Jeyamohan's Blog, page 48
July 29, 2025
A Restaurant That Serves More Than a Free Meal
ஆகஸ்ட் மாதம் என் அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கமான Stories Of the True நூலின் சர்வதேசப்பதிப்பு அமெரிக்கப் பதிப்பகமான Farrar, Straus and Giroux ஆல் வெளியிடப்படுகிறது. அதனை ஒட்டி ஒரு முன்னோட்டம் Electric Literature இலக்கிய இதழில் பிரியம்வதாவின் அறிமுகக் குறிப்புடன் வெளியாகியுள்ளது.
A Restaurant That Serves More Than a Free Mealநூலை இப்போதே பதிவுசெய்து வாங்கலாம்
Stories Of the True MacmillanThe rain!

Every time I talk about Vedanta, I am accused of rejecting the subtle philosophical differences created by the internal contradictions or internal debates of Hinduism by presenting Vedanta as the premier philosophical vision of India. I continue to provide explanations about it.
The rain!
இந்து ஞான மரபு, தத்துவங்கள், பகவத் கீதை, உபநிடதங்கள் மற்றும் பல இதர நூல்களை விரிவாக, ஆழமாகக் கற்று உணர்ந்த நீங்கள், கோயில்களின் சூட்சுமங்களைப் பற்றிப் பேசும் நீங்கள், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாமல் இருப்பது பெரும் ஆச்சரியம் அளிக்கிறது.
கடவுள்நம்பிக்கை உண்டா?July 28, 2025
மொசார்த் -பண்பாட்டின் இசைவு
ஆஸ்திரியாவில் சால்ஸ்பர்க் என்னும் ஊரில் மொசார்த் வாழ்ந்த இல்லம் நினைவகமாக உள்ளது. அங்கே சென்றிருந்தோம். மொசார்த் ஐரோப்பிய இசையின் ஒத்திசைவை உருவாக்கியவர், அதன் வழியாக ஐரோப்பியப் பண்பாடு உருவாக வழியமைத்தவர். சைதன்யாவுடன் மொசார்த் பற்றி ஒரு சிறு உரையாடல்.
சுந்தர ராமசாமியும் சிங்கப்பூர் சிறுகதைப்போட்டியும்
அன்புள்ள ஜெ,
அண்மையில் இணையத்தில் நிகழ்ந்த ஒரு விவாதம், அதைப்பற்றிய என் சந்தேகம் இது. சிங்கப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பில் ஒரு சிறுகதைப்போட்டி நிகழ்ந்ததாகவும், அதற்கு சுந்தர ராமசாமி நடுவராக அழைக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. தன் பார்வைக்கு வந்த சிறுகதைகளில் எவையுமே அப்போட்டியின் விருதுக்குத் தகுதியானவை அல்ல என்று சுந்தர ராமசாமி தீர்ப்பு சொன்னாராம். ஒரு போட்டி என்றால் அதில் பங்குகொண்டவற்றில் எது முதலில் எது இரண்டாமிடத்தில் என்று சொல்வதுதான் நடுவரின் பணி. போட்டியில் எவருமே முதலிடத்தில் வரவில்லை என்று நடுவர் சொல்லமுடியுமா என்ன? எனக்கும் இந்த சந்தேகம் வந்தது. ஆகவேதான் இதைக் கேட்கிறேன்
அருண்
அன்புள்ள அருண்,
சுந்தர ராமசாமி வாழ்ந்தபோது இதற்கு பதில் சொல்லியிருக்கிறார். இந்நிகழ்வு நடைபெற்று நாற்பதாண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன.
முதல்விஷயம், இப்படி ஒரு நிகழ்வை பற்றிய விவாதத்தின்போது சுந்தர ராமசாமி போன்ற ஓர் இலக்கியமுன்னோடி ஏன் அதைச் செய்தார், அதன் விளைவு என்ன என்று மட்டும்தான் இன்று விவாதம் நிகழமுடியும். ஏனென்றால் இன்று அது ஒரு வரலாற்று நிகழ்வு. உலகம் முழுக்க இலக்கிய, கலை, சிந்தனைக்களங்களின் முன்னோடிகள் பற்றிய விவாதம் அந்த தளத்தில் மட்டுமே நிகழ்கின்றது. அப்படி புகழ்பெற்ற பல விவாதங்கள் உண்டு. அவர் என்ன செய்திருக்கவேண்டும் என்றெல்லாம் பேசுவது அபத்தம். இலக்கியம் பற்றி சுந்தர ராமசாமிக்கு வகுப்பெடுக்கவும், அவர் செயல்மேல் தீர்ப்பெழுதவும் இங்கே எவருக்குத் தகுதி?
இந்தவகையான எந்த பேச்சை எவர் பேசினாலும் பேசுபவர் என்ன எழுதிச் சாதித்துவிட்டார் என்று முதலில் கேட்பவனே இலக்கிய வாசகன். ‘எது உன் அறிவியக்கப் பங்களிப்பு?’ என்ற கேள்விக்கு பின்னரே ஒருவர் நம்மிடம் சொல்லும் எந்தக் கருத்தையும் நாம் செவிகொள்ளவேண்டும். இன்று, சமூக ஊடகச்சூழலில் எதையும் வம்புப்பேச்சாக மாற்றிக்கொண்டிருக்கும் அற்பர்களை இந்த வகையான விவாதங்களில் இருந்து முழுமையாக விலக்கிவிட வேண்டும். அந்த மனநிலையை உருவாக்கிக் கொள்ளாத ஒருவர் தானும் நாளடைவில் அற்பவம்பராக உருமாறிவிடுவார்.
*
இலக்கியம் ஓட்டப்போட்டி அல்ல என்று தெரிந்தவனே இலக்கியம் பற்றிப் பேசும் அடிப்படைத் தகுதி கொண்டவன். ஓட்டப்போட்டியில் முதலில் வந்தது யார் என்பது புறவயமானது. எவரும் முடிவுசெய்ய முடியும் அதை. இலக்கியப்போட்டியில் அது முழுக்க முழுக்க நடுவர்களின் அகவயமான முடிவு. அதை எந்த வகையிலும் புறவயமாக நிரூபிக்க முடியாது. ஆகவேதான் தகுதிவாய்ந்த நடுவர்களை நாடுகிறார்கள். சுந்தர ராமசாமி போன்ற ஒருவர் அதனால்தான் அப்போட்டிக்கு நடுவராகத் தேவைப்பட்டார்.
ஆகவே இந்த விவாதத்தின் முதல் கேள்வியே ஏன் சுந்தர ராமசாமி அழைக்கப்பட்டார் என்பதுதான். எவர்வேண்டுமென்றாலும் செய்யத்தக்க ஒரு ‘முடிவை மதிப்பிடும் பணியைச்’ செய்வதற்காக அவர் அழைக்கப்படவில்லை. சுந்தர ராமசாமி மட்டுமே ஆற்றத்தக்க ஒரு பணிக்காகவே அவர் அழைக்கப்பட்டார். அக்கதைகள் மேல் அவருடைய பார்வை படவேண்டும், அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவேண்டும் என்பதற்காகவே அவர் அழைக்கப்பட்டார். அந்தக் கதைகள் பற்றி அவருடைய கருத்து அவருடைய ஆளுமையால்தான் முக்கியத்துவம் அடைகிறது, அதை இன்னொருவர் சொல்லிவிட முடியாது. இலக்கிய முன்னோடி இப்படி ஒரு பணியை ஒப்புக்கொள்வதே ஒரு நல்வாய்ப்பு, ஓர் அரிய இலக்கிய நிகழ்வு. அவர் நடுவராக இருந்த ஒரே இலக்கியப் போட்டி அது என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும்.
சர்வதேச அளவில் எத்தனையோ இலக்கியப் போட்டிகளில் போட்டிக்கு வந்த எந்தப் படைப்பும் தகுதியானது அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் பணம் ஊதியம் பெற்றுக்கொண்டு அவ்வாறு அறிவித்த பல நடுவர்கள் உள்ளனர். கூகிள் பார்க்கத் தெரிந்த எவரும் அதை தெரிந்துகொள்ள முடியும். அது மிக இயல்பான ஒரு நடைமுறை. படைப்புகள் தரமில்லை என்றால் அவ்வாறு அறிவிப்பதும் நடுவரின் கடமைதான். நடுவர் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமை என்றால் அம்முடிவு என்பது அந்தச் சூழல்மேல் முன்வைக்கப்படும் முக்கியமான விமர்சனம், மேலும் முன்னகர்வதற்கான அறைகூவல். எந்த இலக்கியச் சூழலுக்கும் ஓர் இலக்கியப் பேராசானின் விமர்சனம் என்பது ஓர் அருள்தான், அவரை எதிர்க்கவும், முழுமையாகக் கடந்துசெல்லவும்கூட அதுவே தொடக்கம். சிங்கையின் மெய்யான நவீன எழுத்தாளர்கள் அந்த அறைகூவலை அடுத்த கால்நூற்றாண்டில் ஏற்றுக்கொண்டு முன்னெழுந்து வந்தனர் என்பது வரலாறு.
*
முதலில் நாம் அறியவேண்டியது அந்தச் சிறுகதைப்போட்டி ஒரு தனியார் அமைப்பு நடத்தியது அல்ல என்பதே. சிங்கப்பூர் ,மலேசியா போன்ற நாடுகள் மலாய், சீன மொழிகளுக்கு இணையாக தமிழுக்கும் இடமளித்து பெரும் நிதிக்கொடைகளை அளிக்கின்றன. அந்தப் பெருந்தொகை பெரும்பாலும் கருத்தரங்குகளுக்குச் செலவழிக்கப்படுகிறது. தனிப்பட்ட ஆய்வுகளுக்கான நிதிக்கொடைகளாகச் செல்கிறது. அத்துடன் இந்த வகையான போட்டிகளில் பரிசாக வழங்கப்படுகிறது. எப்போதும் இச்செயல்பாடுகள் மெல்ல மெல்ல ஒரு சிறுகுழு, அல்லது அமைப்புகளின் பிடிக்குள் சென்றுவிடும். அதற்கப்பால் இன்னொரு நாட்டின் சூழல்பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை, தமிழ்ச்சூழலில் எங்கும் நிகழ்வதுதான்.
அந்தச் செயல்பாடுக்கு சிங்கை அரசு ஏற்கும்படியான் ஒரு ‘அதிகாரபூர்வ’ ஏற்பை உருவாக்கத்தான் தமிழகத்தில் இருந்து எழுத்தாளர்களை அழைத்து நடுவர்களாக ஆக்கிக்கொண்டிருந்தனர். நம் எழுத்தாளர்களும் சிங்கப்பூர் அழைப்பு, கூடவே கொஞ்சம் சன்மானம் என்றதுமே நன்றிப்பெருக்கில் கண்ணீர் மல்கி, அழைப்பவர்களைத் தொழுது, அச்சூழலைப் புகழ்ந்து, அவர்கள் நாடியதைச் செய்துகொண்டும் இருந்தனர்.
சிங்கை, மலேசிய இலக்கியச் சூழல் என்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் இருந்து அங்கே சென்ற தமிழ் மறுமலர்ச்சி இயக்கங்களில் இருந்து உருவானது, அது ஓர் ஆக்கபூர்வமான தொடக்கம். சிங்கை, மலேசிய இலக்கிய முன்னோடிகள் அனைவரும் அந்த மறுமலர்ச்சி அலையில் உருவானவர்கள். அவர்களில் சாதனையாளர்கள் உண்டு, ஆனால் அந்த அலை கால்நூற்றாண்டுக்குப் பின் தேக்கம் அடைந்தது. கல்வியாலர்களால் அது கைப்பற்றப்பட்டது. நவீன இலக்கியம் நோக்கிய முன்னகர்வே நிகழாமல் பல பத்தாண்டுகள் சிங்கை, மலேசிய இலக்கியச் சூழலில் தேக்கம் நிலவியது. கல்வித்துறை வழியாகக்கூட நவீன இலக்கியம் அறிமுகம் செய்யப்படவில்லை. இதெல்லாம் மிக எளிமையாக வாசிப்பவர்களுக்குக் கூட இன்று தெரிந்த வரலாறு.
சுந்தர ராமசாமி நடுவராகச் செல்ல காரணமாக அமைந்தவர் நா.கோவிந்தசாமி. அவர் சிங்கை இலக்கியச் சூழலில் ஒரு கலகக்காரராக திகழ்ந்தவர். நவீன இலக்கியம் அறிந்தவர். சிங்கை சூழலின் அன்றைய தேக்கநிலை பற்றிய கடும் ஒவ்வாமையும் கொண்டவர். அவர் சிங்கப்பூரில் என்ன நிகழ்கிறது என்ற உண்மையை சிங்கப்பூர் அரசுக்குக் காட்ட விரும்பியதனால்தான் சுராவை அழைக்க ஏற்பாடு செய்தார் என்றே நான் அறிந்திருக்கிறேன். சு.ரா அன்று பல சர்வதேச இலக்கிய விழாக்களுக்கு அழைக்கப்பட்ட ஆளுமை, ஃப்ரான்ஸிஸ்வா க்ரோ போன்ற சர்வதேச அறிஞர்களால் பாராட்டப்பட்டவர். ஆகவே அவருடைய இடமும் தகுதியும் என்ன என்று சிங்கப்பூர் கலாச்சாரத்துறையினருக்குத் தெரியும். சு.ரா அவரிடம் எதிர்பார்க்கப்பட்டது போலவே அவருக்கு அளிக்கப்பட்ட கதைகள் எவையுமே கதைகளே அல்ல என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் அவை உண்மையிலேயே கதைகள் அல்ல. அவை பரிசுக்காக ஒப்பேற்றப்பட்டவை.
சு.ராவின் கருத்து அங்கே ஓர் அதிர்ச்சியை உருவாக்கியது. தமிழிலக்கியம் என்ற பேரில் என்ன நிகழ்கிறது, நிதி எப்படி எங்கே செல்கிறது என்பதை கவனித்தாகவேண்டும் என்ற கட்டாயத்தை அரசுக்கு அது உருவாக்கியது என்பதே நான் அறிந்தது. உண்மையில் சு.ரா இடித்துரைத்த பின்னர்தான் சிங்கப்பூர் இலக்கியத்தில் குறுங்குழு ஆதிக்கம் குறைந்தது. மிக ஆக்கபூர்வமான மாற்றங்கள் அதன்பின் உருவாயின. சிங்கப்பூரின் இளைய தலைமுறைக்கு அவர்கள் இலக்கியத்தில் இருக்கும் இடமென்ன என்று அப்பட்டமாக தெரியத் தொடங்கியது. அதைப்பற்றிய விவாதங்கள் வழியாக அவர்கள் தமிழில் எழுதப்பட்ட சிறந்த படைப்புகளை அறிமுகம் செய்துகொள்ளத் தொடங்கினர். அதுகாறும் கல்வித்துறை உட்பட அனைத்து தளங்களிலும் மறைக்கப்பட்டிருந்த நவீனத் தமிழிலக்கிய மேதைகள் அப்படித்தான் அங்கே அறிமுகமானார்கள்.
என்னிடம் ஒரு சிங்கை எழுத்தாளர் சொன்னார், புதுமைப்பித்தன் என ஒருவர் எழுதினார் என்பதையே அதன் பின்னர்தான் அவர் அறிந்தார் என்று. அதுவரை மு.வரதராசனார் மட்டுமே அங்கே இலக்கிய ஆளுமையாக கட்டமைக்கப்பட்டிருந்தார். அவரைத்தாண்டி நவீன இலக்கியம் நோக்கிய நகர்வு நிகழாமல் கல்வித்துறை இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது. ஆகவே இன்றைய சிங்கப்பூர் இலக்கியத்தின் நவீனத்தன்மை என்பது சு.ரா அந்தக் கதைகளைப் பற்றிச் சொன்ன அந்தக் கருத்தில் இருந்து தொடங்குகிறது என்பதுதான் உண்மை.
கு.அழகிரிசாமி மலேசிய இலக்கியம் பற்றிச் சொன்ன கடுமையான கருத்துக்கள் மலேசியாவில் அதிர்ச்சியை, ஒவ்வாமையை உருவாக்கின. ஆனால் அதன் விளைவாகவே அங்கே நவீன இலக்கியப் பிரக்ஞையும் உருவானது. இன்று வல்லினம் போன்ற இலக்கிய இதழில் எழுதும் படைப்பாளிகள் தமிழின் முதன்மையான படைப்பாளிகளுக்கு நிகராக வெளிப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் தொடக்கமெனக் கொண்டிருப்பது அந்த விவாதங்களையே. பல பத்தாண்டுகளுக்குப் பின் சு.ரா அதை சிங்கை இலக்கியத்திற்குச் செய்தார். அதன்பின் உருவான நவீனச் சிங்கை இலக்கியம் சு.ராவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.
சு.ரா இன்று இருந்திருந்தால் அங்குள்ள சில நவீன இலக்கியவாதிகளாவது அவர் முன் வந்து நின்று “இப்ப சொல்லுங்க, எப்படி இருக்கு எங்க கதை?” என்று தன்னம்பிக்கையுடன் கேட்கமுடியும். சுரா அதை புன்னகையுடன் ஏற்கவும்கூடும். அந்த இடம் அங்கே உருவானது அவர் முன்வைதத விமர்சனத்தால்தான். அது அங்குள்ள இளைய தலைமுறைக்குத் தெரியும்.
சரி, இதெல்லாம் இலக்கிய விஷயம், வாசிப்பவர்களும் எழுதுபவர்களும் பேசிக்கொள்ளவேண்டியது. எந்தத் தொடர்பும் இல்லாத முகநூல் வம்பர்களுக்கு என்ன வேலை இதில்? திரும்பத் திரும்ப இவர்கள் உருவாக்கும் இந்த வம்புகளுடனேயே நாம் ஏன் மோதிக்கொண்டிருக்கிறோம்?.
ஜெ
ஓஷோ: மரபும் மீறலும்-2
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
ஓஷோவின் சிந்தனை முறைமை
ஓஷோவின் சிந்தனைகளை பின்தொடர்பவர்களுக்கு ஒரு முறைமை, ஒருவித பாணி உள்ளது. அது என்ன என்பதை முதலில் சொல்ல விரும்புகிறேன். இவற்றையெல்லாம் ஒரு தனிப்பட்ட அவதானிப்பாகவே சொல்கிறேன். ஆனால் ஓஷோவை தொடர்ந்து படிப்பவர்கள், ஓஷோயிஸ்டுகளை தொடர்ந்து கவனிப்பவவர்களுக்கு நான் சொல்லும்பதே ‘சரிதான், இதை நான் கவனித்திருக்கிறேன்’ என்று சொல்லத்தோன்றும்.
1. சிந்தனை என்பது மின்னதிர்ச்சி போன்றது
ஓஷோ சிந்தனையாளர்கள் பொதுவாக சிந்தனை என்பது ஒருவித மின்னதிர்ச்சி அனுபவம் என்று நம்புவார்கள். தொட்டால் ஜிர்ரென்று ஏறவேண்டும் என்பதுபோல. ஏனெனில் ஓஷோ அவ்வாறுதான் இருக்கிறார். நெடுங்காலம் நீங்கள் ஓஷோவை படித்துக்கொண்டிருந்தீர்கள் என்றால் அந்தக்கருத்தைச் சென்று சேர்ந்துவிடுவீர்கள். ஓஷோவின் சிந்தனைகள் உங்களுக்கு என்ன மாதிரியான விறுவிறுப்பை, மின்னதிர்ச்சியை, துடிப்பை அளிக்கிறதோ அதை எல்லா சிந்தனைகளிலும் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அதனால்தான் ஓஷோவில் தொடங்கக்கூடிய பலர் ஓஷோவே தொடர் உரைகளாக நிகழ்த்தி எழுத்தில்வந்த கீதை உரை, தம்மபதம் உரை போன்ற பெரிய, அழுத்தமான நூல்களை படித்திருக்க மாட்டார்கள். அவருடைய எளிமையான தொகுப்புகளைத்தான் படித்திருப்பார்கள். ஏனெனில் சிந்தனை என்பது விறுவிறுப்பு என்ற எண்ணத்தால்தான்.
ஆனால் சிந்தனையில் பழக்கம் உள்ளவர்களுக்கும் தத்துவவாதிகளை பயில்பவர்களுக்கும் தெரியும், பெரும்பாலும் சிந்தனைகளுக்கு அத்தகைய ‘மின்னதிர்ச்சி’ அம்சம் கிடையாது என்று. சிந்தனையில் ஒருவித சுகம் இருக்கிறது. Philo-Sophia என்கிறார்கள். அறிவுத்தேவதையின் மேல் பற்று கொள்ளுதல் என்பதுதான் Philosophy. அதில் இருக்கும் இன்பம் என்பது மின்னதிர்ச்சி பெற்று மூளை துடித்தெழக்கூடிய அனுபவம் மட்டும் அல்ல. அதுவும் ஓர் அனுபவம் தான். ஆனால் அது ஒரு தொடக்கம் மட்டுமே. தொடக்கநிலையில் அவ்வாறு இருக்கலாம். ஆனால் பின்னால் செல்லச்செல்ல, மிகச்சரியாக ஒரு சிந்தனையை மற்றொன்றுடன் பொருத்தமுடிவதை கண்டுகொள்வதன் பேரின்பம்தான் தத்துவத்தின் இன்பம் என நாம் அறிவோம். அது, கட்டுமான விளையாட்டுப் பொருட்களை அடுக்கி அடுக்கி ஒரு கட்டமைப்பை உருவாக்கும் குழந்தை அடையும் இன்பம் போன்ற ஒன்று. நீங்கள் மலைகளை அடுக்கி அதை அடையமுடியும் என்றால் அது தத்துவத்தின் இன்பம். கட்டமைப்பதன் இன்பம், தொகுத்துக்கொள்வதன் இன்பம்.
நீங்கள் இரண்டு விஷயங்களை அவதானிக்கிறீர்கள். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு ஒருவித தாவலை நிகழ்த்துகிறீர்கள். அவ்வாறான பல அவதானிப்புகள் ஒரு மாயக்கணத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்து உங்களுக்கு ஒரு புரிதலை அளிக்கின்றன. ஒரு வரையறையை, அல்லது கொள்கையை திரட்டித்தருகின்றன. ஒன்றை கண்டடைவதே தத்துவத்தின் இன்பம் என்பது. அதில் ஒரு உழைப்பும் தொடர்ச்சியான கவனமும் உள்ளன. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்காக அகம் வளர்ந்து செல்லும் பயணம் உள்ளது. சில சமயங்களில் அது இயலாமல்போகும் தவிப்பும் உள்ளது. நீங்கள் அடுக்கி வைத்த ஆயிரத்தில் ஒன்றேயொன்று குறைவதனால் உருப்பெறாமல் இருக்கக்கூடிய தவிப்பு அது. நீங்கள் அறிந்த ஆயிரம், இன்னும் ஐந்தை அறிந்தால் முழுமையடையும். ஆனால் அந்த ஐந்தை அறிவதற்கு இன்னும் ஐம்பது ஆண்டுகள்கூட ஆகலாம். அதற்கான தவிப்பு அது.
சிந்தனை, தத்துவம் என்பது அப்படிப்பட்டதுதான். தத்துவம் என்பது எப்போதும் அந்த மின்னதிர்ச்சியை அளிக்கவேண்டியதில்லை. அதிலிருந்து மேலே செல்லும்போதுதான் உண்மையான தத்துவத்தின், மெய்யறிவின் சவால்கள் உள்ளன. ஆனால் தத்துவமும் மெய்யறிதலும் எப்போதுமே மின்னதிர்ச்சியை அளிப்பவை என்பதாக ஒரு எதிர்பார்ப்பை ஓஷோ உருவாக்குகிறார். இது பெரும்பாலும் ஓஷோயிஸ்டுகளுடைய சிந்தனை முறைமையாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
2 எதிர்ப்பு சிந்தனைமுறை
நான் பார்த்தவரை ஓஷோ சிந்தனையாளர்கள் அத்தனைபேருமே அவருடைய எதிர்ப்பு நோக்கையே தங்களுடைய சிந்தனை முறையாக கொண்டிருக்கிறார்கள். மேடையில் பேசத்தொடங்கும்போதே அவர்கள் எதிர்நிலை எடுக்கிறார்கள். சிந்தனையின் எதிர்நிலை என்பது ஒருவகையான குழி. அதில் தொடங்கி ,அதை பயின்றிருக்கிறீர்கள் என்றால் அதிலிருந்து அவ்வளவு எளிதாக வெளியே செல்லமுடியாது. நாத்திகத்தின் மிகப்பெரிய சிக்கலே, அதனால் ஆத்திகத்தை விட பெரிதாக ஆகமுடியாது என்பதுதான் என்துதான். ஏனெனில் அது எதிர்நிலை. எதை எதிர்க்கிறீர்களோ அதற்கு இணையாக மட்டும்தான் உச்சபட்சமாக செல்லமுடியும். அதற்குமேல் செல்லமுடியாது. நேர்நிலைச் சிந்தனைக்குத்தான் முடிவில்லாத வளர்ச்சி உள்ளது.
சிந்தனை என்பது தனது வழியை தானே உருவாக்கிக்கொண்டு செல்வது. வேறொன்றுக்கு எதிர்வினையாகவோ வேறொன்றை மறுத்தோ உருவாவதல்ல. அதன் தொடக்கநிலையில்கூட அதற்கு முன்செல்லும் உந்துதல்தான் இருக்குமேவொழிய விலகிச்செல்லும் சக்தி இருக்காது. ஆகவே வேறு எதுவொன்றை மறுத்தும் எதிர்த்தும் உருவாகக்கூடியது தன்னளவிலேயே இரண்டாம்நிலைச் சிந்தனையாகத்தான் இருக்கமுடியும்.
3 விவாத மறுப்புத்தன்மை
விவாதங்களை மறுக்கக்கூடிய தன்மை ஓஷோவின் சிந்தனைகளில் உண்டு. ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஓஷோ மிகத்தீவிரமாக இந்திய சிந்தனையின் மையத்தில் இருந்திருக்கிறார். காந்தியம், சோஷலிசம் தொடங்கி எல்லா வகையான சிந்தனைமுறைகளையும் ஓஷோ மறுத்து பேசியிருக்கிறார், நிராகரித்திருக்கிறார். இந்திய சனாதனம் அதற்கு எதிரான இந்திய மார்க்ஸியம் இரண்டுக்கும் எதிரி அவர். ஆனால் எந்தவொரு மாற்று சிந்தனைமுறையுடனாவது அவர் உரையாடலை தொடங்கியிருக்கிறாரா? அல்லது ஓஷோ மரபினர் உரையாடியிருக்கிறார்களா?
உரையாடல் என்பது சிந்தனையில் மிக முக்கியமான அம்சம். இரண்டுவகையான முரணியக்கங்கள் வழியாகத்தான் சிந்தனை முன்னகர முடியும்.
அ. மாற்று சிந்தனைகளுடனான முரணியக்கம் – ஒரு சிந்தனை தனக்கு இணையான மாற்று சிந்தனை வழியாக முரணியக்கத்தை நிகழ்த்தும். இது நேர்கருத்து (Thesis) என்றால் அது முரண்கருத்து (Anti Thesis). இவைகளுடைய உரையாடல் வழியாகத்தான் அந்த சிந்தனை முன்னகர முடியும் (Synthesis). இதைத்தான் முரணியக்கம் (Dialectics) என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சிந்தனை தனக்கு இணையான மாற்றுச் சிந்தனையுடன் விவாதித்து, அதிலிருந்து பெற்றுக்கொண்டும், அதை மாற்றிக்கொண்டும் முன்னகரும்.
ஆ. தனக்குள்ளேயே முரண்படுவதன் முரணியக்கம் – ஒரு சிந்தனை தனக்குத்தானே முரண்பட்டு தனக்குள் ஒரு முரணியக்கத்தை உண்டாக்கிக்கொள்ளும். தலைப்பிரட்டை தனது வாலால் தன்னைத்தானே சவுக்கால் அடித்து முன்னகருகிறது என்று ஒரு அழகான கவிதை வரி உண்டு.
சிந்தனைகளில் இத்தகைய முரணியக்கம் முக்கியமானது. ஓஷோவின் சிந்தனைகளில் உள்ள முக்கியமான குறைபாடுகளில் ஒன்று இத்தகைய உரையாடலோ முரணியக்கமோ இல்லாததே. ஓஷோவின் மொத்த சிந்தனைச் செயல்பாடுமே எதிர்தரப்பை எள்ளி நகையாடுவதாகத்தான் இருக்கும். எதிர்தரப்பை அவதூறு செய்யவும், கீழ்மைப்படுத்தவும்கூட அவர் எப்போதும் முயன்றிருக்கிறார். அவருடைய உரைகளில் காந்தியைப் பற்றி சொல்லப்பட்டவைகளை பார்த்தீர்கள் என்றால் தெரியும். நம் சூழலில் காந்தி பற்றிப் பேசப்பட்ட எல்லா அவதூறுகளையும் வசைகளையும் எந்தப் பரிசீலனையும் இல்லாமல் ஓஷோ தானும் சொல்லியிருக்கிறார். இன்றுவரைக்கும் இந்த மூன்றாவது அம்சம் ஓஷோயிஸ்டுகளின் பலவீனமாக உள்ளது. இன்றுகூட சமூகவலைதளங்களில் பார்த்தால், ஒரு கருத்துக்கு எதிராக எல்லா தரப்பும் கருத்து சொல்லியிருக்கும். ஆனால் ஓஷோ தரப்பின் கருத்து இருக்காது. அந்தக்குரல் வேறெங்கோ தனியாக ஒலித்துக்கொண்டிருக்கும்.
இம்மூன்று அம்சங்களும் கூடியது ஓஷோவின் சிந்தனைப்பாணி . இந்த பாணியை பற்றி இங்கு குறிப்பிடக்காரணம், நாம் நினைப்பதுபோல நாமனைவரும் சுதந்திர சிந்தனையாளர்கள் அல்ல என்பதே. நாம் அனைவருமே நமக்குரிய சிந்தனைப்பாணியை (Pattern) கொண்டிருக்கிறோம். மீண்டும் இங்கு ஓஷோவின் பாணியை பின்பற்றி ஒரு நகைச்சுவை சொல்லலாம். ஒரு சிறுவன் பள்ளிக்கூடத்திற்கு தாமதமாக வருகிறான். ஏன் தாமதம் என்று ஆசிரியர் கேட்கிறார். ‘எங்க வீட்டு பசுவை காளையிடம் கொண்டுசெல்ல வேண்டியிருந்தது, அதனால் தாமதம்’ என்றான் சிறுவன். ‘உங்க அப்பாவிடம் சொல்லவேண்டியதுதானே’ என்று ஆசிரியர் கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன், ‘சொல்லலாம்தான். ஆனால் காளைதானே அதற்கு பெஸ்ட் !’ என்கிறான்.
நம் மனதிற்குள் இதுபோன்ற ஒரு முறைமை இருக்கும். அதனடிப்படையில்தான் நாம் சிந்திக்க முடியும். நாம் அந்த முறைமையை கவனித்திருக்க மாட்டோம். ஆனால் நாம் தன்னியல்பாக அந்த வகையில்தான் சிந்திப்போம். ஒரு சூட்டுக்கோலால் சூடுபட்டால்தான் துள்ளி அந்தப்பக்கம் செல்வோம். அதுவரை நாம் நமது எல்லைகளை கடக்க மாட்டோம். ஆஸ்திரேலியா சென்றபோது ஒன்று சொன்னார்கள். கிட்டத்தட்ட கன்னியாகுமரி ஜில்லா அளவுக்கு பெரிய மாட்டுப்பண்ணைகள் அங்கே இருக்கின்றன. ஐம்பதாயிரம் ஏக்கர், ஒரு லட்சம் ஏக்கர் அளவுக்கு பெரிய பண்ணைகள். அங்கு முழுக்க மாடுகள் வளர்க்கின்றனர். ஆஸ்திரேலியா ஆழமில்லாத மண் கொண்டதால் அங்கு பெருமளவுக்கு புல்வெளிகள்தான் இருக்கும். இந்த புல்வெளிகளில் மாடுகளை வளர்க்கத் தொடங்கும்போதே சுற்றிலும் மின்வேலி அமைத்து மின்சாரத்தை பாய்ச்சிவிடுவார்கள். அதற்குள் மாடுகளை விட்டு வளர்ப்பார்கள். மின் அதிர்ச்சியை அடையும் மாடுகள் அந்தக் கம்பியை நெருங்காது. சிறிது நாட்களுக்குப் பின் மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள். ஆனால் எந்த மாடும் மின்வேலியை தாண்டிச்செல்லாது. மேலும் சில நாட்கள் கழித்து அங்கு வேலியே இல்லாமலாகிவிடும். ஆனால் உளரீதியாக எந்த மாடும் அந்த வேலி இருந்த எல்லையை தாண்டிச்செல்லாது. ஏதோ ஒரு மாடு எதனாலோ அஞ்சி ஓடி வேலியைத் தாண்டிவிட்தென்றால் அதன்பின் மற்ற மாடுகளும் தாண்டிவிடும்.
சிந்தனையிலும் நமது முறைமைகள், எல்லைகள் நம்மை அறியாமலேயே உருவாகி விடுகின்றன. அந்த முறைமைக்குள்தான் நாம் மீண்டும் மீண்டும் சிந்திக்கிறோம். ஏன் புத்தகங்களை படிக்கவேண்டும், ஏன் ஆசிரியர்களை தேடிச்செல்ல வேண்டும் என்றால் புதிய சிந்தனைக் கருத்துகளை தெரிந்துகொள்வதற்கு அல்ல; நாம் இப்போது சிந்திக்கும் முறைமையை உடைத்து வேறொரு சாத்தியத்தை அடைவதற்காகவே. அதனால்தான் நல்லாசிரியர்கள் யாருமே அன்பானவர்களோ இனிமையானவர்களோ இருப்பதில்லை. அவர்கள் பெரும்பாலும் மறைந்த பின்னர்தான் நம்மால் நேசிக்கப்படுகிறார்கள். அது என்னுடைய அனுபவமும் கூட. ‘புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்து வெளியே போ’ என்று ஊட்டி குளிரில் நித்யா என்னை வெளியே நிற்கவைத்திருக்கிறார். எனது எழுத்தாளன் எனும் ஆணவத்தின்மேல் அதிகமான அடிவிழுந்த தருணங்களை நான் ஊட்டியில் எனது ஆசிரியர் முன்னால் அமர்ந்துதான் அடைந்திருக்கிறேன். ‘இந்த ஆள் என்ன பெரிய ஆளா?’ என்று நானே சொல்லிக்கொண்டு கிளம்பி நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டேன். பிறகு அது மிகவும் அற்பமானதாக தோன்றி இரண்டுநாட்களில் மீண்டும் கிளம்பி ஊட்டி சென்றேன்.
நான் ஒரு விஷயத்தை எனக்கான வழியில் தன்னியல்பாக யோசிக்கிறேன். அந்த பாதையில் இருந்து விலக்கி கொண்டுசெல்வது அவ்வளவு எளிதல்ல.அதனால்தான் ஓஷோ உருவாக்க்கும் இந்த முறைமை பற்றிய கவனம் நமக்கு வேண்டும் என்கிறேன். அதை நாம் கண்காணிக்கவேண்டும், அதில் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோமா என்று நாமே பரிசீலனை செய்துகொள்ளவேண்டும்.
அப்படியெனில் ஓஷோ அளித்த கொடை என்னவாக இருக்கும் என்பதுதான் அடுத்த கேள்வி. இந்திய சிந்தனை முறைக்கு ஓஷோ எதை அளித்தார் ?
(மேலும்)
அ.கி. ஜயராமன்
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர், இதழாசிரியர். காதம்பரி மாத இதழை அ.கி.கோபாலனுடன் இணைந்து நடத்தினார். ஜோதி நிலையம் பதிப்பகத்தின் நிறுவனர். இப்பதிப்பகத்தின் வழியாக வெளியான மொழிபெயர்ப்புகள் முக்கியமானவை. சரத் சந்திரரின் பெரும்பான்மையான நாவல்கள், சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்ததில் முக்கியப்பங்கு வகித்தவர்.

புராணமயமாதல் எங்கும்…

புராணமயமாதல் என்ற கட்டுரையைக் கண்டேன். மனிதர்களை அதீதமாகப் புகழ்வதும், தாங்கள் அறிந்த எல்லா அற்புதக் கதைகளையும் அவர்கள் மேல் ஏற்றுவதும் நம் வழக்கம். இது நம்முடைய கல்வியறிவில்லாத பழைய மனநிலையில் இருந்து வருவது. வாய்மொழிப் பண்பாடும் எழுத்துப் பண்பாடும்கட்டுரையில் நீங்கள் சொன்னதுபோல இது நம்முடைய வாய்மொழி- புராண மரபு சார்ந்த மனநிலை. எத்தனை படித்தாலும் நாம் வெளியே வருவதில்லை.
புராணமயமாதல் எங்கும்…
This shows the real problem of India: we have too much history to know and preserve. That is why we never bother about our history. We discuss history only if it is useful for our silly caste and religious politics.
Our history and we..
தமிழ்விக்கி தூரன் விழா: அழைப்பிதழ், வருகைப்பதிவு
ஆண்டுதோறும் தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பாக கலைக்களஞ்சியத் தந்தை பெரியசாமி தூரன் நினைவாக ஆய்வாளர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறோம். தமிழ் விக்கி -தூரன் விருதுகள் இது வரை
2022 கரசூர் பத்மபாரதி (மானுடவியல் ஆய்வாளர்)2023 மு. இளங்கோவன் (பண்பாட்டு ஆய்வாளர்)2023 எஸ்.ஜே. சிவசங்கர் (வட்டாரப் பண்பாட்டு ஆய்வாளர்)(சிறப்பு விருது)2024 மோ.கோ. கோவைமணி (சுவடியியல் ஆய்வாளர்)ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முனைவர் வெ.வேதாசலம் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
விருதுவிழா வரும் ஆகஸ்ட் 16 (சனி) அன்று மாலை நிகழ்கிறது. வழக்கம்போல ஈரோடு நகர் அருகே கவுண்டச்சிப்பாளையம் (சென்னிமலை சாலை) ராஜ்மகால் திருமணமண்டபத்தில் இந்த விழா நடைபெறும்.
இவ்விழாவில் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்கிறார்கள். வரலாற்றாசிரியரும் தொல்லியலாளருமான முனைவர் எ. சுப்பராயலு கலந்துகொள்கிறார். கூடவே ஆந்திர நாட்டு தொல்லியலாளர் பேரசிரியர் வசந்த் ஷிண்டே கலந்துகொள்கிறார்.
எல்லா ஆண்டும்போல ஒருநாள் முன்னரே ஆகஸ்ட் 15 அன்று பிற்பகல் முதல் உரையாடல் அமர்வுகள் தொடங்குகின்றன.
அறிவுத்தளத்தில் செயல்படும் ஒருவருக்கு தொல்லியல், வரலாறு போன்ற களங்களில் என்ன நிகழ்கிறது என்று அறிவது அடிப்படைத்தேவை. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இன்று இல்லை. பொதுவாசகர்கள் அவ்வாறு அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக இந்த உரையாடல் அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை அரங்கினர் கேட்கும் வினாக்களுக்கு நிபுணர்கள் பதில் சொல்லும் வகையில் அமைந்துள்ளதனால் மிகச்சுவாரசியமான நிகழ்வுகளாகவே ஒவ்வொரு ஆண்டும் அமைந்து வருகின்றன. தமிழகத்தில் இத்தகைய ஓர் அரங்கு இதுவே முதல்முறை. வாசகர்கள், அறிவுச்செயல்பாட்டில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
உரையாடல் அரங்குகள் ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை (மாலை) ஆறுமுக சீதாராமன் (நாணயவியல் ஆய்வாளர்)முனைவர் வெ.வேதாசலம் (தொல்லியல் ஆய்வாளர், விருதுபெறுபவர்)ஜி. கண்ணபிரான் (வானியல் ஆய்வாளர்)உரையாடல் அரங்குகள் ஆகஸ்ட் 16 சனிக்கிழமை காலைவேலுதரன் (சிற்பவியல் ஆய்வாளர்)முனைவர் வசந்த் ஷிண்டே (தொல்லியல் ஆய்வாளர்)முனைவர் சுப்பராயலு (கல்வெட்டு ஆய்வாளர்)
வழக்கம்போல இந்த ஆண்டும் தமிழிசை அறிஞராகத் திகழ்ந்த பெரியசாமி தூரன் நினைவாக தமிழின் மிகச்சிறப்பான நாதஸ்வரக் கலைஞர்குழு ஒன்றை தெரிவுசெய்து அடையாளம் காட்டுகிறோம். ஒலிப்பெருக்கி இல்லாமல், மென்மையான இசையாக நாதஸ்வர இசை நிகழும்.
சிறப்பு நாதஸ்வரம் மயிலை எம்.கார்த்திகேயன், கோளேரி ஜி. வினோத்குமார் சிறப்பு தவில் அடையார் ஜி. சிலம்பரசன், கும்முடிப்பூண்டி ஆர்.ஜீவாநண்பர்கள் வெள்ளியன்றே வந்து கலந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறோம். தங்கும் வசதி- உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கும்வசதி விரும்புவோர் கீழ்க்கண்ட படிவத்தை நிரப்பி பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
வருகைப் பதிவுக்கான படிவம் இணைப்புJuly 27, 2025
ஓஷோ: மரபும் மீறலும்-1
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
நண்பர்களே, இந்த கிக்கானி அரங்கில் தொடர்ந்து பல உரைகளை ஆற்றியிருக்கிறேன். இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் தொடரும் உரைகளையும் ஆற்றியிருக்கிறேன். இருந்தும் ஒவ்வொரு முறையும் மேடையேறும்போது வரும் மெல்லிய பதற்றத்திற்கு இப்போதும் ஆளாகிறேன். முதன்மையாக, நான் என்னை ஒரு பேச்சாளனாக கருதிக்கொள்ளவில்லை. நான் பெரிதும் மதிக்கும் மரபின் மைந்தன் முத்தையா போன்ற பெரும் பேச்சாளர்கள் இருக்கும்போது நான் எழுத்தாளன் என்ற தகுதியோடுதான் பேசவேண்டியுள்ளது. அதற்கப்பால், இது ஓஷோவை பற்றிய உரை. இந்த கோவை ஓஷோவினுடைய மையங்களில் ஒன்று. நான் இணையத்தில் தேடிப்பார்த்தபோது இங்கு ஓஷோவை பற்றி பேசக்கூடிய, ஓஷோவின் டைனமிக் தியான பயிற்சிகளை அளிக்கக்கூடிய ஏறத்தாழ முப்பது நாற்பது மையங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் ஓஷோவின் சிந்தனை வலுவாக இருக்கும் இடங்களில் ஒன்று கோவை. ஆகவே கோவையில் பேசுவது என்பது ஒரு சிக்கலான விஷயம்.
ஓஷோவின் பாணியில் சொல்வதென்றால் இதற்கு ஒரு நகைச்சுவையை சொல்லலாம். இது சினிமாவில் பேசப்படும் சன்னிலியோன் பற்றிய நகைச்சுவை. அவர் சஞ்சய்லீலா பன்சாலியின் படத்தில் நடிக்கிறார். அப்போது பன்சாலி அவரிடம் ஒரு காட்சியை விவரிக்கிறார். ‘நீங்கள் ஜன்னலோரமாக தொடுவானத்தை பார்த்துக்கொண்டு கண்களில் கண்ணீரோடு நிற்கிறீர்கள். சல்மான்ஜி உங்கள் பின்னால் வந்து உங்களை அணைத்து ஆறுதலாக…’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சன்னி அவரிடம் நிறுத்தும்படி கையை காண்பித்து, ‘டாகி பொசிஷன் தானே, மேற்கொண்டு சொல்’ என்றாராம். ஆகையால் ஏற்கெனவே தெரிந்த ஒன்றையே ஓஷோ ரசிகர்களுக்கு சொல்கிறேனா என்ற எண்ணம் ஏற்படாமல் இல்லை. அவர்களுக்கு தெரியாத ஒன்றை சொல்கிறேன், அல்லது அவர்கள் யோசிக்காத கோணத்தில் அவர்களுக்கு தெரிந்த ஒன்றை சொல்கிறேன் என்று எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த உரையில் ஓஷோ என்ன சொல்கிறார், அவர் தரப்பு என்ன, அவரது கருத்துகள் என்ன என்பதை நான் சொல்லவரவில்லை. ஏனெனில், ஓஷோவா ஜெயமோகனா யார் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் என்று கேட்டால் அது ஓஷோதான். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் அதிகமாக வாசிக்கப்படும் நூல்கள் ஓஷோ எழுதிய நூல்கள்தான். தமிழில் அதிகமாக விற்கும் மூன்று எழுத்தாளர்களில் ஒருவர் ஓஷோ. ஓஷோவின் படைப்புகளை கோவையை சேர்ந்த புவியரசு போன்றவர்கள் அற்புதமாக மொழிபெயர்த்து தமிழில் கொண்டுவந்தார்கள். கண்ணதாசன் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் ஓஷோவை வைத்தே பணக்காரர்கள் ஆனார்கள். ஓஷோ அந்த அளவுக்கு தமிழில் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். ஆகவே ஓஷோவை நான் அறிமுகப்படுத்துவது என்பது எம்.ஜி.ஆரையோ கருணாநிதியையோ அறிமுகப்படுத்தி உரையாற்றுவதற்கு சமம். அவர் புகழ்பெற்ற பெரிய ஆளுமை. நான் ஓஷோவை வகுத்துக்கொள்ள, ஓஷோவை ஒட்டுமொத்தச் சிந்தனைபரப்பில் பொருத்திக்கொள்ள முயல்கிறேன்.
ஓஷோவின் பெரும்புகழ்
ஓஷோவின் புகழுக்கு என்ன காரணம் என்ற கேள்வியிலிருந்து இந்த உரையை தொடங்கலாம் என்று நினைக்கிறேன். தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்கவே ஓஷோவுக்கு அந்த பெரும்புகழ் எங்கிருந்து வருகிறது ?
ஓஷோவின் புகழுக்கான காரணங்களாக சில அம்சங்களை சொல்லலாம்.
1.மீறல்
ஓஷோவை புகழ்பெறச்செய்யும் முதல் விஷயம், ஓஷோவிடம் இருக்கும் மீறல் எனும் அம்சம். இளைஞர்கள் படிக்கத்தொடங்குவதே பதின்பருவத்தில்தான். அந்த பருவத்தில் அவர்களுக்கு மீறல்தான் முக்கியமாக உள்ளது. அவர்கள் தந்தையிடமிருந்தும்; குடும்பம், மதம், அரசாங்கம், பள்ளிக்கூடம், ஆசிரியர்கள் போன்றவற்றிடமிருந்தும் வெளியேற விரும்புகிறார்கள். அப்படி வெளியே கூட்டிச்செல்பவராக ஓஷோ இருக்கிறார். மீறல்தான் ஓஷோவின் மையமான கருத்தாக இருக்கிறது. துடிப்புறச் செய்யக்கூடிய, மீறிச்செல் என்று சொல்லக்கூடிய ஒன்றாக அவரது எழுத்துகள் உள்ளன.
எனது நண்பர் ஒருவர் சொன்னதுபோல, பதின்பருவத்தில் சிகரெட் பிடிப்பது போலத்தான் ஓஷோவை படிப்பது. சிகரெட் என்பது சிகரெட்டிற்காக பிடிக்கப்படுவது அல்ல. சிகரெட் பிடிக்கக்கூடாது என்று அப்பா சொல்வதால், சிகரெட் பிடிப்பதை தெரிந்துகொண்டால் அவர் அதிர்ச்சியடைவார் என்பதனால், அது அளிக்கக்கூடிய விறுவிறுப்பிற்காக சிகரெட் பிடிக்கிறார்கள். அத்துமீறல் எனும் அம்சம் ஓஷோவை தமிழகம் முழுக்க கொண்டுசென்று சேர்க்கிறது.
2. எதிர்ப்பு
நாம் அனைவ் அனைவருக்குமே வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் உங்களை நோக்கி பேசப்படுபவைகளை எதிர்த்து பேசவேண்டிய ஒரு சூழல் ஏற்படுகிறது. நமது சிந்தனை எப்படி உருவாகி வருகிறது என்பதை பார்த்தால் தெரியும். பிறந்ததில் இருந்து நம்மிடம் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். மூக்கில் கைவைக்காதே, கையை கழுவு என்று தொடக்கி; பொய் சொல்லாதே, வீட்டுப்பாடம் எழுது என்பதாக நம்மை நோக்கி ஆணைகள் கொட்டப்படுகின்றன. கடவுள், ஆசாரம், அரசாங்கம், ஒழுக்கம் , அறம் என சிந்தனைகள் நம் மேல் அழுத்தப்படுகின்றன. ஏதோவொரு கணத்தில் நாம் எதிர்ச்சொல் கூறவேண்டிய நிலை வரும்போது நமக்கு ஒரு வீம்பு உருவாகி வருகிறது. அக்காலகட்டத்தில்தான் எல்லாவிதமான எதிர்ப்புச் சிந்தனைகள் மீதும் ஈர்ப்பு ஏற்படுகிறது.
ஓஷோவிடம் மொத்தமாகவே ஒருவித எதிர்ப்பு இருக்கிறது. அவர் எதிர்ப்புநிலையுடன் வெளிப்படுகிறார் என்ற எண்ணம் ஒரு தொடக்கநிலை வாசகனுக்கு அவரை முக்கியமானவராக ஆக்குகிறது. அதுதான் அவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த வட்டாரங்களில் இருக்கும் முக்கியமான எதிர்ப்புச் சிந்தனையாளர்களுடன் அடையாளப்படுத்த வைக்கிறது.தமிழகத்தில் ஓஷோவை பேசக்கூடிய பலர் இங்கு ஏற்கெனவே மரபு எதிர்ப்புத்தன்மையுடன் பேசியவர்கள், அல்லது சிந்தனையை ஒருவித எதிர்ப்புத்தன்மையுடன் முன்வைத்தவர்களுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இங்கு பலர் ஓஷோவை ஈ.வெ.ரா.வுடன் அடையாளப்படுத்துவதை நீங்கள் பார்க்கலாம். இத்தகைய எதிர்ப்பு அம்சம் ஓஷோவை தொடர்ந்து வாசிக்க வைக்கும் ஓர் எழுத்தாளராக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.
3. மேற்கோள்களாக ஆகும் தன்மை
ஓஷோவின் புகழுக்கு முக்கியமான காரணமாக இருப்பது, அவர் மேற்கோள்களாக, துணுக்குகளாக, தனித்தனிச் செய்திகளாக உடைப்பதற்கு ஏற்ற எழுத்தாளராக இருப்பதே. கோவில்பட்டி கடலைமிட்டாய் போல துண்டுதுண்டுகளாக உடைப்பதற்கென்றே அவை உள்ளூர ஆக்கப்பட்டிருக்கின்றன என்று படுகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் சிந்தனையாக, ஒரு முழுமையான வடிவில் ஓஷோ உங்களிடம் வந்து சேர்வதில்லை. உண்மையிலேயே அவரிடம் அத்தகைய ஒத்திசைவு அல்லது ஒற்றைநோக்கு கிடையாது. அவரிடம் ஒருங்கிணைந்த தத்துவப்பார்வையே இல்லை. ஆகவே வாரஇதழ்த் துணுக்குகளாக ஓஷோவை கொண்டுசென்று சேர்க்க முடியும். பீன் பேக் (bean bag) இருக்கைகளைக் குழந்தைகள் கிழித்துவிட்டால் அதன்பிறகு எதுவுமே செய்யமுடியாது. அந்த அறை முழுக்க அந்த சிறிய உருளைகள் பரவிவிடும். அதுபோல ஓஷோவின் ஒரு புத்தகம் துகள்களாக மாறி ஒரு நாடுமுழுக்க பரவிவிடும். மீண்டும் அதை திரட்ட முடியாது. இங்கு பெரும்பாலானோர் மேற்கோள்களாகத்தான் ஓஷோவை தெரிந்து வைத்திருக்கின்றனர். ஏழாவது எட்டாவது படிக்கும்போதே ஓஷோ தெரியவந்துவிடுகிறார்.
ஆசிரியர்களாகிய எனது நண்பர்கள் சொல்வார்கள், பள்ளியில் படிக்கும் பையன்களில் ஒரு பையன் ஓஷோவை படித்துவிட்டால் அந்த வகுப்பில் பத்து பதினைந்துபேர் ஓஷோவை படித்துவிடுவர் என்று. ஒரு தொற்றுநோய் போல அவர் பரவிவிடுவார். ஆசிரியர்கள் இன்னொன்றையும் சொல்வார்கள். எந்த பையன் ஓஷோவை படிக்கிறானோ அவன் பெரும்பாலும் தேர்வுகளில் தோற்றுவிடுவான். என்ன காரணம் என்றால் ஓஷோ அமைப்புகளுக்கு எதிரானவர். இந்த பையன் படிப்பது மனிதர்கள் உருவாக்கியதிலேயே மிகப்பெரிய அமைப்பான கல்விக்கூடத்தில். அதனால் அவனது முதல் எதிர்ப்பே கல்விக்கூடத்திற்கு எதிரானதாக இருக்கும். ஆகவே அவன் ஆசிரியர்களுக்கு எதிராகவே திரும்புவான். அதனால் பெரும்பாலும் தோற்றுவிடுவான். எனவே வகுப்புகளில் ஓஷோ என்ற சொல்லையே சொல்லவிடமாட்டேன் என்று சொல்லும் ஆசிரியர்களை நான் சந்தித்திருக்கிறேன்.
4. எளிமை
இம்மூன்று காரணங்களால் ஓஷோ தமிழகம் முழுக்க இளைஞர்கள் நடுவே பரவலாக புகழ்பெற்று இருக்கிறார். அதன் பின்பும் அவருக்கு ஒரு முகம் இருக்கிறது. அதை நான்காவதாக சொல்லலாம். அது அவர் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் என்பதால். அவர் மிக எளிமையான, மிக வெளிப்படையான மொழி கொண்டவர். மிக எளிமையாக திரும்பத் திரும்ப சொல்வார். ஓஷோவை கடந்து வந்தவர்கள் சொல்லும் முதல் குற்றச்சாட்டு என்பது அவர் மீண்டும் மீண்டும் சொல்கிறார் (He repeats) என்பதே. சிந்தனையில் அறிமுகமாகும் ஒருவனுக்கு ஓஷோவின் எளிமை மிக சௌகரியமானதாகவும், இதமானதாகவும் உள்ளது. அவர் புரிந்துகொள்வதற்கான சவால்களை உங்களுக்கு அளிப்பதில்லை. தொடர்ச்சியாக உங்களை உள்ளே அமரவைத்திருக்கிறார், உங்களை ஆக்கிரமிக்கிறார். எவ்விதமான சிடுக்குகளையும் அவர் அளிப்பதில்லை.
ஆனால் உண்மையில் சிந்தனை என்பது அப்படியில்லை. நீங்கள் அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு வந்து தீவிரமான சிந்தனைகளை சந்திக்கநேர்ந்தால் அந்த எளிமை என்பது வெறும் தொடக்கம் மட்டும்தான், ஆரம்ப பள்ளிக்கூடம் மட்டும்தான் என்பது தெரியவரும். சிந்தனை என்பது அடுக்குகளாகவும் சிடுக்குகளாகவும் செல்லக்கூடியது; அது முரணியக்கங்களால் ஆனது; ஒன்றிலிருந்து இரண்டுக்கு அல்ல, ஒன்றிலிருந்து எண்பத்தெட்டுக்கு தாவவேண்டியது என்பது உங்களுக்கு தெரியவரும். அது தெரியவருகிறவரைக்கும் ஓஷோ உங்களை மிக வசதியாக உள்ளே உட்காரவைத்திருப்பார்.
ஓஷோவின் வாசகர்களாக நாம் பார்ப்பவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் ஆரம்பநிலையில் ஓஷோவை அறிமுகம் செய்துகொண்டவர்கள். அந்த ஆரம்பநிலைக்கு மேல் அடுத்தகட்ட நகர்வு இல்லாமல் பெரும்பாலும் ஓஷோவின் உலகிலேயே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். இந்த காரணத்தினாலேயே ஓஷோவை தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழில் ஏறத்தாழ ஓஷோவின் 350 நூல்கள் வாசிக்கக்கிடைக்கின்றன. தமிழர்களுடைய படிப்புப்பழக்கத்தின் அளவை வைத்துப்பார்த்தால் பத்தாண்டுகள் ஓஷோவை மட்டும் படித்து ஒருவன் வாசகனாக திகழ்ந்துவிட முடியும். ஆகவேதான் ஓஷோ இங்கு இந்த அளவிற்கு புகழ்பெற்று இருக்கிறார்.
ஓஷோவும் நம் எல்லைகளும்
ஓஷோவை இங்கு பலவகைகளில் மேற்கோள் காட்டுபவர்கள் தங்களுடைய எல்லைகளை ஓஷோமேல் ஏற்றுகிறார்கள். அதன் பிரச்சனைதான் இங்குள்ளது. ஓஷோவை அவர்கள் எப்படி புரிந்துவைத்திருக்கிறார்களோ அதன் வழியாக நாம் ஓஷோவை பார்க்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். ஓஷோவின் உலகம் மிகப்பெரியது, மிக விரிவான சிந்தனை முறைகளை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார். ஆனால் கடந்த ஐம்பதாண்டுகளில் ஓஷோவின் பின்புலம் என்ன, எங்கிருந்து தொடங்கி அவர் ஓஷோ வரை வந்திருக்கிறார், ஓஷோவுக்கும் இன்று இந்தியாவில் இருக்கும் பிற சிந்தனைமுறைகளுக்கும் இடையேயான ஒப்பீடும் உறவும் முரண்பாடும் என்னென்ன, இன்று உருவாகி முன்சென்றுகொண்டிருக்ககும் சிந்தனைகளோடு ஓஷோவுக்கு இருக்கும் தொடர்பு என்ன போன்ற விஷயங்களை பற்றி தமிழில் எனக்குத்தெரிந்து எதுவுமே எழுதப்படவில்லை. அதைப்பற்றி யாரும் பேசி நான் கேள்விப்பட்டதும் இல்லை. இதுதான் நம்முன் இருக்கும் முக்கியமான சவால்.
ஓஷோவினுடைய சிக்கலே இதுதான் என்று சொல்லலாம். ஓஷோ ஒருமுறை சொன்னார், ”ஜே.கிருஷ்ணமூர்த்தி, யாரும் தன்னை பின்தொடர வேண்டாம் என்றார். ஆனால் நான், எல்லோரும் என்னை பின்தொடருங்கள் என்று சொல்கிறேன். கிருஷ்ணமூர்த்தியை எல்லோரும் பின்தொடர்கின்றனர், என்னை யாருமே பின்தொடர்வதில்லை”. ஆனால் உண்மையில் நமக்கு, நம் பொருட்டு சிந்திப்பதை இன்னொருவரிடம் ஒப்படைப்பது என்பது சௌகரியமாக உள்ளது. ஓர் ஆசிரியரோ சிந்தனையாளரோ சிந்திக்க வேண்டும், அதை அவர் புத்தகமாக எழுதவேண்டும், நாம் அதை மேற்கோள்காட்டி பேசிக்கொண்டிருக்கவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். ‘அவர் சொன்னதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்’ என்று ஒரு சிந்தனையாளரை பின்பற்றுபவரிடம் நாம் கேட்கமுடியாது. ஓஷோவை பின்தொடர்பவர்கள் எவருமே ஓஷோவை பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை சொல்பவர்கள் அல்லர். ஓஷோ இப்படி சொல்கிறார், அப்படி சொல்கிறார் என்பவர்கள், ‘ஓரிடத்தில் ஓஷோ சொல்கிறார்…’ என்று ஆரம்பிப்பவர்கள். அத்தகைய மனநிலைக்கு எதிராகத்தான் நான் இங்கு எனது ஒட்டுமொத்த உரையையும் வடிவமைத்திருக்கிறேன். ஆகவே இது ஒரு கட்டமைக்கும் உரையல்ல. ஒருவகையில் கட்டவிழ்க்கும் உரை.
(மேலும்)
லட்சுமிஹர்
தமிழில் புனைகதைகள் எழுதிவரும் எழுத்தாளர், சிறுகதையாசிரியர். திரைப்படத்துறையில் படத்தொகுப்பாளராகப் பணிபுரிகிறார்.
லட்சுமிஹர்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
