அந்தத் தூக்கம்
ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நான் காந்தியின் சத்தியசோதனை நூலை வாசித்தேன். முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நடத்திய ஒரு பேச்சுப்போட்டியில் வென்று பரிசாக அதைப் பெற்றேன். பெரும் கொந்தளிப்புடன் நான் வாசித்த அந்நூல் இன்று வரை என்னை மிகத்தீவிரமாகப் பாதித்திருப்பதை நான் வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் உணர்ந்துகொண்டே இருக்கிறேன்.
அவ்வாறு நான் காந்தியிடமிருந்து பெற்றுக்கொண்டவற்றில் ஒன்று, என் உடலை தொடர்ச்சியாக அவதானிப்பது. உடல்நலமே நம் வாழ்க்கையின் எல்லா செயல்களுக்கும் அடிப்படையானது என்பது காந்தி திரும்பத் திரும்பச் சொல்வது. சாவை அல்ல, படுத்துவிடுவதை அல்ல, உடல்நிலை அளிக்கும் சோர்வாலோ சலிப்பாலோ நம் செயல்களை முழுவீச்சுடன் செய்து நிறைவடைய முடியாமல் ஆவதையே காந்தி அஞ்சுகிறார். எனக்கு அந்த அச்சத்தை அவர் அளித்தார்.
ஆகவே என் உணவு, தூக்கம், கழிவகற்றல் ஆகியவற்றைப் பற்றிய தொடர்கவனமும் அவை சார்ந்த அவதானிப்புகளும் எனக்கு உண்டு. அவை சார்ந்த மருத்துவ- அறிவியல் தகவல்களை தெரிந்துகொள்வேன். ஆனால் பலர் இன்று செய்வதுபோல பதற்றத்தை வளர்த்துக்கொள்வதற்காக உடல்நலச் செய்திகளை மிகையான ஆர்வத்துடன் பயில்வதில்லை. (பலர் என்று இங்கே குறிப்பிடுவது அருண்மொழியை அல்ல)
உண்மையில் உடல்நலச் செய்திகளை தெரிந்துகொள்வது எளிது. கடைப்பிடிப்பதே கடினம். நான் எனக்கான நெறிகளை முழுமையாகவே கடைப்பிடிக்க முயல்வேன். ஆகவே என் எடையை பெரும்பாலும் நிலையாக வைத்திருக்கிறேன். உணவுப்பழக்கங்களில் சஞ்சலங்கள் இல்லை. தூக்கம் உட்பட எல்லா ஒழுங்குகளும் எனக்கு முக்கியம். என் மூளை எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதே உடல்நலம் சார்ந்த என்னுடைய அக்கறைகள் அனைத்துக்கும் அடிப்படை.
எடையைப் போலவே இப்போது தூக்கத்தையும் குறிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் அதைப்பற்றி பெரிதாகக் கவலைப்பட்டதில்லை. இயற்கையான தூக்கம் எனக்கு எப்போதும் உண்டு, ஒருநாளுக்கு எட்டு மணிநேரம். காரணம், இரவில் மிதமான உணவும் சீரான உடற்பயிற்சியும். ஆனால் இப்போது தூக்கம் சிக்கலாகும் அகவை. இந்த காலகட்டத்தில்தான் பலர் தூக்கமிழப்புக்கு ஆளாகிறார்கள். மாத்திரைகள் சாப்பிடத் தொடங்குகிறார்கள். பெரும்பாலானவர்கள் ஏதேனும் ஒரு மாத்திரை எடுத்துக்கொள்கிறார்கள் – ரத்த அழுத்தத்திற்காவது. கணிசமானவர்கள் குடிக்கிறார்கள்.
என் தூக்கத்தில் சிக்கல் வருவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆகவே சென்ற சில மாதங்களாக தூக்கத்தின் வழிமுறைகளை மாற்றிக்கொண்டிருக்கிறேன். இரவு ஒன்பதரை மணிக்கே படுக்கை. பலசமயம் அரைமணிநேரமாவது படுக்கையில் இருக்க நேர்கிறது. முன்பு அப்படி இல்லை. படுத்த ஐந்தாம் நிமிடமே தூங்கிவிடுவேன். இப்போது மனமும் உடலும் அடங்கவேண்டியிருக்கிறது. விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து நடை. பகலில் பதினைந்து நிமிடம் மட்டும் மதியத்தூக்கம். இப்போதெல்லாம் ஏழுமணிநேரம்தான் தூக்கம், அதில் ஆறுமணிநேரம்தான் ஆழ்ந்த தூக்கம்.
காவியம் என் தூக்கத்தின் எல்லா ஒழுங்குகளையும் சிதறடித்துவிட்டது. கடும் முயற்சியால் தூக்கத்தை மீண்டும் சீரமைத்துக்கொண்டேன். உடனே ஐரோப்பியப் பயணம். அது ஒரு பதற்றத்தை அளித்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால் ஒன்று கவனிக்கிறேன், பயணங்களில் நல்ல செறிவான தூக்கம் அமைகிறது. காரணம் காலைமுதல் தொடர்ந்து அலைந்துகொண்டே இருப்பது. மூளைக்குள்ளும் தகவல்கள் சென்றுகொண்டே இருப்பது. நம் உடலும் உள்ளமும் தூக்கத்துக்காக ஏங்குகின்றன. இந்த ஐரோப்பியப் பயணத்தில் படுத்ததுமே தூக்கம்தான். விழித்ததுமே கிளம்பவும் வேண்டியிருந்தது.
ஆனால் வெள்ளிமலை போன்ற மலைப்பகுதிகளில் மட்டும் ஒன்பது மணிநேரம் வரை தூங்கிவிடுகிறேன். ஏனென்றால் அங்கே எப்படியோ பகலிலேயே உள்ளம் முழுமையாக அடங்கிவிட்டிருக்கிறது. அங்கே பொதுவாக ஆக்ஸிஜனும் கூடுதல், ஒரு சதவீதம் வரை, அதுவே மிகப்பெரிய அளவு என்கிறார்கள். அங்கே காடு இருக்கிறது, வண்டிகள் மிகமிகக்குறைவாகவே வருகின்றன. ஆக்ஸிஜனை அதிகமாக எடுத்துக்கொள்பவை வண்டிகள். ஒவ்வொன்றும் ஒரு சூளை. சென்னை போன்ற நகரில் எத்தனை லட்சம் சூளைகள் எரிந்துகொண்டிருக்கின்றன!
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
