மீண்ட அமைதி
Giordano, Luca; The Devil Tempting Christ to Turn Stones into Bread; National Trust, Hatchlands; http://www.artuk.org/artworks/the-dev...
“கடல்”- சினிமாவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் நாவல்…
அன்பார்ந்த ஆசிரியருக்கு
“கடல்” படித்து முடித்ததும் எழுதுகிறேன். ஓயாத கடல் அலைகள் போல நான் சொல்ல விழைவன எல்லாம் ஆர்ப்பரித்து என்னை ஆழ்கடலின் மேல் பேரலையின் விளிம்பில் ஒரு நிமிடம் நிற்க வைத்து தூக்கி கீழே அழுத்தும் விசையை வார்த்தைகளில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.
நீங்கள் கடல் நாவல் வெளியீடுக் குறித்து உங்கள் இணையதளத்தில் எழுதி இருந்தீர்கள். பத்தாண்டுகளுக்கு பின் வாசித்த பொழுதும் உங்களை கொந்தளிக்க செய்ததாகவும் கண்ணீருடன் அகவிம்மலுடன் நீங்கள் தத்தளித்த தருணங்கள் என்று எழுதி இருந்தீர்கள். சாதாரணமாக இத்தனை உணர்வுகளை வெளிப்படுத்தி உங்கள் படைப்பினைப் பற்றி நீங்கள் எழுதும் வழக்கம் இல்லாத பொழுது இந்த பகிர்தல் வியப்பூட்டியது . உடனே கடல் நூலை வாங்கி படித்துவிட்டு எழுதுகிறேன். பல இடங்களில் நீங்கள் கூறி இருந்தது போல் படிக்க முடியாதபடி கண்ணீர் மறைத்தது. மனதில் படிந்தது முதலில் சோகம் பின் அமைதி. மற்றவர்களைப் போல் இலக்கியத்தை மட்டும் வியந்து நான் எழுத முடியவில்லை. என்னை தாக்கிய உணர்வுகளை எழுத முயல்கிறேன்.
நான் உங்களது அணுக்க வாசகியானது “சிலுவையின் பெயரால்” நூல் வழியாக. முதல் பதிப்பின் முன்னுரையில் எழுதி இருப்பீர்கள். “கிறிஸ்துவின் சொற்களை அந்தரங்கத்தில் உணர்ந்திருக்கிறேன். கருணையை மட்டும்செய்தியாகிக் கொண்ட மாபெரும் ஞான குருவை நான் காண்கிறேன். என்னுடைய கிறிஸ்து மதங்களால் எனக்கு அளிக்கப்பட்டவர் அல்ல.” நான் நினைவுகளில் கூட கோர்வையாக சிந்திக்காது ஆனால் என்னுள் எழும் எண்ண ஓட்டங்களை கூறும் உண்மை வாக்கு அது. தனியாக உழன்ற குழந்தைப் பருவத்தில் யாருமே என்னை நேசிக்கவில்லை, யாருக்குமே நான் பொருட்டு இல்லை, மென்டல்லி ரிட்டார்டு(mentally retrded) ஸ்டுப்பிட் பர்சன்(stupid person) என்று சொல்லப்பட்டு சிறுவயதில் குமறி குமறி தனியாக அழும்பொழுது கர்த்தரைக் காண்பித்துக் கொடுத்தார் எஸ்தர் டீச்சர். ஊரும் நாடும் எதுவாக இருந்தாலும் பேராலயங்களில் நான் கண்டது, ” நான் இருக்கேன் ” என்று தோளை தடவும் முள் கிரீடம் அணிந்த தேவதூதன்தான். கடல் படிக்கும் பொழுது அவன் தரிசனம் ஒளிர்ந்தது என் மனதில்.
தற்பெருமை பேசுவதாக இருந்தாலும் ஒரு சின்ன நிகழ்வு. என் வாழ்க்கையில். இங்கிலாந்தில் உள்ள ஜான் இன்னெஸ் என்னும் நிலையத்தில் ஆராய்ச்சி செய்த பொழுது, ஒரு கடினமான கேள்விக்கு நுழைவுவாசலாக என் பரிசோதனை முடிவு அமைந்த பொழுது பலரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டாடினர். என்னுடைய வழிநடத்தும் முனைவர் யாரை நினைத்துக் கொண்டீர்கள் என்று வேடிக்கையாக கேட்டார். ஏதோ இறைவன் பெயரையோ அல்லது அம்மா அப்பாவையோ சொல்வேன் என்று எதிர்பார்த்திருப்பார். நான் மூணாங்கிளாஸ் எஸ்தர் டீச்சர் என்று சொல்லி விம்மி அழுதேன். ” இப்படி இருக்கியே பாப்பா. ஒரு மனக்கணக்கு புரியாமல் முழிக்கிறியே நாளைக்கு என்ன செய்வாயோ,” என்று கண்ணீர் மல்க சிலுவைக் குறியிட்டு ஜெபிக்கும் எஸ்தர் டீச்சர். ‘நிஜமாகவே நான் வளர்ந்து விட்டேன்,” என்று வான்வரை கூவி இறைவனுக்கு நன்றி கூறிய தருணம். உங்கள் சாம் போல் எத்தனை பேருக்காக எஸ்தர் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்.
திருவனந்தபுரத்தில் வேட்டுக்காடு ஆலயத்திற்கு போய் இருக்கிறீர்களா? இன்று இணையத்தில் கண்ட பொழுது புனர்நிர்மாணம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது. 1977-78ல் நான் செல்லும் பொழுது வெறும் வெட்டவெளி. பெரிய ஆலமரம். அந்த மணல் வெளியில் நம்பிக்கையுடன் நோயாளிகள். கிறிஸ்துராஜாவின் கம்பீரமான சிலை. ஒரு பெரிய சிலுவையை தூக்கிக்கொண்டு, ” யேசுவே யேசுவே சரியான பாதையை காட்டுங்கள்” என்று மனதில் எஸ்தர் டீச்சர் தந்த கனிவையும்ம் கிறிஸ்துராஜன் கருணையையும் உள்வாங்க முடிந்தது. வர்ணங்கள் உரிந்து கொண்டிருந்த சிலை.விண்ணுலகத்தில் இருந்து நமக்காக எழுந்த தேவன் என்று நம்ப வைக்கும் நெகிழ்வுகள். கதையில் இறக்கவிருக்கும் குழந்தையை காப்பாற்றும் இடத்தைப் படிக்கும் பொழுது நம்பிக்கையோடு அங்கே மண்ணில் கிடக்கும் நோயாளிகளின் நினைவு வந்தது
இந்தக் கட்டத்தை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக ஆனால் திறமையுடன் கையாண்டிருப்பீர்கள். ட்ரான்ஸ் படத்தில் இது போல் ஒரு சம்பவத்தை காட்சிப்படுத்திருப்பார்கள்.அற்புதம் வேண்டும் விசுவாசிகளுக்கு சவாலாக அமையும். அதில் குழந்தை பிழைக்காது .ஆனால் உங்கள் கதையில் அற்புதம் நிகழ்கிறது. அற்புதம் என்று கருத வேண்டாம் என்று உடலியல் காரணம் காட்டினாலும், மின்னல் வந்ததும் ஒரு அற்புதம் தானே . இதன் ஓட்டத்திலேயே இந்த நிகழ்ச்சியை பொறாமையினால் கொச்சைப்படுத்தலும் நடக்கிறது என்று ஒரு கோடி காட்டுகிறீர்கள் .இப்படி வித விதமாக கொண்டு போக வேண்டும் என்று யோசித்து எழுதுவீர்களா? அல்லது அது எழுதும் பொழுதே தன்னால் நடப்பதா?
நாகர்கோயில் இருந்து திருவனந்தபுரம் வரை உள்ள எல்லா தேவாலயங்களின் பின்புறம், நிரம்பி இருக்கும் கீச்சான்களின் சிரிப்பு, விளையாட்டு, வயதுக்கு மீறிய தெனாவட்டு பேச்சு,அளவில் பொருந்தாத தொள தொள அழுக்குச்சட்டை, பசி, அவமானம் வன்புணர்வு- நான் கண்டு மருகிய சமூகத்தை இந்நாவலின் முதல் அத்தியாயங்களில் படிக்கும் பொழுது மிகவும் கஷ்டப்பட்டேன். அந்த கையறு நிலையில் உயிரின் ஆழித்துடிப்பு ஒன்றுதான், இறப்பின் விளிம்பு வரை வந்து தோமாவை காக்கிறது . இந்த கீச்சான்களுக்கு நான் என்ன செய்ய முடியும், அவ்வப்பொழுது அளிக்கும் பொருள் உதவி அல்லாது நான் என்ன செய்ய முடியும் என்கிற அயர்ச்சியில் இருந்து விடுவித்தன உங்கள் சொற்கள் . நம்பி வேண்டுவதுதான். கீச்சான்களை கிரிமினல் ஆக்குவதை தடுங்கள் கடவுளே என்று காலை பிடித்து வேண்டிக் கொள்ளும் விசுவாசியாக ஆவதுதான் ஒரே வழி அமைதி பெற. .
நாவலை படிக்கும் பொழுது கடற்கரையிலே இருந்தது போல உணர்வு. அலைகளின் ஆர்ப்பரிப்பு, கரையை வந்து தொட்ட பிறகு சத்தமே இல்லாமல் மண்ணை எடுத்துக் கொண்டு பின்வாங்கும் கடல். படிக்கும் பொழுது செம்மீன் திரைப்படத்தின் ” மானச மைனே வரு” இசைத்துக் கொண்டே இருந்தது. மறக்க முடியாத வர்ணனைகள்.’ பிரம்மாண்டமான வலுக்கன் யானை மத்தகம் போல எழுந்தது” என்ன சித்திரம்! ஒரு நிமிடம் நானும் அந்த வலுக்கன் அலையில் ஏறி ஏழு கடலையும் கண்ட உணர்வு. வானம் முழுக்க நட்சத்திரங்கள் விரிவதையும், நூறாயிரம் மீனின் கண்களைப் போல அவை மினுங்குவதையும் படிக்கும் பொழுது Yenn Martel அவர்களுடைய Life of Pi நினைவு வராமல் போனால் அதிசயம்தான் .
புத்தகம் முடித்துவிட்டு நான் விசுவாசியா அவிசுவாசியா என்று ஆழ்மனதை தோண்டி பார்த்தேன்.சாமும் பெர்கமான்ஸும் ஒருவரின் இரு வடிவங்கள் தானே. நாம் எல்லோருமே இந்த இருநிலையிலூசலாடி கொண்டிருக்கிறோமா?. நாவலில் சாம் சொல்வதாக நீங்களே அதற்கு விடையை காட்டுகிறீர்கள். சாம் பெர்கமானிடம் சொல்கிறார் , “ .உங்களுக்குள்ளே ஆழத்திலே ஒரு கேலி சிரிப்பு இருக்கிறது அது இருக்கிற வரைக்கும் உங்களுக்கு மீட்பு இல்லை. ஆனால் அவனுக்குள்ள அடியாழத்தில் இருக்கிறது ஓர் அழுகை. அது அவனை வெளியே கொண்டு வரும்.” துல்லியமாக இப்படி உங்களால்தான் எழுத முடியும். படித்தவுடன் தோன்றியது என் மனதில் எந்த கேலி சிரிப்பும் இல்லை ,நான் விசுவாசிதான் என்று. அப்படி தெள்ளத்தெளிவாக எழுதிய நீங்கள் அவிசுவாசியை கடத்தல்காரனாக காட்ட வேண்டிய தேவை என்ன என்று ஒருநெருடல். வேறொரு கோணத்திலும் இந்த உள்ள போராட்டத்தை எழுதி இருக்க முடியும் என்று தோன்றியது.
கடல் திரைப்படத்தை முன்பு நான் பார்த்ததில்லை. நாவலைப் படித்த பிறகு உடனே பார்த்தேன் நீங்கள் முன்னுரையில் கூறியிருந்தது போல திரைக் காட்சிகளாக ஒரு உளப் போராட்டத்தை காண்பிப்பது கடினம் சில காட்சிகள் உள்ளத்தை தொட்டன. குழந்தை பிறப்பு காட்சியில் இயேசுவே மீண்டும் கண்ட மகிழ்ச்சி பாடல் பின்னணியோடு வந்த காட்சி பேராலயத்தில் நின்று வணங்கும் உணர்வைத் தந்தது
ஏதோ சில காரணங்களால் அவிசுவாசியாக மரத்து கொண்டு இருந்த என்னை மீட்டெடுத்த இந்த நாவலுக்காக நன்றி
மதன் கார்க்கியின் வரிகளுடன்.
” கண்ணீரைத் தேக்கும் என் உள்ளத்தாக்கில்
உன் பேரைச் சொன்னால் பூப்பூத்திடாதோ?
எமை நாளும் ஆளும் உருவை…
பூவின் மேலே வண்ணம் நீ தானே
வேரின் கீழே ஜீவன் நீதானே
நீயே எமதன்னமாக…
அன்பின் வாசலே “
என்னும் நம்பிக்கையுடன்
மாலதி கோவை
21-07-25
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
