குருகு ஜூலை இதழ்
இம்முறை குருகு இதழ் “பாகவத மேளா” சிறப்பிதழாக வெளிவருகிறது. முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சையை சுற்றியுள்ள தமிழக கிராமங்களில் பாகவதமேளா என்னும் நாட்டிய நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கு பத்யங்களுடன் (தெலுங்கு மொழி செய்யுள்), விளக்கொளியில் இரவெல்லாம் நடத்தப்படும் இந்த கோவில்சார் மேடைக்கலை மொழிகடந்த கலாசார பிணைப்பிற்கான அடையாளம். வருடம் ஒருமுறை நரசிம்ம ஜெயந்தி விழாவின் போது நடைபெறும் பாகவதமேளா நாடகங்களை மெலட்டூருக்கு சென்று காணவும் அதில் பங்காற்றும் வாய்ப்பும் எங்களுக்கு அமைந்தது. அந்த அனுபவம் இந்த சிறப்பிதழை கொண்டு வர பெரிதும் உதவியது.
பாகவதமேளா குறித்த அறிமுகக்கட்டுரையும், மெலட்டூரின் பாகவத மேளா முன்னோடிகள் மற்றும் சங்கம் குறித்த கட்டுரையும் பாகவதமேளா குழுவினரான பரதம் ஆர். மகாலிங்கம் மற்றும் அவரது குழுவின் பாடகரான முரளி ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது. குருகு ஆசிரியர் குழு மெலட்டூர் திரு மகாலிங்கத்தின் பாகவத மேளா குழுவினருடன் மேற்கொண்ட உரையாடல் ‘கலையின் தனித்தன்மையும்‘, நான்கு நாள் முழு பாகவதமேளா நிகழ்வுகள் குறித்த அனங்கனின் அனுபவக்கட்டுரை ‘தேவ தேவா இதே சமயமும்‘ இதழில் இடம்பெறுகின்றன. பாகவதமேளா கலைவடிவம் குறித்த எளிய அறிமுகமாகவும், புகழ்பெற்ற மெலட்டூர் பாகவத மேளா எவ்வாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது என்றும், தற்காலத்தில் பாகவத மேளா எப்படி நடைபெறுகின்றது என்பதையும் இந்த அறிமுகப்பகுதி கட்டுரைகள் விளக்குகின்றன.
இரண்டாம் பகுதி கட்டுரைகள் ஆய்வுக்கண்ணோட்டத்தில் பாகவத மேளா கலையை விவரிப்பவை, வாசகரின் உளக்குவிப்பை கூர்வாசிப்பை கோருபவை. பேராசிரியர் என்.வி. தேவிபிரசாத், என். ஸ்ரீனிவாசன் இருவரும் இணைந்து எழுதிய ‘பாகவத சேவையும் பிரகலாத சரிதமும்‘ கட்டுரையின் மொழிபெயர்ப்பு வெளியிடப்படுகிறது. பிரகலாத சரித்திர நாடகத்திற்கு முன்னுரையாக ஆய்வுரீதியில் எழுதப்பட்ட இக்கட்டுரை பாகவத மேளாவின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை முழுமையாக விளக்கும் தரவுகள் நிரம்பியது. இதே கட்டுரையின் பிற்பகுதியில் பிரகலாத சரித்ரமு நாடகத்தின் அமைப்பும், சுவையான பகுதிகளும் விளக்கப்படுகின்றன. எழுத்தாளரும் கலைவிமர்சகருமான பி.எம். சுந்தரம் பாகவத மேளாவுக்கும் மெலட்டூருக்குமான பிணைப்பு குறித்தும் ‘ஊரும் கலையும்‘ என்ற கட்டுரை எழுதியிருக்கிறார். விமர்சனக்கண்ணோட்டத்துடன் மாற்றுக்கருத்துக்களையும் முன்வைக்கும் கட்டுரையாக இது அமைந்துள்ளது. இறுதியாக உள்ள ‘யட்சகானம், பாகவத மேளம் மற்றும் குச்சிப்புடி‘ ஒரு ஒப்பீட்டுக்கட்டுரை. இந்தக்கலைகளின் தோற்றம் அவற்றிற்கிடையேயான தொடர்பு இவற்றை விளக்கும் புகழ்பெற்ற இசைநிபுணர் பப்பு வேணுகோபாலராவ், தொடர்ந்து அவற்றின் யாப்பு மற்றும் இசைப்பகுதிகளை விளக்கிச்சொல்கிறார். இந்த மூன்று கட்டுரைகளும் ஒரே அடிப்படைத்தரவுகளை கொண்டு துவங்குபவை. ஆனால் கட்டுரைகளின் மையம் வேறு. மூன்று கட்டுரையாளர்களுக்குமிடையே பல கருத்துக்கள் வேறுபடுகின்றன. ஒவ்வொருவரும் தங்களது ஏற்பு மறுப்புக்கான தரவுகளை விரிவாக முன்வைக்கின்றனர்.
தமிழகத்தில் பல ஆண்டுக்காலம் நிகழ்த்தப்படும் ஒருகலையாயினும் பாகவத மேளா குறித்து தமிழில் வெளிவந்தவை மிகக்குறைவே. எங்களது இந்த இதழ் அவ்வகையில் இக்கலை குறித்த விரிவான அறிமுகத்தை தமிழ் வாசிப்புலகிற்கு எடுத்துச்செல்லும் என்று நம்புகிறோம். பிறமொழி வாசகர்களையும் பகவாதமேளா சென்றடைய வேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தெலுங்கு மொழியிலும் வெளியிடுகிறோம். கட்டுரை பங்களிப்பு செய்த ஆய்வாளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம். இம்முயற்சிகள் அனைத்திற்கும் துணைநின்ற மெலட்டூர் பாகவதமேளா குழுவின் தலைவரான பரதம் R மகாலிங்கம் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் அவர்களை சந்திக்க உதவிய மெலட்டூர் நண்பர் ராகவனுக்கும் எங்களுடைய நன்றிகள். இந்த இதழில் இடம்பெற்றுள்ள மொழிபெயர்ப்புகள் மிகுந்த உழைப்பை கோரின, இவற்றை திறம்பட செய்தளித்த மொழிபெயர்ப்பாளர்கள் விக்னேஸ்வரன் – புதுச்சேரி, கார்த்திக் – ஓசூர் , வீரராகவன் – சென்னை ஆகியோருக்கு எங்கள் உளமார்ந்த நன்றி.
Poster design:கலைவாணி
பிகு– குருகு இதழின் டிவிட்டர் பக்க இணைப்பை அளித்துள்ளோம். நண்பர்கள் இணைந்து கொள்ளலாம். எங்கள் பதிவுகளை அறிந்துகொள்ள அது உதவியாக இருக்கும்.
https://twitter.com/KuruguTeam
அன்புடன்
குருகு
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
