இரா. முருகன்'s Blog, page 22
January 25, 2024
நேற்றைய மனிதர்கள் – இன்றைய நிகழ்வுகள் -நாளைய எதிர்பார்ப்புகள்
அரசூர் நாவல் வரிசையில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே (ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு). நாவலில் இருந்து
இந்த வாசனைக்கும் இதமான பொழுதுக்கும் வசந்தி பக்கத்தில் இல்லையா உட்கார்ந்திருக்க வேண்டும்!
ஆரம்பிக்கலாமா? ஆத்துக்காரியை கூப்புடுங்கோ. நீங்க பஞ்ச கச்சம், அவா மடிசார். அதான் நியதி
சங்கரன் சற்றே சலிப்போடு வேஷ்டி மாற்ற உள்ளே போக, ஹோகித்தாரே, ஒன் மினிட் சாஸ்திரிகளே என்று ஜூனியர் சாஸ்திரியை அவனுக்கு பஞ்ச கஞ்சம் உடுத்தி விடக் கண் காட்டி உள்ளே அனுப்பியது ஜெயம்மா தான்.
ஏம்மா உனக்கு ஹெல்ப் தேவையா?
உள்ளே பார்த்து குரல் கொடுத்து விட்டு, சமையல் மாமிக்கும் தெரியாதுன்னா நான் வரேன் என்றாள் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு.
சங்கரனாலே அவுக்கவே முடியாம கொசுவம் வச்சுப் புடவை கட்ட நானாச்சு.
சொன்ன அடுத்த வினாடி அவளுடைய அவுட்டுச் சிரிப்பு வீடு பூரா எதிரொலித்துக் குழந்தையை எழுப்பி விட்டது.
மங்களகரமான சிசு அழுகை என்றார் கடியாரத்தைப் பார்த்தபடி காத்துக் கொண்டிருந்த சாஸ்திரிகள்.
சாஸ்த்ரிகளே பசுமாடு, ஒட்டகம் எல்லாம் அக்னியிலே வராதே? பிடார் ஜெயம்மா அக்கறையாக விசாரித்தாள்.
அதை ஏன் கேக்கறேள் நியூஸ் மாமி. கல்காஜியிலே ஒரு ஆந்திராக்கார கிருஹத்திலே ஆயுட்ஷேமம் பண்றபோது பசுமாடும் கன்னுமா ஹோமகுண்ட அக்னிக்குள்ளேஎ தெரிஞ்சதுன்னு நம்ம ராஜப்பா சாஸ்திரிகள் ரெண்டு மாசம் முந்தி சொன்னாலும் சொன்னார், எல்லோரும் அவரை தீவிரமா அவாவா கிருஹங்கள்லே வைதீகத்துக்குக் கூப்பட ஆரம்பிச்சுட்டா. கணபதி ஹோமம் பண்ணினா யானை, நவக்ரஹ ஹோமம் செஞ்சா அண்டங்காக்கா மேலே சனி பகவான், திவசம் பண்ணினா போய்ச் சேர்ந்தவா இப்படி அக்னியிலே வந்து முகம் காட்டணும்னு ஆசைப் படறா. சொன்னா உடனே இதெல்லாம் நடக்க, கவர்மெண்ட் ஆர்டினன்ஸ் போட்டு நடத்திக்கறதா என்ன?
ஜூனியர் சொல்வதை புன்சிரிப்போடு அங்கீகரித்தபடி, காக்கடாவில் தீக்குச்சியால் பற்ற வைத்து கைக்கடக்கமான ஹோம குண்டத்தில் அக்னி வளர்க்க ஆரம்பித்தார் பெரியவர்.
சங்கரன் அவசரமாக உத்ருணியில் ஜலம் வார்த்து மூன்று தடவை உறிஞ்சி ஆசமனியம் செய்து விட்டு சாஸ்திரிகளை வெற்றிப் பார்வை பார்த்தான்.
ஏத்து வாங்கி மந்திரம் சொன்னாப் போறும் அண்டர் செக்ரட்டரி சார். நான் சொன்னதுக்கு அப்புறம் ஆசமனியம் செய்யுங்கோ. எதேஷ்டம்.
இந்த சடங்கை நிர்வகித்து நடத்திக் கொடுப்பதில் தனக்குத் தான் முதலிடம் என்று தெளிவாக சீனியர் நிலைநாட்ட சங்கரன் அவசரமாகப் பின்வாங்கிக் கட்டளையிடக் காத்துக் கொண்டிருந்தான்.
புண்ணியாஜனனத்திலே அக்னி வளர்த்தா அதிலே என்ன வரும்?
ஜெயம்மா கேட்க, ஓரமாக நின்ற பகவதியைப் பார்த்து நான் அக்னியிலே தலை காட்டப் போகட்டா என்று அவசரமாக விசாரித்தாள் குஞ்ஞம்மிணி.
வேண்டாம்டி கொழந்தே, இனிமே அங்கங்கே சட்டுபுட்டுனு போய் நின்னுடக் கூடாது. 
January 23, 2024
பிதார் ஜெயம்மாவும் நூருண்ணி மேட் ஹோம குண்டமும் ஃபில்டர் காபியும்
வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது- அத்தியாயம் 6 சில பகுதிகள். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அச்சுப் பதிப்பு வெளியீடு
ஹோம குண்டம் இப்படி கைக்கடக்கமா செஞ்சு விக்கறதா? நம்மாத்திலே எல்லாம் தரையிலே செங்கல் வச்சுன்னா அக்னி வளர்த்தது? இது எனக்கு ஒண்ணு வேணுமே.
ஜெயம்மா புரோகிதர் கையில் இருந்து அஸ்பெஸ்டாசும் மரமும் இன்னும் ஏதோ உலோகமும் கலந்த ஹோம குண்டத்தை வாங்கிப் பார்த்து விட்டுக் கேட்டாள்.
ஆமா மாமி, புதுசுதான். இது நூர்ணி மேட்.
ஜூனியர் சாஸ்திரி சந்தோஷமாக அறிவித்தார்.
நூர்ணி அப்படீன்னா? இதாலியன் கம்பெனியா?
ஜெயம்மா புரியாமல் கேட்டாள்.
நூர்ணி பாலக்காட்டு பக்கம். எனக்கு ஸ்வதேசம்.
ஜூனியர் சாஸ்திரிகளுக்கு பெருமை பிடிபடவில்லை, சொந்த ஊரில் ஒரு கொல்லர், ஒரு தச்சர், ஒரு மோட்டார் மெக்கானிக் இப்படி ஒரு குழுவை அமைத்து டிசைன் ஸ்பெசிபிகேஷன் சொல்லி வாங்கி வந்த பெருமை அடுத்த ஐந்து நிமிடம் அரங்கேறியது.
என்ன செய்ய, தில்லி பட்டணத்துலே வந்து கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ் சிமெண்ட் தரையிலே அக்னி வளர்த்தா நாளக்கே மெமோ வரும்
உங்களுக்கு யார் மெமோ தர? ஜெயம்மா சிரித்தாள்.
ஏன் கேக்கறேள். ஒரே ஒரு காரியத்துக்குத் தான் கைக்கடக்கமா இன்னும் செஞ்சு வாங்கலே. அதுக்கு அங்கே நிகம்போத் காட்லே கொண்டு போய்க் கிடத்தினா எட்சட்ரா எட்சட்ரா
ஜூனியர் பால் குடித்தபடி தெம்பாகச் சொல்ல, அசத்தே அடக்கி வாசி என்றார் சீனியர்.
புண்ணியாஜனன நேரத்தில் சாவுச் சடங்கு பற்றி வேறெதும் குறிப்பிடாமல் கவனமாக அவர் தவிர்க்க, ஜெயம்மா உள்ளே நோக்கினாள்.
உங்க ப்ரண்டை பாஷாண்டியா நிக்காம குளிக்கச் சொல்லுங்கோ. புண்ணியமாப் போகும்.
வசந்தி மெல்ல குழந்தை உள்ளு என்று தாற்காலிகமாகப் பெயர் சூட்டிய உள்ளறையில் இருந்து எட்டிப் பார்த்து ஜெயம்மாவிடம் சொல்ல, அவள் சாடிப் பாய்ந்து அடி என் சமத்துக் கொடமே என்று வசந்தியைக் கட்டிக் கொண்டாள்.
இந்த மாதிரி அணைப்பு பெண்கள் மத்தியில் அந்நியோன்யத்தை அழகாகக் காட்டுகிற போது ஆண்கள் கட்டிக் கொண்டால் அராஜகமாக இருப்பதை நினைத்தபடி சங்கரன் குளிக்கப் போனான்.
உன்னை மாதிரி அழகா இருக்கா இந்தப் பொண்ணரசி.
பிடார் ஜெயம்மா குழந்தையை கன்னடத்திலோ, இல்லை, குழந்தைகளைக் கொஞ்சவே பொதுவாக யாரோ ஏற்படுத்திய மொழியிலேயோ சரம் சரமாக வார்த்தை சொல்லிக் கொஞ்சுவது குளியல் அறையில் எதிரொலிக்க, சோப்பு வாசனையோடு வந்து சாஸ்திரிகள் பக்கம் உட்கார்ந்தான் சங்கரன்.
January 22, 2024
கணபதி ஹோமம் செய்ய போர்ட்டபிள் ஹோம குண்டத்தோடு வந்த சாஸ்திரிகள்
வாழ்ந்து போதீரே, அரசூர் புதின வரிசையில் நான்காவது. மற்றவை – அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், இந்தத் தொகுதி மற்ற என் நாவல்கள் போல் ஸீரோ பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப் பட்டிருக்கிறது. நூலில் இருந்து-
என்ன, கிருஷ்ண ஜெயந்தி வந்த மாதிரி கால் காலா மாக்கோலம்? உன் ஏற்பாடா?
பிடார் ஜெயம்மா காரில் வந்து இறங்கியதும் உரக்க விசாரித்தாள். ரொம்ப சிரத்தை எடுத்து கதர்ப் புடவையைக் கணுக்காலுக்கு உயர்த்திக் கொண்டு, கோலத்தை மிதிக்காமல் தத்தித் தத்தி சங்கரனின் அபார்ட்மெண்டில் நுழைந்தாள்.
சங்கரா, எங்கே போனே?
பாத்ரூமில் தண்ணீர் அடைத்துக் கொண்டு விட்டது என்று ஒட்டடைக் குச்சியால் குத்திக் கிண்டியபடிக்கு மடித்துக் கட்டிய வேட்டியோடு சின்னச் சங்கரன் பிரசன்னமானான்.
கல்சுரல் மினிஸ்டரி அண்டர் செக்ரட்டரி மாதிரியா இருக்கே நீ?
ஜெயம்மா சிரித்தாள்.
‘ஆபீஸ்லே பாத்ரூம் அடைச்சாலும் முதல் குச்சி நான் தான்’ என்றான் சங்கரன்.
அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் அவன் லீவு போட்டு விடுவான். இல்லாவிட்டால் வேறே ஏதாவது வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு டூர் கிளம்பி விடுவான்.
கித்தான் பையில் இருந்து சின்ன சைஸ் ஹோம குண்டத்தை எடுத்த சாஸ்திரிகள் மற்ற சாமக்கிரியைகள் வேணுமே என்று மகா பொதுவாகச் சொல்ல, ஜெயம்மா கேட்டாள் –
சாஸ்திரியவரே, அரணி கடைஞ்சு அக்னி கொண்டு வரப் போறேளா?
வயதான சாஸ்திரிகள். காப்பியை எதிர்நோக்கி இருமி விட்டு ஜெயம்மாவைப் பார்த்தார். எல்லோரும் எல்லாருக்கும் தெரிந்த தில்லி தென்னிந்தியச் சூழலில் புரோகிதர்கள் வெகு பிரபலம். அதுவும் ஜெயம்மா வீட்டுக்கு வந்து போகும் அதே சீனியர் வைதீகர் தான் இவர்.
இல்லேம்மா கொழந்தே, அரணியெல்லாம் எதுக்கு? ஒரு தீப்பெட்டியும் காக்கடாவும் எதேஷ்டம் என்றார்.
அப்படியே அண்டர் செக்ரட்டரி சார் கிட்டே சாக்கடை குத்தறதெல்லாம் சாவகாசமா வச்சுக்கலாம், ஸ்நானம் பண்ணிட்டு மனையிலே உக்காரும்ன்னு சொல்லும்மா.
உள்ளே இருந்து டபரா செட்டில் வழிய வழியக் காப்பி கொண்டு வந்து கொடுத்த சமையல் மாமியையும் தெரிந்தவர் என்பதால் தில்லியில் பீப்ரி காப்பிக் கொட்டை வரத்து இல்லாமல், ரோபஸ்டா மட்டும் வறுத்து அரைத்த காப்பி தொண்டையில் இறங்க மறுப்பது பற்றி அவர் மாமியிடம் புகார் செய்ய, பாத்ரூம் பிரச்சனை தீர்த்து வந்த சங்கரன் தனக்கும் ஒரு காப்பி என்று அடி போட்டான்.
நான் காப்பி குடிக்கறதில்லே என்று ஜூனியர் சாஸ்திரிகள் டபராவைத் தியாக உணர்வோடு சங்கரனுக்கு நீட்ட, ஜெயம்மா உள்ளே திரும்பி குட்டி சாஸ்திரிக்கு நாலு ஸ்பூன் அஸ்காவும் நாலு கட்டெறும்பும் போட்டு பால் கொண்டாங்கோ என்று சத்தமிட்டாள். வெட்கத்தோடு தாங்க்ஸ் மாமி சொன்ன ஜூனியர், சீனியரிடம் இருந்து வாங்கிக் கொண்ட ஹோம குண்டத்தை மேல் வேஷ்டியால் பிரியமாகத் துடைத்தார்.

January 21, 2024
கல்பனா தவிர வங்காளத்தில் வேறு பெண் குழந்தை பெயர் வைக்க மாட்டார்களா?
அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. நாவலில் இருந்து
சேர்ந்து மெதுவாக ஓட ஆரம்பித்தார்கள்.
பிரசவ ஆஸ்பத்திரி சேவை எல்லாம் சீராகக் கிடைக்கிறதா?
மோஷய் அக்கறையாகக் கேட்டார். ஏதாவது குறை இருந்தால் அவரிடம் சொன்னால் உடனே சரி பண்ணித் தருவதாகவும் சொன்னார். அவரால் அது முடியும்.
ஒரு பிரச்சனையும் இல்லே. வீட்டுக்கு முந்தாநாளே வந்துட்டா. நார்மல் டெலிவரி தான்.
பெயர் என்ன வைக்கப் போறே?
கனவு நினைவில் உடனடியாக வந்து புகுந்து கொண்டது. கூடவே வசந்தி ஒத்தாசை இல்லாமல் இன்னொரு குழந்தை.
ஆறடி ஆகிருதியாகக் கடந்து வந்து முன்னால் முந்திப் போன வடிவான பஞ்சாபிப் பெண்ணின் பின்னால் நிலைத்த பார்வையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எடுத்தான் சங்கரன். சங்கரனின் குழந்தையை அவள் ஏன் சுமக்க வேணும்? அடுத்த கனவில் விசாரித்தால் தெரியுமாக இருக்கும்.
பெயர் இன்னும் வைக்கலேன்னா கல்பனான்னு வை.
மோஷாய் நேராகப் பார்த்துக் கொண்டு சொன்னார்.
மார்க்சீயர்களுக்கு அச்சு வெல்லம் போல பெண் குழந்தை என்றால் உடனே நினைவு வரும் பெயர் இந்த கல்பனா. கல்பனா தத் பற்றியும் சிட்டகாங் நகரில் காங்கிரஸ் சோஷலிஸ்ட்கள் நடத்திய ஆயுதக் கிடங்கு ஆக்கிரமிப்பு பற்றியும் பிடார் ஜெயம்மா சங்கரனுக்கு நிறையச் சொல்லி இருக்கிறாள். அவளுக்கு இடதும் வலதும் ஒன்றுதான் என்றாலும் கல்பனாவை ரொம்பவே பிடிக்கும்.
குழந்தை வெள்ளிக்கிழமை பொறந்திருக்கா. சாரதான்னு பெயர் போடுடா. சிருங்கேரி பீடம் சாரதாம்பா தரிசனத்துக்குப் போயிருக்கியோ? நீ எங்கே போனே? லீவு கிடைச்சா அரசூருக்கு கோழி மேய்க்க ஓடிப் போயிடுவே.
பிடார் ஜெயம்மா கேண்டீனில் வழக்கம்போல ஒலிபரப்பி சங்கரனுக்குப் பெண் பிறந்த தகவல் புதிதாகப் போய்ச் சேர்ந்தது. சந்தோஷ சமாசாரம் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சி கடலை எண்ணெய் முழுக்காட்டிய கேண்டீன் ஜிலேபியாக முடிந்தது வேறே கதை.
மித்ரா மோஷாய் ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் கேண்டீனுக்கு வந்திருக்கிறார். அவருக்கு அங்கே காப்பி மட்டும் இஷ்டம். நசநசவென்று எண்ணெய் கையில் பிசினாக ஒட்டும் மதறாஸி இனிப்பெல்லாம் அவருக்குப் பகை.
கல்பனா, அஜிதா, மிருணாளினி இது தவிர வங்காளத்தில் பெண் குழந்தை பெயரே இல்லையா மோஷாய்?
ஓடிக் கொண்டே சங்கரன் விசாரித்தான்.
ஏன் இல்லாமல், காவேரி.
அது சுத்தத் தமிழ்ப் பெயர் தான் என்றான் சங்கரன். அப்புறம் குழந்தைக்கு அதை வைக்க என்ன தடை என்று விசாரித்தார் அவர். அதானே?
மோஷாய், மான்செஸ்டர் கார்டியன் பத்து நாள் பேப்பர் ஒற்றைக் கட்டாக பிளேனிலே அனுப்பி வச்சு பிரஸ் கிளப்பில் நேற்று வந்தது. படிச்சீங்களா?
பேச்சை மாற்றுவதற்காக இல்லை, உண்மையாகவே அந்த பிரிட்டீஷ் செய்தித்தாளைப் படிப்பதில் சகல மார்க்சீயர்களுக்கும் பெருவிருப்பம் இருப்பதை சங்கரன் அறிவான்.
படிச்சேன் ஷொங்கொர். அதென்ன, எலிசபெத் ராணிக்குக் கொடுக்கற மானியத்தை குறைக்கணும்னு ஹவுஸ் ஓஃப் காமன்ஸ்லே இப்படி விடாப்பிடியா வாக்குவாதம் பண்றாங்க. வேதனையா இருக்கு. ராணியம்மா மதிப்பு இந்த அறிவிலிகளுக்கு என்ன தெரியும்?
சங்கரன் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தான். எல்லா மார்க்சீயர்களும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் கொண்டே இங்கிலீஷ் கலாசாரத்தில். மரபில் லண்டன் மாநகரத்தில், பிரிட்டன் என்ற தேசத்தில் முழு ஈடுபாடு உடையவர்கள் என்று பிடார் ஜெயம்மா சொல்வது நினைவு வந்தது. இங்கே இருந்து விரட்டினால் அங்கே போய்க் குடியேறி விடுவார்களாக இருக்கும்.
பார் அட் லா அங்கே தான் படிச்சு வருவாங்க. பிரிட்டீஷ ராணி, ராஜ குடும்ப விசுவாசிகளோட பட்டியல் எடுத்தா இவங்க பெயர் முதல்லே இருக்கும்.
ராஜ விசுவாசிக்கு வாழ்த்து சொல்லி சங்கரன் கிளம்பினான்.
மயூரா. இந்தப் பெயர் எப்படி இருக்கு?
போகும்போது அவனை நிறுத்தி மோஷாய் கேட்டார்.
கல்பனா வேணாமா மோஷாய்?
அவ பாவம் ரொம்ப கஷ்டமான ஜீவிதம். கல்கத்தாவிலே தெருவுக்கு நாலு கல்பனா உண்டு. போதும் இப்போதைக்கு. மயூரா பிடிச்சிருக்கா? மயூரான்னா மயில். அழகும் உண்டு. போர்க் குணமும் உண்டு. இந்தக் காலப் பெண்ணுக்கு இதெல்லாம் தான் முக்கியம்.
மோஷாய் மூச்சு வாங்கிக் கொண்டு சொன்னபடி வாசலில் காரை நோக்கி நகர்ந்தார்.
சங்கரன் வீட்டில் நுழைந்தபோது வீட்டு முற்றத்தில் ஒரு மயில் தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்தது. அவன் உள்ளே நுழைய அது ஒரு கணமும் தாமதிக்காமல் வெளிச்சுவர் கடந்து பறந்து போனது.
மயூரா.
January 19, 2024
ஜ்யோதிர்மய் தாஸ் மோஷாய் குழந்தைக்குப் பெயர் சூட்டுகிறார்
அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது பெருநூல் வாழ்ந்து போதீரே. அதிலிருந்து – அத்தியாயம் ஐந்தில் ஒரு காட்சி
தோட்டத்தில் பெரிய கூட்டமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். கிடைத்த இடத்தில் ஓரமாக உட்கார்ந்து பத்மாசனம் போட்டு ஜமக்காளம் விரித்து இருந்தவர்களையும், சவாசனமாகப் படுத்து கால்களின் ஊர்வலத்தை ரசித்துக் கொண்டிருந்தவர்களையும் கடந்து மெதுவாக ஓட ஆரம்பித்தான் சின்னச் சங்கரன்.
அரே பாய் ஷங்கர், பெண் குழந்தையாமே. ஜீத்தே ரஹோ.
நாற்பத்தேழாம் வருடம், முதல் மந்திரிசபையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த எண்பது வயது தலைவர் வாக்கிங் ஸ்டிக்கை மண்ணில் ஊன்றி, சங்கரன் முதுகில் வலது கையால் தட்டி வாழ்த்த அவனுக்கு வானத்தில் பறக்கிற சந்தோஷம். எவ்வளவு பெரிய மனுஷன் கையால் ஒரு சுபதினத்தில் முதல் வாழ்த்து கிடைத்திருக்கிறது. வசந்தியிடம் சொன்னால் இதன் மகத்துவம் புரியாது. சுதந்திரப் போராட்டம், ஜவஹர்லால் நேருவின் முதல் சர்க்கார், அமைச்சரவை என்று கொஞ்சம் முன்னால் போய் லோதி தோட்டத்தில் ஓடுகிற பெரியவருக்கு வர வேண்டும். தகவலில் பாதி சங்கரனுக்கே மறந்து போக ஆரம்பித்து விட்டது.
ஷங்கர் ஷம்போ.
குரலைக் கேட்க மனம் இன்னும் அதிகம் உற்சாகத்தில் துள்ளியது. ஜோதிர்மய் மித்ரா மோஷாய் மெம்பர் ஆப் பார்லிமெண்ட். முதல் லோக்சபாவில் இருந்து தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர். சுருட்டு குடிக்காத நேரம் எல்லாம் சுறுசுறுப்பாக தொகுதிக்காக சண்டை வலிக்கும் இடதுசாரி மனுஷர்.
இனிப்பும் மீனும் இல்லாமல் சந்தோஷ சமாசாரம் சொன்னால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று சொல்லியபடியே சங்கரனை அணைத்துக் கொண்டார் மோஷாய்.
ஓடி முடித்துப் போகும்பொழுது பக்கத்து வங்காளி ஸ்வீட் ஸ்டாலில் இங்கே இருக்கும் பெரியவர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் ரஸகுல்லா வாங்கித் தருவதாக உடனே வாக்குத் தத்தம் கொடுத்தான் சங்கரன் சந்தோஷமாக.
இங்கே ஓடற முக்கால் வாசிப் பேருக்கு, என்னையும் சேர்த்து ஷுகர் கம்ப்ளெயிண்ட்னு தெரிஞ்சு தானே சொல்றே?
வங்காளிகளின் புத்திசாலித் தனத்துக்கு என்றென்றும் தலை வணங்குவதாகச் சிரம் குவித்து அவரிடம் சின்னச் சங்கரன் சொல்ல, நீ மதறாஸிக் களவாணி என்று உன்னதமான பாராட்டு வழங்கினார் மோஷாய்.
January 18, 2024
குளிர்காலக் காலையில் லோதி கார்டனில் ஓடப் போன சோம்பேறி
வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் வரிசையில் நான்காவது. முழுத் தொகுதி (4 நூல்கள்) என் பதிப்பாளர் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் வெளியிடப் பட்டிருக்கின்றது, வாழ்ந்து போதார் அத்தியாயம் ஐந்தில் இருந்து
ஷங்கர் ஷார், சாஸ்திரிகள் எட்டு மணிக்கு ரெடியா இருக்கச் சொன்னார். புண்ணியாஜனனம் இன்னிக்கு.
ஷார்ட்ஸும் கான்வாஸ் ஷூவுமாக வெளியே வந்தபோது சின்ன மடேடர் வேனை ஓட்டி வந்து காம்பவுண்டுக்குள் நிறுத்திய மைத்துனன் சொன்னான்.
குழந்தைக்கு என்ன பெயர் சூட்டப் போறாப்பல?
இந்த போறாப்பல, வந்தாப்பல என்று கேள்வியை மொண்ணையாக முடிப்பதெல்லாம் செம்மண் பூமி வழக்கம். வெறும் கேள்வி கூட கூர்மையாகக் காயப்படுத்தும் என்று யோசித்துக் கொண்டு எழுந்து வருவது அந்த பதவிசான மொண்ணை. சங்கரனின் மைத்துனன் அதை கேலி செய்கிறானாம்.
வெட்டிப் பயல். இப்போது இவனோடு வம்பு வளர்க்க சங்கரன் உடம்பில் சக்தி இருந்தாலும் மனசில் விருப்பம் இல்லை. இருந்தாலும் சும்மா இருந்தால் துளிர்த்து விடுவான். குட்டிக் கொண்டே இருக்க வேணும்.
என்ன பெயர் வைக்கலாம், நீயே சொல்லேன். நம்ம குடும்பத்திலேயே நேரு மாதிரி புத்திசாலி நீ மட்டும் தானே?
சங்கரன் குறுக்கே வெட்டினான்.
அய்யே நேருவெல்லாம் என்ன புத்திசாலியிலே சேர்த்தி? பி எல் சோந்தி மாதிரின்னு சொல்லுங்கோ.
நேரு எங்கே, இவன் கொண்டாடும் உதிரிகள் எங்கே?
சின்னச் சங்கரன் மணி பார்த்தான். சரியாக ஆறு மணி. இப்போது ஓடப் போனால், முடிந்து திரும்பி வர நேரம் சரியாக இருக்கும்.
குழந்தைக்கு ஜ்யோத்ஸ்னான்னு பெயர் வைக்கலாம். டக்கரா இருக்கும். சரியா அத்திம்பேர்?
மைத்துனன் யாசிக்கிறான்.
ஓ, ஜ்யோத்ஸ்னாவா?
அதென்ன ஓ ?
உங்க பக்கத்து வீட்டு தல்வார் குடும்பத்துலே பொண்ணு தானே ஜ்யோத்ஸ்னா? அவள் மேலே உனக்கு ஒரு கண்ணு இருக்குன்னு ரொம்ப நாளா எனக்கு ஊகம்.
சங்கரன் மைத்துனனின் கண்ணைப் பார்த்துச் சொல்கிறான்.
அதெல்லாம் ஒண்ணுமில்லே அத்திம்பேர். பாக்க பளிச்சுனு பால் பாட்டில் மாதிரி இருக்கான்னு ஒரு அப்ரிசியேஷன்.
பால் பாட்டிலா? குடிக்கலாம்னு சொல்லு. ரொம்ப நெருங்கியாச்சோ.
சே சே எப்பவாவது நாலு வார்த்தை பேசறதுதான். அவ எண்ணெய் தேச்சுக் குளிச்சுட்டு நிகுநிகுன்னு இடுப்பு மின்ன நிக்கற போது, ஐயோ ஏன் கேக்கறேள்.
மைத்துனன் தலையைக் குனிந்தபடி அந்த இடுப்பின் லகரியில் ஈடுபட்டுச் சொல்ல சின்னச் சங்கரனுக்குச் சிரிப்பு வந்தது. பொறாமையும் தொடர்ந்து எனக்கு அதெல்லாம் கிடைக்கலையே என்ற கோபமும் எட்டிப் பார்த்தது.
அட படவா, பர ஸ்திரியை எங்கெல்லாம் பார்வையாலே தடவி இருக்கே. என் கிட்டே வேறே வெக்கமே இல்லாம வர்ணிச்சுச் சொல்லி மகிழ்ந்து போறே. உன் இடுப்புக்குக் கீழே இருக்கப்பட்டது தானே கிடந்து துள்ளச் சொல்றது. தயவு தாட்சண்யம் இல்லாம அதை நசுக்கணும் இப்படி.
சின்னச் சங்கரன் மனசில் அவனைக் கொட்டையில் ஓங்கி மிதித்துக் கூழாக்கினான்.
மனசு சமனப்பட, சாத்வீகமாக வார்த்தை சொன்னான் –
சொன்னாக் கேளு. கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளை பெத்தவ அந்த ஜ்யோத்ஸ்னா. வேணாம். பேச்சுலே தான் ஆரம்பிக்கும் சகலமும்.
சிரித்துக் கொண்டே சொல்கிறான் சங்கரன். அதை யாசித்து நின்ற மைத்துனன் முகம் நேசமாகிறது.
பேசினாலே பிரசவமாயிடுமா அத்திம்பேர்? சும்மா இருங்கோ. உங்க ஆபீஸ்லே கூடத் தான் அந்த சர்தார் பொண்ணு. நீங்க சொல்லியிருக்கேளே. மதமதன்னு மாரு. தினசரி திவ்ய தரிசனம். இறுக்கிப் பிடிச்ச ஸ்வெட்டர். இன்னிக்கு அவளை வரச் சொல்லி கூப்பிட்டிருக்கோ?
மைத்துனனுடன் உட்கார்ந்து ஒரு டம்ளர் பானகம் சாப்பிடக் கூட இனி யோசிக்க வேண்டும். ரெண்டு மக் லாகர் பியரில் சகல அந்தரங்கத்தையும் இவனிடம் எப்போதோ உளறி இருக்கிறான் சங்கரன்.
உள்ளே உங்கக்கா இருக்கா. தெரிஞ்சா என்னை இழுத்து வச்சு அருவாமணையிலே முழுசா நறுக்கிடுவா. அப்புறம் கவுரை நினைச்சாக் கூட வெத்து அரைக்கட்டுலே உயிர் போற மாதிரி வலிக்கும்.
தோல்வியை மறைத்துக் கொள்ள இன்னும் தாழ்த்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. போகட்டும். ஞாயிற்றுக்கிழமை எல்லா அவமரியாதையும் பொறுத்துக் கொள்ளக் கூடியதே. ரெண்டு வேளை ஒசத்தியான சாப்பாடும் கள்ளுச் செட்டு போல் காப்பியும் வெட்டியாக திவானில் சாய்ந்து நேரம் போக்கவுமாக ஆன தினம். இன்றைக்கு வீட்டு விசேஷம் என்பதால் திவானில் இளைப்பாற சாயந்திரம் ஆகி விடலாம். மற்றது உண்டு. விசேஷ ஆகாரமும்.
தலைக்கு மேலே வேலை. கரோல்பாக்கிலே முப்பது பேருக்கு சமையலாக்கும் இந்த முகூர்த்ததுக்காக. போய் முடிச்சு எடுத்துண்டு ஓடி வரணும்.
மைத்துனன் உள்ளே ஓடினான்.
நீ ஒரு துரும்பையும் நகர்த்தாமல் சும்மா லோதி கார்டனில் ஓடப் போகிற சோம்பேறிக் கழுவேறி என்றும் அவன் செய்கைக்கு அர்த்தம்.
நீ என் முடிக்கு சமானம் என்று மனதில் வழக்கம் போல் வடக்கு நோக்கி நின்று திட்டி விட்டு ஸ்கூட்டரைக் கிளப்பி மெதுவாக ஓட்டிப் போனான் சின்னச் சங்கரன்.
January 17, 2024
தமிழில் வந்த ரஸ்கின் பாண்டும் ஜெயகாந்தனின் ஹென்றியும்
பொங்கல் நீள்விடுமுறை தொடங்கிய ஜனவரி 13, சனிக்கிழமை அன்று சென்னை புத்தகக் காட்சி 2024-இல் இரண்டு நூல்களை வெளியிட வாய்ப்புக் கிடைத்தது.
அவற்றில் ஒன்று இந்தோ ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் எழுதிய சிறுகதைகளின் முதல் தொகுப்பு.
சரளமான மொழிபெயர்ப்பு.
//தேவதாரு மரங்களுக்கு மறுபுறத்தில் வசித்த திருமணமாகாத ஆங்கிலோ இந்திய மூதாட்டிகளிடம் பூனைகள் மட்டும் இருந்தன. திருமணமாகாத பெண்கள் என்றால் அவர்கள் ஏன் பூனைகளை மட்டும் வளர்க்கிறார்கள் என்பது எனக்கு எப்போதுமே புரியாத புதிர்தான்
//
மொழிபெயர்ப்பாளர் ஒரு பார்வைக்கு ஜெயகாந்தனின் ’ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலின் கதாநாயகன் ஹென்றி போல ஓங்குதாங்காக இருந்தார்.
நானும் நண்பர்களும் , எப்போதாவது அந்த நாவலைப் படமாக்கினால், எழுத்தாளர் திலீப்குமாரைத்தான் ஹென்றியாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஏக மனதாக கருத்து தெரிவித்து வந்தோம்.
திலீப்புக்கும் அவரைப் பரிந்துரைத்த எங்களுக்கும் வயதாகி விட்டது.
இந்த மொழிபெயர்ப்பாளரை ஹென்றி ஆக்கினால் என்ன? இவர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.
திரை இசைப் பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா தான் அவர்.
ரஸ்கின் பாண்ட் சிறுகதைத் தொகுதி வெளியீடு
சென்னை புத்தகக் காட்சி 2024
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு
(ஸ்டால் 598 சி)
படத்தில் : முதல் பிரதி பெற்றுக்கொண்ட பெருந்தேவி, மொழிபெயர்ப்பாளர் ஹரிஷ் ராகவேந்திரா மற்றும், வெளியிட்ட இரா.முருகன்
January 16, 2024
தருணாதித்தன் எழுப்பிய ’மாயக் குரல்’ ரசமுள்ளது
போகிக்கு முந்திய சனிக்கிழமை சென்னை புத்தகக் காட்சியில் நான் பங்கு பெற்ற இன்னொரு நூல் வெளியீடு, நண்பர் தருணாதித்தனின் ’மாயக்குரல்’ சிறுகதைத் தொகுப்புக்கானது.
மேநாள் ISRO விஞ்ஞானியான தருணாதித்தன் பன்னாட்டு எலக்ட்ரானிக் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக அடுத்துப் பணிபுரிந்தவர்.
ஸ்ரீகிருஷ்ணன் என்று அசல் பெயர் – ஸ்ரீக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே ஸ்பேஸ் விடாமல் ஸ்ரீகிருஷ்ணன் என்று சேர்த்துப் பெயரைச் சொன்னதால் பிணரயி விஜயன் நிர்வகிக்கும் பூமியைச் சேர்ந்தவராக இருக்கும் என்று நினைத்தேன். நற்றமிழராம்.
சொல்வனம் டிஜிட்டல் இலக்கிய இதழில் அவர் எழுதிய ‘ரசம்’ சிறுகதை மூலம் பரவலாகக் கவன ஈர்ப்பு செய்து தருணாதித்தன் இலக்கிய உலகில் நுழைந்தது சற்றே தாமதமாகத்தான்.
’மாயக்குரல்’ சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரையில் நான் எழுதியிருக்கிறேன் –
//“காலம், இடம், கதாபாத்திரங்களை நுணுக்கமாகச் சித்தரித்தால், பாதிக் கதை எழுதிய மாதிரி.மனதுக்குள் புன்சிரிக்க வைக்கும் கதாபாத்திரங்களும் சுவாரசியமான திருப்பங்களும் தருணாதித்தனின் கதையுலகில் உயிர்த்தெழுந்து வருகிறார்கள்.”
“இந்தப் பதினைந்து கதையும் காத்திரமானவை. சுநாதமானவை. எங்கேயும் சுவரம் திரிந்து போவதில்லை என்பதே தருணாதித்தனின் தேர்ந்த கதையாற்றலுக்குச் சாட்சி. ஒற்றை இருப்பில் வாசித்து முடித்து மனதில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இருப்பவை. விரைவில் தருணாதித்தனின் அடுத்த தொகுதியை எதிர்பார்க்கிறேன்”
மாயக்குரல் சிறுகதைத் தொகுப்பு ஸீரோ டிகிரி பப்ளிஷிங்க் பதிப்பு. சுருக்கமான ஒரு நிகழ்வில் சென்னை புத்தகக் காட்சி 2024இல் – ஸ்டால் எண் 598 சி – நான் வெளியிட திருமதி தருணாதித்தன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
[image error]
January 14, 2024
இப்போதைக்கு பகவதி என்று பெயர் போடலாம். ராசியான பெயர் அது ..
அரசூர் நாவல்கள் நான்கு. நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. நூலில் இருந்து
சின்னச் சங்கரன் குழந்தை அழுகை சத்தம் கேட்டு உள்ளே போகிறான். பெற்ற உடம்பு அதியுன்னதமாக உலகத்து தாய்மை எல்லாம் சேர்ந்து கவிந்து மின்ன வசந்தி மெல்ல அவனை ஒரு வினாடி பார்த்து விட்டு, தொட்டிலில் உறங்கும் பெண் குழந்தையை பிரியமாக நோக்குகிறாள்.
பொண்ணு. பரவாயில்லையா?
குழந்தை பிறந்த தினத்தில் அவன் ஆஸ்பத்திரிக்கு முதலில் வந்தபோது வசந்தி கேட்டது இது. அவளிடம் அவளுடைய அம்மாவும் அம்மாவிடம் அவர்களுக்கு உதவியாக ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த மூத்த உறவுக்காரப் பெண் ஒருத்தியும் கேட்டது இது.
வசந்தியிடம் மட்டும் சொன்னான் – நான் இவளைத் தான் எதிர்பார்த்தேன். பெயர் என்ன தெரியுமா? பகவதி. பகவதின்னு வச்சு பகவதிக்குட்டின்னு வாய் நிறையக் கூப்பிடணும். கொச்சு பகவதியாக்கும் இவள்.
மலையாள வாடை தூக்கலா இருக்கே.
வசந்திக்குப் பிடித்த ரேஷ்மா, ஷிஃபாலி, கோமல்கலி போன்ற பெயர்களை நிராகரித்து விட்டான் சின்னச் சங்கரன். பசுமை மணக்கும் ஊரும், காயலும், அம்பலமும், சோபான சங்கீதமும், பால் பாயச இனிப்பும் மனதில் எழுப்பும் பகவதிக்கு ஈடாகுமா அதெல்லாம்?
வசந்தி ஒரு சமாதானத்தைச் சொன்னாள் – பகவதின்னு ஒரு பெயர் இருக்கட்டும். பெயர் சூட்டற அன்னிக்கு வரை பார்ப்போம். வேறே ஏதாவது கூப்பிடற பெயர் தட்டுப்பட்டா குழந்தைக்கு அதையும் சூட்டிடலாம்.
வசந்தி கண்ணால் சிரித்து குழந்தையைப் பார்வையால் காட்டி சின்னச் சங்கரனைப் பாரு என்றாள். பட்டுத் துணியில் பொதிந்த பழக்குவியல் மாதிரி சின்னதாக வாய் அசைத்து சின்னஞ்சிறு கண்கள் செருகி சற்றே திறந்து பின் மலர்ந்து உறக்கத்தில் லயித்த குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சின்னச் சங்கரன்.
ஆண் குழந்தை. அதுவும் வருமாம். வசந்தி இல்லாமல். எங்கோ கேட்டது மாதிரி. பிரமை தானா? சங்கரனுக்குத் தெரியவில்லை. மனசு, தப்புச் செய்யப் போகும் குறுகுறுப்பில். அதற்கான சந்தோஷம் வேறே நேரம் காலம் பார்க்காமல்.
குழந்தைக்கு பக்கத்தில் இந்த மாதிரி மனநிலை ஏன் வரணும்? பரிசுத்தமான நினைப்பும் பார்வையும் பேச்சும் இருக்க வேண்டிய இடத்தில் தப்பு செய்கிற குறுகுறுப்பு ஏன்?
வசந்தி கண்ணை மெதுவாக மூடி அடுத்த உறக்கத்தில் அமிழ வெளியே வந்தான்.
ஒன்று விட்ட மைத்துனியோ, மைத்துனன் சம்சாரமோ, அவளுக்கு அம்மாவோ, தங்கையோ, இளம் வயதாகத் தெரிகிற பெண்பிள்ளை கலந்து கொடுத்த காப்பியோடு பொழுது தொடங்குகிறது. வசந்தி ஒத்துழைப்பு இல்லாமல் ஆண் குழந்தை. வேண்டாம். அது கனவு. தறிகெட்டு மனதை அது அலைக்கழிக்க வேண்டாம். தில்ஷித் கவுர்? அவள் வீட்டுக்காரன் புதுச் செருப்பு வாங்கி வந்து விலைச் சீட்டைப் பிய்த்து எறிந்து விட்டு, சாப், கன்னத்தைக் காட்டுங்கள் என்று மரியாதையோடு அடிப்பான். தேவையா?
January 12, 2024
நேரு போல் ஷெர்வானி தரித்து விடிகாலை துயிலுணர்த்தும் தூத்வாலா -பால்காரர்
அரசூர் நாவல் வரிசையில் நான்காம் புதினம் வாழ்ந்து போதீரே. இதன் அச்சுப்பதிப்பு -மறுபதிப்பு- அண்மையில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடாக வந்திருக்கிறது. அரசூர் நான்கு நாவல் வரிசையில் மற்ற மூன்றோடு நிறைய வேறுபடும் நூல் இது. புத்தகத்தில் இருந்து –
அதானே. நீங்க கப்பல்லே வெள்ளைக்காரிகளோடு ஓஹோன்னு ராக்கூத்து அடிச்ச மனுஷராச்சே. எதெது எங்கேன்னு தெரியாமத்தானே கூட்டமா இருந்து ரமிச்சதெல்லாம்?
பகவதி மிதந்து பெரிய சங்கரனின் தோளில் செல்லமாகக் கடித்து அவன் கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள். இரண்டு பேரும் உள்ளே இருட்டு கவிந்த அறைக்குப் போகிறார்கள்.
போன வாரம் பிறந்த குழந்தை தொட்டிலில் சிணுங்குகிறது. வசந்தி எழுந்து உட்கார, கீழே படுத்திருந்த அவளுடைய அம்மா சுவரைப் பிடித்துக் கொண்டு எழுந்து வருகிறாள். பால் கொடுக்கறியா என்று உறக்கம் பூசிய குரலில் வசந்தியை விசாரிக்கிறாள்.
பொகையிலை கடைக்காரா, நீ வெளியிலே போய் நில்லு. குஞ்ஞுக்கு மொல கொடுக்கப் போறா.
நான் தாத்தா, நீ பாட்டி. பாத்தா தப்பு இல்லே. மனசுலே கல்மிஷம் கிடையாது. மனசே இல்லை. உடம்பும் தான்.
சங்கரன் திடமாகச் சொல்கிறான்.
இவனுக்கு ஒரு பொண்ணு பிறக்கப் போறான்னு எனக்கு அவன் அம்பலப்புழை போய்ட்டு ஜோடியா இந்த முறிக்கு வந்த போதே தெரியும்.
ரகசியம் சொல்லும் குரலில் பகவதி சங்கரனிடம் தெரிவிக்கிறாள்.
பேரன் பெட்ரூம்லே, ஜோடியா இருக்கறபோது பார்த்ததும் தப்பு தான் செல்லம். எனக்கு ஒரு முத்தம் கொடு. தப்பு எல்லாம் நேராயிடும்.
கடைக்கார பிராமணா, இன்னுமா முத்தம், ஆலிங்கனம்னு அலையறே.
பகவதி முத்தம் கொடுத்து முகத்தை மூடிக் கொள்கிறாள். மெல்லக் கண் திறந்து பார்த்து சங்கரனிடம் மெதுவான குரலில் சொல்கிறாள் –
குழந்தைக்கு என் பெயரை வைக்கணும்னு சொல்றா விசாலம் மன்னி.
சரியாத்தான் சொல்றா. என் பகவதிக்குட்டியை இந்த வீட்டுலே திரும்பவும் வாய் நிறைய எல்லோரும் கூப்பிடட்டும்.
சங்கரன் உத்தரீயத்தை தோளைச் சுற்றி இறுக்கிக் கொண்டு பகவதியையும் அடுத்து அணைத்துக் கொண்டு சொல்கிறான்.
பால்யம் திரும்பறதா என்ன? நம்ம காலம் முடிஞ்சு போயாச்சு. கட்டிக்கறதும் கொஞ்சறதும் கொஞ்சம் கம்மி பண்ணணும், என்ன புரியறதா?
பகவதி பெரிய சங்கரனிடம் பொய்க் கோபத்துடன் சொல்ல, சின்னச் சங்கரன் தூக்கத்தில் குழந்தை மாதிரி சிரிக்கிறான்.
பொண்ணுக்கு பகவதி, பிள்ளைக்கு மருதையன் இதான் பெயர் வைக்க வேண்டியது
பெரிய சங்கரன் சொல்ல, அடுத்தது பிள்ளையா எனக் கேட்கிறாள் பகவதி.
இவன் எமகாதகன். வசந்தியை கொஞ்சமும் உபத்திரவிக்காமல் புத்ர பாக்கியம்.
பெரிய சங்கரனும் பகவதியும் சின்னச் சங்கரனுடைய படுக்கை அறைக்குள் மறுபடி பிரவேசிக்கிறார்கள்.
பின்னால் வந்த விசாலம் மன்னியும், குஞ்ஞம்மிணியும் சங்கரனைச் சூழ்ந்து கொண்டு விவரம் கேட்கிறார்கள். பகவதி ஆவலோடு அவன் முகத்தைப் பார்க்க, சின்னச் சங்கரன் எழுந்து ரகசியம் கேட்கத் தயாராக உட்கார்கிறான்.
வாசலில் காலிங் பெல் சத்தம்.
கனவு தான் என்று தெரிகிறது சின்னச் சங்கரனுக்கு. ஆனாலும் தெளிவாக துலக்கமாக வந்த பகவதிப் பாட்டியின் முகம், படத்தில் பார்த்துப் பழகி, அதே போல் பட்டையாக வீபுதியும் காதில் கடுக்கனும், முகத்தில் ரெண்டு நாள் தாடியுமாக தாத்தா பெரிய சங்கரன், இன்னும் யாரோ பழுத்த சுமங்கலியாக ஒரு கிழவி, பச்சை ரிப்பன் வைத்துப் பின்னிய தலைமுடியும் ரப்பர் வளையுமாக ஒரு சின்னப் பெண்.
எல்லோரும் இங்கே, இந்தச் சின்ன அறையில் தான் சுற்றிச் சுற்றி வந்தார்கள். எங்கே அவர்கள் எல்லாம்?
பகவதிப் பாட்டி, எங்கே போனே? உன் பெயரை வைக்க ஏற்கனவே முடிவு செஞ்சாச்சு.
சின்னச் சங்கரன் வாசல் கதவைத் திறக்கிறான். பால்காரன்.
அதிகப் பால் வேணும்னு சொல்லியிருந்தாங்க மாதாஜி. வீட்டுலே விசேஷமாமே?
பத்து லிட்டர் பிடிக்கும் தகரக் குவளையை உள்ளே நகர்த்தி விட்டு நேரு மாதிரி ஷெர்வானி கோட்டை சரி செய்து கொண்டு தூத்வாலா வெளியே போகிறான்.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

