Jeyamohan's Blog, page 55

July 17, 2025

கு.வெ. பாலசுப்பிரமணியன்

கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய சிறுகதை, நாவல்களை எழுதினார், இலக்கிய ஆய்வு நூல்களை, உரை நூல்களை எழுதினார். ஜி.யு. போப்பின் திருக்குறள் ஆங்கில உரை நூலை தனது உரையுடன் பதிப்பித்தார். தமிழக அரசின் கபிலர் விருது பெற்றார்.

கு.வெ.பாலசுப்பிரமணியன் கு.வெ.பாலசுப்பிரமணியன் கு.வெ.பாலசுப்பிரமணியன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2025 11:32

அருகிருத்தல், தேவதேவன் – பிரீத்தி கருணா

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

‘தேவதேவனுடன் அருகிருத்தல்’ எனும் நிகழ்விற்காக ஓசூர் ‘bigin’ எனும் மழலையர் பள்ளியில் ஜூலை 6 அன்று கூடினோம். ஒருங்கிணைத்த கவிஞர் வேணு வெட்ராயன் அவர்களுக்கும், சரண்யாவிற்கும் மனமார்ந்த நன்றிகள். மூன்று வாரங்களுக்கு முன்பே whatsapp குழு மூலம் கவிதையின் மதம் மற்றும் அவரது கவிதைகள் பகிரப்பட்டு வாசித்தது நல்ல தொடக்கமாக அமைந்தது.

எங்களது கேள்விகளுக்கு தேவதேவன் அவர்கள் தன்னையும், தன் அனுபவங்களையும், கவிதைகளையுமே பதிலாக பகிர்ந்தார்.

நாற்காலி இருந்தும் சம்மணமிட்டு கீழே அமர்ந்து, எதிலும் சாயாமல் நாள் முழுதும் உரையாற்றினார். தன்னால் நான்கு நாட்களுக்கு கூட உணவில்லாமல் இவ்வாறு பேச முடியும் என்றது கவிஞரின், கவிதையின் தீவிரத்தை உணர்த்தியது. நான் உணர்ந்த வரை அவர் நாள் முழுதும் திகழ்ந்தது, உணர்த்த முனைந்தது– பேரன்பு, கருணை, களங்கமின்மை, உறுதி, காதல், காலமும் இடமும் இலாத நிகழ்தல், இன்னும் சொற்களால் என்னால் முழுமையாய் விளக்க முடியாத நிலை.

எங்களது கேள்விக்கான பதிலாய், கவிதைகளை அவர் நினைவுகூற, அதை வாசித்து பொருள் உணர்ந்தது, நாங்கள் நெருக்கமாக உணர்ந்த கவிதைகளை வாசித்து பின் அவர் அந்த அனுபவத்தை பகிர்ந்தது இனிய நிகழ்வாக இருந்தது.

பெரியம்மாவும் சூரியனும் கவிதையை விவரித்து, பெரியம்மாவிற்கான அவரது ஆழ்ந்த வருத்தம் அந்த மௌனத்துள் எங்களையும் இழுத்துக்கொண்டது. அதுவும் கால இடமற்ற நிலையே. மற்ற கவிதைகளால் சகஜமாகி பின் சிரித்து மீட்டார், மீண்டோம்.

கவிநிலவனும், தீபா வாசுதேவன் அவர்களும் தங்கள் இனிய பாடல்களால் மகிழ்வித்தார்கள்.

தேவதேவன் அவர்களின் கவிதைகளில் இடம்பெறும் மரம், வானம், பறவை, வீடு, சருகுகள் பற்றிப் பகிர்ந்து கொண்டோம். உணவு இடைவேளைக்கு பின் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அவர் பேசி முடிக்கும் முன் வந்த மழையால், ஒதுங்கி மழை–இசை பற்றிய பேச்சுடன் திரும்பியது சாரல் குளுமையின் நினைவாக இருக்கிறது.

‘யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்’ கவிதையை வாசித்து, பின்னர் தீபா அவர்கள் பாடலாக பாடியது மனதை உருக்குவதாக இருந்தது.

பிரமிளை ‘பாலை’ கவிதையின் வாயிலாக நினைவு கூர்ந்தோம்.

மகாநதி, கடல், காலிக்குவளை, ஊஞ்சலில் ஆடிய குழந்தை, ஒரு பழத்துண்டுகள், கட்டையான உடலுடைய, நாம் செய்யவேண்டியதென்ன,சின்னஞ்சிறிய சோகம், மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு, வாழ்வின் நடனம், புதிய ஏற்பாடு, அறுபடாத முலைகள், அழகு, குருவிக்கூடு, மொட்டை–மாடிக்களம், இரண்டு வீடுகள், ஒரு சிறு குருவி, ஆண் பெண், ஒரு புல்லின் உதவி கொண்டு, எவ்வளவு உயரமானாலும் என இன்னும் பல கவிதைகளை அங்கு வாசித்தோம்.

கிளம்புவதற்கு வெளியே வந்தவர் கூறியது ‘ஜெயமோகன் இல்லனா இது சாத்தியமில்ல தெரியுமா’.

எத்தனை கோடி கவிதையை அவர்  விவரிக்கையில் தன் மனைவியின் பாவனையை வெளிப்படுத்தியது, எத்தனை நேசம், எத்தனை காதல் என்றே வியக்க வைத்தது.

கார் வந்ததும் ஏறிக்கொண்டு விடைப்பெற்றார். அவர் கிளம்பிச்சென்ற, அவ்வெற்றிடத்தை பார்த்து எனை மறந்த/எனை முழுதாய் உணர்ந்த கணங்களுக்கு பின் சென்னைக்கு கிளம்பினேன். ஆளுமையுடன் நிறைவான ஒரு நாளாக அமைந்தது.

நன்றியுடன்

ப்ரீத்தி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2025 11:31

வேதாசலமும் வாசகர்களும் – ஒரு கேள்வி

தமிழ்விக்கி- தூரன் விருது: வெ.வேதாசலம் வேதாசலத்துக்கு விருது- கடிதம் வேதாசலம், மின்னஞ்சல் எதற்காக? நம் வரலாற்றாசிரியர்கள் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறார்கள்?

அன்புள்ள ஜெ

வேதாசலம் அவர்களுக்கு தமிழ்விக்கி- தூரன் விருது அளிக்கப்படும் செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். நான் அவருடைய நூல்கள் எதையும் படித்ததில்லை. அவர் பெயரையே சென்ற ஆண்டு விருதுவிழாவில் அவர் கலந்துகொண்ட செய்தியைக்கொண்டுதான் அறிந்தேன். அதன் பின் இணையத்தில் அவருடைய காணொளிகள் சிலவற்றைக் கண்டேன். அவர் விருது பெறுவதை ஒட்டி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவருடைய எண்பெருங்குன்றம் நூலை மட்டும் இப்போதைக்கு வாங்கியிருக்கிறேன். நான் வரலாற்று நூல்களை பயிலும் வழக்கம் உடையவன் அல்ல. ஒரு சாமானிய வாசகன். இந்த நூலை வாசிக்கமுடியும் என நினைக்கிறேன்.

திரு வேதாசலம் அவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்றாய்வாளர்களில் ஒருவர். அவருக்கு இப்படி ஒரு விருது கிடைக்கிறது. ஹிந்து ஆங்கில நாளிதழ் ஒரு விரிவான செய்தியை வெளியிட்டிருந்தது. மற்றபடி தமிழில் எந்த இதழிலும் செய்தி இல்லை. அவர் தொடர்ச்சியாக தொல்லியல்சுற்றுலாக்கள் நடத்துகிறார். அதில் பலநூறுபேர் கலந்துகொண்டிருக்கலாம். ஆனால் ஒருவர்கூட அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்த இணையதளத்தில் வெளிவரவில்லை. சரி வெளியே முகநூலில் ஏதாவது வாழ்த்து இருக்கிறதா என்றால் அங்கும் இல்லை. இந்தப் புறக்கணிப்பு ஆழமான மனச்சோர்வை அளிக்கிறது. எனக்கே இப்படி என்றால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பணியாற்றும் வேதாச்சலம் போன்றவர்கள் உச்சிமேல் வைத்துக் கொண்டாடப்படவேண்டிய தியாகிகள்.

ஜே.சதானந்த்.

அன்புள்ள சதானந்த்,

தமிழ்ச்சமூகம் சினிமா, அரசியல் , தீனி தவிர எதையுமே கவனிக்காது. இவர்கள் எதைப்பேசவேண்டும் என்றாலும் அது ஒரு சினிமாவுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாகவேண்டும். அந்தக் கும்பலுக்கு நேர் எதிரான திசையில் செல்லும் முயற்சியே எங்களுடையது.

எனக்கும் வேதாசலத்தின் மாணவர்கள் ஒருவர்கூட வாழ்த்து சொல்லாதது வியப்பாகவே இருந்தது. ஆனால் வியப்புகொள்ள ஏதுமில்லை. மேலோட்டமான ஆர்வத்துடன் வேடிக்கைபார்ப்பவர்களாகவே அந்தவகையான தொல்லியல்- பண்பாட்டுப் பயணத்துக்கும் வகுப்புக்கும் எல்லாம் வருவார்கள். வந்த மறுநாளே மறந்தும் விடுவார்கள். வேதாசலம் பெயரே நினைவில் இருக்காது. அதை பல நிகழ்வுகளில் தொடர்ச்சியாகப் பார்த்துவருகிறேன், எனக்கே பழைய அனுபவங்கள் நிறைய உண்டு.

எங்கள் முழுமையறிவு நிகழ்வுகளுக்கு வருபவர்கள் வேறுவகையானவர்கள். அவர்களை தெரிவுசெய்கிறோம், எங்கள் தீவிரத்துடன் ஒட்டாதவர்களை இரக்கமில்லாமல் தவிர்க்கிறோம். இங்கே பணம்கட்டி வந்து அமர்ந்து கற்கிறார்கள். அவர்களுடைய அர்ப்பணிப்பும் ஆர்வமும் வேறுவகை. வேதாசலம் அவர்கள் விரைவில் எங்கள் அமைப்பில் வகுப்புகள் நடத்தவேண்டும் என விரும்புகிறேன்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2025 11:31

The intellectual pride

 

Here, if a philosopher says, ‘I am nothing; philosophical thinking is possible for everyone; there is no difference between a philosopher and a commoner,’ then only will he be respected as a true scholar by the laypeople here. Because he is humble!.

The intellectual pride

ஏஐ யை பயன்படுத்தி எதையும் எழுதிவிடலாம், அதுதான் ‘மாடர்ன்’ என்று என் பையன்கள் உட்பட இளைஞர்கள் நம்புகிறார்கள். உன் பக்கத்துவீட்டுக்காரனும் அதையே எழுதுவான் என்றால் அதற்கு என்ன பொருள் என்று கேட்டால் புரிவதே இல்லை.

ஏ.ஐ- எழுத்து

https://www.manasapublications.com/manasalitprize

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2025 11:30

நவீன மேலைக்கலை அறிமுக வகுப்புகள்

ஏ.வி.மணிகண்டனின் நவீன ஓவிய அறிமுக நிகழ்வு தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. இது வரை கிட்டத்தட்ட 200 பேர் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டிருக்கின்றனர். இது ஒரு முதன்மையான பண்பாட்டுக் கல்வி, நவீன உலகை அறிமுகம் செய்துகொள்ள மிக அடிப்படையான ஒன்று என இளையதலைமுறையினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

நவீன ஓவியக்கலையே இன்றைய கட்டிட வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, வெவ்வேறு ‘பிராண்ட் டிசைன்கள்’ முதல் இணையதள வடிவமைப்பு வரை அனைத்துக்கும் அடித்தளமான அழகியலை உருவாக்குவது. ஆனால் இந்தியாவில் இன்று இக்கல்விகளை பெறுபவர்கள்கூட நவீன மேலைநாட்டு ஓவியம் பற்றிய அறிமுகம் அளிக்கப்பட்டவர்கள் அல்ல.

நம்மைச் சூழ்ந்துள்ள நவீன வாழ்க்கையையும் தொழில்நுட்பத்தையும் அறிந்துகொள்ள மிக அடிப்படையாக அமையும் பயிற்சி இது.

ஆகஸ்ட் 8,9 மற்றும் 10

programsvishnupuram@gmail.com

அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவை

மேலையிசை- வாக்னர் அறிமுகம். அஜிதன்

ஐரோப்பியப் பண்பாட்டின் உச்சப்புள்ளி என்பது ஓப்பராதான் என்று டி.எஸ்.எலியட் ஒரு கட்டுரையில் சொல்கிறார் (The decline of music hall). ஏனென்றால் செவ்வியல் இசை, செவ்வியல் நாடகம்,ஓவியம் ஆகியவை செவ்விலக்கியத்துடன் இணையும் புள்ளி அதுவே. ஓப்பரா இன்றும்கூட ஐரோப்பாவில் முதன்மைக்கலையாகவே உள்ளது. The lion king போன்ற நவீன ஓப்பராக்களும் உருவாகின்றன. ஓப்பராவின் இன்னொரு வடிவம் நவீன இசைநாடகம்.

ஓப்பராவிலேயே மேலையிசையின் உச்சகட்ட சாத்தியங்கள் நிகழ்ந்துள்ளன. ஐரோப்பிய இசையின் முதன்மை ஆளுமை ரிச்சர்ட் வாக்னர். அவருடைய ஓப்பராக்கள்தான் இலக்கியவடிவமான காவியம் மாபெரும் இசைக்கோலங்களாக வெளிப்பட்ட கலைப்பெருநிகழ்வுகள். ஓப்பராவை விட எளிமையான வடிவமே சிம்பனி என்பது.

அஜிதன் ஏற்கனவே சிம்பனி இசை மேதையான பீத்தோவனை அறிமுகம் செய்து இரண்டு வகுப்புகளை நடத்தியிருக்கிறார். பல இளைஞர்களும் கோரியதற்கிணங்க வாக்னரின் ஓப்பராக்களைப் பற்றிய அறிமுக வகுப்பு ஒன்றை நடத்தவிருக்கிறார்.

ஓப்பரா போன்ற கலைவடிவை எளிதாக அறிமுகம் செய்துகொள்ள முடியாது. அதன் இலக்கியப்பின்புலம், பண்பாட்டுப்பின்புலம் ஆகியவற்றுடன் அவ்விசையை கேட்டு உணரவேண்டும்.இந்த வகுப்பில் ஓப்பராவின் தத்துவம், இலக்கியம் ஆகியவற்றுடன் இசையமைப்பையும் அறிமுகம் செய்து ஒரு தொடக்கத்தை அஜிதன் அளிக்கிறார்.

நாள் ஜூலை 25, 26 மற்றும் 27

programsvishnupuram@gmail.com

தில்லை செந்தில்பிரபு நடத்திவரும் தியானம் மற்றும் உளக்குவிப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் முதல்நிலைப் பயிற்சி முடித்துள்ளனர். இரண்டாம்நிலைப் பயிற்சி வகுப்பும் நிகழ்ந்துள்ளது.இன்றைய சூழலில் உள்ளத்தைக் குவித்து செயலை ஆற்றுவதென்பதே மிகப்பெரிய சவால். கல்வியிலானாலும் தொழிலில் ஆனாலும். செயற்கையாக உள்ளத்தை தீவிரமாக்கிக்கொண்டால் அதன் விளைவாக உளச்சோர்வு உருவாவது இன்னொரு சிக்கல்.இன்றைய வாழ்க்கை நம் அட்ரினல் சுரப்பியை சீண்டிக்கொண்டே இருக்கிறது. ஒரு விலங்கு அபாயத்தில் இருக்கையில் அதன் உடலில் முழு ஆற்றலும் வெளிப்படவேண்டும். அதன் உடலின் உணவு முழுமையாக எரிக்கப்பட்டு, தசைகள் முற்றாகச் செயலாற்றவேண்டும். அட்ரினல் அப்பணியைச் செய்கிறது. ஆனால் நாம் இன்று உருவாக்கிக்கொண்டிருக்கும் பதற்றம், பரபரப்பு கொண்ட வாழ்க்கையில் நாம் நிரந்தரமாகவே சிங்கத்தால் துரத்தப்படும் மான் போல் இருக்கிறோம். நாம் பொழுதுபோக்கு என நினைக்கும் கேளிக்கைகள், சமூகஊடகங்கள் ஆகியவையும் நம் அட்ரினலைத் தூண்டுவனதான். அதுவே நம்மை கவனமின்மை மற்றும் உளச்சோர்வுக்குக் கொண்டுசெல்கிறது. செரிமானமின்மை, தூக்கமின்மை முதல் சோரியாஸிஸ் வரையிலான நோய்களுக்கும் காரணமாகிறது.

யோக முறைகள், தியானங்கள் நாமே நம் உடலின் சுரப்பிகளை அமைதிப்படுத்தும் பயிற்சிகள்தான். நம் உள்ளத்தை நாமே மெல்ல அடங்கச் செய்து உடலை ஆறவைக்கிறோம். அவை மிகப்பயனுள்ளவை என்பதனால்தான் உலக அளவில் மிகப்பெரிய அளவில் பரவியுள்ளன. உலகிலேயே மிக அதிகமானபேர் யோக – தியானப்பயிற்சிகளைச் செய்யும் நாடுகள் ஐரோப்பா- அமெரிக்காதான்.

தில்லை செந்தில்பிரபு பயிற்றுவிக்கும் தியானமுறை இன்றைய காலகட்டத்திற்காக வரையறை செய்யப்பட்ட ஒன்று. உலகமெங்கும் செல்வாக்குடன் இருப்பது.

நாள் ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3 (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

 வரவிருக்கும் நிகழ்வுகள்

இந்திய தத்துவ அறிமுகம்- ஐந்தாம் நிலை

ஜெயமோகன் நடத்தும் வகுப்புகள். இந்திய தத்துவ அறிமுகம் 5 ஆம் நிலை. இது நான்காம் நிலை முடித்தவர்களுக்காக மட்டுமே

நாள் ஆகஸ்ட் 22 23 மற்றும் 25

[image error]

இந்திய ஆலயக்கலை அறிமுகம்

ஜெயக்குமார் நடத்தும் இந்திய ஆலயக்கலை அறிமுக வகுப்புகள் இன்று உலகம் நோக்கி விரியத்தொடங்கியுள்ளன. அண்மையில் ஆஸ்திரியாவிலும் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். இந்தியச் சிற்பக்கலை- கட்டிடக்கலையை அறிமுகம் செய்யும் இவ்வகுப்புகள் ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிய மிகப்பெரிய அகத்தொடக்கங்களாக அமையும் தன்மை கொண்டவை.  நம்மைச் சுற்றியுள்ள ஆலயங்கள் மாபெரும் நூல்கள். நமக்கு அவற்றின் மொழி தெரியாது. சட்டென்று அவை நம்முடன் உரையாடத் தொடங்கிவிடும் அனுபவத்தை நாம் அடைகிறோம். அதன் பின் நாம் வாழ்நாளெல்லாம் வாசிக்கலாம்

நாள் ஆகஸ்ட் 29, 30 செப்டெம்பர் 1

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2025 10:01

கோவை புத்தக விழா

18 ஜூலை 2025 முதல் கோவை புத்தகவிழா நிகழ்கிறது. விஷ்ணுபுரம் அரங்கு 10, 11, 12, 13 எனும் நான்கு பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த ஆண்டின் புதிய நூல்கள் கடல் நாவல், கீதையை அறிதல் முதல் பல புதிய பதிப்புகள் வரை. புதிய பதிப்புகளில் முக்கியமானது இன்றைய காந்தி.

*

கடல் இந்த கோவை புத்தகக் கண்காட்சிக்கென்றே வெளியாகும் நாவல். கடல் திரைப்படத்தின் முன்வடிவம் இதுவே. கிறிஸ்தவ மெய்யியல் சார்ந்த விரிவான பார்வையும், உணர்ச்சிகரமான நிகழ்வுகளினூடாக ஓடும் கதையும் கொண்ட படைப்பு.

“கடல்”- சினிமாவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் நாவல்…

தமிழில் காந்தி பற்றி பரவலாக இருந்த எதிர்மறைப் பார்வையை களைந்த நூல் என்று இன்றைய காந்தி குறிப்பிடப்படுகிறது. இன்றைய பேச்சாளர்கள் இந்நூலில் இருந்து தொடர்ச்சியாக மேற்கோள் காட்டுகின்றனர். அறியப்படாத தகவல்களை முன்வைப்பதுடன் புதிய வரலாற்றுக்கோணத்தையும் உருவாக்கும் படைப்பு. காந்தி பற்றிய வாசகர்களின் கேள்விகளுக்கு ஜெயமோகன் அளித்த பதில்கள் இவை என்பதனால் தீவிரமான வாசிப்பனுபவம் அளிப்பவை. காந்தியை அறிவதற்கான நூல், ஆனால் காந்தியை வழிபாட்டுருவமாக ஆக்குவது அல்ல.

[image error]

கீதை பற்றி ஜெயமோகன் கோவையில் ஆற்றிய உரையின் நூல்வடிவம். செறிவான மொழியில் கீதையின் வரலாறு, அதை அணுகும் முறை ஆகியவற்றை விவாதிக்கும் இந்நூல் உரையாக நிகழ்த்தப்பட்டது என்பதனால் சரளமான வாசிப்பனுபவமும் ஆகிறது.

இளம்படைப்பாளியான விஷால்ராஜாவின் கதைகள். குறைத்துச் சொல்லும் அழகியல் கொண்ட நவீன ஆக்கங்கள்.

இளம்படைப்பாளியான அஜிதனின் முதல் நாவல். அழகிய மொழியும், தத்துவார்த்தமான கவித்துவமும் கொண்ட காதல்கதை.

அஜிதனின் சிறுகதைகள் மற்றும் மருபூமி என்னும் குறுநாவல் அடங்கிய தொகுப்பு. பாலைநிலத்தை தனித்துக் கடக்கும் வைக்கம் முகம்மது பஷீரின் கதை மருபூமி. அது ஓர் ஆன்மிகமான பயணமும் கூட.

அஜ்மீர் தர்காவில் நிகழும் இந்நாவல் ஒரு பக்கம் இசையும் காதலும், இன்னொரு பக்கம் போரும் தியாகமும் என இரண்டு சரடுகளாகச் சென்று ஒன்றைஒன்று அர்த்தப்படுத்தி முடிகிறது.

மதுரையை மாலிக் காபூரின் படைகள் கைப்பற்றியபோது மீனாட்சியம்மன் கன்யாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படும் தொன்மத்தை ஒட்டி எழுதப்பட்ட உணர்ச்சிகரமான நாவல்.

சங்கப்பாடல்களை பொருள்கொண்டு சுவைப்பதற்காக புனைவைப் பயன்படுத்தும் நூல் இது. அழகிய சிறுகதைகள் வழியாக சங்கப்பாடல்களை விளக்குகிறது. ஆனந்தவிகடனில் வெளியான புகழ்பெற்ற தொடரின் நூல் வடிவம்.

மலையாளத்தில் பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய பெரும்புகழ்பெற்ற நூலின் தமிழாக்கம். உலகப்புகழ்பெற்ற செவ்வியல்நாவல்களை விவாதிக்கும் பாலகிருஷ்ணன் நாவல் என்னும் கலைவடிவம் பற்றிய ஒரு விரிவான புரிதலை அளிக்கிறார். விமர்சனநூலை புனைவுக்கு நிகராகவே வாசிக்கலாம் என்று இந்நூல் காட்டுகிறது.

ருஷ்ய கம்யூனிச அரசின் வீழ்ச்சியின் பின்னணியில் எப்படி உறுதியான கருத்தியல்கள் மனிதர்களை மூர்க்கமான வன்முறையாளர்களாக ஆக்குகிறது என ஆராயும் படைப்பு. இன்றைய சமூகவலைத்தளச்சூழலில் புழங்கும் எவரும் இந்நூல் வழியாக கருத்தியல்மூர்க்கம் என்பதன் வரலாற்றுப்பின்னணியை அறியமுடியும்.

பழிவாங்குதல் என்னும் நஞ்சு ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தொற்றுவதன் சித்திரத்தை அளிக்கும் பரபரப்பான கதை இந்நாவல்.

படுகளம் ஜெயமோகன் எழுதிய விரைவுப்புனைவு. பரபரப்பான நிகழ்வுகளினூடாக ஒரு அதிகாரத்தின் வீழ்ச்சியை, ஒரு புதிய சக்தியின் எழுச்சியைச் சித்தரிக்கிறது.

காடு பல வாசகர்களால் பொதுக்கணக்கெடுப்புகளில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நாவல் என தேர்வுசெய்யப்பட்டுள்ளது. உணர்ச்சிகரமான ஒரு காதல் பசுமைமாறாக் காட்டின் பின்னணியில் சொல்லப்பட்ட கதை, காதலின் அழகை மட்டுமல்ல அதன் இயல்பான முடிவையும் சித்தரிக்கிறது.

ஜெயமோகன் நண்பர்களுடன் செய்த வடகிழக்குப் பயணத்தின் பதிவு. அன்று ஜெயமோகன் எழுதிய பல அரசியல் ஊகங்களை பின்னர் வரலாறு மெய்ப்பித்தது. வடகிழக்கின் அரசியலை, பண்பாட்டை விவாதிக்கும் ஒரு நூலும்கூட.

கோவை ஞானி என்றே அழைக்கப்பட்ட மார்க்ஸிய அறிஞர் ஞானியுடனான தன் அனுபவங்களை விவரிக்கும் ஜெயமோகன் அதன் வழியாக தமிழ் மார்க்சிய இலக்கியச் சூழலின் ஒரு காலகட்டத்தையும் சித்தரிக்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2025 03:43

July 16, 2025

அழியும் வரலாறு

வரலாற்றாய்வாளர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று உண்டு, வரலாற்றின் மேல் நமக்கு மெய்யான ஆர்வம் ஏதுமில்லை. நமக்கிருப்பது இனம், மொழி, மதம் சார்ந்த வெறிதான். அதற்கு வரலாற்றின் சில செய்திகள் உதவும் என்றால் நாம் வரலாற்றைக் கவனிப்போம். அந்தச் செய்திகளை உரக்கக்கூவுவோம், திரித்துக்கொள்ளவும் செய்வோம். நம் வெறிகளுக்கு உதவாத வரலாறு கற்கால வரலாறு. அவற்றை மறு எண்ணமே இல்லாமல் அழிப்போம்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 16, 2025 11:36

அமெரிக்காவின் கவனத்தில்…

என்னுடைய அறம் கதைகள் பற்றி இலக்கியவாசகர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். 2011 ல் வெளிவந்த இந்தச் சிறுகதைத் தொகுதி தமிழில் இதுவரை வெளியான சிறுகதைத் தொகுதிகளில் முதன்மையான வாசக ஏற்பு கொண்டது என்று கூறிவிட முடியும். சென்ற பதினான்கு ஆண்டுகளில் அனேகமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு பதிப்பு வீதம் வெளியாகிக்கொண்டிருக்கிறது. நூறு முதல் ஆயிரம் பிரதிகள் வரை ஒட்டுமொத்தமாக வாங்கி வினியோகம் செய்த வாசகர்களே நானறிந்து நூறுபேருக்குமேல் உள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் எங்கள் விஷ்ணுபுரம் பதிப்பகம் இந்த நூலை வெளியிடத் தொடங்கியது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஐந்தாயிரம் பிரதிகள் வீதம் அச்சிட்டுக்கொண்டே இருக்கிறோம். பெருந்தொகையில் வாங்குபவர்களுக்கான பதிப்புகளும் தனியாக உள்ளன. நாங்கள் வெளியிடத் தொடங்கிய பின்னர் மட்டுமே இதன் விற்பனை அரை லட்சத்தை அடைந்துவிட்டிருக்கிறது.

இந்நூலின் ஆங்கில மொழியாக்கம் ஜக்கர்நாட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தமிழிலிருந்து ஆங்கிலம் சென்ற நூல்களில் அதுவே விற்பனையில் முதலிடத்திலுள்ள நூல். ஒவ்வொரு ஆறுமாதங்களிலும் புதிய பதிப்புகள் வெளியாகின்றன. இந்திரா ஜெய்சிங் போன்ற புகழ்பெற்ற ஆளுமைகள் அந்நூலைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் சிங்கப்பூர் அரசின் வாசிப்பு இயக்கம் அந்நூலை வாசிக்கத்தக்க மூன்று நூல்கலில் ஒன்றாகப் பரிந்துரைத்துள்ளது.

அறம் கதைகள் இந்திய மொழிகளில் எல்லாம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. மலையாளத்தில் தனித்தனி நூல்களாக பலலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. கன்னடத்தில் யானைடாக்டர் என்ற பேரிலும் தெலுங்கில் நெம்மிநீலம் என்ற பேரிலும் அக்கதைகள் வெளியாகின. பாஸ்கர் அவினேனி மொழியாக்கம் செய்த தெலுங்கு அறம் கதைகளின் தொகுதியான நெம்மிநீலம் அதன் தனித்துவம் கொண்ட மொழிநடையால் ஒரு செவ்வியல்படைப்பு என்று அங்கே கருதப்படுகிறது. (நெம்மிநீலம் வாங்க)

அந்நூலின் சர்வதேசப்பதிப்பு அமெரிக்காவின் முதன்மைப் பதிப்பகமான எஃப்.எஸ்.ஜி வெளியீட்டகத்தால் வரும் ஆகஸ்ட் 8 அன்று வெளியிடப்படுகிறது. அதையொட்டிய விளம்பரச்செயல்பாடுகள் தொடங்கியுள்ளன. மதிப்புரைக்கான ஆயிரம் பிரதிகள்  ஏற்கனவே வெளியாகி அனுப்பப்பட்டுள்ளன. அதன் முதல் மதிப்புரை புகழ்பெற்ற பப்ளிஷர்ஸ் வீக்லி இதழில் வெளியாகியுள்ளது.

“Like an uprooted sapling, there’s mud clinging to its roots… it’s steeped in waste and refuse. That’s why it inches a step closer to God.” Readers will be grateful for this introduction to a staggering talent.

Publishers Weekly Review பார்க்க

அமெரிக்கா மாக்மில்லன் பதிப்பகத்தின் இணையப்பக்கத்தில் இந்நூலின் செய்தியை வாசிக்கலாம். நூலை அங்கே வாங்கவும் செய்யலாம்.

மாக்மில்லன் பக்கம்

“Jeyamohan is one of India’s most resourceful makers of literary art, and these unforgettable stories, which manage to be simultaneously tender and pitiless, lyrical and jagged, define his singular temperament and sensibility.” —Pankaj Mishra, author of The World After Gaza

இன்றைய சூழலில் தமிழகத்தின் புனைவுலகை நோக்கி தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் குடியேறிய தமிழ்மக்களின் இளைய தலைமுறைகளை ஈர்ப்பது மிக அவசியமானது என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறேன். ஏனென்றால் அவர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டியது தமிழ்ப்பண்பாட்டையும், தமிழ் யதார்த்தத்தையும்தான்.

தமிழ் பண்பாட்டை வெறுமே ஒரு உறைந்த தகவல்தொகுப்பாக, மொழியாக, பழம்பெருமிதமாகக் கற்றுக்கொடுத்தால் அமெரிக்க இளைய தலைமுறை அதில் இருந்து விலக்கத்தையும் ஏளனத்தையுமே அடையும். அதனுடன் யதார்த்தமும் இணையவேண்டும். அமெரிக்கா போன்ற ஒரு தேசம் அங்கே நவீன இலக்கியத்தையே மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறது. அந்த மாணவர்களுக்கு திருக்குறளும் ஆத்திச்சூடியும் அல்ல, நவீன இலக்கியமே இங்கிருந்தும் சென்றுசேரவேண்டும். அதிலுள்ள யதார்த்தத்தில் இருந்து தேவையானவற்றை எடுத்துக்கொள்ள அவர்களுக்குத் தெரியும்.

தங்கள் வேர்கள் என்ன, எந்தச் சூழலில் இருந்து தங்கள் முன்னோர்கள் முளைத்துப் போராடி மேலெழுந்திருக்கிறார்கள், தங்கள் மரபின் இருளும் ஒளியும் என்ன என்று இளையதலைமுறை அறிவதற்கு நவீன இலக்கியமே உதவும். தமிழின் நவீன இலக்கியங்கள் தொடர்ந்து ஆங்கிலத்தில், அமெரிக்காவில் வெளியாகும். அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கிறோம். அதற்கான மிகச்சிறந்த தொடக்கம் என்பது, ஆரம்பநிலையிலேயே எளிதில் வாசிக்கத்தக்க நூல் அறம் கதைகளே. அதன் ஆங்கில மொழியாக்கம் அங்குள்ள இளைய தலைமுறையைச் சென்றடையவேண்டும் என விரும்புகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 16, 2025 11:35

கொல்லங்குடி கருப்பாயி

கொல்லங்குடி கருப்பாயி நாட்டுப்புறப்பாடல்களை வானொலி வழியாக பிரபலப்படுத்தினார். திரையிசை வழியாகவும் மக்களிடையே கொண்டுசென்றார். பெரும்பாலான பாடல்களை நினைவில் இருந்தும், சில பாடல்களை புனைந்தும் பாடினார்.

கொல்லங்குடி கருப்பாயி கொல்லங்குடி கருப்பாயி கொல்லங்குடி கருப்பாயி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 16, 2025 11:33

குருகு ஜூலை இதழ்

அன்புள்ள நண்பர்களுக்கு

இம்முறை குருகு இதழ் “பாகவத மேளா” சிறப்பிதழாக வெளிவருகிறது. முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சையை சுற்றியுள்ள தமிழக கிராமங்களில் பாகவதமேளா என்னும் நாட்டிய நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கு பத்யங்களுடன் (தெலுங்கு மொழி செய்யுள்), விளக்கொளியில் இரவெல்லாம் நடத்தப்படும் இந்த கோவில்சார் மேடைக்கலை மொழிகடந்த கலாசார பிணைப்பிற்கான அடையாளம். வருடம் ஒருமுறை நரசிம்ம ஜெயந்தி விழாவின் போது நடைபெறும் பாகவதமேளா நாடகங்களை மெலட்டூருக்கு சென்று காணவும் அதில் பங்காற்றும் வாய்ப்பும் எங்களுக்கு அமைந்தது. அந்த அனுபவம் இந்த சிறப்பிதழை கொண்டு வர பெரிதும் உதவியது.

பாகவதமேளா குறித்த அறிமுகக்கட்டுரையும், மெலட்டூரின் பாகவத மேளா முன்னோடிகள் மற்றும் சங்கம் குறித்த கட்டுரையும் பாகவதமேளா குழுவினரான பரதம் ஆர். மகாலிங்கம் மற்றும் அவரது குழுவின் பாடகரான முரளி ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது. குருகு ஆசிரியர் குழு மெலட்டூர் திரு மகாலிங்கத்தின் பாகவத மேளா குழுவினருடன் மேற்கொண்ட உரையாடல் ‘கலையின் தனித்தன்மையும்‘, நான்கு நாள் முழு பாகவதமேளா நிகழ்வுகள் குறித்த அனங்கனின் அனுபவக்கட்டுரை ‘தேவ தேவா இதே சமயமும்‘ இதழில் இடம்பெறுகின்றன. பாகவதமேளா கலைவடிவம் குறித்த எளிய அறிமுகமாகவும், புகழ்பெற்ற மெலட்டூர் பாகவத மேளா எவ்வாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது என்றும், தற்காலத்தில் பாகவத மேளா எப்படி நடைபெறுகின்றது என்பதையும் இந்த அறிமுகப்பகுதி கட்டுரைகள் விளக்குகின்றன.

இரண்டாம் பகுதி கட்டுரைகள் ஆய்வுக்கண்ணோட்டத்தில் பாகவத மேளா கலையை விவரிப்பவை, வாசகரின் உளக்குவிப்பை கூர்வாசிப்பை கோருபவை. பேராசிரியர் என்.வி. தேவிபிரசாத், என். ஸ்ரீனிவாசன் இருவரும் இணைந்து எழுதிய ‘பாகவத சேவையும் பிரகலாத சரிதமும்‘ கட்டுரையின் மொழிபெயர்ப்பு வெளியிடப்படுகிறது. பிரகலாத சரித்திர நாடகத்திற்கு முன்னுரையாக ஆய்வுரீதியில் எழுதப்பட்ட இக்கட்டுரை பாகவத மேளாவின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை முழுமையாக விளக்கும் தரவுகள் நிரம்பியது. இதே கட்டுரையின் பிற்பகுதியில் பிரகலாத சரித்ரமு நாடகத்தின் அமைப்பும், சுவையான பகுதிகளும் விளக்கப்படுகின்றன. எழுத்தாளரும் கலைவிமர்சகருமான பி.எம். சுந்தரம் பாகவத மேளாவுக்கும் மெலட்டூருக்குமான பிணைப்பு குறித்தும் ‘ஊரும் கலையும்‘ என்ற கட்டுரை எழுதியிருக்கிறார். விமர்சனக்கண்ணோட்டத்துடன் மாற்றுக்கருத்துக்களையும் முன்வைக்கும் கட்டுரையாக இது அமைந்துள்ளது. இறுதியாக உள்ள ‘யட்சகானம், பாகவத மேளம் மற்றும் குச்சிப்புடி‘ ஒரு ஒப்பீட்டுக்கட்டுரை. இந்தக்கலைகளின் தோற்றம் அவற்றிற்கிடையேயான தொடர்பு இவற்றை விளக்கும் புகழ்பெற்ற இசைநிபுணர் பப்பு வேணுகோபாலராவ், தொடர்ந்து அவற்றின் யாப்பு மற்றும் இசைப்பகுதிகளை விளக்கிச்சொல்கிறார். இந்த மூன்று கட்டுரைகளும் ஒரே அடிப்படைத்தரவுகளை கொண்டு துவங்குபவை. ஆனால் கட்டுரைகளின் மையம் வேறு. மூன்று கட்டுரையாளர்களுக்குமிடையே பல கருத்துக்கள் வேறுபடுகின்றன. ஒவ்வொருவரும் தங்களது ஏற்பு மறுப்புக்கான தரவுகளை விரிவாக முன்வைக்கின்றனர்.

தமிழகத்தில் பல ஆண்டுக்காலம் நிகழ்த்தப்படும் ஒருகலையாயினும் பாகவத மேளா குறித்து தமிழில் வெளிவந்தவை மிகக்குறைவே. எங்களது இந்த இதழ் அவ்வகையில் இக்கலை குறித்த விரிவான அறிமுகத்தை தமிழ் வாசிப்புலகிற்கு எடுத்துச்செல்லும் என்று நம்புகிறோம். பிறமொழி வாசகர்களையும் பகவாதமேளா சென்றடைய வேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தெலுங்கு மொழியிலும் வெளியிடுகிறோம். கட்டுரை பங்களிப்பு செய்த ஆய்வாளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம். இம்முயற்சிகள் அனைத்திற்கும் துணைநின்ற மெலட்டூர் பாகவதமேளா குழுவின் தலைவரான பரதம் R மகாலிங்கம் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் அவர்களை சந்திக்க உதவிய மெலட்டூர் நண்பர் ராகவனுக்கும் எங்களுடைய நன்றிகள். இந்த இதழில் இடம்பெற்றுள்ள மொழிபெயர்ப்புகள் மிகுந்த உழைப்பை கோரின, இவற்றை திறம்பட செய்தளித்த மொழிபெயர்ப்பாளர்கள் விக்னேஸ்வரன் – புதுச்சேரி, கார்த்திக் – ஓசூர் , வீரராகவன் – சென்னை ஆகியோருக்கு எங்கள் உளமார்ந்த நன்றி.

http://www.kurugu.in

Poster design:கலைவாணி

பிகு– குருகு இதழின் டிவிட்டர் பக்க இணைப்பை அளித்துள்ளோம். நண்பர்கள் இணைந்து கொள்ளலாம். எங்கள் பதிவுகளை அறிந்துகொள்ள அது உதவியாக இருக்கும்.

https://twitter.com/KuruguTeam

அன்புடன்

குருகு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 16, 2025 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.