Jeyamohan's Blog, page 45
August 3, 2025
எ.சுப்பராயலு- தமிழ்விக்கி சிறப்பு விருந்தினர்
எ. சுப்பராயலு தற்போதுள்ள வரலாற்றாசிரியர்களில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். எ. சுப்பராயலு பி.டி. சீனிவாச ஐயங்கார், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கே.கே. பிள்ளை ஆகிய முக்கிய வரலாற்றாசிரியர்களின் நிறையில் வருபவர். சோழர் கால வரலாறு குறித்து எ. சுப்பராயலு செய்து வெளியிட்ட ஆய்வு முடிவுகள் முக்கியமானவை.
எ.சுப்பராயலு ஈரோட்டில் ஆகஸ்ட் 15- 16 தேதிகளில் நிகழும் தமிழ்விக்கி- தூரன் விருதுவிழாவில் வாசகர்களுடன் உரையாடுகிறார்
எ.சுப்பராயலு
தத்துவமும் இலக்கியமும்
நீங்கள் அடிக்கடி இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றிப் பேசுகிறீர்கள்.இது எவ்விதம் சாத்தியம் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.நாரயண குருவும் அரவிந்தரும் கென் வில்பரும் இது பற்றி எழுதியதைப் படித்திருக்கிறேன். ஆனாலும் இதை நேர்வாழ்வில் பாவிப்பதன் சாத்தியங்கள் பற்றி எனக்குச் சந்தேகம் இருந்துகொண்டேதான் உள்ளது.
தத்துவமும் இலக்கியமும்
The place and the mood had a dreamy effect on me. Yes, we have to explore the depth of our spirituality and culture only in the rock art of cavemen, not with the articulated religions.
August 2, 2025
அஞ்சலி, எம்.கே.சானு
எம்.கே.சானு இன்னும் மூன்று ஆண்டுகளில் நூறு அகவையைத் தொட்டிருப்பார். 2018 ல் அவருடைய 90 ஆவது அகவை நிறைவை எர்ணாகுளத்தில் கொண்டாடவேண்டும் என்று திரைக்கதை எழுத்தாளர் ஜான் பால் முயற்சி எடுத்தார். மூன்று முறை நாள் குறிக்கப்பட்டாலும் சானு அவர்களின் உடல்நிலைக்குறைவால் அந்நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டது. 2022 ல் ஜான் பால் மறைந்தார்.
போளச்சன் என அழைக்கப்பட்ட ஜான் பால் எனக்கு மிக அணுக்கமானவராக இருந்தார்.நான் சந்திக்க நேர்ந்த மனிதர்களிலேயே இனியவர், ஒரு வகையில் தெய்வீகமானவர். அவர் கடைசிக்காலத்தில் சானு மாஸ்டருக்கு அணுக்கமானவராக திகழ்ந்தார். போளச்சன் அப்படி பலருக்கு அணுக்கமானவர். பலநூறு பேருக்கு. சானு மாஸ்டரிடம் ஒரு முறை ஃபோனை கொடுத்து என்னை பேசச்சொன்னார். நான் ஒரு சில சொற்கள் பேசினேன்.
ஜான் பாலிடம் என்னை அவ்விழாவில் பேசவைக்கவேண்டும் என விரும்பிச் சொன்னவர் எம்.கே.சானு மாஸ்டர். எனக்கு நெருக்கமாக இருந்த நால்வர் அவருக்கும் அணுக்கமானவர்கள். அந்நால்வருமே என் ஆசிரியர்கள். சானு மாஸ்டர் குரு நித்ய சைதன்ய யதியின் தோழர். எம்.கோவிந்தன், பி.கே.பாலகிருஷ்ணன், ஐயப்பப் பணிக்கர் ஆகியோருக்கும் அணுக்க நண்பர். நித்ய சைதன்ய யதிக்கு சானு மாஸ்டர் எழுதிய கடிதங்களை நான் படித்திருக்கிறேன்.
எம். கே. சானு 17 அக்டோபர் 1928ல் பழைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் ஆலப்புழையிலுள்ள தும்போளி என்னும் ஊரில் மிகப்பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் இளமையிலேயே தந்தை மறைந்தார். அவருடைய வணிகம் பங்குதாரர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடும் வறுமை வந்து சேர்ந்தது. பலருடைய உதவியால் படிப்பை தொடர்ந்தார். மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
எம்.கே.சானு நான்கு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கல்லூரி ஆசிரியராக ஆனார். 1958ல் பள்ளி மாணவர்களுக்காக எழுதிய ’ஐந்து அறிவியல் மேதைகள்’ அவருடைய முதல் நூல். 1960ல் தன் முதல் இலக்கிய விமர்சன நூலை எழுதினார், ’காற்றும் வெளிச்சமும்’ என்னும் அந்நூல் அன்று பேசப்பட்ட ஒன்று.
எம்.கே.சானு மாஸ்டர் கேரளத்தின் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டவர். கேரள முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் (புரோகமன கலா சாகித்ய சங்கம்) தலைவராக 1986 முதல் பணியாற்றினார். 1987ல் எர்ணாகுளம் சட்டச்சபை தொகுதியில் இடதுசாரி வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். இன்று (2 ஆகஸ்ட் 2025) காலையில் தன் 97 ஆவது அகவையில் மறைந்தார்.
நான் 1987 ல் ஐயப்பப் பணிக்கரின் இல்லத்தில் சானு மாஸ்டரைச் சந்தித்தேன். ஒரு சில சொற்கள் அறிமுகம். அவர்கள் பேசிக்கொண்டனர், நான் கேட்டுக்கொண்டு நின்றேன். 1988ல் பி.கே.பாலகிருஷ்ணன் இல்லத்தில் அடுத்த சந்திப்பு. அப்போதும் மரியாதையான விலக்கம்தான்.
என் ஆசிரியர்கள் அனைவருமே சானு மாஸ்டர் பற்றி பேசிக்கேட்டிருக்கிறேன். அவர் இலக்கியவிமர்சனம்,இலக்கிய ஆய்வுகள் என பல எழுதியிருந்தபோதிலும் அவருடைய முதன்மை நூல்களாகக் கருதப்படுபவை அவர் எழுதிய வாழ்க்கை வரலாறுகள்தான் நாராரயண குரு, சகோதரன் ஐயப்பன், சங்கம்புழ கிருஷ்ணபிள்ளை, எம்.கோவிந்தன், வைக்கம் முகமது பஷீர் ஆகியோர் பற்றி அவர் எழுதிய வாழ்க்கை வரலாறுகள் இன்று செவ்வியல்படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
நான் எம்.கே.சானு மாஸ்டரின் நான்கு மேடையுரைகளைக் கேட்டிருக்கிறேன். நான்குமே 1985 முதல் 1988 வரை கண்ணனூரில். கேரளம் கண்ட மாபெரும் மேடைப்பேச்சாளர்களில் ஒருவர் அவர். தமிழகத்தின் மேடைப்பேச்சாளர்களில் எவருடனும் உடனே ஒப்பிட்டுக்கொள்ள வேண்டாம். அவருடையது மேடையில் ’நிகழ்த்தப்படும்’ ஒன்று அல்ல. அவர் மேடையில் சிந்திப்பவர். மேடையில் ஒரு பேரறிஞன் தன் சிந்தனையின்மேல் ஏறி மேலே மேலே சென்றுகொண்டே இருப்பதே மாபெரும் சொற்பொழிவு.
கேரளத்தில் சானு மாஸ்டரின் தலைமுறையின் முதன்மைச் சொற்பொழிவாளர்கள் மூவரில் எம்.என்.விஜயன், சுகுமார் அழிக்கோடு ஆகியோர் எஞ்சியவர்கள். மூவரின் உரைகளுமே மகத்தான அறிவுநிகழ்வுகள். சரியான மேடையுரை என்பது ஏதோ ஒரு கணத்தில் அந்த உரையை நாமே நிகழ்த்துவதுபோல உணரச்செய்வது என நான் அறிந்தது அவர்களிடம்தான். எம்.என்.விஜயனின் உரை மிகமெல்ல ஒலிப்பது. மிக நிதானமான குரல். ஒவ்வொரு சொற்றொடரும் கவித்துவமானவை, முன்பு இல்லாமல் அப்போது உருவாகி வருபவை. ஒரு சொற்றொடர்கூட வீணற்ற அந்த உரை ஒருவகையான நினைவோட்டமும்கூட. படிமங்களாலானது. விஜயனின் பாணியில்தான் இன்று கல்பற்றா நாராயணன் உரையாற்றுகிறார்.
அழிகோடின் உரை ஓர் அருவி. அணிச்சொற்றொடர்கள், கதைகள், மேற்கோள்கள், கவிதைகள், நையாண்டிகள் என பெருகிச்செல்லும் அந்த உரை ஒருபோதும் திரும்ப நிகழ்வதில்லை. அவருடைய நினைவுத்தொகுதியில் இருந்து ஒட்டுமொத்தமாக அவை அவையினர் முன் பொழிகின்றன.
எம்.கே.சானுவின் உரை மிகச்செறிவான கட்டமைப்பு கொண்டது. அவர் எழுதிய ஒரு சிறு நூலை நினைவுபிசகாமல் திரும்பச் சொல்வதுபோல தோன்றும். மொத்த உரையின் மையக்கருத்து பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் படிப்படியாக நிறைவடைந்து ஒன்றையொன்று நிரப்புபவை. நான் சானு மாஸ்டரின் உரையைத்தான் எனக்கான முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் என் இயல்புக்கு அது ஒத்துவருகிறது. அத்துடன் நான் நினைவுகூர்கையில் சானு மாஸ்டரின் உரைகள்தான் தெளிவாகவும் முழுமையாகவும் மீண்டு வருகின்றன.
எனக்கு சானு மாஸ்டரை நன்றாகத் தெரியுமென்றாலும் அவருக்கு என்னைத் தெரிந்தது ஜான் பால் 2014 ல் ஏற்பாடு செய்திருந்த பி.கே.பாலகிருஷ்ணன் நினைவுப் பேருரையை ஆற்றும் பொருட்டு நான் எர்ணாகுளம் சென்றிருந்தபோது. சங்ஙம்புழா பார்க்கில் நிகழ்ந்த அவ்விழாவுக்கு சானு மாஸ்டர் பார்வையாளராக வந்தார். அவர் வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. அந்த அரங்கில் இருந்த அறுபது கடந்த பெரும்பாலானவர்களுக்கு அவர் ஆசிரியர், எஞ்சிய பலருக்கு அவர் ஆசிரியர்களின் ஆசிரியர். ஒவ்வொருவராக கால்தொட்டு வணங்கிக் கொண்டிருந்தார்கள்.
நான் முதலில் பேசினேன். அவர் அமர்ந்திருந்த மேடையில் பேசுவதென்பது எளிய விஷயமாக இருக்கவில்லை. ஆனால் நான் என் தன்னம்பிக்கையை ஒரு தவம் என ஈட்டிக்கொண்டவன், நித்ய சைதன்ய யதியின் மாணவன் என்னும் வகையில். என் பேச்சு சிறப்பான ஒன்று என அனைவரும் பாராட்டினர். எனக்கும் நிறைவளித்த ஒன்று அது.
அடுத்து சானு பேசினார். அவர் காரிலிருந்து இறங்கும்போது தள்ளாடிக் கொண்டிருந்தார். இருவர் கைத்தாங்கலாகத்தான் மேடைக்குக் கொண்டுவந்தார்கள். அமர்ந்திருக்கையிலும் தலையும் கைகளும் ஆடிக்கொண்டிருந்தன. அவரை ஒருவர் தூக்கித்தான் மைக் அருகே கொண்டுவந்தனர். அவர் மேடையில் நின்றதும் சட்டென்று உடல் நிமிர்ந்தது. தலை உறுதிகொண்டது. “தியாகங்களால்தான் கருத்துக்கள் நிலைகொள்கின்றன, தர்க்கங்களால் அல்ல” என்ற முதல் வரி கணீரென ஒலித்தது. அங்கே இன்னொருவர் வந்து நின்று பேசுவதுபோல. காலாதீதமான ஒருவர். உடலெனும் பருப்பொருளுக்கு அப்பாற்பட்டவர். அந்த மெய்சிலிர்ப்பை பலமுறை நண்பர்களிடையே சொல்லியிருக்கிறேன்.
தெளிவாக வரையப்பட்ட வரைபடத்தின் மேல் நுணுக்கமாக, முழுமையாக ஒரு கட்டிடம் எழுவதுபோல சொற்பொழிவு நிகழ்ந்து முடிந்தது. ஒரு சொல் வீணாக இருக்கவில்லை. கிட்டத்தட்ட காற்றுவெளியில் விரிந்திருந்த ஒரு நூலை துல்லியமான உச்சரிப்புடன் வாசிப்பது போலிருந்தது. மூச்சின் ஒலிகூட இல்லை. சொல்லுக்காக தயங்கவில்லை. பேச்சாளர்கள் எவரும் தவிர்க்கமுடியாத நிரப்புச் சொற்கள்கூட இல்லை.
பேச்சு முடிந்து மீண்டும் கைத்தாங்கலாக வந்து அமர்ந்தார். விழா முடிந்ததும் நான் சென்று கால்தொட்டு வணங்கினேன். என் தலைமேல் கைவைத்து வாழ்த்தினார். “நல்ல பேச்சு” என்றபின் அருகே நின்ற மூத்த இதழாளரிடம் “இவன் பேச்சு நல்லது. அதை பெரிதாகக் கொடுத்தால்போதும்” என்று ஆணையிட்டார். அவ்வாறுதான் நாளிதழ்களில் என் பேச்சு முதன்மையாக வெளிவந்தது.
அவருடைய இயல்பிலேயே அந்த ஆணையிடும் நிமிர்வு இருந்தது. அவர் வாழ்நாள் முழுக்க ஆசிரியர் என்பதனால் அறிவதிகாரமாகவே அதை அடைந்திருந்தார். ஒருமுறை கேரளத்தில் ஒரு கல்லூரியின் ஆசிரியர் பணிக்கான நேர்முகம் நடைபெற்றது. நாராயணகுருவின் மரபில் வந்தவர்களின் நிறுவனம் அது. அன்று தற்செயலாக அங்கே வந்திருந்த சானு அவ்வறைக்குள் வந்து அமர்ந்தார்.அவர்கள் ஏற்கனவே அவர்களின் சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு வேலையை உறுதி செய்திருந்தனர். நேர்முகம் கண் துடைப்புதான். அனைவருக்கும் அது தெரியும்.
நேர்முகத்துக்கு நானறிந்த ஒரு பெண் சென்றிருந்தார். அவர் குரு நித்யாவின் ஒரு நூலை மொழியாக்கம் செய்தவர். தன் தகுதிச்சான்றிதழுடன் அவர் அந்நூலையும் எடுத்து வைத்தார். சானு அந்த நூலை எடுத்துப் புரட்டினார். “இந்த பெண் போதும்…இவளை நியமித்துவிடுங்கள்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். வேறு வழியே இல்லை, அந்தப்பெண் அங்கே ஆசிரியராக ஆனார்.
எம்.கே.சானு பற்றி பி.கே. பாலகிருஷ்ணன் ஒரு நிகழ்வைச் சொன்னார். சானு இருந்த ஒரு நட்புக்கூடலில் ஒரு பேராசிரியர் நாராயணகுரு பற்றி பிழையான தகவல்களுடன் அவதூறுகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். சாதி வெறிதான் அடிப்படை. ஆனால் அவர் ஒரு வரலாற்றாசிரியர், ஆகவே மிகையான நிமிர்வும் தன்னம்பிக்கையும் இருந்தது. சானு புன்னகையுடன், ஒரு சிறு எதிர்ப்புகூட சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார். அன்புடன் வணங்கி விடைபெற்று எழுந்து சென்றார்.
அவர் சென்றபின் பி.கே.பாலகிருஷ்ணன் அந்தப் பேராசிரியரிடம் சொன்னார், ’நீங்கள் சொன்ன எல்லாவற்றுக்கும் திட்டவட்டமான ஆதாரங்களுடன் பெரிய நூலையே சானு எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு சொல்கூட உங்களுக்கு அவர் பதில் சொல்லவில்லை. எண்ணிப்பாருங்கள், ஒரு சொல் மறுப்பு சொல்லக்கூட அவர் உங்களைப் பொருட்படுத்தவில்லை என்றால் என்ன பொருள்?”
அந்தப் பேராசிரியர் கடுமையாகப் புண்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து பாலகிருஷ்ணனிடம் வந்து சொன்னார். “என்னால் தூங்கவே முடியவில்லை… அவர் என்னை வசைபாடியிருந்தால்கூட பரவாயில்லை. ஒரு குழந்தையின் பேச்சைக் கேட்பதுபோல என் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார். அவர் முகம் நினைவில் இருக்கிறது. அவர் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பேசாமல் இருக்கவில்லை, அவர் என்னை உண்மையாகவே பொருட்படுத்தவில்லை”
மேலும் ஒரு மாதம் கழித்து அதே பேராசிரியர் பி.கே.பாலகிருஷ்ணன் முன்னிலையில் சானு மாஸ்டரைச் சந்தித்தார். சானுவுக்கு அந்தப் பேராசிரியரின் முகம் மட்டும் நினைவில் இருந்தது. அவர் பேசியவை நினைவில் இல்லை. பேராசிரியரே அவற்றை நினைவுபடுத்த முயன்றார், அப்போதும் சானு நினைவுகூரவில்லை. மிக விரிவாக தான் பேசியதை பேராசிரியரே சானுவிடம் சொன்னார். “என்னை நீங்கள் பொருட்படுத்தவில்லையா?” என்றார்.
“அதெல்லாம் இல்லை, நீங்கள் சொன்னது உங்களுக்குத் தெரிந்தது. அறிவு என்பதும் ஓர் எல்லைதான். நீங்கள் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வாய்ப்புண்டே” என்று சானு மென்மையாகச் சொன்னார். பேராசிரியர் சீற்றம் ,ஏமாற்றம் ஆகியவற்றால் கண்கள் கலங்கும் அளவுக்குப் போய்விட்டார் என்றார் பாலகிருஷ்ணன். (ஆனால் அவர் மனம் மாறவெல்லாம் இல்லை.)
சானு மாஸ்டரின் குணம் அத்தகையது. எந்நிலையிலும் மாறாத நிலைகொண்ட ஆழம். புன்னகை. மெல்லிய உடலுடன் அவர் நடந்து வருகையில் மிகமிகமிக எடைகொண்டவை அக்காலடிகள் என்று தோன்றும். எத்தனையோ மாணவர்களின் எண்ண்ங்களில் பதிந்த காலடிகள். என்னுடைய சிந்தனையிலும்தான்.
ஓஷோ: மரபும் மீறலும்-7
இரண்டாவது காலகட்டம்
ஓஷோ ஓர் மாற்று யோகப் பயிற்சியாளராக உருவாகிவந்த அந்த காலகட்டம் இயல்பாகவே ஒரு மாற்று ஆன்மீகத்தை தேடிய ஒன்று. அதன் பின்னணியை சற்று விரிவாக சொல்லவேண்டியுள்ளது. ஏனெனில் அந்த காலகட்டத்தில்தான் எனது இளமைப்பருவத்தை கழித்திருக்கிறேன். என்னைவிட மூத்தவர்கள் அதைப்பற்றி பேசமுடியும். என்னைவிட வயது குறைந்தவர்களுக்கு அந்த காலகட்டம் தெரியாது. அன்று சில திரைப்படங்கள்கூட அக்காலகட்டத்தை வெளிப்படுத்துவனகாவ வந்திருந்தன. ஓர் அடையாளத்துக்காக அதை ஹிப்பி (Hippie) யுகம் என்று சொல்லலாம். ஏற்கெனவே சொன்ன புரட்சிகள் நடந்துகொண்டிருந்த அதே காலகட்டம்தான் ஹிப்பி யுகமும். எப்போது தென்னமெரிக்காவில் காஸ்ட்ரோவும், சேகுவேராவும் வந்தார்களோ அதே காலகட்டத்தில்தான் ஹிப்பி யுகம் அமெரிக்காவில் எழுந்தது.
ஹிப்பி யுகம்
ஹிப்பி யுகத்துக்கு ஒரு பின்னணி உண்டு. உலகப்போர்கள் முடிந்து அதற்கு பின்னால் பிறந்தவர்களுடைய இருபது வயது நிகழ்ந்த காலகட்டம். அவர்கள் எதை நம்பி வாழ்ந்தார்களோ அந்த நம்பிக்கை தகர்ந்த காலகட்டம். மனிதர்கள் மண்ணின்மீது வாழவில்லை. அவர்கள் பெற்றோர்கள் உருவாக்கிக்கொடுக்கும் நம்பிக்கைகளின் மீதுதான் வாழ்கிறார்கள். அந்த நம்பிக்கை தகரும்போது அவர்கள் உடைந்து சிதறக்கூடியவர்களாக மாறுகிறார்கள். ஒரு காலகட்டம் முழுக்கவே உடைந்து சிதறிய தருணம் என்று ஹிப்பி யுகத்தை சொல்லலாம். அந்த இளைஞர்களுக்கு அளிக்கப்பட கிறிஸ்தவம் சார்ந்த விழுமியங்கள் அனைத்துமே பொய்யென்று ஜெர்மனியில் நடத்தப்பட்ட நியூரம்பெர்க் விசாரணைகள் (Nuremberg trials) காட்டின.
அந்த விசாரணைகள் காட்டிய உண்மை என்னவென்றால், ஜெர்மனியில் அத்தனை லட்சம் மனிதர்களை கொண்டுவந்து பட்டியல்போட்டு அட்டவணையிட்டு பிரித்து, பற்களை பிடுங்கி கால்சியத்திற்கு அளித்து, தோலை உரித்து செருப்பு தயாரிக்க அனுப்பி, முடியைக்கொண்டு ஆடைகள் பின்னியவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்பதே. அப்படியென்றால் கிறிஸ்தவம் சொல்லும் மானுட அன்பு, தியாகம், பாவம், பாவமீட்பு போன்றவைகளுக்கு என்னதான் அர்த்தம் என்ற கேள்விதான் ஹிப்பி யுகத்தின் அடிப்படை.
ரால்ஃப் ஹொஷூத் என்ற நாடக ஆசிரியர் எழுதிய ‘தி டெபுடி’ என்ற நாடகம் உள்ளது (The Deputy – a Christian tragedy, Rolf Hochhuth). அது போப் பன்னிரண்டாம் பயஸ் பற்றிய நாடகம். அந்த நாடகத்தின் கதை இதுதான்: ஹிட்லருடைய ராணுவம் யூதர்களை பிடித்து வதைமுகாம்களுக்கு கொண்டுசெல்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதை ஒரு நிருபர் கண்டடைகிறார். அங்கு கொண்டுசெல்லப்பட்ட யூதர்களில் முக்கால்வாசிப்பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். கொண்டு செல்கிறவர்கள் கத்தோலிக்கர்கள். இவர் போப்பாண்டவரை சென்று சந்தித்து அந்த வதை முகாம்களுக்கு எதிராக ஓர் அறிக்கை வெளியிடும்படியும், அது கிறிஸ்தவத்துக்கு எதிரானது என்றும் கேட்கிறார். ஆனால் போப் அதை தவிர்த்துக்கொண்டே சென்று கடைசியில் ‘எல்லோரும் போரிடாமல் அமைதியாக வாழவேண்டும்’ என்று ஒரு பொதுவான அறிக்கையை வெளியிடுகிறார். அதோடு அந்த நாடகம் முடிந்துவிடுகிறது.
என்ன காரணம் என்றால் போப்புக்கு ஜெர்மானிய தொழிற்சாலைகளில் மிகப்பெரிய முதலீடு இருந்தது. கட்டாய உழைப்பு வழியாக அவை அதிகமாக லாபமீட்டிக்கொண்டிருந்தன. ஆகவே அதற்கு எதிராக அறிக்கை வெளியிட அவர் தயாராக இல்லை. இன்று அந்த நாடகத்தை நினைப்பவர்கள் மிகக்குறைவு. ஆனால் அன்றைக்கு அது மிகப்பெரிய அலைகளை உண்டாக்கியது. அன்பு, கருணை, பாசம், மனிதாபிமானம் போன்று எதையெதை நம்பி வாழ்ந்தார்களோ அவையெல்லாம் அடிபட்டுக்கொண்டிருந்தன. பைபிளில் எவ்வளவோ மேற்கோள்கள் உள்ளன. அவையெல்லாம் உண்மைதான். ஆனால் யதார்த்தத்தில் அவை அங்கு இல்லை.
ஹிப்பி என்பவன் யார் ? அமெரிக்க, ஐரோப்பியச் சூழலில் ஒரு மதிக்கத்தக்க மனிதர் என்று நீங்கள் யாரை சொல்வீர்களோ, அத்தகையவருக்கு நேர் எதிராக தன்னை மாற்றிக்கொண்ட ஒருவன். அவருக்கு வீடு உள்ளதென்றால் எனக்கு வீடு வேண்டாம், அவர் தினமும் பல் துலக்குகிறார் என்றால் நான் வாழ்நாளில் எப்போதும் பல்துலக்க மாட்டேன், அவர் குளிப்பானென்றால் நான் குளிக்கமாட்டேன், அவர் ஒயின் குடிப்பானென்றால் நான் கஞ்சா அடிப்பேன் என்பதாக ஒவ்வொன்றிலும் பொது சமூகத்துக்கு எதிராக தங்களை மாற்றிக்கொண்டவர்கள் ஹிப்பிகள்.
மாற்று ஆன்மிகத்தேடல்
அத்தகைய அமைதியிழந்த தலைமுறை அன்று உலகம் முழுக்க இருந்தது. நாம் வாழ்ந்த சிறிய ஊர்களிலும் அவ்வாறான ஆட்களை நாம் பார்க்கமுடியும். தங்களை மனிதர் என்று மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டவர்கள். உலகமெங்கும் அற்று அலைந்த ஒரு தலைமுறை. ஆன்மீக வறுமையடைந்த ஒரு தலைமுறை. அந்த தலைமுறை, சொல்லப்பட்ட, வகுக்கப்பட்ட, முன்வைக்கப்பட்ட ஆன்மீகத்திற்கு எதிரான இன்னொரு ஆன்மீகத்தை நோக்கி தேடிச்சென்றது. அந்த தேடலில் அவர்கள் கண்டடைந்த சில ஆளுமைகள் இருந்தனர். அவ்வாறுதான் இன்று அதிகமாக பேசப்படும் குர்ஜீஃப் முன்வரிசைக்கு வருகிறார். அவ்வாறுதான் கஸ்டனெடா எழுதிய டான் யுவான் எனும் கதாபாத்திரம் (The Teachings of Don Juan: A Yaqui Way of Knowledge, Carlos Castaneda) ஒரு குருவாக மாறி முன்வைக்கப்படுகிறது. அதேபோல ஜென் பௌத்தம் மீது ஒரு கவனம் உருவாகிறது. உலகில் உள்ள கிறிஸ்தவம் அல்லாத ஆன்மீகங்கள் என்னென்ன என்பதில் ஒரு ஆர்வம் உண்டாகிறது. அந்த ஆர்வம்தான் உலகம் முழுக்க நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் மாற்று ஆன்மீகத்தின் அடிப்படை.
தண்ணீர் கீழே விழுந்து எல்லா திசைகளுக்கும் பரவுவதுபோல சாத்தியமான எல்லா திசைக்கும் அந்த மாற்று ஆன்மிகம் பரவியது. அந்த நவீன ஆன்மீகத்தின் தேடல் எங்கெல்லாம் சென்றதென்றால், அமெரிக்க இசைக்கலைஞரான பாப் மார்லி எத்தியோப்பியாவின் பழைய வூடு கலாச்சாரம்தான் (Voodoo) தனக்கான ஆன்மிகம் என்று கண்டுபிடித்து அங்கே சென்றார். எத்தியோப்பியாவின் சக்கரவர்த்தி ஹேலி சலாசி (Haile Selassie) தான் கடவுளின் அவதாரம் என்று சொந்னார். அது ஒரு அபத்தம் என்றாலும், இன்னொருவகை ஆன்மீகத்துக்கான தேடல் எனலாம்.
இவ்வாறு ஒரு புதிய விவாதம் உருவாகி வந்தது. இன்னொரு ஆன்மிகம் எது என்னும் கேள்வியை முன்வைத்தது அது. அந்த புதிய விவாதத்தில் சென்று இணைந்த ஞானிகளில் ஒருவர் ஓஷோ. இவர் அங்கு செல்லவில்லை. அவர்கள் இங்கு தேடி வந்தனர். நாம் அறிந்த ஒன்று உண்டு. எந்த ஞானியும் தானாக எதையும் சொல்வதில்லை. எந்த ஒரு ஞானியின் சொல்லும் நாம் அதை வாங்கிய கலத்தின் வடிவில்தான் நமக்கு கிடைக்கும். கேட்ட கேள்விக்கான பதிலாகத்தான் அவர் நம்மை வந்தடைவார். அந்த காலகட்டம் ஓஷோவிடம் தனக்கான கேள்வியை கேட்டது. அதற்கு அவர் விளக்கமளித்தார். அன்று ஹிப்பி யுகத்தின் ஒரு பகுதி இந்தியா நோக்கி திரும்பியது. ஹிப்பி யுகத்தின் இசையாக அறியப்பட்ட பீட்டில்ஸ் பாடகர்கள் (The Beatles) இந்தியா வந்து மகேஷ் யோகியின் மாணவர்களாயினர். அவ்வாறு பலரும் இந்தியாவிற்கு வந்து அலைந்திருக்கிறார்கள்.
இந்தியாவில் அவர்களுக்கு பதில் சொல்வதற்கான, அவர்களுடைய கேள்விகளை எதிர்கொள்வதற்கான தகுதி கொண்டவர்களாக இருந்தவர்கள், அவர்களிடம் பேசுவதற்கான அறிவார்ந்த கருவிகளை கொண்டிருந்தவர்கள் நவீன குருமார்கள் மட்டுமே. சரி, அவர்கள் சங்கராச்சாரியர் மடத்திற்கு வந்திருந்தால் என்ன சொல்லப்பட்டிருக்கும்? மிலேச்சர்களுக்கு உள்ளே இடமில்லை என்றுதானே. அவர்கள் ஒரு வைணவ மடத்திற்கு சென்றிருந்தால், ‘அந்தப்பக்கம் தள்ளி நில்’ என்றிருப்பார்கள். ஆனால் அவர்கள் ராமகிருஷ்ண மடத்திற்கு சென்றார்கள். அங்கு ரங்கநாதசுவாமி போன்ற ஒருவர் எழுந்து வந்தார். வைணவத்தில் இருந்து பிரபுபாத சுவாமி போன்று ஒருவர் எழுந்துவந்து ஹரே ராமா ஹரே கிருஷ்ணா (இஸ்கான்) என்ற இயக்கத்தை உருவாக்கினார். மகரிஷி மகேஷ்யோகி உருவாகி வந்தார். அவர்களின் மரபில் வந்த பல அறிஞர்கள், ஞானிகள் இன்று இருக்கிறார்கள்.
ஓஷோவின் மூன்று குரல்கள்.
அவ்வாறுதான் ஓஷோ மாற்று ஆன்மிகம் பற்றி பேசத்தொடங்கினார். அவர் மூன்று குரல்களைக் கொண்டவராக, மூன்று வழிகளை இணைத்துக்கொண்டு பேசுபவராகத் திகழ்ந்தார். அதில் முதன்மையானது இலக்கியம். ஜே.டி.சாலிங்கர் எழுதிய The Catcher in the Rye என்ற நாவல் ஹிப்பிகளின் பைபிள் போன்று இருந்தது. ஹிப்பிகளில் ஒருவன் பீட்டில்ஸ் பாடகனான ஜான் லென்னானை (John Lennon) சுட்டுக்கொன்ற பிறகு அங்கேயே அமர்ந்து அந்த நாவலை படித்துக்கொண்டிருந்த நிகழ்வு உண்டு. அவன் இன்றும் சிறையில் இருக்கிறான். ஜான் லென்னான் தனது குரலை இழந்துவிடக்கூடாது, அந்த உச்சத்திலேயே இறந்துவிட வேண்டும் என்பதற்காக இவன் சுட்டிருக்கிறான். சரியான முடிவுதான் ! பலர் அதை செய்வார்கள் என்றால் கலை சற்று வாழும்.
நிகாஸ் கசந்த்சாகீஸின் சோர்பா எனும் கிரேக்கன் என்ற நாவலால் பல ஹிப்பிக்கள் தங்களுக்கு சோர்பா என்றே பெயர் வைத்துக்கொண்டனர். அந்த நாவலில் வரும் சோர்பா என்ற கதாபாத்திரம் ஒரு கொண்டாட்டவாதி (Hedonist) என்று சொல்வர். அன்றன்றைக்கு வாழக்கூடியவன், நாளை என்பது இல்லாதவன். அனுபவங்கள் வழியாக சென்று கொண்டிருப்பவன். அந்த அனுபவங்களிலிருந்து நினைவுகளைக்கூட திரட்டிக்கொள்ளாதவன். அந்த நாவல் படமாக வந்திருக்கிறது. அதில் ஆண்டனி க்வின் (Anthony Quinn) சோர்பாவாக நடித்திருக்கிறார். அந்த படத்தின் இறுதியில் அவர் ஒரு நடனமாடுவார். அது ஒரு விடுதலையின் நடனம். பயிற்சி இல்லாத, ஆனால் அழகான நடனம். சுதந்திரம் என்னும் அழகு கொண்டது அது முக்கியமான ஒரு அடையாளமாக அக்காலத்தில் கொண்டாடப்பட்டது. இப்போதும் சுவாரசியமாக இருக்கும் ஒரு படம்.
ஹெர்மன் ஹெஸ் எழுதிய சித்தார்த்தா (Siddhartha, Hermann Hesse) அக்காலகட்டத்தின் குரலாக கொண்டாடப்பட்ட ஒரு நாவல். அதில் வரும் சித்தார்த்தன் கிட்டத்தட்ட புத்தர் போன்ற ஒரு கதாபாத்திரம். தன் இல்லத்தை விட்டு நீங்கி பல்வேறு ஞான பரிசோதனைகள் வழியாக செல்கிறான். தாசிகளிடம் சென்று வாழ்கிறான். கடும் யோகப்பயிற்சிகளை மேற்கொள்கிறான். இறுதியில் கங்கையில் ஒரு படகோட்டியாக, எந்தக் கேள்வியும் இல்லாமல், எந்த பதில்களையும் கண்டடையாமல், நட்சத்திரங்கள் மேல் படகை ஓட்டிச்செல்பவனாக வாழ்ந்து முடிகிறான். அவன் இறக்கும்போது அவன் வாயில் ஒரு சொல்கூட எஞ்சவில்லை. அவருடைய ஸ்டெப்பி ஓநாய் (Steppenwolf ) என்ற மற்றொரு நாவல். பிரம்மாண்டமான தனிமையில், ஸ்டெப்பி புல்வெளியில் வாழக்கூடிய மிருகம். அதுபோன்ற தனிமையில் வாழக்கூடிய ஒரு மனிதனைப் பற்றிய படைப்பு அது. இந்த நூல்களெல்லாம் அன்று அவ்வளவு பேசப்பட்டன. இந்த நூல்களை தொட்டுக்கொண்டு இந்திய ஆன்மீகத்தை பேசக்கூடியவராக ஓஷோ எழுந்து வருகிறார்.
அன்று பெரிய அளவில் ஹிப்பிகளால் பேசப்படக்கூடிய ஒன்றாக இருந்தது ஜென் பௌத்தம், குர்ஜீஃப் முன்வைத்த மாற்று ஆன்மிகச் சிந்தனைகள் போன்றவை. அவர்கள் எதையெல்லாம் படித்துவிட்டு வந்து சந்தேகம் கேட்கிறார்களோ அதை ஏற்கெனவே படித்துவிட்டு பேசும் ஒருவராக ஓஷோ இருந்தார். சிந்தித்துப் பார்த்தால் அன்றைக்கு ஒரு ஹிப்பி இந்தியா வந்து வேறு யாரிடம் அதையெல்லாம் கேட்டிருக்க முடியும் ? வேறு எந்த ஆன்மீக ஞானியிடம் சோர்பா என்ற கிரேக்கனை பற்றி கேட்க முடியும்? சரி, இன்றைக்கு அப்படி எவரிடம் கேட்கமுடியும்? இன்றைய குருமார்களில் நூல்களைச் சொல்பவர்களே மிகக்குறைவு.
இன்று ஓஷோ வழிவந்த ஒருவர் தனக்கு சோர்பா என்று பெயர் சூட்டிக்கொண்டிருக்கிறார். நான் அவரிடம் அதுபற்றி கேட்டேன். அது ஓஷோவின் பெயர்களில் ஒன்று என்று சொன்னார். ‘இல்லை, இது ஒரு நாவலின் கதாபாத்திரம். அந்த நாவல் சினிமாவாகக்கூட வந்திருக்கிறது’ என்றேன். ஆனால் அதுபற்றி அவருக்கு ஆர்வம் இல்லை. ஓஷோ உருவாக்கிய பல பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டுமே இன்று எஞ்சியிருக்கின்றன. ஆனால் அது அந்த காலகட்டத்தை எதிர்கொண்டு அவர் பேசிய விடைகளால் ஆனது.
அதன்பிறகு ஹிப்பி இயக்கத்தின் வீழ்ச்சி நடந்தது. அதுபற்றி பிறகு விரிவாக பேசுகிறேன். ஒரு ஹிப்பியிடம் ஓஷோ அதை சுட்டிக்காட்டுகிறார். ‘நீ எல்லாவற்றையும் துறந்து இங்கு உட்கார்ந்திருக்கிறாய். ஆனால் உயர்தரமான இசைக்கான உனது தேடல் உன்னை தொழில்நுட்பத்திற்கு அருகில் கொண்டுசெல்கிறது. அந்த தொழில்நுட்பம் உன்னை வீழ்த்தும். எதிர்காலத்தில் உனது கேள்விகள் இங்குதான் இருக்கும். ஆனால் நீ அந்த கேள்விகளை விடுத்து தொழில்நுட்பத்திற்குப் பின்னால் செல்வாய்’ என்றார். அதற்குப்பின் அதுதான் நடந்தது. அன்று இந்தியாவுக்கு வந்து ஓஷோவை சந்தித்து, அவரால் தாக்கமடைந்து மேலும் பலவாறாக அலைந்த ஒரு ஹிப்பி இருந்தான். அவன் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பி முடியெல்லாம் வெட்டி, கோட்சூட் அணிந்து ஆப்பிள் என்ற நிறுவனத்தை உருவாக்கினான். அவன் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ்.
இன்றைக்கு, தொழில்நுட்பம் அந்த கேள்விகளை அப்படியே மறைத்துவிட்டது. கேள்விகளுக்கு பதில் சொல்வதைவிட எளிதானது, அந்த கேள்விகளின் மீது தண்ணீரை விட்டு கழுவிவிடுவது. அதைத்தான் தொழில்நுட்பம் செய்திருக்கிறது. இன்று அந்த கேள்விகள் எவரிடமும் கிடையாது. அவை சிந்தனையாளர்களிடம் மட்டுமே எஞ்சிவிட்டன. அந்த கேள்விகளை இன்றும் தொடரக்கூடியவர்களுக்கு அளிக்கப்பட பதில்களால் ஆனவை ஓஷோவின் உரைகள். ஒரு கட்டத்தில் அத்தகைய கேள்விகளுக்கான பதில்களை விட்டுவிட்டு ஓஷோ திட்டவட்டமான நூல்வடிவ உரைகளை உருவாக்கத் தொடங்குகிறார். தம்மபதம், கீதை போன்ற உரைகள் உருவாயின.
ஒரு பதில்
இன்று திரும்பிப் பார்க்கும்போது அன்று ஓஷோ சொன்ன பதில்களைவிட கேள்வி கேட்டவனைத்தான் என்னால் மிக அருகில் எனப் பார்க்க முடிகிறது. ஒரு பெண்மணி ஓஷோவிடம் ‘மகிழ்ச்சி என்பது என்ன, மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?’ என்று கேட்கிறாள். ஓஷோ அவளிடம், ‘நீ எப்போது கடைசியாக மகிழ்ச்சியாக இருந்தாய் ?’ என்று கேட்கிறார். அதற்கு அவள், தான் நண்பர்களுடன் ஆல்ப்ஸ் மலையில் ஏறியதாகவும் அப்போது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் சொல்கிறாள். ‘அதற்குப்பின் மீண்டும் எப்போது மலையேறினாய்?’ என்று ஓஷோ கேட்கிறார். அவள், ‘அதற்குப்பின் மலையேறவில்லை, நீண்டகாலமாயிற்று’ என்கிறாள். பல்வேறு வேலைச்சுமைகள் இருந்மையால் மலை ஏறவில்லை என்று காரணம் சொல்கிறாள். ஓஷோ, ‘அப்படியென்றால் இங்கே பிரச்சனை உனக்கு மகிழ்ச்சியில்லை என்பது அல்ல. மகிழ்ச்சியாய் இருப்பதற்கு உனக்கு நேரமில்லை, நீ மகிழ்ச்சியை தேடிப்போகவில்லை என்பதுதான். உனக்கு எது வேண்டுமோ அதை நீ தேடிச் செல்லமாட்டாய். மகிழ்ச்சியை யாரேனும் உன் வீட்டிற்கு வந்து அதை உனக்கு பொட்டலமாக தரவேண்டும் என்று நினைக்கிறாய். நீ மகிழ்ச்சிக்காக எதையும் செய்யவில்லை’ என்கிறார்.
மகிழ்ச்சி என்பது ஒரு பயிற்சி என்கிறார் ஓஷோ. ஒரு சைக்கிளை ரிப்பேர் செய்வதற்குக்கூட பயிற்சி தேவைப்படும்போது, ஏன் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு பயிற்சி எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்கிறார். மகிழ்ச்சியாக இருப்பது மனிதர்களுடைய தேவை மட்டுமல்ல, கடமையும்கூட என்கிறார். அதற்காகத்தான் மனிதர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். ஆனால் அதைமட்டும் செய்யமாட்டார்கள். அப்படியென்றால் மனிதர்களுக்கு என்ன வேண்டும் ? அவர்களுக்கு வெற்றி வேண்டும், ஆணவநிறைவு வேண்டும், செத்துப்போன பிறகு நான்குபேர் அவர்களைப்பற்றி பேசவேண்டும். அவற்றையெல்லாம் நாடிச்சென்றால் மனிதர்கள் மகிழ்ச்சியை விட்டுவிடுவார்கள். ‘மகிழ்ச்சியை நீ வேறு பலவற்றின் பொருட்டு விட்டுவிடுவாய். அதன்பின் கீழைநாட்டு குரு ஒருவரிடம் வந்து, மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று கேட்பாய்’ என்று ஓஷோ பதிலளிக்கிறார்.
விளிம்பின் குரல்
ஓஷோ விளிம்புநிலை மனிதர்களுடைய குரலாக ஒலிக்கிறார். அவரைப் புரிந்துகொள்ள அது மிகவும் முக்கியமானது. அவர் காந்தியத்தின் மீதும் மார்க்சியத்தின் மீதும் வைக்கக்கூடிய இன்னொரு முக்கியமான குற்றச்சாட்டு, அவர்கள் ‘இதுதான் பாதை’ என்று வகுக்கும்போதே அந்தப் பாதையில் இல்லாதவர்களை வெளியே தள்ளி, அவர்களை புறநடையாளர்களாக (Outsiders) ஆக்கிவிடுகிறார்கள் என்பதுதான். புறநடையாளர்களை உருவாக்கிக்கொண்டே இருப்பதுதான் மையச் சிந்தனைப் போக்குகளின் வேலை என்கிறார் ஓஷோ. மார்க்சியத்தை பார்த்தால் எவ்வளவு வெறுப்பு நிறைந்த சொற்களை அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்பது தெரியும். குலாக்குகள் (Kulak), லும்பன்கள் (Philistine), திரிபுவாதிகள் (Revisionist), ஃபாசிஸ்ட்டுகள் (Fascist) போன்று. இவை எல்லாமே என்னைக் குறித்தும் சொல்லப்பட்டன. காந்தியவாதிகளும் அவர்கள் அல்லாதவர்களை வெறுக்கும் சொற்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஓஷோ ‘இதைப் போன்று மையப்போக்கிற்கு வெளியே விடப்பட்ட ஆட்களை பற்றி மட்டுமே நான் பேசுவேன், நான் அவர்களுக்கான ஆள்’ என்றே சொல்கிறார்.
1969 ல் பாட்னாவில் நடைபெற்ற ஒரு பெரிய அனைத்து மத மாநாட்டில் அதன் ஒருங்கிணைப்பாளர் மாபெரும் ஒரு முட்டாள்தனத்தை செய்தார். அது அன்று புகழ்பெற்றிருந்த பகவான் ரஜ்னீஷை பேச அழைத்ததுதான் அந்தப் பிழை. அந்த மேடையில் ஓஷோ ‘நீ சொல்லக்கூடிய இந்துமதம் என்பதில் எனக்கு எந்த ஆர்வமும் கிடையாது. அதில் பெண்களுக்கு சம இடம் இல்லை, தலித்துகள் உள்ளே வர இடமில்லை’ என்பதாக தொடர்ந்து பேசிச்சென்றார். ஒரு கட்டத்திற்கு மேல் புரி சங்கராச்சாரியர் எழுந்து கடுமையாக ஆட்சேபிக்த்தார். எனவே ஓஷோவின் பேச்சு நிறுத்தப்பட்டு அவர் பாதியில் வெளியேறினார். முதன்முறையாக அவர் அப்போதுதான் பெரிய செய்தியில் அடிபட்டார் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய குரல் ஓஷோவிடம் இருந்துகொண்டே இருந்தது. அதுதான் அன்றிருந்த துயரப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட மனிதர்களை அவரிடம் தேடிவரச்செய்தது. அப்படி வந்தவர்களில் கோடீஸ்வரர்களின் குழந்தைகள் உண்டு. அவர்கள்தான் ஆசிரமத்தை உருவாக்கி அவரை வெற்றிகரமான ‘கார்ப்பரேட் குரு’வாக மாற்றினார்கள்.
துன்புற்ற அன்னியர் ஏன் இந்தியா வந்தனர் என்பது முக்கியமான கேள்வி. சமீபத்தில் நான் படித்ததில், ஹிப்பிக்கள் இந்தியா வரக்காரணம் கஞ்சா விலைமலிவாக கிடைப்பதுதான் என்று எழுதப்பட்டிருந்தது. வேறு எந்தவொரு சிந்தனை முறையையும் விட மிக மோசமான முறையில் அவதூறு செய்யப்பட்ட சிந்தனைமுறை என்பது ஹிப்பிக்களின் சிந்தனைமுறைதான். எனக்கு அதன்மீது பெரிய மரியாதை உண்டு. ஏனெனில் எனது ஆசிரியர் நித்ய சைதன்ய யதி நெடுநாட்கள் ஹிப்பிக்களிடையே பணியாற்றியவர். நடராஜகுரு அவரை அவர்களிடம் அனுப்பினார். ஹிப்பிக்கள் ஒரு முக்கியமான மாற்று உலக சக்தி. அவர்கள் அழிந்தது, அல்லது நவீனத் தொழில்நுட்பத்தால் அழிக்கப்பட்டது என்பது உலகின் தார்மீகத்தின்மேல் விழுந்த ஒரு பெரிய அடி.
ஹிப்பிகள் மலிவுவிலைக் கஞ்சாவிற்காக இந்தியா வந்ததாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் அன்று அவர்களிடம் ஏன் இந்தியா வருகிறீர்கள் என்று கேட்டால், அதற்கு அவர்கள் சொன்ன பதில் பன்முகத்தன்மைக்காக (for pluralism) என்பதுதான். ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டி, ‘இது மட்டும் உண்மை, இதுவன்றி மற்றவையெல்லாம் பொய்’ என்று சொல்லும் பார்வைதான் உலகப்போர்களையும் பேரழிவையும் உருவாக்கியதாக அவர்கள் நினைத்தார்கள்.
ஓஷோ ஒரு ஹிப்பியிடம் கேட்கிறார் ‘சரிக்கு எதிர்நிலை என்ன?’ என்று. அதற்கு அவன் ‘தவறு’ என்கிறான். ‘இல்லை, சரிக்கு எதிர்நிலை மற்றொரு சரி’ என்கிறார் ஓஷோ. இதை சொல்லக்கூடிய ஒருவரை தேடித்தான் அவன் வந்திருக்கிறான். இந்தியாவின் மீதான அவனுடைய கவர்ச்சியே இங்குள்ள பல்லிறைத்தன்மைதான் (Pantheism) என்கிறான். ஒரு ஹிப்பி சொல்கிறான், ‘ஓர் ஆலயத்தில், கடவுள் வழிபாட்டில், பத்துப்பதினைந்து கடவுள்கள் வரிசையாய் இருப்பதைப்போல அழகிய காட்சி வேறெதுவும் கிடையாது. ஒற்றை கடவுளை நம்பி உருவான அழிவுகளுக்கு எதிரானது இது’ என்று.
இந்த காட்சிகள்தான் அவர்களை ஐரோப்பாவிற்கு திரும்பிச்சென்று இரண்டாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை அங்கு முற்றாக அழிக்கப்பட்ட பேகன் மதங்களை தோண்டியெடுக்கச் செய்தது. கெல்டிக் (Celtic), நார்டிக் (Nordic) தொன்மங்களை ஒவ்வொன்றாக மீட்டெடுத்தனர். அவை நூல்களாக வெளிவந்தன. அந்த தொன்மங்களெல்லாம் கத்தோலிக்க மதம் மேலெழுந்து வந்தபோது அழிக்கப்பட்டவை. சூனியக்காரி ஒழிப்பு என்ற பெயரில் கிட்டத்தட்ட அறுநூறாண்டுகள் தொடர்ந்து நடந்தது அந்த பேகன்மத அழிப்புதான்.
பேகன் மதம் (Paganism) என்றால் என்ன? இந்துமதம் என்று நீங்கள் எதை இன்று சொல்கிறீர்களோ கிட்டத்தட்ட அதுபோன்ற ஒன்று, ஐரோப்பாவில் இருந்தது. இந்துமதத்தின் எந்தவொரு தெய்வத்தை எடுத்துக்கொண்டாலும் அதற்கு சமானமான ஒரு பேகன் தெய்வம் இருக்கும். இடிமின்னல்களின் தெய்வம், மழையின் தெய்வம் என்று பல தெய்வ உருவகங்கள் அங்கும் உண்டு. எல் என்ற சிரிப்புக்கு உரிய கடவுள் உண்டு. அந்த மதம் முற்றாக அழிக்கப்பட்டது. ஐரோப்பிய இளந்தலைமுறை அதைத்தேடிச் சென்றது. தன் காலடியை தோண்டி அந்த மதத்தை வெளியே எடுத்தது. துயரம் என்னவென்றால் ஹிப்பிக்களின் காலத்திற்கு பிறகு அவற்றை தொழில்நுட்பம் கையிலெடுத்துக்கொண்டது. அவர்கள் அதை சினிமாவாக எடுத்து இன்று நமக்கு பொழுதுபோக்கு நாவலாகவும், சினிமாவாகவும், கணிப்பொறி விளையாட்டாகவும் அளித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்று உலகளாவிய கேளிக்கையாக மாறியிருப்பது அன்று ஹிப்பிகள் தோண்டியெடுத்த அந்த மாற்றுக் கலாச்சாரம்தான்.
தோர் (Thor) என்ற சினிமா பார்க்கிறோம். அது ஒரு பேகன் தெய்வம். இன்று ஹாலிவுட்டில் வரும் பெரும்பாலான படங்கள் பேகன் கலாச்சாரத்திலிருந்து எடுக்கப்பட்டவைதான். The Lord of the Rings நாவலின் சாரம் என்பது அங்கிருந்து எடுக்கப்பட்டதுதான். ஹாரி பாட்டர் கதையின் தொன்மத்தை எடுத்துப்பாருங்கள். லண்டனில் ஒரு ரயில் நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட மின்தூக்கி வழியாக கீழே சென்றால் புதையுண்டிருக்கக்கூடிய இன்னொரு உலகம், பேகன் உலகம் வருகிறது. அத்தகைய பேகனிய கலாச்சாரத்தை, பன்மைத்தன்மையை தேடித்தான் அன்று ஹிப்பிகள் இந்தியா வந்தனர்.
ஓஷோ கண்டடைந்த வழிக்கு நிகரானது வைக்கம் முகமது பஷீர் கண்டடைந்தது. ஒன்றாம் வகுப்பு படிக்கும் பஷீரிடம் ஆசிரியர் கேட்கிறார், ‘ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் எவ்வளவு’ என்று. குட்டி பஷீர் எழுந்து தன்னம்பிக்கையுடன் ‘இன்னும் பெரிய ஒன்று’ என்கிறார். ஏனெனில் இரண்டு ஆறுகள் சேர்ந்து இன்னும் பெரிய ஆறு ஓடுவதை அவர் கண்ணால் கண்டிருக்கிறார். கண்கூடான உண்மையை மறுக்கமுடியாது. ‘இரண்டு’ என்று சொல்லும்படி ஆசிரியர் அடிக்கிறார். சொல்லமுடியாது என்று மறுக்கிறார் பஷீர். வயதான பின்பு பஷீர் கண்டடைகிறார், ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் மட்டுமல்ல, ஆயிரம் ஒன்றுகள் சேர்ந்தாலும் ஒன்றுதான் என்று. அந்த ஒன்றே அனைத்தும். அத்தகைய பன்மைத்தன்மையை தேடியே ஹிப்பிகள் இந்தியா வந்தனர். அவர்களிடம் பேசக்கூடிய ஒரு ஞானியாக ஓஷோ இருந்திருக்கிறார்.
மூன்றாவது காலகட்டம்
மாற்று ஆன்மீகத்தை பேசிவருகையில் ஓரு கட்டத்தில், தான் ஒரு அறிவுத்தரப்பை, ஒரு விவாத தரப்பைதான் உருவாக்குகிறோம் என்று ஓஷோ கண்டடைந்தார். நீங்கள் கருத்துகளை சொல்லச்சொல்ல அது கருத்தியலாகத்தான் (Ideology) மாறும். பேசப்பேச பேச்சுதான் பெருகும். தனது டைனமிக் தியானம் பற்றி ‘I invest this to ponder upon my thoughts’ என்கிறார். தான் சொன்னவற்றை அறிந்து கொள்வதற்காக அல்ல, உணர்ந்து கொள்வதற்காகத்தான் டைனமிக் தியானம் என்பதை உருவாக்கினார்.
ஓஷோ எனும் அடையாளம்
அதற்கு அடுத்த கட்டமாகத்தான் அவர் தன்னை ஓஷோவாக, ஒரு ஆசிரியனாக முன்னிறுத்துவது. அவர் தன்னை ஓஷோவாக அறிவித்துக்கொண்டது பற்றி எனக்கு சிறு சந்தேகம் இருந்தது. அன்று அதைப்பற்றி எதிர்மறையாகவும் ஏளனத்துடனும் ஒரு கட்டுரைகூட எழுதியிருந்தேன். ஆனால் இன்று திரும்பிப்பார்க்கும் போது அது சரிதானோ என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. ஏனெனில் ஒரு ஆசிரியன் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தன்னை ஓர் அடையாளமாக, ஒரு வாழும் படிமமாக ஆக்கிக்கொண்டால் மட்டும்தான் அந்த ஞானம் நிலைகொள்ளும். அவனுக்குப்பின் அந்த அடையாளம் காலந்தோறும் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கும். அது புத்தராக இருந்தாலும் சரி, ஓஷோவாக இருந்தாலும் சரி.
அவ்வாறு மாற்றிக்கொள்ளவில்லை எனில் என்னவாகும் ?இந்தியாவில் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த ஞானிகள் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் ஓஷோவும். ஜே.கே. ஓஷோவை ‘ஒரு கிரிமினல்’ என்று சொன்னார். அவர் ஓர் அமைப்பை உருவாக்கக்கூடிய எண்ணம் கொண்டிருந்தார். அதற்கு தகுதியானவர்களை தன்னுடன் வைத்துக்கொண்டார். இன்று காலம் கடந்து திரும்பிப்பார்க்கும்போது ஜே.கே.வின் அமைப்பு என்னவாக இருக்கிறது ? அந்த அமைப்பினால் ஜே.கே.வின் சிந்தனைகளை உலகம் முழுக்க கொண்டுசெல்ல முடியவில்லை. அது தேங்கிப்போன ஓர் அமைப்பாக, தியோசஃபிகல் சொசைட்டி என்ற கருங்கல் பாறை போன்ற இன்னொரு குட்டிப்பாறையாக இருக்கிறது.
ஏனெனில் ஜே.கே. மறைந்ததுமே அவருடன் இருந்த அனைவரும் இரண்டாம்நிலை ஜே.கே.வாக மாறிவிட்டனர். இன்று மூன்று நான்கு பெண்கள் ஜே.கே. சொன்னதை திரும்பச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய தகுதி என்ன என்று கேட்டால், தாங்கள் நீண்ட நாட்களாக அவருடைய பேச்சை கேட்டிருப்பதாகவும், அதனால் தங்களாலும் அவ்வாறு பேசமுடியும் என்பார்கள். ஆனால் ஜே.கே சொன்ன அத்தனைச் சிந்தனைகளையும் திரித்து, நீர்த்துப்போகச் செய்து, வெறும் அலங்காரச்ச்சொற்றொடர்களாக ஆக்கிவிட்டார்கள் அவர்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் அழகிய வரிகள் இன்று அவற்றின் நகல்களால் தோற்கடிக்கப்பட்டுவிட்டன. ஜே.கேயின் சிந்தனை இன்று நட்சத்திரவிடுதிகளின் வரவேற்பறையிலுள்ள போன்சாய் மரங்கள் போல உள்ளது.
ஓர் ஆசிரியன் என்பவன் தான் வாழும் காலகட்டத்திற்கு அப்பால் உள்ளவன். தன்னை எதிர்காலம் நோக்கி எறிந்துகொள்பவன். எதிர்காலத்திற்காக அவன் தன்னை உருவாக்கிக் கொள்ளவேண்டும். கருத்துக்களை அல்ல, படிமங்களையே எதிர்காலத்திற்காகக் கொடுத்துச் செல்லமுடியும். கருத்துக்கள் அவற்றின் திரிபுபட்ட வடிவங்களையே உருவாக்கும். ஏனென்றால் கருத்துக்கள் கருத்துக்களையே சந்திக்கின்றன. படிமங்களே ஆழுள்ளத்தைச் சந்திக்கின்றன. கனவுகளுக்குள் ஊடுரூவுகின்றன, உணர்ச்சிகளாகின்றன, கலையாகவும் மலர்கின்றன. ஆகவே படிமங்களையே ஞானிகள் அளித்துச் செல்கிறார்கள். படிமங்களாகவே அவர்கள் மாறிவிடுகிறார்கள். ஓஷோ அப்படிப்பட்ட ஒரு படிமம். ஓஷோ அணிந்துகொண்டிருக்கும் அந்த குல்லாவை எல்லோரும் அணிந்துகொள்ள முடியாது. அது அவர் தலைக்குதான் பொருந்தும். அதை அவரே சொல்லிவிட்டு செல்லவேண்டியிருந்தது. ஆகவேதான் அந்த ஓஷோ என்ற பெயர். அது சரிதான் என்ற எண்ணம் இன்றைக்கு எனக்கு உள்ளது.
(மேலும் )
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
தமிழ்விக்கி தூரன் விழா விருந்தினர்:ஆறுமுக சீதாராமன்
தமிழக நாணயவியல் ஆய்வில் தி. தேசிகாச்சாரியார் போன்ற முன்னோடிகள், அடுத்த தலைமுறையில் இரா. கிருஷ்ணமூர்த்தி போன்ற ஆய்வாளர்களுக்குப் பின் சமகாலத்தைய முதன்மை ஆய்வாளராக ஆறுமுக சீதாராமன் கருதப்படுகிறார். தொல்லியல் மதிப்பு கொண்ட நாணயங்களைச் சேகரிப்பது, அவற்றை பிற வரலாற்றுச் செய்திகளுடன் இணைத்து வரலாற்றை விரித்து எழுதுவது ஆகிய தளங்களில் தொடர்பணி ஆற்றிவருகிறார்.பொ.மு. ஒன்றாம் நூற்றாண்டு சங்ககால நாணயத்தை ஆய்விற்குக் கொண்டு வந்தவர் என அறியப்படுகிறார்.
ஆறுமுக சீதாராமன் ஆகஸ்ட் 15, 16 ஆம் தேதிகளில் ஈரோட்டில் நிகழும் தமிழ்விக்கி- தூரன் விருதுவிழாவில் வாசகர்களிடம் உரையாடுகிறார்.
ஆறுமுக சீதாராமன்
விஷ்ணுபுரம் அமெரிக்கா சந்திப்புகள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நண்பர் பிரதீப்பின் டாலஸ் நடக்கும் இலக்கிய கூடுகைகள் பற்றிய பதிவை வாசித்தேன்.
டாலஸில் ஒரு சந்திப்புOdyssy வேன் முழுக்க ஆட்களை நிறைத்து கிரி ஓட்ட ஜூலை 12-ல் நடந்த டாலஸ் கூடுகைக்கு ஆஸ்டினிலிருந்து சென்றிருந்தோம். அந்தப் பயணம் முழுதும் வேனில் அமர்ந்து உரையாடியதில் இலக்கியம்தான் பிரதானம். விவாதிக்கவிருக்கிற மத்தகம் நாவலை குறித்து, நண்பர்கள், மறந்தும் தங்கள் பேச்சில் கொண்டு வராமல் பார்த்துக்கொண்டார்கள். கூடுகையில் அவர்கள் பேசுவதை கேட்டபொழுதுதான தெரிந்தது, எவ்வளவு கொதிப்பையும் அறச்சீற்றத்தையும் அடக்கிக்கொண்டிருந்தார்கள் என்று. கேசவனும், பரமனும் அவர்கள் அகத்தில் நுழைந்து அத்தனை கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.
டாலஸ் மூர்த்தியிடம், “பரவாயில்லை, மாதத்திற்கு இரு முறை கடந்த ஏழு / எட்டு மாதமாக தவறாமல் நீங்களும் நண்பர்களும் கூடுகைகளை நடத்தி வருகிறீர்கள். நல்ல அர்ப்பணிப்பு !” என்றேன். அதற்கு அவர், “எங்கள் ஊரில், ஒரு குன்று உண்டு. அனுமன், இலக்குவனை உயிர்ப்பிக்க சஞ்சீவ மலையை தூக்கிச் சென்றபொழுது உதிர்ந்த கற்களில் முளைத்த குன்று என்று ஒரு ஐதீகம். இங்கு நடப்பது, தாங்கள் ஆரம்பித்து வைத்ததில் அங்கங்கே உதிர்ந்த சஞ்சீவ மலைக் குன்றுகளில் ஒன்று ” என்று தன்னடக்கமாக பதில் சொன்னார்.
நீங்கள், 2023 எமெர்சன் முகாமில், தங்கள் உரையில், நேரில் நடத்தும் முகாம்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினீர்கள். அதற்குப் பிறகு நண்பர்கள் தங்கள் வட்டாரப் பகுதிகளில் நேரில் சந்தித்து உரையாட ஆரம்பித்தார்கள். சங்கர் பிரதாப், மதன், சீனி சங்கரன், சுஜாதா நண்பர்களுடன் இணைந்து சியாட்டலில் கூடுகை நடத்துகிறார்கள். விசு, சாரதா, பிரஸாத், சாரதி , விஜய் ரெங்கராஜன் என்று ஒரு பெரும் பட்டாளம் வளைகுடாப் பகுதியில் நூலகம் ஒன்றில் மாதத்தின் முதல் சனிக்கிழமை கூடி தமிழ் இலக்கியத்தை விவாதிக்கிறார்கள். War and Peace நாவலை அத்தியாயம் அத்தியாயங்களாக பிரித்து உரையாற்றுகிறார்கள்.
நிகழ்வு முடிந்து பிரஸாத் கூடுகையில் விவாதித்த கதைகளை பற்றி அமெரிக்க நண்பர்கள் அனைவரும் இருக்கும் whatsapp குழுவிற்கு ஒரு நீண்ட பதிவை அனுப்புவார். அதை மாற்றங்கள் எதுவும் செய்யாமல் அப்படியே பதிவாக தளத்தில் பிரசுரிக்கலாம் என்ற தரத்தில் இருக்கும். குழுவில் தமிழ் இலக்கியத்தை வாசிக்கும் ஆரம்ப நிலையில் இருக்கும் வாசகர்களும் உண்டு. இருபது முப்பது வருடங்கள் வாசித்து கேட்ட கேள்விகளுக்கு நினைவிலிருந்தே பதில் கூறும் நண்பர்களும் உண்டு. ஆதலால், எல்லா நகரங்களிலும் நடக்கும் கூடுகையின் விவாதங்கள் அனைத்து நிலை வாசகர்களுக்கும் இலக்கிய அறிவை கையளிக்கும் வண்ணம் உள்ளன.
எமெர்சன் முகாமில் நேரில் சந்திக்கும் வரை, அமெரிக்க நண்பர்கள் அனைவரும் பேச / உரையாட ஒரு கூடுகை தேவையாகத்தான் உள்ளது. க.நா.சு உரையாடல் அரங்கை நான்கு மாதத்திற்கு ஒரு முறையாவது நடத்திவிடுகிறோம். மலேசியா நவீனுடன் வருகின்ற ஆகஸ்ட் 23, இணையவழி நிகழ்வு உள்ளது. க. நா.சு இணையவழி அரங்கு கூடாத மாதங்களில், டி.எஸ். எலியட் கூடுகை ஒன்றை zoom-ல் நடத்தி வருகிறோம். இந்தக் கூடுகையில் இலக்கியமல்லாமல், ஓவியம், சினிமா என மற்ற கலைகளைப் பற்றியும் பேசுகிறோம். ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு நண்பர்களுக்கு ஒருங்கமைப்பாளர் பணியை வழங்குகிறோம். நண்பர்களின் குழந்தைகள் வந்து பாடி நிகழ்வை ஆரம்பித்து வைக்கிறார்கள். பிராந்தியக் குடும்பங்கள், தலைமைக் குடும்பம் அனைத்தும் ஒன்றென இயங்குவது தொடர்கிறது.
எமெர்சன் முகாம், பிராந்திய கூடுகைகள், மாதாந்திர இணையவழிக் கூடுகைகள் இப்படி வருடம் முழுக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பை அறிய வாய்ப்புகள் இருப்பதால், புதிதுபுதிதாக நண்பர்கள் அமைப்பில் இணைந்துகொண்டே உள்ளார்கள். இருந்தும் கூட, எங்காவது ஒரு நண்பர் தான் உண்டு தன் வாசிப்பு உண்டு என்று இருப்பார். அவரையும் வாருங்கள் வந்து இந்த கூட்டு வாசிப்பில் இணைந்துகொள்ளுங்கள் என்று அன்புடன் அழைக்கிறோம்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
austinsoundar@vishnupuramusa.org / contact@vishnupuramusa.org
வைணவம், ப்ரீத்தி
வைணவ வகுப்பிற்கு நான் என் தோழி ஈஸ்வரியுடன் கலந்துகொண்டேன். ப்ரபந்த வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம், பின்வரும் பாடலின் பொருளை ராஜகோபாலன்(ஜாஜா) அவர்களின் காணொளியை கண்டது முதல் தோன்றியது.
வைணவம், ப்ரீத்தி
These programs serve as alternative forms of education. You are giving a supplementary diet to our regular education. Actually, we are gradually moving toward utilitarian education while ignoring cultural education.
The mode of educationAugust 1, 2025
ஐரோப்பாவில் இந்திய தத்துவம்!
சென்ற ஜூலை 10 அன்று ஐரோப்பாவில் ஆஸ்திரியாவில் மிட்டர்சில் என்னும் ஊரில் இந்திய தத்துவ வகுப்பு ஒன்றை நடத்தினேன். அமெரிக்காவில் அக்டோபரில் நிகழவிருக்கிறது. வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்து, அங்குள்ள சூழலில் வாழ்பவர்களுக்கு இந்திய தத்துவம் ஏன் தேவையாகிறது? அதன் அடிப்படைகள் என்னென்ன?
செம்பரத்தி!
மதியத்துக்கு மேல் டீ குடிப்பதை நிறுத்திவிட்டேன். இரவில் தூக்கம் பாதிக்கப்படுகிறது என்பதனால். காபி, டீ எல்லாமே மதிய உணவுக்கு முன்புதான். உண்மையில் அதற்கு பலனும் உள்ளது. இரவு பத்து மணிக்குக் கிளம்பி டீ குடிக்கச் செல்பவனாக இருந்தவன் நான். நல்ல டீ குடித்துவிட்டு உடனே படுத்து ஆழ்ந்து உறங்கவும் முடிந்திருக்கிறது. வயதுதான்!
ஆனால் மதிய உணவு முடிந்து, ஒரு பதினைந்துநிமிட ஓய்வுக்குப் பின் எதையேனும் படிக்க ஆரம்பித்து, மூன்று மூன்றரைக்கு இடைவெளி விடும்போது சூடாக எதையாவது குடிக்க ஆசைப்படுவேன். மிக மெல்லிதாக கறுப்பு டீ போட்டு குடித்துப் பார்த்தேன். உண்மையில் டீ- காப்பியை நிறுத்த நிறுத்த கஃபீனின் வீரியம் அதிகரிக்கிறது. நண்பர் ஒருவர் சொன்னார், காபி அரைக்கும் கடை வழியாகச் சென்றாலே தூக்கம் கெட்டுவிடுகிறது என்று. விசாரித்தால் அது மிகையல்ல என்றும் தெரிந்தது. மணமே போதுமானது.
அண்மையில் நண்பர் பிரதீபின் அலுவலகம் சென்றிருந்தேன். அமெரிக்க அலுவலகங்களின் பாணியில் என் நண்பரும் பொறியாளரும் கட்டிடவரைவாளருமான நினேஷ் வடிவமைத்த அழகிய நவீன அலுவலகம். அலுவலகத்தின் நட்டநடுவே காபிஷாப். எப்போது வேண்டுமென்றாலும் காபி சாப்பிடலாம். காபி வேலைசெய்தே ஆகவேண்டிய ஊக்கத்தை அளிக்கிறது. உண்மையில் காபி மணமே வேலைக்கான தூண்டுதலை அளிப்பது.
சாயங்காலம் என்னதான் சாப்பிடலாம் என்ற சிக்கலில் இருந்தபோது அருண்மொழி சொன்னாள் ‘ஐபிஸ்கஸ் டீ’ சாப்பிடலாம் என்று. அதாவது செம்பரத்தி இதழ்களைப் போட்டு செய்யப்படும் டீ. எவரோ கொடுத்த ஒரு பாக்கெட் டீ அவளிடமிருந்தது. நிழலில் உலரச்செய்த செம்பரத்தி மலரிதழ்கள். அதை கொதிக்கும் வெந்நீரில் போட்டு இரண்டு நிமிடம் வேகச்செய்து வடிகட்டினால் அதுதான் ஐபிஸ்கஸ் டீ. டீ என்ற பெயர் ஒரு மங்கல வழக்குதான், டீக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. செம்பரத்திபோட்டு கொதிக்க வைத்த வெந்நீர். சீனி போடக்கூடாது. பாலை பக்கத்தில் கூட வைக்கக்கூடாது.
செம்பரத்தி டீயின் மருத்துவ குணங்களைப் பற்றி அருண்மொழி உற்சாகமாகச் சொன்னாள். அது ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றும். ரத்த ஓட்டம் சீரடைந்து இதயம் சுமுகமாகும். எடை குறைப்புக்கும் உதவும் (8 Benefits of Hibiscus – Healthline). நான் அதை அதிகமாக கவனிக்கவில்லை. பொதுவாக உடம்புக்கு நல்லத்து, அவ்வளவுதானே? என்னைக் கவர்ந்தது அதன் வண்ணம்தான். எனக்கு பாலில்லாத டீயின் வண்ணம் மீது பெரும் மோகம் உண்டு. இது அதைவிட வண்ணம். கண்ணாடி கோப்பையைச் சுடர்விடும் வைரம்போல ஆக்கிவிடும் செம்மை.
முதலில் கொஞ்சநாள் உலரச்செய்த செம்பரத்தி இதழ்களை போட்டுத்தான் செய்துகொண்டிருந்தோம். அப்புறம் எவரோ சொன்னார்கள், அதில் அப்படி கூடுதலாக ஒரு அம்சமும் இல்லை. வீட்டு முற்றத்துச் செம்பரத்தியின் புதிய பூவே போதுமானது, அல்லது அது இன்னும் சிறந்தது என்று. ஆகவே அதன்பின் ஒரு கோப்பைக்கு நான்கு பூ போட்டு நானே செய்ய ஆரம்பித்தேன்.
கொதித்ததும் மலரிதழிலிருந்து செம்மை முழுக்க நீருக்கு வந்துவிடுகிறது. இதழ்கள் இளம்பழுப்பு நிறமாக ஆகிவிடுகின்றன – அழுகிய செம்பரத்திப்பூவின் நிறம். மலரிதழ்களை மட்டுமே போடவேண்டும். அல்லிவட்டம் புல்லிவட்டம் காம்பு ஏதும் இருக்கக்கூடாது. கொதிக்கவைத்து கண்ணாடி கோப்பையில் எடுத்துக்கொண்டால் அந்த நிறமே உற்சாகமானதாக இருக்கும். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் குடிக்கக்கூடாது, ரத்த அழுத்தம் மேலும் குறையும் என்கிறார்கள். ஆனால் ரத்த அழுத்தம், உள அழுத்தம் கொண்டவர்களுக்கு இளைப்பாறலை, நல்ல தூக்கத்தை அளிக்குமாம். ஆமாம் என்று நானும் சொல்கிறேன்.
ஓஷோ: மரபும் மீறலும்-6

இந்த உரையில் ஓஷோவின் நான்கு காலகட்டங்களை பற்றிய அறிமுகத்தை அளிக்க விரும்புகிறேன். ஓஷோவை தொடர்ந்து படிப்பவர்களுக்குக்கூட இந்த சித்திரம் இல்லாமலிருக்கலாம். இந்தப் பரிணாமக்கோடு அவரைப் புரிந்துகொள்ள மிக அவசியமானது என்பது என் எண்ணம்.
பேச்சாளர்
ஓஷோ ஒரு மேடைச் சொற்பொழிவாளராக, சொல்லப்போனால் கட்டணச் சொற்பொழிவாளராகத்தான் அறுபதுகளின் இறுதியில் இந்தியாவில் அறிமுகமாகிறார். புகழ்பெற்ற கட்டண சொற்பொழிவாளர். அவருக்கு விரிவான வாசிப்பு இருந்தது. நீங்கள் நினைப்பதுபோல அவர் ஓஷோ ஆனபின்பு படித்தவரல்ல. அதவாது பகவான் ரஜ்னீஷாக அறியப்பட்ட பிறகு அவர் படித்தது மிகவும் குறைவு, அநேகமாக இல்லை என்று சொல்கிறார்கள். அவருடைய படிப்புகள் எல்லாம் ஐம்பதுகளில் இருந்து பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்குள்ளாகத்தான். அந்த வகையில் பார்த்தால் இந்தியாவின் அன்றைய பொதுஅறிவுஜீவி ஆளுமைகளில் மிக அதிகமாக படித்த மனிதர் அவர்தான்.
அவ்வளவு வாசிப்பது சாத்தியம் என்பதே கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம்தான். எழுதுவதிலும் படிப்பதிலும் தீவிரம் கொண்டவன் நான் என்று என்னைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் திரும்பிப்பார்த்து திகைப்படையக் கூடிய சில ஆளுமைகள் உண்டு. ஓஷோ போலவோ அல்லது சிவராமகாரத் போலவோ. அவர்கள் முன்னால் நாம் சிறிய ஆட்களாக ஆகிவிடுகிறோம். அத்தகைய பெரும் படிப்பு, அந்த பெரும்படிப்பை சுமந்து மேடைக்கு வராத எளிமை ஓஷோவுக்கு உண்டு. அவர் தன் இயல்பாகவே புத்தகங்களை பற்றி பேசுகிறாரே ஒழிய திட்டமிட்டு அல்ல. இயல்பான நகைச்சுவை கலந்த ஒரு நட்சத்திர பேச்சாளராக இருந்திருக்கிறார்.
அந்தச் காலகட்டத்தில் சோஷலிசத்திற்கும் காந்தியத்திற்கும் எதிரான வலுவான இந்தியக்குரல் என்று ஓஷோ அவர் அறியப்பட்டிருக்கிறார். அதிகமும் இந்தியிலும், ஆங்கிலத்தில் குறைவாகவும் பேசியிருக்கிறார். சென்னையில் பேசிய ஒரு உரையை தான் கேட்டதாக சுந்தரராமசாமி என்னிடம் சொன்னார். இது அவருடைய முதல் காலகட்டம்.
மாற்று ஆன்மிகம்
தனது இரண்டாவது காலகட்டத்தில் மாற்று ஆன்மீகத்தை முன்வைப்பவராக ஓஷோ மாறினார். அன்றிருந்த மதம் சார்ந்த, மைய ஓட்டமான ஆன்மீக முறைமைகளுக்கு எதிரான, மாற்றான, உலகளாவிய ஓர் ஆன்மீக முறைமையை முன்வைக்கும் ஒரு சொற்பொழிவாளராக அவர் உருவாகிவந்தார்.
இந்தக் காலகட்டத்தில் உலகமெங்கும் அத்தகைய மாற்று ஆன்மீகத்திற்கான தேடல் ஓங்கியிருந்தது என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். முதல் உலகப்போருக்குப் பின் பிறந்த தலைமுறையினரின் உளச்சோர்வு ஹிப்பி இயக்கமாக ஆகியது. ஐரோப்பாவில் தேசியம்போன்ற கருத்துக்கள் வலுவிழந்தன. அரசுகள் மேல் நம்பிக்கை குறைந்தது. உலகமெங்கும் புரட்சிகள் தோன்றி அழிந்தன. இளைஞர்கள் அன்னியர்களானார்கள்.
கூடவே மரபார்ந்த மதங்களின் பாவம்- மீட்பு என்னும் கருத்துக்கள் மேல் சலிப்பு ஓங்கியது. மதங்கள் பேசிக்கொண்டிருந்த பிரபஞ்ச உருவாக்கம், காலம், உயிர்க்குலத்தின் இணைவு உட்பட பல்வேறு கேள்விகளை அறிவியல் எதிர்கொண்டு தனக்கான பதில்களை முன்வைத்தது. மதங்கள் முன்வைக்கும் அறம் ஆதிக்கநோக்கம் கொண்டது என்னும் எண்ணத்தில் இருந்து மதம்சாராத புதிய அறத்தை நோக்கிய தேடல் தொடங்கியது.
யோக ஆசிரியர்
மூன்றாவது காலகட்டத்தில் ஓஷோ செயல்முறை தியானம் (Dynamic Meditation) எனும் தியான முறையை கற்பிக்ககும் ஒரு யோக ஆசிரியராக, பயிற்றுநராக உருவானார். அவற்றை பயிற்றுவிக்க அவர் தனக்கான இடத்தை புனே அருகில் உருவாக்கிக் கொண்டார். அவருக்கு ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் அமைந்தனர். உடல், உள்ளம் சார்ந்த பலவிதமான பயிற்சிகளை அவர் அம்மாணவர்களுக்கு அளித்தார். அவருடைய யோக- தியான முறை இந்தியாவின் பொதுப்போக்கில் இருந்து பெரிதும் விலகியிருந்தது. அதன் வேர்கள் தந்த்ர மரபிலும் பல்வேறு மறைஞானச் சடங்குகளிலும் இருந்தன.
இந்த காலகட்டத்தில்தான் அவர்மீது அவ்வளவு பெரிய அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் உருவாகி வந்தன பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த அவர் இந்தியாவை விட்டு வெளியே செல்ல நேர்ந்தது. அங்கும் நெருக்கடிகள் உருவாகவே மீண்டும் இந்தியா திரும்பினார். தன்னை ஒரு ஞானாசிரியனாக, ஒரு படிமமாக மாற்றிக்கொண்டார். அப்போதுதான் ஓஷோ என்ற பெயரை தானே சூட்டிக்கொண்டார். அச்சொல் ஓஷியானிக் என்ற சொல்லில் இருந்து வந்ததாக சொல்கிறார்கள். அது ஜப்பானிய வார்த்தை என்று சொல்பவர்களும் உண்டு. அந்தப்பெயர் நிலைத்துவிட்டது. அதன்பின் சிலகாலங்களில் அவர் மறைந்துவிட்டார்.
மறைவுக்குப் பின்
மறைவுக்குப் பின் ஓஷோவின் முகம் பல்வேறு விவாதங்களில் இருந்து அகன்று விட்டது. ஊடகங்கள் வழியாக நாம் அவரை அறிவது குறைந்து அவருடைய நூல்கள் , உரைகள் மட்டும் முதன்மைப்பட்டன.அவற்றின் வழியாக மட்டுமே அவரை அறியும் ஒரு தலைமுறை உருவாகி வந்தது. இன்று அவர் ஒரு ஞானகுருவாக ஒரு சாராரால் அறியப்படுகிறார். அவர் ஓஷோ என அவர்களால் அழைக்கப்படுகிறார். அவர்களின் குழுமங்கள் உலகமெங்கும் உள்ளன. அவற்றில் ஒரு பங்கு அமைப்புசார்பாக தொகுக்கப்பட்டது, தன்னிச்சையான யோகப்பயிற்சிக் குழுமங்களும் அவர் பெயரில் உள்ளன.
இந்தியாவின் பொதுவான அறிவியக்கத்தில் ஓஷோ இன்று தொடர்ச்சியாக பேசப்படுபவராகவே உள்ளார். இடதுசாரி அரசியல் சார்ந்த கோணத்தில் ஓஷோ ஒரு கலகக்காரர் என்றும், இந்துமதம் சார்ந்த ஆதிக்கநோக்குக்கு எதிரானவர் என்றும் கருதும் தரப்பினர் உண்டு. அவர் அறமற்றவர், ஒழுக்கமறுப்பு நோக்கு கொண்டவர், ஆகவே ஒரு நசிவுசக்தி என எண்ணுபவர்களும் இடதுசாரிகளுக்குள் உண்டு.
இந்தியாவின் மததத்துவங்களின் களத்தில் இன்று ஓங்கியுள்ள இந்துத்துவ அலை ஓஷோவை முழுமையாகவே புறக்கணித்து, அவர் உண்மையில் நிகழவே இல்லை என்பதுபோல கடந்துசெல்கிறது. பிற மதங்களும் ஓஷோவை பொருட்படுத்தவில்லை. ஆனால் மாற்று ஆன்மீகம் என்னும் களத்தில் ஓஷோ இன்னும் முதன்மையான பெயர். சம்பிரதாயமும் நம்பிக்கையும் கடந்து அத்வைதத்தை முன்வைப்பவர்கள் அவரை வாசிக்கவும் அவருடன் விவாதிக்கவும் செய்கிறார்கள். மரபான மதம் சார்ந்த நோக்குக்கு அப்பால் சென்று உளவியல் உட்பட நவீன அறிவியல் அடிப்படையுடன் ஆன்மிகத்தை அணுகுபவர்களுக்கு அவர் ஒரு முன்னோடியாக உள்ளார். குர்ஜீஃப் உட்பட பல்வேறு மாற்று ஆன்மிக குருநாதர்களை அறிமுகம் செய்த ஆசிரியராக அவர் கருதப்படுகிறார். மறைஞானப் பயிற்சிகள் உட்பட பல்வேறு யோகமுறைகளைக் கற்பவர்களும் அவரை ஒரு மறைஞானியாகக் கருதுகிறார்கள். முதல் மூன்று காலகட்டத்தின் விளைவாகவும் அதன் தொகுப்பாகவும் உச்சமாகவும் இன்றுவரை அவருடைய நான்காவது காலகட்டம் நீடிக்கிறது.
இன்று, நம் காலகட்டத்தில் நின்றுகொண்டு ஓஷோவை பேசும்போது ஆரம்பத்திலிருந்தே அவர் திரண்டு வந்த படிநிலைகளை பார்க்கவேண்டும். அது அவரைப் புரிந்துகொள்ள உதவியாக அமையும்.
முதல் காலகட்டம்
ஒரு பேச்சாளராக ஓஷோ திகழ்ந்த அந்த காலகட்டத்தில் சோஷலிசத்திற்கும் காந்தியத்திற்கும் எதிராக ஏன் அவ்வளவு தீவிரமான ஒரு நிலைப்பாட்டை எடுத்தார் ? அக்காலகட்டத்தின் ஓஷோவின் உரைகள் இன்று அச்சிலோ ஒலிவடிவிலோ கிடைக்கவில்லை. பிற்காலத்தில் வந்த பல உரைகளில் தான் ஏன் சோஷலிசத்தையும் காந்தியத்தையும் எதிர்த்தேன் என்பதை மேற்கோள்களாக சொல்லியிருக்கிறார். அந்த மேற்கோள்களை தொகுத்துக்கொண்டு அந்த தரப்புகளுக்கு எதிரான அவரது நிலைப்பாட்டில் உள்ள நியாயங்களை நாம் பார்க்கலாம்.
1. ஒழுக்கவியல்
ஓஷோ சோஷலிசத்தையும், காந்தியத்தையும் எதிர்ப்பதற்கான முதல் காரணம் ஒழுக்கவியல்தான். காந்திய ஒழுக்கவியலுக்கும், சோஷலிச ஒழுக்கவியலுக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. இங்கே ஒரு விளக்கம். இந்தியாவில் மார்க்சியம் நீர்த்துப்போய், நீர்த்துப்போய் அதைத்தான் சோஷலிசமாக மாற்றிக்கொண்டார்கள். மார்க்சியம் என்பது உழைக்கும் மக்களின் அதிகாரம். அதை வன்முறை மூலம் அடையலாம் என்று சொன்னால் அது கம்யூனிசம். அதையே ஜனநாயக வழிமுறைகள் மூலம் அடையலாம் என்று சொன்னால் அது சோஷலிசம். இதுதான் சுருக்கமான வரையறை.
1956 இல் கம்யூனிச கட்சியே தன்னை ஜனநாயக பாதைக்கு திருப்பிக் கொண்டுவிட்டது. இன்று இந்தியாவில் கம்யூனிசம் கிடையாது. இருப்பது சோஷலிசம் மட்டும்தான். அதை இன்று ஒரு பெரிய வட்டமாக எடுத்துக் கொண்டு இடதுசாரி அரசியல் என்று சொல்லலாம். ஒருபுறம் ராம்மனோகர் லோகியா ஒரு சோஷலிஸ்ட் என்றால் சற்று முற்றிய சோஷலிஸ்ட் என்று இ.எம்.எஸ்ஸை சொல்லலாம். சோஷலிசம் என்பது ஒரே சமயம் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸும் சொல்லிக்கொண்டிருந்த அரசியல். காந்தியம் என்னும் கொள்கை நேரு வழியாக சோஷலிசம் நோக்கிச் சென்றது. இந்தியாவில் எல்லாமே ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.
இவ்விரு தரப்புகளைத்தான் ஓஷோ முதலில் எதிர்த்தார். இவர்களுக்குள் பொதுவாக இருக்கும் முதல் விஷயம் ஒழுக்கவியல்தான். முக்கியமான மார்க்சிய சிந்தனையாளராகிய எனது நண்பர் ஒருவரிடம் கேட்டேன், ‘ஏன் காந்தியவாதிகளும் மார்க்சிஸ்டுகளும் ஒரேவகையான ஒழுக்க அளவுகோல்களை வைத்திருக்கிறார்கள்’ என்று. அவர் சொன்னார், ‘காந்தியவாதி எப்போதுமே ஆணுறை அணிந்திருப்பவன், அந்த ஆணுறையையே இரும்பிலே செய்து அணிந்திருப்பவன் மார்க்சியவாதி’.
இத்தகைய ஒழுக்கவாதத்தை ஓஷோவால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தொடர்ந்து அடிகொடுப்பது இத்தகைய ஒழுக்கவாதத்துக்குதான். தன்னை எப்போதும் விறைப்பாக வைத்துக்கொள்வதை அவர் எதிர்த்தார். இருபத்துநான்கு மணிநேரமும் எழுச்சியடைந்த குறிபோன்ற தன்மை மார்க்சியர்களிடம் உண்டு. அது இயற்கைக்கு மாறான ஒன்று, நெகிழ்வாக இரு என்று ஓஷோ திரும்பத்திரும்ப சொல்கிறார். கேரளாவில் ஒரு நகைச்சுவை உண்டு. இடதுசாரி ஒருவரை திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர் ஆறுமாதம் கழித்து தனது தோழியிடம் சொல்கிறார், ”நான் பலவிதமாக முயற்சி செய்து பார்த்தேன். அவருக்கு எதுவுமே ஆகவில்லை, என்ன செய்வது ?” என்று. அதற்கு தோழி, ”நீ அந்த நேரத்தில் இன்குலாப் சிந்தாபாத் என்று கோஷம்போடு. சரியாகிவிடும்”. உண்மையிலேயே சரியாகிவிட்டது. இத்தகைய இறுக்கநிலையைத்தான் ஓஷோ சுட்டிக்காட்டுகிறார். காந்தி மீதும் அவருடைய விமர்சனம் அதுவாகத்தான் இருந்தது.
தனக்குத்தானே வகுத்துக்கொண்ட ஒழுக்கம் ஒருவனின் வாழ்க்கை பார்வையையே அதற்கேற்றாற்போல மாற்றிவிடுகிறது. ஒழுக்கவாதி அனைத்தையும் ஒழுக்கத்தைக் கொண்டே புரிந்துகொள்ளுவான். ஒழுக்கம் அவனுடைய பார்வைக்கு எல்லையை வரையறைசெய்து, மேற்கொண்டு எதையுமே அறியமுடியாமல் ஆக்கிவிடுகிறது. ஆன்மிகம், தத்துவம், கலை உட்பட எதையுமே அவர்களால் தீவிரமாகச் அடையமுடியாது. அவை அவர்களின் ஒழுக்க எல்லைக்குள் வந்தால் மட்டுமே அவர்களால் உள்வாங்கமுடியும். நான் பாலியல் ஒழுக்கத்தை மட்டும் சொல்லவில்லை. அப்படி பல்வேறு சமூக ஒழுக்கங்கள் உள்ளன. அரசியல்சரிநிலை என்பதேகூட அப்படிப்பட்ட ஓர் ஒழுக்கம்தான்.
2. உலகியல் நோக்கு
ஒழுக்கம் சார்ந்த இறுக்கமான பார்வை என்பதை தாண்டி அவர்களை ஓஷோ அடிக்கக்கூடிய நுட்பமான இன்னொரு விஷயம் அவர்களிடம் இருக்கும் உலகியல் தன்மை (Materialism). நாம் ஓஷோவை ஒரு உலகியல்வாதி என்று நினைப்போம். ஏனென்றால் அவர் உலகியலை நிராகரித்து துறவை முன்வைக்கவில்லை. காமம் உட்பட எந்த உலகியல் இன்பத்தையும் ஓஷோ நிராகரிக்கவில்லை. ஓஷோ கருத்துமுதல்வாதி அல்ல. அவரை பொருள்முதல்வாதி என்றே சொல்லலாம். ஓஷோ இலட்சியவாதிகூட அல்ல. ஆனால் ஓஷோ உலகியல்வாதத்தை முன்வைத்தவர் அல்ல. உலகியலுக்கு அப்பாற்பட்ட சிலவற்றையே வாழ்க்கையின் மெய்யான இன்பம், நிறைவு என்று சொல்லிக்கொண்டிருந்தவர் அவர். உண்மையில் அவரால் எதிர்க்கப்பட்ட காந்திய, சோஷலிசத் தரப்புகள்தான் உலகியல்வாதிகள்.
இந்த உலகில் உள்ள சமூக அமைப்புகளையோ, பொருளியல் அமைப்புகளையோ மாற்றிவிட்டால் மனிதர்களை மாற்றிவிடலாம் என்று நினைப்பதுதான் பெரிய உலகியல்வாதம். காந்தியம், மார்க்சியம் இரண்டிலும் அது உண்டு. அவர்களிடம் இருக்கும் முழுமையான ‘இவ்வுலகத்தன்மை’யை ஓஷோ போன்ற ஒருவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. மொத்த கோவையையும் மாற்றிவிட்டால் ஜெயமோகனை மாற்றிவிட முடியாது. ஜெயமோகனின் பிரச்சனைகள் வேறு. மொத்த தமிழ்நாட்டையே மாற்றிவிட்டாலும் ஜெயமோகனை மாற்றிவிட முடியாது. இப்படிப்பட்ட ‘இவ்வுலகத்தன்மை’யை அடித்து நொறுக்குவதற்கு ஒரு குரல் இங்கு தேவையாய் இருந்தது. அதுதான் ஓஷோவின் குரல். இந்த வரியில் இருந்து ஓஷோ சொன்னவற்றை நீங்கள் நினைத்துப்பார்க்கவேண்டும்.
ஆனால் இது எந்த ஞானியும் சொல்லக்கூடிய ஒன்றுதான். ஜே.கிருஷ்ணமூர்த்தியும் அகப்புரட்சி வேண்டும் என்கிறார். 1970களில் உலகமே புரட்சி செய்துகொண்டிருந்த காலம். புரட்சி என்ற சொல்லே ஒரு தேய்ந்த நாணயமாக புழங்கிய கலாம். பல புரட்சிகள் நடைபெற்றன. அவற்றில் கியூபா என்ற பஞ்சாயத்து அளவிலான ஒரு நாட்டை தவிர எல்லா புரட்சிகளுமே தோல்வியடைந்தன. எல்லா புரட்சிகளுமே ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ரத்தபலி வாங்கின. அது ஒருவகை புரட்சி என்றால், நடிகர்கள் தங்களை புரட்சித்தலைவர்கள் என்று சொல்லிக்கொண்ட காலமும்கூட.
அப்போதுதான் புரட்சி என்பது வெளியே இல்லை, உள்ள இருக்கிறது என்று ஜே.கே. சொன்னார். ஓஷோவும் அதைத்தான் சொல்கிறார். அவர்கள் உள்மாற்றத்தை பற்றி பேசினார்கள். காந்தியத்திலும் மார்க்சியத்திலும் இருக்கும் அந்த உலகியல் தன்மையை சுட்டிக்காட்டுவதற்கு ஆன்மீகத் தரப்பில் இருந்து ஒரு குரல் வரவேண்டியிருந்தது. அது ஓஷோவின் குரல்.
3. பகுத்தறிவின் வன்முறை
பகுத்தறிவு என்பது ஓர் ஆயுதம், ஒரு அகத்தெளிவு- அதில் ஐயமில்லை. ஐரோப்பிய மறுமலர்ச்சி உலகுக்கு அளித்த கொடை அது. அறிவியல்நோக்கு, தர்க்கபூர்வ அணுகுமுறை, மனிதாபிமான பார்வை என அதை மூன்று கொள்கைகளாக வரையறை செய்யலாம். உலகை பல்வேறு மூடநம்பிக்கைகள், தேங்கிய ஆசாரங்களில் இருந்து அதுவே விடுவித்தது.
ஆனால் பகுத்தறிவின் வன்முறை என்று ஒன்று உள்ளது. நாம் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக கடவுளுக்கு சமானமாக இந்தப் பக்கம் பகுத்தறிவை வைத்திருக்கிறோம். பகுத்தறிவு என்பது எந்த வகையிலும் பகுத்தறிய தேவையில்லாத அறிவு என்ற ஒரு புரிதல் கடந்த பல ஆண்டுகளாக நமக்குண்டு. ‘பகுத்தறிவா பேசு, இல்லேன்னா வெட்டிருவேன்’ என்று கொதிக்கக்கூடிய மக்களாக நாம் மாறியிருக்கிறோம்.ஆம், பகுத்தறிவுக்கு ஒரு வன்முறை உண்டு.
இந்த காலகட்டத்தில் நீங்கள் பிறந்திருப்பதாலேயே நேற்றுவரை இருந்த அத்தனை பேரையும்விட நீங்கள் புத்திசாலி என்று நினைத்துக்கொள்வது ஒருவகையான பகுத்தறிவு சார்ந்த மூடத்தனம். உங்களுக்கு சில அறிதல்கள் ஏற்பட்டிருப்பதாலேயே, உங்கள் மண்டைக்குள் வந்துசேர்ந்த அறிவை வைத்துக்கொண்டு, இன்னமும் வந்து சேராத அனைத்தையும் பற்றியும் கருத்து சொல்லமுடியும் என்று நினைப்பது ஒருவகையான பகுத்தறிவு மடமை. அறிவின் எல்லையை தனக்குத்தானே வகுத்துக்கொள்ளலாமல் இருப்பது ஒருவகையான பகுத்தறிவுப் பேதமை . ஓஷோ இந்த விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்கிறார்.
ஓரிடத்தில் ஒரு சந்தை வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு ஆட்சியர் அங்கு வருகிறார். அவர் ஒரு நிபுணர். அந்த சந்தையை, வடிவேலு சொல்வதுபோல, அப்படியே தூக்கி அந்தப்பக்கம் வைத்தால் அது இன்னும் வளர்ச்சியடையும் என்கிறார். அங்கு சாலை வசதி, பேருந்து வசதி, வாகன நிறுத்துமிடம், மக்கள் எளிதாக அணுகக்கூடிய தன்மை போன்று பல காரணங்களை சொல்லி அந்த சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுகிறார். ஆனால் அவ்வாறு மாற்றப்பட்ட பின் சந்தை அப்படியே இல்லாமலாகிவிடுகிறது. ஏன் ? நாம் அறியும் சந்தை விதிகளுக்கு அப்பால் நம்மால் அறியமுடியாத எத்தனையோ விதிகள் உள்ளன. நம் அன்றாடப் பகுத்தறிவுக்கு அப்பாலும் எஞ்சியிருக்கக்கூடிய விஷயங்கள் உள்ளன. நான் கடவுளை பற்றியெல்லாம் சொல்லவில்லை. தர்க்கபூர்வமாகவே பல்வேறு விஷயங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் அந்த பகுத்தறிவு புறக்கணித்து விடுகிறது. இந்த பகுத்தறிவின் வன்முறையைத்தான் ஓஷோ சுட்டிக்காட்டுகிறார்.
1971 வரைக்கும் காடுகளை வெட்டி அழித்து விறகாக்கி விற்பதற்கான உரிமையை அரசாங்கமே கூவிக்கூவி ஏலம்போட்டு விற்றுக்கொண்டிருந்தது. அதை எங்களூரில் ‘கூப்பு கான்ட்ராக்ட்’ என்பார்கள். நான் சிறுவனாக இருந்தபோது கோடைகால விடுமுறையில் நண்பர்களுடன் அந்த வேலைக்கு சென்றிருக்கிறேன். காடுகளை தீவைத்து அழிப்போம். எஞ்சிய பெரிய மரங்களை வெட்டுவோம். 1971 வரைக்கும் காடு ஒரு சொத்தாக தெரியவில்லை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்ற கருதுகோள் அன்று இல்லை. சமீபத்தில், 1960களில் வந்த விளம்பரங்களை ஒரு நண்பர் போட்டிருந்தார். ஒரு கைக்குழந்தையின் படத்தை போட்டு I will save my darling from flies என்ற வாசகத்துடன் கீழே DDT என்று இருந்தது. இன்று உலகம் உருவாக்கிய மாபெரும் நச்சுகளில் ஒன்று என்று சொல்லப்படும் ஒரு பூச்சிக்கொல்லியின் விளம்பரம் அது. அந்த காலத்திலும் பகுத்தறிவு இருக்கத்தான் செய்தது. அந்தக் காலத் தர்க்க எல்லைக்குள் அது இருந்தது.
எனவே அறிவின் எல்லை என்று ஒன்று உள்ளது. இந்த மூர்க்கமான பகுத்தறிவு என்பது ஒருவகையான அழிவுசக்தி. அதற்கப்பால் நகராமல் ஆன்மிகம், தத்துவம், அழகியல் ஆகியவற்றை அடையவே முடியாது.அதை சுட்டிக்காட்டி, அதற்கப்பால் எப்போதும் ஒன்று இருக்கிறது என்பதை ஒருவர் சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்திருக்கிறார். அவர்தான் ஓஷோ.
4. சராசரிகளின் வன்முறை
இதற்கப்பால் இன்னொன்றும் உள்ளது. அது சராசரிகளின் வன்முறை பற்றியது. இதை இப்போது சொன்னாலும் எந்தவொரு மார்க்சியரும் எழுந்து நின்று ‘அய்யய்யோ ஃபாசிசம்’ என்பார். ஃபாசிசம் என்பது ஒரு நல்ல வசைச்சொல்லாக இன்று மாறியிருக்கிறது. பத்துரூபாய் கடன் கேட்டு தராதவர்களைக்கூட அப்படிச் சொல்வது நம் வழக்கம். மார்க்சியமோ காந்தியமோ மீண்டும் மீண்டும் சராசரிகளை பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றன. அவர்களுடைய நலன், அவர்களுக்கு புரியக்கூடிய அரசியல், அவர்களின் அதிகாரம் என்பதை பற்றியே அவை கவலைகொள்கின்றன. மார்க்ஸியர்களைப் பொறுத்தவரை சராசரி மனிதன் என்பவன் தெய்வம்போன்றவன். வரலாறு, கொள்கை, அழகியல் எல்லாவற்றையும் அவனுக்கே படையலிடவேண்டும்.
ஆனால் சராசரிகளுக்கும் மேலாக ஒருவன் இருக்கிறானல்லவா ? அவன்தான் படைப்பாளன், கட்டமைப்பாளன், முன்னோடி. இலக்கியம், கலை, சிந்தனை, புதிய சமூகஅமைப்பு எல்லாவற்றையும் உருவாக்குபவன் அவன்தான். அவனைப்பற்றி எந்த அரசியல் தரப்புக்கும் அக்கறை இல்லை. ஏனென்றால் அவன் எதிர்காலத்திற்கு உரியவன். சமகால அதிகாரத்துக்கு எதிரானவன். இன்று அவனுக்கு பெரிய எண்ணிக்கை பலமும் இல்லை. இன்றைய ஜனநாயகத்தில் சராசரிகளை புகழ்ந்து படைப்பாளியையும் முன்னோடியையும் இகழ்வது ஒரு வழக்கமாக உள்ளது. சராசரிகள் கூடி சிந்தனையாளனையும் கலைஞனையும் மக்கள்பணியாளனையும் தனிமைப்படுத்தி தாக்குவதும்கூட இயல்பானதாகக் கொள்ளப்படுகிறது.
ஓஷோ கடுமையாகவும் நக்கலாகவும் சொல்லும் ஒன்று, தான் சராசரிகளை விரும்பவில்லை என்பதே. உழைக்கும் மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டால், ‘உழையுங்கள், சாப்பிடுங்கள், வேறென்ன செய்யமுடியும் நீங்கள்?’ என்கிறார். அசாதாரணமான மனிதர்களுடன் மட்டும்தான் தான் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார். அவன் கலைஞனாக இருக்கலாம், கொலைகாரனாகக்கூட இருக்கலாம். ஆனால் அவன் சராசரியல்லாதவன். அவன்தான் எனக்கு வேண்டும் என்கிறார். இதை நீங்கள் எளிதில் ஃபாசிசம் என்பீர்கள். ஆனால் மனித வரலாறு என்பது அவ்வாறான சராசரிக்கு அப்பாற்பட்ட மனிதர்களால்தான் இயக்கப்படுகிறது. அவனுக்காக ஒருவன் பேசவேண்டாமா ? நீதிமன்றத்தில் அத்தனைபேரும் ஒரே ஆளுக்காகவா பேசுகிறார்கள். எதிர்தரப்புக்காகவும் சிலர் பேசுவார்கள் அல்லவா ? ஆகவேதான் சராசரிக்கு எதிரான, சராசரிகளின் வன்முறைக்கு எதிரான குரல் தேவைப்படுகிறது. மார்க்சுக்கும் காந்திக்கும் எதிராக ஓஷோ முன்வைக்ககும் குரல் அதுதான். அது அசாதாரணமான தனிமனிதர்களுக்கானது. அதுதான் அவரது சிறப்பு, அவரது தொடக்கம்.
அக்காலகட்டத்தில் ஓஷோ பேசவரும்போது மிகக்குறைவான பார்வையாளர்களே இருந்திருக்கிறார்கள். ஓஷோ அவர்களிடம் கட்டணம் செலுத்தச் சொல்கிறார். பெரிய கட்டணம் அது. உரைக்குக் கட்டணம் என்பது அன்று ஓர் ஆடம்பரம். ஓஷோ ‘நீ இதை விலைகொடுத்து வாங்கமாட்டாய் என்றால் இதை நீ மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்’ என்கிறார். அக்காலத்தில் ஒரு கேள்வி எழுந்தது, ‘நீங்கள் ஏன் இலவசமாக உரைகளை ஆற்றக்கூடாது’ என்று. அதற்கு ஓஷோ, ‘நான் விந்துவை பீய்ச்சியடித்து செல்வதற்கு தவளை அல்ல’ என்று பதிலளித்தார். பெண் தவளைகள் இட்ட முட்டைகளில் ஆண் தவளை தனது விந்தை பீய்ச்சியடித்து செல்லும். பத்துலட்சத்தில் ஒன்று முளைத்து வெளிவரும். மற்றவை ஏதேனும் உயிரினத்தால் உண்ணப்பட்டுவிடும். தனக்காக பணம் கொடுத்து வந்து உட்காரக் கூடியவர்களிடம்தான் அவர் பேசுகிறார். அப்படிப்பட்ட ஒரு பேச்சாளராகவே அவர் உருவாகி வந்தார்
(மேலும்)
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
