தமிழ்விக்கி- தூரன் விருது, கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
வேதாசலம் அவர்கள் தன் உரையில் ஒரு விஷயம் போகிறபோக்கில் சொன்னார். இந்த விருதை ஏற்கக்கூடாது என்று அவரிடம் எவரோ சொன்னார்களாம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராம் ரமேஷை விஷ்ணுபுரம் விருதுக்கு அழைத்தபோதும் சிலர் தடுத்தார்கள் என்று அவரே மேடையில் சொன்னார். பூமணிக்கு விருது வழங்கியபோது அதை ஏற்கவேண்டாம் என்று அவரிடம் சொன்னார்கள் என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள்.
தமிழ்விக்கிக்கு வந்த இடையூறுகளையும், அதைக் கடந்து அது நிலைகொண்டதையும் பற்றி எழுதியிருந்தீர்கள்.தமிழ்விக்கியின் பணிகள், விஷ்ணுபுரம் அமைப்பின் பணிகள் மிக வெளிப்படையாக உள்ளன. இந்த பெரும்பணிகளை இன்று வேறு எவருமே செய்வதாகவும் தெரியவில்லை. இருந்தாலும் ஏன் இதை தடுக்கவேண்டும் என நினைக்கிறார்கள் என்பது புரியவில்லை. மிகுந்த பெருந்தன்மையுடன் தடுப்பவர்களும் இணைந்து செயல்படவேண்டும் என்று நீங்கள் எழுதியதை வாசித்தேன்.
இன்றைக்கும் இணையத்தில் கசப்புகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். உங்களுடன் இணைந்து செயல்படும் அனைவரையும் அடிமைகள், அறிவிலாத கூட்டம் என்றெல்லாம் இழிவுசெய்கிறார்கள். அதன்வழியாக அவர்கள் உங்களிடமிருந்து விலகிச்சென்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்காகத் திட்டமிட்டு அந்தவகையான ஏளனத்தைச் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
இந்த வகையான வசைகளைக் கொட்டும்கும்பலை பார்த்தால் இவர்களெல்லாம் யார் என்ற திகைப்பு உருவாகிறது. ஒரு நல்ல படைப்பை எழுதியவர்கூட அக்கும்பலில் இல்லை. வெறும் வீணர்கூட்டம். ஆனால் இந்த வீணர்கூட்டத்தை எதிர்த்து, கடந்துதான் இங்கே எல்லா நல்ல செயல்களும் நடைபெற்றுள்ளன என்றும் நினைக்கிறேன்.
சாந்தகுமார் ஜி
அன்புள்ள ஜெ,
சென்ற சில ஆண்டுகளாக தமிழ்விக்கி, தூரன் விருது, விஷ்ணுபுரம் விருது ஆகியவை பற்றி இருந்து வந்த எரிச்சல்கள் அடங்கிவிட்டன என்று தெரிகிறது. யாராவது சிலர் எதையாவது சொல்லி பொருமிக்கொண்டே இருப்பதுதான் வழக்கம். இப்போது என் பார்வைக்கு ஒன்றும் வரவில்லை. கண்கூடாக இந்த அமைப்பும் செயல்பாடுகளும் வளர்ந்துவிட்டன. சாதனைகள் கண்முன் நின்றிருக்கின்றன. இனி புலம்பிப்பயனில்லை என நினைக்கிறார்கள் என நினைக்கிறேன். பெரும்பாலானவர்கள் இப்போது இந்த விருது செய்திகளை அப்படியே கண்டும் காணாமலும் போய்விடுவதைத்தான் பார்க்கமுடிகிறது. ஆழமான அமைதியே காணக்கிடைக்கிறது. அதுவே வெற்றிக்கான அடையாளம்தான்.
கே.ராஜேஸ்வர்.
படங்கள் மோகன் தனிஷ்க்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
