ஆத்மாவின் அலைகடல்

“கடல்”- சினிமாவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் நாவல்…

அன்புள்ள ஜெ

கடல் நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். உண்மையைச் சொல்லப்போனால் படத்தைத்தான் பார்த்தாச்சே என்ற மனநிலை எனக்கும் இருந்தது. ஆனால் நாவல் பெரியதாக இருந்தது. ஆகவே மேலும் நிறைய உள்ளது என்ற எண்ணம் உருவானது. ஆகவே நூலை வாசித்தேன். ஏற்கனவே விஷ்ணுபுரம் நாவலை வாங்கி ஒரு வருடம் வாசித்தேன். இதுவும் அப்படித்தான் என்று தோன்றியது. ஆனால் மூன்றுநாட்களில் இரவும் பகலும் அமர்ந்து நாவலை வாசித்து முடித்தேன்.

எந்த கனவுக்கும், கற்பனைக்கும் இடம் அளிக்காத அப்பட்டமான ஒரு அக உலகம் இந்நாவலிலே உள்ளது. வாசிக்க ஆரம்பித்தால் நமக்குள் இருக்கும் நஞ்சும் நெருப்பும் அமுதும் நீரும் பொங்கி வருகின்றன. நான் டஸ்டேய்வேஸ்கியின் கிரைம் ஆண்ட் பனிஷ்மெண்ட் வாசித்து இதே கொந்தளிப்பை அடைந்திருக்கிறேன். அதற்கிணையான நாவல் அனுபவம் இது. இன்னும் இரண்டு முறையாவது இதை வாசிப்பேன் என நினைக்கிறேன்.

இரண்டு ஆத்மாக்கள் காலவெளியற்ற ஒரு இடத்தில் உக்கிரமாக ஒன்றையொன்று சந்தித்து மோதிக்கொள்வதுபோல இருக்கிறது இந்நாவல். இரண்டு ஆத்மாக்களும் மொழியாக மாறி ஒன்றையொன்று சந்திக்கின்றன. எனக்கு இருந்த மனப்பிம்பமே கன்யாகுமரி கடல்தான். அங்கே அரபிக்கடலும் வங்காள விரிகுடாவும் சந்திக்கும் கோடு தெரியும். இரண்டுபக்க அலைகளும் வந்து ஒன்றோடொன்று முட்டிக்கொள்வதை கைடு காட்டித்தருவார். அதுபோன்ற ஓர் அனுபவம் இந்நாவல். இரண்டு கடல்களின் போராட்டம் இந்நாவல்.

இந்தக் கடற்கரை வாழ்க்கை எனக்கு மிக அன்னியமானதாக உள்ளது. நான் பிறந்து வளர்ந்த கடற்கரையின் வாழ்க்கை இன்னும் நவீனமாகிவிட்டது. இது 80 களில் நிகழும் கதை என நினைக்கிறேன்.

இந்நாவல்தான் நீங்கள் எழுதியவற்றில் சிறந்தது என்பது என் எண்ணம். இதை ஒரு சினிமாவுக்காக எழுதியிருக்கிறீர்கள் என்பதே ஆச்சரியம். அத்துடன் இதை பத்து ஆண்டுகள் வெளியிடாமலேயே வைத்திருந்தீர்கள் என்பதும், வெளியிடவேண்டாம் என நினைத்தீர்கள் என்பதும் மேலும் ஆச்சரியம். வெளியிடாமலிருந்திருந்தால் எவ்வளவு பெரிய இழப்பு என்று நினைத்துக் கொள்கிறேன்.

இந்நாவலை நீங்கள் எழுதிவீர்கள் என்று எனக்கு தெரியும். நீங்கள் நித்ய சைதன்ய யதி ஆசிரமத்தில் ஏசுவை நினைத்துக்கொண்டதைப் பற்றி நாலைந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். கிறிஸ்துமஸ் கவிதைகளும் பல எழுதியுள்ளீர்கள். கிறிஸ்து பற்றி பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் பகுதிகளும் மகத்தானவை. மெக்தலீனா மறியா பற்றி ஒரு நாவல் எழுதுங்கள் என்று நான் உங்களுக்கு 2012 ல் ஒரு கடிதம் எழுதியபோது பார்ப்போம் என்று எழுதினீர்கள். இரண்டு ஆண்டுக்குப்பின் இதை எழுதியிருக்கிறீர்கள். இதுவும் மக்தலீனாவின் கதைதான்.

ஜெய்ஸன் சாமுவேல்

அன்புள்ள ஜெய்ஸன்.

நன்றி.

ஒரு நாவலை எழுதுவதே என்னளவில் முக்கியம். அது என் வரையில் ஓர் அகப்பயணம், ஒரு தியானம், ஒரு எய்துதல். அது நிகழ்ந்தபின் அதிலிருந்து கூடியவிரைவில் வெளியேறிவிடுவதையே நான் செய்து வருகிறேன். உண்மையில் உலகிலெங்கும் இன்று அது வழக்கம் இல்லை. ஒரு நாவலை எழுதியபின் குறைந்தது நான்காண்டுகள் அந்நாவலை ‘பிரமோட்’ செய்ய அந்த ஆசிரியனே உழைக்கவேண்டும் எனறு இன்றைய மேலைநாட்டுப் பதிப்புலகம் எதிர்பார்க்கிறது.

கடல் நாவலின் அந்த அலைக்கொந்தளிப்பு என்பது வெவ்வேறு வகையில் என் அகம் சார்ந்ததுதான். என்னால் சாம், தாமஸ் இருவருடனும் அடையாளம் காணமுடிகிறது. ஒருவகையில் விஷ்ணுபுரமும் அந்த மோதலின் கதை அல்லவா? கதைகளின் வழியாக நான் கண்டடைவது ஒன்றுண்டு. கண்டடைந்ததை உறுதிப்படுத்திக் கொள்வதும் கதைகளின் வழியாகவே.

இந்நாவலை தமிழில் எத்தனைபேர் நுணுக்கமாக உள்வாங்க முடியும் என்னும் சந்தேகமும் எனக்கு இருந்தது. கடல் படம் வெளிவந்தபின் இது தமிழர்களுக்குரிய நாவல் அல்ல என்னும் எண்ணம் உருவாகி, சிலகாலம் நீடித்தது. இதை மலையாளத்தில் எழுதித்தருகிறேன் என்று நான் ஒரு பதிப்பகத்திற்கு வாக்களித்திருந்தேன். அதன்படி எழுத முடியவில்லை. இந்த மொழிநடையை மலையாளத்திற்குக் கொண்டு சென்றபோது அங்கே வேரூன்றியுள்ள பைபிள்நடை, அதன் தேய்வழக்குகள், உருவாகி வந்தன. ஆகவே விட்டுவிட்டேன்.

இது ‘சமூகயதார்த்தங்களை’ சொல்லும் நாவல் அல்ல. அப்படிப்பட்ட நாவல்களை வாசிக்கவே நம்மவர்கள் பழகியிருக்கிறார்கள். (இன்னொரு சிறுபான்மையினர் ‘நுட்பம்’ என சொல்லிக்கொண்டு பாலியலை மட்டுமே வாசிப்பார்கள்) நான் கூறும் அந்த கடற்கரை என்பது ஒரு ‘சமூக உண்மை’ அல்ல. அது ஒரு வாழ்க்கைக்களம். எங்கும் உள்ள வாழ்க்கைக்களம்தான், இங்கே கொந்தளிக்கும் கடல் அருகே உள்ளது என்பது மட்டுமே கூடுதலாக உள்ளது. நான் இந்தியாவின் வெவ்வேறு நிலங்களில் கண்ட அடித்தள வாழ்க்கையின் சித்திரத்தையே அக்கடற்கரையில் சித்தரிக்கிறேன்.அதை புனைவுக்களமாக விரித்தும் இருக்கிறேன்.

இந்நாவல் கடற்கரை வாழ்க்கையைச் சொல்வது அல்ல. பாவம்- மீட்பு, சாத்தான் – தெய்வம் என இரு எல்லைகள்  இருளென்றும் ஒளியென்றும் உலவும் ஒரு வாழ்க்கைக்களத்தைச் சித்தரிக்கவே முயன்றுள்ளேன். அவ்வாழ்க்கை சாம், தாமஸ் இருவரும் திகழ்வதற்கான பின்புலம்- அவ்வளவுதான். ஆகவேதான் அங்கே எந்தக் கதாபாத்திரமும் விரிவாக்கம் செய்யப்படவில்லை, அவை முகங்கள் மட்டுமே. நான் அறிந்த கடற்கரை என் கல்லூரிக்காலம் சார்ந்தது.

சாம், தாமஸ், பெர்க்மான்ஸ் ஆகியோர் ‘மெய்யான’ கதைமாந்தர் அல்ல. ‘ரத்தமும் சதையுமாக’ நாம் எங்கும் சந்திப்பவர்களும் அல்ல. மிக அரிதான தேடல்கொண்டவர்கள், அதன் பொருட்டு கிளம்பிச்செல்பவர்கள் மட்டுமே அத்தகைய அரிதான பேராளுமைகளைச் சந்தித்திருக்க முடியும். நான் அத்தகையோரைச் சந்தித்துள்ளேன். அவர்களின் சாயல் அக்கதையில் உண்டு. நான் அவ்வுலகைச் சார்ந்தவன். (சற்றேனும் அவ்வுலகுக்குள் வராத எவரும் என் வாசகர்கள் அல்ல)

தமிழின் பொதுவான வாசகன் ஒரு கதாபாத்திரத்தை identification வழியாகவே சென்றடைய பயின்றிருக்கிறான். தன்னுடனோ, தானறிந்த எவருடனோ ஒரு கதாபாத்திரத்திற்கு இருக்கும் தொடர்பே அவனால் புரிந்துகொள்ளத்தக்கதாக உள்ளது. அவனுடைய நடுத்தரவர்க்க எளிய வாழ்க்கைக்குள் அவன் அறிந்தவர்களையே எங்கும் எதிர்பார்க்கிறான். ‘இதைப்போன்ற ஒருவரை பார்த்ததே இல்லை’ என்பதே நம் வாசகன் அடிக்கடிச் சொல்லும் எதிர்விமர்சனமாக உள்ளது. அவன் அறிந்த சிற்றுலகுக்கு அப்பால் செல்ல அவனால் இயல்வதில்லை. எதையும் தன்னை நோக்கி இழுப்பவன் அவன்.

தாமஸ் அடைந்த துயரின் உச்சங்களை அடைந்தவர்களைப் பற்றி, சாம் சென்றடைந்த அகவிரிவை எய்தியவர்களைப்பற்றி, பெர்க்மான்ஸின் இருண்ட உலகைப்பற்றி நாம் ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அவை நம் அனுபவமண்டலத்திற்கு அப்பாலுள்ளன. அவற்றை மூர்க்கமாக நிராகரிக்கிறோம். ஆகவே பொதுவாகத் தமிழ்வாசகன் பற்றிய ஓர் அவநம்பிக்கை கடல் சினிமாவின் மீதான எதிர்விமர்சனங்களில் இருந்து உருவானது. வெளியிட ஊக்கமில்லாமலானமைக்கு அதுவும் காரணம்.

இந்நாவலின் முன்னுரையில் சொல்லப்பட்டிருப்பதுபோல ‘புதுமை’ (Novelty) என்னும் அம்சம் இந்நாவலில் இல்லை. உருவகத்தன்மையே உள்ளது. உருவகத்தன்மை புதுமைக்கு எதிரானது. இதிலுள்ள மூன்று அடிப்படை உருவகங்களும் இரண்டாயிரமாண்டு தொன்மை கொண்டவை, பத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பியக் காவியங்களில் சித்தரிக்கப்பட்டவை. அவற்றின் விரிவாக்கம் மற்றும்  அகவயமாக்கமே இந்நாவலில் நிகழ்ந்துள்ளது.

நீண்ட இடைவேளைக்குப் பின் நாவலை படித்துப் பார்க்கையில் முன்பு ஜானகிராமன் சொன்னதுபோல ’இதற்கும் சிலர் இருப்பார்கள் என்னும் நம்பிக்கை’ உருவானது. ஆகவே வெளியிடத் தீர்மானித்தேன். உங்களை வந்தடைந்தது நிறைவளிக்கிறது.

இப்போது வியன்னாவில் இருக்கிறேன். நேற்று (17 ஜூலை 2025) செயிண்ட் ஸ்டீபன்ஸ் சர்ச்சில் ஒரு ஆர்கன் இசைநிகழ்வை கேட்டேன். இங்குள்ள சர்ச் ஆர்கன் நான்கு பகுதிகளிலாக மாபெரும் தேவாலயக் கூடத்தை நிரப்பியுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆர்கன்களில் ஒன்று இது. ஒரு சிறு கட்டிடம் அளவுக்கு பெரியது என்றால் ஊகிக்கமுடியும் உங்களுக்கு.

செபாஸ்டியன் பாக், விவால்டி, வைடர் , வியன்னெ ஆகியோரின் இசையை சுவிஸ் நாட்டு ஆர்கன் மேதை  ஜீன் கெய்ஸர் (Jean-Christophe Geiser ) வாசித்தார். சுவிஸ் நாட்டிலுள்ள உலகின் மிகப்பெரிய ஆர்கனை இசைப்பவர் அவர். ஆர்கன் இசைப்பதைக் கற்பிக்கும் ஆசிரியரும்கூட.

ஒரு மாபெரும் தேவாலயக் கூடத்தில் அமர்ந்து, ஓர் இசைமேதையின் விரல்கள் எழுப்பும் இசையை, முந்நூறாண்டு தொன்மையான மிகப்பிரம்மாண்டமான ஆர்கனில் நேரடியாகக் கேட்பதென்பது ஒரு தவம் பலிப்பதுபோன்றது.

ஆர்கன் என்பது அந்த தேவாலயத்தையே ஒரு மாபெரும் இசைக்கருவியாக ஆக்கிவிடுவது. ஒரே ஒருவர் தன் விரல்களால் ஒரு கட்டிடத்தையே முழங்க வைக்கிறார். ஒரு மாபெரும் ஆர்க்கெஸ்டிராவுக்கு இணையான சேர்ந்திசை என்ற பிரமை எழுந்தது. அது ஒரு மகத்தான அனுபவம். பாவம், மீட்பு என்னும் இரு எல்லைகளை நோக்கி இசை ஆழிப்பேரலை என கொந்தளித்து சுழல்கிறது. கண்ணீர் மல்கி, நெஞ்சோடு கைசேர்த்து அமர்ந்திருந்தேன். அந்த அனுபவத்தின் துளியையேனும் அடையும் அகம் கொண்டவர்களுக்கு உரியது கடல்.

நம்மில் மிகச்சிலருக்கே நமது வழக்கமான அகவுலகத்தைக் கடந்து செல்ல இயல்கிறது. அப்படிக் கடக்கவேண்டும், இன்னொரு உலகில் நுழையவேண்டும் என்னும் முனைப்பே இங்கில்லை. பல நூறாண்டுகளாகத் தேக்கமுற்றுக்கிடக்கும் ஒரு பண்பாட்டுக்குரிய மனநிலை இது. மிகச்சிறிய வட்டத்திற்குள் முடிவில்லாது சுழல்வது. அதை உடைக்கவே இஸ்லாம், கிறிஸ்தவம் , மேலையிசை, மேலைக்கலை வகுப்புகளை அறிமுகம் செய்கிறோம். சிறில் அலெக்ஸின் கிறிஸ்தவ மெய்யியல் வகுப்புகள், அஜிதனின் இசை வகுப்புகள், ஏ.வி.மணிகண்டனின் கலைவகுப்புகள் கடல் நாவல் காட்டும் உலகுக்குள் நுழைவதற்கான அடிப்படைப் பயிற்சியை அளிப்பவை. அவற்றில் மிகச்சிலரே பங்குகொள்கின்றனர், குறிப்பாக அவர்களுக்காகவே நானும் எழுதுகிறேன். அந்த எண்ணம் உருவானபின் கடல் நாவலை வெளியிடலாம் என்ற எண்ணம் உருவாகியது.

ஜெ

கடல் வாங்க தொடர்புக்கு : contact@vishnupurampublications.com 

Phone : 9080283887

அஜிதன் மேலை இசை அறிமுக வகுப்பு ஜூலை 25, 26 மற்றும் 27 ஏ.வி.மணிகண்டன் மேலைக்கலை வகுப்பு ஆகஸ்ட் 8,9 மற்றும் 10 programsvishnupuram@gmail.com

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 18, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.