Jeyamohan's Blog, page 43
August 6, 2025
பதஞ்சலியோகம்- வகுப்புகள்
குரு சௌந்தர் நடத்திவரும் பதஞ்சலி யோகமரபின்படியான யோகப்பயிற்சிகளில் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இரண்டு முறை இரண்டாம்நிலை வகுப்புகளும் நிகழ்ந்துள்ளன. இந்தியாவிற்கு வெளியிலும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தொலைக்காட்சி ஊடகங்களிலும் யோகமுறைகளை விளக்கி வருகிறார்.
யோகம் இன்றைய காலகட்டத்தின் தவிர்க்கமுடியாத ஒரு வாழ்க்கைக்கூறாக உலகமெங்கும் பரவியுள்ளது. இன்று தொடர்ச்சியாக உடலையும் உள்ளத்தையும் மிகையான அழுத்தத்திலேயே வைத்திருக்கிறோம். உள்ளம் மிகையழுத்தம் கொள்கையில் முதுகு, கழுத்து போன்றவற்றில் வலிகள் உருவாகின்றன. உடல் மிகையழுத்தம் கொள்கையில் உள்ளம் சலிப்பு, சோர்வு, துயிலின்மையை அடைகிறது.
இன்னொரு பக்கம் முதிய அகவையில் உடலை எந்தப் பயிற்சியும் இல்லாமல் வைத்திருக்கிறோம். உடலின் எல்லா பகுதிகளுக்கும் சீரான பயிற்சி அளிப்பதில்லை. உடலுக்கான பயிற்சி ஒரே சமயம் உள்ளத்துக்கான பயிற்சியாகவும் அமைவதில்லை. ஆகவே உடல்வலிகளும், உளச்சோர்வும் உருவாகி ஒன்றையொன்று வளர்க்கின்றன.
யோகம் இளையோர், முதியோர் இருவருக்குமான மீளும்வழியாக உலகமெங்கும் ஏற்பு பெற்றுள்ளது. பதஞ்சலி யோகமுறையின் மிகத்தொன்மையான மரபுகளில் ஒன்றாகிய பிகார் சத்யானந்த ஆசிரிய மரபில் முதுநிலை ஆசிரியருக்கான பயிற்சியை எடுத்துக்கொண்டவர் குரு சௌந்தர். அவர் நடத்தும் இந்த யோகப்பயிற்சி அனைவருக்குமானது.
சரியான யோகப்பயிற்சி நேரடியான ஆசிரியரிடமிருந்து தொடங்கப்படவேண்டும். ஒவ்வொருவருக்கும், அவருடைய பிரச்சினைகளை உணர்ந்து ஆசிரியர் யோகப்பயிற்சியை பரிந்துரைக்கவேண்டும், வழிகாட்டவேண்டும், கட்டுப்படுத்தவும் வேண்டும். ஆகவேதான் நேருக்குநேர் ஆசிரியருடன் மூன்றுநாள் இருந்து கற்கும் இந்தப் பயிற்சி முறையை அறிமுகம் செய்திருக்கிறோம்.
(முன்னர் பங்குகொண்டவர்களும் மீண்டும் பயில விரும்பினால் விண்ணப்பிக்கலாம்)
நாள் செப்டெம்பர் 12, 13 மற்றும் 14 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
யதார்த்தமெனும் கலை
தமிழில் அவ்வப்போது சிலாகிக்கப்படும் மலையாளப்படங்களை நான் பார்ப்பதுண்டு. தமிழகத்தில் சிலாகிக்கப்பட்டாலே அவை நல்ல படங்கள் அல்ல என்னும் என் எண்ணத்தை உறுதிசெய்பவை அவை. அவை தமிழ்ப்படங்களின் இன்னொரு வடிவங்கள் என்று தோன்றும். ‘மெய்யான மலையாளப்படம்’ என ஒன்று உண்டு. அது மிக நிதானமாக நகர்வது. யதார்த்தத்தை மட்டுமே காட்டுவது. ஆகவே அதைப் பார்க்க ஒரு பொறுமையும் பயிற்சியும் தேவை. அந்தப் படங்களை பொதுவாக இங்கே எவரும் குறிப்பிடுவதில்லை என்று காண்கிறேன்.
வெறும் வசனங்கள் வழியாக, ஒரே செட்டுக்குள் நகரும் இந்த சினிமாவின் பதினைந்து நிமிடத்தில் வரும் ஒரு ‘எபிசோட்’ இது. இது எழுதப்பட்டிருக்கும் விதத்திலுள்ள உளவியல் ஆழம், அது எடுக்கப்பட்டிருக்கும் விதத்திலுள்ள இயல்பான ஓட்டம், நுணுக்கமான சிறிய தகவல்கள், உதிரிக் கதாபாத்திரங்களின் ஆளுமை வெளிப்படும் விதம், ஒவ்வொருவரும் சாதாரணமாக நடித்திருக்கும் நுட்பம் ஆகியவைதான் மலையாள சினிமா நூறாண்டுகளில் வந்தடைந்த இடம். அதை ரசிக்கும் பயிற்சி கொண்ட நூறுபேர் தமிழகத்தில் இருந்தால் நான் ஆச்சரியப்படுவேன்.
படத்தொகுப்பு பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்தப் படத்தை அதன்பொருட்டே பார்க்கலாம். ஒரு ஷாட்டில் இருந்து இன்னொன்றுக்கு காட்சிக்கோணம் மாறுவதையே நாம் உணர்வதில்லை. ஒரு ஷாட்டில் சம்பந்தமற்ற ஒருவர் நுழைவது நிகழ்கிறது, அடுத்த ஷாட்டில் அவர் வேறொரு திசையில் வெளியேறுகிறார். இவை தனித்தனியாக எடுக்கப்பட்ட ஷாட்கள் என்று நாம் உணர்வதே இல்லை, நாம் ஒரே நிகழ்வை கண்களைத் திருப்பி பார்த்துக்கொண்டே இருப்பதைப்போலவே உணர்கிறோம், அதுவே செய்நேர்த்தி. seamless என சொல்லத்தக்க இந்த ஒழுக்குதான் மிகச்சிறந்த எடிட்டிங்.
முழுப்படமும் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள்தான் நிகழ்கிறது. இப்படி ஒரு சிறு இடத்தில் படத்தை நிகழ்த்தும் இயக்குநர்கள் சாதாரணமாக அந்த இடத்துக்குள் வேறுபட்ட கோணங்களைக் கண்டுபிடிப்பதற்காக சம்பந்தமில்லாத கோணங்களை வைப்பதுண்டு. பொருத்தமே இல்லாமல் ‘டாப் ஆங்கிள்’ அல்லது ‘லோ ஆங்கிள்’ வைப்பார்கள். அது இப்படத்தில் இல்லை. எல்லா காட்சிக்கோணங்களும் இன்னொரு கதாபாத்திரத்தின் கோணத்தில், அல்லது அந்த ஸ்டேஷனில் இருக்கும் ஒருவரின் கோணத்திலேயே உள்ளன.
இந்தப் படத்தில் ‘கதை’ என ஏதும் இல்லை. திருப்பங்கள் , எதிர்பாராத நிகழ்வுகள் ஏதுமில்லை. சொல்லப்போனால் கதாபாத்திரங்களுக்கு இடையே முரண்பாடு கூட இல்லை. ஆனால் கதைகள் உள்ளன. வெவ்வேறு வாழ்க்கைகளின் சில கீற்றுகள், அந்தக் கீற்றிலேயே கதைமாந்தரின் குணச்சித்திரம் மட்டுமல்ல அந்த மொத்தக்கதையும் உணர்த்தப்படுகிறது. நவசினிமா என்பது ‘நடிப்பு’ அல்ல, சரியான தோற்றம் கொண்ட நடிகர்கள் ஒரு கதாபாத்திரமாக இயல்பாகப் புழங்குவதுதான் என்பதை இந்தப்படம் காட்டுகிறது.
ஒரு பெண்போலீஸின் வாழ்க்கையின் ஒரு பக்கம், அவ்வளவுதான். ஆனால் கேரளத்தில் மிக ரசிக்கப்பட்ட படங்களுள் ஒன்று இது. இங்குள்ள இணையவிமர்சகர்கள் ‘இழுக்கிறது’ என்பார்கள். சுமாருக்குக் கீழ் என்பார்கள். ஆனால் நடிப்பென்று ஏதும் நிகழாத நடிப்பு வழியாக, ஒரு சூழலின் ஒட்டுமொத்தத்தைச் சித்தரித்து அதில் ஒருசில புள்ளிகளை மட்டும் அழுத்திக் காட்டும் கதைத்தொழில்நுட்பத்தின் வழியாக, உணர்வுநிலைகள் மிகையாக ஆகாமல் நிகழும் காட்சியமைப்பு வழியாக, வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வை உருவாக்குகிறது இந்தப் படம். எனக்கு இதன் எல்லா காட்சிச்சட்டகங்களும் எல்லா வசனங்களும் எல்லா முகபாவனைகளும் சுவாரசியமாக இருந்தன.
வனிதா மலையாளத் திரைப்படக் காட்சி
முழுப்படமும்…
ஓஷோ: மரபும் மீறலும்-11
3 ஆறு தரிசனங்கள்
இந்திய சிந்தனை முறையில் ஆறு தரிசனங்கள் இருக்கின்றன. அவை, சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வ மீமாம்ஸம், உத்தர மீமாம்ஸம் ஆகியன. அவை ஒவ்வொன்றும் ஒரு தனி மதமாக ஒருகாலத்தில் கருதப்பட்டவை. அவற்றில் வேத ஏற்பு மதங்களும் உண்டு, வேத மறுப்பு மதங்களும் உண்டு. அவற்றில் எவற்றுடன் ஓஷோவை எந்த அளவுக்கு இணைத்துப் பார்க்கமுடியும்?
சாங்கியம்
சாங்கிய தரிசனத்தின்படி இந்த உலகிலுள்ள பருப்பொருட்கள் அனைத்தும் பிரகிருதி அல்லது இயற்கை. இந்த பூமியைப்போல இப்பிரபஞ்சம் முழுக்க இருக்கக்கூடிய மொத்த பருப்பொருள்களையும் ஒட்டுமொத்தமாக சேர்த்தால் எதுவோ அதுதான் மகாபிரகிருதி. அந்த பிரகிருதி என்பது பொருள் (matter). அதில் மூன்று குணங்கள் உள்ளன – சத்வம், ரஜஸ், தமஸ். வேறொருவகையில் அம்மூன்று குணங்களையும் மாறாநிலை (தமஸ் / Static), செயலூக்கநிலை (சத்வம் / Dynamic), சமநிலை (ரஜஸ் / Neutral) என்று சொல்லலாம். இக்குணங்களுக்கிடையே சமநிலை இருக்கும்போது பிரகிருதியானது அசைவற்றதாக காலத்தில் மாறாததாக இருந்தது. ஒருகட்டத்தில் சமநிலை குலைந்தது. அந்த சமநிலை குலைவில் இப்பிரபஞ்சம் உருவாகி இவ்வளவு விஷயங்கள் வந்துள்ளன.
இதில் இரண்டு பிரிவுகள் உண்டு. பழைய சாங்கிய தரிசனத்தை நிரீஸ்வர சாங்கியம் (இறையிலி சாங்கியம்) என்பார்கள். பின்னாளில் வந்தது ஈஸ்வர சாங்கியம் (இறை சாங்கியம்). பழைய சாங்கியத்தை ஓஷோவுக்கு நெருக்கமானதாக பார்க்கலாம். அவர் இந்த சமநிலையின்மை என்ற கருத்தை பல இடங்களில் சொல்லியிருக்கிறார். அவருடைய உரையில் எங்கெல்லாம் இந்த விஷயம் வருகிறதோ அதெல்லாம் சாங்கியத்துக்கு மிக நெருக்கமானவை. ஏனென்றால் ஓஷோ பேசுவது யோகம். யோகம் என்பது சமநிலையிழப்பை வென்று சமநிலையை மீட்பதைப் பற்றிப் பேசுவது.அதன்பின் வந்த ஈஸ்வர சாங்கியத்தில் பரமபுருஷன் என்ற கருதுகோள் உள்ளே வந்தது. அதை ஓஷோ ஏற்பதில்லை. தூய இயற்கை என்னும் கருத்து எங்கெல்லாம் ஓஷோவிடம் வருகிறது என்பதைப் பார்ப்பது ஒரு நல்ல வாசிப்புமுறை. ஓஷோவை வகுத்துக்கொள்ள அது மிக உதவும்.
வைசேஷிகம்
விசேஷம் என்ற சொல்லில் இருந்து வந்ததே வைசேஷிகம். ஒவ்வொரு பொருளும் இங்கிருக்கின்றன. அவை மறுக்கமுடியாத இருப்பு கொண்டவை. அப்பொருள்களின் மிகச்சிறிய துகள் என்பது அணு. அணுவாதத்தைதான் வைசேஷிகம் என்பர். ஒரு பொருளுடைய அடிப்படை விசேஷ குணம் எதுவோ அதுதான் அப்பொருள். நெருப்பு என்பது எரிக்கும், தண்ணீர் என்பது அணைக்கும் என்பது அந்தந்த பொருள்களின் விசேஷ குணங்கள். அந்த விசேஷ குணங்கள் அந்தந்த பொருள்களின் ஓரோரு அணுக்களிலும் இருக்கிறது என்பது வைசேஷிகத்தின் கொள்கை.
இத்தரிசனம் அடிப்படையில் பொருள்முதல்வாத நோக்குடையதே. பின்னாட்களில் அதில் தன்மாத்ரங்கள் (Tanmātra) போன்ற கருதுகோள்கள் உள்ளே வரும்போது கடவுள் வந்துவிடுகிறார். ஆனால் அவ்வாறு கடவுளின் வருகைக்கு முன்னே இருந்த வைசேஷிகம் ஓஷோவுக்கு நெருக்கமானது. அவர் பல இடங்களின் அதன் மேற்கோள்களை எடுத்தாண்டிருக்கிறார்.
யோகம்
இது சாங்கியத்தின் துணைத்தரிசனம். சாங்கிய–யோகம் என்றே சொல்வதுண்டு. யோகத்தின் முதன்மை நூல் என்பது பதஞ்சலியின் யோக சூத்திரமே. ஓஷோ பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கு மிகப்பெரிய உரை எழுதியிருக்கிறார் (பதஞ்சலி யோகம் – ஒரு விஞ்ஞான விளக்கம்). ஓஷோவைப்பற்றி அதிகம் பேசக்கூடியவர்கள் பெரும்பாலும் இந்த நூலை படித்திருக்க மாட்டார்கள். இந்த நூலுக்கு வருவதற்கான வழி என்ன என்பதைத்தான் சொல்லவிரும்புகிறேன்.
கபிலரின் பழைய சாங்கியத்தில் கடவுள் கிடையாது. ஆகவே பதஞ்சலி யோக சூத்திரத்திலும் கடவுள் கிடையாது. ‘யோக சித்தவிருத்தி நிரோத’ என்று அந்நூல் தொடங்குகிறது. மனதின் செயலை நிறுத்துவதுதான் யோகம். அதை செய்வதற்கான யம -நியமங்களில் ஒன்றாக அது பக்தியை முன்வைக்கிறது. ஆனால் அடையவேண்டிய இறுதி இலக்கு கடவுள் அல்ல. பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கு ஓஷோ எழுதிய உரைக்கும், வெளியே பக்தி நோக்கில் எழுதப்பட்ட உரைகளுக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடு இதுதான்.
யோகம் வழியாக நீங்கள் சென்றடைவது என்ன ? பதஞ்சலி யோகம் காட்டக்கூடிய வழி என்ன ? அது கடவுளின் காலடியை சென்றடைவதோ சொர்க்கத்திற்கு செல்வதோ அல்ல. ஓஷோ தனது உரையில் இதை விரிவாக பேசுகிறார். ஆர்வம் கொண்டவர்கள் படிக்கவேண்டிய முக்கியமான நூல் இது. அதன் வழிநூலாக இன்னொரு நூலை எழுதவேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. நான்கு அத்தியாயங்கள் எழுதினேன். தொடர்ந்து எழுதக்கூடும்.
சாங்கிய தரிசனத்தில் குறிப்பிட்ட கேள்வி எழுகிறது. ஆதி இயற்கை என்ற ஒன்று இருக்கிறது. அதில் செயலூக்கம், நிலைத்தன்மை, சமரசத்தன்மை என மூன்று குணங்கள் இருக்கின்றன. அந்த குணங்கள் அங்கு இருக்கவேண்டும் என்றால் அதை பார்க்கக்கூடிய ஒருவன் இங்கிருக்க வேண்டுமல்லவா ? பார்வையாளன் இல்லாமல் காட்சி இருக்கமுடியாதல்லவா ? உணர்பவன் இன்றி உணரப்படும் பொருள் இருக்காதல்லவா ? இவ்வாறு குணத்தை உணரக்கூடிய அந்த ஒருவன் யார் என்ற கேள்வி எழுந்தபோது, அவர்கள் புருஷன் என்ற கருதுகோளை முன்வைத்தார்கள். உயிருக்குள் இருந்துகொண்டு இயற்கையை பார்ப்பவன் யாரோ அவன் புருஷன். அந்த புருஷன்தான் மூன்று குணங்களையும் பார்க்கிறான். இயற்கையை பார்க்கக்கூடிய தன்னிலை (Subjectivity) யாரோ அவன்தான் புருஷன். இயற்கையை செயல்வடிவமாக பார்க்கக்கூடியவன் எனக்குள் இருக்கும் புருஷன்.
அந்த புருஷன் யார் என்ற கேள்விக்கு அடுத்ததாக செல்கிறார்கள். நீங்கள் வெளியே பார்க்கும் இயற்கை துண்டுபட்ட இயற்கை. ஆனால் சாங்கியத்தின்படி இவையனைத்தும் ஒன்றுதானே, ஆதி இயற்கைதானே. அப்படியெனில் அதை பார்க்கும் உயிர்களில் இருக்கும் புருஷர்கள் எல்லாம் சேர்ந்து ஒரே புருஷன்தானே என்ற கேள்வி எழுகிறது. எனவே அந்த ஒற்றை புருஷனை பரமபுருஷன் என்றனர். உடனே ஒரு தாவலாக அந்த பரமபுருஷனே கடவுள் என்றாகியது.
யோகம் சொல்வதென்னவெனில், புருஷன் பிரகிருதியை பார்த்து அது வேறு, இது வேறு என்று நினைக்கிறான். எனவே துயருறுகிறான். எல்லா துயர்களுக்கும் காரணம் பிரகிருதி-புருஷ பேதம்தான். அந்த பேதம் அழிந்து பிரகிருதியின் ஒரு பகுதிதான் தான் என்று புருஷன் உணரும்போது, பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருக்கக்கூடிய பரமபுருஷனின் ஒரு துளியாக தானும் ஆகும்போது, வேறுபட்ட நிலையை களையும்போது அடையக்கூடிய அபேத நிலைதான் முக்தி என்பது. மற்றபடி அது கடவுளை அடைவதை பற்றியல்ல.
நவீன அறிவியலின்படி சொல்வதென்றால், மனிதன் என்று இங்கு இருக்கும் ஒருவர், அலகிலாமல் விரிந்துகிடக்கும் பிரபஞ்சத்தில் இருக்கும் பல்லாயிரம் கருதுகோள்களில் ஒரு துளிதான். அதற்கப்பால் ஒன்றுமில்லை என்று தெரிந்துகொள்வது எளிது. ஆனால் அனுபவப்பூர்வமாக அப்படி ஆகக்கூடிய ஒரு தருணத்தை தியானம் செய்து, தன்னை ரத்துசெய்து, அடைவதற்கு பெயர்தான் யோகம். தான் யார் என்பதில் உள்ள ஒவ்வொரு அடையாளத்தையும் ரத்து செய்துகொண்டே வந்து புருஷன் மட்டுமாகி, பரமபுருஷன் மட்டுமாகி, பிரகிருதியின் ஒரு பகுதியாக மாறக்கூடிய ஒரு அபேத நிலையை / இரண்டின்மை நிலையைத்தான் யோகம் சொல்கிறது.
அதைத்தான் ஓஷோ சொல்கிறார். ஓஷோ அதை நவீனச் சூழலில் நின்று விளக்குகிறார். ஆகவே இந்த ஆறு தரிசனங்களில் ஓஷோவுக்கு மிக உவப்பாக இருந்ததும், கிட்டத்தட்ட அதன் பிரதிநிதியாக நின்று அவர் பேசியதும் யோக தரிசனமே. அவருடைய அந்த உரை மட்டும் தனியாக இருப்பதற்கு காரணம் அதுதான். யோகம் என்பது கடவுளை அடைவதற்காக அல்ல; தன்னை அடைவதற்காகக்கூட அல்ல. அது ‘தான் அல்ல தான்’ என்பதை அறிவதற்காகவே. அதை அனுபவபூர்வமாக உணர்வதற்காகவே. ஓஷோ அவருடைய பயிற்சிகள் வழியாக அதற்கான வழிமுறைகளையும் முன்வைத்தார் எனப்படுகிறது. அவருடைய நூல்களில் அதற்கு இன்றைய நவீன வாழ்க்கையிலுள்ள இயல்பான தடைகளை விரிவாகச் சுட்டிக் காட்டுகிறார். நுகர்வுவெறி முதல் தன்நலமே நாடும் முனைப்பு வரை. கட்டுப்படுத்தும் மரபான சிந்தனைகள் முதல் மிதமிஞ்சி நம்மை தூண்டிவிடும் தற்காலச் சிந்தனைகள் வரை. ஓஷோவின் கொடை என்பது இயல்பான யோகப்பயிற்சிக்குத் தடையாக ஆகும் அனைத்தையும் ஓஷோ எங்காவது சொல்லியிருப்பார் என்பதுதான்.
நியாயம்
இது வைசேஷிகத்தின் துணை தரிசனம். நியாயம் என்றால் நாம் பேச்சுவழக்கில் சொல்லும் நியாயமேதான். அதாவது தர்க்கம் (Logic). ஒரு நியாயமும் இல்லை என்று சொல்வது logic இல்லை என்ற பொருளிலேயே. நாம் பேசக்கூடிய அத்தனை தர்க்க முறைகளும் நியாய சாஸ்திரத்திற்கு உட்பட்டுதான் இருந்திருக்கின்றன. நெடுங்காலமாக நியாய தரிசனம் வைதிக மரபுக்கு வெளியேதான் இருந்திருக்கிறது. நியாய சாஸ்திரத்திற்கு பௌத்தர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். சொல்லப்போனால் ஒவ்வொரு பௌத்த குருவும் நியாயத்துக்கு உரை எழுதுவார். அந்த உரையின் அடிப்படையில்தான் அவர் தன்னை முன்வைப்பார்.
இன்றைக்கு ஒரு டீக்கடையில்கூட ஒரு விஷயத்தை விவாதித்து நிறுவமுடியாது என்பதை கவனித்திருக்கிறீர்களா ? விவாதிக்கக்கூடியவர்கள் இங்கே இருப்பீர்கள். எந்தவொரு விஷயத்தையும் எங்கும் விவாதித்து நிறுவமுடியாது. ஏனெனில், ‘நீ ஆயிரம் சொல். என்னால் ஏற்கமுடியாது’ என்றுதான் ஒருவன் இறுதியில் சொல்வான். இல்லையெனில், ‘இதை பிறகு பேசுவோம்’ என்று சொல்லி கிளம்பிச்சென்றுவிடுவான். ‘ஆமாங்க, நீங்க சொல்வது சரிதான்’ என்று உங்களிடம் இதற்குமுன் யாராவது சொல்லியிருக்கிறார்களா ? என்னிடம் யாரும் சொன்னது கிடையாது. எனது நெருங்கிய நண்பரான கிருஷ்ணன்கூட என்னிடம் எந்தவொரு விஷயத்தையும் ஒப்புக்கொண்டது கிடையாது. ஏனெனில் நமக்கு பொதுவான தர்க்கமுறை என்று ஒன்று கிடையாது.
இன்னின்ன தர்க்கங்களின்படி ஒன்றை சொன்னால் அதை மறுக்க முடியாது. அறிவியலுக்கு தர்க்கம் உண்டு. அறிவியலில் ஒரு விஷயத்தை சொல்லும்போது அதை சரி என்றோ தவறு என்றோ சொல்லிவிடலாம். ஆனால் இன்று அறிவியலுக்கு வெளியே சரி, தவறு என்பது கோட்பாட்டுத்தளத்தில் கிடையவே கிடையாது. முடிவற்ற தர்க்கங்களே உள்ளன. இல்லையெனில் கருத்து மோதல்களில் முடியும். ஆனால் பழைய காலத்தில் எல்லா தரப்பினரும் அமர்ந்து தங்களுக்குள் விவாதித்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பொதுவாக இருந்தது நியாயத்தின் தர்க்கமுறை. நீங்கள் விவாதிக்க சென்றால் உங்களிடம் கேட்கப்படும் கேள்வி, ‘நீ எந்த ஆசிரியனின் மாணவன் ? எந்த மரபில் இருந்து வருகிறாய் ? உனது நியாய நூல் எது ?’ என்பதுதான். அவருடைய நியாய நூலின்படி அவர் வாதிடுவார். அந்த நியாயத்தின்படி அவருடைய கருத்து மறுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்வார். இத்தகைய புறவய தர்க்கமுறையைத்தான் (Objective Logical system) நியாயம் என்ற பெயரில் சொல்கிறார்கள்.
ஓஷோ அந்த நியாய முறைமையின்மீது மிகுந்த மதிப்புடன் தன்னை முன்வைப்பதை பார்க்கலாம். தன்னை தார்க்கிகன் (logician) என்று சொல்கிறார். ‘I am not a visionary. Sometimes i am a logician’ என்கிறார். Pure Logic என்ற சொல்லை ஓஷோவின் உரைகளில் பார்க்கலாம். அது நியாயத்திற்கு நெருக்கமானதாக உள்ளது.
எனது ஆசிரியர் பேசும்போது வேடிக்கையாக ஒன்றை சொல்வார். ஐந்து விரல்களில் கட்டைவிரல் வேதாந்தம். மற்ற நான்கு விரல்களும் சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம் ஆகியன. கட்டை விரலானது மற்ற எல்லா விரல்களையும் தொடுவதுபோல வேதாந்தம் மற்ற அனைத்து தரிசனங்களோடும் உரையாடும் என்பார். அப்போது ஒருவர், ‘குரு, அப்போ நியாயம்?’ என்று கேட்டார். ஆசிரியர், ‘It is Middle finger’ என்றார். வேடிக்கையாக மட்டுமல்ல, உண்மையிலேயே மற்ற அனைத்து தரிசனங்களுக்கும் நியாயம் தனது நடுவிரலையே காட்டுகிறது.
உண்மை என்பதை பற்றிய நியாயத்தின் ஒரு கண்ணோட்டம் உள்ளது. உண்மை என்பது என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வரையறுக்கப்பட்டு பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்றே. அப்படித்தான் உண்மைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. அறிவியல் உண்மைகள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட நிபுணர் குழுவுக்கு உடன்பாடான உண்மைகளே ஒழிய அதைத்தாண்டிய முழுமையான உண்மை (Absolute truth) என்பதை அறிவியலில் சென்றடையவே முடியாது.
தடுப்பூசி என்பது கோவிட்டுக்கு மருந்து என்று அறிவியலாளர்கள் சபை முடிவெடுத்துவிட்டால் அது உண்மைதான். சிறிது காலம் கழித்து அவர்களே அது வேண்டாம் என்று சொல்லவும்கூடும். எண்பதுகள் வரைக்கும் மனநோய்க்கான சிகிச்சையாக தலையில் மின்சாரம் செலுத்திக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு அது சட்டப்படி குற்றம் என்கிறார்கள். நாற்பதுகள் வரைக்கும் அலோபதி மருத்துவத்தில் எந்தவொரு நோய்க்கும் உடலில் இருந்து இரத்தத்தை வெளியேற்றுவதை ஒரு சிகிச்சை முறையாக செய்துகொண்டிருந்தார்கள். இன்று யாரும் அவ்வாறு செய்வது கிடையாது. ஆகையால் ஒரு குறிப்பிட்ட சூழலில், காலகட்டத்தில் சிலரால் பொதுவான உடன்பாட்டால் ஏற்கப்பட்டதுதான் உலகியல் உண்மை. எனவே நியாயத்தை பொறுத்தவரை, முழுமையான உண்மை என்பது என்ன, அது எங்கு உள்ளது என்ற கேள்வியே கிடையாது. ஒரு விஷயத்தை எப்படி பொதுவாக வரையறுத்துக்கொள்வது என்பதை பற்றி மட்டும்தான் அவர்கள் பேசுவார்கள். அப்போதைக்கு அதுதான் உண்மை. அச்சூழலுக்கு அதுதான் உண்மை. அதற்கப்பாலுள்ள உண்மை என ஒன்றில்லை.
அப்படிப்பார்த்தால் அது மற்ற அனைத்து தரிசனங்களுக்கும் தனது நடுவிரலையே காட்டிக்கொண்டிருக்கிறது. அவ்வாறு தர்க்கபூர்வமான ஒன்றுமட்டுமே உண்மை என்று நம்பக்கூடிய ஒரு தரப்பு இங்கு நீண்டகாலம் இருந்துள்ளது. நமது ஆயிரக்கணக்கான ஆன்மீக சொற்பொழிவுகள் எதிலுமே இடம்பெறாத தரப்பு அது. அதேசமயம் நம் மரபில் இருக்கும் மையத்தரப்பும்கூட. இராமானுஜர் தனது எதிர்த்தரப்பினருடன் நியாயத்தின்படிதான் பேசியிருப்பார். ஆனால் நமது வைணவ மேடையில் நியாயத்தை பற்றி யாரும் பேசமாட்டார்கள். அதுபோலவே சங்கரரும். இன்று ஒரு அத்வைத மேடையில் சங்கரரை புகழ்ந்து பேசுவார்களேவொழிய நியாயத்தை பற்றி பேசமாட்டார்கள். ஆனால் அது இங்கு உள்ளது. அதை நவீன காலகட்டத்தில் பேசக்கூடிய ஒருவராக ஓஷோ இருக்கிறார்.
பூர்வமீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை
பூர்வமீமாம்ஸை வேள்விச்சடங்குகளை முன்வைக்கக்கூடிய தரிசனம். ஓஷோ நூறு சதவீதம் ஒத்துப்போகாத விஷயம் இதுதான். அவர் வெறும் கிண்டல் வழியாகவே அதை நிராகரித்துச் செல்கிறார். ஆனால் உத்தர மீமாம்ஸையாகிய வேதாந்தத்துடன் அவர் உரையாடுவதற்கான இடம் உள்ளது. கீதைக்கு அவர் எழுதிய உரை அதற்கான மிகப்பெரிய சான்று. அந்த உரையை அவருக்கே உரித்தான முறையில் தொடங்குகிறார். ‘தான் பார்க்காத ஒன்றைப்பற்றி பார்க்கமுடியாத ஒருவனுக்கு ஒருவன் விளக்கியதுதான் கீதை’ என்று ஆரம்பிக்கிறார். சஞ்சயன் எதையும் பார்க்கவில்லை. திருதராஷ்டிரனுக்கு கண் தெரியாது. இவனுக்கு அவன் சொன்னதுதான் கீதை என்று தொடங்குகிறார். ஆனால் மிகப்பெரிய உரையை கீதைக்கு எழுதுகிறார்.
அத்வைதத்திற்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது இந்திரனைப்போல. இந்திரனுக்கு உடலெங்கும் ஆயிரம் குறிகள் இருந்தன. பின்பு அவற்றையெல்லாம் கண்களாக மாற்றிக்கொண்டான். ஆண்களை பொறுத்தவரை கண்ணும் குறியும் ஒன்றுதான் என்று சொல்வார்கள். அத்வைதம் ஆயிரம் குறிகள் கொண்ட தத்துவம். அதற்கு எல்லா தத்துவங்களுடனும் உறவு உண்டாகமுடியும். எல்லா தத்துவ தரப்புகளிலும் ஒரு டீஸ்பூன் அளவுக்காவது அத்வைதம் இருக்கும். ஜென் தத்துவம், சூஃபி தத்துவம், நவீன பௌத்த சிந்தனைகள் உள்ளிட்ட பலவற்றிலும் அத்வைதம் உண்டு.
பிரம்மமும் ஜீவனும் இரண்டல்ல என்பதே அத்வைதத்தின் வாதம். மிக விரிவான அளவில் இந்த வாதத்தை ஏற்றும் மறுத்தும் ஓஷோ பேசியிருக்கிறார். ஓஷோவின் உரையாடல் புள்ளி அத்வைதத்திற்கு நெருக்கமானது. பெரும்பாலும் தூய அத்வைதிகள் ஓரளவுக்கு ஓஷோவுடன் உரையாடக்கூடியவர்களாகவும் அவரை ஏற்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். குரு நித்யா உட்பட.
(மேலும்)
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
சாத்தூர் பிச்சைக்குட்டி
வில்லிசைக் கலைஞர். மருத்துவர், ஹோமியோபதி மருத்துவம் பயின்றவர். அலோபதி மருத்துவத்திலும் அனுபவம் கொண்டவர். முறைப்படி கர்நாடக சங்கீதமும், தமிழ் இலக்கியமும் பயின்றவர்.எழுத்தாளர் சோ. தர்மன் சாத்தூர் பிச்சைக்குட்டியை பற்றி வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி என்னும் வாழ்க்கை வரலாறு நூல் எழுதியுள்ளார்

சார்ல்ஸ் ஆலன், கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சில வருடங்களுக்கு முன்பு உங்கள் தளத்தில் வெளியான கடலூர் சீனுவின், பேரரசன் அசோகன் புத்தக வாசிப்பைத் தொடர்ந்து எனக்கு சார்லஸ் ஆலன் அறிமுகமானார். ஆலனின் கோரமண்டல் மற்றும் Mountain in Tibet நான் விரும்பி படித்த நூல்கள்.
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பது பொதுவாக சொல்லும் அறிவுரை. ஆனால் எனக்கு நதிகளின் ஊற்று முகமும் அது கடலில் சங்கமிப்பதை பார்ப்பது (அதைப் பற்றி அறிந்து கொள்வது) மிக பிடித்தமானது. ஊற்று முகங்கள் ஒரே நேரத்தில் எனக்கு வியப்பையும் ஏமாற்றத்தையும் அளிக்கும்.
சென்ற வாரம் உங்களுக்கு கடிதம் எழுதிய பிறகு மறுபடியும் Mountain in Tibet வாசித்தேன். பிரம்மபுத்திரா, இண்டஸ், சட்லஜ், கர்னால் நதிகள் மானசரோவரருக்கு அருகில் எங்கிருந்து உருவாகிறது என்பதை அறிய cartographers மேற்கொண்ட சாகச பயணங்களை விவரிப்பது.
அக்பரின் காலத்திலேயே புனித நதியான கங்கை எங்கிருந்து தோன்றுகிறது என்பதை அறிய அக்பர் ஒரு சிறு குழு அமைத்து பயணம் செய்கிறார்கள். அக்குழு திரும்பி வந்து கொடுத்த தகவல்களின்படி ” Purchas His pilgrimes” என்கிற புத்தகத்தின் வரைபடத்தில் கங்கையின் தோற்றுவாயை ஹரித்துவார் அருகில் குறித்து வைத்துள்ளார்கள்.
அதன் பிறகு அக்பரின் அரசவையில் இருந்த போர்ச்சுகீசிய Jesuits, திபத்தில் பிரெஸ்டர் ஜானின் ( Prester John) வழித்தோன்றல்கள் உருவாக்கிய ஒரு கிறிஸ்துவ குடி இருப்பதாக நம்பிக் கொண்டு பயணம் மேற்கொண்டார்கள்.
Father Antonio DeAndrade மற்றும் Manuel Marques இருவரும் சேர்ந்து ஸ்ரீ நகரில் இருந்து மானா பாஸ் வழியாக லடாக் சென்று அங்கிருந்து திபத்தை ( Guge) அடைந்தார்கள். அங்கே அவர்கள் எதிர்பார்த்த கிறிஸ்துவ மக்கள் இல்லை. திபத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சிறு ராஜ்யம் Guge. தற்போது இவ்விடத்தின் பெயர் Tsaparang. அந்நிலத்தின் ராஜா அவர்களுக்கு ஒரு சர்ச் கட்ட அனுமதித்தார். ஐந்து வருடங்களில் அங்கு பத்து பதினைந்து Jesuits கோவாவில் இருந்து புறப்பட்டு வந்து சேர்ந்தார்கள். இவர்களின் செல்வாக்கு அதிகரிப்பதைக் கண்டு ,கோபம் அடைந்த உள்ளூர் லாமாக்கள் லடாக்கின் படை உதவியோடு சர்ச்சை இடித்து விட்டு அவர்களை சிறைப்பிடித்தார்கள். ராஜாவை வெளியேற்றி லடாக்குடன் தங்களை இணைத்தார்கள்.
1712ஆம் ஆண்டு Ippolito Desideri எனும் இத்தாலியர் போப் ஆண்டவரின் ஆதரவுடன், Gage சென்ற Jesuits என்ன நேர்ந்தது என்று கண்டறிய ஆக்ராவிலிருந்து திபத் கிளம்பினர். Tartar இளவரசியின் உதவியுடன் லாசா சென்றார். 6 வது தலாய் லாமாவை சந்தித்தார். திபத்து மொழியில் புலமை பெற்றார். கிறிஸ்தவத்தை அவர்களுக்கு புரிந்த மொழியில் புரிந்த விளக்கங்களோடு மாற்றினர். அவர் அங்கு இருந்த சமயம் தான் சீனா லாசாவை ஆக்கிரமித்தது. திபெத் Manchu warriors அரசின் கீழ் வந்தது. Desideri லாசாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இப்படியாக 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிலிருந்து சென்ற இரண்டு Jesuits குழுக்களுக்குமே, கிறிஸ்துவை அங்கு சேர்க்க முடியவில்லை. கரு நாவலுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் உங்களுடன் இதை பகிர வேண்டும் என்று தோன்றியது.
பிரம்மபுத்திரா நதி மூலத்தை கண்டுபிடிக்க சென்ற பல சாகச பயணங்கள் பற்றிய தொகுப்புகள் மிக நேர்த்தியுடன் பதிவாகி உள்ளது. பிரிட்டிஷ் ராஜின் சர்வேயர் ஜெனரல் ஆக இருந்த Major James Rennal எப்படி இந்திய ” Pundits” முறையை உருவாக்கினார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இமாலய மலைகளில் சர்வே எடுக்க கற்றுக் கொள்பவர்களே ஆரம்ப காலங்களில் Pundit. நயின்சிங்க ராவத் பிரபலமானவர்.
இந்தியாவில் காஷ்மீர், லடாக், அஸ்ஸாம், குமான் பகுதிகளில் உள்ள கணவாய்கள் வழியாக எவ்வாறு Surveyors திபெத்திபத்தைச் சென்றார்கள் என்று விவரிப்பது ஜாக்கிரபி புக் மாதிரி இல்லை ஒரு திரில்லர் நாவல் மாதிரி தான் இருந்தது. ஆனால் யாரும் அருணாச்சலப் பிரதேசத்தின் வழியாக செல்லவில்லை. தலாய்லாமா தான் அந்த வழியில் வந்தவர்.
Mount Kailash மலையை சுற்றி நாலு பக்கங்களில் இருந்தும் 4 நதிகள் தோன்றுகிறது. இதில் பிரம்மபுத்திராவும் Tsangpo ஒரே நதி தான் என்று தீர்மானம் செய்ய, சரத் சந்திர தாஸ் ஆய்வு உதவுகிறது.
இந்நதிகள் பற்றி படிக்கும் பொழுது தென்னிந்தியாவில் உள்ள அகநாசினி நதி எனக்கு நினைவில் வந்தது. உத்தர கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையில் sirsi என்னும் இடத்தில உற்பத்தியாகும் இந்த நதி, 120கிமீ பயணித்து கடலில் கலக்கிறது. நடுவில் எவ்வித தடைகளும் கிடையாது. நதியின் முழு நீளத்திலும் எவ்வித சாக்கடைகளோ இன்டஸ்ட்ரியல் வேஸ்ட் கலப்பதில்லை. மனிதர்களின் கை அதன் மேல் படவே இல்லை. One of the pristine virgin rivers in India. காரிலேயே அதன் பாதையை ஒட்டி செல்லலாம். ஒரே நாளில் மூலத்திலிருந்து கடலில் சங்கமம் வரை சென்று பார்த்து விடலாம். 2 பெரிய நீர்வீழ்ச்சிகளை உருவாக்குகிறது. அதில் ஒன்று பிரபலமான உன்சல் நீர்வீழ்ச்சி. Moonbow அடிக்கடி தோன்றும் ஒரு இடம்.
எதற்காக பிறப்பு எடுத்தோமோ அதை எவ்வித தடைகள் இன்றி சென்றடைவது தான் பேரானந்தம். நல்லூழ் கொண்ட நதி. பெயரைக் கேட்டாலே பரவசம் அளிக்கும் ஒரு நதி.
அன்புடன்,
மீனாட்சி
சென்னையில் ஓர் இலக்கியப் பயிற்சி முகாம் நடத்துகிறேன்
ஒரு நாவல் பயிற்சி முகாம் வரும் ஆகஸ்ட் 30, 31 ஆம் தேதிகளில் சென்னை அடையாறில் மானசா பதிப்பகம் அலுவலகத்தில் நிகழ்கிறது. நான் பயிற்சியை அளிக்கிறேன்.
சென்னையில் ஓர் இலக்கியப் பயிற்சி முகாம்
Chennai-based women’s publishing house Manasa Publishers has announced a novel competition exclusively for women. Those who have already written novels can also participate.
How to write your debut novel?For contact https://www.manasapublications.com/manasalitprize
August 5, 2025
உரு,அரு,உருவரு – கட்டண உரை வெளியீடு
நான் ‘உரு அரு உருவரு’ என்னும் தலைப்பில் பிப்ரவரி 2, 2025 அன்று சேலத்தில் ஆற்றிய உரையின் காணொளிப் பதிவு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பார்க்கலாம்.
மாத்து
நகைச்சுவை
கொஞ்சம் முதுகுவலி இருப்பது உண்மைதான். அதைச் சொல்லியிருக்கக் கூடாது.நண்பர் ஆதுரத்துடன் “எங்க வலீன்னு சொன்னீங்க?”என்றார்.
“முதுகிலேங்க” என்றேன்.
“சொன்னா தப்பா நினைக்கப்பிடாது. வேற எங்கவேணுமானாலும் வலி வரலாம். முதுகிலே மட்டும் வலி வரப்பிடாதுங்க. நாமள்லாம் மிடில்கிளாஸ். முதுகுதானுங்களே எல்லாமே?”
நான் மையமாகத் தலையசைத்தேன். வேறு எங்கெல்லாம் வலி வந்தால் அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை என்று சிந்தனை ஓடியது
”இந்த அலோபதி வேஸ்டு. போய் விளுந்திராதீக. ஆயிரம் டெஸ்டு வைப்பான். அப்றம் ஒண்ணுமே இல்லேம்பான்” என்றார் அவர். “பேசாம நீங்க ஆல்டர்நேட்டிவ் மெடிசினுக்குப் போயிருங்கோ. என் மச்சினர் இப்டித்தான் ரொம்பநாள் மூட்டுவலி. எங்க வேணுமானாலும் வலி வரலாங்க, மூட்டில மட்டும் வலியே வரப்பிடாது. அப்டியே ஆளைச் சாய்ச்சிடுது பாருங்க. என்ன பண்ணுறதுன்னு தெரியாம அங்க இங்கன்னு கோட்டு போட்ட டாக்டருங்களுக்கு பணத்தையா அள்ளி விட்டார்”
“பிறவு?”என்றேன்.
“எங்கிட்ட ஒருநாளைக்கு கேட்ட்டார். நம்ம இயற்கைமருத்துவம் லோகநாதன் இருக்காரே?” என் முகத்தைப் பார்த்துவிட்டு நிறைவுடன் “கேள்விப்பட்டிருக்கமாட்டீங்க. அப்டியே கொடத்தில போட்ட வெளக்கு… ஆரல்வாய்மொழிக்கு அந்தப்பக்கமா ஒரு சின்ன ஊரிலே இருக்கார்.பேச்சிப்பாறை சானலை தாண்டி அந்தப்பக்கமா போனா ஒரு ஓட்டுவீடு. வாசலிலே ஆடு நிக்கும்”
“எப்பவுமேயா?”என்றேன்.
“மேயாதப்ப நிக்கும்”என்று யதார்த்தமாகச் சொல்லிவிட்டு “அவரிட்ட கூட்டிட்டு போனேன். போனதுமே சொல்லிட்டார், மூட்டுல பிரச்சினைன்னு”.
“நடக்கிறதப் பாத்தா?”என்றேன்.
“இல்ல, இவரை சேரோட தூக்கிட்டு போனோம்” என்று மேலும் யதார்த்தமாகச் சொல்லி, “அப்டியே கூப்பிட்டு ஒக்கார வைச்சார். நாக்க நீட்டுன்னார்”
நான் “மூட்டுல இல்ல வலி?”என்றேன்.
“ஆமா. ஆனா பாடி ஒண்ணுதானே? ஆத்துத்தண்ணியில கரைதோறும் ருசி பாக்கணுமாடாம்பார். பெரிய ஞானி. நாக்க கூர்ந்து பார்த்துட்டே இருப்பார். ஒரு புள்ளியில குண்டூசியாலே குத்துவார். அப்டியே ஒடம்பு துள்ளும்”
“வலிக்குமோ?”
“பின்ன? நாக்குல நரம்பில்லாம பேசுறதுன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. நாக்கில எல்லா நரம்பும் இருக்கு. மூட்டுக்குண்டான நரம்ப கண்டுபிடிச்சுட்டார்னா அப்டியே குத்தி தூர் எடுத்து விட்டுடுவார். செரியாப்போயிரும்”
”ஆச்சரியம்தான்” என்றேன். முதுகெலும்புகளுக்கெல்லாம் சேர்த்து ஒரே நரம்பா இல்லை ஒவ்வொன்றுக்கும் ஒரு நரம்பா என எண்ணிக்கொண்டிருந்தபோது நண்பர் தொடர்ந்தார்.
“மாற்றுமருத்துவத்திலே பலது இருக்குது சார். சாமுண்டியப்பான்னு வெள்ளக்கால் பக்கம் ஒருத்தர்”
“பாக்க சாதாரணமாத்தான் இருப்பார் இல்லீங்களா?”
“எப்டி தெரியும்?”என்றார் வியப்புடன்.
“சொன்னாங்க”என்றேன்.
“ஆனா மகாஞானி. அவரோட சிகிச்சை என்னான்னாக்க எல்லாமே உள்ளங்காலிலேதான்! நம்ம பிரண்டோட பொஞ்சாதிக்கு மனசிலே ஒரு பிரச்சினை. உள்ளங்காலிலே சரியா தொட்டு மனசிலே உள்ள அந்த பிரச்சினையப் புடிச்சுட்டாருன்னா பாத்துக்கிடுங்க”
“ஓகோ”என்றேன். ஐயத்துடன் “அந்தம்மா அப்ப அவங்க மனசையா ரோட்டில வச்சு நடந்திட்டிருந்துது? ரொடெல்லாம் ஒரே கலீஜா கெடக்குமே?”
“கழுவிக்கலாங்க. மனசிலே என்ன பிரச்சினை இருந்தாலும் கழுவிடலாம். அதுக்குத்தான் யோகக்குளியல் சிகிச்சை. சாம்பமூர்த்தின்னு ஒருத்தர் பண்றார். யோகாவால மனசை குளிப்பாட்டி விடுவார். சோப்பு, சீயக்காய்,ஷாம்பூன்னு அதிலே மூணு லெவல் இருக்கு. வேற வேற ரேட்டு ”
“டிடெர்ஜெண்டு கூட தேவைப்படறவங்க இருப்பாங்க இல்லியா?” என்றேன். “சிலருக்கு ஃபினாயில்கூட வேண்டியிருக்கும்…”
“பின்ன? நோய்கள் பலவகை. மோப்ப மருத்துவம் பாத்திருக்கியளா?”
“மலர்மருத்துவம்னு ஒருவாட்டி யாரோ சொன்னாங்க”
“இத மலமருத்துவம்னு சொல்வாங்க. மலத்தை மோந்து பாக்கிறது”
“நோய் தெரிஞ்சுருமாமா? அதுக்கு லேப்லே குடுத்தா–”
“இது பேஷண்டே மோந்து பாக்கிறதுங்க”
“தன்னோட மலத்தையா?”
“அதான் இல்ல”என்றார் மகிழ்ந்து “டாக்டரோட மலத்த…”
“ஓ” என்றேன் “நெறைய தேவைப்படுமே”
“அவரு மூணுவாட்டி தெனம் போவார். காலையிலே ஆணவம். மத்தியான்னம் கன்மம். ராத்திரி மாயை”
“நிர்மலம்னு சொல்லுங்க”
“அவரோட சம்சாரம் பேரு அதான்…மாற்று மருத்துவத்திலே பலது இருக்கு. இயற்கை உணவுண்ணு ஒண்ணு இருக்கு. மருந்தே வேண்டாம்னு சொல்வாங்க”
“நோய் இல்லேன்னா எதுக்கு சார் மருந்து?”
“கரெக்ட். அதான் அவங்க பாலிஸி. உணவே மருந்துன்னு சொல்லி பச்சைபச்சையா சாப்பிடுவாங்க. வாழையெலைக்கும் அதில வச்ச சாப்பாட்டுக்கும் வித்தியாசமே தெரியாம சாப்பிட்டாத்தான் அது ஆரோக்கியமான சாப்பாடுன்னு ரூல். குரங்கெல்லாம் அப்டித்தானே சாப்பிடுது”
“அதுக்கு சமைச்சு குடுத்தா சாப்பிடாதா என்ன?”
அவர் என்னை கடந்து சென்று “அதைச் சாப்பிட்டா நாப்பதுநாளிலே எல்லா நோயும் போயிரும்.நம்ம சகா ஒருத்தர் தமிழ்வாத்தியார். பதினாறு வருசமா சமைக்காத சாப்பாடுதான்.பெரீய ராமபக்தர். சேரிலே கூட குந்தித்தான் உக்காருவாருன்னா பாத்துக்கிடுங்க. நல்லமனுஷன், நம்மளப் பாத்தா அப்டியே ஒரு ஜம்பு…”
எனக்கும் அப்படித்தான் தோன்றியது.
”இவங்க இப்டீன்னா மருந்தே உணவுன்னு ஒரு குரூப்பு இருக்கு. அவங்க வேற டைப்பு” என்றார் நண்பர் “ஒரே மூலிகையா சாப்பிடுவாங்க. கொல்லைக்குப்போறதே லேகியம் மாதிரி இருக்கும்னா என்னத்தச் சொல்ல?”
“ஓகோ” என்றேன்.“அதை வேற ஏதாவது மாற்றுமருத்துவத்துக்கு யூஸ் பண்றாங்களா?”
“இன்னும் இல்லீங்க” என்றார்.
ஆசுவாசமாக உணர்ந்தேன் “ஏதோ இந்தமட்டுக்கும்…” என்றேன்.
“ஹீலிங்னு ஒண்ணு இருக்கு. ஹீலர் ஆஸ்கார்னு ஒருத்தர். அவர் என்ன சொல்றார்னா நோயே இல்லேன்னு”
“அப்ப அவர் எதை ஹீல் பண்றார்?”
“இப்ப இலுமினாட்டின்னு ஒரு குரூப்பு இருக்குங்க இல்லியா?”
”பொம்மனாட்டீன்னு மாமிகள சொல்வாங்களே”
“அதேமாதிரிதான். அவங்க சர்வதேச ஆரியச் சதி. அவங்க நம்மள பாதிக்காம இவரு நம்மளைக் குணப்படுத்திட்டே இருப்பார்”
“அதுக்கு அவங்களையே குணப்படுத்தலாமே”
“இன்னொருத்தரு ஃபீலர் மாதவன்னு பேரு. நாம நோய சொன்னாலே போரும் அப்டியே அளுதிருவார். அவர் ஒருபாட்டம் அளுதிட்டார்னா நம்ம மனசு லேசாயிரும்ங்க”
எனக்கு இது கொஞ்சம் நம்பும்படியாக இருந்தது. ஒரு மனிதன் நமக்காக அழுகிறான் என்றால்…
“வெங்காயம் மாதவன்னு சொன்னா ஊர்ல தெரியும்” என்றார் நண்பர்
“ஓகோ”
“ஹோமியோ வேற மாதிரி” என்றார் நண்பர் “எந்த அளவுக்கு கம்மியா கெமிக்கல கலக்கிறோமோ அந்தளவுக்கு வீரியம் ஜாஸ்திங்கிறது அவங்க பாலிசி. குண்டுமணி அளவுக்கு பாஸ்பரஸை எடுத்து அண்டாத்தண்ணியில கலக்குவாங்க. அதில ஒரு ஸ்பூன் எடுத்து மறுபடி ஒரு அண்டாத்தண்ணியில கலக்குறது. அதில ஒரு ஸ்பூன் எடுத்துமறுபடியும் ஒரு அண்டாத்தண்ணியிலே..அதில—”
“அப்றம்…?”
“அந்தக் கடைசீ தண்ணி இருக்கே அதோட வீரியம் அணுகுண்டு மாதிரியாக்கும். நின்னு கேக்கும். நம்ம ப்ரண்டோட தம்பி ஒருத்தனுக்கு தலைச்சுத்து. ஒக்காந்தா வாந்தி. நேரா போயி நம்ம கேசவபிள்ளைய பாத்தான். நாலு மடக்கு மருந்து குடுத்தார். நின்னிட்டுது”
நான் பெருமூச்சுவிட்டேன்
“கும்பகோணத்திலே ஒரு ஹோமியோ இருக்கார். இருக்கிறதிலேயே எசன்ஸை கம்மியா கலக்கின தண்ணி அவரு குடுக்கிறதுதான். காவேரியிலே அவரோட கெமிக்கல கலக்கிட்டு காவேரித்தண்ணியையே குடுக்கிறார். நல்லா கேக்குது”
“எப்ப கலக்கினார்?”
“அவரெங்க கலக்கினார்? அவங்க அப்பாதான் கலக்கினது…”என்றார் நண்பர் “இப்ப உங்க பிரச்சினைக்குத் தொடுவர்மம்கூட நல்லா கேக்கும். உடம்பிலே அங்கங்க தொடுறது…”
“வேணாங்க எனக்கு கிச்சுகிச்சு ஜாஸ்தி”என்றேன்
“சயண்டிஃபிக் டிரீட்மெண்டுங்க” என்றார்.”மாயநாதன்னு ஒருத்தர்.பாக்க சாதாரணமாத்தான் இருப்பார். பொம்புளையாளுங்களுக்கு குச்சி வச்சு தொடுவார். முஸ்லீம் பொம்புளைங்கன்னாக்க நெழலையே தொட்டு குணப்படுத்தீருவார்”
“பயங்கரமா இருக்கு” என்றேன்
“இருக்குல்ல? சார் மாற்றுமருத்துவம்னா சும்மா இல்ல. இங்கிலீஷ்ல நாலஞ்சு வார்த்தைய வாசிச்சுட்டு வெள்ளைக்கோட்ட மாட்டீட்டு பணத்த கறக்குற பிஸினஸ் இல்ல. தெய்வீகமான மருத்துவம். காலு கையின்னு தனியா பிரிச்சு செய்றதில்ல. ஹோலிஸ்டிக் மெடிசின்…” என்றார் நண்பர் “எனிமா மருத்துவம்னு ஒண்ணு இருக்கு. அதான் பெஸ்ட்”
“என்ன பண்ணுவாங்க?”
“எனிமா குடுக்கிறதுதான்”
“எல்லா நோய்க்குமா?”என்றேன்
“ஆமா, பின்ன?”
“வயித்துப்போக்குக்கு?”என்றேன்.
“அதுக்கும்தான்”என இயல்பாகச் சொல்லி “அதில வெளக்கெண்ணை எனிமான்னு ஒண்ணு இருக்கு. அது மூட்டுநோய்க்கு நல்லது. போட்டுக்கிட்டா நடக்கிறது ஸ்மூத்தா இருக்குன்னு நம்ம பொஞ்சாதியோட தம்பி சொன்னான்”
நான் பெருமூச்சுவிட்டேன். “உங்க மச்சினர் இப்ப எப்டி இருக்கார்?”
“செல்போனிலே கூப்பிட்டேன். பேசமுடியல்லை. நேரா சங்கரன்கோயிலிலே சம்முவம்னு ஒருத்தர் இருக்கார். பாக்க சாதாரணமாத்தான் இருப்பார். போயிப்பாருங்கன்னு சொன்னேன்”
நான் தெளிந்து “அவரு என்ன பண்றார்?”என்றேன்
“அறை மருத்துவம்சார்”
“ரூம்லயா?”
“இல்ல”என்றார் “போனதுமே பளார்னு ஒண்ணு விடுவார் பாருங்க. அப்டியே நோய்லாம் பறந்திரும். நம்ம தம்பி மச்சானுக்கு அங்கயே சரியாயிடுச்சுன்னா நம்ப மாட்டீங்க”
“பல்வலியா?”
“எப்டி கண்டுபிடிச்சீங்க?”
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 21, 2015
ஓஷோ: மரபும் மீறலும்-10

தத்துவார்த்தமாக ஓஷோவின் இந்திய சிந்தனைப் பின்னணி, அவருடைய முன்தொடர்ச்சி என்னவாக இருக்கும்? ஓஷோவை எந்தெந்த இந்திய சிந்தனைமரபுகளுடன் இணைத்து யோசிக்கலாம்? ஒவ்வொன்றாகச் சொல்லிப்பார்க்கிறேன். ஒரு விரிந்த சித்திரத்தை உருவாக்கிக்கொள்வதற்காக.
1. வேதங்களின் பூதவாதம்
வேதங்களை ஆராய்ந்த மேலைநாட்டு ஆய்வாளர்கள் அதிலிருந்த கருத்துகளை கருத்துநிலைகளாக தொகுத்திருக்கிறார்கள். குறிப்பாக ரஷ்ய ஆய்வாளராகிய ஷெர்பாட்ஸ்கி (Fyodor Shcherbatskoy) மிக முக்கியமானவர். நான் பல இடங்களில் அவரை மேற்கோள் காட்டுவதுண்டு. அவர் கருத்துகளை கருத்துநிலைகளாக தொகுக்கிறார். வேதங்கள் என்பவை நீங்கள் நினைப்பதுபோல ஒற்றைக்கருத்து வெளிப்பாடு கொண்டவை அல்ல. அவை வேர்ப்பிடிப்புகள் போல. மண்ணை அகற்றி வேரைப் பார்த்தோமென்றால் நூற்றுக்கணக்கான மரங்களின் வேர்கள் இணைந்து ஒற்றை படலமாக இருக்கும். அதுபோல பின்னாளில் இந்தியாவில் உருவாகிவந்த அனைத்து சிந்தனைகளுக்குமான அடிப்படைகள் வேதத்தில் உள்ளன. இந்தியாவின் வேதமறுப்பு சிந்தனைகளின் அடிப்படைகள்கூட வேதங்களில்தான் உள்ளன.
வேதங்களிலுள்ள பிருஹஸ்பதி ரிஷி அத்தகைய வைதிக மறுப்பு மற்றும் உலகியல்வாதச் சிந்தனைகளின் முன்னோடியாகச் சொல்லப்படுகிறார். அசுரகுரு சுக்ரர் அவருடைய மாணவராகச் சொல்லப்படுகிறார். அஜித கேசகம்பளர், கணாதர், தீஷணன் போன்ற பல்வேறு பூதவாத, ஜடவாத ரிஷிகளின் பெயர்கள் வேதங்களில் இருந்து எடுத்து சொல்லப்படுகின்றன. அவர்கள் உலகியல்வாத சிந்தனைகளை முன்வைப்பவர்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளாக இந்த தொடர்ச்சி உள்ளது. அவர்களில் இருந்து ஓஷோவுக்கான தொலைவு என்பது நான்கைந்து ‘இன்ச்’கள் தான். நம் காலகட்டத்தில் அவ்வாறு ஒருவர் இருந்திருக்கிறார், அவ்வளவுதான். எல்லா ஊர்களிலும் எல்லா காலகட்டத்திலும் ஒருவர் இருந்திருக்கிறார். அந்த தொடர்ச்சி அறுபட்டு போய்விடவில்லை.
2. சார்வாகம்
வேதங்களுக்குப் பிறகு ஒரு பெரிய தரிசனமாக சார்வாகம் இருந்திருக்கிறது. பின்னாளில் பக்தி காலகட்டம் மேலோங்கி வரும்போது சார்வாக தரிசனத்தின் நூல்கள், அவர்களுடைய மரபுகள் அற்றுப்போய்விட்டன என்று சொல்லப்படுகிறது. ஆனால் சார்வாகம் எத்தகைய வரலாற்று பாத்திரத்தை ஆற்றியதோ அதை சமணமும் பௌத்தமும் ஆற்றத்தொடங்கியபோது சார்வாகத்தின் இடம் சிறிது சிறிதாக குறைந்துபோனது என்பதுதான் மேலும் பொருத்தமானது என்று நினைக்கிறேன். அது மறுக்கப்படவில்லை, கரைந்தழிந்தது. அல்லது வேறொன்றுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தது. ஆனால் சார்வாகம் மகாபாரத காலம் வரைக்கும் மிக வலுவான ஒரு தத்துவத் தரப்பாக இருந்திருக்கிறது.
இன்றைக்கு அவர்களுடைய சிந்தனைகளை அறிஞர்கள் தொகுத்துள்ளனர். குறிப்பாக வங்க மார்க்சிய அறிஞரான தேவிபிரசாத் சட்டோபாத்யாய (Debiprasad Chattopadhyaya) முக்கியமானவர். அவருடைய ‘இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்’ என்ற நூல் கரிச்சான் குஞ்சு அவர்களின் மொழிபெயர்ப்பில் தமிழில் வந்திருக்கிறது. அந்த நூலில் சார்வாக சிந்தனைகளை தேர்ந்தெடுத்து தொகுத்து அளிக்கிறார். பழைய நூல்களில் சுபக்கம், பரபக்கம் என்று உண்டு. ஒரு சிந்தனை தரப்பு தன்னைப்பற்றி (சுபக்கத்தை) சொல்வதற்கு முன் தன்னை மறுக்கும் தரப்புகள் (பரபக்கம்) பற்றி சொல்லும். சார்வாகம் அழிந்தாலும் அதை எதிர்த்த தரப்புகள் தங்கள் எதிர்த்தரப்பைச் சுருக்கி அளித்துள்ளவற்றில் இருந்து சார்வாகத்தை மீட்டுக்கொள்ளலாம். வேதாந்த நூல்களில் பரபக்கமாக எங்கெல்லாம் சார்வாகம் சொல்லப்பட்டுள்ளதோ அவற்றையெல்லாம் தொகுத்து வழங்குகிறார் தேவிப்பிரசாத்.
அதேசமயம் தேவிபிரசாத்துக்கு முன்னாலேயே சார்வாகர்களை பற்றிய குறிப்பை உருவாக்கியவர் எம்.என்.ராய் (Manabendra Nath Roy). அவர் Radical Humanist இயக்கத்தின் நிறுவனர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிதாக்களில் ஒருவர். பிறகு கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறினார். அவர் எழுதிய Materialism: An Outline of the History of Scientific Thought என்ற நூலில் இந்திய பொருள்முதல்வாதச் சிந்தனைகள் பற்றி பேசும்போது சார்வாகர்களை பற்றிய ஒரு குறிப்பை அளிக்கிறார். அது மிகமுக்கியமான ஒரு தொடக்கம். ஏனெனில் அன்று இந்திய சிந்தனை என்றாலே மொத்தமாகவே ஆன்மிகம்தான் என்னும் எண்ணமே இருந்தது. இங்கிருந்த நாத்திகவாதச் சிந்தனைகள் வெளித்தெரியவில்லை.
அதன்பின் இந்திய தத்துவங்களை மிக விரிவாக எழுதியவர் எஸ்.என்.தாஸ்குப்தா (A History of Indian Philosophy, Surendranath Dasgupta). அவர் இந்த நாத்திகவாத, ‘ஒழுக்கம் கடந்த’ சிந்தனைகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அதைப்பற்றிய ஒரு சிறு அடிக்குறிப்பை இங்கு சொல்லவேண்டியுள்ளது. இந்த ஒழுக்கம் கடந்த சிந்தனைகள் பற்றி எழுதும்போதெல்லாம் ஒருவித தார்மீக கோபத்துடன்தான் தாஸ்குப்தா எழுதுகிறார். ‘என்ன இது, ஒழுக்கமில்லாமல் இருக்கே’ என்பதாக ஒருவித அங்கலாய்ப்பு இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அவர் வாழ்வின் கடைசிக்காலத்தில் அவருடைய தட்டச்சருடன் உறவு ஏற்பட்டு, தன் மனைவியை விட்டுப்பிரிந்து சேரியில் சென்று தங்கி, அங்கு பிரச்சனை செய்து சாலையில் நின்றதை அவர் மகள் மைத்ரேயி தேவி ஒரு நாவலாக எழுதியிருக்கிறார். கொல்லப்படுவதில்லை என்றபேரில் தமிழில் வெளிவந்துள்ளது. எனக்கு தாஸ்குப்தாவின் புத்தகத்தை படிக்கும்போதெல்லாம் அது நினைவுக்கு வந்துகொண்டே இருக்கும். ‘அறுபது வயதுவரை அப்படி இருந்துவிட்டு அதற்குமேல் இப்படி ஆகியிருக்கிறாய். அப்படியெனில் உனக்கு என்ன பிரச்சனை ?’ என்ற கேள்வியை புன்னகையுடன் எழுப்பிக்கொள்கிறேன். ஒழுக்கவாதிகளுக்கெல்லாம் பெரிய பிரச்சினை என்பது சலிப்புதான் போல.
சார்வாக தரிசனத்தின் அடிப்படை என்ன ? அவர்களுடைய தரிசனத்தை புரிந்துகொள்ள முக்கியமாக மூன்று விஷயங்களை சொல்லலாம்.
இன்பமே புருஷார்த்தம்
பொதுவாக, நான்கு புருஷார்த்தங்கள் (மானுடவாழ்வின் நோக்கங்கள்) சொல்லப்படுகின்றன. அவை தர்மம் (அறம்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்), மோக்ஷம் (வீடு). திருக்குறள் இதில் அறம், பொருள், இன்பம் எனும் மூன்றை மட்டும்தான் சொல்கிறது. ஆனால் இந்து, பௌத்த, சமண மரபில் நான்கு பால்கள் உள்ளன. அதில் சார்வாகர்களின் தரப்பு இது. ‘இன்பம் மட்டும்தான் உண்மையான புருஷார்த்தம், இன்பத்தை அடையும்பொருட்டு தேவைப்படுவதே பொருள், இன்பத்தை சரியாக பகிர்ந்துகொள்ளும்பொருட்டு இருப்பதே அறம், சரியான முழுமையான இன்பத்தை அடைந்தவனுடைய நிறைநிலைதான் வீடுபேறு’
இங்கு காமம் என்று சொல்லப்படுவது வெறும் பாலியல் இன்பம் மட்டுமல்ல. பொதுவாக உலகியல் இன்பங்கள் அனைத்துமே காமங்கள்தான். அதாவது இவ்வுலகில், இந்த வாழ்க்கையில் நாம் அனுபவிக்கக்கூடிய இன்பங்கள். உண்ணுதல், குடித்தல், மகிழ்தல், மைந்தர்களோடும், நண்பர்கள் உறவுகளோடும் இருத்தல், சிறந்த அறிவார்ந்த இன்பங்களை அனுபவித்தல் அனைத்துமே இங்குள்ள இன்பங்களே. வேறு எங்கோ சென்று அனுபவிக்கும்பொருட்டு வாக்களிக்கப்பட்ட இன்பங்கள் அல்ல. இதை சொல்லும் ஒரு தத்துவ தரப்பு இங்கு வலுவாக இருந்திருக்கிறது.
புலனறிவே பிரமாணம்
நம் மரபில் பிரத்யக்ஷம், அனுமானம், சுருதி எனும் மூன்று பிரமாணங்கள் உண்டு. பிரத்யக்ஷம் என்பது புலன்களால் பருவடிவ உலகை நேரடியாக அறிவது. அவ்வாறு அறிந்தவற்றிலிருந்து நாம் செய்யக்கூடியது ஊகம் எனும் அனுமானம். மூன்றாவதான சுருதி என்பது ‘சொல்லப்பட்டது’ என்ற பொருளுடையது. சுருதி என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பொருள்சொல்வார்கள். வைதிகம் சார்ந்த எல்லா மதங்களுக்கும் வேதம்தான் சுருதி. முன்னறிவு என்பது வேதம்தான்.
ஆனால் சார்வாகர்களை பொறுத்தவரை சுருதி என்பது வேதமோ அல்லது முன்னால் சொல்லிவைக்கப்பட்ட எந்தவொரு நூலோ அல்ல. நமக்கு முன்னாலேயே தெரிந்த ஞானம்தான் (முன்னறிவு) சுருதி. நான் முதன்முறையாக கடலை பார்க்கிறேன். ஏற்கெனவே நான் ஏரியை பார்த்திருக்கிறேன். எனவே இந்தக்கடல் என்பது ஏரியைவிட பலமடங்கு பெரியது என்று புரிந்துகொள்கிறேன். இங்கு ஏரியைப்பற்றிய முன்னறிவே சுருதி. கடல் என்பது பிரத்யக்ஷம். எனவே சார்வாகர்களை பொறுத்த அளவில் மூலநூல், முன்னூல் என்று ஒன்று கிடையாது. கண்முன் உள்ளவற்றைப் பற்றிய புலனறிதலே அறிதல்கள் அனைத்துக்கும் அடிப்படை.
இன்று இந்தியாவிலோ, உலக அளவிலோ சிந்திக்கக்கூடிய மக்களிடையே மிகச்சிலருக்கு, கிட்டத்தட்ட ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டும்தான் மூலநூல் (canon) என்று ஒன்று இல்லாமல் இருக்கிறது. அத்தனை கிறிஸ்தவர்களுக்கும் சுருதி என்பது பைபிள்தான். இஸ்லாமியர்களுக்கு சுருதி குரான். மார்க்சியர்களுக்கு மூலதனம். இவ்வாறு எந்தவொரு நூலும் இல்லாத, முன்னனுபவத்தை மட்டுமே முன்னறிதலாக எண்ணும் ஒரு சிந்தனை தரப்பு சார்வாகம். அப்படிப்பார்த்தால் சார்வாகர்களுடன் ஒத்துப்போகக்கூடிய சிந்தனையாளர்கள் உலக அளவிலேயே பத்துலட்சம் பேருக்குள் இருப்பதற்குத்தான் வாய்ப்புள்ளது. ‘சற்று முன் கிடைத்த அறிவைத்தான் சுருதியாக எடுத்துக்கொள்வேனேயன்றி, எழுதப்பட்ட எந்தவொரு நூலையும் அல்ல’ என்று சொல்லி காலூன்றி நிற்கக்கூடிய திராணி உடையவர்கள் குறைவுதான்.
தர்க்கம்
சார்வாகர்களுக்கு முக்கியமானதாக இருப்பது தர்க்கம். தான் அறிந்த ஒன்றை அனைவருக்குமான அறிதலாக மாற்றுவதற்குத்தான் அவர்கள் தர்க்கத்தை பயன்படுத்துகிறார்கள். அந்த அளவுக்குமேல் தர்க்கத்திற்கு இடமில்லை என்கிறார்கள். ஆகவே அவர்களை தார்க்கிகர்கள் என்றும் சொல்வார்கள். பழைய தமிழ் நூல்களில் தார்க்கிக மதம் என்றுதான் சார்வாகம் குறிப்பிடப்படுகிறது.
மணிமேகலையில் ‘சமயக்கணக்கர் திறம்கேட்ட காதை’ என்றொரு பகுதி உள்ளது. மணிமேகலை வெவ்வேறு சமயத்தவர்களிடம் சென்று உரையாடக்கூடிய பகுதி. அதில் சார்வாகர்கள் பூதவாதிகள் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர். பூதம் என்றால் பருப்பொருள்கள் (பௌதிகம்). பருப்பொருள்வாதி / பொருள்முதல்வாதி (Materialist) என்பது அதன் பொருள். அக்காலத்திலிருந்தே தொடர்ச்சியாக அவர்களின் இருப்பு உள்ளது.
அந்த மரபில் இருந்து நாம் ஒரு கோட்டை எளிதாக ஓஷோவை நோக்கி இழுக்கமுடியும். ஓஷோ ஒரு நவீனகாலச் சார்வாகர் என்று சொல்லிவிடமுடியும். பின்பு எப்படி தமிழுக்கு, இந்திய மரபுக்கு ஓஷோ அன்னியமானவராக இருக்கமுடியும் ? தத்துவார்த்தமாக அவருடைய முன்தொடர்ச்சி அதுதான். நான் இங்கு சொல்லவருவது, ஓஷோவின் சிந்தனை நமக்கு ஒன்றும் புதிதல்ல, ஏற்கெனவே அதெல்லாம் இங்கு உண்டு என்பது அயல்ல. அப்படி எல்லா சிந்தனைகளையும் பழமையில் கொண்டுசென்று சேர்ப்பது எனக்கு உகந்ததும் அல்ல. ஓஷோ புதியவர்தான். அவரைப் போன்ற ஒருவர் முன்பு இருந்தது கிடையாதுதான். ஆனால் அதேவேளை, நான் முன்பு சொன்னதுபோல தத்துவத்தில் எதுவும் முற்றிலும் புதியது அல்ல. அவ்வாறு முற்றிலும் புதிதாக இருப்பதென்பது சாத்தியமற்றதும்கூட. தத்துவத்தில் எல்லாமே திருப்பி நிகழக்கூடியதுதான். இன்னும் நூறாண்டுகள் கழித்து ஓஷோவை போல இன்னொருவர் வருவார். அவரும் அன்று புதியவராகத்தான் இருப்பார். அதேவேளை, அன்றும் வேறொருவர் வந்து ‘இல்லைங்க, முன்னால் ஓஷோ என்று ஒருவர் இருந்தார். அவரிலிருந்து இவருக்கு ஒரு கோடு இழுக்கலாம்’ என்று சொல்லிக்கொண்டும் இருப்பார்.
தமிழகமும் சார்வாகமும்
சார்வாகம் தமிழகத்தில் இருந்ததா? தமிழிலக்கியத்தை எடுத்துப்பார்க்கலாம். சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியுடன் மதுரை செல்கிறான். பெரும் செல்வத்தை அழித்த குற்றவுணர்வுடன் செல்கிறான். ஐம்புலன் ஒறுத்த சமணத்துறவியான கவுந்தியடிகள் உடன் செல்கிறார். அப்போது அவர்கள் எவ்வளவு குற்றவுணர்வை உண்டாக்கியிருப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியும். சமணமதம் என்பதே மனிதர்களிடம் குற்றவுணர்வை உண்டாக்கும்பொருட்டு இறைவனால் அனுப்பப்பட்டது என்கிறார் ஓஷோ. அவர்களுடைய கருவியே குற்றவுணர்வுதான். எனவே ‘நானெல்லாம் மனிதனே அல்ல’ என்ற உணர்வுடன்தான் கோவலன் சென்றிருப்பான்.
நூலின் அந்த இடத்தில் புறஞ்சேரி இறுத்த காதை என்ற பகுதி வருகிறது. அங்கு கோவலன் ஒரு மக்கட்குழுவை பார்க்கிறான். இளங்கோ அவர்களை ”வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர்” என்கிறார். இசையோடு இணைந்த பாடலுக்கு வரி என்று பெயர். கானல் வரி, வேட்டுவ வரி போல. மறைநூல் வழுக்கத்து என்றால் வேதங்களை ஓதாமை. அதாவது வேதங்களை ஓதாத, இசைப்பாடல்களை பாடக்கூடிய, முப்புரி நூலணிந்த மனிதர்கள் வாழக்கூடிய சேரி என்கிறார் இளங்கோ. உரையாசிரியர்கள் அவர்களை ‘வேளாப் பார்ப்பனர்’ என்று குறிப்பிடுகின்றனர். அதாவது வேள்வித்தொழில் செய்யாத பிராமணர்கள். புறநானூற்றிலும் இவர்கள் பற்றிய குறிப்பு உள்ளது.
அவர்களுடைய வாழ்க்கைமுறை என்பது இசை, குடி, இன்பம் போன்றவையே. இன்பமே புருஷார்த்தம் என்று சொல்லக்கூடியவர்கள். அவர்கள் ஏன் நகருக்கு வெளியே புறஞ்சேரியில் வாழ்ந்தார்கள் ? அரசன் ஏன் அவர்களை பேணினான் ? அரசன் அளிக்காமல் அந்தணர்கள் வாழமுடியாது. அப்படியெனில் இவர்கள் அரசனுக்கு தேவையாய் இருந்திருக்கின்றனர். எப்படி மூன்று அக்னிகளை வளர்த்து வாழும் அந்தணர்கள் அரசனுக்கு தேவையோ அதுபோலவே வேளாப் பார்ப்பனரும் அவனுக்கு தேவையே. ஏனெனில் அது வேறொரு வழி. வைதிகர்கள் சென்றடைய முடியாத ஓர் இடத்திற்கு இவர்களால் செல்லமுடியும்.
அந்த பகுதியை பற்றி விவாதிக்கும்போது மார்க்சிய அறிஞர் கா. சிவத்தம்பி, பழைய காலங்களில் வேதியியல், வானியல் உட்பட பல உலகியல் ஞானங்களை உருவாக்கக்கூடியவர்களாக இந்த வேளா பார்ப்பனர்கள் இருந்திருக்கலாம், ஆகவே அரசன் அவர்கள் புரந்திருக்கலாம், வேதங்களுக்கு அப்பாற்பட்ட மெய்ஞானங்களை நோக்கி இவர்கள் சென்றிருக்கலாம் என்கிறார். அன்று அவர்களால் உருவாக்கப்பட்ட ஜோதிடம் போன்றவற்றை பிற்காலத்தில் வேள்விப் பார்ப்பனர்கள் தங்களுக்குள்ளும் எடுத்துக்கொண்டிருக்கலாம் என்கிறார். ஆகவே இதை செய்யக்கூடிய ஒரு சமூகம் அன்று இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.
கோவலன் அவர்களை பார்க்க உள்ளே செல்கிறான். யாழ் ஒன்று கிடைக்கிறது. ஆடிய கால், பாடிய வாய் சும்மா இருக்காதல்லவா. அதை வாசித்துக்கொண்டு அங்கேயே இருந்துவிடுகிறான். அதுவரைக்கும் இருந்த குற்றவுணர்வெல்லாம் போய்விட்டது. அதன்பின் மிகமுயன்று அவனை அங்கிருந்து அழைத்து செல்கின்றனர். சிலம்பை படிக்கும்போது, ஒருவேளை அவன் அங்கேயே இருந்திருந்தால் சாகாமல் இருந்திருப்பானோ என்ற எண்ணம் எழாமலில்லை.
இவ்வகையான புறஞ்சேரிகளை மகாபாரதத்திலும் பார்க்கமுடிகிறது. யுதிஷ்டிரனின் முடிசூட்டு நிகழ்வில் ஒரு சார்வாகன் உள்ளே வருகிறான். அந்த இடத்தில் சார்வாகர்களை பற்றி சொல்லும்போது விழவுகளில் மட்டும் நகருக்குள் வரக்கூடியவர்கள் என்று சொல்லப்படுகிறது. மற்ற காலங்களில் ஊருக்கு வெளியே இருக்கக்கூடிய சோலைகள், சுடுகாடுகளில் இவர்கள் வாழ்கின்றனர். விழாக்களில் அவர்களை மறுக்கமுடியாது. அவர்கள் ஊருக்குள் வந்தாக வேண்டும். நான் ‘திசைகளின் நடுவே’ என்ற சிறுகதை எழுதியிருக்கிறேன். அதில் சார்வாகனை பற்றிய மகாபாரதச் சந்தர்ப்பத்தை விரிவாக எழுதியிருக்கிறேன். மகாபாரதத்தில் அந்த சார்வாகன் எலித்தோல் கோவணம் அணிந்து, உடலில் சாம்பல் பூசி, கையில் தண்டத்துடன் வருகிறான். இவனை யார் உள்ளே விட்டது என்று ஒருவர் கேட்கும்போது, ‘நான் இல்லையேல் உனது சபை பூரணமடையாது’ என்று அரசனிடம் சொல்கிறான்.
அதன்பின் யுதிஷ்டிரன் கைநிறைய பொன்னை அள்ளி அனைவருக்கும் கொடுக்கிறான். அந்தணர்களுக்கும் ரிஷிகளுக்கும் இரவலர்களுக்கும் கொடுத்து தனது கருவூலத்தை காலிசெய்தால்தான் ராஜசூயத்தை செய்யமுடியும். ஆகவே அந்த சார்வாகனுக்கும் பொன்னை அளிக்கிறான். அவன் அதை முகர்ந்துபார்த்துவிட்டு கீழே போட்டுவிடுகிறான். அதில் இரத்தமணம் வீசுகிறது என்று சொல்லி வேறு பொன் கேட்கிறான். மீண்டும் அவ்வாறே முகர்ந்து பார்த்துவிட்டு கீழே போட்டுவிடுகிறான். இதைக்கண்டு அனைவரும் கோபப்படுகிறார்கள். யுதிஷ்டிரன் என்ன வேண்டும் உனக்கு என்று கேட்க “உன் களஞ்சியத்தில் ரத்தக்கறை படியாத நாணயம் உண்டா?” என்று கேட்கிறான்.
அதிகாரத்தின் முற்றத்தில் வந்து நின்றுகொண்டு சார்வாகன் அந்த கேள்வியை கேட்கிறான். அதனால் பிராமணர்கள் அவனை எரித்துக் கொன்றுவிடுகின்றனர். ஆனால் அப்படி ஒரு தரப்பு இங்கு வலுவாக இருந்திருக்கிறது. அவர்களுக்குள் மிகப்பெரிய தத்துவ மோதல்கள் நடந்திருக்கின்றன. அது என்றும் அழியாத மரபு. உங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கலாம், எனக்கு இன்னொன்று இருக்கலாம். நான் ஓஷோ கம்யூனில் சென்று உட்காரமாட்டேன். நான் நித்யசைதன்ய யதியின் வழிவந்த அத்வைதி. ஆனால் அந்தப்பக்கம் அதுவும் இருக்கவேண்டும் என்பது எனது அவசியங்களில் ஒன்று. அதனுடைய இருப்பை, தொடர்ச்சியை நான் மறுப்பேனென்றால் நான் என்னையே மறுத்துக்கொள்வதாகவே அர்த்தம்.
ஓஷோவின் முன்தொடர்ச்சி என்று நான் சொல்லக்கூடியது ஒருவகையில் வேதத்தில் தொடங்குவதுதான். அது என்றுமிருக்கும் தரப்பு. ஒருவர் ஓஷோவிடம் கேட்கிறார், ‘நீங்கள் துறவியா?’ என்று. ‘ஆம், துறவிதான்’ என்கிறார் ஓஷோ. ‘துறவிக்கு எதற்கு வைரங்கள் பதித்த பட்டை’ என்று அவர் கேட்கிறார். ‘ஏன், துறவிகள் அப்படி போடக்கூடாதா’ என்று திரும்பிக்கேட்கிறார் ஓஷோ. அவர் ‘போடக்கூடாது’ என்கிறார். அதற்கு ஓஷோ, ‘நீ அப்படி சொல்கிறாய் அல்லவா, அதனால்தான் போட்டிருக்கிறேன்’ என்றார். சுருக்கமாக சொன்னால் எலித்தோல் கோவணம் அணிந்து சுடுகாட்டில் தங்கி, கையில் யோகதண்டத்தை ஏந்திக்கொண்டு யுதிஷ்டிரன் அவையில் நுழைந்த அந்த சார்வாகன்தான், உலகியேயே விலைமதிப்புமிக்க வைரங்கள் பதித்த பட்டையை நெற்றியில் அணிந்துகொண்டு, பட்டு ஆடைகளுடனும் நூறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுடனும் உள்ளே வருகிறார். உண்மையில் அந்த வேறுபாடு அவ்வளவு பெரிதல்ல.
இருபதாம் நூற்றாண்டுக்கு அவர் அவ்வளவு புதியவரா என்று கேட்டால் அதற்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கேரளாவில் சித்தாசிரமம் என்ற ஆசிரமம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கான்ஸ்டபிளாக இருந்த ஒருவர் பின்பு சித்தராகி சிவானந்த சித்தயோகி என்று அறியப்பட்டார். அவர் நிறுவிய கம்யூன் கேரளாவில் சித்தாசிரமம் என்ற பெயரில் தலைச்சேரிக்கும் வடகரைக்கும் நடுவில் உள்ளது. அதன் ஒரு கிளை சேலத்தில் இருந்தது. தற்போது உள்ளதா என்பது தெரியவில்லை. அவருடைய காலகட்டத்தில் இருந்தே அந்த கம்யூன் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. நான் மூன்றுமுறை அங்கு சென்றிருக்கிறேன். அந்த ஆசிரமம் மிகப்பெரிய வேலியிடப்பட்ட வளாகம். அதற்குள் அதன் உறுப்பினர்கள் அனைவரும் நிர்வாணமாகத்தான் இருப்பார்கள். அங்கு பொதுவான ஓரிடத்தில் ஆண், பெண் இருவருக்கும் வெள்ளாடைகள் வைத்திருபார்கள். வளாகத்தைவிட்டு வெளியே வரும்போது அதை அணிந்துகொண்டு வரலாம். ஆனால் உள்ளே முழுமையான நிர்வாணத்தில்தான் இருப்பார்கள். அங்கு ஒரு ஆணும் பெண்ணும் உறவு வைத்துக்கொள்வதற்கு எவ்வித கட்டுப்பாடும் உறவுச்சிக்கல்களும் கிடையாது.
அங்கு பிறக்கும் குழந்தைகள் மூன்று அல்லது நான்கு வயதில் மற்றொரு கம்யூனுக்கு அனுப்பப்படும். அவர்களுக்கு உறவுமுறை என ஏதும் இருக்காது. அவர்கள் தனிமனிதர்கள், அவ்வளவுதான்.நீங்கள் நினைத்தே பார்க்கமுடியாத ஒருவகையான உறவு நிகழக்கூடிய இடம் அது. அதை ஒரு நாவலாக எழுதினால் அதை தணிக்கை செய்வார்கள். சினிமாவாக அதை எடுக்கமுடியாது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு அமைப்பு இங்கு உள்ளது. ஆர்வம் இருப்பவர்கள் அங்கே சென்று பார்க்கலாம். முக்கியமாக ஆயுர்வேத மருந்துகள் செய்வதில் அவர்கள் நிபுணர்கள். அந்த மருந்துகளுக்கு பெரும் மதிப்பு இருப்பதால் அவர்கள் பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாமல் உள்ளனர். அந்த ஆசிரமத்திற்கு எதிராக அங்கே பல கலவரங்கள் நடந்திருக்கின்றன.
அந்த பிரச்சனைகளை செய்தவர்கள் யார் ? அந்த ஆசிரமவாசிகளின் அவ்வகையான ஒழுக்கமின்மை நெறிகள் அல்லது மாற்று ஒழுக்க நெறிகளை பார்த்து புண்பட்டு அவர்களுக்கு எதிராக பிரச்சனை செய்தவர்கள் எந்த தரப்பினர் ? சாரவாத இந்துக்கள் கலாட்டா செய்திருப்பதாக நீங்கள் நினைக்கலாம். நாயர்களோ நம்பூதிரிகளோ ஐயர்களோ சென்று பிரச்சனை செய்திருப்பார்கள் என்று நினைக்கலாம். ஆனால் அவர்கள் யாரும் வரவில்லை. ஏனெனில் அந்த மரபுவாதிகளின் பார்வையில் அவர்கள் சித்தர்கள், அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் .அது சாமானிய அனைவருக்கும் தெரியும். அங்கே பலமுறை பிரச்சனை செய்தவர்கள் மார்க்சிஸ்டுகள்.
ஏனெனில், நான் ஏற்கெனவே சொன்னதுபோல மார்க்சிஸ்டுகளும் ஒரு வகையான செங்கல்சூளை வைத்திருப்பவர்களே. ஒவ்வொரு குடிமகனையும் ஒரேமாதிரியான செங்கலாக அடித்து வெளியே தள்ளுவதைத்தான் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் தரப்பு பலமுறை அந்த ஆசிரமத்திற்குமேல் தாக்குதலை தொடுத்திருக்கிறது. அப்போதெல்லாம் அந்த தாக்குதலுக்கு எதிராக கருத்து சொல்லி அதை கட்டுப்படுத்த முயன்றவர்கள் இந்திய தத்துவம் பயின்ற மார்க்சிய சிந்தனையாளராகிய கே.தாமோதரன், இந்திய சிந்தனைகளில் அறிமுகம் கொண்ட ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் போன்றவர்களே. அவர்கள் சொன்னார்கள், ‘இல்லப்பா, அது வேறு. இவர்கள் வேதகாலத்தில் இருந்து இருக்கிறார்கள். எப்போதுமே இருப்பார்கள். இந்தியா என்று ஒரு தேசம் இருக்கும்வரை இப்படி சிலர் இருப்பார்கள்’ என்று.
அந்த நீண்ட மரபில் நாம் ஓஷோவை வைத்து பார்க்கவேண்டும். ஓஷோவை எப்படி இந்தியாவின் அனைத்துச் சிந்தனை மரபுகளோடும் தொடர்புபடுத்தி பார்ப்பது என்பதைத்தான் நான் சொல்லவிரும்புகிறேன். ஒரு பொருள் காட்டில் விழுந்தால், நான்கைந்து ஆண்டுகளுக்கு பின் பார்க்கும்போது அங்குள்ள அத்தனை வேர்களும் அந்த பொருளை சுற்றிவளைத்து பிடித்திருக்கும். அதுபோல இந்த சிந்தனை முறை என்பது ஒரு காடு. இந்த காட்டில் ஒரு பொதுப்பொருள் விழும்போது அத்தனை வேர்களும் வந்து அதை கவ்விப்பிடிக்கின்றன. உள்வாங்குகின்றன, அதன் சாராம்சத்தை எடுத்துக்கொள்கின்றன.
(மேலும்)
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் பற்றிய தமிழ்விக்கி பதிவு. ஒரு முழுமையான நூல் அளவுக்கே கூடுமானவரை எல்லா செய்திகளும் தொகுத்து அளிக்கப்பட்டது. இணையக் கலைக்களஞ்சியத்தின் சிறப்பு அதை பிழைநீக்கி மேம்படுத்திக்கொண்டே இருக்கலாம் என்பதுதான். இன்னும்கூட இது மேம்படலாம். இதில் பணியாற்றியவர்களுக்கு நன்றி.
இன்றைய செயற்கை நுண்ணறிவு என்னும் தகவல்திருட்டுக் காலகட்டத்தில் இந்த உழைப்பை மிக எளிதாக மென்பொருட்கள் திருடி தங்களுடைய பதிலாக நம் வாசகர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கேள்விகளுக்கு அளிக்கும். அந்த ஆய்வாளர்கள் அதை அங்கே இங்கே பட்டி தட்டி உருமாற்றி தங்கள் ஆய்வுத்தரப்பாக முன்வைப்பார்கள். பரவாயில்லை, இந்த தகவலும் கருத்தும் சென்றடைவதே முக்கியம் என இதற்காக உழைக்கும் பெயர் வெளிவராத நண்பர்களிடம் சொன்னேன்.
இப்பதிவுக்கான ஆய்வுகளைச் செய்கையில் ஆ.இரா.வேங்கடாசலபதியின் பெரும் பணி கண்முன் வந்து நின்றது. கிட்டத்தட்ட எல்லா தரவுகளும் அவரால் தொகுக்கப்பட்டவை, அல்லது கண்டறியப்பட்டவை, அல்லது உறுதிசெய்யப்பட்டவை. பெரும் கலைஞர்கள் தங்களுக்கான வாழ்நாள் ஆய்வாளர்களை காலப்போக்கில் கண்டடைகிறார்கள். புதுமைப்பித்தன் வாசகர்கள் அனைவரும் எப்படியோ ஆ.இரா.வேங்கடாசலபதிக்குக் கடன்பட்டுள்ளனர். புதுமைப்பித்தன் வழிவந்தவன் என்னும் முறையில் நானும்.
புதுமைப்பித்தன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
