சுந்தர ராமசாமியும் சிங்கப்பூர் சிறுகதைப்போட்டியும்
அன்புள்ள ஜெ,
அண்மையில் இணையத்தில் நிகழ்ந்த ஒரு விவாதம், அதைப்பற்றிய என் சந்தேகம் இது. சிங்கப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பில் ஒரு சிறுகதைப்போட்டி நிகழ்ந்ததாகவும், அதற்கு சுந்தர ராமசாமி நடுவராக அழைக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. தன் பார்வைக்கு வந்த சிறுகதைகளில் எவையுமே அப்போட்டியின் விருதுக்குத் தகுதியானவை அல்ல என்று சுந்தர ராமசாமி தீர்ப்பு சொன்னாராம். ஒரு போட்டி என்றால் அதில் பங்குகொண்டவற்றில் எது முதலில் எது இரண்டாமிடத்தில் என்று சொல்வதுதான் நடுவரின் பணி. போட்டியில் எவருமே முதலிடத்தில் வரவில்லை என்று நடுவர் சொல்லமுடியுமா என்ன? எனக்கும் இந்த சந்தேகம் வந்தது. ஆகவேதான் இதைக் கேட்கிறேன்
அருண்
அன்புள்ள அருண்,
சுந்தர ராமசாமி வாழ்ந்தபோது இதற்கு பதில் சொல்லியிருக்கிறார். இந்நிகழ்வு நடைபெற்று நாற்பதாண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன.
முதல்விஷயம், இப்படி ஒரு நிகழ்வை பற்றிய விவாதத்தின்போது சுந்தர ராமசாமி போன்ற ஓர் இலக்கியமுன்னோடி ஏன் அதைச் செய்தார், அதன் விளைவு என்ன என்று மட்டும்தான் இன்று விவாதம் நிகழமுடியும். ஏனென்றால் இன்று அது ஒரு வரலாற்று நிகழ்வு. உலகம் முழுக்க இலக்கிய, கலை, சிந்தனைக்களங்களின் முன்னோடிகள் பற்றிய விவாதம் அந்த தளத்தில் மட்டுமே நிகழ்கின்றது. அப்படி புகழ்பெற்ற பல விவாதங்கள் உண்டு. அவர் என்ன செய்திருக்கவேண்டும் என்றெல்லாம் பேசுவது அபத்தம். இலக்கியம் பற்றி சுந்தர ராமசாமிக்கு வகுப்பெடுக்கவும், அவர் செயல்மேல் தீர்ப்பெழுதவும் இங்கே எவருக்குத் தகுதி?
இந்தவகையான எந்த பேச்சை எவர் பேசினாலும் பேசுபவர் என்ன எழுதிச் சாதித்துவிட்டார் என்று முதலில் கேட்பவனே இலக்கிய வாசகன். ‘எது உன் அறிவியக்கப் பங்களிப்பு?’ என்ற கேள்விக்கு பின்னரே ஒருவர் நம்மிடம் சொல்லும் எந்தக் கருத்தையும் நாம் செவிகொள்ளவேண்டும். இன்று, சமூக ஊடகச்சூழலில் எதையும் வம்புப்பேச்சாக மாற்றிக்கொண்டிருக்கும் அற்பர்களை இந்த வகையான விவாதங்களில் இருந்து முழுமையாக விலக்கிவிட வேண்டும். அந்த மனநிலையை உருவாக்கிக் கொள்ளாத ஒருவர் தானும் நாளடைவில் அற்பவம்பராக உருமாறிவிடுவார்.
*
இலக்கியம் ஓட்டப்போட்டி அல்ல என்று தெரிந்தவனே இலக்கியம் பற்றிப் பேசும் அடிப்படைத் தகுதி கொண்டவன். ஓட்டப்போட்டியில் முதலில் வந்தது யார் என்பது புறவயமானது. எவரும் முடிவுசெய்ய முடியும் அதை. இலக்கியப்போட்டியில் அது முழுக்க முழுக்க நடுவர்களின் அகவயமான முடிவு. அதை எந்த வகையிலும் புறவயமாக நிரூபிக்க முடியாது. ஆகவேதான் தகுதிவாய்ந்த நடுவர்களை நாடுகிறார்கள். சுந்தர ராமசாமி போன்ற ஒருவர் அதனால்தான் அப்போட்டிக்கு நடுவராகத் தேவைப்பட்டார்.
ஆகவே இந்த விவாதத்தின் முதல் கேள்வியே ஏன் சுந்தர ராமசாமி அழைக்கப்பட்டார் என்பதுதான். எவர்வேண்டுமென்றாலும் செய்யத்தக்க ஒரு ‘முடிவை மதிப்பிடும் பணியைச்’ செய்வதற்காக அவர் அழைக்கப்படவில்லை. சுந்தர ராமசாமி மட்டுமே ஆற்றத்தக்க ஒரு பணிக்காகவே அவர் அழைக்கப்பட்டார். அக்கதைகள் மேல் அவருடைய பார்வை படவேண்டும், அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவேண்டும் என்பதற்காகவே அவர் அழைக்கப்பட்டார். அந்தக் கதைகள் பற்றி அவருடைய கருத்து அவருடைய ஆளுமையால்தான் முக்கியத்துவம் அடைகிறது, அதை இன்னொருவர் சொல்லிவிட முடியாது. இலக்கிய முன்னோடி இப்படி ஒரு பணியை ஒப்புக்கொள்வதே ஒரு நல்வாய்ப்பு, ஓர் அரிய இலக்கிய நிகழ்வு. அவர் நடுவராக இருந்த ஒரே இலக்கியப் போட்டி அது என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும்.
சர்வதேச அளவில் எத்தனையோ இலக்கியப் போட்டிகளில் போட்டிக்கு வந்த எந்தப் படைப்பும் தகுதியானது அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் பணம் ஊதியம் பெற்றுக்கொண்டு அவ்வாறு அறிவித்த பல நடுவர்கள் உள்ளனர். கூகிள் பார்க்கத் தெரிந்த எவரும் அதை தெரிந்துகொள்ள முடியும். அது மிக இயல்பான ஒரு நடைமுறை. படைப்புகள் தரமில்லை என்றால் அவ்வாறு அறிவிப்பதும் நடுவரின் கடமைதான். நடுவர் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமை என்றால் அம்முடிவு என்பது அந்தச் சூழல்மேல் முன்வைக்கப்படும் முக்கியமான விமர்சனம், மேலும் முன்னகர்வதற்கான அறைகூவல். எந்த இலக்கியச் சூழலுக்கும் ஓர் இலக்கியப் பேராசானின் விமர்சனம் என்பது ஓர் அருள்தான், அவரை எதிர்க்கவும், முழுமையாகக் கடந்துசெல்லவும்கூட அதுவே தொடக்கம். சிங்கையின் மெய்யான நவீன எழுத்தாளர்கள் அந்த அறைகூவலை அடுத்த கால்நூற்றாண்டில் ஏற்றுக்கொண்டு முன்னெழுந்து வந்தனர் என்பது வரலாறு.
*
முதலில் நாம் அறியவேண்டியது அந்தச் சிறுகதைப்போட்டி ஒரு தனியார் அமைப்பு நடத்தியது அல்ல என்பதே. சிங்கப்பூர் ,மலேசியா போன்ற நாடுகள் மலாய், சீன மொழிகளுக்கு இணையாக தமிழுக்கும் இடமளித்து பெரும் நிதிக்கொடைகளை அளிக்கின்றன. அந்தப் பெருந்தொகை பெரும்பாலும் கருத்தரங்குகளுக்குச் செலவழிக்கப்படுகிறது. தனிப்பட்ட ஆய்வுகளுக்கான நிதிக்கொடைகளாகச் செல்கிறது. அத்துடன் இந்த வகையான போட்டிகளில் பரிசாக வழங்கப்படுகிறது. எப்போதும் இச்செயல்பாடுகள் மெல்ல மெல்ல ஒரு சிறுகுழு, அல்லது அமைப்புகளின் பிடிக்குள் சென்றுவிடும். அதற்கப்பால் இன்னொரு நாட்டின் சூழல்பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை, தமிழ்ச்சூழலில் எங்கும் நிகழ்வதுதான்.
அந்தச் செயல்பாடுக்கு சிங்கை அரசு ஏற்கும்படியான் ஒரு ‘அதிகாரபூர்வ’ ஏற்பை உருவாக்கத்தான் தமிழகத்தில் இருந்து எழுத்தாளர்களை அழைத்து நடுவர்களாக ஆக்கிக்கொண்டிருந்தனர். நம் எழுத்தாளர்களும் சிங்கப்பூர் அழைப்பு, கூடவே கொஞ்சம் சன்மானம் என்றதுமே நன்றிப்பெருக்கில் கண்ணீர் மல்கி, அழைப்பவர்களைத் தொழுது, அச்சூழலைப் புகழ்ந்து, அவர்கள் நாடியதைச் செய்துகொண்டும் இருந்தனர்.
சிங்கை, மலேசிய இலக்கியச் சூழல் என்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் இருந்து அங்கே சென்ற தமிழ் மறுமலர்ச்சி இயக்கங்களில் இருந்து உருவானது, அது ஓர் ஆக்கபூர்வமான தொடக்கம். சிங்கை, மலேசிய இலக்கிய முன்னோடிகள் அனைவரும் அந்த மறுமலர்ச்சி அலையில் உருவானவர்கள். அவர்களில் சாதனையாளர்கள் உண்டு, ஆனால் அந்த அலை கால்நூற்றாண்டுக்குப் பின் தேக்கம் அடைந்தது. கல்வியாலர்களால் அது கைப்பற்றப்பட்டது. நவீன இலக்கியம் நோக்கிய முன்னகர்வே நிகழாமல் பல பத்தாண்டுகள் சிங்கை, மலேசிய இலக்கியச் சூழலில் தேக்கம் நிலவியது. கல்வித்துறை வழியாகக்கூட நவீன இலக்கியம் அறிமுகம் செய்யப்படவில்லை. இதெல்லாம் மிக எளிமையாக வாசிப்பவர்களுக்குக் கூட இன்று தெரிந்த வரலாறு.
சுந்தர ராமசாமி நடுவராகச் செல்ல காரணமாக அமைந்தவர் நா.கோவிந்தசாமி. அவர் சிங்கை இலக்கியச் சூழலில் ஒரு கலகக்காரராக திகழ்ந்தவர். நவீன இலக்கியம் அறிந்தவர். சிங்கை சூழலின் அன்றைய தேக்கநிலை பற்றிய கடும் ஒவ்வாமையும் கொண்டவர். அவர் சிங்கப்பூரில் என்ன நிகழ்கிறது என்ற உண்மையை சிங்கப்பூர் அரசுக்குக் காட்ட விரும்பியதனால்தான் சுராவை அழைக்க ஏற்பாடு செய்தார் என்றே நான் அறிந்திருக்கிறேன். சு.ரா அன்று பல சர்வதேச இலக்கிய விழாக்களுக்கு அழைக்கப்பட்ட ஆளுமை, ஃப்ரான்ஸிஸ்வா க்ரோ போன்ற சர்வதேச அறிஞர்களால் பாராட்டப்பட்டவர். ஆகவே அவருடைய இடமும் தகுதியும் என்ன என்று சிங்கப்பூர் கலாச்சாரத்துறையினருக்குத் தெரியும். சு.ரா அவரிடம் எதிர்பார்க்கப்பட்டது போலவே அவருக்கு அளிக்கப்பட்ட கதைகள் எவையுமே கதைகளே அல்ல என்று சொல்லிவிட்டார். ஏனென்றால் அவை உண்மையிலேயே கதைகள் அல்ல. அவை பரிசுக்காக ஒப்பேற்றப்பட்டவை.
சு.ராவின் கருத்து அங்கே ஓர் அதிர்ச்சியை உருவாக்கியது. தமிழிலக்கியம் என்ற பேரில் என்ன நிகழ்கிறது, நிதி எப்படி எங்கே செல்கிறது என்பதை கவனித்தாகவேண்டும் என்ற கட்டாயத்தை அரசுக்கு அது உருவாக்கியது என்பதே நான் அறிந்தது. உண்மையில் சு.ரா இடித்துரைத்த பின்னர்தான் சிங்கப்பூர் இலக்கியத்தில் குறுங்குழு ஆதிக்கம் குறைந்தது. மிக ஆக்கபூர்வமான மாற்றங்கள் அதன்பின் உருவாயின. சிங்கப்பூரின் இளைய தலைமுறைக்கு அவர்கள் இலக்கியத்தில் இருக்கும் இடமென்ன என்று அப்பட்டமாக தெரியத் தொடங்கியது. அதைப்பற்றிய விவாதங்கள் வழியாக அவர்கள் தமிழில் எழுதப்பட்ட சிறந்த படைப்புகளை அறிமுகம் செய்துகொள்ளத் தொடங்கினர். அதுகாறும் கல்வித்துறை உட்பட அனைத்து தளங்களிலும் மறைக்கப்பட்டிருந்த நவீனத் தமிழிலக்கிய மேதைகள் அப்படித்தான் அங்கே அறிமுகமானார்கள்.
என்னிடம் ஒரு சிங்கை எழுத்தாளர் சொன்னார், புதுமைப்பித்தன் என ஒருவர் எழுதினார் என்பதையே அதன் பின்னர்தான் அவர் அறிந்தார் என்று. அதுவரை மு.வரதராசனார் மட்டுமே அங்கே இலக்கிய ஆளுமையாக கட்டமைக்கப்பட்டிருந்தார். அவரைத்தாண்டி நவீன இலக்கியம் நோக்கிய நகர்வு நிகழாமல் கல்வித்துறை இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது. ஆகவே இன்றைய சிங்கப்பூர் இலக்கியத்தின் நவீனத்தன்மை என்பது சு.ரா அந்தக் கதைகளைப் பற்றிச் சொன்ன அந்தக் கருத்தில் இருந்து தொடங்குகிறது என்பதுதான் உண்மை.
கு.அழகிரிசாமி மலேசிய இலக்கியம் பற்றிச் சொன்ன கடுமையான கருத்துக்கள் மலேசியாவில் அதிர்ச்சியை, ஒவ்வாமையை உருவாக்கின. ஆனால் அதன் விளைவாகவே அங்கே நவீன இலக்கியப் பிரக்ஞையும் உருவானது. இன்று வல்லினம் போன்ற இலக்கிய இதழில் எழுதும் படைப்பாளிகள் தமிழின் முதன்மையான படைப்பாளிகளுக்கு நிகராக வெளிப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் தொடக்கமெனக் கொண்டிருப்பது அந்த விவாதங்களையே. பல பத்தாண்டுகளுக்குப் பின் சு.ரா அதை சிங்கை இலக்கியத்திற்குச் செய்தார். அதன்பின் உருவான நவீனச் சிங்கை இலக்கியம் சு.ராவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.
சு.ரா இன்று இருந்திருந்தால் அங்குள்ள சில நவீன இலக்கியவாதிகளாவது அவர் முன் வந்து நின்று “இப்ப சொல்லுங்க, எப்படி இருக்கு எங்க கதை?” என்று தன்னம்பிக்கையுடன் கேட்கமுடியும். சுரா அதை புன்னகையுடன் ஏற்கவும்கூடும். அந்த இடம் அங்கே உருவானது அவர் முன்வைதத விமர்சனத்தால்தான். அது அங்குள்ள இளைய தலைமுறைக்குத் தெரியும்.
சரி, இதெல்லாம் இலக்கிய விஷயம், வாசிப்பவர்களும் எழுதுபவர்களும் பேசிக்கொள்ளவேண்டியது. எந்தத் தொடர்பும் இல்லாத முகநூல் வம்பர்களுக்கு என்ன வேலை இதில்? திரும்பத் திரும்ப இவர்கள் உருவாக்கும் இந்த வம்புகளுடனேயே நாம் ஏன் மோதிக்கொண்டிருக்கிறோம்?.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
