புகழ்பெற்ற சமயப்பள்ளிகள் மதுரைக்குச் செல்லும் பெருவழியின் ஓரமாகவே அமைந்தவை. பூலாங்குறிச்சி பள்ளி சோழநாட்டில் இருந்து பாண்டியநாட்டுத் தலைநகர் மதுரைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இதற்குக் காரணம் இந்த சமணப்பள்ளிகள் மத மையங்களாக மட்டுமன்றி வணிகர்களின் மையங்களாகவும இருந்தன என்பதுதான். சமணம் வணிகர்களின் மதமாகத்தான் இந்தியா முழுக்க பரவியது என்ற சித்திரத்தை அது ஒத்திருக்கிறது.
சமணர்கள் தங்களுடைய வதிவிடங்களை பெரும்பாலும் நகரை ஒட்டி ஆனால் நகருக்கு வெளியே அமைத்துக்கொண்டமைக்குக் காரணம் அவர்களுடைய நோன்புக்கும் தவத்திற்கும் அத்தகைய ஒதுக்கிடங்கள் தேவையாக இருந்தன என்பதும், அதேசமயம் தேவையென்றால் நகரத்துக்குள் வந்து செல்லும் அளவிலேயே அவர்கள் தங்கள் குடியிருப்புகளை அமைத்துக்க்கொள்ளவேண்டும் என்பதும்தான். அதை இந்தியா முழுக்க நாம் பார்க்க முடியும். மிக அரிதாகவே முற்றிலும் தொலைவில், மக்கள் அணுகமுடியாக இடங்களில் சமணர்களின் உறைவிடங்கள் இருந்தன. மதுரைச் சுற்றியிருக்கும் எண்பெருங்குன்றங்களை பற்றி விரிவான ஒரு சித்திரத்தை அளிக்கும் வேதாசலம் இதை தெளிவாகவே நிறுவுகிறார்.
சமணப்பள்ளிகளில் வணிகக்குழுக்கள் தங்கிச்செல்லும் வழக்கம் இருந்தது என்பதையும், அவர்கள் அதன்பொருட்டு அப்பள்ளிகளுக்கு நன்கொடைகள் அளித்தனர் என்பதையும் வேதாசலம் விரிவாக ஆவணப்படுத்துகிறார். உதாரணமாக, மீனாட்சிபுரம் (மாங்குளம்) சமணப்பள்ளியின் தமிழ்பிராமிக் கல்வெட்டுகளில் வெள்ளறை நியமத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அழகர்மலை போன்ற இடங்களில் அமைந்த குகைகளிலுள்ள கல்வெட்டுகளில் பல்வேறு வணிகர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த கருத்தை டி.டி.கோஸாம்பி குறிப்பிடுவதையும் வேதாசலம் மேற்கோள் காட்டுகிறார்.
ஆனால் தன்னுடைய ஆய்வின் அடுத்த நகர்வாக தமிழகத்தில் தொடக்க காலத்திற்கு பிறகு சமணம் உழுகுடிகள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் மதமா மாறியதை வேதாசலம் விவரிக்கிறார். பொயு 400 முதல் பொயு 1400 வரையிலான காலகட்டத்தின் சமணப்பரவலின் சித்திரத்தை அளிக்கும்போது உத்தமப்பாளையம், குறண்டி, குப்பல்நத்தம், கழுகுமலை, எருவாடி போன்ற ஊர்களின் புதிய சமணநிலைகளை பட்டியலிடுகிறார். பொயு 750க்குப்பின் அமைக்கப்பட்ட சமணப்பள்ளிகள் ஊருக்குள்ளேயெ அமைந்ததை குறிப்பிட்டு அவை இன்று வேறுதெய்வங்களின் ஆலயங்களாக வழிபடப்படுவதை ஆவணப்படுத்துகிறார்.
அதாவது பிற்கால சமணம் என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை பெருவணிகர்களின் மதமாக இருக்கவில்லை என்கிறார். இந்த தகவல் பின்னர் இந்திய வெவ்வேறு ஆய்வாளர்கள் சொன்ன தகவல்களுடன் ஒருவகையில் ஒத்துச்செல்கிறது. தமிழகத்தின் மிகச்சிறிய சிற்றூர்களுக்குச் செல்லும் வழிகளின் ஓரங்களில் அமைந்த சமணப்பள்ளிகள் பல்வேறு வகைகளில் சிதைந்தும் சிறுதெய்வங்களாக வழிபடப்பட்டும் கிடைக்கின்றன.
சமணம் நோன்பாளர் மதம் என்ற பொருளிலேயே சிரமணம் என்று பெயர் பெற்றது என்றும், அதுவே சமணம் என்று திரிந்தது என்றும் ஒரு தரப்புண்டு .ஆனால் உழைப்பாளர் மதம் என்ற அளவிலேயே சிரமண மதம் என்று அழைக்கப்பட்டது என்று சொல்லும் ஆய்வாளர்களும் உண்டு. வேதாசலம் முதல் தரப்பைச் சொல்லி, இரண்டாவது கருத்தை நோக்கி நகர்ந்து, அதற்கான ஆதாரங்களை விரிவாக சுட்டுகிறார்.
இது ஒரு வரலாற்று கருதுகோள். அதற்கான தர்க்கங்களுடன் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ஒரு பொதுவாசகனைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமான தமிழக வரலாற்றுப் பண்பாட்டுச் சித்திரம் பற்றிய அவனுடைய உள்ளப்பதிவையே மாற்றிவிடக்கூடியது. சமணம் தமிழகத்தில் பொமு .3-4ம் நூற்றாண்டுகளில் வணிகர்மதமாக வந்தது. அதன்பின் அது களப்பிரர் ஆட்சிக்காலத்தில் அதிகாரமதமாக ஆகி பரவியது. அக்காலகட்டத்திலேயே உழைக்கும் மக்களின் மதமாக மாறியிருக்கிறது என்றால் களப்பிரர் ஆட்சிக்காலம் ஒருவகையில் அடித்தள மக்களின் ஆட்சிக்காலம் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.
சமணத் துறவிகள் களப்பிரர் ஆட்சிக்காலத்தில் அத்தனை நீதி நூல்களை இயற்றியதற்கும், மருத்துவ நூல்களை உருவாக்கியதற்கும் ,இலக்கண நூல்களை உருவாக்கியதற்கும் காரணம் சமணம் மக்கள் மதமாக இருந்தது என்பதே. கல்வி, மருத்துவம் ஆகியவை அதன் பணிகளாக இருந்திருக்கின்றன. திருக்குறளின் உருவாக்கத்திற்கான காரணமே இதுதான் என்ற முடிவை நோக்கி செல்ல வேண்டியிருக்கும். ஓர் எழுத்தாளனாக இது அளிக்கும் திறப்பு பெரியது.
அப்படியென்றால் களப்பிரர்கள் தோற்கடிக்கப்பட்டு பல்லவர்களும் சோழர்களும் பாண்டியர்களும் அடைந்த வெற்றி என்பது என்ன? அது சிரமண மதம் அதாவது உழைப்பாளர்களின் மதத்திற்கு எதிராக வைதிக மதங்கள் அடைந்த வெற்றியா? இன்னொரு கோணத்தில் அந்த வெற்றி உடனடியாக பக்தி இயக்கத்தால் தலைகீழாக்கப்பட்டு மீண்டும் உழைப்பாளி மக்கள் அல்லது சிரமண ஜாதிகள் பக்தி இயக்கம் வழியாக அதிகாரத்தை அடைந்ததா என்ன?
தமிழகத்தில் சமணம் ஆழமாக நிலைகொண்டு தோராயமாக ஆயிரம் ஆண்டுக்காலம் முதன்மை மதமாகவே நீடித்தது. பதினைந்தாம் நூற்றாண்டில், நாயக்கர் ஆட்சிக்காலம் வரை தமிழகத்தில் சமணம் செல்வாக்குடனேயே இருந்தது என்றும் வேதாசலம் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் சமணம் வேரூன்றி, வென்று, திகழ்ந்தமைக்கு என்ன காரணம்?
வேதாசலம் நான்கு காரணங்களைச் சொல்கிறார். பாண்டியநாட்டின் வெளியுறவுக் கொள்கைகள், அரச ஆதரவு, குடிமைச்சமூக அமைப்புக்களின் ஏற்பு, சமணசமயத்தின் மக்கள் நலப்பணிகள் (அல்லது மிஷனரி தன்மை). இவை ஒவ்வொன்றுக்கும் விரிவான தொல்லியல் ஆதாரங்களைக் காட்டுகிறார். முதலாம் இராஜசிம்ம பாண்டியன் சமண மதத்தைச் சேர்ந்த கங்க மன்னனுடன் மணவுறவு கொண்டு அவன் மகள் பூசுந்தரியை மணந்தான் என்னும் வேள்விக்குடிச் செப்பேடு, கங்கர்குலத்து இளவரசி பல்லவ மன்னனை மணந்து சமண சமயத்தை வளர்த்ததைக் குறிப்பிடும் ஹொசக்குடிச் செப்பேடு ஆகியவற்றை சுட்டிக்காட்டுகிறார்.
அதேபோல பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் குறண்டி சமணப்பள்ளி சிறப்புற்றிருந்ததைச் சொல்லும் கல்வெட்டு, ஶ்ரீமாறன் ஶ்ரீவல்லபன் என்னும் மன்னன் மதுரையாசிரியன் இளங்கௌதமனுக்கு ஆதரவளித்ததைக் குறிப்பிடும் சித்தன்னவாசல் கல்வெட்டு போன்ற தொல்லியல் சான்றுகளின் வழியாக பாண்டிய மன்னர்கள் தொடர்ச்சியாக சமணத்துக்கு ஆதரவளித்ததை வேதாசலம் நிறுவுகிறார். கழுகுமலைச் சமணப்பள்ளிக்கு பல்வேறு பொதுமக்கள் அளித்த கொடைகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதையும், பெரும்பழஞ்சி என்னும் ஊரைச்சேர்ந்தவர்கள் சமணர்களின் அறக்கொடைகளுக்கு ஆதரவளித்ததை காட்டும் கல்வெட்டுகளும் வேதாசலத்தால் மேற்கோள் காட்டப்படுகின்றன. வைதிகர்களான பிரமதேயத்து அந்தணர்களும் சமணப்பள்ளிகளை ஆதரித்தமைக்குக் கல்வெட்டுச் சான்றுகளை சுட்டிக்காட்டுகிறார் வேதாசலம்.
சமணமதத்தினர் செய்த அறச்செயல்கள் அந்த மதத்தை எப்படி பரவலாக தமிழ்மக்களிடையே கொண்டுசென்றன என்பதை பல்வேறு கல்வெட்டுச்சான்றுகள் வழியாக வேதாசலம் நிறுவுகிறார். சமணர்கள் வழிகளின் ஓரத்தில் அமைத்த அன்னசாலைகள் பற்றிய கல்வெட்டுக்களே அதிகமும் கிடைக்கின்றன. மீனாட்சிபுரம், கருங்காலக்குடிப் பள்ளி போன்ற தொடக்ககால சமண இருக்கைகள் பெருங்கற்காலச் சின்னங்கள் கொண்ட இடங்களில், ஊருக்கு அப்பால் அமைந்துள்ளன. சமணர்கள் இடுகாடுகளை ஒட்டிய பகுதிகளில் தங்கவேண்டும் என்னும் தொல்நூல்களின் நெறி கடைப்பிடிக்கப்பட்டிருப்பதை இது காட்டுகிறது. ஆனால் பிற்காலப் பள்ளிகள் எல்லாமே நகரங்களை ஒட்டி, பெருவழிகளை ஒட்டி, பிற்காலத்தில் சிற்றூர்ப்பாதைகளை ஒட்டி அமைந்துள்ளன. இது சமணம் மக்கள்மதமாக தன்னை மாற்றிக்கொண்டமைக்கான சான்று என வேதாசலம் கூறுகிறார்.
சமணம் அழிந்தமைக்கு என்ன காரணம் என்னும் கேள்வியை எழுப்பியபடி மீண்டும் இந்நூலுக்குள் சென்றேன். திருஞானசம்பந்தரிடம் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்ற செய்தியை சைவக்குரவர்களின் பாடல்களில் எங்கும் காணமுடியவில்லை என வேதாசலம் குறிப்பிடுகிறார். கல்வெட்டுச் சான்றுகளும் இல்லை. ஞானசம்பந்தர் காலத்திற்குப் பின் முந்நூறாண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி எழுதிய பாடல்களிலேயே அக்குறிப்பு உள்ளது. அனல்வாதம், புனல்வாதம் பற்றிய விவரிப்பை தொன்மமாக நம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். அதை சேக்கிழார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் விரிவாக்கியிருக்கிறார்.
தமிழகத்தில் சமணம் ஓர் அறிவியக்கமாக நீடித்ததை வேதாசலம் தொடர்ச்சியான சான்றுகள் வழியாக விளக்கிச் செல்கிறார். மதுரையில் பொயு 470 வாக்கில் அமைந்த திரமிள சங்கம் தேவநந்தி என்னும் சமணமுனிவர் உருவாக்கியது என்பதை தேவசேனரின் திகம்பர தர்சனம் என்னும் நூல் குறிப்பிடுவதை மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுவதில் தொடங்கி, பொயு 10 வரைக்கும் மதுரையில் சமணம் முதன்மையான அறிவியக்கமாக நீடித்ததை வேதாசலம் விரிவாகச் சொல்கிறார். தென்னிந்தியாவில் சமண சமய மூலச்சங்கத்தில் இருந்து தோன்றியவை யாவனிய சங்கம், திராவிட சங்கம் என்னும் இரண்டு துறவியர் அமைப்புகள். யாவனிய சங்கம் பொயு 5 முதல் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. திராவிட சங்கம் அல்லது திரமிள சங்கம் மதுரையில் பொயு 470ல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
ஜுவாலினிகல்பம் என்னும் நூலை திராவிடசங்கத்து வச்சிரநந்தி என்னும் முன்வர் பொயு 939ல் எழுதியுள்ளார். இவர் தனக்கு முன்பிருந்த ஆசிரியர் ஹேலாச்சாரியாரையும் அவருக்கு முன்பிருந்த ஐந்து ஆசிரியர்களின் பட்டியலையும் அளிக்கிறார். அப்படியென்றால் சம்பந்தரின் காலத்துக்கு பின்னரும், நம்பியாண்டார் நம்பிக்குப் பின்னரும் கூட சமணம் மதுரையில் வலுவாகவே இருந்துள்ளது. பொயு 10 ஆம் நூற்றாண்டில் பாண்டியநாட்டில் வாழ்ந்த சிரிவிசையக் குரத்தியார் என்னும் பெண் துறவி பாண்டியநாட்டு கழுகுமலை சமணத்தலத்தில் இரு கல்திருமேனிகலை செய்தளித்ததும் திருவண்ணாமலை போளூர் அரும்பலூரில் செம்புத்திருமேனி செய்தளித்ததும் கல்வெட்டுகளில் உள்ளன.
பாண்டியநாட்டு குறண்டி பாண்டியர் சோழர்களால் வெல்லப்பட்டபின் சோழர்களின் ஆட்சிக்காலத்திலும் புகழ்பெற்ற சமணப்பள்ளியாகவே நீடித்ததை வேதாசலம் குறிப்பிடுகிறார்.முதலாம் ராஜராஜசோழன் காலத்து வட்டெழுத்து பொறுப்புள்ள நாலூர் அவிச்சேரிப் பள்ளி (பந்தல்குடி) குதலாம் குலோத்துங்கன் காலகட்டத்து அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள கல்வெட்டு என தொடர்ச்சியாக சமணத்திற்கு சோழர்காலத்துச் செல்வாக்கு இருந்ததைப் பற்றிய சான்றுகளை அளிக்கிறார். பொயு 12 , பொயு13 ஆம் நூற்றாண்டுகளில் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் இருந்த சமணப்பள்ளி நாற்பத்தெண்ணாயிரம் பெரும்பள்ளி என அழைக்கப்ப்ட்டது. பொயு 13 ஆம் நூற்றாண்டில் மதுரையில் இருந்த பெரும்பள்ளி ஶ்ரீவல்லபப் பெரும்பள்ளி என அழைக்கப்பட்டது.
தென்பரங்குன்றத்தில், சமணருக்கு எதிரான கழுவேற்ற நிகழ்வு நடந்ததாகச் சொல்லப்படும் ஊரிலேயே, சமணப்பள்ளி இருந்துள்ளதை சித்தர்கள் நத்தம் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கல்வெட்டு சொல்கிறது. மதுரையில் பொயு 13 ஆம் நூற்றாண்டில் ஶ்ரீல்வல்லபப் பெரும்பள்ளிக்கு சித்தர்கள்நத்தம் பகுதியில் நிலங்கள் நிபந்தமாக விடப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு சொல்கிறது. அதாவது சம்பந்தர் காலம் முடிந்து அறுநூறாண்டுகள் கடந்து.
எனில் சமணம் வன்முறையால் அழிக்கப்பட்டது என்பது எவ்வகையிலும் பொருந்துவதல்ல. அதன் அழிவுக்கான காரணம் என்ன? சைவ, வைணவ மதங்களுக்குள் பக்தி இயக்கம் உருவாகி வலுவடைந்ததே என வேதாசலம் கூறுகிறார். தமிழக நாட்டுப்புறத் தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் சைவ, வைணவ மரபுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளிழுக்கப்பட்டன. ஆகவே மக்கள் சைவ , வைணவ மதங்களைத் தெரிவுசெய்தனர். துறவையும் நோன்பையும் வலியுறுத்தும் சமணம் பின்னடைவைச் சந்தித்தது. உறுதியாக, சமணர்கள் முன்னிறுத்திய புலால் உண்ணாமை மக்கள் சமணத்தைத் துறக்கக் காரணமாக அமைந்திருக்கக் கூடும்.
பாண்டியமன்னர்கள் ஓரளவே சமணத்துக்கு எதிரான போக்கை ஆதரித்துள்ளனர் என்கிறார். தொப்பலாக்கரை போன்ற ஊர்களில் பிற்காலப் பாண்டியர் காலத்தில்கூட சமணப்பள்ளிகள் உருவாயின. 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின் பாண்டியநாட்டில் புதிய சமணப்பள்ளிகள் உருவானதற்கான சான்றுகளைக் காணமுடியவில்லை என்று வேதாசலம் சொல்கிறார். ஆனால் பாண்டிநாட்டில் பொயு 16 ஆம் நூற்றாண்டிலேயே சமணம் வலுவாக இருந்தது என்பது கோட்டாறு கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது. இப்போதும் பாண்டியர்கால சமணக்கோயில்களில் வழிபாட்டில் எஞ்சியிருப்பது அனுமந்தக்குடி கோயில்தான் என்று வேதாசலம் சொல்கிறார்.
காலப்போக்கில் சமணசமயம் செல்வாக்கு குன்றி, கைவிடப்பட்ட சமணக்கோயில்கள் இடிக்கப்பட்டு சைவக்கோயில்கள் கட்ட அவற்றின் கட்டுமானப்பொருட்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதையும் வேதாசலம் விரிவாக ஆவணப்படுத்துகிறார். உதாரணமாக குறண்டி பள்ளி இடிபாடுகள் திருச்சுழியிலுள்ள பள்ளிமடம் காளநாதசுவாமி ஆலயத்தின் முன்மண்டபம் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன. தி.கல்லுப்பட்டிக்கு அருகிலுள்ள தேவன்குறிச்சி மலைப்பள்ளி இடுக்கப்பட்டு அதன் கற்கள், தீர்த்தங்காரர் உருவங்களுடன் அங்குள்ள சிவன்கோயில் கட்டுமானத்திற்கும் கிணறு ஒன்றின் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான கோயில்கள் முனியாண்டி உள்ளிட்ட நாட்டார் தெய்வங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு ஒரு வர்லாற்று நூல் நம்மில் உருவாக்கும் மேலதிகக் கேள்விகளுக்கு நாம் மீண்டும் இன்னொரு வரலாற்று நூலையே நாடவேண்டியிருக்கிறது. இவ்வாறு வெவ்வேறு கேள்விகளினூடாக இதுபோன்று ஒரு பெரிய நூலை அணுகும்போது அது தன்னை ஒரு வைரக்கல் போல புரட்டிப்புரட்டி வெவ்வேறு பக்கங்களை காட்டிக்கொண்டே இருப்பதைக் காணலாம். முடிவில்லாத கேள்விகளுடன் ஒவ்வொரு மூறையும் நான் சென்றடையும் ஒரு தளமாக இந்நூல் அமைந்திருக்கிறது.
ஒரு பொதுவாசகன் இத்தகைய நூலை நோக்கிச் சிறிய தரவுகளுக்காகவும், அடிப்படை வினாக்களுக்கு விடைதேடியும் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கவேண்டும். உதாரணமாக, இந்நூலில் உள்ள சமணப் படிமக்கலை வழிபாட்டு வரலாறு என்னும் பகுதி பிற்கால இந்து தெய்வ உருவங்களிலுள்ள சமணச் சிற்பக்கலையின் செல்வாக்கு பற்றிய என் பல கேள்விகளுக்கான விடைகளுடன் அமைந்திருந்தது. பாண்டியநாட்டின் சமணத்தலங்களை மலைப்பள்ளிகள், ஊர்ப்பள்ளிகள் என இரு பெரும்பிரிவுகளாக ஆக்கி அட்டவணையிட்டு ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகப் பதிவுசெய்துள்ளார் வேதாசலம். தமிழ்பிராமி கல்வெட்டுகள் உள்ள குகைத்தளப் பள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன். ஊர்ப்பள்ளிகள் மாவட்டவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளன.
இத்தகைய குறிப்புகளை வரலாற்றாசிரியர்கள் வாசிக்கும் முறை வேறு. பொதுவாசகன், அல்லது என்னைப்போன்ற புனைவெழுத்தாளன் வாசிக்கும் முறைவேறு. சமண சமயத்தில் பெண் துறவியர் குரத்தியர் என அழைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறென்றால் நாஞ்சில்நாட்டிலுள்ள குறத்தியறை என்னும் ஊரும், சிதறால் மலையிலுள்ள குறத்தியறையார் கல்வெட்டும் குரத்தி என்றே வாசிக்கப்படவேண்டும். பேரூர்க்குரத்தியார், மிழலூர்குரத்தியார், சேந்தன் குரத்தியார், ஏனாதி மாகாணக்குரத்தி என கழுகுமலையிலுள்ள பெண் துறவிகளை வாசிக்கையில் அவர்களின் முகங்கள் என் கற்பனௌ வழியாக ஓடிக்கொண்டே இருந்தன. அவர்களெல்லாம் யார்?
இன்றைக்கு அறுநூறாண்டுகளுக்கு முன்பு, அன்றிருந்த சாதியாதிக்க, ஆணாதிக்க வேளாண்மைச் சமூகத்தில் இருந்து அவர்கள் வெளியேறியிருக்கிறார்கள். உலகைத் துறந்து துவராடை அணிந்திருக்கிறார்கள். அல்லது திசையாடை அணிந்த அம்மணர்களா? அவர்கள் தமிழ்நிலம் முழுக்க நடந்தே அலைந்து சமணத்தைப் பரப்பியிருக்கிறார்கள். அவர்கள் அடைந்த விடுதலை அன்றிருந்த குடும்பப்பெண்கள் எவருக்குமே இருந்திருக்காது. உடைமையை அடைவதற்குத்தான் அன்று உரிமை இருக்கவில்லை, உடைமைகள் அனைத்தையும் கைவிடுவதற்கான உரிமை இருந்திருக்கிறது. அத்தனை பெரிய விடுதலை அருகே இருப்பதை அன்று இல்லங்களின் இருண்ட அறைகளில் இற்செறிப்பு காத்த கற்புடைய பெண்கள், அல்லது ஆண்களின் பாலியல் கருவிகளாக இழிவுபடுத்தப்பட்ட பரத்தையர் அறிந்திருந்தார்களா?
ஒரு புனைவினூடாக மட்டுமே நான் சென்று தொடவேண்டிய இடம் என்னும் எழுச்சியையே நான் அடைந்தேன். கூடவே மலையாள கவிஞர் கே.ஏ.ஜெயசீலனின் கவிதை ஒன்றும் நினைவில் எழுந்தது.
சுவர் மடிப்பில்
வாய் திறந்து அமர்ந்திருக்கிறது பல்லி
வரிசையாக வந்துகொண்டிருக்கும் சிறுபூச்சிகள்
அதைக்கண்டு திகைத்துச் செயலிழந்து
இருபக்கமும் விலகமுயன்று முடியாமல் தவித்து
பின்வரிசை உந்த
வேறுவழியில்லாமல்
அதன் வாய்க்குள் சென்றுகொண்டிருக்கின்றன
சுவரின் மீதிருந்து கால்களின் பிடியை விட்டு
உதிர்ந்துவிடலாம் என்னும்
நான்காவது வழி மட்டும்
எந்தப் பூச்சிக்கும் தோன்றவே இல்லை.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
