ஓஷோ: மரபும் மீறலும்-2
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
ஓஷோவின் சிந்தனை முறைமை
ஓஷோவின் சிந்தனைகளை பின்தொடர்பவர்களுக்கு ஒரு முறைமை, ஒருவித பாணி உள்ளது. அது என்ன என்பதை முதலில் சொல்ல விரும்புகிறேன். இவற்றையெல்லாம் ஒரு தனிப்பட்ட அவதானிப்பாகவே சொல்கிறேன். ஆனால் ஓஷோவை தொடர்ந்து படிப்பவர்கள், ஓஷோயிஸ்டுகளை தொடர்ந்து கவனிப்பவவர்களுக்கு நான் சொல்லும்பதே ‘சரிதான், இதை நான் கவனித்திருக்கிறேன்’ என்று சொல்லத்தோன்றும்.
1. சிந்தனை என்பது மின்னதிர்ச்சி போன்றது
ஓஷோ சிந்தனையாளர்கள் பொதுவாக சிந்தனை என்பது ஒருவித மின்னதிர்ச்சி அனுபவம் என்று நம்புவார்கள். தொட்டால் ஜிர்ரென்று ஏறவேண்டும் என்பதுபோல. ஏனெனில் ஓஷோ அவ்வாறுதான் இருக்கிறார். நெடுங்காலம் நீங்கள் ஓஷோவை படித்துக்கொண்டிருந்தீர்கள் என்றால் அந்தக்கருத்தைச் சென்று சேர்ந்துவிடுவீர்கள். ஓஷோவின் சிந்தனைகள் உங்களுக்கு என்ன மாதிரியான விறுவிறுப்பை, மின்னதிர்ச்சியை, துடிப்பை அளிக்கிறதோ அதை எல்லா சிந்தனைகளிலும் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அதனால்தான் ஓஷோவில் தொடங்கக்கூடிய பலர் ஓஷோவே தொடர் உரைகளாக நிகழ்த்தி எழுத்தில்வந்த கீதை உரை, தம்மபதம் உரை போன்ற பெரிய, அழுத்தமான நூல்களை படித்திருக்க மாட்டார்கள். அவருடைய எளிமையான தொகுப்புகளைத்தான் படித்திருப்பார்கள். ஏனெனில் சிந்தனை என்பது விறுவிறுப்பு என்ற எண்ணத்தால்தான்.
ஆனால் சிந்தனையில் பழக்கம் உள்ளவர்களுக்கும் தத்துவவாதிகளை பயில்பவர்களுக்கும் தெரியும், பெரும்பாலும் சிந்தனைகளுக்கு அத்தகைய ‘மின்னதிர்ச்சி’ அம்சம் கிடையாது என்று. சிந்தனையில் ஒருவித சுகம் இருக்கிறது. Philo-Sophia என்கிறார்கள். அறிவுத்தேவதையின் மேல் பற்று கொள்ளுதல் என்பதுதான் Philosophy. அதில் இருக்கும் இன்பம் என்பது மின்னதிர்ச்சி பெற்று மூளை துடித்தெழக்கூடிய அனுபவம் மட்டும் அல்ல. அதுவும் ஓர் அனுபவம் தான். ஆனால் அது ஒரு தொடக்கம் மட்டுமே. தொடக்கநிலையில் அவ்வாறு இருக்கலாம். ஆனால் பின்னால் செல்லச்செல்ல, மிகச்சரியாக ஒரு சிந்தனையை மற்றொன்றுடன் பொருத்தமுடிவதை கண்டுகொள்வதன் பேரின்பம்தான் தத்துவத்தின் இன்பம் என நாம் அறிவோம். அது, கட்டுமான விளையாட்டுப் பொருட்களை அடுக்கி அடுக்கி ஒரு கட்டமைப்பை உருவாக்கும் குழந்தை அடையும் இன்பம் போன்ற ஒன்று. நீங்கள் மலைகளை அடுக்கி அதை அடையமுடியும் என்றால் அது தத்துவத்தின் இன்பம். கட்டமைப்பதன் இன்பம், தொகுத்துக்கொள்வதன் இன்பம்.
நீங்கள் இரண்டு விஷயங்களை அவதானிக்கிறீர்கள். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு ஒருவித தாவலை நிகழ்த்துகிறீர்கள். அவ்வாறான பல அவதானிப்புகள் ஒரு மாயக்கணத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்து உங்களுக்கு ஒரு புரிதலை அளிக்கின்றன. ஒரு வரையறையை, அல்லது கொள்கையை திரட்டித்தருகின்றன. ஒன்றை கண்டடைவதே தத்துவத்தின் இன்பம் என்பது. அதில் ஒரு உழைப்பும் தொடர்ச்சியான கவனமும் உள்ளன. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்காக அகம் வளர்ந்து செல்லும் பயணம் உள்ளது. சில சமயங்களில் அது இயலாமல்போகும் தவிப்பும் உள்ளது. நீங்கள் அடுக்கி வைத்த ஆயிரத்தில் ஒன்றேயொன்று குறைவதனால் உருப்பெறாமல் இருக்கக்கூடிய தவிப்பு அது. நீங்கள் அறிந்த ஆயிரம், இன்னும் ஐந்தை அறிந்தால் முழுமையடையும். ஆனால் அந்த ஐந்தை அறிவதற்கு இன்னும் ஐம்பது ஆண்டுகள்கூட ஆகலாம். அதற்கான தவிப்பு அது.
சிந்தனை, தத்துவம் என்பது அப்படிப்பட்டதுதான். தத்துவம் என்பது எப்போதும் அந்த மின்னதிர்ச்சியை அளிக்கவேண்டியதில்லை. அதிலிருந்து மேலே செல்லும்போதுதான் உண்மையான தத்துவத்தின், மெய்யறிவின் சவால்கள் உள்ளன. ஆனால் தத்துவமும் மெய்யறிதலும் எப்போதுமே மின்னதிர்ச்சியை அளிப்பவை என்பதாக ஒரு எதிர்பார்ப்பை ஓஷோ உருவாக்குகிறார். இது பெரும்பாலும் ஓஷோயிஸ்டுகளுடைய சிந்தனை முறைமையாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
2 எதிர்ப்பு சிந்தனைமுறை
நான் பார்த்தவரை ஓஷோ சிந்தனையாளர்கள் அத்தனைபேருமே அவருடைய எதிர்ப்பு நோக்கையே தங்களுடைய சிந்தனை முறையாக கொண்டிருக்கிறார்கள். மேடையில் பேசத்தொடங்கும்போதே அவர்கள் எதிர்நிலை எடுக்கிறார்கள். சிந்தனையின் எதிர்நிலை என்பது ஒருவகையான குழி. அதில் தொடங்கி ,அதை பயின்றிருக்கிறீர்கள் என்றால் அதிலிருந்து அவ்வளவு எளிதாக வெளியே செல்லமுடியாது. நாத்திகத்தின் மிகப்பெரிய சிக்கலே, அதனால் ஆத்திகத்தை விட பெரிதாக ஆகமுடியாது என்பதுதான் என்துதான். ஏனெனில் அது எதிர்நிலை. எதை எதிர்க்கிறீர்களோ அதற்கு இணையாக மட்டும்தான் உச்சபட்சமாக செல்லமுடியும். அதற்குமேல் செல்லமுடியாது. நேர்நிலைச் சிந்தனைக்குத்தான் முடிவில்லாத வளர்ச்சி உள்ளது.
சிந்தனை என்பது தனது வழியை தானே உருவாக்கிக்கொண்டு செல்வது. வேறொன்றுக்கு எதிர்வினையாகவோ வேறொன்றை மறுத்தோ உருவாவதல்ல. அதன் தொடக்கநிலையில்கூட அதற்கு முன்செல்லும் உந்துதல்தான் இருக்குமேவொழிய விலகிச்செல்லும் சக்தி இருக்காது. ஆகவே வேறு எதுவொன்றை மறுத்தும் எதிர்த்தும் உருவாகக்கூடியது தன்னளவிலேயே இரண்டாம்நிலைச் சிந்தனையாகத்தான் இருக்கமுடியும்.
3 விவாத மறுப்புத்தன்மை
விவாதங்களை மறுக்கக்கூடிய தன்மை ஓஷோவின் சிந்தனைகளில் உண்டு. ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஓஷோ மிகத்தீவிரமாக இந்திய சிந்தனையின் மையத்தில் இருந்திருக்கிறார். காந்தியம், சோஷலிசம் தொடங்கி எல்லா வகையான சிந்தனைமுறைகளையும் ஓஷோ மறுத்து பேசியிருக்கிறார், நிராகரித்திருக்கிறார். இந்திய சனாதனம் அதற்கு எதிரான இந்திய மார்க்ஸியம் இரண்டுக்கும் எதிரி அவர். ஆனால் எந்தவொரு மாற்று சிந்தனைமுறையுடனாவது அவர் உரையாடலை தொடங்கியிருக்கிறாரா? அல்லது ஓஷோ மரபினர் உரையாடியிருக்கிறார்களா?
உரையாடல் என்பது சிந்தனையில் மிக முக்கியமான அம்சம். இரண்டுவகையான முரணியக்கங்கள் வழியாகத்தான் சிந்தனை முன்னகர முடியும்.
அ. மாற்று சிந்தனைகளுடனான முரணியக்கம் – ஒரு சிந்தனை தனக்கு இணையான மாற்று சிந்தனை வழியாக முரணியக்கத்தை நிகழ்த்தும். இது நேர்கருத்து (Thesis) என்றால் அது முரண்கருத்து (Anti Thesis). இவைகளுடைய உரையாடல் வழியாகத்தான் அந்த சிந்தனை முன்னகர முடியும் (Synthesis). இதைத்தான் முரணியக்கம் (Dialectics) என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சிந்தனை தனக்கு இணையான மாற்றுச் சிந்தனையுடன் விவாதித்து, அதிலிருந்து பெற்றுக்கொண்டும், அதை மாற்றிக்கொண்டும் முன்னகரும்.
ஆ. தனக்குள்ளேயே முரண்படுவதன் முரணியக்கம் – ஒரு சிந்தனை தனக்குத்தானே முரண்பட்டு தனக்குள் ஒரு முரணியக்கத்தை உண்டாக்கிக்கொள்ளும். தலைப்பிரட்டை தனது வாலால் தன்னைத்தானே சவுக்கால் அடித்து முன்னகருகிறது என்று ஒரு அழகான கவிதை வரி உண்டு.
சிந்தனைகளில் இத்தகைய முரணியக்கம் முக்கியமானது. ஓஷோவின் சிந்தனைகளில் உள்ள முக்கியமான குறைபாடுகளில் ஒன்று இத்தகைய உரையாடலோ முரணியக்கமோ இல்லாததே. ஓஷோவின் மொத்த சிந்தனைச் செயல்பாடுமே எதிர்தரப்பை எள்ளி நகையாடுவதாகத்தான் இருக்கும். எதிர்தரப்பை அவதூறு செய்யவும், கீழ்மைப்படுத்தவும்கூட அவர் எப்போதும் முயன்றிருக்கிறார். அவருடைய உரைகளில் காந்தியைப் பற்றி சொல்லப்பட்டவைகளை பார்த்தீர்கள் என்றால் தெரியும். நம் சூழலில் காந்தி பற்றிப் பேசப்பட்ட எல்லா அவதூறுகளையும் வசைகளையும் எந்தப் பரிசீலனையும் இல்லாமல் ஓஷோ தானும் சொல்லியிருக்கிறார். இன்றுவரைக்கும் இந்த மூன்றாவது அம்சம் ஓஷோயிஸ்டுகளின் பலவீனமாக உள்ளது. இன்றுகூட சமூகவலைதளங்களில் பார்த்தால், ஒரு கருத்துக்கு எதிராக எல்லா தரப்பும் கருத்து சொல்லியிருக்கும். ஆனால் ஓஷோ தரப்பின் கருத்து இருக்காது. அந்தக்குரல் வேறெங்கோ தனியாக ஒலித்துக்கொண்டிருக்கும்.
இம்மூன்று அம்சங்களும் கூடியது ஓஷோவின் சிந்தனைப்பாணி . இந்த பாணியை பற்றி இங்கு குறிப்பிடக்காரணம், நாம் நினைப்பதுபோல நாமனைவரும் சுதந்திர சிந்தனையாளர்கள் அல்ல என்பதே. நாம் அனைவருமே நமக்குரிய சிந்தனைப்பாணியை (Pattern) கொண்டிருக்கிறோம். மீண்டும் இங்கு ஓஷோவின் பாணியை பின்பற்றி ஒரு நகைச்சுவை சொல்லலாம். ஒரு சிறுவன் பள்ளிக்கூடத்திற்கு தாமதமாக வருகிறான். ஏன் தாமதம் என்று ஆசிரியர் கேட்கிறார். ‘எங்க வீட்டு பசுவை காளையிடம் கொண்டுசெல்ல வேண்டியிருந்தது, அதனால் தாமதம்’ என்றான் சிறுவன். ‘உங்க அப்பாவிடம் சொல்லவேண்டியதுதானே’ என்று ஆசிரியர் கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன், ‘சொல்லலாம்தான். ஆனால் காளைதானே அதற்கு பெஸ்ட் !’ என்கிறான்.
நம் மனதிற்குள் இதுபோன்ற ஒரு முறைமை இருக்கும். அதனடிப்படையில்தான் நாம் சிந்திக்க முடியும். நாம் அந்த முறைமையை கவனித்திருக்க மாட்டோம். ஆனால் நாம் தன்னியல்பாக அந்த வகையில்தான் சிந்திப்போம். ஒரு சூட்டுக்கோலால் சூடுபட்டால்தான் துள்ளி அந்தப்பக்கம் செல்வோம். அதுவரை நாம் நமது எல்லைகளை கடக்க மாட்டோம். ஆஸ்திரேலியா சென்றபோது ஒன்று சொன்னார்கள். கிட்டத்தட்ட கன்னியாகுமரி ஜில்லா அளவுக்கு பெரிய மாட்டுப்பண்ணைகள் அங்கே இருக்கின்றன. ஐம்பதாயிரம் ஏக்கர், ஒரு லட்சம் ஏக்கர் அளவுக்கு பெரிய பண்ணைகள். அங்கு முழுக்க மாடுகள் வளர்க்கின்றனர். ஆஸ்திரேலியா ஆழமில்லாத மண் கொண்டதால் அங்கு பெருமளவுக்கு புல்வெளிகள்தான் இருக்கும். இந்த புல்வெளிகளில் மாடுகளை வளர்க்கத் தொடங்கும்போதே சுற்றிலும் மின்வேலி அமைத்து மின்சாரத்தை பாய்ச்சிவிடுவார்கள். அதற்குள் மாடுகளை விட்டு வளர்ப்பார்கள். மின் அதிர்ச்சியை அடையும் மாடுகள் அந்தக் கம்பியை நெருங்காது. சிறிது நாட்களுக்குப் பின் மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள். ஆனால் எந்த மாடும் மின்வேலியை தாண்டிச்செல்லாது. மேலும் சில நாட்கள் கழித்து அங்கு வேலியே இல்லாமலாகிவிடும். ஆனால் உளரீதியாக எந்த மாடும் அந்த வேலி இருந்த எல்லையை தாண்டிச்செல்லாது. ஏதோ ஒரு மாடு எதனாலோ அஞ்சி ஓடி வேலியைத் தாண்டிவிட்தென்றால் அதன்பின் மற்ற மாடுகளும் தாண்டிவிடும்.
சிந்தனையிலும் நமது முறைமைகள், எல்லைகள் நம்மை அறியாமலேயே உருவாகி விடுகின்றன. அந்த முறைமைக்குள்தான் நாம் மீண்டும் மீண்டும் சிந்திக்கிறோம். ஏன் புத்தகங்களை படிக்கவேண்டும், ஏன் ஆசிரியர்களை தேடிச்செல்ல வேண்டும் என்றால் புதிய சிந்தனைக் கருத்துகளை தெரிந்துகொள்வதற்கு அல்ல; நாம் இப்போது சிந்திக்கும் முறைமையை உடைத்து வேறொரு சாத்தியத்தை அடைவதற்காகவே. அதனால்தான் நல்லாசிரியர்கள் யாருமே அன்பானவர்களோ இனிமையானவர்களோ இருப்பதில்லை. அவர்கள் பெரும்பாலும் மறைந்த பின்னர்தான் நம்மால் நேசிக்கப்படுகிறார்கள். அது என்னுடைய அனுபவமும் கூட. ‘புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்து வெளியே போ’ என்று ஊட்டி குளிரில் நித்யா என்னை வெளியே நிற்கவைத்திருக்கிறார். எனது எழுத்தாளன் எனும் ஆணவத்தின்மேல் அதிகமான அடிவிழுந்த தருணங்களை நான் ஊட்டியில் எனது ஆசிரியர் முன்னால் அமர்ந்துதான் அடைந்திருக்கிறேன். ‘இந்த ஆள் என்ன பெரிய ஆளா?’ என்று நானே சொல்லிக்கொண்டு கிளம்பி நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டேன். பிறகு அது மிகவும் அற்பமானதாக தோன்றி இரண்டுநாட்களில் மீண்டும் கிளம்பி ஊட்டி சென்றேன்.
நான் ஒரு விஷயத்தை எனக்கான வழியில் தன்னியல்பாக யோசிக்கிறேன். அந்த பாதையில் இருந்து விலக்கி கொண்டுசெல்வது அவ்வளவு எளிதல்ல.அதனால்தான் ஓஷோ உருவாக்க்கும் இந்த முறைமை பற்றிய கவனம் நமக்கு வேண்டும் என்கிறேன். அதை நாம் கண்காணிக்கவேண்டும், அதில் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோமா என்று நாமே பரிசீலனை செய்துகொள்ளவேண்டும்.
அப்படியெனில் ஓஷோ அளித்த கொடை என்னவாக இருக்கும் என்பதுதான் அடுத்த கேள்வி. இந்திய சிந்தனை முறைக்கு ஓஷோ எதை அளித்தார் ?
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
