Jeyamohan's Blog, page 50
July 25, 2025
கே. செல்வம்
கே. செல்வம் விழுப்புரம் மாவட்டம் பனைமலை அஞ்சல் வெள்ளையம்பட்டு என்ற ஊரில் கண்ணாயிரத்திற்கு மகனாக 1959-ல் பிறந்தார். அப்பா கூத்துக் கலைஞர். எட்டாம் வகுப்பு வரை பயின்றார். கூத்து இல்லாத நாட்களில் விவசாயம் பார்ப்பார்.

வாசகனின் எதிர்பார்ப்பு
நான் உங்களுடைய எழுதும் கலை போன்ற நூல்களை வாசித்திருக்கிறேன். நான் எழுதுபவன் அல்ல. ஆனால் அவை எனக்கு வாசிப்பைக் கற்றுத்தந்தன. ஒரு சிறுகதை, ஒரு கட்டுரை, ஒரு நாவல் எப்படி இருக்கும் என்றும் அவற்றின் வடிவங்கள் எப்படிப் பட்டவை என்றும் அவற்றின் வழியாகவே அறிந்தேன். எழுதுபவர்களுக்கு அவை மேலும் உதவியானவையாக இருக்கும் என்னும் எண்ணமும் உருவாகியது. ஆனால் அண்மைக்காலகட்டத்தில் இளம் படைப்பாளிகளின் கதைகளை வாசிக்கையில் இந்தவகையான ஒரு வடிவ உணர்வும் புரிதலும் அவர்களுக்கு இல்லையோ என்னும் எண்ணம் ஏற்படுகிறது. இங்கே இத்தனை நூல்கள் இருக்கையில் இவர்கள் இதையெல்லாம் படிப்பதுகூட இல்லையா?
அ. சரவணக்குமார்.
அன்புள்ள சரவணக்குமார்,
தமிழிலக்கியம் இன்றைக்கு ஒரு சிறு சிக்கலைச் சந்திக்கிறது. முன்பு வணிகஎழுத்து– இலக்கியம் என்னும் இரண்டு வகைமாதிரிகள் இருந்தன. இன்றைக்கு வணிக எழுத்துக்கான வாசிப்பு – வெளியீடு மிகவும் குறைந்துவிட்டது. காரணம் அந்த இடத்தை காணொளி ஊடகம் எடுத்துக்கொண்டுள்ளது. ஆகவே எழுதுபவர்கள் எல்லாருமே இணைய இதழ்களில் எழுதுகிறார்கள். இணைய இதழ்களுக்கும் ஏராளமான விஷயங்கள் வெளியிடுவதற்கு தேவையாகின்றன. ஆகவே எல்லாமே வெளியாகிவிடுகின்றன.
ஆகவே இன்றைய வாசகனுக்கு இலக்கியம் என தனியாக கிடைப்பதில்லை, மொத்தமாக கதைகளும் குறிப்புகளும் கவிதைகளும் கிடைக்கின்றன. எவை இலக்கியம், எவை இலக்கியமல்ல என்று அவனேதான் முடிவுசெய்யவேண்டியுள்ளது.
இன்று எழுதுபவர்களில் மிகச்சிலர் தவிர பிறர் ஆனந்தவிகடன் – குமுதம் இதழ்களுக்குரிய எழுத்தாளர்கள். அவற்றைச் சார்ந்து உருவாகி வந்தவர்கள். அவற்றில் வெளியான கதைகளை மட்டுமே அறிந்தவர்கள். அது இயல்பு, எப்போதுமே அந்த விகிதம் அப்படித்தான்.
இந்த எழுத்தாளர்கள் நவீனத்தமிழிலக்கியம் என எதையுமே படித்திருக்க மாட்டார்கள். இலக்கியவடிவம் இதுவரை எப்படி வளர்ந்து வந்தது என்றும், அதன் இலக்கணங்கள் என்ன என்றும் , புதிய சாத்தியங்கள் என்னென்ன என்றும் தெரிந்திருக்காது. அந்த ஆர்வமும் இருக்காது. ஏனென்றால் அவர்கள் எழுதும் எழுத்துக்களுக்கு அதற்கான தேவை இல்லை.
அவர்கள் இலக்கிய வடிவங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லாதவர்கள். நவீனத்தமிழிலக்கியத்தில் ஓர் ஐந்தாண்டுக்காலம் தொடர்வாசிப்பு இருந்தாலே வடிவம், மொழி ஆகியவற்றில் தேர்ச்சி வந்துவிடும். இவர்களுக்கு அதெல்லாம் இருப்பதில்லை. இங்கே வடிவத்தை கற்பிக்கும் நூல்கள் உள்ளன. இலக்கிய அரங்குகள் நிகழ்கின்றன. இவர்கள் எவற்றிலும் பங்கெடுக்க மாட்டார்கள்.
ஆகவே உங்களைப்போல தொடர்வாசிப்பும் இலக்கியப்பயிற்சியும் கொண்ட வாசகர்கள் அந்த எழுத்துக்களை தவிர்த்துவிடவேண்டும். இலக்கிய எழுத்துக்களுடன் இணைந்து அவை இணைய இதழ்களில் வெளியாகின்றன என்பதனால், சில இலக்கியவாதிகள் அவற்றை சிபாரிசு செய்கிறார்கள் என்பதனால் அவற்றை இலக்கியம் என கொள்ளவேண்டியதில்லை.
ஓரளவு இலக்கியவாசிப்பு உள்ள படைப்பாளிகள் கொஞ்சம் மொழிநேர்த்தியும் வடிவம் சார்ந்த புரிதலும் கொண்டு எழுதினாலும் அவர்களுக்கு பரந்துபட்ட பண்பாட்டு ஆர்வம் இல்லை என்பதனால் ஆழமாக எதையும் எழுத முடிவதில்லை. எழுதத் தொடங்கியதுமே எழுதித்தீர்ந்துவிடுகிறது. திரும்பத் திரும்ப காமம், அரசியல் இரண்டையும் எழுதுகிறார்கள்.
நாங்கள் ஐரோப்பிய இசை, நவீனக்கலை, நவீன தத்துவம் என நடத்தும் வகுப்புகளில் வாசகர்கள் பெருவாரியாகக் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர்கள் கலந்துகொள்வதில்லை, அக்கறை இல்லை. அவர்களுக்கு பேசத்தான் ஆர்வமே ஒழிய கற்பதில் இல்லை. விளைவு வாசகர்கள் முன்னால் சென்றுவிடுகிறார்கள், எழுத்தாளர்களை திரும்பிப்பார்த்து ஏமாற்றம் அடைகிறார்கள். உங்களைப்போன்றவர்களின் குரலை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
ஆனால் இலக்கியத்துக்கு ஒரு நெறி உண்டு. வாசகர்களின் எதிர்பார்ப்பு இலக்கியத்தின் தரத்தை உயர்த்தும். ஆகவே இலக்கியம் வளரவேண்டும் என விரும்பும் விமர்சகர்கள் இலக்கியவாசிப்பின் தரத்தை மேம்படுத்தவே முயல்வார்கள். இன்று ஒரு சிறுவட்டத்திற்குள்ளாயினும் தீவிர வாசிப்பு திரண்டு வருகிறது, அதற்கான அடுத்த தலைமுறை எழுத்தும் உருவாகி வரும்.
ஜெ
மழை, முகில், இரவு…
அண்மையில் நான் வாசித்த உங்கள் நாவல் கதாநாயகி. வெண்முரசு முடித்தபின் உங்கள் எழுத்தில் எனக்குப் புதியதாக என்ன இருக்கமுடியும் என்னும் எண்ணம் எனக்கு இருந்தது. வெண்முரசு முடிக்க எனக்கு மூன்று ஆண்டுகள் ஆகியது. மூன்றாண்டும் வெண்முரசிலேயே ஆழ்ந்து கிடந்தேன். அந்த பெரிய அனுபவத்துக்குச் சமானமாக ஏதும் இனி இல்லை என்றும் நினைத்திருந்தேன். ஆனால் கதாநாயகி என் எண்ணத்தை புரட்டிப்போட்டது. தமிழின் பொதுவான வாசகர்கள் அந்நாவலை ஒரு திரில்லர் நாவலாக படித்துவிடுவார்கள். கதைச்சுருக்கம் எழுதும் விமர்சகர்களுக்கும் பிடிகிடைக்காது. அந்நாவல் இத்தனை அடுக்குகள் கொண்டது என்பதை சொன்னாலும்கூட பலருக்கு புரிய வாய்ப்பில்லை.
நான் என் 17 வயது முதல் பிரிட்டிஷ் இலக்கியத்துக்கு அறிமுகமானேன். ஏனென்றால் நான் ஆங்கில இலக்கியம் படித்தேன். 18 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் பலர் இன்று மறக்கப்பட்டுவிட்டார்கள். தமிழில் அவர்களைப் பற்றி நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். குறிப்பாக மேரி கெரெலி. அந்தவகையில் இந்நாவலில் ஃபேனி பெர்னி பற்றி சொல்கிறீர்கள். அசல்வரிகள், அசல்வரிகள் போலவே நீங்கள் எழுதிய வரிகள், ஒரு சமகாலப் பேய்க்கதை, அதற்குள் பிரிட்டிஷ் ராஜ் காலகட்டம், அதற்குள் பழைய லண்டன், அதற்குள் ரோமாபுரி காலகட்டம் என சென்றுகொண்டே இருக்கும் இந்நாவலை நான் முழுமையாக வாசித்து முடிக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம். ஒரு சுருள்பாதைபோல இழுத்துச் சென்று சரித்திரம் முழுக்க நிறைந்திருக்கும் பெண்களின் கண்ணீரைக் காட்டுகிறது.
த. கிருஷ்ணகுமார்.
அன்புள்ள ஜெ
அந்த முகில் இந்த முகில் நாவலை வாசித்தேன். நீங்கள் எழுதிய நாவல்தானா என்ற சந்தேகம் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்தது. அத்தனை எளிய நடை. நேரடியான கதை. அறிவார்ந்த விவாதங்கள் ஏதுமில்லை. உருவகங்கள் ஏதுமில்லை. ஆனால் உணர்ச்சிகரமான ஒரு கவித்துவம் இருந்துகொண்டே இருந்தது. உங்கள் கதைகளில் ஓர் அமர்வில் வாசித்து முடிக்கவேண்டிய நாவல் இது. நாவல் முடிந்தபின்னரும் அந்த ஆ மப்பு ஈ மப்பு காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
முதலில் ஓர் உணர்ச்சிகரமான காதல்கதை என்னும் எண்ணம் இருந்தது. ஆனால் உலக இலக்கியத்தின் மகத்தான காதல்கதைகள் எல்லாமே புதியகளத்தில் சொல்லப்பட்ட தொன்மையான கதைகள்தான். கதைநாயகன் கதைநாயகியைச் சந்திக்கிறான். பிரிகிறான். அதே கதைதான். ஆனால் அந்த முகில்கள் இணைவதும் பிரிவதும் அற்புதமான ஒரு படிமம். இணையும்போது இரண்டும் ஒன்று. பிரிந்தே ஆகவேண்டும். ஏனென்றால் அது வானத்தின் விதி. அந்த சினிமாப்பின்புலம், அதற்குள் நிகழும் காதலின் ஒவ்வொரு உணர்வும் சினிமாப்பின்பலத்தில் உருவகமாகி கதையை ஒரு நீண்ட கவிதையாக ஆக்கிவிடுகிறது.
மகேஷ் ஆனந்த்
அன்புள்ள ஜெ,இரவு நாவலை மீண்டும் வாசித்தேன். இந்த தளத்தில் தொடராக வந்தபோதே வாசித்திருந்தேன். இப்போது மீண்டும் வாசித்தேன். அப்போது இரவில் வாழ்தல் என்னும் அந்த கருத்து அளித்த கிளர்ச்சியும், நீலிமா என்னும் யக்ஷியும்தான் கவர்ந்தன. இன்று வாசிக்கையில் அதிலுள்ள உணர்ச்சிகரமான நுட்பங்கள் மனதைக் கிளரச்செய்கின்றன. குறிப்பாக மேனனின் கனவில் கமலா வரும் காட்சி. கனவுக் காட்சிகளிலுள்ள clairvoyance அம்சம் போன்றவை. மலையாள இலக்கியக் கலாச்சரா உலகை அறியுந்தோறும் இந்நாவல் மேலும் ஒளிகொண்டபடியே செல்கிறது. இரவில்தான் யக்ஷி வாழமுடியும். யக்ஷியுடன் வாழ அனைவராலும் இயலாது. அந்த வாழ்க்கை கூரிய வாளை பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்குவதுபோல. (உங்கள் உவமைதான்) ஆனால் அந்த மகத்தான அனுபவத்தை அடைந்தவன் அதன் பின் வெளிறிய பகல்களை விரும்பவே மாட்டான்.கிருஷ்ணராஜ்Against ritualism…
I have always taken a strong stance against ritualism. I see ritualism as a rust that envelops philosophical thought and spirituality, a virus that infects every living thing. We can say that ritualism possesses both of these characteristics. That substance forms the rust by reacting with the sulfur or oxygen in the air.
Against ritualism…
அத்வைத தரப்பை சேர்ந்த நீங்கள் அதை அனுசரிப்பதில் பழுது இல்லை. அதேநேரம் ஆகமத்தரப்பினரான சைவசித்தாந்த மரபை பெரிதும் பின்பற்றும் தமிழகத்தில் இதற்கான தேவை என்ன? இந்துக்களே ஆயினும் தங்கள் மரபிலில்லாத வியாசரை வழிபட்டு போற்ற வேண்டிய தேவை தமிழ்ச்சமூகத்திற்கு ஏன்?
குருபூர்ணிமாவும் தமிழகமும்இந்திய ஆலயக்கலை அறிமுகம்

ஜெயக்குமார் நடத்தும் இந்திய ஆலயக்கலை அறிமுக வகுப்புகள் இன்று உலகம் நோக்கி விரியத்தொடங்கியுள்ளன. அண்மையில் ஆஸ்திரியாவிலும் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். இந்தியச் சிற்பக்கலை- கட்டிடக்கலையை அறிமுகம் செய்யும் இவ்வகுப்புகள் ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிய மிகப்பெரிய அகத்தொடக்கங்களாக அமையும் தன்மை கொண்டவை. நம்மைச் சுற்றியுள்ள ஆலயங்கள் மாபெரும் நூல்கள். நமக்கு அவற்றின் மொழி தெரியாது. சட்டென்று அவை நம்முடன் உரையாடத் தொடங்கிவிடும் அனுபவத்தை நாம் அடைகிறோம். அதன் பின் நாம் வாழ்நாளெல்லாம் வாசிக்கலாம்
நாள் ஆகஸ்ட் 29, 30 மற்றும் 31
ஆலயங்களை அறிதல் அவசியமா? ஆலயக்கலை- கனவுகள், திட்டங்கள்: ஜெயக்குமார் ஆலயக்கலை, கடிதம் ஆலயஞானம் அறிவிக்கப்பட்ட வகுப்புகள்- இடமிருப்பவைஏ.வி.மணிகண்டனின் நவீன ஓவிய அறிமுக நிகழ்வு தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. இது வரை கிட்டத்தட்ட 200 பேர் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கின்றனர். இது ஒரு முதன்மையான பண்பாட்டுக் கல்வி, நவீன உலகை அறிமுகம் செய்துகொள்ள மிக அடிப்படையான ஒன்று என இளையதலைமுறையினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நவீன ஓவியக்கலையே இன்றைய கட்டிட வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, வெவ்வேறு ‘பிராண்ட் டிசைன்கள்’ முதல் இணையதள வடிவமைப்பு வரை அனைத்துக்கும் அடித்தளமான அழகியலை உருவாக்குவது. ஆனால் இந்தியாவில் இன்று இக்கல்விகளை பெறுபவர்கள்கூட நவீன மேலைநாட்டு ஓவியம் பற்றிய அறிமுகம் அளிக்கப்பட்டவர்கள் அல்ல.
நம்மைச் சூழ்ந்துள்ள நவீன வாழ்க்கையையும் தொழில்நுட்பத்தையும் அறிந்துகொள்ள மிக அடிப்படையாக அமையும் பயிற்சி இது.
ஆகஸ்ட் 8,9 மற்றும் 10
வரவிருக்கும் வகுப்புகள்

நவீன நூல்களை வாசிப்பதற்கான அடிப்படைகளைக் கற்பிக்கும் வகுப்புகள் 3 முன்னர் நிகழ்ந்துள்ளன. மீண்டும் தேவையா என்னும் எண்ணம் இருந்தது. நேரமும் இல்லை. 25 பேர் முன்னரே பணம் கட்டி, வகுப்பை அவர்களே முடிவு செய்து எழுதியமையால் மீண்டும் நிகழ்கின்றன. மேலும் சிலர் சேர்ந்துகொள்ள முடியும்.
இது கட்டுரை நூல்களை வாசிப்பதற்கும், உள்வாங்கிக்கொள்வதற்குமான பயிற்சி மட்டும்தான்.
நாள் செப்டெம்பர் 5, 6 மற்றும் 7
July 24, 2025
இந்திய இறையுருவகங்கள்
ஒரு மாபெரும் மரம். அதை தந்தைமரம் என ஆப்ரிக்காவில் வழிபடுகிறார்கள். இந்தியாவில் அது நேரடியாகவே தெய்வமாக ஆகிவிட்டது. எப்படி நம் தெய்வ வடிவங்கள் உருவாகின்றன? நம் உளவியல்தான் என்ன?
கோவை சொல்முகம் சந்திப்பு- ஜூலை
நண்பர்களுக்கு வணக்கம்.
கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 68வது இலக்கிய கூடுகை 27 ஜூலை, ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது.
அமர்வு 1:
வெண்முரசு கலந்துரையாடல் – 49
நூல் – மாமலர்
அத்தியாயம் 1 முதல் 12 வரை
அமர்வு 2:
நாவல் – ‘கொல்லப்படுவதில்லை‘
– மைத்ரேயி தேவி
ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 27-ஜூலை-25,
ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 10:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
இருளை அளையும் கைகள்..
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
நான் சமீபத்தில் உங்கள் மத்தகம் குறு நாவலை டல்லாஸ் கூடுகைக்காக படித்தேன். நான் கூடுகையில் பகிர்ந்த அனுபவத்தை உங்களிடம் பகிரவே எழுதுகிறேன்.
பொதுவாக ஒரு கதை படிக்கும் போது judgemental ஆக இருக்க கூடாது என்று நினைத்தாலும், என்னை அறியாமல் யார் MGR யார் நம்பியார் என்று மனம் படமிடுகிறது. அதுவும் கதை சொல்லிக்கு MGR கிரீடம் கொடுத்துவிடுவேன். மத்தகத்தில் பரமனுக்கும் அதைத்தான் கொடுத்தன். பாதி கதையில் பரமன், அருணாச்சலம் அண்ணன் தலையில் கல்லை தூக்கி போட்டு, என் தலையிலும் போட்டு விட்டான். அய்யய்யோ இவன் MGR இல்லை நம்பியார், இவ்வளவு நேரம் நம்பியார் தான் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது. அதிலிருந்து மீண்டு, இப்போது யாருக்கு MGR கிரீடம் கொடுப்பது என்று யோசித்து, சரி கேசவன் தான் இப்போது MGR என்று நியமித்து விட்டேன். அத்தியாயம் நாலையும், ஐந்தையும் விறுவிறுப்புடன் படித்தேன். எப்படியும் MGR கிரீடம் அணிந்த கேசவன் தன்னை நிலை நாட்டுவான் என்று நம்பினேன். வழக்கமான படங்களில் வருவது போல் கேசவன் இறந்தாவது தன்னை நிலை நாட்டுவான் என்று நினைத்தேன். ஆனால் கேசவன் இறக்கவில்லை, பணிந்து விட்டான். முடிவில் நம்பியார் வென்று விட்டார்.
மத்தகத்தை இரவில் படித்துக் கொண்டிருந்தேன். கதை முடிந்த பின் தூக்கம் வரவில்லை, கதையில் நடந்த சம்பவங்களை கோர்த்து மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது தான் எனக்கு விளங்கியது கதையில் ஏதோ ஒரு தருணத்தில் நீங்கள் கண்ணாடியை என் பக்கம் திருப்பி வைத்திருக்கிறீர்கள் என்று. கண்ணாடியில் நானே என்னை நம்பியாராக பார்த்து மிரண்டு விட்டேன்.
நீங்கள் கண்ணாடியை என் பக்கம் மட்டுமல்ல மொத்த மனித இனத்தின் பக்கம் திருப்பி வைத்து விட்டீர்கள் என்று தெரிந்தது. இது ஒரு யானை கதை என்பதை தாண்டி பல மடிப்புகள் இருப்பது தெரிந்தது. அதற்குப் பின் மனதில் கேள்விகள் வெள்ளம் போல் பொங்க தொடங்கின. பலவீனத்தை தன் வசதிக்காக உபயோகப்படுத்திக் கொள்ளும் நம்பியாராக நாம் சந்தர்ப்ப சூழ்நிலைகளை காரணம் காட்டி இருக்கிறோமா என்று கேள்வி எழுந்தது. அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளை காரணம் காட்டி நம்பியாருக்கு அடிபணிகிறோமா என்ற கேள்வியும் எழுந்தது. பொதுவாக இது போன்ற கடினமான தத்துவ கேள்விகளுக்கு மனதே ஒரு பதிலை ரெடியாக வைத்திருக்கும். “வாழ்க்கை என்றால் அப்படித்தான் எல்லாவற்றிற்கும் நீ பொறுப்பாளி அல்ல” என்று சொல்லும்.
ஏனோ இம்முறை அது வாயே திறக்கவில்லை.
பரீட்சைக்கு போய்விட்டு கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால் சோகமாக இருப்பேன். மத்தகம் படித்து என் மனம் வைத்த பரீட்சையில் எந்த கேள்விக்கும் எனக்கு விடை தெரியவில்லை. சோகமாக இருக்கிறேனா? புரியவில்லை. கேள்விகள் சலனத்தை தந்தாலும், அது கேட்கப்பட்டதால் ஒரு இன்பம். விசித்திரமான உணர்வு.
நன்றி,
அன்னபூர்ணா
உங்களுடைய ஐந்து நெருப்பு தொகுப்பை இப்போதுதான் வாசித்தேன். அதில் உள்ள குற்றம் சம்பந்தமான கதைகள் திகைப்பை உருவாக்குகின்றன. நீங்கள் குற்றத்தின் உளவியலுக்குள் செல்லும் இந்தக் கதைகளை எழுதினீர்கள் என்பதை நம்ப முடியவில்லை. இத்தனைக்கும் நான் புனைவுக்களியாட்டுக் கதைகள் அனைத்தையும் வாசித்தவன். இவற்றில் பல கதைகள் அப்போதுதான் வெளிவந்துள்ளன. ஆனால் அப்போது கவனிக்கவில்லை. ஏழாவது போன்ற ஒரு கதையை அப்போதே வாசித்தேன். ஆனால் அது ஏதோ இறையியல் நுட்பம் கொண்டது என்று அப்போது விட்டுவிட்டேன். அன்றைய பாஸிடிட்டிவ் வைப் கொண்ட நிலையில் அக்கதை நோக்கி மனம் செல்லவில்லை. இப்போது வாசிக்கும்போது அந்தக்கதை பயப்படுத்துகிறது. மனிதமனத்தின் குற்றத்தின் ஆழத்தைச் சொல்லும் அந்தக்கதைபோன்ற ஒன்றை நான் குறைவாகவே உலக இலக்கியத்திலும் வாசித்துள்ளேன்.
கி.ராஜகோபால்
அன்புள்ள நண்பர்களுக்கு,
என் படைப்புலகம் இருள்நோக்கியது அல்ல. ‘அதோமுகம்’ என்று சம்ஸ்கிருதத்தில் சொல்வார்கள், கீழ்நோக்கிய விசை. அது என்னிடம் இல்லை. இயல்பாகவே இல்லை, காரணம் நான் என் வாழ்க்கையின் கடுந்துயர், அலைச்சல்கள் வழியாக உருவாகி வந்தவன் என்பதே. என் ஒளியை நானே கண்டுகொண்டு அதைச்சார்ந்தே முன்னகர்ந்துள்ளேன். அந்த ஒளியையே எல்லா ஆக்கங்களும் சென்று தொடுகின்றன. சாதாரண நிலையில் வெறும் பதற்றம் மட்டுமே கொண்ட நடுத்தரவர்க்க எழுத்தாளர்களே முற்றான எதிர்மறை மனநிலை நோக்கிச் செல்வார்கள். மிக அசாதாரணமான வரலாற்றுச் சூழலில் சிக்கிக்கொண்டவர்களும் அப்படி இருட்டை நோக்கிய பார்வை கொண்டிருக்கலாம், போர் மற்றும் பேரழிவுச்சூழலில் சிக்கிக்கொண்டவர்கள் உதாரணமாக.
ஆனால் அந்த ஒளி என்பது கற்பனாவாதம் சார்ந்தது அல்ல. நான் எங்கும் கற்று ஏற்றுக்கொண்டது அல்ல. என் சுயபாவனையும் அல்ல. அப்படி இருக்கலாகாது என்பதை நான் ஒரு தன்னெறியாகவே வைத்துள்ளேன். ஆகவே எப்போதும் என் நம்பிக்கைகளை, என் பாதையை குரூரமாக மறுபரிசீலனை செய்பவனாகவே இருந்து வந்துள்ளேன். ஒருபோதும் ஒற்றைப்படையான பார்வையை நோக்கி செல்லக்கூடாது என எப்போதும் முயல்கிறேன். என் தெளிவும், ஒளியும் நான் கொள்ளும் அகப்போரின் விளைவாகத் திரள்பவையாகவே இருந்தாகவேண்டும் என நினைக்கிறேன். அப்படித்தான் எப்போதும் அவை உள்ளன.
ஆகவே எப்போதுமே இருளைநோக்கியுள்ள கதைகளும் என் படைப்புலகில் உள்ளன. அவற்றை மட்டும் எடுத்து ஒருவர் தொகுப்பார் என்றால் முற்றிலும் இருட்டை நோக்கிய பார்வைகொண்ட, சொல்லப்போனால் கொடூரமான கதைகளை மட்டுமே கொண்ட பெருந்தொகுதியை உருவாக்கமுடியும். தமிழில் எழுதப்பட்ட வலுவான எதிர்மறைக்கதைகளின் ஒரு தொகுப்பிலேயே அவைதான் பெரும்பாலான இடத்தை நிரப்பியிருக்கும். அவற்றை மட்டுமே கொண்டு என்னைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளவும் முடியும்.
முற்றிலும் நேர்நிலைகொண்ட நூலான அறம் தொகுதியிலேயே கூட தாயார்பாதம் மிக எதிர்நிலையை சித்தரிக்கும் நாவல். அண்மையில் ஒரு வங்க வாசகர் அவர் வாசித்ததிலேயே துயரம் மிக்க கதை அது, மீட்பில்லாத துயரம் அது, ஏனென்றால் எதிர்வினைகூட இல்லாதவர் அந்த பெண் என்று எழுதியிருந்தார். ஒளியை தன்னுள் செலுத்திச்சுருட்டிக்கொள்ளும் கருந்துளை அந்த கதாபாத்திரம் என சொன்னார். அந்தக் கதைகளின் மொத்தக் கட்டுமானத்தில், தனக்கான ஒரு விகிதத்தில், அக்கதை அமைந்துள்ளது என்பதனால் அது வாசகர்களுக்கு அப்படி தெரியவில்லை.
அதேபோல என் புனைவுலகம் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டதாகவே இதுவரை இருந்துள்ளது. தர்க்கத்தை மீறி எழுதுபவர்களால் மட்டுமே இத்தனைபெரிய புனைவுலகை உருவாக்கவும் முடியும். அவை தன்னிச்சையான அகவெளிப்பாடுகள். ஆனால் என்னால் முடிந்தவரை தர்க்கபூர்வமாக எல்லாவற்றையும் அணுகவே எப்போதும் முயல்கிறேன். தர்க்கத்தின் உச்சியில் இருந்தே அதர்க்கம் இயல்பாக உருவாகிவரவேண்டும் என நினைக்கிறேன். வடிவத்தின் தர்க்கம், பொதுப்புத்தியின் தர்க்கம், தத்துவார்த்தமான தர்க்கம் என்னும் மூன்று எதிர்விசைகளுக்கு நிகர்நிற்கவேண்டிய ஒன்றே புனைவின் பித்துநிலை என்பதே என் புரிதல்அந்த முரணியக்கமே என் புனைவுலகின் இயல்பை உருவாக்குகிறது.
மத்தகம், ஊமைச்செந்நாய், பனி போன்ற கதைகள் அந்த முரணியக்கம் பதிவான படைப்புகள். நன்மை- தீமை என்னும் எளிமையான இரட்டைத்தன்மைகளால் அவை இயங்கவில்லை. மனம் கொள்ளும் இருநிலை, அவற்றின் முரணியக்கமே அவற்றை இயக்கும் விசையாக உள்ளது.
ஜெ
கே. நல்லதம்பி
மொழிபெயர்ப்பாளர். கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்ப்புகளை செய்து வருகிறார். மொழிபெயர்ப்பிற்கான கேந்திய சாகித்ய அக்காதமி விருது பெற்றுள்ளார்.

மீண்ட அமைதி
Giordano, Luca; The Devil Tempting Christ to Turn Stones into Bread; National Trust, Hatchlands; http://www.artuk.org/artworks/the-dev...
“கடல்”- சினிமாவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் நாவல்…
அன்பார்ந்த ஆசிரியருக்கு
“கடல்” படித்து முடித்ததும் எழுதுகிறேன். ஓயாத கடல் அலைகள் போல நான் சொல்ல விழைவன எல்லாம் ஆர்ப்பரித்து என்னை ஆழ்கடலின் மேல் பேரலையின் விளிம்பில் ஒரு நிமிடம் நிற்க வைத்து தூக்கி கீழே அழுத்தும் விசையை வார்த்தைகளில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.
நீங்கள் கடல் நாவல் வெளியீடுக் குறித்து உங்கள் இணையதளத்தில் எழுதி இருந்தீர்கள். பத்தாண்டுகளுக்கு பின் வாசித்த பொழுதும் உங்களை கொந்தளிக்க செய்ததாகவும் கண்ணீருடன் அகவிம்மலுடன் நீங்கள் தத்தளித்த தருணங்கள் என்று எழுதி இருந்தீர்கள். சாதாரணமாக இத்தனை உணர்வுகளை வெளிப்படுத்தி உங்கள் படைப்பினைப் பற்றி நீங்கள் எழுதும் வழக்கம் இல்லாத பொழுது இந்த பகிர்தல் வியப்பூட்டியது . உடனே கடல் நூலை வாங்கி படித்துவிட்டு எழுதுகிறேன். பல இடங்களில் நீங்கள் கூறி இருந்தது போல் படிக்க முடியாதபடி கண்ணீர் மறைத்தது. மனதில் படிந்தது முதலில் சோகம் பின் அமைதி. மற்றவர்களைப் போல் இலக்கியத்தை மட்டும் வியந்து நான் எழுத முடியவில்லை. என்னை தாக்கிய உணர்வுகளை எழுத முயல்கிறேன்.
நான் உங்களது அணுக்க வாசகியானது “சிலுவையின் பெயரால்” நூல் வழியாக. முதல் பதிப்பின் முன்னுரையில் எழுதி இருப்பீர்கள். “கிறிஸ்துவின் சொற்களை அந்தரங்கத்தில் உணர்ந்திருக்கிறேன். கருணையை மட்டும்செய்தியாகிக் கொண்ட மாபெரும் ஞான குருவை நான் காண்கிறேன். என்னுடைய கிறிஸ்து மதங்களால் எனக்கு அளிக்கப்பட்டவர் அல்ல.” நான் நினைவுகளில் கூட கோர்வையாக சிந்திக்காது ஆனால் என்னுள் எழும் எண்ண ஓட்டங்களை கூறும் உண்மை வாக்கு அது. தனியாக உழன்ற குழந்தைப் பருவத்தில் யாருமே என்னை நேசிக்கவில்லை, யாருக்குமே நான் பொருட்டு இல்லை, மென்டல்லி ரிட்டார்டு(mentally retrded) ஸ்டுப்பிட் பர்சன்(stupid person) என்று சொல்லப்பட்டு சிறுவயதில் குமறி குமறி தனியாக அழும்பொழுது கர்த்தரைக் காண்பித்துக் கொடுத்தார் எஸ்தர் டீச்சர். ஊரும் நாடும் எதுவாக இருந்தாலும் பேராலயங்களில் நான் கண்டது, ” நான் இருக்கேன் ” என்று தோளை தடவும் முள் கிரீடம் அணிந்த தேவதூதன்தான். கடல் படிக்கும் பொழுது அவன் தரிசனம் ஒளிர்ந்தது என் மனதில்.
தற்பெருமை பேசுவதாக இருந்தாலும் ஒரு சின்ன நிகழ்வு. என் வாழ்க்கையில். இங்கிலாந்தில் உள்ள ஜான் இன்னெஸ் என்னும் நிலையத்தில் ஆராய்ச்சி செய்த பொழுது, ஒரு கடினமான கேள்விக்கு நுழைவுவாசலாக என் பரிசோதனை முடிவு அமைந்த பொழுது பலரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டாடினர். என்னுடைய வழிநடத்தும் முனைவர் யாரை நினைத்துக் கொண்டீர்கள் என்று வேடிக்கையாக கேட்டார். ஏதோ இறைவன் பெயரையோ அல்லது அம்மா அப்பாவையோ சொல்வேன் என்று எதிர்பார்த்திருப்பார். நான் மூணாங்கிளாஸ் எஸ்தர் டீச்சர் என்று சொல்லி விம்மி அழுதேன். ” இப்படி இருக்கியே பாப்பா. ஒரு மனக்கணக்கு புரியாமல் முழிக்கிறியே நாளைக்கு என்ன செய்வாயோ,” என்று கண்ணீர் மல்க சிலுவைக் குறியிட்டு ஜெபிக்கும் எஸ்தர் டீச்சர். ‘நிஜமாகவே நான் வளர்ந்து விட்டேன்,” என்று வான்வரை கூவி இறைவனுக்கு நன்றி கூறிய தருணம். உங்கள் சாம் போல் எத்தனை பேருக்காக எஸ்தர் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்.
திருவனந்தபுரத்தில் வேட்டுக்காடு ஆலயத்திற்கு போய் இருக்கிறீர்களா? இன்று இணையத்தில் கண்ட பொழுது புனர்நிர்மாணம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது. 1977-78ல் நான் செல்லும் பொழுது வெறும் வெட்டவெளி. பெரிய ஆலமரம். அந்த மணல் வெளியில் நம்பிக்கையுடன் நோயாளிகள். கிறிஸ்துராஜாவின் கம்பீரமான சிலை. ஒரு பெரிய சிலுவையை தூக்கிக்கொண்டு, ” யேசுவே யேசுவே சரியான பாதையை காட்டுங்கள்” என்று மனதில் எஸ்தர் டீச்சர் தந்த கனிவையும்ம் கிறிஸ்துராஜன் கருணையையும் உள்வாங்க முடிந்தது. வர்ணங்கள் உரிந்து கொண்டிருந்த சிலை.விண்ணுலகத்தில் இருந்து நமக்காக எழுந்த தேவன் என்று நம்ப வைக்கும் நெகிழ்வுகள். கதையில் இறக்கவிருக்கும் குழந்தையை காப்பாற்றும் இடத்தைப் படிக்கும் பொழுது நம்பிக்கையோடு அங்கே மண்ணில் கிடக்கும் நோயாளிகளின் நினைவு வந்தது
இந்தக் கட்டத்தை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக ஆனால் திறமையுடன் கையாண்டிருப்பீர்கள். ட்ரான்ஸ் படத்தில் இது போல் ஒரு சம்பவத்தை காட்சிப்படுத்திருப்பார்கள்.அற்புதம் வேண்டும் விசுவாசிகளுக்கு சவாலாக அமையும். அதில் குழந்தை பிழைக்காது .ஆனால் உங்கள் கதையில் அற்புதம் நிகழ்கிறது. அற்புதம் என்று கருத வேண்டாம் என்று உடலியல் காரணம் காட்டினாலும், மின்னல் வந்ததும் ஒரு அற்புதம் தானே . இதன் ஓட்டத்திலேயே இந்த நிகழ்ச்சியை பொறாமையினால் கொச்சைப்படுத்தலும் நடக்கிறது என்று ஒரு கோடி காட்டுகிறீர்கள் .இப்படி வித விதமாக கொண்டு போக வேண்டும் என்று யோசித்து எழுதுவீர்களா? அல்லது அது எழுதும் பொழுதே தன்னால் நடப்பதா?
நாகர்கோயில் இருந்து திருவனந்தபுரம் வரை உள்ள எல்லா தேவாலயங்களின் பின்புறம், நிரம்பி இருக்கும் கீச்சான்களின் சிரிப்பு, விளையாட்டு, வயதுக்கு மீறிய தெனாவட்டு பேச்சு,அளவில் பொருந்தாத தொள தொள அழுக்குச்சட்டை, பசி, அவமானம் வன்புணர்வு- நான் கண்டு மருகிய சமூகத்தை இந்நாவலின் முதல் அத்தியாயங்களில் படிக்கும் பொழுது மிகவும் கஷ்டப்பட்டேன். அந்த கையறு நிலையில் உயிரின் ஆழித்துடிப்பு ஒன்றுதான், இறப்பின் விளிம்பு வரை வந்து தோமாவை காக்கிறது . இந்த கீச்சான்களுக்கு நான் என்ன செய்ய முடியும், அவ்வப்பொழுது அளிக்கும் பொருள் உதவி அல்லாது நான் என்ன செய்ய முடியும் என்கிற அயர்ச்சியில் இருந்து விடுவித்தன உங்கள் சொற்கள் . நம்பி வேண்டுவதுதான். கீச்சான்களை கிரிமினல் ஆக்குவதை தடுங்கள் கடவுளே என்று காலை பிடித்து வேண்டிக் கொள்ளும் விசுவாசியாக ஆவதுதான் ஒரே வழி அமைதி பெற. .
நாவலை படிக்கும் பொழுது கடற்கரையிலே இருந்தது போல உணர்வு. அலைகளின் ஆர்ப்பரிப்பு, கரையை வந்து தொட்ட பிறகு சத்தமே இல்லாமல் மண்ணை எடுத்துக் கொண்டு பின்வாங்கும் கடல். படிக்கும் பொழுது செம்மீன் திரைப்படத்தின் ” மானச மைனே வரு” இசைத்துக் கொண்டே இருந்தது. மறக்க முடியாத வர்ணனைகள்.’ பிரம்மாண்டமான வலுக்கன் யானை மத்தகம் போல எழுந்தது” என்ன சித்திரம்! ஒரு நிமிடம் நானும் அந்த வலுக்கன் அலையில் ஏறி ஏழு கடலையும் கண்ட உணர்வு. வானம் முழுக்க நட்சத்திரங்கள் விரிவதையும், நூறாயிரம் மீனின் கண்களைப் போல அவை மினுங்குவதையும் படிக்கும் பொழுது Yenn Martel அவர்களுடைய Life of Pi நினைவு வராமல் போனால் அதிசயம்தான் .
புத்தகம் முடித்துவிட்டு நான் விசுவாசியா அவிசுவாசியா என்று ஆழ்மனதை தோண்டி பார்த்தேன்.சாமும் பெர்கமான்ஸும் ஒருவரின் இரு வடிவங்கள் தானே. நாம் எல்லோருமே இந்த இருநிலையிலூசலாடி கொண்டிருக்கிறோமா?. நாவலில் சாம் சொல்வதாக நீங்களே அதற்கு விடையை காட்டுகிறீர்கள். சாம் பெர்கமானிடம் சொல்கிறார் , “ .உங்களுக்குள்ளே ஆழத்திலே ஒரு கேலி சிரிப்பு இருக்கிறது அது இருக்கிற வரைக்கும் உங்களுக்கு மீட்பு இல்லை. ஆனால் அவனுக்குள்ள அடியாழத்தில் இருக்கிறது ஓர் அழுகை. அது அவனை வெளியே கொண்டு வரும்.” துல்லியமாக இப்படி உங்களால்தான் எழுத முடியும். படித்தவுடன் தோன்றியது என் மனதில் எந்த கேலி சிரிப்பும் இல்லை ,நான் விசுவாசிதான் என்று. அப்படி தெள்ளத்தெளிவாக எழுதிய நீங்கள் அவிசுவாசியை கடத்தல்காரனாக காட்ட வேண்டிய தேவை என்ன என்று ஒருநெருடல். வேறொரு கோணத்திலும் இந்த உள்ள போராட்டத்தை எழுதி இருக்க முடியும் என்று தோன்றியது.
கடல் திரைப்படத்தை முன்பு நான் பார்த்ததில்லை. நாவலைப் படித்த பிறகு உடனே பார்த்தேன் நீங்கள் முன்னுரையில் கூறியிருந்தது போல திரைக் காட்சிகளாக ஒரு உளப் போராட்டத்தை காண்பிப்பது கடினம் சில காட்சிகள் உள்ளத்தை தொட்டன. குழந்தை பிறப்பு காட்சியில் இயேசுவே மீண்டும் கண்ட மகிழ்ச்சி பாடல் பின்னணியோடு வந்த காட்சி பேராலயத்தில் நின்று வணங்கும் உணர்வைத் தந்தது
ஏதோ சில காரணங்களால் அவிசுவாசியாக மரத்து கொண்டு இருந்த என்னை மீட்டெடுத்த இந்த நாவலுக்காக நன்றி
மதன் கார்க்கியின் வரிகளுடன்.
” கண்ணீரைத் தேக்கும் என் உள்ளத்தாக்கில்
உன் பேரைச் சொன்னால் பூப்பூத்திடாதோ?
எமை நாளும் ஆளும் உருவை…
பூவின் மேலே வண்ணம் நீ தானே
வேரின் கீழே ஜீவன் நீதானே
நீயே எமதன்னமாக…
அன்பின் வாசலே “
என்னும் நம்பிக்கையுடன்
மாலதி கோவை
21-07-25
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
