வேதாசலமும் வாசகர்களும் – ஒரு கேள்வி
அன்புள்ள ஜெ
வேதாசலம் அவர்களுக்கு தமிழ்விக்கி- தூரன் விருது அளிக்கப்படும் செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். நான் அவருடைய நூல்கள் எதையும் படித்ததில்லை. அவர் பெயரையே சென்ற ஆண்டு விருதுவிழாவில் அவர் கலந்துகொண்ட செய்தியைக்கொண்டுதான் அறிந்தேன். அதன் பின் இணையத்தில் அவருடைய காணொளிகள் சிலவற்றைக் கண்டேன். அவர் விருது பெறுவதை ஒட்டி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவருடைய எண்பெருங்குன்றம் நூலை மட்டும் இப்போதைக்கு வாங்கியிருக்கிறேன். நான் வரலாற்று நூல்களை பயிலும் வழக்கம் உடையவன் அல்ல. ஒரு சாமானிய வாசகன். இந்த நூலை வாசிக்கமுடியும் என நினைக்கிறேன்.
திரு வேதாசலம் அவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்றாய்வாளர்களில் ஒருவர். அவருக்கு இப்படி ஒரு விருது கிடைக்கிறது. ஹிந்து ஆங்கில நாளிதழ் ஒரு விரிவான செய்தியை வெளியிட்டிருந்தது. மற்றபடி தமிழில் எந்த இதழிலும் செய்தி இல்லை. அவர் தொடர்ச்சியாக தொல்லியல்சுற்றுலாக்கள் நடத்துகிறார். அதில் பலநூறுபேர் கலந்துகொண்டிருக்கலாம். ஆனால் ஒருவர்கூட அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்த இணையதளத்தில் வெளிவரவில்லை. சரி வெளியே முகநூலில் ஏதாவது வாழ்த்து இருக்கிறதா என்றால் அங்கும் இல்லை. இந்தப் புறக்கணிப்பு ஆழமான மனச்சோர்வை அளிக்கிறது. எனக்கே இப்படி என்றால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பணியாற்றும் வேதாச்சலம் போன்றவர்கள் உச்சிமேல் வைத்துக் கொண்டாடப்படவேண்டிய தியாகிகள்.
ஜே.சதானந்த்.
அன்புள்ள சதானந்த்,
தமிழ்ச்சமூகம் சினிமா, அரசியல் , தீனி தவிர எதையுமே கவனிக்காது. இவர்கள் எதைப்பேசவேண்டும் என்றாலும் அது ஒரு சினிமாவுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாகவேண்டும். அந்தக் கும்பலுக்கு நேர் எதிரான திசையில் செல்லும் முயற்சியே எங்களுடையது.
எனக்கும் வேதாசலத்தின் மாணவர்கள் ஒருவர்கூட வாழ்த்து சொல்லாதது வியப்பாகவே இருந்தது. ஆனால் வியப்புகொள்ள ஏதுமில்லை. மேலோட்டமான ஆர்வத்துடன் வேடிக்கைபார்ப்பவர்களாகவே அந்தவகையான தொல்லியல்- பண்பாட்டுப் பயணத்துக்கும் வகுப்புக்கும் எல்லாம் வருவார்கள். வந்த மறுநாளே மறந்தும் விடுவார்கள். வேதாசலம் பெயரே நினைவில் இருக்காது. அதை பல நிகழ்வுகளில் தொடர்ச்சியாகப் பார்த்துவருகிறேன், எனக்கே பழைய அனுபவங்கள் நிறைய உண்டு.
எங்கள் முழுமையறிவு நிகழ்வுகளுக்கு வருபவர்கள் வேறுவகையானவர்கள். அவர்களை தெரிவுசெய்கிறோம், எங்கள் தீவிரத்துடன் ஒட்டாதவர்களை இரக்கமில்லாமல் தவிர்க்கிறோம். இங்கே பணம்கட்டி வந்து அமர்ந்து கற்கிறார்கள். அவர்களுடைய அர்ப்பணிப்பும் ஆர்வமும் வேறுவகை. வேதாசலம் அவர்கள் விரைவில் எங்கள் அமைப்பில் வகுப்புகள் நடத்தவேண்டும் என விரும்புகிறேன்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
