யதார்த்தமெனும் கலை
தமிழில் அவ்வப்போது சிலாகிக்கப்படும் மலையாளப்படங்களை நான் பார்ப்பதுண்டு. தமிழகத்தில் சிலாகிக்கப்பட்டாலே அவை நல்ல படங்கள் அல்ல என்னும் என் எண்ணத்தை உறுதிசெய்பவை அவை. அவை தமிழ்ப்படங்களின் இன்னொரு வடிவங்கள் என்று தோன்றும். ‘மெய்யான மலையாளப்படம்’ என ஒன்று உண்டு. அது மிக நிதானமாக நகர்வது. யதார்த்தத்தை மட்டுமே காட்டுவது. ஆகவே அதைப் பார்க்க ஒரு பொறுமையும் பயிற்சியும் தேவை. அந்தப் படங்களை பொதுவாக இங்கே எவரும் குறிப்பிடுவதில்லை என்று காண்கிறேன்.
வெறும் வசனங்கள் வழியாக, ஒரே செட்டுக்குள் நகரும் இந்த சினிமாவின் பதினைந்து நிமிடத்தில் வரும் ஒரு ‘எபிசோட்’ இது. இது எழுதப்பட்டிருக்கும் விதத்திலுள்ள உளவியல் ஆழம், அது எடுக்கப்பட்டிருக்கும் விதத்திலுள்ள இயல்பான ஓட்டம், நுணுக்கமான சிறிய தகவல்கள், உதிரிக் கதாபாத்திரங்களின் ஆளுமை வெளிப்படும் விதம், ஒவ்வொருவரும் சாதாரணமாக நடித்திருக்கும் நுட்பம் ஆகியவைதான் மலையாள சினிமா நூறாண்டுகளில் வந்தடைந்த இடம். அதை ரசிக்கும் பயிற்சி கொண்ட நூறுபேர் தமிழகத்தில் இருந்தால் நான் ஆச்சரியப்படுவேன்.
படத்தொகுப்பு பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்தப் படத்தை அதன்பொருட்டே பார்க்கலாம். ஒரு ஷாட்டில் இருந்து இன்னொன்றுக்கு காட்சிக்கோணம் மாறுவதையே நாம் உணர்வதில்லை. ஒரு ஷாட்டில் சம்பந்தமற்ற ஒருவர் நுழைவது நிகழ்கிறது, அடுத்த ஷாட்டில் அவர் வேறொரு திசையில் வெளியேறுகிறார். இவை தனித்தனியாக எடுக்கப்பட்ட ஷாட்கள் என்று நாம் உணர்வதே இல்லை, நாம் ஒரே நிகழ்வை கண்களைத் திருப்பி பார்த்துக்கொண்டே இருப்பதைப்போலவே உணர்கிறோம், அதுவே செய்நேர்த்தி. seamless என சொல்லத்தக்க இந்த ஒழுக்குதான் மிகச்சிறந்த எடிட்டிங்.
முழுப்படமும் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள்தான் நிகழ்கிறது. இப்படி ஒரு சிறு இடத்தில் படத்தை நிகழ்த்தும் இயக்குநர்கள் சாதாரணமாக அந்த இடத்துக்குள் வேறுபட்ட கோணங்களைக் கண்டுபிடிப்பதற்காக சம்பந்தமில்லாத கோணங்களை வைப்பதுண்டு. பொருத்தமே இல்லாமல் ‘டாப் ஆங்கிள்’ அல்லது ‘லோ ஆங்கிள்’ வைப்பார்கள். அது இப்படத்தில் இல்லை. எல்லா காட்சிக்கோணங்களும் இன்னொரு கதாபாத்திரத்தின் கோணத்தில், அல்லது அந்த ஸ்டேஷனில் இருக்கும் ஒருவரின் கோணத்திலேயே உள்ளன.
இந்தப் படத்தில் ‘கதை’ என ஏதும் இல்லை. திருப்பங்கள் , எதிர்பாராத நிகழ்வுகள் ஏதுமில்லை. சொல்லப்போனால் கதாபாத்திரங்களுக்கு இடையே முரண்பாடு கூட இல்லை. ஆனால் கதைகள் உள்ளன. வெவ்வேறு வாழ்க்கைகளின் சில கீற்றுகள், அந்தக் கீற்றிலேயே கதைமாந்தரின் குணச்சித்திரம் மட்டுமல்ல அந்த மொத்தக்கதையும் உணர்த்தப்படுகிறது. நவசினிமா என்பது ‘நடிப்பு’ அல்ல, சரியான தோற்றம் கொண்ட நடிகர்கள் ஒரு கதாபாத்திரமாக இயல்பாகப் புழங்குவதுதான் என்பதை இந்தப்படம் காட்டுகிறது.
ஒரு பெண்போலீஸின் வாழ்க்கையின் ஒரு பக்கம், அவ்வளவுதான். ஆனால் கேரளத்தில் மிக ரசிக்கப்பட்ட படங்களுள் ஒன்று இது. இங்குள்ள இணையவிமர்சகர்கள் ‘இழுக்கிறது’ என்பார்கள். சுமாருக்குக் கீழ் என்பார்கள். ஆனால் நடிப்பென்று ஏதும் நிகழாத நடிப்பு வழியாக, ஒரு சூழலின் ஒட்டுமொத்தத்தைச் சித்தரித்து அதில் ஒருசில புள்ளிகளை மட்டும் அழுத்திக் காட்டும் கதைத்தொழில்நுட்பத்தின் வழியாக, உணர்வுநிலைகள் மிகையாக ஆகாமல் நிகழும் காட்சியமைப்பு வழியாக, வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வை உருவாக்குகிறது இந்தப் படம். எனக்கு இதன் எல்லா காட்சிச்சட்டகங்களும் எல்லா வசனங்களும் எல்லா முகபாவனைகளும் சுவாரசியமாக இருந்தன.
வனிதா மலையாளத் திரைப்படக் காட்சி
முழுப்படமும்…
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
