இந்து முல்லாக்களும் வைரமுத்துவும்
ஶ்ரீரங்கம் ஜீயர் ஒருவர் வைரமுத்துவை வெளியே நடமாட அனுமதிக்கக்கூடாது என அறிவித்திருக்கிறார். (ராமரை இழிவாகப் பேசிய வைரமுத்துவை நடமாட விடக்கூடாது: மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை)இவர் இந்துமதத்தின் தலைவர் அல்ல. இந்து நம்பிக்கையாளர்களின் பொதுவான பிரதிநிதி கூட அல்ல.
தமிழ்நாட்டில் வைணவப்பிராமணர்கள் (ஐயங்கார்கள்) ஒரு மிகச்சிறுபான்மை. அவர்களில் வடகலை, தென்கலை என இரு பிரிவு, அவற்றுக்குள் பல பிரிவுகள். அவற்றில் ஒரு பிரிவின் ஜீயர் இவர். ஒரு சாதிக்குறுங்குழு தலைவர், அவ்வளவுதான். இவருடைய மடத்துக்கு இவருடைய சாதியினர் தவிர வேறு எவர் சென்றாலும் இழிவுபடவேண்டியிருக்கும்.
அதிகம்போனால் ஆயிரம்பேர் இவருடைய மடத்தில் நம்பிக்கையாளர்களாக இருக்கலாம். இவர் இந்த வன்முறைப்பேச்சை எழுப்பியிருக்கிறார். இதற்குப் பின்னாலுள்ள எண்ணம் என்ன? மத்தியில் தங்களுக்குச் சாதகமான ஓர் அரசு உள்ளது என்னும் எண்ணமே முதலில். தமிழகத்தில் ஓர் அரசியல்கட்சி தனக்கு உதவிக்கு வரும் என்னும் நம்பிக்கை அடுத்து. அந்த அரசியல்கட்சி உருவாக்கும் பிரச்சாரத்துடன் இணைந்து தன் கீழ்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
‘இந்து முல்லாக்கள் உருவாக அனுமதிக்கலாகாது’ என நான் திரும்பத் திரும்ப பல ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஏனென்றால் வட இந்தியாவில் அவர்கள் உருவாகி ஆற்றல்பெற்றுள்ளனர். கேரளத்திலும் கர்நாடகத்திலும் அவர்கள் ஓங்கியுள்ளனர். தமிழகத்திலும் அவர்கள் நிலைகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ஜீயர் ஒரு வெறிகொண்ட இந்துப் பழமைவாதியின் குரலாக ஒலிக்கிறார். பத்தாண்டுகளுக்கு முன்புகூட இவர் இப்படிப் பேசியிருக்க மாட்டார். பேசினால் அதற்கு இந்த இடம் அமைந்திருக்காது.
இந்த இந்துமுல்லாக்கள் சுதந்திர சிந்தனைக்கு எதிரானவர்கள். முன்னோக்கிய எந்த வளர்ச்சிக்கும் எதிரானவர்கள். இவர்களை மீறித்தான் நாம் இன்று அடைந்துள்ள சமூகசுதந்திரம், பொருளியல் வளர்ச்சி, ஆன்மிக மலர்ச்சி ஆகியவற்றை அடைந்திருக்கிறோம். இவர்கள் மீண்டும் நம்மை இருளுக்குள் மூழ்கடிக்க விரும்புகிறார்கள்.
இவர்களைப் போன்றவர்களுக்கு எளிமையான மதப்பற்றால், அரசியல்நோக்கால் ஆதரவளித்த நாடுகள் அதன் மிகப்பெரிய விலையை அளித்துக்கொண்டிருக்கின்றன. அவை மதப்போரால் அழிந்து இடிபாடுகளாகக் கிடக்கின்றன. நாம் இப்போதுதான் மூன்றுவேளைச் சோறு சாப்பிட ஆரம்பித்துள்ளோம். இந்த வெறியர்களிடம் ஏதேனும் அதிகாரம் அளிக்கப்பட்டால் நம்மை அந்நிலைக்குக் கொண்டுசென்றுவிடுவார்கள்.
ஏனென்றால் இவர்களால் வெறியை மட்டுமே பரப்ப முடியும். இன்று வைரமுத்து மீது வன்முறையை ஏவும் இவர்கள் ஏதேனும் அதிகாரம் கிடைத்தால் அடுத்து வைணவத்திலேயே தங்கள் எதிர்க்குழுமேலும் அதே வன்முறையை ஏவுவார்கள். இன்று கீழ்த்தரமாக ஒருவரை ஒருவர் வசைபாடிக்கொள்ளும் இவர்கள் ஒருவரை ஒருவர் அழித்து நம்மையும் அழிப்பார்கள். எண்ணிப்பாருங்கள் இந்த வெறிக்கும்பல் நாளை இதே கொலைவெறியுடன் சைவர்களை தாக்கமாட்டார்களா? இங்கே சைவமும் வைணவமும் ஒன்றையொன்று மறுத்தும் விவாதித்தும்தானே வளர்ந்தன?
இந்த வெறி அடிப்படையில் இந்து மெய்ஞானத்துக்கு எதிரானது. இந்து ஞானம் மேல் நம்பிக்கை கொண்ட எவரும் இந்த வெறியை அருவருத்து ஒதுக்கியாகவேண்டும். இந்து மெய்யியல் என்பது எந்நிலையிலும் ஒற்றைப்படையான நம்பிக்கையாக, ஆசாரமாக இருந்ததில்லை. அது வெவ்வேறு கொள்கைகள் ஒன்றுடனொன்று முரண்பட்டு விவாதிப்பதன் வழியாக வளர்ந்தது. அந்த விவாதம் இந்தவகையான வெறியர்களால் அழிக்கப்படும் என்றால் இந்து மதம் அழியும். உறுதியான இந்துவாக, அத்வைதியாக, இந்தக் கீழ்மையை கண்டிக்கிறேன்.
எண்ணிப்பாருங்கள், சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு பிராமண கதாகாலட்சேபக்காரர் பிராமண மேட்டிமைவெறியுடன் பேசினார்.அனைத்து பிற தமிழ் இந்துக்களையும் இழிவுசெய்தார். அன்று இந்த இந்துமுல்லாக்கள் எங்கே சென்றனர்? அதை இவர்கள் மௌனத்தால் ஆதரித்தனர். இன்று கிளம்பி வருகிறார்கள். அன்று அந்த சாதிவெறியர் மேல் எவரும் இந்த வன்முறைக்கூச்சலை எழுப்பவில்லை. அப்படியென்றால் உண்மையில் இங்கே வெறியர்கள் எவர்? எதை வளரவிடுகிறோம்?
இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா?
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
