இரா. முருகன்'s Blog, page 24

December 30, 2023

இறந்தும் கொடுத்த மேலை சிவப்புச் சிந்தனையாளர்கள்

வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் வரிசையில் 4வது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் அச்சுப் பதிப்பாக அண்மையில் வெளியானது. அந்நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் இருந்து

திலீப்புக்கு அப்பாவின் புத்தகங்கள் நினைவு வந்தன. உயர ஸ்டூலைத் தேடினான். அதில் போன வருடம் விநாயக சதுர்த்திக்கு வந்த விநாயகர் பொறுமையாக இன்னும் நின்று கொண்டிருந்தார்.

இன்னும் ஒரு மாதத்தில் அடுத்த சதுர்த்தியே வரப் போறது, இன்னுமா என்னை அனுப்பி வைக்கலே என்று திலீப்பைக் கேட்டார் அவர். அவன் பதில் சொல்லாமல் அவரைப் படியிறக்க, நீ மட்டும் அந்த சிவத்த குட்டியோடு பேண்ட் ஸ்டாண்டு, மகாலட்சுமின்னு சமுத்திரக் கரையிலே திரியறே, என்னை அந்த சமுத்திரத்திலே கரைச்சு வழியனுப்பிட்டு அடுத்த வருஷம் வான்னு சொல்லத் தெரியலே என்று கமுக்கமாகத் தலையில் குட்டினார்.

மேலே லாஃப்ட்டில் தலை இடிக்க ஒரு பக்கம் மண்டையே பள்ளமாகிற அளவு இடது கையால் பரபரவென்று தேய்த்துக் கொண்டு லாப்டில் சிரமப்பட்டு கால் மடித்து அமர்ந்தான் அப்போது திலீப். மனசு அகல்யா என்றது. அவளை அங்கே ஏற்றி விட்டுக் கூடவே தானும் உட்கார்ந்து கொண்டால் எப்படி சுகமாக இருக்கும் என்று கற்பனை தறிகெட்டுப் பறந்தது. இங்கே லேடீஸ் டாய்லெட் எங்கே இருக்குன்னு பாருங்கோ என்றாள் அகில்.

சிரித்துக் கொண்டே புரட்டக் கூடிய புத்தகம் இல்லை சேர்மன் மா ஸ்ட்ஸே துங்கின் சிவப்புப் புத்தகம் மராட்டி மொழிபெயர்ப்பு. அப்பாவை கட்சித் தலைமை கேட்க மொழிபெயர்த்துக் கொடுத்து கையில் காசு வராமல் அலைய வைத்த புத்தகம் அது. நூறு காப்பி தருகிறேன், விற்றுக் காசு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கடைசியாக வந்தார்கள். அப்பா ரொம்ப யோசித்து ஒரு வழியாகத் தாதர் பிளாட்பாரத்தில் வைத்துக் கூவி விற்கத் தீர்மானித்தபோது கட்சியில் இருந்து ஸ்டாண்டர்ட் காரில் வந்து ஒரு கவரில், என்ன கணக்கோ, முன்னூற்றுப் பதினேழு ரூபாய் கொடுத்து விட்டு வவுச்சரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, சமாதானமாக இருக்கச் சொல்லிப் போனார்கள். அம்மாவுக்கு மருந்து வாங்கியது போக வீட்டுக்கு ஒரு சீப்பு வாழைப் பழம் வாங்க மராட்டி பேசிய மா ஸ்ட்ஸே துங் வழி வகுத்தார் அப்போது.

லெனின் என்ன பேசினார் என்று ஒரு பெரிய புத்தகம். அவர் பேச நினைத்ததாக மற்ற ஆட்கள் நினைத்ததும் கூட்டிச் சேர்த்தோ என்னமோ ஆயிரம் பக்கம் இருக்கும் அது. மராத்தியில் மொழி மாறிய லெனின் பேச்சு இருபது காப்பி லாஃப்டில் இருந்தது. காகிதம் மக்கிப் போய் ஆனால் ஒரு தடவை கூட யாரும் கையாளாமல் புழுதியில் புதுக்கருக்கு அழிந்தும் அழியாமலும் கிடந்தது. அந்தக் காகிதப் பொதியில் சொல்லத் தகும் நிலையில் இருந்த கடைசி ஆறு காப்பிகளைப் பக்கத்தில் தனியாக எடுத்து வைத்தான் திலீப். மார்க்ஸ், எங்கேல்ஸ், ஹோ சி மின் என்று மற்றத் தலைவர்களும், சோவியத் படைப்பாளிகளும் இப்படிக் காகித நிலையைக் கருத்தில் கொண்டு, எந்தப் பட்டியலில் போக வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டார்கள். கரையானுக்கு ஆட்பட்டவர்கள் தெருக்கோடி குப்பைத் தொட்டிக்கு, ஒரு சல்யூட் அடித்து திலீப்பால் அனுப்பப் பட்டார்கள். மற்றவர்கள் இரண்டு பெரிய மூட்டையாக மெரின் லைன்ஸ் புத்தகக் கடை இருக்கும் பிளாட்பாரத்தில் குடியேறி அவர்களின் ஆசிர்வாதப் பணமாக இருநூற்றுப் பதினைந்து ரூபாய் திலீபுக்குச் சம்பாதித்துக் கொடுத்தார்கள். அம்மா ஆஸ்பத்திரி விட்டு டாக்ஸியில் சாலுக்கு வந்து இறங்க அவர்கள் அளித்த ஆதரவு மகத்தானது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2023 19:25

December 29, 2023

சதுர்த்தி முடிந்து பொறுமையாகக் கடலில் கரைய நின்ற விநாயகர்

அரசூர் நாவல் நான்கு – வாழ்ந்து போதீரே ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. நாவல் அத்தியாயம் இரண்டில் இருந்து

அகல்யாவும், சிரிப்பும், பேல்பூரியும், உயர்ந்து பொங்கும் கடல் அலைகளும் இல்லாத உலகம் அவன் போக வேண்டியது. அதுவும் இந்த ஆறு மாதத்தில் அவனுக்கு ஏற்கனவே அனுபவமான ’கொஞ்சம் போல் நிம்மதி’ சூழல் கூட இல்லை. அப்பா காணாமல் போனதில் தொடங்கியது இது.

பரமேஸ்வரன் நீலகண்டன். ஐம்பத்தேழு வயது. தாடையில் மிகச் சரியாக நடுவில் நீளமாகக் கீழே இறங்கும் ஒரு வெட்டுத் தழும்பும், இடது புறங்கையில் பாம்பு கொத்தினது போல் பக்கத்தில் பக்கத்தில் இரண்டு மச்சங்களும் கொண்ட சதைப் பிடிப்பு இல்லாத, வெளுத்த மனுஷர். இடது முட்டிக்குக் கீழே கால் இல்லாதவர். ஆங்கிலம், மராட்டி, தமிழ், சம்ஸ்கிருதம் மொழிகளில் புலமை கொண்டவர். டில்லியில் இருந்து பம்பாய்க்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது நாக்பூரில் காணாமல் போய்விட்டார். ஒரே மகன் திலீப் பரமேஸ்வரன். மனைவி, லாவணிக் கலைஞர் அம்பேகாவ் ஷாலினி மோரே. வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கும் இந்த முதியவரைப் பற்றிய விவரங்கள் அறிந்தவர்கள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்.

காவல்துறை மாநிலம் சார்ந்த ஒன்று என்றாலும், திலீப்பின் மினிஸ்டர் சித்தப்பா முன்கை எடுத்ததால், மாநிலம் முழுவதும் சுவரொட்டி அடித்து ஒட்டிச் சகலமானவர்களுக்கும் சேதி சொல்லப் பட்டது. கோவாவிலும் இது நடந்தது.

பதினைந்து நாள். ஒரு மாதம். ஆறு மாதம். பரமேஸ்வரன் நீலகண்டன் என்ற இடதுசாரி சிந்தனையுள்ள, ஒரு காலை இழந்த அறுபத்தாறு வயதான மனிதர், மிச்சமிருக்கும் காலோடு எந்தக் கண்டத்திலும் ஏது நாட்டிலும் எந்த வேலையும் செய்து வருமானம் ஈட்ட ஆர்வம் காட்டியவர், இன்னும் எங்கோ உயிரோடு இருக்கிறார் என்று யாரும் நம்பத் தயாராக இல்லை.

ஆனாலும் அவர் காணாமல் போவதற்கு முன்பு தில்லியில் போய் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தது, அமைச்சரின் சகோதரர் நீதிக்குப் போராட்டம் என்ற சிறிய செய்தியாக பம்பாய் நகரின் மத்தியானப் பத்திரிகை ஒன்றில் அச்சுப் போட்டு வந்து ஆயிரம் பேராவது படிக்கக் கிடைத்தது.

எப்படியோ யார் மூலமோ அந்தச் செய்தி அதிகார யந்திரத்தை அசைத்து பரமேஸ்வரனின் மனைவி ஷாலினி-தாய்க்கு அவளுடைய நாட்டுப்புறக் கலைஞர் பென்ஷனை மீட்டுக் கொடுத்தது. அந்த முன்னூறு ரூபாயில் தான் ஒற்றை அறைக் குடியிருப்பில் திலீபும் அம்மாவும் தங்க வேண்டியிருக்கிறது.

அம்மாவை ஆஸ்பத்திரியில் இருத்தி கவனித்துக் கொண்டதற்கே அப்பாவுக்கு அவ்வப்போது வந்த வருமானம் தான் காரணம். அவர் உறுப்பினராக இருந்த இடதுசாரிக் கட்சிக்காக அவர்களுடைய வருடாந்திர மாநாட்டு வெளியீடுகளைத் தமிழிலும் மராத்தியிலும் மொழி பெயர்ப்பதை சிரத்தையாகச் செய்து வந்தார் திலீப்பின் அப்பா. அந்தக் கட்சியில் எத்தனை பேர் இருந்தாலும் போனாலும் திரும்பி வந்தாலும், வருடம் ஒரு மாநாடும் உள்கட்சி மோதலும், தேர்தலும் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது மட்டுமில்லை, அங்கே பதவிக்கு வருகிறவர்கள் எல்லோரும் இங்கிலீஷில் மட்டும் தான் யோசித்து எழுதக் கூடியவர்கள். மற்ற மொழிகளில் அவர்களுடைய கருத்துகள் கடந்து போக வேண்டியுள்ளது.

திலீப்புக்கும் நல்ல இங்கிலீஷ் வசப்பட அப்பா வழி காட்டியிருந்தால் திலீப் அவர் செய்த சாஸ்வதமான மொழிபெயர்ப்பு வேலையைத் தொடர்ந்து அவனுக்கும் அவ்வப்போது காசு வந்திருக்கும். அந்தக் கட்சி இன்னும் நூறு வருடம் இப்படியே தள்ளாடியபடி இருக்கும் என்பதிலும் ஆங்கிலத்தில் சிந்திப்பதையும் விவாதிப்பதையும் நிறுத்த மாட்டார்கள் என்பதிலும் மற்ற மொழிக்காரர்கள் அந்தச் செய்திகளை ஆர்வத்தோடு என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதிலும் திலீப்புக்குச் சந்தேகமில்லை.

அம்மாவை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து கூட்டி வரவும் அப்பா தான் உதவினார். அப்போது அவர் காணாமல் போய் நாலு மாதம் ஆகியிருந்தது. அம்மாவை ஆஸ்பத்திரியில் இருத்திப் பராமரிக்கக் காசு இல்லாதது வீட்டுக்குக் கூட்டி வர ஒரு காரணம். காசு தராததால் அவளைப் பட்டினி போட்டிருந்தார்கள் என்று அண்டை அருகில் மற்ற நோயாளிகளைக் கவனிக்க இருந்தவர்கள் சொன்னார்கள்.

நம்மாத்து பொண்ணை பட்டினி போடறதாவது. மினிஸ்டர் கிருஷ்ணனோட மன்னியாக்கும் இந்தக் கிறுக்கச்சி. போய்ச் சொல்லி உடனே கூட்டிண்டு வாங்கோடா.

பேரன் திலீப்பையும் பேத்தி ஜனனியையும் விரட்டியவள் கற்பகம் பாட்டி தான்.

அவளை வீட்டில் வைத்து யார் கவனிப்பது என்று மூத்த மருமகள் கேட்டபோது, பாட்டி மினிஸ்டர் மகனின் பங்களாவில் இருந்து கிளம்பி விட்டாள்.

நீங்க யாரும் என் மாட்டுப்பொண்ணைக் கவனிக்க வேண்டாம். நான் கவனிச்சுக்கறேன். அந்தக் கிழவருக்கு ஆயுசு முடியறவரை பீத்துணி தோச்சுப் போட்டு, மூத்தரம் தொடச்சு விட்டு, கொழந்தை மாதிரி தாடையைத் தாங்கிப் பருப்புஞ் சாதம் ஊட்டியே என் ஜீவன் முடியும்னு எதிர்பார்த்தேன். அது இன்னமும் இருக்கு. இங்கே இவளுக்கு ஊழியம் பார்க்கத்தான் மிச்ச பிராணன்.

கற்பகம் பாட்டி வற்புறுத்திக் கூட்டி வரச் சொன்னபோது திலீப்பிடம் ஆஸ்பத்திருக்கு அடைக்க வேண்டிய பணம் இல்லை. வருமானம் இருந்தால் தானே காசும் பணமும் புழங்கும். மிட்டாய்க் கடை வைத்திருக்கும் மதராஸிகள் மேல் விரோதம் வளர்க்கும் கட்சிக்காரர் பாலகிருஷ்ண கதம் கூட மதராஸி ஓட்டலை உடைத்து நொறுக்க திலீப்பை இப்போதெல்லாம் அழைப்பதில்லை. அவன் பாதி மதராஸி என்பது அப்பா தில்லியில் ஆர்ப்பாட்டம் செய்தது தொடங்கி, காணாமல் போனதுவரை செய்தியானதில் நிறைய வெளிச்சம் போடப்பட்டு விட்டது. அதை விட முக்கிய காரணம், பாலகிருஷ்ண கதம்-ஜீயின் மூத்த மகள் ஒரு மதராஸி சோக்ராவைக் காதல் கல்யாணம் செய்து கொண்டாள் என்பது. அந்தப் பையனின் குடும்பம் மதராஸிலும் ஆந்திராவிலும் நாலைந்து பெரிய மதராஸ் ஓட்டல்களை வெற்றிகரமாக நடத்துகிறார்களாம்.

எல்லாம் சேர்ந்து ஷாலினி-தாய் ஆஸ்பத்திரியில் பிணைக் கைதியாக இன்னும் ஒரு வாரம், கேவலம் இருநூறு ரூபாய் ஃபீஸ் அடைக்க முடியாததினால் கழிக்க வேண்டி வந்தபோது தான் திலீப்புக்கு அப்பாவின் புத்தகங்கள் நினைவு வந்தன. உயர ஸ்டூலைத் தேடினான். அதில் போன வருடம் விநாயக சதுர்த்திக்கு வந்த விநாயகர் பொறுமையாக இன்னும் நின்று கொண்டிருந்தார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2023 21:08

December 26, 2023

அலை ஓயாத அரபிக் கடல் பாடுகிறது

அரசூர் நாவல் 4 : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் இரண்டில் இருந்து
அச்சுப் பதிப்பாக ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியிட்டிருக்கிற நூல் இது

அலை ஓங்கி அடிக்குது அகல், தர்காவுக்கு இன்னொரு நாள் போகலாம்.

திலீப் அகல்யாவின் கையை இறுகப் பற்றியபடி நின்றான். அவள் இப்போது பிடிவாதம் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். நீ வரட்டா போ, நான் போயே தீருவேன் என்று அவள் ஓட வேண்டும்.

ஹை டைட், ஹை டைட் என்று ஒரு காவலர் அறிவித்துக் கொண்டே போக, அகல்யாவும் திலீபும் கடல் பாதையில் ஒருத்தர் பின்னால் ஒருத்தராக ஓட வேண்டும்.

எழுந்த அலையில் ரெண்டு பேரும் அடித்துக் கொண்டு போய் மஹாலட்சுமி கோவில் பின்னால் பாறை அடுக்கில் கொண்டு சேர்க்கப் பட வேண்டும். அங்கே அவளை இடுப்பில் கை சேர்த்து வளைத்து அணைத்துக் கொண்டு பின்னால் வந்து போகும் அலைகளைப் பார்த்தபடி பிதற்ற வேண்டும்.

இதுக்காக அலை அடிச்சுப் போகணுமா என்ன?

அகல்யா சிரித்தபடி அவன் உள்ளங்கையில் கிள்ளினாள்.

அவளுக்கு சின்னச் சின்ன சந்தோஷங்கள் மட்டுமே போதும். மகாலட்சுமி ஏரியாவோ, தாதரில் ரானடே ரோடு பாதையோரக் கடையோ, ஒரு பிளேட் சமோசா, இஞ்சி தட்டிப் போட்ட சாயா. பிளாட்பாரக் கடையில் நீலப் பூ போட்ட கர்ச்சீப். எப்போதாவது திலீப்பை தனியாக நிற்கச் சொல்லி விட்டு ஸ்தூல சரீர மராத்திப் பெண்ணை ஷாந்தி-தாய் என்று விளித்து காதில் ரகசியமாக அளவு சொல்லி வாங்கும் மார்க்கச்சை. வீட்டு முகப்பில் கட்டி, ஒரு வருடம் கழித்து எடுத்துப் போடும் ஜரிகைத் தோரணத்தில், ஜெய் மாதா தி என்று சுபமாக எழுதியது.

இது எல்லாத்துக்கும் மேல் இதில் கொஞ்சமாவது நிறைவேறிய சந்தோஷத்தோடு திலீப்போடு கை கோர்த்து நடப்பது.

பாந்த்ரா பேண்ட் ஸ்டாண்டில் சுற்றும் போது ஏதோ கட்டடத்தின் பின் பகுதிக்கு அவசரமாக இட்டுப் போய் இங்கிலீஷ் சினிமாவில் வருகிறது போல முத்தம் கொடுத்தான் திலீப். அதுவும் அகல்யாவுக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் பிடிக்கும் என்று சொல்ல மாட்டேன் என்று முரட்டுப் பிடிவாதம். திலீபுக்கு அது தெரியும். பாந்த்ரா போகலாமா என்று குருவி போல தலையைக் கவிழ்த்துப் பார்த்தபடி கேட்கிற சந்தோஷம் அவனுக்கும் வேண்டியிருக்கிற ஒன்று.

சரி, டாட்டா சொல்லிக்கலாமா?

அகல்யா கைக்கடியாரத்தைப் பார்த்தாள். யாதொரு சந்தேகமும் வரவழைக்காமல் வீட்டில் போய்ச் சேர இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. மாசம் பிறந்து ஐநூறு ரூபாய் சம்பளத்தை அப்படியே அப்பாவிடம் கொடுத்து விட்டு ஐம்பது ரூபாயை மட்டும் மாசாந்திரக் கைச்செலவுக்காக வாங்கிக் கொள்ளும் அவளை எல்லோருக்கும் பிடிக்கும். வீடு திரும்பத் தாமதமாகும் ஒவ்வொரு கணமும் அவர்கள் பீதி அடைகிறார்கள். எல்லோருக்கும் பிடித்த நல்ல பெண்ணாக, அதற்கு வழி வகுக்காமல் அவள் இருப்பாள்.

ரயில்வே ஸ்டேஷன் வரைக்குமாவது கூட வரேனேடி செல்லக் குட்டி?

செல்லக் குட்டியை மகாலட்சுமி – போரிவாலி ஸ்லோ லோக்கலில் ஏற்றி விட்டு பஸ் பிடித்துத் திரும்பிக் கொண்டிருந்தான் திலீப். இனி ஒரு மாதமாவது அவளோடு இன்னொரு சந்திப்புக்காகக் காத்திருக்க வேண்டும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2023 19:23

December 25, 2023

வரவேற்பறையில் வந்து ஆடிய மயில் இன்னும் அங்கே தான்

வாழ்ந்து போதீரே, அரசூர் நாவல் வரிசையில் நான்காவதாக வெளிவந்துள்ளது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங்க் அச்சுப் பதிப்பாக அண்மையில் வெளியிட்ட இந்த நாவலில் இருந்து

கதவுக்கு வெளியே நிறையப் பதக்கங்களும் கயிறுகளும் நாடாக்களும் அப்பிய, பச்சை அழுத்தமாகப் பதிந்த ராணுவ உடுப்போடு நடு வயது மேஜரோ வேறே பெரிய பதவியில் இருப்பவரோ ஒருவர் மண்டி போட்டுக் கைகளை ஒருசேர மேலே உயர்த்தி இருந்தார். அவர் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

அந்த அதிகாரிக்கு இரண்டு அடி தூரத்தில் அறை முழுக்க ராணுவத்தினர். வெளியே படிகளில், தெருவுக்கு இட்டுச் செல்லும் நடைபாதையில், வீட்டு வாசலில், தெரு முழுக்க எங்கேயும் ராணுவம் தான்.

அதிகாரி விக்கி விக்கி அழுதபடி ஆடும் பறவை ஆடும் பறவை என்று திரும்பத் திரும்ப ஆப்ரிகான்ஸ் மொழியில் சொல்லிக் கொண்டிருந்தார்.

டான்ஸ் உயல். பௌ. டான்ஸ் உயல். பௌ. பௌ. உயல்.

அந்தக கூவலை உள்வாங்கி அருகே இருந்த அதிகாரிகளும் அவர்களிடமிருந்து அலையலையாகக் கடந்து தெரு வரை, அல்லது அதற்கும் அப்புறம் நின்றவர்களும் ஆடும் பறவை என்று திரும்பச் சொல்லும் சத்தம். ஒன்று சேர முயலும் ஒலிகள் திரண்டு எழும்பி வர, பல கைகள் வானம் பார்க்க நீண்டு உயர்ந்து நின்றதைப் பார்வை சென்ற இடமெல்லாம் சந்தித்தாள் நந்தினி. என்ன பறவை? எங்கே ஆடுகிறது?

மெல்ல எழுந்த ராணுவ அதிகாரி குரல் கரகரக்க நந்தினியின் கைகளை தேவதையை ஸ்பர்சிப்பது போல் பிரமிப்போடு தொட்டார். தெய்வச் சின்னங்களை மரியாதையோடு முத்தமிட்டு வணங்குவது போல் இன்னொரு முறை மண்டியிட்டு அவள் கைகளில் ஆராதகராக முத்தமிட்டார்.

சகோதரி, மூத்த சகோதரி.

நந்தினி எதுவும் புரியாமல் ஒரு வினாடி நின்றாள். அவளுக்கு இவர்களால் இனி எந்தத் துன்பமும் வராது என்று மனதில் பட்டது. அது கொடுத்த ஆசுவாசமே பலமானதாக இருந்தது. சாப்பிடலாம். குளிக்கப் போகலாம்.

வாசலில் மரியாதையோடு நின்று உள்ளே வரலாமா என்று உத்தரவு கேட்டார் அந்த அதிகாரி. அபத்தமான சூழ்நிலை. பழைய பருத்தி அங்கி அணிந்து படுக்கையில் உட்கார்ந்தபடி நந்தினி. அந்த ஆபீஸர் உட்கார வேறு இடம் இல்லை என்பதால் அவரையும் அங்கே அமரச் சொல்லித் தான் கைகாட்ட வேண்டியிருந்தது. படுக்கையில் வேற்று மனிதரை இருக்கச் சொல்லிக் கூப்பிடுவதன் அபத்தம் புலனாக, மெல்லச் சிரித்தாள் நந்தினி.

காட் ஸெ அவொர் சிஸ்டொர். கடவுளின் அக்கா. அவொர் சிஸ்டொர்.

அவர் பிதற்றியபடி உள்ளே வந்து விதிர்விதிர்த்து நின்றார். உட்கார மறுத்து விட்டார். அது மரியாதையில்லை என்பது போல் கையசைத்தார். ஏதோ சொல்லி உடனே வெளியே போக வேண்டிய அவசரம் அவர் அசைவுகளில் தெரிந்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தார் அவர். வாசலை நோக்கிக் கை காட்டினார்.

ஒரே ஒரு செய்தி மட்டும் சொல்ல வேண்டும் உங்களிடம். சொல்ல அனுமதிப்பீர்களா?

அவர் மரியாதை விலகாத குரலில் கேட்டார்.

சொல்லுங்கள் என்று ஆதரவாகக் கூறினாள் நந்தினி.

வாசலில் வைத்த படத்தில் இருந்து அந்தப் பறவை.

அவர் ஆரம்பித்து ஒரு வினாடி நிறுத்தினார். உடல் இன்னும் நடுங்கியது.

அந்தப் பறவைக்கு என்ன?

எல்லாமே தான், அவொர் சிஸ்டொர். நிறைய இறகுகள் உள்ள, வர்ணத்தில் அவை மினுமினுக்கும் பறவை இல்லையா அது. பறவை படத்துக்குள் இல்லை. வெளியே உங்கள் அறைக்கு வெளியே நடனமாடியபடி நின்றது. நீங்கள் கடவுளின் மூத்த சகோதரி என்று செம்மொழியான பிரஞ்சில் அகவியபடி அறை முழுக்கத் தாழப் பறந்து வந்தது. பார்த்தேன். கேட்டேன். அந்தக் குரல். அதை எப்படி மறப்பேன்?

அவர் வாசல் பக்கம் திரும்பவும் உத்தேசமாகக் காட்டி வியப்பு மறையாமல் சொல்ல, நந்தினிக்கு முன்னறையில் மாட்டிய இந்திய ஓவியம் நினைவில் வந்தது. ஆடுகிற ஆண் மயிலும், ஓரமாக நின்று கவனிக்கிற பெண் மயிலுமாக இந்தியத் துணைக்கண்ட ஓவியன் வரைந்தது அது. லண்டனில் ஆர்ட் கேலரிக்கு வெளியே புதியதாக வரைந்த படங்களையும் நகல்களையும் பரத்திப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த போலந்து நாட்டுக் கிழவரிடம் முப்பத்து நாலு பிரிட்டீஷ் பவுண்டுக்கு வாங்கியது அந்த ஓவியம். இன்னார் வரைந்தது என்ற உறுதி தரும் ஆவணம் எதுவும் மயிலாடும் ஓவியத்துக்கு இல்லை என்று கை விரித்து விட்டார் போலந்துக்காரர். Talisman தாயத்து என்று கான்வாஸின் வலது கீழ் ஓரத்தில் எழுதியிருந்தது ஓவியத்தின் பெயராக இருக்கக் கூடும்.

ராத்திரியில் விளக்குகள் அணைக்கப்பட்டதும் படம் மாந்திரீகமான நீல ஒளியைச் சிந்தி அறையையே அந்த நிறத்தில் குளிரக் குளிரக் குளிக்க வைப்பது அவ்வப்போது நடக்கிறதுதான். ஆனாலும் அந்த மயில் படச் சட்டத்தை விட்டு வெளியே வந்து ஆடியதும், பறந்து அறை முழுக்கச் சுற்றியதும், திரும்ப உள்ளே போனதும் எல்லாம் நடந்ததில்லை.

இந்த மாதிரியான நீளமான நீல இறகு கொண்ட மயில்கள் அம்பலப்புழையில் நிறையக் காணக் கிடைக்கும் என்று விடுமுறைக்கு லண்டனில் இருந்து வந்த அம்மா சொன்னாள். வைத்தாஸுக்குப் பிடித்ததால் லண்டனில் வாங்கியது என்பது தவிர வேறே சிறப்பான கவனம் எதையும் இந்தப் படத்தில் வைக்கவில்லை.

பறவை இருக்கட்டும். நீங்கள் சொல்ல வந்தது?

அதிகாரி கை உயர்த்தி உறுதியான குரலில் முழங்கினார்.-

உங்களை யாரும் துன்பப்படுத்த மாட்டார்கள். துரும்பை எடுத்து உங்கள் மேல் தூக்கிப் போட்டாலும் எட்டு சிப்பாய்கள் முன்னால் வந்து நின்று அவர்களை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவார்கள். அதற்கான உத்தரவை இன்று பிறப்பிக்கிறேன்.

அப்போது தான் முன்னால் வணங்கி நிற்பவர் ராணுவத்தில் உச்ச பட்ச மரியாதைகளோடு இருப்பவர் என்று நந்தினிக்குத் தெரிய வந்தது. தேசத்தின் அடுத்த அதிபராகப் பதவி ஏற்கப் போகிறவர் அல்லது ஏற்றவர்.

வைத்தாஸ் ஐயன் நாட்டின் செல்வம். அவருடைய அன்பு மனைவியான நீங்களோ இங்கே இருக்கும் உங்கள் உறவினர்களோ இந்த நாட்டை விட்டு எப்போதுமே வெளியே போக வேண்டாம். வைத்தாஸ் அவர்களும் திரும்பி வந்து எங்களோடு சேர்ந்து இருக்கவே விரும்புகிறோம். அவர் எழுத்தாளர். மகிழ்ச்சியாக இங்கே இருந்து நாவல் எழுதாமல் எதற்கு அவர் தனியாக எங்கேயோ கிடந்து துன்பப் படவேண்டும்? இருந்து எழுத விசாலமான இடம், தட்டச்சு செய்து தரக் காரியதரிசி, புதிதாக எழுதத் தோதான பழங்கதைகளைப் பாடும் நாட்டுப்புற முதுபெண்கள், தேநீர் தயாரித்து வழங்க, கைகால் பிடித்து விட ஊழியர்கள் என்று ஏற்படுத்தி விடலாம். விருதுகளை ஏற்படுத்தி, நாமே ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நூல்களுக்காகக் கொடுத்து விடுவோம்.

ராணுவ அதிகாரி சொன்னதற்கெல்லாம் மரியாதையோடு தலையசைத்து உய் உய் என்று ஆமோதித்து பேச்சை முடிக்க அவசரம் காட்டினாள் நந்தினி,

அந்தப் பறவை படத்தில் திரும்பப் போய் என்னிடம் சொன்னது. உங்களை கடவுளின் மூத்த சகோதரியாகப் போற்றினாலே எம் அரசாங்கம் நிலைக்கும் என்று. அதற்கான உத்தரவும் இன்னும் இரண்டு மணி நேரத்தில் வெளியாகும்.

புதிய ஜனாதிபதி கையை உயர்த்தி, உச்ச பட்ச கௌரவமான விருதை அளிப்பது போல் நின்று அது சரிப்படாது என்று உணர்ந்தவராக, இன்னொரு முறை நந்தினிக்கு முன் மண்டியிட்டார்.

வைத்தாஸ், நீ எங்கே? இதையெல்லாம் பார்க்க வேண்டாமா உனக்கு? உன் பெண்டாட்டி காலடியில் நொடிக்கொரு தரம் நாட்டின் அதிபர் மண்டியிட்டு மரியாதை செலுத்துகிறார். வெளியாகப் போகும் அரசாங்க உத்தரவு சொல்கிறது நான் கடவுளின் மூத்த சகோதரி என்று. வைத்தாஸ், உன் நாவலில் இது வருமா? உனக்கு இதெல்லாம் ஆச்சரியமாக இல்லையா?

ஒரு ஆச்சரியமும் இல்லை. உன்னை தெய்வமாக்கின பிறகும் பாத்ரூம் உபயோகிக்கவோ, சாப்பிடவோ, உறங்கவோ எந்த விதமான இடைஞ்சலும் இருக்கக் கூடாது என்று தயவு தாட்சணியம் பார்க்காமல் அவர்களிடம் கூறு.

லண்டன் பாலப் படத்தில் இருந்து வைத்தாஸ் வெளிப்பட்டு உலாத்தியபடி இதைச் சொல்லித் திரும்பப் படத்தில் ஏறும்போது நந்தினியைப் பார்த்தான்.

மயில் எச்சம் எல்லாம் வரவேற்பறை சோபாவில் இல்லாமல் கவனமா இரு. மேலே அப்பினால் லேசில் போகாது. எல்லா நரகலும் நாறும்.

வைத்தாஸ் இங்கு இல்லை. இறகு வாடையடிக்கும் மயிலும் இல்லை. ஒன்று தவிர மற்ற மயில் படங்கள் இனிப் படங்களாகவே இருக்கட்டும். அந்த ஒரே ஒரு ஓவியத்திலிருந்து மட்டும் மயில் வெளியே வந்து ஆடி அற்புதம் நிகழ்த்தட்டும்.

ராணுவ வண்டி வாசலில் நின்ற பகல் பொழுதில் நந்தினி அப்படி நினைக்க ஆரம்பித்து ஒரு வருடம் ஆகி விட்டது.

ராணுவக் குழுக்கள் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கின்றன. யார் வந்தாலும், நந்தினி வீட்டுக்கு அந்தப் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் வந்து அவளை மண்டியிட்டு வணங்குகிறார். வாசலில் ஆடும் பறவை ஓவியத்தை பிரமிப்போடு பார்க்கிறார். அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு போகிறார்கள். மறுநாள் உள்ளூர்ப் பத்திரிகையில் மக்கள் தலைவர் புனித சகோதரியிடம் ஆசி பெற்றார் என்ற செய்தியும் புகைப்படமும் வெளியாவதும் தவறாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வைத்தாஸ் சார்ந்திருக்கும் அரசியல் பிரிவை ஆதரிக்கும் ராணுவக் குழு நேற்று திரும்பவும் பதவிக்கு வந்தது. ஏழு மாசம் முன்னால் ஒரு தடவை அவர்கள் அதிகாரத்தைப் பிடித்தார்கள் தான். ஆப்பிள்களோடும் ஆரஞ்சுகளோடும் அப்போது நந்தினியைப் பார்க்க வந்தபோது அவள் இந்தியா போகவேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினாள்.

ஏற்பாடு செய்கிறேன்

சொல்லிப் போனவர் அடுத்த வாரம் சுட்டுக் கொல்லப் பட்டார்.

வாசலில் இதோ இப்போது ஒரு ராணுவ வண்டி நிற்கிறது. புது ஜனாதிபதி. பின் தள்ளிய பெருத்த மனுஷர். கூடவே மரியாதையான இடைவெளி விட்டுப் புகைப்படக் காரர்கள். ராணுவ அதிகாரிகள்.

மயிலும் குயிலும் இருக்கட்டும். இந்தியா போக வழி பண்ணுடா

முணுமுணுத்தபடி, கடவுளின் மூத்த சகோதரி மூட்டுப் பிடிப்புக்குக் காலில் களிம்பு புரட்டலானாள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 25, 2023 21:27

December 24, 2023

உறவு சொல்ல ஒரு தெய்வம்

வாழ்ந்து போதீரே நாவல் அரசூர் நாவல்களில் நான்காவது, அதன் தொடக்க்ம் இது

வாழ்ந்து போதீரே ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பாக 2022ம் ஆண்டு வெளியாகியுள்ளது

கடவுள்.

கிட்டத்தட்ட கடவுள்.

உறங்கிக் காலையில் விழித்ததும் தேநீர் கொடுக்க ஒரு படையே நிற்கிறது. ராணுவம். நூறு, இருநூறு வீரர்கள். கருத்துத் தடித்தவர்கள். மாறி மாறி வருகிறார்கள். நந்தினிக்கு அவர்கள் எல்லோரும் பகலும் இரவும் காவல். நந்தினி அவர்களுக்கு நிரந்தரக் காவல். ஒரு வருடமாக இப்படித் தான் நடக்கிறது.

வீட்டு வாசலில் ராணுவ வண்டி வந்து நின்ற ஒரு பகல் பொழுதில் நந்தினி கடவுளானாள்.

சரியாகச் சொன்னால், கடவுளுக்கு மூத்த சகோதரி.

அவள் கிடைத்த நிம்மதியில் கடவுளை சாவகாசமாக அடையாளப் படுத்திக் கொள்ளலாம் என்று மற்றவர்களால் ஒத்திப் போடப்பட்டது.

புழுக்கமான அந்தப் பகல் நேரத்தில் நந்தினி ராணுவத் தாவளங்களையும், ஒற்றைக் கட்டிலும் பழைய மேஜை மின்விசிறியுமாக அவற்றில் புழுங்கி நாறும் சிறு அறைகளையும் ஏனோ நினைத்தாள். முக்கியமாக, குறுக்குக் கம்பிகளோடு கதவு அடைத்து வெளியே இருந்து உள்ளே முழுக்க பார்க்கக் கூடிய அப்படியான ஒரு அறையை. அவள் இதுவரை பார்க்காத இடம் அது. அசுத்தமான அறை. இருட்டான அறை. ஆண் வாடை ஆக்கிரமித்த, வயிறு வாயில் எழும்பி வரக் குமட்டும், கழிவறைக்கும் மோசமான குச்சு. பத்திரிகைக் கட்டுரை ஒன்றில் வேறேதோ நாட்டில் ராணுவ அத்துமீறல்கள் பற்றிய கட்டுரைக்குத் துணையாக வந்து நினைவில் ஊடுருவி இருந்த அந்த அறை புகைப்படம் கூட இல்லை. கையால் வரைந்த கோட்டுச் சித்திரம்.

ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட ஒரு பெண், கிட்டத்தட்ட நந்தினி வயது அல்லது நாலைந்து வருடம் இளையவள். அவளை ஒரு வருடத்துக்கு அடைத்து வைத்தார்களாம். உடல் தினவு எடுத்தபோதெல்லாம் யார்யாரோ சர்வ சுதந்திரமாக வந்து ஒற்றைக் கட்டிலில் தள்ளி அந்த உடலை அனுபவித்து விட்டுப் போனது பற்றிப் பேசிய கட்டுரைக்கு ஓரமாக, ஓவியன் பெயர் போடாமல் வந்த சித்திரம் அது.

அந்த ராணுவம் ஒடுக்கப்பட்டபோது விடுவிக்கப் பட்ட பெண் ஒற்றை அறைச் சிறையை விட்டு வெளியே கிளம்ப மாட்டேன் என்று அடம் பிடித்துப் பித்தாக, நடைப் பிணமாக ஆஸ்பத்திரிக்குச் சுமந்து போகப்பட்டது பற்றி கட்டுரை நீண்டதும் நந்தினிக்கு நினைவில் உண்டு.

நந்தினி கடவுளான தினத்தில் வாசலில் வந்து நின்ற ராணுவ வண்டி அவளை அவளுக்கேயான ஒற்றை அறைக்கு அழைத்துப் போக வந்திருக்கிறது என்ற தீர்மானத்தோடு செருப்புக்குள் கால் நுழைத்துக் கொண்டாள் நந்தினி. ஹாலில் மாட்டியிருந்த லண்டன் பாலப் புகைப்படத்தில் அவள் இடுப்பை வளைத்துப் பிடித்து அணைத்து நின்ற வைத்தாஸிடம் சொன்னாள் –

நான் உனக்குத் திரும்பக் கிடைக்காமலே போகணும்னு நீ கும்புடற தெய்வத்தை வேண்டிக்கோ என் அன்பே. அடுத்த பிறவி எல்லாம் இல்லை. இதோடு நாம் பிரிந்து போறோம். என் ஒற்றை அறையின் துர்க்கந்தம் உனக்கு அனுபவப்பட வேணாம். உன் நாவல் நல்ல வண்ணம் முடிய என் வாழ்த்து.

கண்ணில் துளிர்த்த கண்ணீரோடு வாசலில் போவதற்கு முன் பௌதீக அவஸ்தைகள். முதலில் சிறுநீர் கழிக்க வேண்டும். போய் வந்தாள்.

பசி எடுக்கிறது. ராணுவ அதிகாரியை அல்லது அதிகாரிகளை வாசலில் உட்காரச் சொல்லி விட்டு உள்ளே சமையல் அறையில் முந்தாநாள் செய்து மீந்த ரொட்டிகள் நாலைந்தை வெறும் தண்ணீராவது விட்டு நனைத்துப் பிசைந்து சாப்பிட வேண்டும். நமுத்துப் போன தயிர் மிளகாய்களும் அங்கே உண்டு.

உண்டதற்கு அப்புறமும் பத்து பதினைந்து நிமிடம் காத்திருக்கச் சொல்லலாம். இருக்கச் சொன்னால் இருப்பார்கள். விரோதி என்றாலும் முக்கிய அதிகாரியின் மனைவி. சிறு ஏவல்கள் செய்து தீர்க்கப் பட வேண்டியவை, அவர்களை ஹாலில் இருக்க வைத்து விட்டு, பாத்ரூமில் ஷவரை முழுக்கத் திறந்து விட்டு ஒரு குளியல். சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். கைப்பையிலும் அதே படியான உடுப்புகளை எடுத்து அடைத்துக் கொள்ள வேண்டும். சானிடரி நேப்கின் பொதிவுகளும் கூட. பூப்போட்ட கர்ச்சீஃப். அப்புறம் படுக்கை அறையில் கூடவே இருக்கும் இந்த கல்யாண போட்டோ.

புகைப்படத்தைப் பார்த்ததும் நிலை குலைந்து போய் அழலானாள் நந்தினி. மனதில் திரண்டெழுந்த இறுக்கம் பிரி நெகிழ்ந்து ஆடிக் குழைந்து சிதறியது. எங்கே போகப் போகிறாள் அவள்? ஏன் போக வேண்டும்? விருப்பமில்லாமல் இழுத்துச் செல்லப்படும் பிராணி போல் அவளைக் கூட்டிப் போய்க் குற்றேவல் செய்ய வைக்க யாருக்கு எல்லாம் அதிகாரம், யாரால் கொடுக்கப்பட்டிருக்கிறது?

படுக்கையில் உட்கார்ந்து அழுதபோது இன்னொரு பயம் எட்டிப் பார்த்தது. இப்படியே இங்கேயே முதல் தடவை அவள் உடம்பை அத்து மீறுவார்களோ? எத்தனை பேர்? வியர்வை பெருகிய கை இடுக்கு உடுப்பை நனைக்க, முகர்ந்து பார்த்தாள், இந்த நாற்றத்தோடும், வாயில் புரண்டெழும் துர்வாடையோடும், இன்னும் எத்தனையோ அசுத்தத்தோடும் அவளை ஒரு பன்றியைப் போல், சொறி பற்றிப் பிடித்த நாய் போல் மல்லாக்கக் கிடத்தி மேலேறி இழிகலவி செய்ய வருகிறவர்களை அவளுக்குத் தடுக்க முடியாமல் போகுமோ? ஏன்?

எழலாமா இருக்கலாமா என்று கூட முடிவு செய்ய பலமில்லாமல் அவள் தளர்ந்து இருந்தபோது கூக்குரலாக வெளியே ஆண் குரல் ஒன்று. யாரோ, யாரையோ வெட்டிச் சாய்க்கிறார்களோ. அவள் பயத்தில் உறைந்து போனாள், பிணங்கள் அழுகி நாற, அவற்றுக்கு வெகு அருகில் அவளுடைய உடலில் அத்துமீற நேரம் நெருங்கி வருகிறதோ.

படுக்கை அறைக் கதவு தட்டப்படுகிற சத்தம். தட்டியிருக்கக் கூடாதோ என்ற நினைப்பில் நிறுத்திய மாதிரி அந்தச் சத்தத்தோடு வந்த தெருவின் மங்கிய ஒலிகளும் ஒரேயடியாக நின்று போயின. இன்னொரு ஐந்து நிமிடம் நிசப்தம். மறுபடி மெல்லத் தட்டப்படும் கதவு. மறுபடி நிசப்தம். பொறுக்க முடியாமல் ஓடிப் போய்க் கதவைத் திறந்தாள் நந்தினி.

கதவுக்கு வெளியே நிறையப் பதக்கங்களும் கயிறுகளும் நாடாக்களும் அப்பிய, பச்சை அழுத்தமாகப் பதிந்த ராணுவ உடுப்போடு நடு வயது மேஜரோ வேறே பெரிய பதவியில் இருப்பவரோ ஒருவர் மண்டி போட்டுக் கைகளை ஒருசேர மேலே உயர்த்தி இருந்தார். அவர் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

அந்த அதிகாரிக்கு இரண்டு அடி தூரத்தில் அறை முழுக்க ராணுவத்தினர். வெளியே படிகளில், தெருவுக்கு இட்டுச் செல்லும் நடைபாதையில், வீட்டு வாசலில், தெரு முழுக்க எங்கேயும் ராணுவம் தான்.

அதிகாரி விக்கி விக்கி அழுதபடி ஆடும் பறவை ஆடும் பறவை என்று திரும்பத் திரும்ப ஆப்ரிகான்ஸ் மொழியில் சொல்லிக் கொண்டிருந்தார்.

டான்ஸ் உயல். பௌ. டான்ஸ் உயல். பௌ. பௌ. உயல்.

அந்தக கூவலை உள்வாங்கி அருகே இருந்த அதிகாரிகளும் அவர்களிடமிருந்து அலையலையாகக் கடந்து தெரு வரை, அல்லது அதற்கும் அப்புறம் நின்றவர்களும் ஆடும் பறவை என்று திரும்பச் சொல்லும் சத்தம். ஒன்று சேர முயலும் ஒலிகள் திரண்டு எழும்பி வர, பல கைகள் வானம் பார்க்க நீண்டு உயர்ந்து நின்றதைப் பார்வை சென்ற இடமெல்லாம் சந்தித்தாள் நந்தினி. என்ன பறவை? எங்கே ஆடுகிறது?

மெல்ல எழுந்த ராணுவ அதிகாரி குரல் கரகரக்க நந்தினியின் கைகளை தேவதையை ஸ்பர்சிப்பது போல் பிரமிப்போடு தொட்டார். தெய்வச் சின்னங்களை மரியாதையோடு முத்தமிட்டு வணங்குவது போல் இன்னொரு முறை மண்டியிட்டு அவள் கைகளில் ஆராதகராக முத்தமிட்டார்.

சகோதரி, மூத்த சகோதரி.

நந்தினி எதுவும் புரியாமல் ஒரு வினாடி நின்றாள். அவளுக்கு இவர்களால் இனி எந்தத் துன்பமும் வராது என்று மனதில் பட்டது. அது கொடுத்த ஆசுவாசமே பலமானதாக இருந்தது. சாப்பிடலாம். குளிக்கப் போகலாம்.

வாசலில் மரியாதையோடு நின்று உள்ளே வரலாமா என்று உத்தரவு கேட்டார் அந்த அதிகாரி. அபத்தமான சூழ்நிலை. பழைய பருத்தி அங்கி அணிந்து படுக்கையில் உட்கார்ந்தபடி நந்தினி. அந்த ஆபீஸர் உட்கார வேறு இடம் இல்லை என்பதால் அவரையும் அங்கே அமரச் சொல்லித் தான் கைகாட்ட வேண்டியிருந்தது. படுக்கையில் வேற்று மனிதரை இருக்கச் சொல்லிக் கூப்பிடுவதன் அபத்தம் புலனாக, மெல்லச் சிரித்தாள் நந்தினி.

காட் ஸெ அவொர் சிஸ்டொர். கடவுளின் அக்கா. அவொர் சிஸ்டொர்.

அவர் பிதற்றியபடி உள்ளே வந்து விதிர்விதிர்த்து நின்றார். உட்கார மறுத்து விட்டார். அது மரியாதையில்லை என்பது போல் கையசைத்தார். ஏதோ சொல்லி உடனே வெளியே போக வேண்டிய அவசரம் அவர் அசைவுகளில் தெரிந்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தார் அவர். வாசலை நோக்கிக் கை காட்டினார்.

ஒரே ஒரு செய்தி மட்டும் சொல்ல வேண்டும் உங்களிடம். சொல்ல அனுமதிப்பீர்களா?

அவர் மரியாதை விலகாத குரலில் கேட்டார்.

சொல்லுங்கள் என்று ஆதரவாகக் கூறினாள் நந்தினி.

வாசலில் வைத்த படத்தில் இருந்து அந்தப் பறவை.

அவர் ஆரம்பித்து ஒரு வினாடி நிறுத்தினார். உடல் இன்னும் நடுங்கியது.

அந்தப் பறவைக்கு என்ன?

எல்லாமே தான், அவொர் சிஸ்டொர். நிறைய இறகுகள் உள்ள, வர்ணத்தில் அவை மினுமினுக்கும் பறவை இல்லையா அது. பறவை படத்துக்குள் இல்லை. வெளியே உங்கள் அறைக்கு வெளியே நடனமாடியபடி நின்றது. நீங்கள் கடவுளின் மூத்த சகோதரி என்று செம்மொழியான பிரஞ்சில் அகவியபடி அறை முழுக்கத் தாழப் பறந்து வந்தது. பார்த்தேன். கேட்டேன். அந்தக் குரல். அதை எப்படி மறப்பேன்?

அவர் வாசல் பக்கம் திரும்பவும் உத்தேசமாகக் காட்டி வியப்பு மறையாமல் சொல்ல, நந்தினிக்கு முன்னறையில் மாட்டிய இந்திய ஓவியம் நினைவில் வந்தது. ஆடுகிற ஆண் மயிலும், ஓரமாக நின்று கவனிக்கிற பெண் மயிலுமாக இந்தியத் துணைக்கண்ட ஓவியன் வரைந்தது அது. லண்டனில் ஆர்ட் கேலரிக்கு வெளியே புதியதாக வரைந்த படங்களையும் நகல்களையும் பரத்திப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த போலந்து நாட்டுக் கிழவரிடம் முப்பத்து நாலு பிரிட்டீஷ் பவுண்டுக்கு வாங்கியது அந்த ஓவியம். இன்னார் வரைந்தது என்ற உறுதி தரும் ஆவணம் எதுவும் மயிலாடும் ஓவியத்துக்கு இல்லை என்று கை விரித்து விட்டார் போலந்துக்காரர். Talisman தாயத்து என்று கான்வாஸின் வலது கீழ் ஓரத்தில் எழுதியிருந்தது ஓவியத்தின் பெயராக இருக்கக் கூடும்.

ராத்திரியில் விளக்குகள் அணைக்கப்பட்டதும் படம் மாந்திரீகமான நீல ஒளியைச் சிந்தி அறையையே அந்த நிறத்தில் குளிரக் குளிரக் குளிக்க வைப்பது அவ்வப்போது நடக்கிறதுதான். ஆனாலும் அந்த மயில் படச் சட்டத்தை விட்டு வெளியே வந்து ஆடியதும், பறந்து அறை முழுக்கச் சுற்றியதும், திரும்ப உள்ளே போனதும் எல்லாம் நடந்ததில்லை.

இந்த மாதிரியான நீளமான நீல இறகு கொண்ட மயில்கள் அம்பலப்புழையில் நிறையக் காணக் கிடைக்கும் என்று விடுமுறைக்கு லண்டனில் இருந்து வந்த அம்மா சொன்னாள். வைத்தாஸுக்குப் பிடித்ததால் லண்டனில் வாங்கியது என்பது தவிர வேறே சிறப்பான கவனம் எதையும் இந்தப் படத்தில் வைக்கவில்லை.

பறவை இருக்கட்டும். நீங்கள் சொல்ல வந்தது?

அதிகாரி கை உயர்த்தி உறுதியான குரலில் முழங்கினார்.-

உங்களை யாரும் துன்பப்படுத்த மாட்டார்கள். துரும்பை எடுத்து உங்கள் மேல் தூக்கிப் போட்டாலும் எட்டு சிப்பாய்கள் முன்னால் வந்து நின்று அவர்களை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவார்கள். அதற்கான உத்தரவை இன்று பிறப்பிக்கிறேன்.

அப்போது தான் முன்னால் வணங்கி நிற்பவர் ராணுவத்தில் உச்ச பட்ச மரியாதைகளோடு இருப்பவர் என்று நந்தினிக்குத் தெரிய வந்தது. தேசத்தின் அடுத்த அதிபராகப் பதவி ஏற்கப் போகிறவர் அல்லது ஏற்றவர்.

வைத்தாஸ் ஐயன் நாட்டின் செல்வம். அவருடைய அன்பு மனைவியான நீங்களோ இங்கே இருக்கும் உங்கள் உறவினர்களோ இந்த நாட்டை விட்டு எப்போதுமே வெளியே போக வேண்டாம். வைத்தாஸ் அவர்களும் திரும்பி வந்து எங்களோடு சேர்ந்து இருக்கவே விரும்புகிறோம். அவர் எழுத்தாளர். மகிழ்ச்சியாக இங்கே இருந்து நாவல் எழுதாமல் எதற்கு அவர் தனியாக எங்கேயோ கிடந்து துன்பப் படவேண்டும்? இருந்து எழுத விசாலமான இடம், தட்டச்சு செய்து தரக் காரியதரிசி, புதிதாக எழுதத் தோதான பழங்கதைகளைப் பாடும் நாட்டுப்புற முதுபெண்கள், தேநீர் தயாரித்து வழங்க, கைகால் பிடித்து விட ஊழியர்கள் என்று ஏற்படுத்தி விடலாம். விருதுகளை ஏற்படுத்தி, நாமே ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நூல்களுக்காகக் கொடுத்து விடுவோம்.

ராணுவ அதிகாரி சொன்னதற்கெல்லாம் மரியாதையோடு தலையசைத்து உய் உய் என்று ஆமோதித்து பேச்சை முடிக்க அவசரம் காட்டினாள் நந்தினி,

அந்தப் பறவை படத்தில் திரும்பப் போய் என்னிடம் சொன்னது. உங்களை கடவுளின் மூத்த சகோதரியாகப் போற்றினாலே எம் அரசாங்கம் நிலைக்கும் என்று. அதற்கான உத்தரவும் இன்னும் இரண்டு மணி நேரத்தில் வெளியாகும்.

புதிய ஜனாதிபதி கையை உயர்த்தி, உச்ச பட்ச கௌரவமான விருதை அளிப்பது போல் நின்று அது சரிப்படாது என்று உணர்ந்தவராக, இன்னொரு முறை நந்தினிக்கு முன் மண்டியிட்டார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 24, 2023 19:15

December 20, 2023

மாறிக் கொண்டே வரும் கரடியின் நிலைபாடு= பிடித்துக் கட்டுக

நாவல் தினை அல்லது சஞ்சீவனி இறுதி அத்தியாயம் திண்ணை இணைய இதழில் வந்துள்ளது. அதிலிருந்து

நாவல் திணை அல்லது சஞ்சீவனி இந்த ஆண்டு ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அச்சுப் பதிப்பாக வெளியாகியுள்ளது

நாடு முழுவதும் பல கரப்புகள் கரப்புகளாலேயே கொல்லப்பட்டன. இரண்டு இரண்டு கரப்புகளாக அணைப்பில் இருத்தப்பட்டு இந்த இணையர்களில் ஒருவர் மற்றவரின் தலையை கத்தி போன்ற கால் கொண்டு அறுத்து எறியக் கட்டளை பிறப்பிக்கப் பட்டது. கரகரவென்று தலையறுக்கிற காரியம் அவசரமில்லாமல் நடக்கவும், தலைகள் கீழே விழும்போது பாடிக்கொண்டிருக்கவும் நிர்பந்திக்கப்பட்டன அக்கரப்புகள்.

நெருப்புக் கொளுத்தி தீ கனன்று எரிய கரப்புகள் குடும்பம் குடும்பமாகத் தீயில் விரட்டப்பட்டுப் புகுந்து புகைந்து எரியும் காட்சிகள் நாடு முழுக்க அரங்கேறி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.

நாடு முழுவதும் பெருந்தேளரசரும் குழலனும் கைகோர்த்து நிற்கும் பிரம்மாண்டமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ’இவர்கள் கூடினால் இணை ஏது உலகில்’ என்ற வாக்கியம் கீழே அச்சடித்து வந்த இந்தச் சுவரொட்டிகளைப் படித்து ’கூடினால்’ என்ற சொல்லுக்குச் சிறப்புப் பொருள் கற்பித்து நாடெங்கும் மிஞ்சியவர்கள் சிரிக்க, பிளாஸ்டிக் வாளிகளில் பசை காய்ச்சி எடுத்துப் போகப்பட்டுச் சுவர் தோறும் சுவரொட்டிகளின் கீழே கருப்புக் காகிதம் ஒட்டப்பட்டது.

சுவரொட்டிகளில் சதா சிரித்துக் கொண்டிருக்கிறான் குழலன். தெருவில் சுவரொட்டி ஒட்டிய சுவரைக் கடந்து நாற்பதுக்காரிப் பெண் யாராவது போகும்போது மட்டும் கண் விழுங்காமல் அவள் பின்னே போஸ்டர் குழலன் தொடர்வதாக எங்கும் பரவலாக வதந்தி பரவியது.

ஆடி ஆடி வரும் ஆசனம் பெருத்த மத்திய வயசுப் பேரழகி ஒருத்தியின் பின்னால், சுவரொட்டி ஒட்டி வைத்திருந்த சுவரே நடக்க ஆரம்பித்து விட்டதாகத் தகவல்.

நல்லவேளை பெருமுதுதேளர் கூட்டணியில் இல்லை. இருந்திருந்தால் பையன்மார் யாரும் தெருவில் நடக்க முடியாமல் போயிருக்கும்.

இதெல்லாம் விட முக்கியமான செயல்பாடு, கோகர்மலையின் அபூர்வ பிரஜையான ஒற்றைக் கரடி அரசியலில் அலைபாய்ந்தது தான்.

காலையில் கர்ப்பூரத்துக்கு ஆதரவு செயல்பாடு என்று அந்தக் கரடி அறிவித்தது. முற்பகலில் நீலன் வைத்தியர் எங்கே உண்டோ அங்கே நானும் போகிறேன் என்று குழப்பமாக ஆதரவு தெரிவித்தது.

மாலையில், இறந்த முதுபெருந்தேளரை நாட்டு நலன் கருதி இனி எப்போதும் ஆதரிக்கப் போவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டது. துயிலகத்தில் முதுபெருந்தேளரின் சவத்துக்கு முன் நின்று வினோதமான ஏதோ மொழியில் பேசியது மோர்சிங்க் வாசிப்பது போல் இருந்தது. அதற்குக் கரடியே விளக்கம் சொல்லியது என்ன என்றால் முதுபெரும்தேளர் அடுத்து, கரடி தான், ஆமாம் கரடிதான் நாடாள விரும்புகிறார் என்று.

நடுராத்திரி குழலனுக்கு ஆதரவு தெரிவித்து இனி நான் நிம்மதியாக உறங்குவேன் என்றது பேசிக் களைத்த கரடி.

விடிகாலை பெருந்தேளருக்கு ஆயுள் உள்ளவரை ஆதரவு என்று சுவரொட்டி ஒட்டி அறிவித்தது அந்தக் கரடி.

யாரோடு இந்த நிமிடத்தில் கரடி இருக்கிறது என்று தெரியாமல் போனது. எல்லோரையும் குழப்பிச் சமூகத் தொண்டு புரியும் கரடியை எங்கே பார்த்ததும் உடனே கட்டிப்போடச் சொல்லி அரசு ஆணை.

அப்போது மாறி மாறி ஆடியும் உறங்கியும் செய்திருந்த கரடி நல்ல உச்சி வெயில் நேரத்தில் கட்டு அவிழ்ந்து பறக்கத் தொடங்கியது.

உயரம் போய் இன்னும் உயர்கிற கரடி கீழே நின்று மேல்நோக்கி ஆர்வத்தோடு பார்த்து நின்ற கும்பல் கேட்டபடி குறி அறுத்து விட்டெறிந்து போனதாகவும், துயிலகத்தில் அந்தக் குறி பத்திரமாகப் பேணப்படவிருக்கிறது என்றும் அதிகாரபூர்வமில்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனப்படுகொலை புரிந்து கரப்பு இனம் இல்லாமல் ஒரு வாரம் போனது, இரண்டு வாரம் போனது. அப்புறம் மெல்லச் சாக்கடை ஓரமும் வீட்டுக் குளியலறையின் இருண்ட ஓரத்திலும் ஒன்று இரண்டாக அவை தட்டுப்பட ஆரம்பித்தன.

‘அணுகுண்டு வீசித் தாக்கி மூவாயிரம் ஆண்டு முன் எல்லா உயிரினமும் அழிந்தபோது கரப்புகள் பிழைத்து வந்தன; இந்த உள்நாட்டுப்போர் எம்மை என்ன செய்யும்’ என்று சவால் விடும் உயிரினமாக கரப்புகள் மெல்ல அதிகமாகி வரத் தொடங்கின.

தேள்களும் கரப்புகளும் முன்னிருந்ததைவிட ஆகக் குறைவாக இருந்ததால் கர்ப்பூரம் நிறைய மானுடர்களை முக்கியமான அரச பதவிகளில் நியமித்திருந்தான். எனினும் அந்த மனித ஜாதி நபர்கள் அவன் மேல் எந்த நன்றி பாராட்டுதலும் இன்றி politically correct ஆக குழலனுக்கும் பெருந்தேளரசருக்கும் ஆதரவு தெரிவித்தனர்.

அவர்கள், கரப்புகளை இனப்படுகொலை செய்ததற்காக, யாரெல்லாம் அதில் ஈடுபட்டார்களோ அவர்களை வீட்டுக்குள் பாராட்டி, வெளியே கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். அதேபோல் தேள் வம்சத்தை ஆட்டம் கண்டு கூட்டம் கூட்டமாக இறந்துபட வைத்த தெள்ளுப்பூச்சியினச் செயலையும் வீட்டில் பாராட்டி வெளியே பழித்தனர். மனுஷ தர்மம் அது என்று பெருமையும் பாராட்டினர். தேளாதரவு ஊர்வலங்களின் போதும், கரப்பர் மாநாட்டின் போதும் மனுஷ இனத்தவர் யாரும் தட்டுப்படவில்லை.

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கேக் வெட்டி நீலன், ஆம் அசல் நீலன், பூவுலகு நீலன், அசல் சஞ்சீவனியை வெற்றிகரமாகச் சோதனை செய்ததைக் குயிலியும் வானம்பாடியும் கொண்டாடினார்கள். குழலன் அரசில் புகுந்தபிறகு இந்த மாதிரிக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க ஆரம்பித்ததால், அதுவும் எதிரணியர் முன்கை எடுத்து நடாத்தும் நிகழ்வுகளைத் தவிர்த்தே ஆக வேண்டும் என்பதால் அவன் வரவில்லை. மேலும் ஆல்ட் க்யூ பிரபஞ்ச கசாப்புக்கடை பிரதி நீலன் தான் இங்கே வைத்தியர் நீலனாகக் கருதப்படுகிறார். சகல இன சஞ்சீவனி வந்த பிறகு அசல் சஞ்சீவனியை யாரும் ஒரு பொருட்டாகக் கருதிப் பார்ப்பதில்லை. அதற்காக வசூலித்த கட்டணங்களைக் கூட ஏற்றுமதித் தரத்திலான சகல இன சஞ்சீவனி நிரம்பிய குடுவைகளாகவும், சீசாக்களாகவும் கட்டணம் செலுத்திய சகலருக்கும் திருப்பித் தந்தது தேளரசு. கோலாவை விட இந்த பானம் அதிகப் பிரபலமானது.

தேளரசரோடு கூட்டு இயக்கச் செயல்பாட்டை குழலன் அறிவித்ததும் செய்த முதல் காரியம் கர்ப்பூரத்தை ’அரச மகிழ்ச்சி’ என்ற சிறைச்சாலையில் தனியாகப் பூட்டியதுதான். தேளரசர் சொன்னாராம் – இந்த ஆள் கர்ப்பூரம் அங்கே இருக்கப்பட்ட மத்த எல்லோரையும் கிருத்துருமம் பிடிக்க வச்சு நமக்கு எதிரா நடக்க செஞ்சுடுவானே.

அதைக் கருத்தில் கொண்டு அவனை ஆல்ட் க்யூ பிரபஞ்சத்தில் கொண்டு விடலாமா என்று குழலன் யோசித்திருக்க, விடிந்தபோது கர்ப்பூரம் காணாமல் போனான்.

விடிந்தபோது குயிலியும் வானம்பாடியும் கல்யாணத்துக்குப் போகிறதுபோல் பட்டுப்புடவை உடுத்தினார்கள். சரிகை வேட்டி உடுத்திய பூவுலகு நீலனை அழைத்துக்கொண்டு காலப் படகேறினர் அவர்கள். காலப் படகு ஏறியதுமே நீலன் உறங்கத் தொடங்கி விட்டார்.

எல்லாப் பரிமாணக் கூறுகளையும் அரூபமான பயணம் என்ற அலகுகளுக்குத் திருத்தி காலப்படகும் பயணிகளும் யார் கண்ணிலும் படாதபடி மாற்றினாள் குயிலி.

நகரத் தொடங்கியபோது அந்தப் பெண்கள் கைகுலுக்கி முத்தமிட்டுக் கொண்டனர். குழலனின் அழைப்பு அவன் அளித்த பயோ டிரான்ஸீவரில், குயிலியின் காது மடல் வழியாகக் கேட்டது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 20, 2023 18:58

December 18, 2023

நடக்கத் தொடங்கிய, முழுக்கச் சுவரொட்டி பதித்த சுவர்

தினை அல்லது சஞ்சீவனி நாவலின் இறுதி அத்தியாயத்திலிருந்து. திண்ணை இணைய இதழில் பிரசுரமாகிறது. புத்தகமாக இந்த நாவல் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பாக வெளியாகியுள்ளது

விடிந்தபிறகு தான் கரப்புகள் எவ்வளவு அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. கிட்டத்தட்ட முழு இனப் படுகொலை.

அரசாங்கத்தில் வெவ்வேறு நல்ல பதவிகளில் இருக்கும் மூத்த, நிறம் மங்கிய கருப்புகள் அரண்மனை வாசலில் பழைய மோட்டார் வாகனங்களின் சக்கரங்கள் முன்னும் பின்னும் நகர நசுக்கப்பட்டு ரத்தவாடையோடும் தசை நாற்றத்தோடும் தெரு முழுக்க அங்கங்கே சாணகம் போல் ஒட்டியிருந்தன.

வீடுகளுக்குள் இருந்து இழுத்து வரப்பட்ட கரப்பு இனப் பெண்கள் விஷவாயு சுவாசிக்க வைக்கப்பட்டு உடல் முறுக்கி இறந்தன. பள்ளிகளுக்குள் இருந்து வெளியே உதைத்து அனுப்பப்பட்ட இளம் கரப்புகள் நீர்த்தொட்டிகளுக்குள் அமிழ்த்தப்பட்டு மூச்சு முட்டி மரித்தன.

நாடு முழுவதும் பல கரப்புகள் கரப்புகளாலேயே கொல்லப்பட்டன. இரண்டு இரண்டு கரப்புகளாக அணைப்பில் இருத்தப்பட்டு இந்த இணையர்களில் ஒருவர் மற்றவரின் தலையை கத்தி போன்ற கால் கொண்டு அறுத்து எறியக் கட்டளை பிறப்பிக்கப் பட்டது. கரகரவென்று தலையறுக்கிற காரியம் அவசரமில்லாமல் நடக்கவும், தலைகள் கீழே விழும்போது பாடிக்கொண்டிருக்கவும் நிர்பந்திக்கப்பட்டன அக்கரப்புகள்.

நெருப்புக் கொளுத்தி தீ கனன்று எரிய கரப்புகள் குடும்பம் குடும்பமாகத் தீயில் விரட்டப்பட்டுப் புகுந்து புகைந்து எரியும் காட்சிகள் நாடு முழுக்க அரங்கேறி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.

நாடு முழுவதும் பெருந்தேளரசரும் குழலனும் கைகோர்த்து நிற்கும் பிரம்மாண்டமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ’இவர்கள் கூடினால் இணை ஏது உலகில்’ என்ற வாக்கியம் கீழே அச்சடித்து வந்த இந்தச் சுவரொட்டிகளைப் படித்து ’கூடினால்’ என்ற சொல்லுக்குச் சிறப்புப் பொருள் கற்பித்து நாடெங்கும் மிஞ்சியவர்கள் சிரிக்க, பிளாஸ்டிக் வாளிகளில் பசை காய்ச்சி எடுத்துப் போகப்பட்டுச் சுவர் தோறும் சுவரொட்டிகளின் கீழே கருப்புக் காகிதம் ஒட்டப்பட்டது.

சுவரொட்டிகளில் சதா சிரித்துக் கொண்டிருக்கிறான் குழலன். தெருவில் சுவரொட்டி ஒட்டிய சுவரைக் கடந்து நாற்பதுக்காரிப் பெண் யாராவது போகும்போது மட்டும் கண் விழுங்காமல் அவள் பின்னே போஸ்டர் குழலன் தொடர்வதாக எங்கும் பரவலாக வதந்தி பரவியது.

ஆடி ஆடி வரும் ஆசனம் பெருத்த மத்திய வயசுப் பேரழகி ஒருத்தியின் பின்னால், சுவரொட்டி ஒட்டி வைத்திருந்த சுவரே நடக்க ஆரம்பித்து விட்டதாகத் தகவல்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 18, 2023 04:13

December 14, 2023

பொது யுகம் 300 தேடிச் சென்றடைந்த பொது யுகம் 5000 மக்கள்

தினை அல்லது சஞ்சீவனி நாவல் அத்தியாயம் 43 தற்போது திண்ணை இலக்கிய இணைய இதழில் பதிப்பிக்கப் பட்டுல்ள்ளது. அதிலிருந்து ஒரு சிற் பகுதி.

தினை அல்லது சஞ்சீவனி நாவல் அச்சுப் பதிப்பாக ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் ஜனவரி 2023 பிரசுரமானது

வானம்பாடியின் பயோ தொலைபேசி உள்ளங்கையில் அழைத்தது. காலை நான்கு மணிக்கு குழலனின் அழைப்பு அது. அவனோடு பேசாமல் இரண்டு நாட்கள் அவளுக்கும் குயிலிக்கும் கடந்திருக்கின்றன. எல்லாம் குயிலியும் வானம்பாடியும் ஒரு வாரமாகக் கட்டில் பகிர்ந்து கொண்டதை குழலன் பகடி செய்த பிறகுதான்.

வானம்பாடியின் கட்டிலில் சிறு ஒலி ஏதோ வந்ததில் தொடங்கியது இது. ராத்திரி முழுக்க அவள் புரண்டு படுக்கும் போது வந்த ஒலி என்று ஆறடி தூரத்தில் அடுத்த கட்டிலில் துயின்றிருந்த குயலி சொல்ல, நடுராத்திரிக்கு லேஸர் உபகரணம் பயன்படுத்து வானம்பாடி கட்டிலைப் பிரித்துப்போட்டாள். உள்ளே சிறு ஒற்றுபார்க்கும் கருவி.

எங்கிருந்து வந்த ஒற்றுக் கருவி என்று அறிய வானம்பாடி லேசர் கதிர் அனுப்பியதும் அந்தக் கருவி கர்ப்பூரம் பெயரும் விலாசமும் ஒற்றாடுவதாகச் சொல்லி அமைதியானது.

குயிலி கட்டிலில் கருவி எதுவும் பொருத்தப்படவில்லை என்று லேசர் மற்றும் அல்ட்ரா வயலட் கதிர் அனுப்பி உறுதி செய்யப்பட்ட பின் குழலனிடம் இதைப் பேச காலையில் அழைக்கலாம் என்று இரு பெண்களும் முடிவு செய்து கருவியை முன்னறையில் செயலிழக்கச் செய்து சுவரைப் பார்த்து இட்டனர்.

திரும்பி வந்த வானம்பாடி குயிலியோடு அவள் கட்டிலைப் பகிர்ந்து கொண்டாள். இருவரும் உறங்காத, பின்னிரவு அதிகாலையாக நீட்சி கொண்ட இனிய பொழுது அது.

அடுத்த நாள் காலையில் குழலனிடம் இதைச் சொல்லி அவர்கள் கூடுதலாக எப்படி இன்னும் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்று கேட்க குழலனை அழைத்தாள் குயிலி. தொலைபேசி வேண்டாம் நானே வருகிறேன் என்று உருவம் மறைத்து வந்துவிட்டான்.

வந்ததும் பலகை பலகையாகப் பிடுங்கி எடுத்து அடுக்கப்பட்ட குவியல் வானம்பாடியின் கட்டில் என்று மேலே டர்க்கி டவல், ஸ்டிக்கர் பொட்டு, பேன் சீப்பு அலங்காரங்களோடு அந்தக் குவியல் விளங்கியதிலேயே புரிந்துவிட்டது குழலனுக்கு.

நேற்று எப்படி உறங்கினாய் என்று குறுநகையோடு வானம்பாடியைக் கேட்டான். குயிலி ஒரு சின்னப் புன்னகையோடு வானம்பாடியைக் கட்டி அணைத்துக் கொண்டு சொன்னாள் –

இப்படித்தான் இருந்தோம். அது பதிலாக வரவேண்டும் என்று தானே எதிர்பார்க்கிறாய்? வேறு என்னவாவது தகவல் வேண்டுமா? எப்படி நாங்கள் உறவு கொண்டோம் என்றும் நிகழ்த்திக் காட்டணுமா?

அவள் முகம் சிவக்கச் சொல்ல, வானம்பாடி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் என்று குயிலி முதுகில் தட்டி சிரசில் முத்தமிட்டாள். குழலன் ஒரு நிமிடம் அவர்களை நோக்கிவிட்டு இதெல்லாம் எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லாதது என்பதுபோல் சுவரைப் பார்த்தபடி பேசினான்-

கர்ப்பூரம் வானம்பாடியிடம் ஏதோ எதிர்பார்க்கிறான் ஆனால் குயிலி பற்றி அவனுக்கு அந்த விதமான தகவல் ஆர்வம் இல்லை என்று அவள் கட்டிலில் ஒற்றுக் கருவி பதிக்காததின் மூலம் தெரியவருகிறது. அல்லது வானம்பாடிமேல் அவனுக்குப் புது ஈர்ப்பு வந்திருக்கலாம். நான் இன்றைக்கு இந்த ஒற்றின் பின் யார் எல்லாம் இருக்கின்றார்கள் எதற்கு ஒற்றாடுகிறார்கள் என்று கண்டு பிடித்து விடுகிறேன். நீங்கள் இதைப் பொருட்படுத்தாமல் சேர்ந்து கிடந்து துயிலுக.

இந்த ஆதரவான பேச்சில் நடுவில் வந்த ‘சேர்ந்து’ தான் அதற்கப்புறம் பேச்சு இல்லாமல் ஆக்கியது. குழலன் இன்னொரு பத்து நிமிடம் இருந்து ஒரு காப்பி குடித்து ’சோர்ந்து கிடந்து துயிலுக அது’ என்று பிழை திருத்தம் சொல்லி, குயிலியையும் வானம்பாடியையும் மாறிமாறிப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தான். அவன் சொன்னான் –

கர்ப்பூரம் வீட்டில் சஞ்சீவனி மூலத் தகவல் – core information – இருக்கும் என்று யாரோ சந்தேகப்படக்கூடும். அவர்கள் கர்ப்பூரத்தின் வீடு தவிர அவனுக்கு வேண்டப்பட்டவர்கள் என்று கருதப்படும் உங்கள் வீட்டிலும் சஞ்சீவனி ரகசிய மருந்து உண்டாக்கும் வழிமுறை ஆவணத்தைத் தேடிக் கொண்டிருக்கலாம். வேண்டுமென்றே கர்ப்பூரத்தின் பெயரைத் திசைதிருப்பக் கொடுத்திருக்கலாம். ஆகவே இன்னும் கொஞ்ச நாள் கொஞ்சும் நாளாக்கிக் கொள்ள வேண்டாம்.

சொல்லி விட்டு உடனே காணாமல் போனான் குழலன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2023 20:40

December 8, 2023

கர்ப்பூரனின் அதிரடி நடவடிக்கைகளும் பெருந்தேளன் பதவித் துறப்பும்

தினை அல்லது சஞ்சீவனி நாவலின் அத்தியாயம் 42 திண்ணை இணைய வார இதழில் டிசம்பர் 3 2023 தேதி பிரசுரமாகியுள்ளது. அதிலிருந்து ஒரு பகுதி

தினை அல்லது சஞ்சீவனி நாவல் அச்சுப் பதிப்பாக ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது

மறுபடி கதவு தட்டும் சத்தம். போய்த் திறந்தால் அரண்மனை சேவகத்தில் இருக்கும் மனுஷர்கள் எல்லோரும் திமிராகப் பார்த்துக்கிட்டு கையை இடுப்பில் வைத்தபடி நிற்க, வாசல் பெருக்குகிறவன் எனக்கு முன்னால் விழுகிறது போல் காரித் துப்புகிறான்.

வாயைத் திறந்தபடிக்கு அவன் சொல்கிறான் யோவ் பெருந்தேளு இந்த மாசம் சம்பளம் எப்போவரும்? கூட நிற்கிற பெண் தேள் உடல் சாஸ்திரப்படி பேரழகி. மனுஷ உடல் சாஸ்திரப்படி என்னவோ. அவள் காரித் துப்பின பயலுக்குப் பின்பாட்டு பாடற மாதிரி சொல்றாள் – பெரிசு சகல ரோக சஞ்சீவனி பாட்டில் பாட்டிலா கொடுக்கறேன் வாங்கிட்டுப் போன்னு சொல்லிடாதே. அந்த பீக்காட்டுத் தண்ணியை வெளியே போய்ட்டு கால் கழுவக்கூட பிரயோஜனப்படுத்த முடியாது. நாறிக் கிடக்குது எளவு. அதைக் குடிச்சா முன்னாலும் பின்னாலும் நீண்டு போகும்னு சொன்னீங்க.

உங்கிட்டே எப்ப சொன்னாள் அந்த ஆள் என்று துப்பன் அவளைக் கேட்க ஆமா அதுவேறே கேட்கணுமாக்கும் என்று நொடித்தாள் தேள்லட்சண அழகி. திடீரென்று பின்னால் ஒரு கும்பல், சஞ்சீவனி குடிக்கக் கொடுத்து குடிக்கறதுக்கு ரெண்டு பைனரி காசு கூலி கொடுத்து பரபரப்பாக போன வாரம் வரை வேலை பார்த்துட்டிருந்த பயலுக சம்பளம் கேட்கறானுங்க.

காசு எங்கே டிஜிட்டல் மரத்துலேயா விளையுது இல்லே பைனரி வயல்லே முளைச்சு வருது. போன வாரம் வரை எப்படியோ சமாளிச்சுட்டு போயாச்சு. இப்போ என்ன பண்றது? தேளரசர் அலைபாய்ந்தபடி நிற்க வந்துட்டேன் என்று தெம்பாக ஒரு குரல்.

கர்ப்பூரம் தான். போன உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது பெருந்தேளரசனுக்கு. அவரைப் பார்த்துக் கையசைத்து விட்டு கூட்டத்துக்கு முன்னால் வந்து நின்றான் கர்ப்பூரம்.

அண்ணன்மாரே அக்காமாரே தங்கச்சிமாரே தோழிமாரே

எல்லா மாரும் இருக்கட்டும் நீ சொல்ல வந்ததைச் சொல்லு என்று துப்பல் பயல் திரும்பக் குறுக்குச்சால் ஓட்டினான்.

நீங்க எல்லோரும் இவ்வளவு பொறுமையாக இருந்ததுக்கு நன்றி. குகைக்குள்ளே அந்த ஓரத்துலே நல்ல வெளிச்சம் தெரியுது என்று எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிப் பெண் ஊழியர்களின் நாணப் புன்னகை கிடைக்கப்பெற்றான் கர்ப்பூரம்.

என்ன சொல்லிவிட்டேன் இந்தப் பெண்டுகள் நாண? புரியவில்லை. விஷயத்துக்கு வருவோம். இன்று நீங்கள் வீடு திரும்பும்போது ஒரு மாத சம்பளம் தரப்படும். இந்த ஞாயிறு சம்பள பாக்கி எல்லாம் கொடுத்துத் தீர்க்கப்படும். கர்ப்பூரம் முழுமுதல் பேரரசனாக முழங்க, தேளர் சகல அதிகாரமும் பறிபோனவனாக உடலும் மனமும் தளர்ந்து காட்சியளித்தார்.

கல்பூரன் வாழ்க என்று தப்பும் தவறுமாக முழங்கிக் கொண்டு அந்தக் கூட்டம் திரும்பப் போனது. துப்பல் மயிரான் வாலைச் சுருட்டி காலுக்கு நடுவில் இடுக்கி வைத்துக்கொண்டு பயந்தபடி போனதை ஓரக் கண்ணால் பார்த்தான் கர்ப்பூரம். அவன் எப்போதடா பேசப் போகிறான் என்று ஆவலோடு கொடுக்கை ஆட்டாமல் சகல மரியாதைகளோடும் நின்றிருந்தார் பெருந்தேளர்.

ராஜா உன்னைத்தானப்பா ராஜன் பெரும்தேள்பெண்டிர் மாட்டி இருந்த நகை எல்லாம் எங்கேப்பா?

இங்கே தான்

இங்கேன்னா?

தேளழகிங்கற என் வைப்பாட்டி வச்சிருக்கா

அவளை சுகிக்கணும்னா இப்பவே செய்யுங்க நான் அந்தப்பக்கம் திரும்பிக்கறேன்.

எனக்கு அவ்வளவு அவசரமா ஒண்ணும் அந்த சிந்தனை வரல்லே

அந்தக் கதை எல்லாம் வேணாம் ஒரு பத்து நிமிஷம் அனுபவிச்சுட்டுக் கண்ணைக் காட்டுங்க சிற்றின்பத்துக்கு அப்புறமான பேரின்பம் கிடைக்க வழி செஞ்சுடலாம். அவளை நையப் புடைன்னு சாதாரணமா எங்க காலத்தில் வெளக்குமாறால் தேள் அடிக்கற மாதிரி அடிச்சுக் கொன்னுடலாம். அவள் கிட்டே கொடுத்திருக்கற நகையை எல்லாம் ஆல்ட் க்யூ பிரபஞ்சத்தில் வித்துட்டா ஒரு மில்லியன் பைனரி நாணயம் கிடைக்கும் அதை வாங்கி வந்து சம்பள பாக்கி தீர்த்துடலாம். கூடவே பாதி விலைக்கு சகல இன சஞ்சீவினி தர்றோம்னு ஆல்ட் க்யூ பிரபஞ்சத்திலே நீரே போய் விளம்பரம் செஞ்சுட்டு வாரும். எப்படி விற்காமல் இருக்கும்”

ஒரு நீளக் கதையைச் சுருக்கி உரைக்கறதும்பாருங்க அப்படி பெருந்தேளருக்கு வைப்பாட்டி போகத்தில் சிறுதேள்பெண்டுகிட்டே கொடுத்த நகைகள் பிடுங்கப்பட்டன, ஆல்ட் க்யூ பிரபஞ்சத்தில் அவை விலைக்கு விற்கப்பட்டு எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிட்டியது.

எல்லாவற்றுக்கும் மேல், சகல இன சஞ்சீவனி பாதி விலைக்குத் தருவதாகச் சொன்னதும் ஒரு குடுவை பாக்கி இல்லாமல் மருந்து அங்கே ஏற்றுமதி ஆகி விற்று இன்னும் ஒரு வருஷம் நிம்மதியாக தேளரசு நடத்தலாம் என்ற நம்பிக்கை.

எல்லோருக்கும் எல்லா அரசாங்க சம்பள பாக்கியும் கொடுத்துத் தீர்க்கப்பட நாட்டு மக்களுக்கு பெருந்தேளரசர் மேல் நம்பிக்கையும் பிரியமும் சேர ஆரம்பித்தது.

கர்ப்பூரம் எல்லாப் பெருமையும் எனக்கே என்று அடக்கமாக அந்த மதிப்பு மரியாதையை மடைதிருப்பி விட்டுக் கொண்டிருந்தான். எல்லோருக்கும் அரசு தரப்பில் இருந்து சேர வேண்டிய பணம் போய்ச் சேர்ந்திருக்க, அதன் மூலம் தனியார் தரப்பு கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நிறைவேற, பணம் வந்தவர்கள் அத்தியாவசியச் செலவு எல்லாம் செய்து மிஞ்சியதை இன்பம் நுகர மது மாது என்று செலவு பண்ண சிறப்பு தீனி என்று மானுடக் கழிச்சலை கரப்புகள் சுவைத்து உண்ணக் காசு மிஞ்சிட, நாட்டில் பணப் புழக்கம் அதிகமானது.

பெருங்கர்ப்பூரம் வாழ்க என்ற வாழ்த்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக எங்கும் பரவ மனமே இல்லாமல் கர்ப்பூரம் அவற்றை அடக்கி வைத்தான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2023 19:36

December 7, 2023

சகல இன சஞ்சீவனி கடை விரித்தோம் கொள்வார் அநேகம் கட்டற்க

தினை அல்லது சஞ்சீவனி நாவலின் 42-ஆவது அத்தியாயம் திண்ணை இணைய வார இதழில் பிரசுரமாகி உள்ளது (டிசம்பர் 2023 தேதி 3). அதிலிருந்து சில பகுதிகள்.

நாவல் அச்சுவடிவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு

சகல இன சஞ்சீவனி ஏற்றுமதிக்காக உருவாக்கி வாங்குவார் இல்லாமல் போன கண்கவரும் தகரக் குடுவைகள் கோகோ பானக் குடுவைகள் போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மாட்டு ஈக்களின் இறகுகளும், கால்களுமாக மிதந்து கொண்டிருக்கும் திரவம் கறுப்பு வண்டல் கீழே தேங்கியிருக்க மேலே அழுக்கு நெடியும் நிறமுமாக காய்ச்சிக் கிளறப்பட்டபடி எங்கணும் நிறைந்திருந்தது.

சில குடுவைகளில் இருந்து திரவம் கசிந்து அவை வைத்திருக்கும் இடம் முழுக்க பாதாளச் சாக்கடை வாடை தூக்கலாக மேலெழும்பிக் கொண்டிருந்தது.

மெல்ல ஊரும் வாகனங்கள் கதவு திறந்திருக்க சுற்றிலும் ஈரவாடையோடு அரண்மனை நோக்கி வரிசையாகப் போய்க்கொண்டிருந்தன.

குடுவைகளை கிடங்குகளில் சேர்த்து வைக்க இன்னும் இடமில்லாமல் பள்ளிக்கூடங்களிலும் அரசாங்க அலுவலகங்களிலும் அவசரமாகச் செய்யப்பட்ட அலமாரிகளில் அடுக்கப்பட்டு அந்த இடமும் நிறைந்துபோக, தேளரசரின் அரண்மனை மட்டும் மிச்சமிருந்தது.

இப்போதைக்கு அரண்மனையைக் கிடங்காக்கலாம் என்று முடிவு எடுத்தது கர்ப்பூரம்தான். அதுவும் போக வர வழிகூட விடாமல் சுவரோடும் கதவோடும் அலமாரி உயர்ந்து வரக்கூடிய கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தைக்கூட இல்லாமல் ஆக்கிவிட்டன.

சகல சஞ்சீவினி வாடை எதிர்பார்த்தபடி தேளரசருக்குப் பிடித்துப்போனது. முந்தாநாள் தான் அரண்மனை கிடங்கு ஆனது. அந்த வாடையில் இளம்பெண் தேள்களுடன் கூட பெருந்தேளருக்குப் போதை கூடியது.

வக்காளி வைத்தியன். சகலன்னு மருந்தோட பெயரைச் சொல்ல ஆரம்பிச்சதுமே விரைக்குது வாடையை முகர்ந்தா வேறே எண்ணம் ஏதும் வரல்லே சம்போகம் தான் இதோட சோறு கொஞ்சம் தின்னா வயிறு நிறைஞ்சு போகிற மாதிரி மருந்து பலன்லே கூட்டிச் சேர்த்தா அசல் சஞ்சீவினி என்ன அதோட பாட்டன் கூட இந்த சகல இன சஞ்சீவனிக்கு முன்னே நிக்காதே. அந்த மருந்துக்கு உள்நாட்டுக்காரர்கள் பெயர் வச்சிருக்கறதா கேள்வி. உடன் உப்பும் சகலருக்கும் சஞ்சீவனி. வக்காளி.
இதோட ரெண்டு தடவை சொல்லிட்டார் அவரை அறியாமலேயே.

பேசாமல் இருக்கப்பட்ட மருந்தை எல்லாம் எடுத்துக்கிட்டு, சாப்பாடையும் கொஞ்சம் போல எடுத்துக்கிட்டு வேறே கிரகம்,, வேறே சூரிய மண்டலம், வேறே பிரபஞ்சம் போய் அட தனியாகப் போய் என்ன பண்றது நாலைந்து தேளழகிகளோட போயிட வேண்டியதுதான். (மேலும்)

அப்பாராக இருந்தால் இளந்தாரி பையன்கள் தான் வேணும். பாவம் தெள்ளுப்பூச்சி கொட்டிக் கொட்டி முழுசா பரலோகம் போயிட்டார். அதெப்படி திடீர்னு துயிலகத்துலே தெள்ளுப்பூச்சி எப்படி வந்தது? அங்கே மட்டுமில்லே. நாட்டுலே திடீர்னு எப்படி படை பட்டாளமாக வெட்டுக்கிளிப்படை மாதிரி வந்தது? ஏன் தேளர்களை மட்டும் தேடித்தேடிக் கொலை செஞ்சுது, அழுக்கு வேட்டி மாதிரி படையாகத் திரும்பிப் போனது? (மேலும்)

மனுஷ இனத்துக்கு கிருமிக் காய்ச்சல் மாதிரி தேளை அழிக்க தெள்ளுப் பூச்சி போல் இருக்கு (மேலும்)

எல்லாம் இந்த கிருத்திருமம் பிடிச்ச கர்ப்பூரம் கைவேலையா இருக்கக் கூடும். வைத்தியனை ஏதாவது கொடுத்து சரிக்கட்டி இருப்பான் கிரகசாரம். என்ன மருந்தோ நேத்து அடுக்கின மருந்து மூத்திரவாடை. அவனவன் குடுவையிலே பெய்ந்து அனுப்பியிருக்கான்.
(மேலும்)

ஏற்றுமதிக்குன்னு சொல்லி கண்ட பயல்கல் சீசாவிலே பேஞ்சதை எல்லாம் படுக்கை அறையிலே சேர்த்து வைக்கணும்னு விதியா என்ன? இதுக்கு ஒரு வழி கண்டுபிடிக்கணும். வரட்டும் கர்ப்பூரம். ஏதாவது வழி செய்வான் அந்தப் பயல்.

ஓவென்று பெருஞ்சத்தம் கதவைத் திறக்காமல் சாவித் துவாரம் வழியே பார்க்க, ஒரு பத்தாயிரம் கரப்புகள் அரண்மனையை ஆக்கிரமிக்க வேகமாகந் நகர்ந்து வந்தன. சுவரெல்லாம் கரப்பு. தரையில் கிடந்து சட்டென்று பறந்து பயமுறுத்தும் அவற்றில் சில.

தேளரசரின் வைப்பாட்டிகள் பெற்ற, அண்மையில் பிறந்த தேள்சிசுக்கள் தாய்க் கரப்புகள் பாலூட்ட கண்மூடி இருக்க, உள்ளே வந்த கரப்புப் பட்டாளம் சிசுத் தேள்கள் மேலேறி கால்களை பல்கொண்டு அறுத்து உண்டன. நெற்றியில் தேள்சிசுக்களை நோண்டி தலைச்சோறு எடுத்து சுறுசுறுப்பாக உண்டன அவை; ஜாக்கிரதையாக சின்னஞ்சிறு தேள் கொடுக்குகள் மேல் எச்சில்கொண்டு நனைத்து அவசரமாக அவற்றை விழுங்கின.

சமையலறையில் பாத்திரம் எல்லாம், எரியாத அடுப்பு எல்லாம், கழிப்பறை முழுக்க கரப்புகள் அரன்மணை முழுக்க ஊர்ந்திருக்க, படுக்கை அறைக் கதவைத் திறக்காமல் கட்டிலில் அமர்ந்திருந்தார் பெருந்தேளரசர். தடதடவென்று பாத்ரூம் கதவை இடிக்கற சத்தம். இனத்துக்கேயான எதிர்ச்செயல் போல சட்டுனு தரையிலே ஒரு விரிசல்லே உடனே பதுங்கிக்கிட்டார் பெருந்தேளர்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 07, 2023 19:31

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.