ஆல்ப்ஸ் மலைக்குளிரில் தத்துவம்
ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஷர்மிளா முழுமையறிவு நிகழ்ச்சிகளுக்கு ஆஸ்திரியாவில் இருந்தே வந்துகொண்டிருந்தார். ஒருமுறை ஆஸ்திரியாவில் ஒரு விஷ்ணுபுரம் கிளை அமைத்தாலென்ன என்று என்னிடம் கேட்டார். அதை ஐரோப்பியக் கிளையாக அமைக்கலாம் என்று சொன்னேன். அதன் நடைமுறைகளைப் பற்றி ஆஸ்டின் சௌந்தரிடம் பேசும்படிக் கோரினேன். அதன்படி முதலில் ஒரு இணையக்குழுமம் தொடங்கப்பட்டது. பின் அது விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் (ஐரோப்பா) கிளையாக ஆக்கப்பட்டது.
அதன் சார்பில் ஒரு இலக்கிய- தத்துவ முகாம் இந்த ஆண்டில் திட்டமிடப்பட்டது. முப்பதுபேர் கலந்துகொள்ளும் அளவுக்கு ஒரு நிகழ்வு. நான்குநாட்கள் ஒரு மலைத்தங்குமிடத்தில் கூடி விவாதிப்பது. அதாவது அமெரிக்க பூன் முகாமின் அதே வடிவிலான சந்திப்பு இது. என் தளத்தில் அறிவிப்பு வெளியாகியதும் முப்பதுபேர் பெயர் கொடுத்தனர். அறிவிப்பை நீக்கியபின்னரும் இருவர் சேர்ந்துகொண்டனர்.
நான் ஜூலை 4 கிளம்பி ஜூரிக் நகரில் வந்து விமானமிறங்கினேன். என்னுடன் அருண்மொழியும் சைதன்யாவும் வந்திருந்தார்கள். சூரிக்கில் எங்களை வெங்கட்டும் ராஜனும் வரவேற்றனர். ராஜனின் இல்லத்திற்குச் சென்று அங்கே ஐந்து நாட்கள் தங்கியிருந்தோம். அவை தனியாக எழுதவேண்டிய நாட்கள். ஒன்பதாம்தேதி காலை சூரிக்கில் இருந்து கிளம்பி ரயிலில் சால்ஸ்பெர்க் வந்து அங்கிருந்து மிட்டர்ஸில் என்னும் மலைத்தங்குமிடத்தை அடைந்தோம்.
ஐரோப்பாவுக்கு இது வசந்தகாலம். எங்கும் ஒளிரும் பசுமை, முகில்நிறைந்த வானத்தின்கீழே பசுமையலைகளாக மலையடுக்குகள், நீலச்சுடர்போல நெளிந்தோடும் ஓடைகள், தெளிந்த நீர் பெருகிச்செல்லும் ஆறுகள். அவ்வப்போது மழையும், உடனே கண்களை நிறைக்கும் வெள்ளி வெயில்பெருக்கும். இயற்கையழகு என்று சாதாரணமாகச் சொல்லப்படுவது அல்ல, ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு கணத்திலும் இயற்கையின் பேரழகு மட்டுமே நிறைந்திருக்கும் நிலம் எங்களைச் சூழ்ந்திருந்தது.
அதிலும் சுவிட்ஸர்லாந்து எல்லா பக்கமும், எல்லா காட்சிக்கோணங்களிலும் அழகு. ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து ஒருக்கி அழகுசெய்து வைத்திருப்பதுபோல. எல்லா வீடுகளும், தெருக்களும், சோலைகளும், புல்வெளிகளும் அப்போது வரையப்பட்ட இம்பிரஷனிஸ ஓவியங்கள் போல இருந்தன. சிலசமயம் விந்தையான ஒரு கனவுக்குள் மிதந்து சென்றுகொண்டே இருப்பதுபோலிருந்தது.
சூரிக்கில் இருந்து புடாபெஸ்ட் செல்லும் ரயிலில் ஒன்பதாம்தேதி பயணம் செய்தோம். எட்டாம் தேதி இரவு அரங்கசாமி வந்து எங்களுடன் சேர்ந்துகொண்டார். நண்பர் ராஜனும், வெங்கட்டும் உடனிருந்தனர். அந்த ரயிலின் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டே இருந்தேன். முதலில் புகைப்படம் எடுக்க கை பரபரக்கும். அதன்பின் எத்தனை எடுப்பது, எதைத்தான் எடுப்பது என்னும் திகட்டல் உருவாகி கண் மட்டுமாக அமர்ந்திருக்கநேர்ந்தது.
மாலையிலேயே மிட்டர்சில் வந்துவிட்டோம். அது ஒரு மலைச்சிற்றூர். பனிச்சறுக்குக்குப் புகழ்பெற்றது. பனிக்காலத்தில் அங்கே பல்லாயிரம்பேர் வந்து தங்கி விடுமுறையைக் கொண்டாடுவார்கள். நகர் முழுக்க அவர்களுக்கான மாளிகைகள்தான். எல்லாமே ஆஸ்திரியாவின் மரபான கட்டிடக்கலையை வெளிப்படுத்துபவை, பல கட்டிடங்கள் நூறாண்டுகாலத்திற்குமேல் தொன்மையானவை. ஒவ்வொன்றையும் சாளரங்கள் தோறும் மலர்ச்செடிகளை வைத்து அலங்கரித்திருந்தனர்.
வசந்தகாலம் ஆதலால் பெரிய கூட்டம் இல்லை. நாங்கள் தங்கியிருந்த விடுதி கொஞ்சம் ஆடம்பரமானது. வெந்நீர்- குளிர்நீர் நீச்சல்குளங்கள், ஸ்பாக்கள், உணவுக்கூடங்கள், ஓய்விடங்கள் என விடுமுறைக் கொண்டாட்டத்திற்கான எல்லா வசதிகளும் கொண்டது. அங்கே முப்பதுபேர் அமர்ந்து தத்துவம் பயில்கிறார்கள் என்றால் அந்த விடுதிக்காரர்கள் திகைத்திருப்பார்கள்.
ஜூலை பத்தாம் தேதி காலை 6 மணிக்கு (இந்திய நேரம் காலை 930) நான் குருபூர்ணிமா இணையச்சந்திப்பை நடத்தினேன். நூறுபேர் கலந்துகொண்டனர். வெண்முரசு, காவியம் நாவல்கள் பற்றிய கலந்துரையாடல். (உரையாடல் யூடியூப் இணைப்பு)
காலை ஒன்பதரை மணிக்கு இலக்கியச் சந்திப்பு தொடங்கியது. நான் இலக்கிய அரங்குகள் வழியாக இலக்கியம் பயில்வதைப் பற்றி, அந்த அரங்கின் நோக்கம் பற்றி ஒரு சுருக்கமான அறிமுக உரை ஆற்றினேன். இந்நிலத்தில் இப்படி ஒரு தொடக்கம் நிகழ்வது மெய்யாகவே என்னை உள எழுச்சி கொள்ளச் செய்திருந்தது.
முதல் அரங்கு எழுத்தாளர் ரா. கிரிதரன் அறிவியல் புனைகதைகளைப்பற்றி. ஒன்றரை மணிநேரம் காணொளியுடன் அந்த உரையை நடத்தினார். அறிவியல்புனைகதைகளில் கறாரான அறிவியல் அம்சம் கொண்டவை முதல் மென்மையான அறிவியலம்சமும் மிகைக்கற்பனையும் கொண்டவை வரை பல்வேறு வகைமாதிரிகள் உள்ளன. ஒவ்வொன்றையும் தனித்தனியாக அடையாளப்படுத்தி அவற்றின் சாத்தியக்கூறுகளை விவரித்தார். முதல்வகைக்கு ஐசக் அஸிமோவ் என்றால் இரண்டாம் வகைக்கு உர்சுலா லெ க்வின் ஆகியோரை உதாரணம் காட்டலாம்.
தொடர்ந்து விவாதம் நிகழ்ந்தது. ஜூல்ஸ் வெர்ன் எழுதிய அறிவியல்கதைகளை தொட்டுக்கொண்டு விவாதம் விரிந்தது. பல சந்தர்ப்பங்களில் அறிவியல்புனைவுகள் உருவாக்கிய புதிய சாத்தியங்களை அறிவியல் தொடர்ந்து வந்து கண்டெடுத்துள்ளது. அறிவியல்புனைவு அறிவியல் அல்ல, ஆனால் அறிவியலின் சாத்தியங்களில் இருந்து முன்செல்லும்போதே அதற்கு அறிவியல்புனைகதை என்னும் இடம் அமைகிறது.
மதியம் சைதன்யா இரண்டு ஐரோப்பியக் கவிஞர்களை முன்வைத்து கவிதை பற்றிய ஓர் உரையை நிகழ்த்தினார். பிரெஞ்சுக் கவிஞர் பாதலேர், ஜெர்மானியக் கவிஞர் ரில்கே.நண்பர் ஆண்டனி ரில்கேயை ஜெர்மானிய மொழியில் வாசித்திருந்தார். பிரான்ஸில் இருந்து வந்திருந்த பிரசன்னா பாதலேரை பிரெஞ்சில் வாசித்திருந்தார். சைதன்யா அவர்களை ஆங்கிலம் வழியாக அறிந்திருந்தார்.
ரில்கே, பாதலேர் இருவரின் கவிதைகள் பெரும் கனவுகள், கற்பனாவாதம் ஆகியவற்றாலான முந்தைய ஐரோப்பிய யுகத்தின் மீதான எதிர்நிலைகளாக எப்படி தங்கள் அழகியலைக் கட்டிக்கொண்டிருக்கின்றன என்றும், கற்பனாவாதக் கவிதைகளின் ஒருங்கிணைவுள்ள வடிவத்திற்கு எதிராக சிதைவுற்ற மொழிவெளிப்பாட்டை அவை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன என்றும் சைதன்யா பேசினார். அவை உடைந்த துண்டுகளாக தோன்றினாலும் உணர்ச்சிகரமான உள்ளிணைப்பும் கொண்டிருப்பதைச் சொன்னார். தொடர்ந்து விவாதம் நிகழ்ந்தது.
மாலையில் நான் விவேகானந்தர் பற்றி ஓர் உரை ஆற்றினேன். ஒரு மணிநேரம் திட்டமிட்டிருந்த உரை ஒன்றரை மணிநேரம் நீடித்தது. குருபூர்ணிமா நாள் ஆகையால் விவேகானந்தரைப் பற்றிப் பேசலாம் என்று தோன்றியது. உண்மையில் அது விவேகானந்தரில் தொடங்கி பல்வேறு ஆசிரியர்களைப் பற்றிய நினைவுகூர்தலாக அமைந்தது. நாராயணகுரு, நித்ய சைதன்ய யதி, வள்ளலார் அனைவருமே உரையில் வந்துசென்றார்கள்.
இங்கே இரவு ஒன்பது மணிக்குத்தான் இருட்டு வருகிறது. காலை ஐந்து மணிக்கே நல்ல வெளிச்சம் பிறந்துவிடுகிறது. ஆகவே ஆறரை மணிக்குப் பின் ஒரு நீண்ட நடை சென்று வந்தோம். இங்குள்ளவர்களுக்கு குளிர் இல்லை, ஆனால் நமக்கு கொஞ்சம் குளிர். ஒரு மெல்லிய ஜாக்கெட் தேவைப்படும் அளவுக்கு. மிட்டர்சில் ஊரில் பெரிய நடமாட்டமேதும் இல்லை. ஆகவே பேசியபடி நடைசெல்வது இனியதாக இருந்தது.
ஜூலை 11 ஆம் தேதி காலை ஒன்பதரை மணிக்கு தத்துவ அறிமுக வகுப்பு தொடங்கியது. வெள்ளிமலையிலும் அமெரிக்காவில் பூன்முகாமிலும் நடத்திய அதே வகுப்புதான். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதேனும் கொஞ்சம் புதியதாகச் சேரும். கதைகள், உவமைகள், தத்துவவிளக்கங்கள். அது அந்த தத்துவம் வழியாக நான் செல்லும் பயணத்தின் சான்று. எனக்குள் அவை விரிந்துகொண்டிருப்பதன் விளைவு. கற்பிப்பதே கற்பதற்குச் சிறந்த வழி என்று நித்யா சொல்வதுண்டு.
ஜூலை 12 ஆம் தேதி இரவும் 10 மணி வரை தொடர்ச்சியாகத் தத்துவ வகுப்பு நிகழ்ந்தது. 13 ஆம் தேதி காலையில் 11 மணிக்கு விடுதியை காலிசெய்யவேண்டும். காலையுணவு உண்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக விடைபெற்றோம். இன்னொரு சந்திப்பு மீண்டும் உடனேயே இங்கே நிகழவேண்டும் என முடிவு செய்தோம். தத்துவக் கல்வி தொடரவேண்டும் என்றும்.
இந்திய தத்துவத்தை மேலைச்சூழலில் ஏன் கற்பிக்கவேண்டும்? இந்தியசிந்தனை சார்ந்தே இங்குள்ள இந்தியர்கள் உலகைப் பார்க்கிறார்கள். அவர்கள் பல தலைமுறைகளாக இங்கே வாழ்ந்தாலும் இந்திய அடையாளத்தை இழக்கப்போவதில்லை. இழந்தால் அது அடையாளமிழப்புதான். அந்த சிந்தனைக்கோணத்தை வெறுமே நம்பிக்கைகளாக, மரபுகளாக கொண்டிருக்காமல் தர்க்கபூர்வமாகவும் வரலாற்றுநோக்கிலும் அறிந்திருப்பதற்கு தத்துவக் கல்வி அவசியம். புறவயமான தத்துவம் அவர்கள் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஐயங்களையும், குழப்பங்களையும் சட்டென்று தெளியச்செய்வதை அவர்களே உணரமுடியும்.
தத்துவம் என்னும்போது அறவுரைகள், ஆன்மிகவுரைகளை நான் உத்தேசிக்கவில்லை. இந்தியச் சிந்தனைமுறையை, அதன் உட்பிரிவுகளை, அதன் அடிப்படைக் கொள்கைகளை அறிமுகம் செய்கிறேன். அதைப் பயில்வதற்கான வழிமுறைகளை, அதையொட்டி சுயமாகச் சிந்திப்பதற்கான பாதையை அளிக்கிறேன். மெய்யான தத்துவக் கல்வி என்பது ‘தெரிந்துகொள்ளும்’ கல்வி அல்ல ‘சிந்தனைக்கான பயிற்சி’தான்.
தமிழ்ச்சூழலில் இதற்கான இடம் மிகமிக குறைவே. பொதுவாகவே நாம் மிக உலகியல்சார்ந்தவர்கள். இப்போதுதான் ஓரளவு பொருளியல் வசதி வரத்தொடங்கியுள்ளது. உலகம் முழுக்க வாய்ப்புகள் தேடிச்சென்று, சிலவற்றை அடைந்து வருகிறோம். அந்த வெற்றிகளை எளிய சுகபோகங்களாகக் கொண்டாட ஆரம்பித்துள்ளோம். சமூகக் கௌரவங்களை திட்டமிடத் தொடங்கியுள்ளோம். நம் எண்ணமெல்லாம் அதுவே உள்ளது. அது இயல்புதான். நம்மைவிட இருநூறாண்டுகள் பொருளியல், கல்வி, பண்பாடு ஆகியவற்றில் முன்னணியிலுள்ள ஐரோப்பா, அமெரிக்காவுடன் நம்மை ஒப்பிடக்கூடாதுதான்.
ஆனால் மிகச்சிறுபான்மையினர் காலத்தில் சற்று முன்னரே பயணப்படுகிறார்கள். அவர்களுக்கு கலை, இலக்கியம், தத்துவம் தேவைப்படுகிறது. எளிய கேளிக்கைகளில் சலிப்பும், சில்லறை சமூக அந்தஸ்து சார்ந்த கவலைகளில் இளக்காரமும் உருவாகிறது. அவர்கள் கலையிலக்கியங்களைக் கற்க வாய்ப்பு அமையவேண்டும். அதற்கான ஒரு தொடக்கமே இம்முயற்சிகள். சாதாரணமாக தமிழ்ச்சங்க விழாக்களுக்கு நடிகர்களையோ பட்டிமன்றப்பேச்சாளர்களையோ ரசிக்க வரும் பெருங்கூட்டத்தில் ஆயிரத்தில் ஒருவரே இங்கே வருவார்கள். ஆனால் அவர்களே எதிர்காலத்திற்கான விதைகள்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
