கோவை புத்தக விழா
18 ஜூலை 2025 முதல் கோவை புத்தகவிழா நிகழ்கிறது. விஷ்ணுபுரம் அரங்கு 10, 11, 12, 13 எனும் நான்கு பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த ஆண்டின் புதிய நூல்கள் கடல் நாவல், கீதையை அறிதல் முதல் பல புதிய பதிப்புகள் வரை. புதிய பதிப்புகளில் முக்கியமானது இன்றைய காந்தி.
*
கடல் இந்த கோவை புத்தகக் கண்காட்சிக்கென்றே வெளியாகும் நாவல். கடல் திரைப்படத்தின் முன்வடிவம் இதுவே. கிறிஸ்தவ மெய்யியல் சார்ந்த விரிவான பார்வையும், உணர்ச்சிகரமான நிகழ்வுகளினூடாக ஓடும் கதையும் கொண்ட படைப்பு.
“கடல்”- சினிமாவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் நாவல்…
தமிழில் காந்தி பற்றி பரவலாக இருந்த எதிர்மறைப் பார்வையை களைந்த நூல் என்று இன்றைய காந்தி குறிப்பிடப்படுகிறது. இன்றைய பேச்சாளர்கள் இந்நூலில் இருந்து தொடர்ச்சியாக மேற்கோள் காட்டுகின்றனர். அறியப்படாத தகவல்களை முன்வைப்பதுடன் புதிய வரலாற்றுக்கோணத்தையும் உருவாக்கும் படைப்பு. காந்தி பற்றிய வாசகர்களின் கேள்விகளுக்கு ஜெயமோகன் அளித்த பதில்கள் இவை என்பதனால் தீவிரமான வாசிப்பனுபவம் அளிப்பவை. காந்தியை அறிவதற்கான நூல், ஆனால் காந்தியை வழிபாட்டுருவமாக ஆக்குவது அல்ல.
கீதை பற்றி ஜெயமோகன் கோவையில் ஆற்றிய உரையின் நூல்வடிவம். செறிவான மொழியில் கீதையின் வரலாறு, அதை அணுகும் முறை ஆகியவற்றை விவாதிக்கும் இந்நூல் உரையாக நிகழ்த்தப்பட்டது என்பதனால் சரளமான வாசிப்பனுபவமும் ஆகிறது.
இளம்படைப்பாளியான விஷால்ராஜாவின் கதைகள். குறைத்துச் சொல்லும் அழகியல் கொண்ட நவீன ஆக்கங்கள்.
இளம்படைப்பாளியான அஜிதனின் முதல் நாவல். அழகிய மொழியும், தத்துவார்த்தமான கவித்துவமும் கொண்ட காதல்கதை.
அஜிதனின் சிறுகதைகள் மற்றும் மருபூமி என்னும் குறுநாவல் அடங்கிய தொகுப்பு. பாலைநிலத்தை தனித்துக் கடக்கும் வைக்கம் முகம்மது பஷீரின் கதை மருபூமி. அது ஓர் ஆன்மிகமான பயணமும் கூட.
அஜ்மீர் தர்காவில் நிகழும் இந்நாவல் ஒரு பக்கம் இசையும் காதலும், இன்னொரு பக்கம் போரும் தியாகமும் என இரண்டு சரடுகளாகச் சென்று ஒன்றைஒன்று அர்த்தப்படுத்தி முடிகிறது.
மதுரையை மாலிக் காபூரின் படைகள் கைப்பற்றியபோது மீனாட்சியம்மன் கன்யாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படும் தொன்மத்தை ஒட்டி எழுதப்பட்ட உணர்ச்சிகரமான நாவல்.
சங்கப்பாடல்களை பொருள்கொண்டு சுவைப்பதற்காக புனைவைப் பயன்படுத்தும் நூல் இது. அழகிய சிறுகதைகள் வழியாக சங்கப்பாடல்களை விளக்குகிறது. ஆனந்தவிகடனில் வெளியான புகழ்பெற்ற தொடரின் நூல் வடிவம்.
மலையாளத்தில் பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய பெரும்புகழ்பெற்ற நூலின் தமிழாக்கம். உலகப்புகழ்பெற்ற செவ்வியல்நாவல்களை விவாதிக்கும் பாலகிருஷ்ணன் நாவல் என்னும் கலைவடிவம் பற்றிய ஒரு விரிவான புரிதலை அளிக்கிறார். விமர்சனநூலை புனைவுக்கு நிகராகவே வாசிக்கலாம் என்று இந்நூல் காட்டுகிறது.
ருஷ்ய கம்யூனிச அரசின் வீழ்ச்சியின் பின்னணியில் எப்படி உறுதியான கருத்தியல்கள் மனிதர்களை மூர்க்கமான வன்முறையாளர்களாக ஆக்குகிறது என ஆராயும் படைப்பு. இன்றைய சமூகவலைத்தளச்சூழலில் புழங்கும் எவரும் இந்நூல் வழியாக கருத்தியல்மூர்க்கம் என்பதன் வரலாற்றுப்பின்னணியை அறியமுடியும்.
பழிவாங்குதல் என்னும் நஞ்சு ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தொற்றுவதன் சித்திரத்தை அளிக்கும் பரபரப்பான கதை இந்நாவல்.
படுகளம் ஜெயமோகன் எழுதிய விரைவுப்புனைவு. பரபரப்பான நிகழ்வுகளினூடாக ஒரு அதிகாரத்தின் வீழ்ச்சியை, ஒரு புதிய சக்தியின் எழுச்சியைச் சித்தரிக்கிறது.
காடு பல வாசகர்களால் பொதுக்கணக்கெடுப்புகளில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நாவல் என தேர்வுசெய்யப்பட்டுள்ளது. உணர்ச்சிகரமான ஒரு காதல் பசுமைமாறாக் காட்டின் பின்னணியில் சொல்லப்பட்ட கதை, காதலின் அழகை மட்டுமல்ல அதன் இயல்பான முடிவையும் சித்தரிக்கிறது.
ஜெயமோகன் நண்பர்களுடன் செய்த வடகிழக்குப் பயணத்தின் பதிவு. அன்று ஜெயமோகன் எழுதிய பல அரசியல் ஊகங்களை பின்னர் வரலாறு மெய்ப்பித்தது. வடகிழக்கின் அரசியலை, பண்பாட்டை விவாதிக்கும் ஒரு நூலும்கூட.
கோவை ஞானி என்றே அழைக்கப்பட்ட மார்க்ஸிய அறிஞர் ஞானியுடனான தன் அனுபவங்களை விவரிக்கும் ஜெயமோகன் அதன் வழியாக தமிழ் மார்க்சிய இலக்கியச் சூழலின் ஒரு காலகட்டத்தையும் சித்தரிக்கிறார்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
