அருகிருத்தல், தேவதேவன் – பிரீத்தி கருணா
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
‘தேவதேவனுடன் அருகிருத்தல்’ எனும் நிகழ்விற்காக ஓசூர் ‘bigin’ எனும் மழலையர் பள்ளியில் ஜூலை 6 அன்று கூடினோம். ஒருங்கிணைத்த கவிஞர் வேணு வெட்ராயன் அவர்களுக்கும், சரண்யாவிற்கும் மனமார்ந்த நன்றிகள். மூன்று வாரங்களுக்கு முன்பே whatsapp குழு மூலம் கவிதையின் மதம் மற்றும் அவரது கவிதைகள் பகிரப்பட்டு வாசித்தது நல்ல தொடக்கமாக அமைந்தது.
எங்களது கேள்விகளுக்கு தேவதேவன் அவர்கள் தன்னையும், தன் அனுபவங்களையும், கவிதைகளையுமே பதிலாக பகிர்ந்தார்.
நாற்காலி இருந்தும் சம்மணமிட்டு கீழே அமர்ந்து, எதிலும் சாயாமல் நாள் முழுதும் உரையாற்றினார். தன்னால் நான்கு நாட்களுக்கு கூட உணவில்லாமல் இவ்வாறு பேச முடியும் என்றது கவிஞரின், கவிதையின் தீவிரத்தை உணர்த்தியது. நான் உணர்ந்த வரை அவர் நாள் முழுதும் திகழ்ந்தது, உணர்த்த முனைந்தது– பேரன்பு, கருணை, களங்கமின்மை, உறுதி, காதல், காலமும் இடமும் இலாத நிகழ்தல், இன்னும் சொற்களால் என்னால் முழுமையாய் விளக்க முடியாத நிலை.
எங்களது கேள்விக்கான பதிலாய், கவிதைகளை அவர் நினைவுகூற, அதை வாசித்து பொருள் உணர்ந்தது, நாங்கள் நெருக்கமாக உணர்ந்த கவிதைகளை வாசித்து பின் அவர் அந்த அனுபவத்தை பகிர்ந்தது இனிய நிகழ்வாக இருந்தது.
பெரியம்மாவும் சூரியனும் கவிதையை விவரித்து, பெரியம்மாவிற்கான அவரது ஆழ்ந்த வருத்தம் அந்த மௌனத்துள் எங்களையும் இழுத்துக்கொண்டது. அதுவும் கால இடமற்ற நிலையே. மற்ற கவிதைகளால் சகஜமாகி பின் சிரித்து மீட்டார், மீண்டோம்.
கவிநிலவனும், தீபா வாசுதேவன் அவர்களும் தங்கள் இனிய பாடல்களால் மகிழ்வித்தார்கள்.
தேவதேவன் அவர்களின் கவிதைகளில் இடம்பெறும் மரம், வானம், பறவை, வீடு, சருகுகள் பற்றிப் பகிர்ந்து கொண்டோம். உணவு இடைவேளைக்கு பின் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அவர் பேசி முடிக்கும் முன் வந்த மழையால், ஒதுங்கி மழை–இசை பற்றிய பேச்சுடன் திரும்பியது சாரல் குளுமையின் நினைவாக இருக்கிறது.
‘யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்’ கவிதையை வாசித்து, பின்னர் தீபா அவர்கள் பாடலாக பாடியது மனதை உருக்குவதாக இருந்தது.
பிரமிளை ‘பாலை’ கவிதையின் வாயிலாக நினைவு கூர்ந்தோம்.
மகாநதி, கடல், காலிக்குவளை, ஊஞ்சலில் ஆடிய குழந்தை, ஒரு பழத்துண்டுகள், கட்டையான உடலுடைய, நாம் செய்யவேண்டியதென்ன,சின்னஞ்சிறிய சோகம், மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு, வாழ்வின் நடனம், புதிய ஏற்பாடு, அறுபடாத முலைகள், அழகு, குருவிக்கூடு, மொட்டை–மாடிக்களம், இரண்டு வீடுகள், ஒரு சிறு குருவி, ஆண் பெண், ஒரு புல்லின் உதவி கொண்டு, எவ்வளவு உயரமானாலும் என இன்னும் பல கவிதைகளை அங்கு வாசித்தோம்.
கிளம்புவதற்கு வெளியே வந்தவர் கூறியது ‘ஜெயமோகன் இல்லனா இது சாத்தியமில்ல தெரியுமா’.
எத்தனை கோடி கவிதையை அவர் விவரிக்கையில் தன் மனைவியின் பாவனையை வெளிப்படுத்தியது, எத்தனை நேசம், எத்தனை காதல் என்றே வியக்க வைத்தது.
கார் வந்ததும் ஏறிக்கொண்டு விடைப்பெற்றார். அவர் கிளம்பிச்சென்ற, அவ்வெற்றிடத்தை பார்த்து எனை மறந்த/எனை முழுதாய் உணர்ந்த கணங்களுக்கு பின் சென்னைக்கு கிளம்பினேன். ஆளுமையுடன் நிறைவான ஒரு நாளாக அமைந்தது.
நன்றியுடன்
ப்ரீத்தி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
