அஞ்சலி, எம்.கே.சானு

எம்.கே.சானு இன்னும் மூன்று ஆண்டுகளில் நூறு அகவையைத் தொட்டிருப்பார். 2018 ல் அவருடைய 90 ஆவது அகவை நிறைவை எர்ணாகுளத்தில் கொண்டாடவேண்டும் என்று திரைக்கதை எழுத்தாளர் ஜான் பால் முயற்சி எடுத்தார். மூன்று முறை நாள் குறிக்கப்பட்டாலும் சானு அவர்களின் உடல்நிலைக்குறைவால் அந்நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டது. 2022 ல் ஜான் பால் மறைந்தார்.

போளச்சன் என அழைக்கப்பட்ட ஜான் பால் எனக்கு மிக அணுக்கமானவராக இருந்தார்.நான் சந்திக்க நேர்ந்த மனிதர்களிலேயே இனியவர், ஒரு வகையில் தெய்வீகமானவர். அவர் கடைசிக்காலத்தில் சானு மாஸ்டருக்கு அணுக்கமானவராக திகழ்ந்தார். போளச்சன் அப்படி பலருக்கு அணுக்கமானவர். பலநூறு பேருக்கு. சானு மாஸ்டரிடம் ஒரு முறை ஃபோனை கொடுத்து என்னை பேசச்சொன்னார். நான் ஒரு சில சொற்கள் பேசினேன்.

ஜான் பாலிடம் என்னை அவ்விழாவில் பேசவைக்கவேண்டும் என விரும்பிச் சொன்னவர் எம்.கே.சானு மாஸ்டர். எனக்கு நெருக்கமாக இருந்த நால்வர் அவருக்கும் அணுக்கமானவர்கள். அந்நால்வருமே என் ஆசிரியர்கள். சானு மாஸ்டர் குரு நித்ய சைதன்ய யதியின் தோழர். எம்.கோவிந்தன், பி.கே.பாலகிருஷ்ணன், ஐயப்பப் பணிக்கர் ஆகியோருக்கும் அணுக்க நண்பர். நித்ய சைதன்ய யதிக்கு சானு மாஸ்டர் எழுதிய கடிதங்களை நான் படித்திருக்கிறேன்.

எம். கே. சானு 17 அக்டோபர் 1928ல் பழைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் ஆலப்புழையிலுள்ள தும்போளி என்னும் ஊரில் மிகப்பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் இளமையிலேயே தந்தை மறைந்தார். அவருடைய வணிகம் பங்குதாரர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடும் வறுமை வந்து சேர்ந்தது. பலருடைய உதவியால் படிப்பை தொடர்ந்தார். மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

எம்.கே.சானு நான்கு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கல்லூரி ஆசிரியராக ஆனார். 1958ல் பள்ளி மாணவர்களுக்காக எழுதிய ’ஐந்து அறிவியல் மேதைகள்’ அவருடைய முதல் நூல். 1960ல் தன் முதல் இலக்கிய விமர்சன நூலை எழுதினார், ’காற்றும் வெளிச்சமும்’ என்னும் அந்நூல் அன்று பேசப்பட்ட ஒன்று.

எம்.கே.சானு மாஸ்டர் கேரளத்தின் இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டவர். கேரள முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் (புரோகமன கலா சாகித்ய சங்கம்) தலைவராக 1986 முதல் பணியாற்றினார். 1987ல் எர்ணாகுளம் சட்டச்சபை தொகுதியில் இடதுசாரி வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். இன்று (2 ஆகஸ்ட் 2025) காலையில் தன் 97 ஆவது அகவையில் மறைந்தார்.

நான் 1987 ல் ஐயப்பப் பணிக்கரின் இல்லத்தில் சானு மாஸ்டரைச் சந்தித்தேன். ஒரு சில சொற்கள் அறிமுகம். அவர்கள் பேசிக்கொண்டனர், நான் கேட்டுக்கொண்டு நின்றேன். 1988ல் பி.கே.பாலகிருஷ்ணன் இல்லத்தில் அடுத்த சந்திப்பு. அப்போதும் மரியாதையான விலக்கம்தான்.

என் ஆசிரியர்கள் அனைவருமே சானு மாஸ்டர் பற்றி பேசிக்கேட்டிருக்கிறேன். அவர் இலக்கியவிமர்சனம்,இலக்கிய ஆய்வுகள் என பல எழுதியிருந்தபோதிலும் அவருடைய முதன்மை நூல்களாகக் கருதப்படுபவை அவர் எழுதிய வாழ்க்கை வரலாறுகள்தான் நாராரயண குரு, சகோதரன் ஐயப்பன், சங்கம்புழ கிருஷ்ணபிள்ளை, எம்.கோவிந்தன்வைக்கம் முகமது பஷீர் ஆகியோர் பற்றி அவர் எழுதிய வாழ்க்கை வரலாறுகள் இன்று செவ்வியல்படைப்புகளாகக் கருதப்படுகின்றன.

நான் எம்.கே.சானு மாஸ்டரின் நான்கு மேடையுரைகளைக் கேட்டிருக்கிறேன். நான்குமே 1985 முதல் 1988 வரை கண்ணனூரில். கேரளம் கண்ட மாபெரும் மேடைப்பேச்சாளர்களில் ஒருவர் அவர். தமிழகத்தின் மேடைப்பேச்சாளர்களில் எவருடனும் உடனே ஒப்பிட்டுக்கொள்ள வேண்டாம். அவருடையது மேடையில் ’நிகழ்த்தப்படும்’ ஒன்று அல்ல. அவர் மேடையில் சிந்திப்பவர். மேடையில் ஒரு பேரறிஞன் தன் சிந்தனையின்மேல் ஏறி மேலே மேலே சென்றுகொண்டே இருப்பதே மாபெரும் சொற்பொழிவு.

கேரளத்தில் சானு மாஸ்டரின் தலைமுறையின்  முதன்மைச் சொற்பொழிவாளர்கள் மூவரில் எம்.என்.விஜயன், சுகுமார் அழிக்கோடு ஆகியோர் எஞ்சியவர்கள். மூவரின் உரைகளுமே மகத்தான அறிவுநிகழ்வுகள். சரியான மேடையுரை என்பது ஏதோ ஒரு கணத்தில் அந்த உரையை நாமே நிகழ்த்துவதுபோல உணரச்செய்வது என நான் அறிந்தது அவர்களிடம்தான். எம்.என்.விஜயனின்  உரை மிகமெல்ல ஒலிப்பது. மிக நிதானமான குரல். ஒவ்வொரு சொற்றொடரும் கவித்துவமானவை, முன்பு இல்லாமல் அப்போது உருவாகி வருபவை. ஒரு சொற்றொடர்கூட வீணற்ற அந்த உரை ஒருவகையான நினைவோட்டமும்கூட. படிமங்களாலானது. விஜயனின் பாணியில்தான் இன்று கல்பற்றா நாராயணன் உரையாற்றுகிறார்.

அழிகோடின் உரை ஓர் அருவி. அணிச்சொற்றொடர்கள், கதைகள், மேற்கோள்கள், கவிதைகள், நையாண்டிகள் என பெருகிச்செல்லும் அந்த உரை ஒருபோதும் திரும்ப நிகழ்வதில்லை. அவருடைய நினைவுத்தொகுதியில் இருந்து ஒட்டுமொத்தமாக அவை அவையினர் முன் பொழிகின்றன.

எம்.கே.சானுவின் உரை மிகச்செறிவான கட்டமைப்பு கொண்டது. அவர் எழுதிய ஒரு சிறு நூலை நினைவுபிசகாமல் திரும்பச் சொல்வதுபோல தோன்றும். மொத்த உரையின் மையக்கருத்து பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் படிப்படியாக நிறைவடைந்து ஒன்றையொன்று நிரப்புபவை. நான் சானு மாஸ்டரின் உரையைத்தான் எனக்கான முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் என் இயல்புக்கு அது ஒத்துவருகிறது. அத்துடன் நான் நினைவுகூர்கையில் சானு மாஸ்டரின் உரைகள்தான் தெளிவாகவும் முழுமையாகவும் மீண்டு வருகின்றன.

எனக்கு சானு மாஸ்டரை நன்றாகத் தெரியுமென்றாலும் அவருக்கு என்னைத் தெரிந்தது ஜான் பால் 2014 ல் ஏற்பாடு செய்திருந்த பி.கே.பாலகிருஷ்ணன் நினைவுப் பேருரையை ஆற்றும் பொருட்டு நான் எர்ணாகுளம் சென்றிருந்தபோது. சங்ஙம்புழா பார்க்கில் நிகழ்ந்த அவ்விழாவுக்கு சானு மாஸ்டர் பார்வையாளராக வந்தார். அவர் வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.  அந்த அரங்கில் இருந்த அறுபது கடந்த பெரும்பாலானவர்களுக்கு அவர் ஆசிரியர், எஞ்சிய பலருக்கு அவர் ஆசிரியர்களின் ஆசிரியர். ஒவ்வொருவராக கால்தொட்டு வணங்கிக் கொண்டிருந்தார்கள்.

நான் முதலில் பேசினேன். அவர் அமர்ந்திருந்த மேடையில் பேசுவதென்பது எளிய விஷயமாக இருக்கவில்லை. ஆனால் நான் என் தன்னம்பிக்கையை ஒரு தவம் என ஈட்டிக்கொண்டவன், நித்ய சைதன்ய யதியின் மாணவன் என்னும் வகையில். என் பேச்சு சிறப்பான ஒன்று என அனைவரும் பாராட்டினர். எனக்கும் நிறைவளித்த ஒன்று அது.

அடுத்து சானு பேசினார். அவர் காரிலிருந்து இறங்கும்போது தள்ளாடிக் கொண்டிருந்தார். இருவர் கைத்தாங்கலாகத்தான் மேடைக்குக் கொண்டுவந்தார்கள். அமர்ந்திருக்கையிலும் தலையும் கைகளும் ஆடிக்கொண்டிருந்தன. அவரை ஒருவர் தூக்கித்தான் மைக் அருகே கொண்டுவந்தனர். அவர் மேடையில் நின்றதும் சட்டென்று உடல் நிமிர்ந்தது. தலை உறுதிகொண்டது. “தியாகங்களால்தான் கருத்துக்கள் நிலைகொள்கின்றன, தர்க்கங்களால் அல்ல” என்ற முதல் வரி கணீரென ஒலித்தது. அங்கே இன்னொருவர் வந்து நின்று பேசுவதுபோல. காலாதீதமான ஒருவர். உடலெனும் பருப்பொருளுக்கு அப்பாற்பட்டவர். அந்த மெய்சிலிர்ப்பை பலமுறை நண்பர்களிடையே சொல்லியிருக்கிறேன்.

தெளிவாக வரையப்பட்ட வரைபடத்தின் மேல் நுணுக்கமாக, முழுமையாக ஒரு கட்டிடம் எழுவதுபோல சொற்பொழிவு நிகழ்ந்து முடிந்தது. ஒரு சொல் வீணாக இருக்கவில்லை. கிட்டத்தட்ட காற்றுவெளியில் விரிந்திருந்த ஒரு நூலை துல்லியமான உச்சரிப்புடன் வாசிப்பது போலிருந்தது. மூச்சின் ஒலிகூட இல்லை. சொல்லுக்காக தயங்கவில்லை. பேச்சாளர்கள் எவரும் தவிர்க்கமுடியாத நிரப்புச் சொற்கள்கூட இல்லை.

பேச்சு முடிந்து மீண்டும் கைத்தாங்கலாக வந்து அமர்ந்தார். விழா முடிந்ததும் நான் சென்று கால்தொட்டு வணங்கினேன். என் தலைமேல் கைவைத்து வாழ்த்தினார். “நல்ல பேச்சு” என்றபின் அருகே நின்ற மூத்த இதழாளரிடம் “இவன் பேச்சு நல்லது. அதை பெரிதாகக் கொடுத்தால்போதும்” என்று ஆணையிட்டார். அவ்வாறுதான் நாளிதழ்களில் என் பேச்சு முதன்மையாக வெளிவந்தது.

அவருடைய இயல்பிலேயே அந்த ஆணையிடும் நிமிர்வு இருந்தது. அவர் வாழ்நாள் முழுக்க ஆசிரியர் என்பதனால் அறிவதிகாரமாகவே அதை அடைந்திருந்தார். ஒருமுறை கேரளத்தில் ஒரு கல்லூரியின் ஆசிரியர் பணிக்கான நேர்முகம் நடைபெற்றது. நாராயணகுருவின் மரபில் வந்தவர்களின் நிறுவனம் அது. அன்று தற்செயலாக அங்கே வந்திருந்த சானு அவ்வறைக்குள் வந்து அமர்ந்தார்.அவர்கள் ஏற்கனவே அவர்களின் சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு வேலையை உறுதி செய்திருந்தனர். நேர்முகம் கண் துடைப்புதான். அனைவருக்கும் அது தெரியும்.

நேர்முகத்துக்கு நானறிந்த ஒரு பெண் சென்றிருந்தார். அவர் குரு நித்யாவின் ஒரு நூலை மொழியாக்கம் செய்தவர். தன் தகுதிச்சான்றிதழுடன் அவர் அந்நூலையும் எடுத்து வைத்தார். சானு அந்த நூலை எடுத்துப் புரட்டினார். “இந்த பெண் போதும்…இவளை நியமித்துவிடுங்கள்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். வேறு வழியே இல்லை, அந்தப்பெண் அங்கே ஆசிரியராக ஆனார்.

எம்.கே.சானு பற்றி பி.கே. பாலகிருஷ்ணன் ஒரு நிகழ்வைச் சொன்னார். சானு இருந்த ஒரு நட்புக்கூடலில் ஒரு பேராசிரியர் நாராயணகுரு பற்றி பிழையான தகவல்களுடன் அவதூறுகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். சாதி வெறிதான் அடிப்படை. ஆனால் அவர் ஒரு வரலாற்றாசிரியர், ஆகவே மிகையான நிமிர்வும் தன்னம்பிக்கையும் இருந்தது. சானு புன்னகையுடன், ஒரு சிறு எதிர்ப்புகூட சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார். அன்புடன் வணங்கி விடைபெற்று எழுந்து சென்றார்.

அவர் சென்றபின் பி.கே.பாலகிருஷ்ணன் அந்தப் பேராசிரியரிடம் சொன்னார், ’நீங்கள் சொன்ன எல்லாவற்றுக்கும் திட்டவட்டமான ஆதாரங்களுடன் பெரிய நூலையே சானு எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு சொல்கூட உங்களுக்கு அவர் பதில் சொல்லவில்லை. எண்ணிப்பாருங்கள், ஒரு சொல் மறுப்பு சொல்லக்கூட அவர் உங்களைப் பொருட்படுத்தவில்லை என்றால் என்ன பொருள்?”

அந்தப் பேராசிரியர் கடுமையாகப் புண்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து பாலகிருஷ்ணனிடம் வந்து சொன்னார். “என்னால் தூங்கவே முடியவில்லை… அவர் என்னை வசைபாடியிருந்தால்கூட பரவாயில்லை. ஒரு குழந்தையின் பேச்சைக் கேட்பதுபோல என் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார். அவர் முகம் நினைவில் இருக்கிறது. அவர் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு பேசாமல் இருக்கவில்லை, அவர் என்னை உண்மையாகவே பொருட்படுத்தவில்லை”

மேலும் ஒரு மாதம் கழித்து அதே பேராசிரியர் பி.கே.பாலகிருஷ்ணன் முன்னிலையில் சானு மாஸ்டரைச் சந்தித்தார். சானுவுக்கு அந்தப் பேராசிரியரின் முகம் மட்டும் நினைவில் இருந்தது. அவர் பேசியவை நினைவில் இல்லை. பேராசிரியரே அவற்றை நினைவுபடுத்த முயன்றார், அப்போதும் சானு நினைவுகூரவில்லை. மிக விரிவாக தான் பேசியதை பேராசிரியரே சானுவிடம் சொன்னார். “என்னை நீங்கள் பொருட்படுத்தவில்லையா?” என்றார்.

“அதெல்லாம் இல்லை, நீங்கள் சொன்னது உங்களுக்குத் தெரிந்தது. அறிவு என்பதும் ஓர் எல்லைதான். நீங்கள் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வாய்ப்புண்டே” என்று சானு மென்மையாகச் சொன்னார். பேராசிரியர் சீற்றம் ,ஏமாற்றம் ஆகியவற்றால் கண்கள் கலங்கும் அளவுக்குப் போய்விட்டார் என்றார் பாலகிருஷ்ணன். (ஆனால் அவர் மனம் மாறவெல்லாம் இல்லை.)

சானு மாஸ்டரின் குணம் அத்தகையது. எந்நிலையிலும் மாறாத நிலைகொண்ட ஆழம். புன்னகை. மெல்லிய உடலுடன் அவர் நடந்து வருகையில் மிகமிகமிக எடைகொண்டவை அக்காலடிகள் என்று தோன்றும். எத்தனையோ மாணவர்களின் எண்ண்ங்களில் பதிந்த காலடிகள். என்னுடைய சிந்தனையிலும்தான்.

அஞ்சலி ஜான் பால்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 02, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.