அமெரிக்காவின் கவனத்தில்…

என்னுடைய அறம் கதைகள் பற்றி இலக்கியவாசகர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். 2011 ல் வெளிவந்த இந்தச் சிறுகதைத் தொகுதி தமிழில் இதுவரை வெளியான சிறுகதைத் தொகுதிகளில் முதன்மையான வாசக ஏற்பு கொண்டது என்று கூறிவிட முடியும். சென்ற பதினான்கு ஆண்டுகளில் அனேகமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு பதிப்பு வீதம் வெளியாகிக்கொண்டிருக்கிறது. நூறு முதல் ஆயிரம் பிரதிகள் வரை ஒட்டுமொத்தமாக வாங்கி வினியோகம் செய்த வாசகர்களே நானறிந்து நூறுபேருக்குமேல் உள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் எங்கள் விஷ்ணுபுரம் பதிப்பகம் இந்த நூலை வெளியிடத் தொடங்கியது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஐந்தாயிரம் பிரதிகள் வீதம் அச்சிட்டுக்கொண்டே இருக்கிறோம். பெருந்தொகையில் வாங்குபவர்களுக்கான பதிப்புகளும் தனியாக உள்ளன. நாங்கள் வெளியிடத் தொடங்கிய பின்னர் மட்டுமே இதன் விற்பனை அரை லட்சத்தை அடைந்துவிட்டிருக்கிறது.

இந்நூலின் ஆங்கில மொழியாக்கம் ஜக்கர்நாட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தமிழிலிருந்து ஆங்கிலம் சென்ற நூல்களில் அதுவே விற்பனையில் முதலிடத்திலுள்ள நூல். ஒவ்வொரு ஆறுமாதங்களிலும் புதிய பதிப்புகள் வெளியாகின்றன. இந்திரா ஜெய்சிங் போன்ற புகழ்பெற்ற ஆளுமைகள் அந்நூலைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் சிங்கப்பூர் அரசின் வாசிப்பு இயக்கம் அந்நூலை வாசிக்கத்தக்க மூன்று நூல்கலில் ஒன்றாகப் பரிந்துரைத்துள்ளது.

அறம் கதைகள் இந்திய மொழிகளில் எல்லாம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. மலையாளத்தில் தனித்தனி நூல்களாக பலலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. கன்னடத்தில் யானைடாக்டர் என்ற பேரிலும் தெலுங்கில் நெம்மிநீலம் என்ற பேரிலும் அக்கதைகள் வெளியாகின. பாஸ்கர் அவினேனி மொழியாக்கம் செய்த தெலுங்கு அறம் கதைகளின் தொகுதியான நெம்மிநீலம் அதன் தனித்துவம் கொண்ட மொழிநடையால் ஒரு செவ்வியல்படைப்பு என்று அங்கே கருதப்படுகிறது. (நெம்மிநீலம் வாங்க)

அந்நூலின் சர்வதேசப்பதிப்பு அமெரிக்காவின் முதன்மைப் பதிப்பகமான எஃப்.எஸ்.ஜி வெளியீட்டகத்தால் வரும் ஆகஸ்ட் 8 அன்று வெளியிடப்படுகிறது. அதையொட்டிய விளம்பரச்செயல்பாடுகள் தொடங்கியுள்ளன. மதிப்புரைக்கான ஆயிரம் பிரதிகள்  ஏற்கனவே வெளியாகி அனுப்பப்பட்டுள்ளன. அதன் முதல் மதிப்புரை புகழ்பெற்ற பப்ளிஷர்ஸ் வீக்லி இதழில் வெளியாகியுள்ளது.

“Like an uprooted sapling, there’s mud clinging to its roots… it’s steeped in waste and refuse. That’s why it inches a step closer to God.” Readers will be grateful for this introduction to a staggering talent.

Publishers Weekly Review பார்க்க

அமெரிக்கா மாக்மில்லன் பதிப்பகத்தின் இணையப்பக்கத்தில் இந்நூலின் செய்தியை வாசிக்கலாம். நூலை அங்கே வாங்கவும் செய்யலாம்.

மாக்மில்லன் பக்கம்

“Jeyamohan is one of India’s most resourceful makers of literary art, and these unforgettable stories, which manage to be simultaneously tender and pitiless, lyrical and jagged, define his singular temperament and sensibility.” —Pankaj Mishra, author of The World After Gaza

இன்றைய சூழலில் தமிழகத்தின் புனைவுலகை நோக்கி தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் குடியேறிய தமிழ்மக்களின் இளைய தலைமுறைகளை ஈர்ப்பது மிக அவசியமானது என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறேன். ஏனென்றால் அவர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டியது தமிழ்ப்பண்பாட்டையும், தமிழ் யதார்த்தத்தையும்தான்.

தமிழ் பண்பாட்டை வெறுமே ஒரு உறைந்த தகவல்தொகுப்பாக, மொழியாக, பழம்பெருமிதமாகக் கற்றுக்கொடுத்தால் அமெரிக்க இளைய தலைமுறை அதில் இருந்து விலக்கத்தையும் ஏளனத்தையுமே அடையும். அதனுடன் யதார்த்தமும் இணையவேண்டும். அமெரிக்கா போன்ற ஒரு தேசம் அங்கே நவீன இலக்கியத்தையே மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறது. அந்த மாணவர்களுக்கு திருக்குறளும் ஆத்திச்சூடியும் அல்ல, நவீன இலக்கியமே இங்கிருந்தும் சென்றுசேரவேண்டும். அதிலுள்ள யதார்த்தத்தில் இருந்து தேவையானவற்றை எடுத்துக்கொள்ள அவர்களுக்குத் தெரியும்.

தங்கள் வேர்கள் என்ன, எந்தச் சூழலில் இருந்து தங்கள் முன்னோர்கள் முளைத்துப் போராடி மேலெழுந்திருக்கிறார்கள், தங்கள் மரபின் இருளும் ஒளியும் என்ன என்று இளையதலைமுறை அறிவதற்கு நவீன இலக்கியமே உதவும். தமிழின் நவீன இலக்கியங்கள் தொடர்ந்து ஆங்கிலத்தில், அமெரிக்காவில் வெளியாகும். அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கிறோம். அதற்கான மிகச்சிறந்த தொடக்கம் என்பது, ஆரம்பநிலையிலேயே எளிதில் வாசிக்கத்தக்க நூல் அறம் கதைகளே. அதன் ஆங்கில மொழியாக்கம் அங்குள்ள இளைய தலைமுறையைச் சென்றடையவேண்டும் என விரும்புகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 16, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.