அஞ்சலி: திருப்பனந்தாள் ஆதீனம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்- மு. இளங்கோவன்
வணக்கம் ஜெ.
நேற்று(19.08.2025), திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் அதிபர் தவத்திரு “கயிலை மாமுனிவர்” முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார் பரிபூரணம் அடைந்தார்கள்.
நான் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றபொழுது(1987-1992) மாணவப் பருவத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு அவர்களின் திருக்கையால் பல பரிசுகளை வாங்கியுள்ளேன். பெரும்பான்மையான பரிசுகளை முதலாண்டில் நான் வாங்கியதால் அடுத்த ஆண்டுகளில் நடைபெறும் விழாக்களில் மொத்தமாக அறிவிக்கச்செய்து, அனைத்துப் பரிசுகளையும் ஒரே தவணையில் எனக்குக் கொடுத்து, மகிழ்ச்சியடைவார்கள்.
நான் எழுதிய மாணவராற்றுப்படை என்ற என் முதல் நூலினை அவர்களுக்கு அந்நாளில் படையல் செய்தேன்(1990). அவர்களின் திருக்கை வழக்கமாக ஐந்நூறு ரூபாய் பரிசாக வழங்குமாறு அந்நாளில் காறுபாறு சுவாமிகளாக விளங்கிய தவத்திரு குமாரசாமித் தம்பிரான் அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
படிப்பு முடிந்து, பணிக்குச் சென்ற பிறகும் திருப்பனந்தாள் செல்லும்பொழுது அவர்களைக் கண்டு வணங்கி வருவதை வழக்கமாக வைத்திருந்தேன். அவர்களின் அருளாட்சிக்காலத்தில் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் அவர்கள் ஆற்றிய பணிகளைக் கணக்கிட்டுச் சொல்ல இயலாது. அவற்றின் தொகை மிகுதியாக இருக்கும்.
எம் அருகமைந்த ஊர்களில் நடைபெறும் திருக்குடமுழுக்கு விழாக்களுக்குத் தேவைப்படும் மருந்துகளைக் கொடையாக வழங்குவதுடன், அக் குடமுழுக்கு விழாக்களைத் தலைமையேற்று நடத்துவதில் ஆர்வம் காட்டியவர்கள். சைவ சமய நூல்களைக் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைப்பதற்கு வழிகண்டவர்கள். சமய மாநாடுகளுக்குப் பெரும்பொருள் நல்குவதை வழக்கமாகக் கொண்டவர்கள். காசிக்குச் செல்லும் அன்பர்கள் காசித்திருமடத்தில் தங்கி, வழிபாடு செய்வதற்கு உதவுவார்கள். யாரும் எளிதில் அணுகி வணங்கி மகிழலாம்.
தவத்திரு கயிலை மாமுனிவர் அவர்களின் உரையை ஒருமுறை ஆவணப்படுத்தி வைத்திருந்தேன். காசித்திருமடம் குறித்தும், அதன் ஆதிமுதல்வர் குமரகுருபர சுவாமிகள் குறித்தும் எங்கள் அடிகளார் எடுத்துரைக்கும் உரையைத் தாங்கள் கேட்டு மகிழ்வதுடன் தங்கள் வாசகர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
