Jeyamohan's Blog, page 44
August 5, 2025
வாசகன் என்னும் ஆணவம்
தமிழ்ச் சமூகத்தில் சொல்லி சொல்லி நமக்கெல்லாம் உருவேற்றப்பட்ட ஒன்று ‘பணிவுதான் உயர்ந்த பண்பு’ என்பது. எவ்வளவு பணிவை பாவ்லா செய்கிறோமோ அந்த அளவிற்கு நாம் நல்லவர்கள் என்று பரவலாக நம்பப்படுவோம். ஆகவே சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் கூட சிந்தனையையும் எழுத்தையும் கீழ்மைப்படுத்திப் பேசி தங்கள் பணிவைக் காட்டிக்கொள்ளும் ஒரு சூழல் உலகத்தில் வேறெங்குமின்றி தமிழகத்தில் மட்டுமே உருவாகி வந்திருக்கிறது.
வாசகன் என்னும் ஆணவம்
The Vedantic discourses today are generally very old-fashioned and an expression of pedantry. I am interested to know Vedanta as a living thought, as a cosmic vision, with a modern intellectual base and logic.
Articles on VedantaAugust 4, 2025
பெங்களூர் புக்பிரம்மா நிகழ்வு
பெங்களூர் புக்பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா வரும் ஆகஸ்ட் 8, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நிகழவிருக்கிறது. நான் மூன்றுநாட்களிலும் கலந்துகொள்கிறேன். எனக்கு மூன்று நிகழ்வுகள் உள்ளன.
8 ஆகஸ்ட் 11- 1150 வரை ஜெயந்த் காய்கினி, கே.ஆர்.மீரா, தமிழவன், சி.மிருணாளினி பங்கெடுக்கும் அமர்வு. ஒருங்கிணைப்பு சுசித்ரா
8 ஆகஸ்ட் 1600- 1630 முகாமுகி அரங்கு . நேருக்குநேர் உரையாடல்.
என்னுடைய வெள்ளையானை நாவலின் தெலுங்கு மொழியாக்கம் (குமார் .எஸ் ) வெளியிடப்படுகிறது. 10- ஆகஸ்ட் 2025 காலை 11 மணிக்கு. அனாவரணா அரங்கு.
நண்பர்களை அழைக்கிறேன்
புக்பிரம்மா இணையப்பக்கம்தமிழுடன் இசை!
பெரியசாமி தூரன் தமிழிசை முன்னோடிகளில் ஒருவர். அவர் நினைவாக வழங்கப்பட்டு வரும் தமிழ்விக்கி- தூரன் விருது இந்த ஆண்டு வெ.வேதாசலம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழும் விழாவில் வழக்கம்போல நாதஸ்வர இசை நிகழ்வு உள்ளது. தூரனின் தமிழிசைப் பங்களிப்பைப் போற்றும் முகமாக தொடர்ச்சியாக தமிழ்ப்பண்பாட்டின் முதன்மையான இசைக்கருவியான நாதஸ்வரத்தை முன்வைத்து வருகிறோம்.
இந்த ஆண்டு
சிறப்பு நாதஸ்வரம் மயிலை எம்.கார்த்திகேயன், கோளேரி ஜி. வினோத்குமார் சிறப்பு தவில் அடையார் ஜி. சிலம்பரசன், கும்முடிப்பூண்டி ஆர்.ஜீவாஆகியோரின் இசைநிகழ்வு நடைபெறுகிறது.
பொதுவாக நாம் மரபிசை நிகழ்வுகளில் மிகக்குறைவாகவே கலந்துகொள்கிறோம். புதிய தலைமுறையினருக்கு மரபிசை அறிமுகமும் மிகக்குறைவு. இன்றைய போட்டிமிக்க படிப்புமுறை அந்தவகையான கலைப்பயிற்சிகளுக்கு உகந்ததாக இல்லை. ஓர் அகவைக்குப் பின்னரே நமக்கு கலை- இலக்கிய நாட்டம் உருவாகிறது. அந்தவகையினரை முன்னில்கண்டுதான் இந்நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
மரபிசை அறிமுகம் அல்லது இசைநிகழ்வுகளில் கலந்துகொண்ட அனுபவம் இல்லாமல் நாதஸ்வர இசையைக் கேட்பது கடினம். நமக்கு நாதஸ்வர இசை வெறும் மங்கல இசை என்ற எண்ணமும் உள்ளது. திருமணம் போன்ற விழாக்களில் நாதஸ்வர இசையை வெறும் சூழலோசையாகவே நாம் கேட்கிறோம்- உண்மையில் பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறோம். பலசமயம் திருமண நிகழ்வுகளில் எளிய சினிமாப்பாடல்களே இசைக்கப்படுகின்றன. அத்துடன் அவை மிகுந்த ஓசையுடன் இருப்பதனால் நம்மால் அமர்ந்து கேட்க முடிவதுமில்லை.
இந்த விழாவில் நாதஸ்வரம் மங்கலச் சூழலுக்கான இசையாக முன்வைக்கப்படவில்லை. இங்கே நிகழவிருப்பது ஓர் இசையரங்கு. அவையினர் முன் இரண்டு மணிநேரம் நாதஸ்வர இசை நிகழ்த்தப்படும். ஒலிப்பெருக்கி ஏதுமின்றி அவையினரின் செவிகளுக்கு உகந்த முறையில் அமையும். தூரன் அவர்களின் கீர்த்தனைகளும், இசைவிரிவாக்கமும் நிகழ்த்தப்படும்.
இந்நிகழ்வை இசையறிமுகமும், இசைநிகழ்வு அனுபவமும் இல்லாதவர்கள் ரசிப்பது எப்படி? அதற்குத்தான் வாசிக்கப்படும் பாடல்களை முன்னரே அறிமுகம் செய்கிறோம். இந்தப் பாடல்களை முன்னரே சிலமுறை கேட்டால் நம் செவிக்கு அவை பழகிவிடுகின்றன. கருவியிசையைப் பொறுத்தவரை அந்தப் பாடல் நமக்கு தெரியும் என்றால் கருவியின் இசையொலி பாடலின் சொற்களாக நம் செவிகளுக்குக் கேட்கத் தொடங்கும். அது ஓர் அரிய அனுபவம். நம்மால் மிக எளிதாக இசைக்குள் செல்லமுடியும்.
தமிழகத்தின் முதன்மையடையாளங்களில் ஒன்று நாதஸ்வர இசை. நாதஸ்வரக் கலைஞர்களை அறிந்துவைத்திருப்பது, முக்கியமானவர்களை உரியமுறையில் கௌரவிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த இசையை கேட்கும்படி நம் செவிகளைப் பழக்குவது. நம் வழித்தோன்றல்களுக்கு அறிமுகம் செய்வது. இல்லையேல் இன்னொரு தலைமுறைக்குள் நாம் இந்த மாபெரும் மரபை, நமக்கு மட்டுமே உரிய தனி அழகியலை இழந்துவிடுவோம். இந்நிகழ்வு சில இளம் நண்பர்களுக்காவது செவிகள் திறக்கவேண்டும் என்னும் நோக்கம் கொண்டது.
இசைக்குள் நுழைவது மிக எளிது. அடிப்படையான சில தயாரிப்புகளைச் செய்துவிட்டு செவிகளை ஒப்படைத்து அரங்கில் அமர்ந்திருந்தாலே போதும். நாம் உள்ளே நுழைந்துவிடுவோம். நம் வாழ்நாள் முழுக்க நீளும் ஓர் உலகம் நமக்காக உருவாகத் தொடங்கிவிடும். இசையின் வழியாக நாம் பண்பாட்டின் எல்லா நுண்ணிய பக்கங்களுக்குள்ளும் நம்மையறியாமலேயே நுழைந்துவிடுவோம். நாதஸ்வர இசைதான் நம் ஆலயக்கோபுரங்கள், நம்மைச்சூழ்ந்திருக்கும் மலைகள், நம் நிலம், நம் ஆறுகள்.
நல்வரவு
ஜெ
வணக்கம் ஜெ,
பெரியசாமி தூரன் விருது-2025 விழாவில் நாம் ஒருங்கிணைத்து உள்ள சிறப்பு நாதஸ்வர தவில் இசை நிகழ்ச்சியில் வாசிக்க இருக்கும் கீர்த்தனைகள் விபரம். இசை குழுவினர் குறித்த தகவல்கள் தனி மின்னஞ்சலில் அனுப்பி உள்ளேன்.
– யோகேஸ்வரன் ராமநாதன் (இசை ஒருங்கிணைப்பாளர்)
நிகழ்வுமுறை :
அ): முதல் கீர்த்தனை முதல் கடைசி மங்களம் வாசிப்பது வரை இரண்டு மணி நேரம் கச்சேரி முழுமைக்கும், பெரியசாமி தூரன் அவர்களின் கீர்த்தனைகள் மட்டுமே வாசிக்கப்படும்.
ஆ) : இவ்வருடத்திற்கான பாடல் பட்டியல் கடந்த இருவருடங்களில் இசைக்கப்படாத புது பாடல்களை கொண்டது.
[பார்க்க
இ): கீர்த்தனைகளின் பட்டியல், ராகம், அந்த பாடலுக்கான யூடியூப் லிங்க் மூன்றையும் கீழே தொகுத்து அளித்துள்ளோம்.
ஈ): ராக ஆலாபனை : முதன்மை ராக ஆலாபனை ”தோடி” ராகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும்.
உ): ராகமாலிகை : ராகமாலிகையில் வாசிக்கப்பட இருக்கும் ராகங்கள்: 1.நீலாம்பரி, 2.ரஞ்சனி, 3.சஹானா, 4.சௌராஷ்டகம், 5.மத்யமாவதி
கீர்த்தனைகள்
பட்டியல்
:
1. கீர்த்தனை: மங்கள விநாயகனே. ராகம் : ராமப்ரியா. தாளம் : மிஸ்ர சாபு
[MS Subbulakshmi-Mangala Vinayakane-Ramapriya-misra chapu-Periasamy Thooran]
2. கீர்த்தனை: தில்லையில் ஆடும். ராகம் : இந்தோளம். தாளம் : ஆதி
[Periyasamy Thooran Compositions | Natarajar Songs. 17 நிமிடம் 45 வினாடி முதல்…]
3. கீர்த்தனை: ஸாமகான ப்ரியே. ராகம் : ஆனந்தபைரவி. தாளம் : ஆதி
[sAmagAna priyE – Anandabhairavi – ML Vasanthakumari]
4. கீர்த்தனை: ஆதி சங்கரர் பாதம். ராகம் : பூர்விகல்யாணி. தாளம் : மிஸ்ர சாபு
[TV Sankaranarayanan – Adi shankarar pAdam – pUrvikalyANi – periyasAmy tUran – YouTube]
5. கீர்த்தனை: அப்பா உன்னை மறவேனே. ராகம் : பிலஹரி. தாளம் : ஆதி
6): முதன்மை ராக ஆலாபனை. ராகம் : தோடி.
[தொடர்ந்து ஸ்வர குறைப்பு மற்றும் தனி ஆவர்த்தனம்]
கீர்த்தனை: ஆடும் பெருமானே. தாளம்:ஆதி
(Aadum Perumane || Prema Rangarajan || Periasamy Throoran)
7. கிளிக்கண்ணி[காவடிசிந்து]: தெய்வ குழந்தை
[ தெய்வ குழந்தை பேரை–பெரியசாமி தூரன் பாடல்– Daiva kuzhandai perai – Shri Periyasami Thooran song ]
8. கீர்த்தனை: தொட்டு தொட்டு பேச வறான். ராகம் : பெஹக். தாளம் : ஆதி
[ Thottu Thottu – Anubhavam | Bombay S.Jayashri – Carnatic Vocal | Behag – Adi Classical Song ]
9. கும்மி பாட்டு: சின்ன குழந்தையை
[Samarpanam Album by Periyasami Thooran.12 நிமிடம் 55 வினாடி முதல்…]
10.ராகமாலிகா: 1.நீலாம்பரி, 2.ரஞ்சனி, 3.சஹானா, 4.சௌராஷ்டகம், 5.மத்யமாவதி
Attachments area
Preview YouTube video sAmagAna priyE – Anandabhairavi – ML Vasanthakumari
ஓஷோ: மரபும் மீறலும்-9
என் மகள் சைதன்யா சிறு குழந்தையாக இருந்தபோது எல்லா குழந்தைகளையும் போலவே அவளும் ஒரு ஞானியாக இருந்தாள். அதைப்பற்றி ஜெ.சைதன்யாவின் சிந்தனைமரபு என்று ஒரு நூல் எழுதியிருக்கிறேன். இரண்டு வயதுக்குள்ளாக அவள் சொன்ன மெய்ஞானக் கருத்துகள் அடங்கிய ஒரு நூல் அது. அவள் தொலைக்காட்சியில் டிஸ்கவரி சேனல் பார்த்துக்கொண்டிருந்தாள். அதில் பார்ப்பதற்கு பன்றி போல் ஒரு விலங்கு வந்தது. அவள் என்னிடம், ‘பாத்தியா பன்னி’ என்றாள். ‘ஆமா’ என்றேன். ஆனால் அதற்கு தும்பிக்கை இருந்தது. தனது தும்பிக்கையை கொண்டு எதையோ பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அதை பார்த்துவிட்டு, ‘அது பன்னியில்ல, யானை’ என்றாள். ‘ஆமா பாப்பா’ என்றேன். பின்பு அது பின்னால் திரும்பி ஓசையிட்டது. அதை பார்த்துவிட்டு, ‘அது யானை இல்ல’ என்று சொல்லி சில வினாடிகள் கழித்து ‘அது ரொம்ப கெட்டது’ என்றாள். அடையாளப்படுத்தவே முடியாத ஒரு விலங்கு இருக்குமென்றால் அது கெட்டதாகத்தானே இருக்கும். நமக்கு அது யார் என்று தெரிந்திருக்க வேண்டுமல்லவா ?
இத்தகைய ‘கெட்டது’ என்ற அடையாளப்படுத்தல்கள் எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் மீது எப்போதும் உண்டு. எது வழக்கமில்லாததோ, எது வகுத்துக்கொள்ள முடியாததோ அது கெட்டது. அதற்காகவே ஒழுக்கம் சார்ந்த வகைப்படுத்தல்கள். நித்யா ஓர் உரையில் சொல்கிறார், ”Amorality என்பது சிந்தனையின் ஒரு விதியாக உள்ளது”. அது பாலியல் மட்டுமல்ல, எல்லாவிதமான ஒழுக்கங்களுக்கும் அப்பாற்பட்ட தன்மை. சில சிந்தனையாளர்கள் தங்களை ஒழுக்கவாதிகள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது ஒழுக்க குற்றச்சாட்டுகள்தான் முதலில் வரும். எனக்கு தெரிந்து உலக சிந்தனையாளர்களில் மிகத்தீவிரமாக ஒழுக்கத்தை முன்வைத்தவர்கள் டால்ஸ்டாயும் காந்தியும்தான். ஆனால் அவர்களுடைய வாழ்நாளில் அவர்கள் மிகப்பெரிய ஒழுக்க குற்றச்சாட்டுகளை சந்திக்க நேர்ந்தது. அவர்களைப் பற்றிப் பேச அவர்கள் ஒழுக்கவாதிகள் என எழுதி, அதை கோடிட்டு அடித்துவிட்டுத்தான் மேலே செல்லவேண்டும்.
ஏன் வகுத்துக்கொள்ளவேண்டும்?
ஓஷோவை வரையறுக்கும்போது அடுத்த கேள்வி எழுகிறது. அதை ஒரு முன் நிபந்தனையாக சொல்லிவிட்டுதான் மேற்கொண்டு பேசவேண்டும். ஓஷோ போன்ற ஒருவரை தத்துவப்படுத்தத்தான் வேண்டுமா என்பதே அந்த கேள்வி. தத்துவத்தில் அடிக்கோடிட்டு சொல்லவேண்டிய சில விஷயங்கள் உண்டு. அதுபோல வெட்டிவிட்டு பேசவேண்டிய சில விஷயங்களும் உண்டு. கோவிட் கிருமியை பலமிழக்கச்செய்து தடுப்பு மருந்தாக பயன்படுத்துவதைப்போல. தத்துவக்கல்வி உடையவர்கள் இவ்விஷயத்தை நினைவில் கொள்ளவேண்டும். தத்துவ குருகுலங்களில் இந்த விஷயம் பேசப்படும். வெளிமேடைகளில் பெரும்பாலும் ஓங்கிச்சொல்லும் விஷயங்கள்தான் பேசப்படும்.
ஓஷோவை இன்னின்ன தத்துவ சிந்தனைகள் வழியாக அணுகமுடியும், அவருக்கு இன்னின்ன தத்துவ பின்னணி இருக்கிறது, அவரை இன்னின்ன தத்துவ முறைகளுடன் உரையாட வைக்கமுடியும் என்று இங்கு சொல்லும்போதே அவரை தத்துவத்திற்கு வெளியே வைத்தும் பார்க்கவேண்டும், தத்துவத்துடன் அவரை நிறுத்திவிடக்கூடாது என்ற நிபந்தனையையும் அதனுடன் சேர்த்துக்கொள்வேன். அதுதான் ரத்துசெய்து பயன்படுத்துவது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் ஓஷோ வாழ்நாள் முழுக்க இத்தகைய தத்துவப்படுத்தல்களுக்கு எதிராக இருந்தவர் என்பதாலேயே. அத்தகையவரையே நாம் மீண்டும் தத்துவப்படுத்தக் கூடாது.
இருபதாம் நூற்றாண்டின் இந்தியாவின் மிகப்பெரிய சிலைஉடைப்பாளர் (Iconoclast) ஓஷோ தான். ஆனால் அவருக்குத்தான் நாம் இன்று அதிகமாக படங்களை வைத்திருக்கிறோம். ஏனெனில் அத்தகையவர்களுக்குத்தான் நாம் முதலில் சிலையே வைப்போம். நாராயணகுரு இலங்கைக்கு சென்றுவந்த மாணவர்களிடம் கேட்கிறார், ‘அங்கு புத்தருக்கு சிலைகள் உள்ளனவா’ என்று. ‘புத்தருக்குத்தான் சிலைகள் உள்ளன. ஏராளமான மிகப்பெரிய சிலைகள் அவருக்குத்தான் உள்ளன’ என்றனர் மாணவர்கள். நாராயணகுரு ‘அது அப்படித்தான் வரும். ஏனெனில் அவர்தான் வரலாற்றில் முதன்முறையாக சிலை வைக்கக்கூடாது என்று சொன்னவர்’ என்றார். ஓஷோவுக்கும் நாம் இன்று அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். ஆகவேதான் தத்துவப்படுத்தும் போதே அதை ரத்துசெய்யவும் வேண்டும் என்கிறேன்.
ஓஷோ பாணியில் ஒரு நகைச்சுவை சொல்லலாம். நான் காசியில் சாமியாராக திரிந்த காலத்தில் என்னுடன் கர்நாடகாவை சேர்ந்த இன்னொருவர் இருந்தார். அவர் தமிழ் பேசுவார். அவர் என்னிடம் ஓடிவந்து ‘மலையாளத்து சாமீ, வாங்க. ஹடயோகி ஒருவன் வந்திருக்கிறான். அனைவரும் சென்று பார்க்கிறார்கள். நாமும் போய் பார்க்கலாம்’ என்றார். ஏன் என்று கேட்டேன். ‘அவன் ஆண்குறியில் மூன்று செங்கல்களை கட்டி தொங்கவிட்டிருக்கிறான்’ என்றார். நான் சொன்னேன் ‘அந்த உறுப்புக்கு படைப்பூக்கம் மிக்க, மகிழ்ச்சியான பல வேலைகள் உள்ளன. செங்கலை கட்டி தொங்கவிடுவதற்காக அது உருவாக்கப்படவில்லை’.
ஓஷோவின் மெய்ஞானம் என்பது இத்தகைய தத்துவச் செங்கல்களை கட்டி தொங்கவிடுவது அல்ல. அது கவிதை மாதிரி. கவிதையை, இலக்கியத்தை ஓரளவுக்குமேல் தத்துவப்படுத்தினால், அல்லது ஓரளவுக்குமேல் கோட்பாடாக்கினால், அது அதை கொன்று பிணக்கூறாய்வு செய்வதைப்போல ஆகிவிடும். நான் இலக்கிய விமர்சனம் எழுதும்போது முதலிலேயே அந்த விமர்சனத்தை மேலே கோடுபோட்டு ரத்து செய்துவிட்டுத்தான் எழுதுவேன். ஒரு கதையை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துபார்க்கும்போது, ‘இதை ஆராயலாம். ஆனால் அதற்கு அப்பால்தான் கவிதை இருக்கும். இது அறுதியானது அல்ல’ என்று சொல்லி அதை ரத்து செய்துதான் பயன்படுத்துகிறேன். ஓஷோவை நான் தத்துவார்த்தமாக வகுத்துவிட்டதாக நீங்கள் எண்ணாமல் இருக்கும்பொருட்டே இதை முன்னெச்சரிக்கையாக சொல்கிறேன்.
எப்படி வகுத்துக்கொள்ளவேண்டும்?
ஓஷோவை நாம் வகுத்துக்கொள்ளும்போது இந்திய மரபில் அவரை எங்கு பொருத்துவது என்பது முக்கியமான கேள்வி. நாம் மீண்டும் மீண்டும் அவரை மேற்கோள்களாகவே பேசிக்கொண்டிருக்கிறோம். இந்திய மரபு என்பது எப்படிப்பார்த்தாலும் ஐயாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளாக நமக்கு எழுத்துவடிவிலான தத்துவ சிந்தனைகள் கையில் கிடைக்கின்றன. இந்த தத்துவ சிந்தனைகளின் எந்தெந்த முனைகள் ஓஷோவை வந்து தொடும், எவையெவை தொடாது ? நீண்ட பருந்து பார்வையில் இத்தகைய சித்திரத்தை அளிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்திய சிந்தனை முறைமைகளில் எதனெதனுடன் அவருக்கு உடன்பாடு இருக்கும், எதனெதனுடன் அவருக்கு முரண்பாடு இருக்கும்? எப்படி அவரை இந்தியாவின் பிரம்மாண்டமான மரபில் வைத்து புரிந்துகொள்வது? மறுப்பதென்றால் எப்படி மறுப்பது? நான் இந்த உரையில் மறுக்கத்தான் போகிறேன். ஆனால் எப்படி மறுக்கிறேன் என்பதை சொல்ல இத்தனையையும் சொல்லவேண்டியுள்ளது.
ஏன் அவரை அப்படிச் சிந்தனைமரபில் பொருத்திப்பார்க்கவேண்டும்? என்னைப் பொறுத்தவரை சிந்தனையில் முற்றிலும் புதியதாக ஒன்று நிகழ முடியாது. எல்லா சிந்தனைகளும் வளர்ச்சிகளும் தொடர்ச்சிகளும்தான். ஓஷோ முளைத்த அந்த வேரைத் தெரிந்துகொள்வது ஓஷோவை ஆழ்ந்து தெரிந்துகொள்வதுதான். அத்துடன் ஓஷோ ஏன் அந்த ஏற்பை அடைந்தார், ஏன் இன்றும் ஏற்கப்படுகிறார், ஏன் அவர் மறுக்கப்பட்டார் என்று புரிந்துகொள்ளவும் அவரைச் சிந்தனை மரபில் பொருத்திப் பார்ப்பது அவசியமாகிறது.
ஒரு வசதிக்காக அவரை ரிஷி என்று சொல்லலாம். அது மிக பொதுவான ஒரு சொல். மகாபாரதத்திலோ புராணத் தொகுதிகளிலோ ரிஷி என்ற சொல் மிக நெகிழ்வான பொருளிலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்க்கலாம். துறவி என்ற பொருளில் அல்ல. மணமாகி குடும்பமாக இருக்கும் ரிஷிகள் இருக்கிறார்கள். பெரும்பாலானோருக்கு குழந்தைகள் இருக்கின்றன. பல ரிஷிகளுக்கு பல்வேறு பாலுறவுகளும் இருந்திருக்கின்றன. பல ரிஷிகளில் இருந்து மன்னர் குலங்கள் உருவாகியிருக்கின்றன. அதுபோல துறவு பூண்ட ரிஷிகளும் உள்ளனர். இவர்களை பற்றிய கதைகளைத்தான் நாம் கேட்டு வளர்ந்திருக்கிறோம்.துர்வாசர் என்று ஒரு ரிஷி இருக்கிறார். கோபம்தான் அவரது அடையாளமாக சொல்லப்படுகிறது. அவருக்கு பிறந்த குழந்தைகள் உள்ளன. அவை எதுவும் அவர் மணவுறவில் பெற்றுக்கொண்ட குழந்தைகள் அல்ல. குந்திக்கு பிறந்த கர்ணனைப்போல. நமக்கு ரிஷி என்பவர் அறிஞரோ யோகியோ கவிஞரோ எவராகவேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் சாதாரணமானவர் அல்ல. அவ்வளவுதான்.
உதாரணமாக தீர்க்கதமஸ் என்பவருடைய கதை உள்ளது. அவருடைய கதை விந்தையானது. அசுரகுலத்தின் ரிஷிகளில் ஒருவர் பிருஹஸ்பதி. அவர் நாஸ்திக ஞானிகளில் ஒருவர். அவருடைய சகோதரர் உதத்யர். அந்த உதத்யருடைய மனைவி மமதா. உதத்யரால் மமதா கருவுற்றிருந்தார். அந்தவேளையில் அவளுடன் உறவுகொள்கிறார் பிருஹஸ்பதி. உள்ளே கருவடிவில் இருக்கும் தீர்க்கதமஸ் தனது காலால் பிருஹஸ்பதியின் விந்துவை தடுத்து வெளியே தள்ளுகிறான். எனவே பிருஹஸ்பதி கோபித்து ‘நீ குருடனாவாய்’ என்று சபித்தார். பிறவியிலேயே குருடாக தீர்க்கதமஸ் வெளியே வருகிறார். குருடாக இருந்ததாலேயே அதிக ஒலிக்கூர்மையுடன் இருந்ததால் மிக இளம் வயதிலேயே வேதங்களை கற்றுத்தேர்ந்து வேதஞானம் உடையவராக ஆனார்.
அதேசமயம் தீர்க்கதமஸ் காமமே வடிவானவராக இருக்கிறார். அவருக்கு ஒரு பெண்ணை மணம்செய்து வைக்கிறார்கள். ஆனால் அவர் அங்கிருக்கும் அனைத்து பெண்களிடமும் பிரகாச மைதுனம் என்ற வழிமுறையில் ஒளிவடிவாக சென்று உறவுகொள்கிறார். இது தெரிந்தவுடன் அவருடைய மனைவி அவரை ஒரு படகில் வைத்து கங்கையில் விட்டுவிடுகிறாள். கங்கை வழியாக சென்றுகொண்டிருந்த அவரை அசுர மன்னனான பலி என்பவன் காப்பாற்றுகிறான். பலியின் மனைவி சுதேஷ்ணையுடன் அவர் உறவுகொள்கிறார். அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் பிறக்கிறார்கள். அவர்களில் இருந்து அங்கம், வங்கம், கலிங்கம், சுங்கம், புண்ட்ரம் என்ற ஐந்து நாடுகள் உண்டாகின்றன. அந்நாடுகளின் மன்னர் குடி அவரில் இருந்து பிறப்பதால் அவர் ஒரு பிரஜாபதி.
இப்படியொரு ரிஷி நமக்கு சொல்லப்பட்டிருக்கிறார். எனக்கு ஆறு அல்லது ஏழு வயதாக இருக்கும்போது இந்தக்கதையை என் பாட்டியிடம் இருந்து கேட்டிருக்கிறேன். மகாபாரதத்தை வீடுகளிலும் கோயில்களிலும் படிக்கிறார்கள். அங்கும் இந்த கதையை கேட்டிருக்கிறேன். தமிழகத்தில் பாரதம் படிப்பது மிகக்குறைவு. ஆனால் வடக்கில் அதிகம் படிக்கிறார்கள். அங்கு பாராயணம் என்பது அவர்கள் வாழ்வின் ஒரு பகுதி. இக்கதைகளை படித்து வந்தவருக்கு ஓஷோ எப்படி அந்நியமானவராக தெரிவார் ? அவர் இன்னொரு வகையான தீர்க்கதமஸ் போல, அவ்வளவுதானே. இந்த நீண்ட மரபில் அவர் எங்கும் அந்நியமானவராகவோ தவறானவராகவோ தென்படவில்லை. அவரை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவ்வாறு புரிந்துகொள்ள முடியாதவை எவ்வளவோ உள்ளன.
மீண்டும் இங்கு ஒரு நம்பூதிரி நகைச்சுவை சொல்லலாம். இரண்டு நம்பூதிரிகள் தங்களுக்குள் போட்டி வைத்துக்கொண்டனர். ஒருவர் கேள்வி கேட்பார். அதற்கு பதில் தெரியவில்லை என்றால் மற்றொருவர் அவருக்கு ஒருபணம் தரவேண்டும் என்பது போட்டி. இருவருக்குமே ஒன்றும் தெரியாது. இருவருமே ஒருவருக்கொருவர் பணம் கொடுத்துக்கொள்கின்றனர். அப்போது ஒருவர் சொன்னார், ‘எனக்கு தெரியாதது எல்லாவற்றுக்கும் நான் உனக்கு பணம் தரவேண்டும் என்றால் இந்த உலகத்தையே தரவேண்டியிருக்குமே’ என்று.
ஒரு சாமானியனுக்கு தனக்கு தெரிந்ததை கொண்டு மொத்த உலகையும் மதிப்பிடவேண்டிய கட்டாயம் இல்லை. ‘எனக்கு தெரியாதது இருக்கும்ங்க. எனக்கு ரிஷிகளை பற்றி, துறவிகளை பற்றி தெரியாது. மாற்று ஆன்மிகம் பேசுபவர்களின் ஒழுக்கம் பற்றி தெரியாது. தெரியாதவொன்று இருந்துவிட்டு போகட்டும். அதுபற்றி எனக்கு கருத்து கிடையாது’ என்பார்கள். ஆனால் நாளிதழ்கள் படிக்கக்கூடிய நடுத்தரவகை ஆட்களிடம் எந்தவொன்றை பற்றி கேட்டாலும் கருத்து சொல்வார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எப்படி பட்ஜெட் போடவேண்டும் என்பது பற்றி கருத்து சொல்வார். நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்டால் பத்தாவது ஃபெயில் என்று சொல்ல தயங்கமாட்டார். ஆனால் படிப்பற்ற ஒரு சாமானியனிடம் கேட்டால் ‘நமக்கு அதெல்லாம் தெரியிறதில்லீங்க. நமக்கு தெரிந்ததைத்தான் சொல்வேன்’ என்பார். அந்த சாமானியர்தான் ஓஷோவை ஏற்றுக்கொண்டவராக இங்கே இருந்தார். அவரை இங்கே இருந்த எத்தனையோ வகை ரிஷிகளில் ஒருவர் என்று முதலில் எடுத்துக்கொள்ளலாம்.
மிக எளிமையாக அவரை இப்படி வகுத்துக்கொண்டு மேலே செல்லலாம். வழிபாடும், நிராகரிப்பும் இல்லாமல் அவரை அணுக அது உதவும். எளிய ஒழுக்கவியல் அதிர்ச்சிகள், அறவியல் எடைபோடல்கள் இல்லாமல் அவரை புரிந்துகொள்ள இதுவே அடிப்படையான வழிமுறை.
(மேலும்)
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
அ.கி. கோபாலன்
பதிப்பாசிரியர், இதழியலாளர், நாடகக்கலைஞர். காதம்பரி மாத இதழை அ.கி.ஜெயராமனுடன் இணைந்து நடத்தினார். ஜோதி புக் ஸ்டால், தமிழ்ச்சுடர் நிலையம் பதிப்பகம் ஆகியவற்றின் நிறுவனர். தமிழ்ச்சுடர் நிலையம் பதிப்பகத்தின் வழியாக வெளியான மொழிபெயர்ப்புகள் முக்கியமானவை.
கவிஞனுடன்… வேலாயுதம் பெரியசாமி
ஒவ்வொரு இலக்கிய வாசகனும் தனக்கான கவிஞனை கண்டடையும் தருணம் ஒன்று நிகழும். ஒவ்வொரு வாசகனும் தனது வாழ்க்கை பார்வை, கேள்விகளை ஒட்டி ஒரு உடைப்பு போல அந்த கவிஞனின் கவிதை வழியாக அத்தருணத்தை அடைவான். அப்படி தேவதேவனை நான் என்னுடைய கவியாக உணர்ந்த தருணம் இந்த கவிதை வழியாக நிகழ்ந்தது.
அந்திவரை வாழப்போகும்
பூவின் மடியில்
அந்த காலைப்பொழுதிலேயே
மடிந்துவிடப்போகும்
பனித்துளிதான்
எத்தனை அழகு!
தீவிரமான அழுத்தமும், அலைக்கழிதலும் இருந்த காலகட்டத்தில் காடு நாவல் என்னை அதிலிருந்து விடுவித்தது. அதற்கு பிறகு எதேச்சையாகவே இந்த கவிதையை படித்தேன். அந்த நாவலை படித்து முடித்ததும் அடைந்த மன எழுச்சியை இந்த கவிதை வழியாகவும் அடைந்தேன். என்னுடைய அழுத்தத்தையும், அலைக்கழிதலையும் சிறிதாக்கி, அதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்றாக்கியது இந்த கவிதை. ‘ரிஷி அல்லாதவன் கவியும்’ அல்ல என்று ஏன் சொல்லப்பட்டுள்ளது என்பது புரிந்தது. அப்படித்தான் தேவதேவனை என்னுடய கவி என கண்டுகொண்டேன்.
அதற்கு பிறகு அவரை பல முறை சந்தித்துள்ளேன். ஆனால் அருகில் இருப்பதற்கே தயக்கமாக இருக்கும். அவரை பார்க்கும் போதெல்லாம் நீரின் மெல்லிய நலுங்கல் நினைவுக்கு வரும். அவர் ஒரு புத்த பிக்ஷூ என்றும் தோன்றும். தன்னறம் வெளியிட்ட அவரது கவிதை புத்தக வெளியீட்டில் பேச கீழப்பூங்குயில்குடி சமண தளத்திற்கு வந்திறங்கினார். ஊர் பெயரை கேட்டார். அப்போ மேலப்பூங்குயில்குடினு ஒரு ஊரும் பக்கத்துலயே இருக்க வேண்டுமே என்றார். தமிழர்களின் வாழ்க்கை இயற்கை மட்டுமே சார்ந்து தான் இருந்திருக்கிறது, இப்போ தான் மாறிவிட்டது என்றார். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கூட்டிச் சென்றால் இந்த சிலைகளெல்லாம் எதற்கு? தேவையேயில்லை என்றார். காவிய முகாம் ‘இலியட்’ அமர்வில் போர்களெல்லாம் ‘Waste of energy’ என்றார். நீலி இதழில் வெளி வந்த புதிய ஏற்பாடு கவிதையில் பெண் பால் மட்டுமே உலகில் இருக்க வேண்டும் என்கிறார்.
நீங்கள் ஒருமுறை சொன்னீர்கள் ‘Every poet has a philosopher. Devadevan’s philosopher is Thoreau’ என்று. அவரை அங்கிருந்து தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனாலும் அவருடைய அருகாமையை மனம் பயந்தது.
கவிஞர் வேணு வேட்ராயனுடன் இருக்கும் வாய்ப்பு ‘இஸ்லாமிய தத்துவ முகாம்’-ல் கலந்து கொண்ட போது ஏற்பட்டது. நிஷா மன்சூர் அவர்கள் வர சிறது தாமதமானதால் வேணு கவிதை குறித்து சிறிய உரையாற்றினார். அப்போதே He is also my poet என்று தோன்றியது. சூஃபி–களின் பாடல்களும், இசையும், தத்துவமும் வேணுவின் இருப்பும், கவிதை குறித்த உரையாடலும் அந்த மூன்று நாட்களை ஆழமான மனப்பதிவாக்கியது. அதற்கு பிறகும் கவிதை பரிமாற்றம், விவாதம் என வேணுவுடனான தொடர்பு தொடர்ந்தது. அவரது ‘அலகில் அலகு’ கவிதை தொகுப்பை வாசித்தேன். இவரும் என்னுடைய கவி தான் என்று உறுதியானது. காந்தி கிராமில் நடத்தப்பட்ட சர்வதோயா நாள் விழாவில் குக்கூ உங்களுக்கு அளித்த விருது நிகழ்வில் நானும், வேணுவும் கலந்து கொண்டோம். அப்போது அங்கு பௌத்த பிக்குகளின் அமைதிக்கான ஊர்வலம் தொடங்கியது. அதில் ஒரு தாளக்கருவியால் ஒரே போன்ற ஓசையை பிக்குகள் ஏழுப்பினர். நான் அந்த கருவியையே பார்த்து கொண்டிருந்தேன். வேணு என்னை அழைத்து, கையால் தட்டி அதன் தாள சப்தத்தை எழுப்பி கவனிக்க சொன்னார். நான் அங்கே ஊன்றிப் பார்த்தது பொருள் கருவியை. ஆனால் கவிஞர் அருவ சத்தத்தை என்னிடம் கவனிக்க சொன்னார். பின்பு மதிய உணவு சாப்பிடுகையில் பரிமாறிய பெண்ணிடம் பிரியாணி இல்லையா என்று விளையாட்டாக கேட்டார், அந்த பெண் புன்சிரிப்புடன் ஏதோ பதில் சொன்னார். எதிரே இருந்த காந்தியர் அதை கேட்டு கொந்தளிப்புடனும், எரிச்சலுடனும் கடுமையாக பேசினார். வேணு வெளியே வந்து வயிறு குழுங்க சிரித்துவிட்டு ‘Even if it is a Gandhian Ideology, Ideology still makes a man rigid’ என்றார். அவர் ‘தவளை’ என்ற கவிதையை எழுத உந்திய ஒரு பயங்கரமான அரசியல் நிகழ்வு. ஆனால் அந்த கவிதை வெளிப்பட்டிருத்த விதம் என்னை ஆச்சரியபடுத்தியது. அது கவிதை, கவிஞர்கள் குறித்து தீவிரமாக யோசிக்க வைத்தது.
தேவதேவனின் ஒரு வரி ‘நீ கவிதை எழுத வேண்டும் என்றால், முதலில் கவிஞனாக இரு’ அந்த வரியின் ஆழத்தை வேணுவே எனக்கு உணர்த்தினார். ‘Being poet is a state’- கவிதை எழுதுவது வேறு, கவிஞனாகவே இருத்தல் வேறு என்று அப்போது தான் புரிந்தது. கவிஞனுடன் இருத்தல் என்பதை ஒரு இலக்கிய வாசகன் தவரவே விடக் கூடாது என்பதை உணர்ந்திருந்தேன்.
இந்நிலையில் வேணு ‘தேவதேனுடன் இருத்தல்’ என்ற ஒரு நாள் நிகழ்வை கடந்த 6-ம் தேதி பாலாஜியின் குழந்தைகள் பள்ளி, ஓசூரில் ஒருங்கினைத்தார். அதில் இருபது பேர் கலந்து கொண்டோம். தேவதேவன் எழுதிய ‘கவிதையின் மதம்’ கட்டுரை தொகுப்பையும், கவிதைகளையும் கட்டாயமாக படித்து வர அறிவுறுத்தப் பட்டிருந்தோம். காலை 9 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது. தேவதேவன் உற்சாகமாக இருந்தார். கவிதையின் மதம் கட்டுரைகளிலிருந்து கேள்விகளை கேட்கலாம் என்றார். கேள்விகளுக்கு ஆழமான பதில்களை அளித்தார். இடையிடையே குழந்தைகள் வழி தவறி விழிப்பது போல நின்றுவிடுவார். பல வேளைகளில் அப்படியெல்லாமா எழுதியிருக்கேன், எனக்கே ஞாபகமில்லையே என்று சிரிக்க வைத்தார். தேவதேவன் உள்ளுணர்வாலேயே இயங்குகிறவர், அவருடைய தர்க்கத்தின் எல்லை சிறியது. அதனாலேயே அவரது பேச்சில் சில சமயங்களில் தொடர்ச்சி இல்லை, இல்லாதது போல் தோன்றச் செய்தது. ஆனால் அதை நம் தர்க்க மனம் நிராகரிக்க விடாமல் ஊன்றி கவனித்து தொடர்ச்சியை நாமே உருவாக்கினால் அவை அபாரமான ஆழமும், உள்ளொளியும் கொண்டவை என்பது புரிந்தது. இது சாத்தியப்பட்டது அந்த நிகழ்வு அவருக்காக, அவரையும், அவருடைய கவிதையையும் அறிய, உணர விரும்பும் பங்கேற்பாளர்களால் மட்டுமே ஆனது என்பதால் தான் என்று தோன்றுகிறது.
பெரும்பாலும் நானற்ற தன்மையை, இன்மையை, இயற்கை என்ற தூய ஆற்றலை, இந்த கணத்தில் முழுமையாக இருப்பது குறித்தே பேசினார். அடையாளம் என்பதே வன்முறை என்றார். கவிதை என்பது கலை அல்ல. இந்த உலகத்தில் உள்ள அனைத்து உன்னதங்களுமே கவிதையாக இருக்கும் போது கவிதை எப்படி கலை மட்டும் ஆகும். யோகியரையும், ஞானியரையும் நிராகரித்தார். பண்பாடு என்று நம் ரத்தத்தில் உரைந்திருக்கும் தொடர் பதிவுகளை நீக்கி எந்த பிடியிலும் சிக்காமல் இங்கு திகழ வேண்டும் என்றார். பண்பாடு, மதங்கள், தேசங்கள் என மனிதன் உருவாக்கிய அனைத்தும் அழிவையே உருவாக்கியுள்ளன அதனால் அனைத்தையுமே கைவிட வேண்டிய நிலையில் இருக்கிறோம். கவிதை ஒரு மதமாகும் போதே இந்த உலகம் உன்னதமாகும் என்றார்.
அனைத்துமே நம்மை சீண்டுபவை, நம்பமுடியாதவை. ஆனால் அவை இயற்கை மீதும், மானுடம் மீதும் அந்த கவிஞன் கொண்டிருக்கும் அளப்பரிய அன்பினால் கோடிட்டு காட்டப்படும்போது அவை மகத்தானவை ஆகிறது. அவரது தாள் பனிந்து, சிறமேற்று எடுத்து செல்லப் பட வேண்டிய கனவாக நம்மில் மாற்றப்படுகிறது. வேதக் கவிதைகளிலிருந்தே கலாச்சாரமும், பண்பாடும், மதங்களும் தோண்றியது. ஆதியில் வார்த்தை இருந்தது. கவிதைகளே மானுட பண்பாட்டின் அடிப்படை எனும்போது, கவிஞனே அதன் கர்த்தாவாகிறான். அவனது கனவான அடையாளங்கள், முரண்கள், தத்துவங்கள், மதங்கள், தேசங்கள், சுரண்டல்கள், போர்கள் அற்ற உலகம் ‘கவிதையின் மதத்தால்’ சாத்தியம் என்றால் அதில் நாமும் இனைய வேண்டியதுதான். உங்கள் பார்வைக்கு நேர் எதிரான பார்வைகள் பல இருந்தன.
வெண்முரசில் ஜனமேஜயன் ஆனையிட்டு வைசம்பாயனர் நடத்தும் ‘சர்ப்பசத்ர’ வேள்வியை போன்றது கவி தேவதேவனின் கனவு. இப்புவியில் காணக்கூடிய மகத்தான கனவு அதுவே. அந்த யாகத்திற்கு அழைத்து வரப்படும் காவிகர்த்தனான வியாசர் நீங்கள். இந்த எதிர் பார்வைகள் கவிக்கும்–காவியகர்த்தனுக்குமான பார்வைகள். அந்த கவியும்–காவியகர்த்தனும் அதை அறிவார்கள். தர்க்கமற்ற தூய உள்ளுணர்விலிருந்து எழுந்த வரும் கனவும், அனைத்து தர்க்கங்களை கொண்டு மேலெலும் உள்ளுணர்வும் என அவை எப்போதும் இங்கு இருப்பவை. ஒன்றை ஒன்று பின்னித் தழுவும் பாம்புகள். அதை அறியும் தோறும் ஆழம் கொள்ளும் நம் சித்தம்.
இப்போது ஒன்றை உணர்கிறேன். நாராயண குருகுலத்திற்கு சுவாமி வியாச பிரசாத் அவர்களை சந்திக்க அடிக்கடி செல்கிறேன். அவருடன் அமரும் சில வேளைகளில் நான் அபரிவிதமான உணர்வையும், அதே வேளையில் அற்ப்பமான புழுவாகவும் உணர்வதுண்டு. துறவிகள் மலை போன்றவர்கள். நாம் சிறு புல். நான் அந்த உணர்வை அடையவே திரும்ப திரும்ப அவரிடம் செல்கிறேன் என்று தோன்றுகிறது.
இந்த நிகழ்வில் கவி தேவதேவனுடைய இருப்பு என்னை அபரிவிதமாகவும், அதே வேளையில் அற்பமாகவும் உணரச் செய்தது.
துறவிகள் மலையில் மலையைபோன்ற தனிமையில் இருப்பவர்கள். அந்த தனிமையில் நமக்கு பங்கோ, இடமோ துளி கூட கிடையாது. ஆனால் கவிஞர்கள் நதிபோல மண்ணிலேயே நம்முடன் இருப்பவர்கள். நதிகளில் நீந்தலாம், விளையாடலாம், ஆனந்திக்கலாம். கவிகள் நம்முடனும் இருப்பார்கள், தனிமையிலும் இருப்பார்கள்.
மண்ணில் ஞானம் தேடி அலையும் ஒருவனுக்கு தத்துவவாதிகள், பேரறிஞர்கள், அறிவியலாளர்களின் அருகமைதலைவிட ரிஷி என்றான கவியுடன் உடனிருத்தலே மெய்மை பயக்கும் என்றெண்ணுகிறேன்.
தேவதேவன் அருகில் நான் என்ற ஆணவத்தையும், சதா அலைகழிக்கும் காம, க்ரோத, மோகத்தையும், அறிவின் சுமையையும் கழட்டாமல் அமையவே முடியாது. அவ்வாறு அமையும்போது நாம் அடைவதென்பது
“ஞானத்தா லாய வுடம்பின் பயனன்றே
மோனத்தா லாய வுணர்வு”
பணிவன்புடன ,
வேலாயுதம் பெரியசாமி
இலக்கியத்தைச் செயலாக்குதல்

Readforte watsup தளத்தில் இல் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு புத்தகத்தை பற்றி ஒரு மணி நேரம் பேசுவேன். சுதந்திர தாகம், எனது இந்தியா, கேள்வி குறி இப்படி. அந்த வகையில் ஜூலை மாதம் 5ஆம் தேதி தங்களின் ஆக சிறந்த படைப்பான வெண்முரசு தொகுதியில் ஒன்றான சொல்வளர்காடு என்ற புத்தகத்தை பத்தி பேசலாம் என்று நினைக்கிறன்.
செயலாக்குதல்
I visited Egypt last year and saw the magnificent temples there. While discussing the temples of Egypt, my guide mentioned that there are many temples in India still in use for worship, and he expressed a desire to visit those temples to observe the rituals himself.
About temples…August 3, 2025
பீத்தோவன், மேதையின் தனிமை
பீதோவன் வியன்னாவில் வாழ்ந்த இல்லத்திற்குச் சென்றிருந்தோம். அங்கே அவர் எழுதிய ஒரு கடிதம் இருந்தது. தன்னை மானுடவிரோதி என்றும் எரிச்சலூட்டுபவர் என்றும் சொல்லவேண்டாம் என்னும் மன்றாட்டு கொண்ட அக்கடிதம் ஒரு மானுட ஆவணம். அதில் அவருடைய கலைமேல் அன்றைய சமூகத்தின் பொதுப்புத்தி வைத்த விமர்சனங்களை எண்ணி வருந்துகிறார். தன் கலையை முழுமையாக வெளிப்படுத்தாமல் சாகக்கூடாது என்பதனாலேயே உயிர்வாழ்வதாகச் சொல்கிறார்.
பீதோவன் அல்லத்து மேலையிசை குறித்து என் அறிவு எல்லைக்குட்பட்டது. நான் பள்ளியில் படிக்கும்போதுதான் அவர் இசைகேட்கமுடியாமலாகி, தன் கைத்தடியை பல்லால் கடித்து இசையைக் கேட்டார் என்னும் செய்தியை ஆசிரியர் சொன்னபோது அவர் பெயரை கேட்டறிந்தேன். அதன்பின் அவரைப் பற்றி வாசித்து அறிந்திருக்கிறேனே ஒழிய இசையை நுணுக்கமாகக் கேட்டதில்லை. ஓர் அகவைக்கு மேல் மேலையிசை போன்ற ஒன்றுக்குள் நுழைவது கடினம், அதற்கான பொறுமையும் உள்ளமும் அமைவதில்லை. உரிய காலத்தில் உள்ளே நுழைபவர்கள் நல்லூழ் கொண்டவர்கள்.
சைதன்யா மேலையிசை, மேலை இலக்கியம், மேலைத் தத்துவம் மூன்றிலும் வாசிப்பு கொண்டவள் என்னும் முறையில் அவளுடைய கருத்தைக் கேட்டேன். இந்த தலைமுறையினர் பொதுவாக பாப் இசை மட்டும்தான் கேட்கிறார்கள் என்ற எண்ணம் பரவலாக உண்டு. அதை என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். என் கண்ணுக்குப் படுவதும் பாப் இசைதான். ஐரோப்பியச் செவ்வியல் இசையை, இசைக்கலைஞர் அல்லாத ஒருவர், வெறும் ரசிகரான ஒருவர் எப்படி அணுகுகிறார் என்று அறிவதே நோக்கம்.
அந்தத் தூக்கம்
ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நான் காந்தியின் சத்தியசோதனை நூலை வாசித்தேன். முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நடத்திய ஒரு பேச்சுப்போட்டியில் வென்று பரிசாக அதைப் பெற்றேன். பெரும் கொந்தளிப்புடன் நான் வாசித்த அந்நூல் இன்று வரை என்னை மிகத்தீவிரமாகப் பாதித்திருப்பதை நான் வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் உணர்ந்துகொண்டே இருக்கிறேன்.
அவ்வாறு நான் காந்தியிடமிருந்து பெற்றுக்கொண்டவற்றில் ஒன்று, என் உடலை தொடர்ச்சியாக அவதானிப்பது. உடல்நலமே நம் வாழ்க்கையின் எல்லா செயல்களுக்கும் அடிப்படையானது என்பது காந்தி திரும்பத் திரும்பச் சொல்வது. சாவை அல்ல, படுத்துவிடுவதை அல்ல, உடல்நிலை அளிக்கும் சோர்வாலோ சலிப்பாலோ நம் செயல்களை முழுவீச்சுடன் செய்து நிறைவடைய முடியாமல் ஆவதையே காந்தி அஞ்சுகிறார். எனக்கு அந்த அச்சத்தை அவர் அளித்தார்.
ஆகவே என் உணவு, தூக்கம், கழிவகற்றல் ஆகியவற்றைப் பற்றிய தொடர்கவனமும் அவை சார்ந்த அவதானிப்புகளும் எனக்கு உண்டு. அவை சார்ந்த மருத்துவ- அறிவியல் தகவல்களை தெரிந்துகொள்வேன். ஆனால் பலர் இன்று செய்வதுபோல பதற்றத்தை வளர்த்துக்கொள்வதற்காக உடல்நலச் செய்திகளை மிகையான ஆர்வத்துடன் பயில்வதில்லை. (பலர் என்று இங்கே குறிப்பிடுவது அருண்மொழியை அல்ல)
உண்மையில் உடல்நலச் செய்திகளை தெரிந்துகொள்வது எளிது. கடைப்பிடிப்பதே கடினம். நான் எனக்கான நெறிகளை முழுமையாகவே கடைப்பிடிக்க முயல்வேன். ஆகவே என் எடையை பெரும்பாலும் நிலையாக வைத்திருக்கிறேன். உணவுப்பழக்கங்களில் சஞ்சலங்கள் இல்லை. தூக்கம் உட்பட எல்லா ஒழுங்குகளும் எனக்கு முக்கியம். என் மூளை எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதே உடல்நலம் சார்ந்த என்னுடைய அக்கறைகள் அனைத்துக்கும் அடிப்படை.
எடையைப் போலவே இப்போது தூக்கத்தையும் குறிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் அதைப்பற்றி பெரிதாகக் கவலைப்பட்டதில்லை. இயற்கையான தூக்கம் எனக்கு எப்போதும் உண்டு, ஒருநாளுக்கு எட்டு மணிநேரம். காரணம், இரவில் மிதமான உணவும் சீரான உடற்பயிற்சியும். ஆனால் இப்போது தூக்கம் சிக்கலாகும் அகவை. இந்த காலகட்டத்தில்தான் பலர் தூக்கமிழப்புக்கு ஆளாகிறார்கள். மாத்திரைகள் சாப்பிடத் தொடங்குகிறார்கள். பெரும்பாலானவர்கள் ஏதேனும் ஒரு மாத்திரை எடுத்துக்கொள்கிறார்கள் – ரத்த அழுத்தத்திற்காவது. கணிசமானவர்கள் குடிக்கிறார்கள்.
என் தூக்கத்தில் சிக்கல் வருவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆகவே சென்ற சில மாதங்களாக தூக்கத்தின் வழிமுறைகளை மாற்றிக்கொண்டிருக்கிறேன். இரவு ஒன்பதரை மணிக்கே படுக்கை. பலசமயம் அரைமணிநேரமாவது படுக்கையில் இருக்க நேர்கிறது. முன்பு அப்படி இல்லை. படுத்த ஐந்தாம் நிமிடமே தூங்கிவிடுவேன். இப்போது மனமும் உடலும் அடங்கவேண்டியிருக்கிறது. விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து நடை. பகலில் பதினைந்து நிமிடம் மட்டும் மதியத்தூக்கம். இப்போதெல்லாம் ஏழுமணிநேரம்தான் தூக்கம், அதில் ஆறுமணிநேரம்தான் ஆழ்ந்த தூக்கம்.
காவியம் என் தூக்கத்தின் எல்லா ஒழுங்குகளையும் சிதறடித்துவிட்டது. கடும் முயற்சியால் தூக்கத்தை மீண்டும் சீரமைத்துக்கொண்டேன். உடனே ஐரோப்பியப் பயணம். அது ஒரு பதற்றத்தை அளித்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால் ஒன்று கவனிக்கிறேன், பயணங்களில் நல்ல செறிவான தூக்கம் அமைகிறது. காரணம் காலைமுதல் தொடர்ந்து அலைந்துகொண்டே இருப்பது. மூளைக்குள்ளும் தகவல்கள் சென்றுகொண்டே இருப்பது. நம் உடலும் உள்ளமும் தூக்கத்துக்காக ஏங்குகின்றன. இந்த ஐரோப்பியப் பயணத்தில் படுத்ததுமே தூக்கம்தான். விழித்ததுமே கிளம்பவும் வேண்டியிருந்தது.
ஆனால் வெள்ளிமலை போன்ற மலைப்பகுதிகளில் மட்டும் ஒன்பது மணிநேரம் வரை தூங்கிவிடுகிறேன். ஏனென்றால் அங்கே எப்படியோ பகலிலேயே உள்ளம் முழுமையாக அடங்கிவிட்டிருக்கிறது. அங்கே பொதுவாக ஆக்ஸிஜனும் கூடுதல், ஒரு சதவீதம் வரை, அதுவே மிகப்பெரிய அளவு என்கிறார்கள். அங்கே காடு இருக்கிறது, வண்டிகள் மிகமிகக்குறைவாகவே வருகின்றன. ஆக்ஸிஜனை அதிகமாக எடுத்துக்கொள்பவை வண்டிகள். ஒவ்வொன்றும் ஒரு சூளை. சென்னை போன்ற நகரில் எத்தனை லட்சம் சூளைகள் எரிந்துகொண்டிருக்கின்றன!
ஓஷோ: மரபும் மீறலும்-8

ஓஷோவும் சிந்தனை மரபுகளும்
நண்பர் கே.வி.அரங்கசாமி ஓஷோ பற்றி முன்பு நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு எதிர்வினையாக இணையத்தில் ஒருவர் எழுதிய கட்டுரையை என்னிடம் காண்பித்தார். அது ‘டேய் முட்டாளே’ என்று வழக்கம்போல ஆரம்பிக்கிறது. ‘ஓஷோவை ஒழுங்காக படித்துப்பார், குர்ஜீஃப்பை படித்துப்பார், ஓஷோ நீ நினைப்பதுபோல் அல்ல’ என்று அந்த ஆசாமி பேசிச்செல்கிறார். முக்கியமாக காமம் பற்றி நான் சொன்ன விஷயம் அவரை சீண்டியிருக்கிறது. ‘ஓஷோ காமத்தை முன்வைக்கவில்லை, அவர் எந்த பெண்ணிடமும் உறவுகொள்ளவில்லை. அவர் அவர்களிடம் மானச லீலைதான் ஆடினார். இதை புரிந்துகொள்வதற்கு உனக்கு பக்குவம் போதாது’ என்றெல்லாம் பேசியிருந்தார். அதை பார்த்தவுடன் எனக்கு சட்டென்று இது வேறு ஒருவரைப்பற்றி சொல்லப்பட்டது நினைவுக்கு வந்தது. கிருஷ்ணனைப் பற்றியும் இதேதான் சொல்வார்கள். கிட்டத்தட்ட எல்லோரையும் பற்றியும் இதே வகையில்தான் சொல்லப்படும். முருகனைப்பற்றியும் இவ்வாறு சொல்லிவிடுவார்கள். அவர்களுக்கு பிள்ளை இல்லை என்பதால் முருகன் வள்ளி தெய்வானையோடு மானச லீலைதான் ஆடினார் என்றுகூட சொல்வார்கள்.
ஓஷோ எனும் தொன்மம்
ஓஷோ பற்றி இன்று எல்லாவகையான புராணங்களும் உருவாகிவிட்டன. அவரைப் பற்றிப் பேசுபவர்கள் அவர் மீதான நம்பிக்கையை மட்டுமே முன்வைக்கிறார்கள். அவை எல்லாமே அவரை ஒரு வகையான அவதாரபுருஷராகக் காட்டுபவை. அவரைப் பற்றிப் பேச தங்களுக்கு மட்டுமே தகுதியுண்டு என எண்ணுபவர்கள், அவரைகளை எவரேனும் விமர்சனம் செய்தால் வசைபாடிக் கொந்தளிப்பவர்கள் பெருகியுள்ளனர். பெரும்பாலான கதைகள் வழக்கமானவை.
இது கள்ளநோட்டு அச்சிடும் இயந்திரம்போல ஒருவகையான புராண இயந்திரம். அது தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டே இருக்கிறது. எந்தவொரு ஆன்மீக ஞானி என்றாலும் அவர் இறந்து சில ஆண்டுகளுக்குள் அந்த புராண இயந்திரத்திற்குள் செலுத்தப்பட்டு ஒரு சுற்றுசுற்றி வெளியேவந்து விழுவார்கள். ஓஷோ வெள்ளெலும்பை பெண்ணாக்கிய கதை, ஒயினை கையால் தொட்டு தண்ணீராக மாற்றிய கதை (ஏனெனில் இவர் திருப்பிதான் செய்வார் என்பதால் !) போன்ற கதைகளை உருவாக்கி விடுவார்கள். இந்த புராண இயந்திரத்திற்கு ஒரு முறைமை உண்டு. அதை மாற்ற முடியாது.
நான் ஒரு எழுத்தாளன் என்பது எனக்கு ஒரு சாதகமான அம்சம். ஆன்மீக ஞானிகளைப் போல என்னை அவ்வாறு புராண இயந்திரத்திற்குள் போடமுடியாது. குறைந்தபட்சம் ‘இவர் வேறுமாதிரி ஆள்’ என்று சொல்வதற்குச் சான்றுகளாக எனது படைப்புகளாவது இருக்கும். ஞானிகளை நாம் அவர்களின் பக்தர்கள் வழியாகவும், அவர்களை விளக்கும் பிரசங்கிகள் வழியாகவும், அவர்களின் போலியான நகல்கள் வழியாகவும்தான் அறிமுகம் செய்துகொள்கிறோம். ஆகவே ஞானிகளை ஞானமிருந்தால் மட்டுமே நம்மால் அறியமுடியும் என்பதே இன்றைய நிலை.
புராணமாக்குதல், தன்வயமாக்குதல்தான் ஓர் ஆன்மீக ஞானியை நாம் வழக்கமாக உள்ளிழுத்துக்கொள்ளும் முறையாக உள்ளது. நமக்கு என்ன பிடிக்குமோ, ஏற்கெனவே நாம் எதை நம்பிக்கொண்டிருக்கிறோமோ, ஒரு ஞானி எப்படி இருப்பார் என்று எப்படிப்பட்ட வரையறையை வைத்திருக்கிறோமோ அதை கையில் வைத்துக்கொண்டு பொறுமையின்றி காத்துக்கொண்டிருப்போம். ‘ரொம்பநாளா இருக்கிறானே, சரி எழுபத்தஞ்சு வயசாச்சு இப்போ போயிடுவான்னு நினைக்கிறேன். அப்பாடா போயிட்டான்’ என்று அவனை எடுத்து அந்த இயந்திரத்திற்குள் போட்டு வெளியே தள்ளுவோம். சூளையில் இருந்து வெளிவரும் செங்கல்போல அவர்கள் ஒரே வார்ப்பாக வெளிவருவார்கள். எல்லா செங்கலிலும் சில எழுத்துகள் இருப்பதுபோல, ‘இந்தியன் ஸ்பிரிச்சுவாலிட்டி’ என்ற அச்சில் ஒரே மாதிரி ஆட்களாக அவர்களை அடித்து வெளியே தள்ளுவோம். ஓஷோவைப்பற்றிய இத்தகைய உரையை ஆற்றவேண்டியிருப்பது அத்தகைய புராண இயந்திரத்தில் இருந்து அவரை வெளியே எடுக்கவே. அவர் இதுபோன்ற சூளைச்செங்கல் அல்ல, அவர் வேறு என்று சொல்வதற்காகத்தான்.
எழுபதுகளுக்கு முன்னால் பிறந்த என்னைப்போன்ற ஆட்களுக்கு தெரியும், நம்முடைய அப்பாக்கள் வேறுமாதிரி ஆட்கள் என்று. நம் அப்பாக்கள் நம்மிடம் ஜோக் சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு பாலுணர்வு உண்டா என்பதே சந்தேகமாக இருக்கும். அவர்கள் சிரிப்பதை நாம் பார்க்கமுடியாது. பெரும்பாலும் வீட்டிற்குள் அவர்கள் குரலை கேட்கவே முடியாது. என் அப்பா வீட்டிற்குள் பெரும்பாலும் பேசுவதே கிடையாது. வெளியேதான் அவரது குரலை கேட்கமுடியும். ஆனால் ஓஷோ நம்மிடம் பேசி சிரிக்கவந்த ஒரு அப்பா. நமது ஞானிகளின் படங்களை பார்த்தால், ஏதோ உருக்கநிலையில் கண்ணீரோடு இருப்பதுபோல இருக்கும். ஆனால் உண்மையில் அவர்கள் அப்படி இருந்தவர்கள் அல்ல. ஓஷோ ஓர் உரையில் சொல்கிறார், ‘அழுதுகொண்டிருக்கும் ஒரு அப்பாவி இளைஞனுடைய படம்தான் ரோமாபுரி சக்கரவர்த்திக்கு தேவைப்பட்டது. அதைத்தான் ஏசுவாக உருவகித்து வைத்திருக்கிறார். அந்த ஆள் இப்படி இருந்திருக்க மாட்டார், சிரித்துக்கொண்டுதான் இருந்திருப்பார். ஏனெனில் அவர் ஞானி’. ஆனால் நமக்கு எல்லா ஞானிகளும் சிரிக்காமல் சீரியஸாக இருக்கவேண்டும். நம்முடன் சிரித்து விளையாடவந்த ஒரு ஞானி என்று ஓஷோவை சொல்லலாம்.
முன்னர் சபாநாயகர் ஒருவர் இருந்தார். அவருடைய ஆங்கிலம் பற்றிய நகைச்சுவைகள் உண்டு. அவர் ஒருமுறை பாராளுமன்றத்தில் சொன்னார், ‘Prime minister has every rights to appoint and disappoint ministers’ என்று. அதேபோல ‘We have every rights to use and abuse Osho’ என்று சொல்லலாம். அதுதான் நாம் அவரிடம் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம். அது அடிக்கடி நமக்கு கிடைக்கக்கூடிய சுதந்திரம் அல்ல.
மீண்டும் ஓஷோத்தனமான நகைச்சுவை ஒன்று சொல்லலாம். ஒரு விடுதியில் ஒருவன் அறையெடுத்து தங்குகிறான். அவன் தூங்கிக்கொண்டிருக்கும்போது அந்த அறைக்குள் மூன்று பெண்கள் வந்து அவனுடன் உறவுகொள்கின்றனர். அவனுக்கு என்னதென்று குழப்பமாக இருந்தாலும் சந்தோஷப்படுகிறான், சரி ஏதோ தவறாக வந்துவிட்டார்கள் போல என்று. வெளியே வந்து அறைக்கு பணம் செலுத்தும்போது அங்குள்ளவர் ‘நீங்கள் 3A தானே, உங்களுக்கு கட்டணம் கிடையாது. நாங்கள் உங்களுக்கு ஐம்பது டாலர் தருவோம்’ என்றார். அவனும் அதை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டான்.
ஒருவாரம் கழித்து மீண்டும் அதே அறையில் தங்குகிறான். அப்போதும் அதுபோலவே நடக்கிறது. ஐம்பது டாலர் பணத்தை பெற்றுக்கொண்டு செல்கிறான். இது அவன் நண்பர்கள் வட்டாரத்தில் பரவலாகிறது. அதன்பின் பலர் அந்த 3A அறையை கேட்டுவாங்கி தங்கி, ஐம்பது டாலர் வாங்கிச்செல்கிறார்கள். அதன்பின் டிரம்ப் காதுக்கு அவ்விஷயம் செல்கிறது. அவர் அதை பரிசீலித்து பார்ப்பதற்கு அதே அறையில் சென்று தங்குகிறார். அதே விஷயங்கள் நடக்கின்றன. வெளியே வந்த அவரிடம் ஆயிரம் டாலர்கள் கொடுக்கிறார்கள். ‘வழக்கமாக ஐம்பது டாலர்தானே கொடுப்பீர்கள்’ என்று கேட்கிறார் டிரம்ப். அதற்கு அவர்கள், ‘ஆமாங்க, ஆனா அமெரிக்க அதிபரின் ப்ளூ ஃபிலிம் அபூர்வமானது இல்லையா !’ என்றனர்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், ராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் பிறந்த மண்ணில், இப்படி இளைஞர்களிடம் சிரித்துப்பேசவும் விளையாடாவும் செய்யக்கூடிய ஒரு ஞானி, நாம் வீசக்கூடிய பந்துகளை எதிர்கொள்ள மறுமுனையில் மட்டையுடன் நிற்கக்கூடிய ஒருவர் மிக அபூர்வமானவர் என்பதை சொல்லவே. அவரை புரிந்துகொள்வதற்கு நமக்கு அவ்வளவு சிரமங்கள் உள்ளன. எனவே, புரிந்துகொள்வதை விட எளிது, ஏற்கெனவே இருக்கும் வார்ப்பாக அவரை மாற்றிக்கொள்வதுதானே. அதைத்தான் நாம் என்றுமே செய்துகொண்டிருக்கிறோம்.
நம் அப்பாக்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. சிடுசிடுப்பான அப்பா, ஊதாரி அப்பா, அன்பான அப்பா என்பதாக பலவிதம். ஆனால் எல்லா அப்பாக்களும் இறந்து பதினாறு நாட்கள் கழித்து ஒரே அப்பாதான். ஒரேமாதிரி புகைப்படம், ஒரேமாதிரி மாலை, ஒரேமாதிரி கதை. ‘எங்கப்பா இப்படித்தான் இருப்பார்’ என்று அத்தனைபேரும் ஒரே கதையைத்தான் சொல்வார்கள். ‘உங்கள் அப்பாவுக்கென்று தனியாக சில குணங்கள் இருந்திருக்குமல்லவா?’ என்று நான் கேட்டிருக்கிறேன். ஆனால் ஒருவரும் சொன்னதில்லை. எல்லா அப்பாக்களும் ‘அப்பா’ எனும் டெம்ப்ளேட்டில் பொருத்தப்பட்டுவிடுவார்கள். இதைத்தான் நாம் நமது ஞானிகளுக்கும் செய்கிறோம். ஓஷோ மறைந்து முப்பதாண்டுகளுக்கு பிறகு அவரை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.
ஓஷோவும் இந்தியப் பொதுமக்களும்.
இங்கு இரண்டு நிகழ்வுகளை சொல்ல விரும்புகிறேன். ஓஷோ புனேவில் இருந்தபோது அவருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. அவர் இந்திரா காந்தியை மிகக்கடுமையாக விமர்சனம் செய்தார். Below the belt என்று சொல்வார்களே, அந்த அளவுக்கான விமர்சனம். அதன் பிறகு மொராஜி தேசாய் பிரதமரானார். ஆனால் மொராஜி தேசாயின் சிறுநீர் பற்றித்தான் ஓஷோ அதிகமாக பேசியிருப்பதாக சொல்கிறார்கள். அவர் எல்லா அரசியல்வாதிகளுக்கும் எதிரி. அவர்கள் அவரை திருப்பி எதிர்த்தார்கள். பாரதீய ஜனசங்கம் அவரை கடுமையாக எதிர்த்தது. அவரைப்பற்றி தொடர்ந்து தவறான செய்திகள் வந்தன. அவர் ஆசிரமத்தில் போதைப்பொருள் புழங்குகிறது, பாலுறவு களியாட்டங்கள் நடைபெறுகின்றன என்பதாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருந்தன. இவ்வளவு செய்திகள் வந்தபோதிலும் இந்தியாவில் மக்கள் மத்தியில் அவரைப்பற்றி அவ்வளவு எதிர்மறையாக எதுவுமே நடைபெறவில்லை.
ஓர் இதழாளர் மனமுடைந்து எழுதுகிறார், ‘இவர் தன்னை சாமியார் என்று மட்டும் சொல்லிக்கொள்ளாமல் இருந்திருந்தால் நடப்பதே வேறு. இவரை அடித்தே கொன்றிருப்பார்கள்’ என்று. சாமியார் என்ற வார்த்தைதான் அவரை இதுவரை காப்பாற்றி கொண்டுவந்திருக்கிறது,இந்தியாவில் சாமியார்களை எதுவும் செய்யமுடியாது என்கிறார் அந்த இதழாளர்.. அது உண்மையும்கூட. துறவி, தத்துவ ஞானி என்கிற விஷயம் அவர்களுக்கு அளவற்ற சுதந்திரத்தையும் அனுமதியையும் அளிக்கிறது. இந்திய மக்களுக்கு ஓஷோவை புரிந்ததா என்றால் புரியவில்லை. அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் வைத்து ஓஷோ போன்ற ஒருவரை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. மதித்தார்களா என்றால் அதுவும் இல்லைதான். ஆனால் அவருடைய சுதந்திரத்தை, வழிவிட்டு விலகிச்செல்லுவதற்கான அவருடைய உரிமையை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
புனேவில் ஒரு கூடைக்கார பெண்ணிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டியெடுக்கிறார். ‘ஓஷோ இப்படியெல்லாம் செய்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்கிறார். அந்தப்பெண் ஒரே வார்த்தையில் ‘அவர் சாமியார்’ என்று பதில் சொல்கிறார். பத்திரிக்கையாளர் மீண்டும், ‘அது உண்மைதான். இருப்பினும் அவர் இப்படியெல்லாம் செய்கிறாரே…’ என்றார். அந்தப்பெண் மீண்டும், ‘இல்லங்க, அவர் சாமியார்தானே’ என்கிறார். அதுதான் இந்தியாவின் பதில். அவரைப்போன்றவர்கள் நாம் இங்கு வகுத்து வைத்திருக்கும் வழக்கமான சட்டகத்திற்கு வெளியே இருக்கக்கூடியவர்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். அதை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே நான் என்னுடைய நிபந்தனைகளுடன் அங்கு செல்லமாட்டேன் என சாமானியன் சொல்கிறான்.
நெடுநாட்களுக்கு முன்னர் குருநித்யாவின் மாணவர் பிரபுதத்தா அவர்களிடம் கேட்டேன், ‘அமெரிக்கா மாதிரி இங்கும் அனைவருக்கும் அடையாள அட்டை வரப்போகிறது. ஓர் அடையாள அட்டை எடுத்தாகவேண்டும் என்று அரசாங்கம் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?’. அதற்கு அவர் ‘சிறை செல்வேன். ஆனால் அட்டை வாங்கமாட்டேன்’ என்றார். அந்தச் சுதந்திரத்தை இந்தச் சமூகம் தொடர்ந்தும் அளித்தாகவேண்டும். இந்த பொதுச் சமூகத்தின் அத்தனை நிபந்தனைகளுக்கும் ஒரு ஞானி, அல்லது கலைஞன் கட்டுப்பட்டு இருந்தான் என்றால், இந்த பொதுச் சமூகத்தின் கண்களுக்கு எது தெரிகிறதோ அதுதான் அவன் கண்களுக்கும் தெரியும். பொதுச் சமூகம் நம்புவதை மட்டும்தான் அவனால் சொல்லமுடியயம். இங்கிருந்து அனைத்தையும் விட்டுவிட்டு ‘அங்கு’ செல்வதுதான் துறவேவொழிய, இங்கிருந்து வீடு, துணி, சோறு அனைத்தையும் எடுத்துக்கொண்டு அங்கு செல்வதல்ல துறவு. இங்கிருக்கக்கூடிய சௌகரியங்களை மட்டுமல்ல, அடையாளங்கள், மரியாதைகள், நெறிகள், ஒழுக்கங்கள், நம்பிக்கைகள் என அனைத்தையும் துறந்துதான் அங்கு செல்கிறார்கள்.
துறவறம் மேற்கொள்பவர் உயிரோடு இருக்கும் தங்கள் தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்துவிட்டுத்தான் போகவேண்டும். இரிக்கப் பிண்டம் என்று அதை சொல்வார்கள். இருக்கும்போதே அளிக்கப்படும் பிண்டம் அது. இப்படி எனது குடும்பத்தில் ஒருவர் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். இது பேசும்போது எளிதாக இருக்கும். ஆனால் அம்மா உயிருடன் இருக்க, தன் முப்பத்தாறு வயதில் ஒருவர் அம்மாவுக்கு இறுதிக்கடன் செய்வதை பார்ப்பது கடினமான விஷயம். அந்த அம்மாவின் முகம் என் நினைவில் உள்ளது. அதையெல்லாம் ஏன் செய்யவேண்டும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இது பல ஆண்டுகளாக இங்குள்ளது. ஆனாலும் சாமானியர்களால் அதை புரிந்துகொள்ள முடியாது. அதேசமயம் மரபின் மீதான அச்சத்தாலும் ஏற்பாலும் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், அனுமதித்திருக்கிறார்கள்.
நான் தொடர்ந்து இதுபோன்ற ஆட்களைச் சந்தித்திருக்கிறேன். கிட்டத்தட்ட துறவிபோன்ற ஒரு நிலையில் அலைந்து கொண்டிருக்கும்போது ஓஷோ போன்று குறைந்தது இரண்டு பேரை பார்த்த நினைவுண்டு. ஒருவர் என்னிடம் சொன்னார், ‘எனக்கு பிச்சையெடுப்பது பிடிக்காது, எவரிடமும் எதையும் வேண்டுவது பிடிக்காது. முக்கியமாக அவர்களிடமிருந்து எனக்கு மோசமான அதிர்வுகள் வருகின்றன. உலகியலாளன் எனக்கு ஒரு லௌகீக முகத்தை காட்டுகிறான். அது எனக்கு நேரவிரயம். உணவுக்காக அரைமணிநேரம், ஒருமணி நேரத்தை எல்லாம் என்னால் செலவழிக்க முடியாது’. நான் கேட்டேன், ‘அப்படியென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?’. அவர் ‘நான் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு திருட்டை செய்வேன். அந்த பணத்தை வைத்து சாப்பிட்டுக்கொள்வேன்’ என்றார். எனக்கு சற்று பதற்றமாகியது. ஏதேனும் குறியீட்டுரீதியாக பேசுகிறாரா என்ற சந்தேகத்துடன் ‘திருட்டுங்களா ?’ என்றேன். ‘திருட்டேதான்’ என்றார்.
அ.லெ.நடராஜன் எழுதிய சுவாமி விவேகானந்தர் வரலாறு என்ற புத்தகத்தில் ஒரு நிகழ்வு வருகிறது. விவேகானந்தர் துறவியாகி இந்தியா முழுக்க அலைந்து கொண்டிருக்கும்போது காசிக்கு அருகில் ஒரு கிராமத்தில் பத்து துறவிகள் சென்று தங்குகின்றனர். அவர்களில் ஒருவர் ஊருக்குள் சென்று பத்து துறவிகள் தங்கியிருப்பதாகவும் அவர்களுக்கு உணவு தரும்படியும் கேட்கிறார். ஊர்க்காரர்கள் உணவுதர மறுத்துவிடுகின்றனர். அதனால் விவேகானந்தர் உட்பட அனைத்து துறவிகளும் கையில் தடிகளுடன் ஊருக்குள் சென்று வீட்டுக்கதவுகளை தட்டி மிரட்டி உணவு வாங்கி சாப்பிடுகின்றனர். அதைப்பற்றி விவேகானந்தர் சொல்லும்போது, ‘இது சரியா அல்லது தவறா என்பதல்ல. சரி, தவறுகளுக்கு அப்பாற்பட்ட வேறொன்று உள்ளது, அதுதான்’ என்கிறார். இதற்குமேல், இந்த உலகின் விதிகளை கொண்டு அவர்களை மதிப்பிட முடியாது. இது இங்கே பல ஆண்டுகளாக இருந்துகொண்டிருக்கிறது.
ஏன் சாமானியர்களுக்கு ஓஷோ மீது ஒவ்வாமை இருந்தாலும் காழ்ப்பு வரவில்லை ? ஏன் அவர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒருவரை எப்படியோ ஏற்றுக்கொள்கிறார்கள் ? ஏனெனில் இதேபோன்ற ஒருவர் அவர் தெருவிலும் இருப்பார். ஒவ்வொரு ஊரிலும் அவ்வாறான ஒருவர் இருக்கிறார். ஏதேதோ செய்திருக்கிறார்கள். மாந்திரீகச் சடங்குகள், பலிபூஜைகள் செய்திருக்கிறார்கள், நிர்வாண பூஜைகள் செய்திருக்கிறார்கள். நான் நடைப்பயிற்சி செல்லும் வழியில் ஒரு ஆலமரம் உள்ளது. அதனடியில் ஆறேழு சமாதிகள் உள்ளன. எல்லாமே துறவிகளின் சமாதிகள். அங்கு வந்த ஒரு விவசாயியிடம் அதுபற்றி கேட்டேன். அதில் இருந்த ஒரு சாமியார் பெண்களை வைத்து நிர்வாண பூஜைகளெல்லாம் செய்திருக்கிறார் எனவும், அதை தான் சிறுவயதில் பார்த்திருப்பதாகவும் சொன்னார். அவருக்கு அதற்குமேல் எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர் ஒரு ஞானி என பக்தியுடன் சொன்னார். ஊருக்குள் உட்கார்ந்து இதை செய்யக்கூடியவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர் இன்று ஆலமரத்தடியில் சமாதியாய் இருக்கிறார். யாரோ இரண்டுபேர் ஆண்டுக்கு ஒருமுறை வந்து தீபம் ஏற்றி மாலையிட்டுவிட்டு செல்கிறார்கள்.இந்தியாவில் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் ஒரு சித்தருடைய சமாதியாவது இருக்கும் என்று ஜெயகாந்தன் சொல்வார். அத்தனைபேரையும் நமது சமுதாயம் ஏற்றுக்கொண்டுதான் இருந்திருக்கிறது. அவர்கள்மீது பகைமையை உண்டாக்கிக்கொள்ளவில்லை.
இங்கு ஓஷோவின் நகைச்சுவை ஒன்று நினைவுக்கு வருகிறது. சர்தார்ஜி ஒருவர் ரயிலில் சென்றுகொண்டிருக்கிறார். எதிரில் ஒரு முஸ்லிம் பெரியவர் இருக்கிறார். அவர் ஒரு டப்பாவை திறந்து அதில் இருக்கும் பத்து சுருட்டுகளில் ஒன்றை எடுத்து புகைக்கிறார். சர்தார்ஜிக்கு அதன் நாற்றம் தாங்கமுடியவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த பெரியவர் கழிவறைக்கு சென்றபோது, சர்தார்ஜி அந்த டப்பாவில் மீதமுள்ள ஒன்பது சுருட்டுகளையும் எடுத்து தனது ஆசனவாயில் செருகிவிட்டு வைத்தார். அந்த பெரியவர் திரும்பிவந்து ஒரு சுருட்டை எடுத்து முகர்ந்து பார்த்தார். அது நாற்றமடித்ததால் தூக்கி வெளியே வீசிவிட்டார். இன்னொன்றை எடுத்தார். அதுவும் நாற்றமடித்தது. இப்படியாக ஒன்பது சுருட்டுகளையும் தூக்கி வீசிவிட்டு, இன்னொரு டப்பாவை எடுத்தார். அதில் இருந்த பத்து சுருட்டுகளில் ஒன்றை எடுத்து புகைத்தார். இதை பார்த்துக்கொண்டிருந்த சர்தார்ஜி, அந்த பெரியவர் மீண்டும் கழிவறைக்கு சென்றவுடன் அத்தனை சுருட்டுகளையும் எடுத்து முன்புபோலவே செய்துவிட்டு திருப்பி வைத்துவிட்டார். அந்த பெரியவர் திரும்பிவந்து அந்த ஒன்பது சுருட்டுகளையும் முகர்ந்துவிட்டு தூக்கி வெளியே போட்டுவிட்டார். அரைமணிநேரம் கழித்து சர்தார்ஜி பெரியவரிடம் ‘சுருட்டு இருக்குங்களா ?’ என்று கேட்கிறார். ‘அந்த பழக்கமே விட்டுப்போச்சுங்க’ என்கிறார் பெரியவர். சர்தார்ஜி ‘எனக்கு பழகிடுச்சுயா…’ என்றார்.
ஓஷோவும் மேலைநாடுகளும்
இந்திய சமுதாயத்திற்கு நெடுங்காலமாக பழகிப்போனவர்கள் நம் ஞானிகள். ஓஷோ போன்றவர்கள் நமக்கு பழகினவர்கள்தான். ஆனால் அமெரிக்கர்களுக்கு அப்படியல்ல. எண்பதுகளில் ஓஷோ அமெரிக்கா செல்கிறார். ஓரிகோனில் பிரம்மாண்டமான ஓஷோ கம்யூனை உருவாக்கினார். மிகச்சில ஆண்டுகளிலேயே ஒட்டுமொத்த அமெரிக்காவும் அவருக்கு எதிராக திரும்பியது. அவர்களால் ஓஷோவை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவரை அவர்கள் வேட்டையாடினர், சிறையிலடைத்தனர், நாடுகடத்தினர். அமெரிக்கா தன்னை சுதந்திர சிந்தனை கொண்ட சமூகம் என்று சொல்லிக்கொள்கிறது. ஆனால் அது அன்று செய்த அந்த நடவடிக்கை சார்ந்து குற்றவுணர்வும் தாழ்வுணர்வும் அவர்களுக்கு உண்டு. நாம் ஒரு தவறான விஷயத்தை செய்துவிட்டால் நாமே அதை நியாயப்படுத்தி பேசத்தொடங்குவோம். இன்று ஓஷோவை பற்றி நாம் பேசுவதைவிட அவர்கள் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அதுவும் எதிர்மறையாக. காரணம் அந்த குற்றவுணர்வுதான்.
ஓஷோவை ஒரு வில்லனாக, தீய சக்தியாக, ஒருவகையான நவீன சாத்தானாக சித்தரிக்கக்கூடிய குறைந்தது மூன்று சினிமாக்களை அவர்கள் எடுத்திருக்கிறார்கள். நானே ஒரு சினிமா பார்த்திருக்கிறேன். அதில் ஓஷோ போன்று ஒருவர் வருவார். அங்கு கொத்தடிமைகளை வைத்து வேலை வாங்குவார்கள், மைக்கில் ஆணைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நெற்றியில் சாத்தானின் அடையாளத்தை போட்டிருப்பார்கள். அனைவரையும் சித்திரவதை செய்வார்கள். அத்தகைய ஒரு படம். பரிதாபமாகத்தான் இருந்தது. ஏனெனில் ‘சாத்தான் வழிபாட்டாளர்’ என்பது அவர்களுக்கு தெரிந்த ஒரு டெம்ப்ளேட். அந்த டெம்ப்ளேட் அவர்களுக்கு ஆயிரமாண்டுகளாக உள்ளது. அதை ஓஷோவின்மீது போடுகிறார்கள். குறைந்தது இரண்டு அல்லது மூன்று சினிமாத்தொடர்கள் இருக்கின்றன. சமீபத்தில்கூட ஒரு சீரியல் வந்தது. பலரும் அதை பார்த்திருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து ஒன்று வந்தால் அது உண்மையாகத்தான் இருக்கும், வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் என்ற நம்பிக்கை நமக்குண்டு.
அவர்கள் ஓஷோவைப் பற்றின அத்தகைய சித்திரத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றனர். ஏனெனில் ஓஷோ போன்ற ஒருவரை புரிந்துகொள்வதற்கான தத்துவார்த்தமான கருவி அவர்களிடம் இல்லை. ஆயிரமாண்டுகளாக அவர்களுடைய பண்பாட்டில் அது இல்லை. முன்காலத்தில் அங்கும் அப்படிப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். கிரேக்க நாட்டில் டையோஜெனிஸ் (Diogenes) ஒரு குழாய்க்குள் வாழ்ந்திருக்கிறார். அந்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அலெக்ஸாண்டர் அவரிடம் சென்று ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டபோது, ‘அந்த வண்டியை கொஞ்சம் நகர்த்திவை, நிழலடிக்கிறது’ என்றாராம். நாஸ்டிக் மரபுகள் (Gnosticism) இருந்திருக்கின்றன. ஆனால் அவை எதுவுமே ஓஷோ போன்ற ஒருவரை புரிந்துகொள்ள உதவவில்லை. ஓஷோ அங்கு சென்று ஒரு குகையில் பட்டினி கிடந்திருந்தால் அவரை கிறிஸ்தவ புனிதர்களில் ஒருவராக சேர்த்திருப்பார்கள். ஆனால் ஐநூறு வைரங்கள் பதிக்கப்பட்ட நெற்றிப்பட்டை அணிந்துகொண்டு உட்கார்ந்திருக்கும் ஒருவரை எப்படி புரிந்துகொள்வது, எங்குசென்று சேர்ப்பது ?
இந்த உரைக்காக நான் தயார் செய்துகொண்டிருந்தபோது, ஓஷோவின்மீது அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டுகள், வழக்குகளை புரட்டிப்பார்த்தேன். ஆவணங்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கின்றன. அந்த ஆவணங்களை வைத்து நீங்கள் ஆவணப்படத்தில் உள்ள சித்திரத்தை நம்பமுடியாது. ஏனெனில் ஒரு குற்றம்கூட ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. கொலை, கட்டாய உழைப்பு, அடிதடி உள்ளிட்ட பல வாக்குமூலங்கள் பெறப்பட்டிருக்கின்றன. எதுவுமே ஜூரி முன்னிலையில்கூட பதிவு செய்யப்படவில்லை. அவரை அழைத்து மிரட்டினார்கள், சிறையில் வைத்தார்கள், பின்பு வெளியே அனுப்பினார்கள். அவருடைய மொத்த சொத்தும் தேசியமயமானது. அவர்மீது வைக்கப்பட்ட உச்சகட்ட குற்றச்சாட்டே, அந்த குறிப்பிட்ட கிராமத்தின் ஆதிக்கத்தை எடுத்துக்கொள்ள முயன்றார் என்பதே.
இதேபோல இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஒருவர் வந்து ஆசிரமம் அமைத்து சட்டப்பூர்வமாக சேவையாற்றிக்கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர்மீது அதேபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஒரு குற்றம்கூட நிரூபிக்கப்படாத நிலையிலும் அவரை இந்தியாவை விட்டு துரத்தினால், இதே அமெரிக்கா நம்மைப்பற்றி என்ன சொல்லும் ? நாம் அவ்வாறு செய்தது கிடையாது. ஆனால் நாம் காட்டுமிராண்டிகளாகவும் அவர்கள் நவீன சிந்தனையின் முகங்களாகவும் அறியப்படுகிறார்கள்.
அமெரிக்கா சென்றுவந்த ஒருவருக்குத்தான் இந்த வேறுபாடு தெரியும். ஆனால் அங்கு குடியேறியவனுக்கு அது தெரியாது. ஏனெனில் அவன் அங்கு இரந்துண்டு ஏற்று வாழக்கூடிய இடத்தில் இருப்பவன். அமெரிக்கர்களை விட மிகப்பெரிய தேசபக்தர்கள் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள்தான். நான் பார்த்தவரைக்கும் இந்த அளவு தேசபக்தி உடைய மக்களே உலகில் கிடையாது. சிங்கப்பூரிலும் அப்படித்தான். சிங்கப்பூர் தேசிய தினத்தன்று, அங்கிருக்கக்கூடிய இந்தியர்கள் தேசபக்தியில் உருகி, தேசியக்கொடியை சட்டையாக அணிந்துகொண்டும், அதை கையில் வைத்து ஆட்டிக்கொண்டும் இருப்பார்கள். இதில் பத்தில் ஒரு பங்காவது இந்தியாவில் இருக்கும்போது இருந்திருந்தால் நாம் இன்று இப்படி இருந்திருக்கமாட்டோம் .அதனால் அத்தகையவர்களுக்கு அது தெரியாது. ஆனால் அங்கு சென்று வந்தவர்களுக்கு தெரியும், அமெரிக்கா ஒரு ஜனநாயக தேசமல்ல, அது அடிப்படையில் ஒரு கிறிஸ்தவ தேசம் என்று. அது அளிக்கும் சில சலுகைகள் உள்ளன. ஆனால் அந்த சலுகைகளுக்கு அப்பால் யாரும் எதுவும் பேசமுடியாது.
ஓஷோ அந்த எல்லைக்கோட்டை தாண்டிச்சென்றார். அவருடைய தவறு என்பது, அது ஒரு ஜனநாயக தேசம் என்று சொல்லி அவரை அழைத்து சென்றவர்களை நம்பி அங்கு சென்றதுதான். தனது கருத்துகளை முன்வைக்க இங்கே இடமில்லை என்றும், தனக்கு இங்கே எதிர்ப்பு இருப்பதாகவும், இன்னும் நவீனமான, அடுத்தகட்டத்தில் இருக்கும் சமூகத்தில் இருந்துகொண்டுதான் தான் பேசமுடியும் என்றும், எனவே அங்கு சென்று ஒரு கம்யூனை உருவாக்குவதாகவும் சொல்லித்தான் அங்கு சென்றார். அங்கே அவமதிக்கப்பட்டு மீண்டும் திரும்பிவந்தார். ‘இதுதான் எனது நிலம். எல்லா மீறல்களுக்கும் இடமளிக்கும் நாடு. இங்கிருந்து அல்லாமல் வேறு எங்கிருந்தும் எதையும் என்னால் சொல்லமுடியாது’ என்று இங்கு வந்து சொன்னார்.
ஒரு நம்பூதிரி நகைச்சுவை உண்டு. நம்பூதிரி ஒருவர் ரயிலில் இருந்து இறங்க முற்படுகிறார். அப்போது சிலர் கீழே இருந்து ரயிலில் ஏற முற்படுகிறார்கள். நம்பூதிரி, ‘கொஞ்சம் இருங்க, நான் இறங்கிக்கிறேன்’ என்றார். கீழே இருந்தவர்கள் ‘நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நாங்க ஏறிக்கிறோம்’ என்றனர். அப்போது நம்பூதிரி சொன்னார், ‘நீங்க வேற வண்டியில ஏறமுடியும். ஆனா நான் இதுல இருந்துதான் இறங்க முடியும்’. ஓஷோ போன்ற ஒருவர் இங்கிருந்து தவிர வேறு எங்கிருந்தும் பேசமுடியாது.
(மேலும்)
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
