Jeyamohan's Blog, page 54
July 18, 2025
ஆத்மாவின் அலைகடல்
அன்புள்ள ஜெ
கடல் நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். உண்மையைச் சொல்லப்போனால் படத்தைத்தான் பார்த்தாச்சே என்ற மனநிலை எனக்கும் இருந்தது. ஆனால் நாவல் பெரியதாக இருந்தது. ஆகவே மேலும் நிறைய உள்ளது என்ற எண்ணம் உருவானது. ஆகவே நூலை வாசித்தேன். ஏற்கனவே விஷ்ணுபுரம் நாவலை வாங்கி ஒரு வருடம் வாசித்தேன். இதுவும் அப்படித்தான் என்று தோன்றியது. ஆனால் மூன்றுநாட்களில் இரவும் பகலும் அமர்ந்து நாவலை வாசித்து முடித்தேன்.
எந்த கனவுக்கும், கற்பனைக்கும் இடம் அளிக்காத அப்பட்டமான ஒரு அக உலகம் இந்நாவலிலே உள்ளது. வாசிக்க ஆரம்பித்தால் நமக்குள் இருக்கும் நஞ்சும் நெருப்பும் அமுதும் நீரும் பொங்கி வருகின்றன. நான் டஸ்டேய்வேஸ்கியின் கிரைம் ஆண்ட் பனிஷ்மெண்ட் வாசித்து இதே கொந்தளிப்பை அடைந்திருக்கிறேன். அதற்கிணையான நாவல் அனுபவம் இது. இன்னும் இரண்டு முறையாவது இதை வாசிப்பேன் என நினைக்கிறேன்.
இரண்டு ஆத்மாக்கள் காலவெளியற்ற ஒரு இடத்தில் உக்கிரமாக ஒன்றையொன்று சந்தித்து மோதிக்கொள்வதுபோல இருக்கிறது இந்நாவல். இரண்டு ஆத்மாக்களும் மொழியாக மாறி ஒன்றையொன்று சந்திக்கின்றன. எனக்கு இருந்த மனப்பிம்பமே கன்யாகுமரி கடல்தான். அங்கே அரபிக்கடலும் வங்காள விரிகுடாவும் சந்திக்கும் கோடு தெரியும். இரண்டுபக்க அலைகளும் வந்து ஒன்றோடொன்று முட்டிக்கொள்வதை கைடு காட்டித்தருவார். அதுபோன்ற ஓர் அனுபவம் இந்நாவல். இரண்டு கடல்களின் போராட்டம் இந்நாவல்.
இந்தக் கடற்கரை வாழ்க்கை எனக்கு மிக அன்னியமானதாக உள்ளது. நான் பிறந்து வளர்ந்த கடற்கரையின் வாழ்க்கை இன்னும் நவீனமாகிவிட்டது. இது 80 களில் நிகழும் கதை என நினைக்கிறேன்.
இந்நாவல்தான் நீங்கள் எழுதியவற்றில் சிறந்தது என்பது என் எண்ணம். இதை ஒரு சினிமாவுக்காக எழுதியிருக்கிறீர்கள் என்பதே ஆச்சரியம். அத்துடன் இதை பத்து ஆண்டுகள் வெளியிடாமலேயே வைத்திருந்தீர்கள் என்பதும், வெளியிடவேண்டாம் என நினைத்தீர்கள் என்பதும் மேலும் ஆச்சரியம். வெளியிடாமலிருந்திருந்தால் எவ்வளவு பெரிய இழப்பு என்று நினைத்துக் கொள்கிறேன்.
இந்நாவலை நீங்கள் எழுதிவீர்கள் என்று எனக்கு தெரியும். நீங்கள் நித்ய சைதன்ய யதி ஆசிரமத்தில் ஏசுவை நினைத்துக்கொண்டதைப் பற்றி நாலைந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். கிறிஸ்துமஸ் கவிதைகளும் பல எழுதியுள்ளீர்கள். கிறிஸ்து பற்றி பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் பகுதிகளும் மகத்தானவை. மெக்தலீனா மறியா பற்றி ஒரு நாவல் எழுதுங்கள் என்று நான் உங்களுக்கு 2012 ல் ஒரு கடிதம் எழுதியபோது பார்ப்போம் என்று எழுதினீர்கள். இரண்டு ஆண்டுக்குப்பின் இதை எழுதியிருக்கிறீர்கள். இதுவும் மக்தலீனாவின் கதைதான்.
ஜெய்ஸன் சாமுவேல்
அன்புள்ள ஜெய்ஸன்.
நன்றி.
ஒரு நாவலை எழுதுவதே என்னளவில் முக்கியம். அது என் வரையில் ஓர் அகப்பயணம், ஒரு தியானம், ஒரு எய்துதல். அது நிகழ்ந்தபின் அதிலிருந்து கூடியவிரைவில் வெளியேறிவிடுவதையே நான் செய்து வருகிறேன். உண்மையில் உலகிலெங்கும் இன்று அது வழக்கம் இல்லை. ஒரு நாவலை எழுதியபின் குறைந்தது நான்காண்டுகள் அந்நாவலை ‘பிரமோட்’ செய்ய அந்த ஆசிரியனே உழைக்கவேண்டும் எனறு இன்றைய மேலைநாட்டுப் பதிப்புலகம் எதிர்பார்க்கிறது.
கடல் நாவலின் அந்த அலைக்கொந்தளிப்பு என்பது வெவ்வேறு வகையில் என் அகம் சார்ந்ததுதான். என்னால் சாம், தாமஸ் இருவருடனும் அடையாளம் காணமுடிகிறது. ஒருவகையில் விஷ்ணுபுரமும் அந்த மோதலின் கதை அல்லவா? கதைகளின் வழியாக நான் கண்டடைவது ஒன்றுண்டு. கண்டடைந்ததை உறுதிப்படுத்திக் கொள்வதும் கதைகளின் வழியாகவே.
இந்நாவலை தமிழில் எத்தனைபேர் நுணுக்கமாக உள்வாங்க முடியும் என்னும் சந்தேகமும் எனக்கு இருந்தது. கடல் படம் வெளிவந்தபின் இது தமிழர்களுக்குரிய நாவல் அல்ல என்னும் எண்ணம் உருவாகி, சிலகாலம் நீடித்தது. இதை மலையாளத்தில் எழுதித்தருகிறேன் என்று நான் ஒரு பதிப்பகத்திற்கு வாக்களித்திருந்தேன். அதன்படி எழுத முடியவில்லை. இந்த மொழிநடையை மலையாளத்திற்குக் கொண்டு சென்றபோது அங்கே வேரூன்றியுள்ள பைபிள்நடை, அதன் தேய்வழக்குகள், உருவாகி வந்தன. ஆகவே விட்டுவிட்டேன்.
இது ‘சமூகயதார்த்தங்களை’ சொல்லும் நாவல் அல்ல. அப்படிப்பட்ட நாவல்களை வாசிக்கவே நம்மவர்கள் பழகியிருக்கிறார்கள். (இன்னொரு சிறுபான்மையினர் ‘நுட்பம்’ என சொல்லிக்கொண்டு பாலியலை மட்டுமே வாசிப்பார்கள்) நான் கூறும் அந்த கடற்கரை என்பது ஒரு ‘சமூக உண்மை’ அல்ல. அது ஒரு வாழ்க்கைக்களம். எங்கும் உள்ள வாழ்க்கைக்களம்தான், இங்கே கொந்தளிக்கும் கடல் அருகே உள்ளது என்பது மட்டுமே கூடுதலாக உள்ளது. நான் இந்தியாவின் வெவ்வேறு நிலங்களில் கண்ட அடித்தள வாழ்க்கையின் சித்திரத்தையே அக்கடற்கரையில் சித்தரிக்கிறேன்.அதை புனைவுக்களமாக விரித்தும் இருக்கிறேன்.
இந்நாவல் கடற்கரை வாழ்க்கையைச் சொல்வது அல்ல. பாவம்- மீட்பு, சாத்தான் – தெய்வம் என இரு எல்லைகள் இருளென்றும் ஒளியென்றும் உலவும் ஒரு வாழ்க்கைக்களத்தைச் சித்தரிக்கவே முயன்றுள்ளேன். அவ்வாழ்க்கை சாம், தாமஸ் இருவரும் திகழ்வதற்கான பின்புலம்- அவ்வளவுதான். ஆகவேதான் அங்கே எந்தக் கதாபாத்திரமும் விரிவாக்கம் செய்யப்படவில்லை, அவை முகங்கள் மட்டுமே. நான் அறிந்த கடற்கரை என் கல்லூரிக்காலம் சார்ந்தது.
சாம், தாமஸ், பெர்க்மான்ஸ் ஆகியோர் ‘மெய்யான’ கதைமாந்தர் அல்ல. ‘ரத்தமும் சதையுமாக’ நாம் எங்கும் சந்திப்பவர்களும் அல்ல. மிக அரிதான தேடல்கொண்டவர்கள், அதன் பொருட்டு கிளம்பிச்செல்பவர்கள் மட்டுமே அத்தகைய அரிதான பேராளுமைகளைச் சந்தித்திருக்க முடியும். நான் அத்தகையோரைச் சந்தித்துள்ளேன். அவர்களின் சாயல் அக்கதையில் உண்டு. நான் அவ்வுலகைச் சார்ந்தவன். (சற்றேனும் அவ்வுலகுக்குள் வராத எவரும் என் வாசகர்கள் அல்ல)
தமிழின் பொதுவான வாசகன் ஒரு கதாபாத்திரத்தை identification வழியாகவே சென்றடைய பயின்றிருக்கிறான். தன்னுடனோ, தானறிந்த எவருடனோ ஒரு கதாபாத்திரத்திற்கு இருக்கும் தொடர்பே அவனால் புரிந்துகொள்ளத்தக்கதாக உள்ளது. அவனுடைய நடுத்தரவர்க்க எளிய வாழ்க்கைக்குள் அவன் அறிந்தவர்களையே எங்கும் எதிர்பார்க்கிறான். ‘இதைப்போன்ற ஒருவரை பார்த்ததே இல்லை’ என்பதே நம் வாசகன் அடிக்கடிச் சொல்லும் எதிர்விமர்சனமாக உள்ளது. அவன் அறிந்த சிற்றுலகுக்கு அப்பால் செல்ல அவனால் இயல்வதில்லை. எதையும் தன்னை நோக்கி இழுப்பவன் அவன்.
தாமஸ் அடைந்த துயரின் உச்சங்களை அடைந்தவர்களைப் பற்றி, சாம் சென்றடைந்த அகவிரிவை எய்தியவர்களைப்பற்றி, பெர்க்மான்ஸின் இருண்ட உலகைப்பற்றி நாம் ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அவை நம் அனுபவமண்டலத்திற்கு அப்பாலுள்ளன. அவற்றை மூர்க்கமாக நிராகரிக்கிறோம். ஆகவே பொதுவாகத் தமிழ்வாசகன் பற்றிய ஓர் அவநம்பிக்கை கடல் சினிமாவின் மீதான எதிர்விமர்சனங்களில் இருந்து உருவானது. வெளியிட ஊக்கமில்லாமலானமைக்கு அதுவும் காரணம்.
இந்நாவலின் முன்னுரையில் சொல்லப்பட்டிருப்பதுபோல ‘புதுமை’ (Novelty) என்னும் அம்சம் இந்நாவலில் இல்லை. உருவகத்தன்மையே உள்ளது. உருவகத்தன்மை புதுமைக்கு எதிரானது. இதிலுள்ள மூன்று அடிப்படை உருவகங்களும் இரண்டாயிரமாண்டு தொன்மை கொண்டவை, பத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பியக் காவியங்களில் சித்தரிக்கப்பட்டவை. அவற்றின் விரிவாக்கம் மற்றும் அகவயமாக்கமே இந்நாவலில் நிகழ்ந்துள்ளது.
நீண்ட இடைவேளைக்குப் பின் நாவலை படித்துப் பார்க்கையில் முன்பு ஜானகிராமன் சொன்னதுபோல ’இதற்கும் சிலர் இருப்பார்கள் என்னும் நம்பிக்கை’ உருவானது. ஆகவே வெளியிடத் தீர்மானித்தேன். உங்களை வந்தடைந்தது நிறைவளிக்கிறது.
இப்போது வியன்னாவில் இருக்கிறேன். நேற்று (17 ஜூலை 2025) செயிண்ட் ஸ்டீபன்ஸ் சர்ச்சில் ஒரு ஆர்கன் இசைநிகழ்வை கேட்டேன். இங்குள்ள சர்ச் ஆர்கன் நான்கு பகுதிகளிலாக மாபெரும் தேவாலயக் கூடத்தை நிரப்பியுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆர்கன்களில் ஒன்று இது. ஒரு சிறு கட்டிடம் அளவுக்கு பெரியது என்றால் ஊகிக்கமுடியும் உங்களுக்கு.
செபாஸ்டியன் பாக், விவால்டி, வைடர் , வியன்னெ ஆகியோரின் இசையை சுவிஸ் நாட்டு ஆர்கன் மேதை ஜீன் கெய்ஸர் (Jean-Christophe Geiser ) வாசித்தார். சுவிஸ் நாட்டிலுள்ள உலகின் மிகப்பெரிய ஆர்கனை இசைப்பவர் அவர். ஆர்கன் இசைப்பதைக் கற்பிக்கும் ஆசிரியரும்கூட.
ஒரு மாபெரும் தேவாலயக் கூடத்தில் அமர்ந்து, ஓர் இசைமேதையின் விரல்கள் எழுப்பும் இசையை, முந்நூறாண்டு தொன்மையான மிகப்பிரம்மாண்டமான ஆர்கனில் நேரடியாகக் கேட்பதென்பது ஒரு தவம் பலிப்பதுபோன்றது.
ஆர்கன் என்பது அந்த தேவாலயத்தையே ஒரு மாபெரும் இசைக்கருவியாக ஆக்கிவிடுவது. ஒரே ஒருவர் தன் விரல்களால் ஒரு கட்டிடத்தையே முழங்க வைக்கிறார். ஒரு மாபெரும் ஆர்க்கெஸ்டிராவுக்கு இணையான சேர்ந்திசை என்ற பிரமை எழுந்தது. அது ஒரு மகத்தான அனுபவம். பாவம், மீட்பு என்னும் இரு எல்லைகளை நோக்கி இசை ஆழிப்பேரலை என கொந்தளித்து சுழல்கிறது. கண்ணீர் மல்கி, நெஞ்சோடு கைசேர்த்து அமர்ந்திருந்தேன். அந்த அனுபவத்தின் துளியையேனும் அடையும் அகம் கொண்டவர்களுக்கு உரியது கடல்.
நம்மில் மிகச்சிலருக்கே நமது வழக்கமான அகவுலகத்தைக் கடந்து செல்ல இயல்கிறது. அப்படிக் கடக்கவேண்டும், இன்னொரு உலகில் நுழையவேண்டும் என்னும் முனைப்பே இங்கில்லை. பல நூறாண்டுகளாகத் தேக்கமுற்றுக்கிடக்கும் ஒரு பண்பாட்டுக்குரிய மனநிலை இது. மிகச்சிறிய வட்டத்திற்குள் முடிவில்லாது சுழல்வது. அதை உடைக்கவே இஸ்லாம், கிறிஸ்தவம் , மேலையிசை, மேலைக்கலை வகுப்புகளை அறிமுகம் செய்கிறோம். சிறில் அலெக்ஸின் கிறிஸ்தவ மெய்யியல் வகுப்புகள், அஜிதனின் இசை வகுப்புகள், ஏ.வி.மணிகண்டனின் கலைவகுப்புகள் கடல் நாவல் காட்டும் உலகுக்குள் நுழைவதற்கான அடிப்படைப் பயிற்சியை அளிப்பவை. அவற்றில் மிகச்சிலரே பங்குகொள்கின்றனர், குறிப்பாக அவர்களுக்காகவே நானும் எழுதுகிறேன். அந்த எண்ணம் உருவானபின் கடல் நாவலை வெளியிடலாம் என்ற எண்ணம் உருவாகியது.
ஜெ
கடல் வாங்க தொடர்புக்கு : contact@vishnupurampublications.comPhone : 9080283887
அஜிதன் மேலை இசை அறிமுக வகுப்பு ஜூலை 25, 26 மற்றும் 27
குமாரசெல்வா
குமாரசெல்வா, விளவங்கோட்டுத் தமிழையும் அங்கு வாழும் மக்களின் யதார்த்த சூழலையும் தனது புனைவுகளில் காட்சிப்படுத்தினார். குமரி மாவட்டத்தின் அடித்தள மற்றும் விளிம்புநிலை மக்களின் அவல வாழ்க்கையை அவர்களது மொழியிலேயே புனைவாக்கினார். குமார செல்வாவின் ‘கய்தமுள்’ கவிதைத் தொகுப்பு, நவீன இலக்கியத்தில், வட்டார எழுத்திலான கவிதைகளை உள்ளடக்கிய முதன்மை நூலாக முன் வைக்கப்படுகிறது. குமரி வட்டாரக் கவிதையுலகில் புதிய தலைமுறையை உருவாக்கிய முன்னோடியாக குமார செல்வா அறியப்படுகிறார்

கவிதைகள் இதழ் ஜூலை
அன்புள்ள ஜெ,
ஜூலை மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் ரீல்கவின் டுயினோ எலஜிக்கள் கவிதை தொகுப்பை பற்றி ‘ரீல்க டுயினோ’ என்ற கட்டுரையை சைதன்யா எழுதியுள்ளார். கமலதேவி, போகன் சங்கர் கவிதை ‘உலராத கண்ணீர்‘ குறித்து வாசிப்பனுபவம் எழுதியுள்ளார். தேவதேவனின் கவிதையின் மதம் கட்டுரை தொகுப்பின் ஒரு பகுதியான ‘மெல்லிய அசைவுகளும் பயங்கொள்ளி அசைவுகளும்’ என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. ‘காதலெனும் துறவு‘ என்னும் தலைப்பில் சக்திவேல் எழுதிய கட்டுரையும், ‘வாழ்வைத் திருடும் திருடர்கள்‘ என்னும் தலைப்பில் மதாரஂ எழுதிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.
நன்றி
ஆசிரியர் குழு
(மணவாளன், ஜி.எஸ்.எஸ்.வி. நவின்)
நம் குழந்தைகளின் அகவுலகம்
வகுப்பறைக்கல்வி உருவாக்கும் நெருக்கடியினால் மாணவர்கள் எதிரழுத்தத்தை அடைந்து இன்று மின்னணு விளையாட்டுகளையும் சமூக வலைதளத்தொடர்புகளையும் அடைகிறார்கள். அதன் விளைவாக போட்டித் தேர்வுகளுக்கான தகுதிகளிலிருந்தே தவறிவிடுகிறார்கள். ஒரு நீர்த்துளி பெரும்பாலை நிலத்தில் விழுவது போல ஒரு குழந்தை இன்றைய சமூக வலைத்தள சூழலில் மின்னணு விளையாட்டுகளின் சூழலில் சென்று விழுகிறது.
I listened to your speech in English; it was ok. You have to develop your pronunciation. There are many online classes available to help improve your pronunciation. Herewith I send some suggestions for your pronunciation development.
Our master’s voiceJuly 17, 2025
ஆல்ப்ஸ் மலைக்குளிரில் தத்துவம்
ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஷர்மிளா முழுமையறிவு நிகழ்ச்சிகளுக்கு ஆஸ்திரியாவில் இருந்தே வந்துகொண்டிருந்தார். ஒருமுறை ஆஸ்திரியாவில் ஒரு விஷ்ணுபுரம் கிளை அமைத்தாலென்ன என்று என்னிடம் கேட்டார். அதை ஐரோப்பியக் கிளையாக அமைக்கலாம் என்று சொன்னேன். அதன் நடைமுறைகளைப் பற்றி ஆஸ்டின் சௌந்தரிடம் பேசும்படிக் கோரினேன். அதன்படி முதலில் ஒரு இணையக்குழுமம் தொடங்கப்பட்டது. பின் அது விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் (ஐரோப்பா) கிளையாக ஆக்கப்பட்டது.
அதன் சார்பில் ஒரு இலக்கிய- தத்துவ முகாம் இந்த ஆண்டில் திட்டமிடப்பட்டது. முப்பதுபேர் கலந்துகொள்ளும் அளவுக்கு ஒரு நிகழ்வு. நான்குநாட்கள் ஒரு மலைத்தங்குமிடத்தில் கூடி விவாதிப்பது. அதாவது அமெரிக்க பூன் முகாமின் அதே வடிவிலான சந்திப்பு இது. என் தளத்தில் அறிவிப்பு வெளியாகியதும் முப்பதுபேர் பெயர் கொடுத்தனர். அறிவிப்பை நீக்கியபின்னரும் இருவர் சேர்ந்துகொண்டனர்.
நான் ஜூலை 4 கிளம்பி ஜூரிக் நகரில் வந்து விமானமிறங்கினேன். என்னுடன் அருண்மொழியும் சைதன்யாவும் வந்திருந்தார்கள். சூரிக்கில் எங்களை வெங்கட்டும் ராஜனும் வரவேற்றனர். ராஜனின் இல்லத்திற்குச் சென்று அங்கே ஐந்து நாட்கள் தங்கியிருந்தோம். அவை தனியாக எழுதவேண்டிய நாட்கள். ஒன்பதாம்தேதி காலை சூரிக்கில் இருந்து கிளம்பி ரயிலில் சால்ஸ்பெர்க் வந்து அங்கிருந்து மிட்டர்ஸில் என்னும் மலைத்தங்குமிடத்தை அடைந்தோம்.
ஐரோப்பாவுக்கு இது வசந்தகாலம். எங்கும் ஒளிரும் பசுமை, முகில்நிறைந்த வானத்தின்கீழே பசுமையலைகளாக மலையடுக்குகள், நீலச்சுடர்போல நெளிந்தோடும் ஓடைகள், தெளிந்த நீர் பெருகிச்செல்லும் ஆறுகள். அவ்வப்போது மழையும், உடனே கண்களை நிறைக்கும் வெள்ளி வெயில்பெருக்கும். இயற்கையழகு என்று சாதாரணமாகச் சொல்லப்படுவது அல்ல, ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு கணத்திலும் இயற்கையின் பேரழகு மட்டுமே நிறைந்திருக்கும் நிலம் எங்களைச் சூழ்ந்திருந்தது.
அதிலும் சுவிட்ஸர்லாந்து எல்லா பக்கமும், எல்லா காட்சிக்கோணங்களிலும் அழகு. ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து ஒருக்கி அழகுசெய்து வைத்திருப்பதுபோல. எல்லா வீடுகளும், தெருக்களும், சோலைகளும், புல்வெளிகளும் அப்போது வரையப்பட்ட இம்பிரஷனிஸ ஓவியங்கள் போல இருந்தன. சிலசமயம் விந்தையான ஒரு கனவுக்குள் மிதந்து சென்றுகொண்டே இருப்பதுபோலிருந்தது.
சூரிக்கில் இருந்து புடாபெஸ்ட் செல்லும் ரயிலில் ஒன்பதாம்தேதி பயணம் செய்தோம். எட்டாம் தேதி இரவு அரங்கசாமி வந்து எங்களுடன் சேர்ந்துகொண்டார். நண்பர் ராஜனும், வெங்கட்டும் உடனிருந்தனர். அந்த ரயிலின் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டே இருந்தேன். முதலில் புகைப்படம் எடுக்க கை பரபரக்கும். அதன்பின் எத்தனை எடுப்பது, எதைத்தான் எடுப்பது என்னும் திகட்டல் உருவாகி கண் மட்டுமாக அமர்ந்திருக்கநேர்ந்தது.
மாலையிலேயே மிட்டர்சில் வந்துவிட்டோம். அது ஒரு மலைச்சிற்றூர். பனிச்சறுக்குக்குப் புகழ்பெற்றது. பனிக்காலத்தில் அங்கே பல்லாயிரம்பேர் வந்து தங்கி விடுமுறையைக் கொண்டாடுவார்கள். நகர் முழுக்க அவர்களுக்கான மாளிகைகள்தான். எல்லாமே ஆஸ்திரியாவின் மரபான கட்டிடக்கலையை வெளிப்படுத்துபவை, பல கட்டிடங்கள் நூறாண்டுகாலத்திற்குமேல் தொன்மையானவை. ஒவ்வொன்றையும் சாளரங்கள் தோறும் மலர்ச்செடிகளை வைத்து அலங்கரித்திருந்தனர்.
வசந்தகாலம் ஆதலால் பெரிய கூட்டம் இல்லை. நாங்கள் தங்கியிருந்த விடுதி கொஞ்சம் ஆடம்பரமானது. வெந்நீர்- குளிர்நீர் நீச்சல்குளங்கள், ஸ்பாக்கள், உணவுக்கூடங்கள், ஓய்விடங்கள் என விடுமுறைக் கொண்டாட்டத்திற்கான எல்லா வசதிகளும் கொண்டது. அங்கே முப்பதுபேர் அமர்ந்து தத்துவம் பயில்கிறார்கள் என்றால் அந்த விடுதிக்காரர்கள் திகைத்திருப்பார்கள்.
ஜூலை பத்தாம் தேதி காலை 6 மணிக்கு (இந்திய நேரம் காலை 930) நான் குருபூர்ணிமா இணையச்சந்திப்பை நடத்தினேன். நூறுபேர் கலந்துகொண்டனர். வெண்முரசு, காவியம் நாவல்கள் பற்றிய கலந்துரையாடல். (உரையாடல் யூடியூப் இணைப்பு)
காலை ஒன்பதரை மணிக்கு இலக்கியச் சந்திப்பு தொடங்கியது. நான் இலக்கிய அரங்குகள் வழியாக இலக்கியம் பயில்வதைப் பற்றி, அந்த அரங்கின் நோக்கம் பற்றி ஒரு சுருக்கமான அறிமுக உரை ஆற்றினேன். இந்நிலத்தில் இப்படி ஒரு தொடக்கம் நிகழ்வது மெய்யாகவே என்னை உள எழுச்சி கொள்ளச் செய்திருந்தது.
முதல் அரங்கு எழுத்தாளர் ரா. கிரிதரன் அறிவியல் புனைகதைகளைப்பற்றி. ஒன்றரை மணிநேரம் காணொளியுடன் அந்த உரையை நடத்தினார். அறிவியல்புனைகதைகளில் கறாரான அறிவியல் அம்சம் கொண்டவை முதல் மென்மையான அறிவியலம்சமும் மிகைக்கற்பனையும் கொண்டவை வரை பல்வேறு வகைமாதிரிகள் உள்ளன. ஒவ்வொன்றையும் தனித்தனியாக அடையாளப்படுத்தி அவற்றின் சாத்தியக்கூறுகளை விவரித்தார். முதல்வகைக்கு ஐசக் அஸிமோவ் என்றால் இரண்டாம் வகைக்கு உர்சுலா லெ க்வின் ஆகியோரை உதாரணம் காட்டலாம்.
தொடர்ந்து விவாதம் நிகழ்ந்தது. ஜூல்ஸ் வெர்ன் எழுதிய அறிவியல்கதைகளை தொட்டுக்கொண்டு விவாதம் விரிந்தது. பல சந்தர்ப்பங்களில் அறிவியல்புனைவுகள் உருவாக்கிய புதிய சாத்தியங்களை அறிவியல் தொடர்ந்து வந்து கண்டெடுத்துள்ளது. அறிவியல்புனைவு அறிவியல் அல்ல, ஆனால் அறிவியலின் சாத்தியங்களில் இருந்து முன்செல்லும்போதே அதற்கு அறிவியல்புனைகதை என்னும் இடம் அமைகிறது.
மதியம் சைதன்யா இரண்டு ஐரோப்பியக் கவிஞர்களை முன்வைத்து கவிதை பற்றிய ஓர் உரையை நிகழ்த்தினார். பிரெஞ்சுக் கவிஞர் பாதலேர், ஜெர்மானியக் கவிஞர் ரில்கே.நண்பர் ஆண்டனி ரில்கேயை ஜெர்மானிய மொழியில் வாசித்திருந்தார். பிரான்ஸில் இருந்து வந்திருந்த பிரசன்னா பாதலேரை பிரெஞ்சில் வாசித்திருந்தார். சைதன்யா அவர்களை ஆங்கிலம் வழியாக அறிந்திருந்தார்.
ரில்கே, பாதலேர் இருவரின் கவிதைகள் பெரும் கனவுகள், கற்பனாவாதம் ஆகியவற்றாலான முந்தைய ஐரோப்பிய யுகத்தின் மீதான எதிர்நிலைகளாக எப்படி தங்கள் அழகியலைக் கட்டிக்கொண்டிருக்கின்றன என்றும், கற்பனாவாதக் கவிதைகளின் ஒருங்கிணைவுள்ள வடிவத்திற்கு எதிராக சிதைவுற்ற மொழிவெளிப்பாட்டை அவை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன என்றும் சைதன்யா பேசினார். அவை உடைந்த துண்டுகளாக தோன்றினாலும் உணர்ச்சிகரமான உள்ளிணைப்பும் கொண்டிருப்பதைச் சொன்னார். தொடர்ந்து விவாதம் நிகழ்ந்தது.
மாலையில் நான் விவேகானந்தர் பற்றி ஓர் உரை ஆற்றினேன். ஒரு மணிநேரம் திட்டமிட்டிருந்த உரை ஒன்றரை மணிநேரம் நீடித்தது. குருபூர்ணிமா நாள் ஆகையால் விவேகானந்தரைப் பற்றிப் பேசலாம் என்று தோன்றியது. உண்மையில் அது விவேகானந்தரில் தொடங்கி பல்வேறு ஆசிரியர்களைப் பற்றிய நினைவுகூர்தலாக அமைந்தது. நாராயணகுரு, நித்ய சைதன்ய யதி, வள்ளலார் அனைவருமே உரையில் வந்துசென்றார்கள்.
இங்கே இரவு ஒன்பது மணிக்குத்தான் இருட்டு வருகிறது. காலை ஐந்து மணிக்கே நல்ல வெளிச்சம் பிறந்துவிடுகிறது. ஆகவே ஆறரை மணிக்குப் பின் ஒரு நீண்ட நடை சென்று வந்தோம். இங்குள்ளவர்களுக்கு குளிர் இல்லை, ஆனால் நமக்கு கொஞ்சம் குளிர். ஒரு மெல்லிய ஜாக்கெட் தேவைப்படும் அளவுக்கு. மிட்டர்சில் ஊரில் பெரிய நடமாட்டமேதும் இல்லை. ஆகவே பேசியபடி நடைசெல்வது இனியதாக இருந்தது.
ஜூலை 11 ஆம் தேதி காலை ஒன்பதரை மணிக்கு தத்துவ அறிமுக வகுப்பு தொடங்கியது. வெள்ளிமலையிலும் அமெரிக்காவில் பூன்முகாமிலும் நடத்திய அதே வகுப்புதான். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதேனும் கொஞ்சம் புதியதாகச் சேரும். கதைகள், உவமைகள், தத்துவவிளக்கங்கள். அது அந்த தத்துவம் வழியாக நான் செல்லும் பயணத்தின் சான்று. எனக்குள் அவை விரிந்துகொண்டிருப்பதன் விளைவு. கற்பிப்பதே கற்பதற்குச் சிறந்த வழி என்று நித்யா சொல்வதுண்டு.
ஜூலை 12 ஆம் தேதி இரவும் 10 மணி வரை தொடர்ச்சியாகத் தத்துவ வகுப்பு நிகழ்ந்தது. 13 ஆம் தேதி காலையில் 11 மணிக்கு விடுதியை காலிசெய்யவேண்டும். காலையுணவு உண்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக விடைபெற்றோம். இன்னொரு சந்திப்பு மீண்டும் உடனேயே இங்கே நிகழவேண்டும் என முடிவு செய்தோம். தத்துவக் கல்வி தொடரவேண்டும் என்றும்.
இந்திய தத்துவத்தை மேலைச்சூழலில் ஏன் கற்பிக்கவேண்டும்? இந்தியசிந்தனை சார்ந்தே இங்குள்ள இந்தியர்கள் உலகைப் பார்க்கிறார்கள். அவர்கள் பல தலைமுறைகளாக இங்கே வாழ்ந்தாலும் இந்திய அடையாளத்தை இழக்கப்போவதில்லை. இழந்தால் அது அடையாளமிழப்புதான். அந்த சிந்தனைக்கோணத்தை வெறுமே நம்பிக்கைகளாக, மரபுகளாக கொண்டிருக்காமல் தர்க்கபூர்வமாகவும் வரலாற்றுநோக்கிலும் அறிந்திருப்பதற்கு தத்துவக் கல்வி அவசியம். புறவயமான தத்துவம் அவர்கள் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஐயங்களையும், குழப்பங்களையும் சட்டென்று தெளியச்செய்வதை அவர்களே உணரமுடியும்.
தத்துவம் என்னும்போது அறவுரைகள், ஆன்மிகவுரைகளை நான் உத்தேசிக்கவில்லை. இந்தியச் சிந்தனைமுறையை, அதன் உட்பிரிவுகளை, அதன் அடிப்படைக் கொள்கைகளை அறிமுகம் செய்கிறேன். அதைப் பயில்வதற்கான வழிமுறைகளை, அதையொட்டி சுயமாகச் சிந்திப்பதற்கான பாதையை அளிக்கிறேன். மெய்யான தத்துவக் கல்வி என்பது ‘தெரிந்துகொள்ளும்’ கல்வி அல்ல ‘சிந்தனைக்கான பயிற்சி’தான்.
தமிழ்ச்சூழலில் இதற்கான இடம் மிகமிக குறைவே. பொதுவாகவே நாம் மிக உலகியல்சார்ந்தவர்கள். இப்போதுதான் ஓரளவு பொருளியல் வசதி வரத்தொடங்கியுள்ளது. உலகம் முழுக்க வாய்ப்புகள் தேடிச்சென்று, சிலவற்றை அடைந்து வருகிறோம். அந்த வெற்றிகளை எளிய சுகபோகங்களாகக் கொண்டாட ஆரம்பித்துள்ளோம். சமூகக் கௌரவங்களை திட்டமிடத் தொடங்கியுள்ளோம். நம் எண்ணமெல்லாம் அதுவே உள்ளது. அது இயல்புதான். நம்மைவிட இருநூறாண்டுகள் பொருளியல், கல்வி, பண்பாடு ஆகியவற்றில் முன்னணியிலுள்ள ஐரோப்பா, அமெரிக்காவுடன் நம்மை ஒப்பிடக்கூடாதுதான்.
ஆனால் மிகச்சிறுபான்மையினர் காலத்தில் சற்று முன்னரே பயணப்படுகிறார்கள். அவர்களுக்கு கலை, இலக்கியம், தத்துவம் தேவைப்படுகிறது. எளிய கேளிக்கைகளில் சலிப்பும், சில்லறை சமூக அந்தஸ்து சார்ந்த கவலைகளில் இளக்காரமும் உருவாகிறது. அவர்கள் கலையிலக்கியங்களைக் கற்க வாய்ப்பு அமையவேண்டும். அதற்கான ஒரு தொடக்கமே இம்முயற்சிகள். சாதாரணமாக தமிழ்ச்சங்க விழாக்களுக்கு நடிகர்களையோ பட்டிமன்றப்பேச்சாளர்களையோ ரசிக்க வரும் பெருங்கூட்டத்தில் ஆயிரத்தில் ஒருவரே இங்கே வருவார்கள். ஆனால் அவர்களே எதிர்காலத்திற்கான விதைகள்.
கு.வெ. பாலசுப்பிரமணியன்
கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய சிறுகதை, நாவல்களை எழுதினார், இலக்கிய ஆய்வு நூல்களை, உரை நூல்களை எழுதினார். ஜி.யு. போப்பின் திருக்குறள் ஆங்கில உரை நூலை தனது உரையுடன் பதிப்பித்தார். தமிழக அரசின் கபிலர் விருது பெற்றார்.

அருகிருத்தல், தேவதேவன் – பிரீத்தி கருணா
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
‘தேவதேவனுடன் அருகிருத்தல்’ எனும் நிகழ்விற்காக ஓசூர் ‘bigin’ எனும் மழலையர் பள்ளியில் ஜூலை 6 அன்று கூடினோம். ஒருங்கிணைத்த கவிஞர் வேணு வெட்ராயன் அவர்களுக்கும், சரண்யாவிற்கும் மனமார்ந்த நன்றிகள். மூன்று வாரங்களுக்கு முன்பே whatsapp குழு மூலம் கவிதையின் மதம் மற்றும் அவரது கவிதைகள் பகிரப்பட்டு வாசித்தது நல்ல தொடக்கமாக அமைந்தது.
எங்களது கேள்விகளுக்கு தேவதேவன் அவர்கள் தன்னையும், தன் அனுபவங்களையும், கவிதைகளையுமே பதிலாக பகிர்ந்தார்.
நாற்காலி இருந்தும் சம்மணமிட்டு கீழே அமர்ந்து, எதிலும் சாயாமல் நாள் முழுதும் உரையாற்றினார். தன்னால் நான்கு நாட்களுக்கு கூட உணவில்லாமல் இவ்வாறு பேச முடியும் என்றது கவிஞரின், கவிதையின் தீவிரத்தை உணர்த்தியது. நான் உணர்ந்த வரை அவர் நாள் முழுதும் திகழ்ந்தது, உணர்த்த முனைந்தது– பேரன்பு, கருணை, களங்கமின்மை, உறுதி, காதல், காலமும் இடமும் இலாத நிகழ்தல், இன்னும் சொற்களால் என்னால் முழுமையாய் விளக்க முடியாத நிலை.
எங்களது கேள்விக்கான பதிலாய், கவிதைகளை அவர் நினைவுகூற, அதை வாசித்து பொருள் உணர்ந்தது, நாங்கள் நெருக்கமாக உணர்ந்த கவிதைகளை வாசித்து பின் அவர் அந்த அனுபவத்தை பகிர்ந்தது இனிய நிகழ்வாக இருந்தது.
பெரியம்மாவும் சூரியனும் கவிதையை விவரித்து, பெரியம்மாவிற்கான அவரது ஆழ்ந்த வருத்தம் அந்த மௌனத்துள் எங்களையும் இழுத்துக்கொண்டது. அதுவும் கால இடமற்ற நிலையே. மற்ற கவிதைகளால் சகஜமாகி பின் சிரித்து மீட்டார், மீண்டோம்.
கவிநிலவனும், தீபா வாசுதேவன் அவர்களும் தங்கள் இனிய பாடல்களால் மகிழ்வித்தார்கள்.
தேவதேவன் அவர்களின் கவிதைகளில் இடம்பெறும் மரம், வானம், பறவை, வீடு, சருகுகள் பற்றிப் பகிர்ந்து கொண்டோம். உணவு இடைவேளைக்கு பின் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அவர் பேசி முடிக்கும் முன் வந்த மழையால், ஒதுங்கி மழை–இசை பற்றிய பேச்சுடன் திரும்பியது சாரல் குளுமையின் நினைவாக இருக்கிறது.
‘யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்’ கவிதையை வாசித்து, பின்னர் தீபா அவர்கள் பாடலாக பாடியது மனதை உருக்குவதாக இருந்தது.
பிரமிளை ‘பாலை’ கவிதையின் வாயிலாக நினைவு கூர்ந்தோம்.
மகாநதி, கடல், காலிக்குவளை, ஊஞ்சலில் ஆடிய குழந்தை, ஒரு பழத்துண்டுகள், கட்டையான உடலுடைய, நாம் செய்யவேண்டியதென்ன,சின்னஞ்சிறிய சோகம், மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு, வாழ்வின் நடனம், புதிய ஏற்பாடு, அறுபடாத முலைகள், அழகு, குருவிக்கூடு, மொட்டை–மாடிக்களம், இரண்டு வீடுகள், ஒரு சிறு குருவி, ஆண் பெண், ஒரு புல்லின் உதவி கொண்டு, எவ்வளவு உயரமானாலும் என இன்னும் பல கவிதைகளை அங்கு வாசித்தோம்.
கிளம்புவதற்கு வெளியே வந்தவர் கூறியது ‘ஜெயமோகன் இல்லனா இது சாத்தியமில்ல தெரியுமா’.
எத்தனை கோடி கவிதையை அவர் விவரிக்கையில் தன் மனைவியின் பாவனையை வெளிப்படுத்தியது, எத்தனை நேசம், எத்தனை காதல் என்றே வியக்க வைத்தது.
கார் வந்ததும் ஏறிக்கொண்டு விடைப்பெற்றார். அவர் கிளம்பிச்சென்ற, அவ்வெற்றிடத்தை பார்த்து எனை மறந்த/எனை முழுதாய் உணர்ந்த கணங்களுக்கு பின் சென்னைக்கு கிளம்பினேன். ஆளுமையுடன் நிறைவான ஒரு நாளாக அமைந்தது.
நன்றியுடன்
ப்ரீத்தி
வேதாசலமும் வாசகர்களும் – ஒரு கேள்வி
அன்புள்ள ஜெ
வேதாசலம் அவர்களுக்கு தமிழ்விக்கி- தூரன் விருது அளிக்கப்படும் செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். நான் அவருடைய நூல்கள் எதையும் படித்ததில்லை. அவர் பெயரையே சென்ற ஆண்டு விருதுவிழாவில் அவர் கலந்துகொண்ட செய்தியைக்கொண்டுதான் அறிந்தேன். அதன் பின் இணையத்தில் அவருடைய காணொளிகள் சிலவற்றைக் கண்டேன். அவர் விருது பெறுவதை ஒட்டி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவருடைய எண்பெருங்குன்றம் நூலை மட்டும் இப்போதைக்கு வாங்கியிருக்கிறேன். நான் வரலாற்று நூல்களை பயிலும் வழக்கம் உடையவன் அல்ல. ஒரு சாமானிய வாசகன். இந்த நூலை வாசிக்கமுடியும் என நினைக்கிறேன்.
திரு வேதாசலம் அவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்றாய்வாளர்களில் ஒருவர். அவருக்கு இப்படி ஒரு விருது கிடைக்கிறது. ஹிந்து ஆங்கில நாளிதழ் ஒரு விரிவான செய்தியை வெளியிட்டிருந்தது. மற்றபடி தமிழில் எந்த இதழிலும் செய்தி இல்லை. அவர் தொடர்ச்சியாக தொல்லியல்சுற்றுலாக்கள் நடத்துகிறார். அதில் பலநூறுபேர் கலந்துகொண்டிருக்கலாம். ஆனால் ஒருவர்கூட அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்த இணையதளத்தில் வெளிவரவில்லை. சரி வெளியே முகநூலில் ஏதாவது வாழ்த்து இருக்கிறதா என்றால் அங்கும் இல்லை. இந்தப் புறக்கணிப்பு ஆழமான மனச்சோர்வை அளிக்கிறது. எனக்கே இப்படி என்றால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பணியாற்றும் வேதாச்சலம் போன்றவர்கள் உச்சிமேல் வைத்துக் கொண்டாடப்படவேண்டிய தியாகிகள்.
ஜே.சதானந்த்.
அன்புள்ள சதானந்த்,
தமிழ்ச்சமூகம் சினிமா, அரசியல் , தீனி தவிர எதையுமே கவனிக்காது. இவர்கள் எதைப்பேசவேண்டும் என்றாலும் அது ஒரு சினிமாவுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாகவேண்டும். அந்தக் கும்பலுக்கு நேர் எதிரான திசையில் செல்லும் முயற்சியே எங்களுடையது.
எனக்கும் வேதாசலத்தின் மாணவர்கள் ஒருவர்கூட வாழ்த்து சொல்லாதது வியப்பாகவே இருந்தது. ஆனால் வியப்புகொள்ள ஏதுமில்லை. மேலோட்டமான ஆர்வத்துடன் வேடிக்கைபார்ப்பவர்களாகவே அந்தவகையான தொல்லியல்- பண்பாட்டுப் பயணத்துக்கும் வகுப்புக்கும் எல்லாம் வருவார்கள். வந்த மறுநாளே மறந்தும் விடுவார்கள். வேதாசலம் பெயரே நினைவில் இருக்காது. அதை பல நிகழ்வுகளில் தொடர்ச்சியாகப் பார்த்துவருகிறேன், எனக்கே பழைய அனுபவங்கள் நிறைய உண்டு.
எங்கள் முழுமையறிவு நிகழ்வுகளுக்கு வருபவர்கள் வேறுவகையானவர்கள். அவர்களை தெரிவுசெய்கிறோம், எங்கள் தீவிரத்துடன் ஒட்டாதவர்களை இரக்கமில்லாமல் தவிர்க்கிறோம். இங்கே பணம்கட்டி வந்து அமர்ந்து கற்கிறார்கள். அவர்களுடைய அர்ப்பணிப்பும் ஆர்வமும் வேறுவகை. வேதாசலம் அவர்கள் விரைவில் எங்கள் அமைப்பில் வகுப்புகள் நடத்தவேண்டும் என விரும்புகிறேன்.
ஜெ
The intellectual pride
Here, if a philosopher says, ‘I am nothing; philosophical thinking is possible for everyone; there is no difference between a philosopher and a commoner,’ then only will he be respected as a true scholar by the laypeople here. Because he is humble!.
ஏஐ யை பயன்படுத்தி எதையும் எழுதிவிடலாம், அதுதான் ‘மாடர்ன்’ என்று என் பையன்கள் உட்பட இளைஞர்கள் நம்புகிறார்கள். உன் பக்கத்துவீட்டுக்காரனும் அதையே எழுதுவான் என்றால் அதற்கு என்ன பொருள் என்று கேட்டால் புரிவதே இல்லை.
ஏ.ஐ- எழுத்துநவீன மேலைக்கலை அறிமுக வகுப்புகள்
ஏ.வி.மணிகண்டனின் நவீன ஓவிய அறிமுக நிகழ்வு தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. இது வரை கிட்டத்தட்ட 200 பேர் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கின்றனர். இது ஒரு முதன்மையான பண்பாட்டுக் கல்வி, நவீன உலகை அறிமுகம் செய்துகொள்ள மிக அடிப்படையான ஒன்று என இளையதலைமுறையினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நவீன ஓவியக்கலையே இன்றைய கட்டிட வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, வெவ்வேறு ‘பிராண்ட் டிசைன்கள்’ முதல் இணையதள வடிவமைப்பு வரை அனைத்துக்கும் அடித்தளமான அழகியலை உருவாக்குவது. ஆனால் இந்தியாவில் இன்று இக்கல்விகளை பெறுபவர்கள்கூட நவீன மேலைநாட்டு ஓவியம் பற்றிய அறிமுகம் அளிக்கப்பட்டவர்கள் அல்ல.
நம்மைச் சூழ்ந்துள்ள நவீன வாழ்க்கையையும் தொழில்நுட்பத்தையும் அறிந்துகொள்ள மிக அடிப்படையாக அமையும் பயிற்சி இது.
ஆகஸ்ட் 8,9 மற்றும் 10
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவைமேலையிசை- வாக்னர் அறிமுகம். அஜிதன்ஐரோப்பியப் பண்பாட்டின் உச்சப்புள்ளி என்பது ஓப்பராதான் என்று டி.எஸ்.எலியட் ஒரு கட்டுரையில் சொல்கிறார் (The decline of music hall). ஏனென்றால் செவ்வியல் இசை, செவ்வியல் நாடகம்,ஓவியம் ஆகியவை செவ்விலக்கியத்துடன் இணையும் புள்ளி அதுவே. ஓப்பரா இன்றும்கூட ஐரோப்பாவில் முதன்மைக்கலையாகவே உள்ளது. The lion king போன்ற நவீன ஓப்பராக்களும் உருவாகின்றன. ஓப்பராவின் இன்னொரு வடிவம் நவீன இசைநாடகம்.
ஓப்பராவிலேயே மேலையிசையின் உச்சகட்ட சாத்தியங்கள் நிகழ்ந்துள்ளன. ஐரோப்பிய இசையின் முதன்மை ஆளுமை ரிச்சர்ட் வாக்னர். அவருடைய ஓப்பராக்கள்தான் இலக்கியவடிவமான காவியம் மாபெரும் இசைக்கோலங்களாக வெளிப்பட்ட கலைப்பெருநிகழ்வுகள். ஓப்பராவை விட எளிமையான வடிவமே சிம்பனி என்பது.
அஜிதன் ஏற்கனவே சிம்பனி இசை மேதையான பீத்தோவனை அறிமுகம் செய்து இரண்டு வகுப்புகளை நடத்தியிருக்கிறார். பல இளைஞர்களும் கோரியதற்கிணங்க வாக்னரின் ஓப்பராக்களைப் பற்றிய அறிமுக வகுப்பு ஒன்றை நடத்தவிருக்கிறார்.
ஓப்பரா போன்ற கலைவடிவை எளிதாக அறிமுகம் செய்துகொள்ள முடியாது. அதன் இலக்கியப்பின்புலம், பண்பாட்டுப்பின்புலம் ஆகியவற்றுடன் அவ்விசையை கேட்டு உணரவேண்டும்.இந்த வகுப்பில் ஓப்பராவின் தத்துவம், இலக்கியம் ஆகியவற்றுடன் இசையமைப்பையும் அறிமுகம் செய்து ஒரு தொடக்கத்தை அஜிதன் அளிக்கிறார்.
நாள் ஜூலை 25, 26 மற்றும் 27
தில்லை செந்தில்பிரபு நடத்திவரும் தியானம் மற்றும் உளக்குவிப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் முதல்நிலைப் பயிற்சி முடித்துள்ளனர். இரண்டாம்நிலைப் பயிற்சி வகுப்பும் நிகழ்ந்துள்ளது.இன்றைய சூழலில் உள்ளத்தைக் குவித்து செயலை ஆற்றுவதென்பதே மிகப்பெரிய சவால். கல்வியிலானாலும் தொழிலில் ஆனாலும். செயற்கையாக உள்ளத்தை தீவிரமாக்கிக்கொண்டால் அதன் விளைவாக உளச்சோர்வு உருவாவது இன்னொரு சிக்கல்.இன்றைய வாழ்க்கை நம் அட்ரினல் சுரப்பியை சீண்டிக்கொண்டே இருக்கிறது. ஒரு விலங்கு அபாயத்தில் இருக்கையில் அதன் உடலில் முழு ஆற்றலும் வெளிப்படவேண்டும். அதன் உடலின் உணவு முழுமையாக எரிக்கப்பட்டு, தசைகள் முற்றாகச் செயலாற்றவேண்டும். அட்ரினல் அப்பணியைச் செய்கிறது. ஆனால் நாம் இன்று உருவாக்கிக்கொண்டிருக்கும் பதற்றம், பரபரப்பு கொண்ட வாழ்க்கையில் நாம் நிரந்தரமாகவே சிங்கத்தால் துரத்தப்படும் மான் போல் இருக்கிறோம். நாம் பொழுதுபோக்கு என நினைக்கும் கேளிக்கைகள், சமூகஊடகங்கள் ஆகியவையும் நம் அட்ரினலைத் தூண்டுவனதான். அதுவே நம்மை கவனமின்மை மற்றும் உளச்சோர்வுக்குக் கொண்டுசெல்கிறது. செரிமானமின்மை, தூக்கமின்மை முதல் சோரியாஸிஸ் வரையிலான நோய்களுக்கும் காரணமாகிறது.யோக முறைகள், தியானங்கள் நாமே நம் உடலின் சுரப்பிகளை அமைதிப்படுத்தும் பயிற்சிகள்தான். நம் உள்ளத்தை நாமே மெல்ல அடங்கச் செய்து உடலை ஆறவைக்கிறோம். அவை மிகப்பயனுள்ளவை என்பதனால்தான் உலக அளவில் மிகப்பெரிய அளவில் பரவியுள்ளன. உலகிலேயே மிக அதிகமானபேர் யோக – தியானப்பயிற்சிகளைச் செய்யும் நாடுகள் ஐரோப்பா- அமெரிக்காதான்.
தில்லை செந்தில்பிரபு பயிற்றுவிக்கும் தியானமுறை இன்றைய காலகட்டத்திற்காக வரையறை செய்யப்பட்ட ஒன்று. உலகமெங்கும் செல்வாக்குடன் இருப்பது.
நாள் ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3 (வெள்ளி சனி ஞாயிறு)
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com
வரவிருக்கும் நிகழ்வுகள்இந்திய தத்துவ அறிமுகம்- ஐந்தாம் நிலை
ஜெயமோகன் நடத்தும் வகுப்புகள். இந்திய தத்துவ அறிமுகம் 5 ஆம் நிலை. இது நான்காம் நிலை முடித்தவர்களுக்காக மட்டுமே
நாள் ஆகஸ்ட் 22 23 மற்றும் 25
இந்திய ஆலயக்கலை அறிமுகம்ஜெயக்குமார் நடத்தும் இந்திய ஆலயக்கலை அறிமுக வகுப்புகள் இன்று உலகம் நோக்கி விரியத்தொடங்கியுள்ளன. அண்மையில் ஆஸ்திரியாவிலும் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். இந்தியச் சிற்பக்கலை- கட்டிடக்கலையை அறிமுகம் செய்யும் இவ்வகுப்புகள் ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிய மிகப்பெரிய அகத்தொடக்கங்களாக அமையும் தன்மை கொண்டவை. நம்மைச் சுற்றியுள்ள ஆலயங்கள் மாபெரும் நூல்கள். நமக்கு அவற்றின் மொழி தெரியாது. சட்டென்று அவை நம்முடன் உரையாடத் தொடங்கிவிடும் அனுபவத்தை நாம் அடைகிறோம். அதன் பின் நாம் வாழ்நாளெல்லாம் வாசிக்கலாம்
நாள் ஆகஸ்ட் 29, 30 செப்டெம்பர் 1
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
