இரா. முருகன்'s Blog, page 28

September 8, 2023

பத்து நூறு ஆண்டுகள் துயில் கொண்டு கண்விழித்த நீலன் வைத்தியர் – தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

தினை அல்லது சஞ்சீவனி நாவல் அத்தியாயம் 31-இல் இருந்து ஒரு சிறு பகுதி

நீலன் வைத்தியர் எழுந்து விட்டார்.

பெருந்தேளர்தம் பேரரசு நடாத்தும் நிலந்தரை எங்கணும் இதுதான் பேச்சு. கரடி குட்டிக்கரணம் அடித்தபடி பறந்ததைக் கூட யாரும் லட்சியம் செய்யவில்லை.

போன வாரம் வரை இப்படி ஆகியிருந்தால், எப்படி, கரடி கரணம் அடித்தபடி பறந்திருந்தால் வீடுகளில் கலவி செய்திருக்கும் மானுடரும் வளையில் புணர்ந்தபடி இருக்கும் தேள்களும் ரதி விளையாட்டு நிறுத்தி கரடியின் இடுப்பை ஆர்வமாக நோக்கி, ரசிக்க அங்கங்கே தலையுயர்த்தி நின்றிருக்கும்.

நீலன் வைத்தியர் எழுந்திருந்தால் கரடியை விட அவர் தான் கவன ஈர்ப்பு செய்யக் கூடியவர்.

அவர் எழுந்திருந்தார் என்ற பேச்சு தேளரண்மனையில் தான் முதலில் தொடங்கியது. அங்கே சாதாரணமாக முதுபெருந்தேளர் பற்றிய வம்பு, வதந்தி, அக்கப்போர் தான் அவ்வப்போது ஆரம்பிக்கும். ஏமப்பெருந்துயில் மண்டபத்தில் அவர் துயிலும் மாண்பு குறித்து வேடிக்கையாக விதந்தோதப் படுவதாக இது பெரும்பாலும் இருக்கும்.

இன்று காலை முதுவர் ஓய்விலிருக்கும் மண்டபத்தில் திடீரென்று அண்டங்கள் நடுங்க, தரை பிளக்க, சுவர் விரிசல் விட ஒரு பெரும் சத்தம் உண்டானது.

எல்லோரும் முதுவன் உறங்கும் பேழை அருகே போய்ப் பார்க்க, பேழை கிட்டத்தட்ட மின்னல் வெட்டி இடி இடித்து இரண்டும் ஒரே நபர் மேல் விழுந்தது போல் முதுவர் பேழைக்கு கேடு சூழ்ந்தது கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள்.

நுண்மான் நுழைபுலம் மிக்க அறிஞர்களும் தொழில் நுட்ப வல்லுனர்களும் பேழை புதியதாக மாற்றும் முன் என்ன ஆயிற்று என ஆராய்ந்தபோது தெரிந்தது என்ன என்றால் – முதுவர் வாயுப் பிரிந்ததே காரணம்.

அவர் துயிலரங்கில் பேழையுறங்கும் இந்த முன்னூறு ஆண்டுகளில் மொத்தம் ஏழு தடவை மண்டபத்தில் சூழ்ந்திருக்கும் பேழைகளில் உறங்கும் பெண்டிரைப் பார்த்துத் திரும்பிப் படுக்கவும், நூற்று முப்பத்தேழு முறை அதேபோல் உறங்கும் குமரரை நோக்கி காமம் மிக்கூரத் திரும்பிப் படுக்கவுமாக பெருஞ்சத்தமாக அப்போதெல்லாம் உடல் அசைத்திருந்தார் முதுவர்.

முன்னூறு ஆண்டில் முதலாவதாக வாயுத் தொல்லை காரணமாகப் பேழை பழுதடைய அதை மாற்ற வேண்டிப் போனதாக அரசறிவிப்பு கூறும்.

இனி தினமும் அவருடலுக்கு முன் பேழைக்கு அருகே வைத்து அடுத்த நாள் எடுத்து வேறு புதியதாகப் படைக்கும் உணவில் மொச்சைச் சுண்டல் வைக்க வேண்டாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மொச்சை புறம் பேசும் என்ற ஆன்றோர் மொழி கேட்டு இம்முடிவு எடுக்கப் பட்டது.

துயில் முழுக்கக் கலைந்து அவர் எழும்போது போர் முழக்கமாக எதிரிகளை நடுநடுங்க வைக்க அவர் நீட்டி நிமிர்ந்து கம்பீரமாக நின்று வாயு பிரியட்டும். இப்போது உறங்கட்டும்.

இதற்கான அறிவிப்பு இன்று காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனில், எதிர்பாராமல் கோகர் மலை அரசியல், சமூக, பொருளாதார அரங்கில் பெருமாற்றமெழ வைக்கும் வேறொரு சம்பவம் நிகழ்ந்தது கண்டீர்.

இது குறித்த அரசு அறிக்கை சொல்வது –

முதுபெருந்தேளர் தாற்காலிகமாக உயிர்கொண்டு எழுந்தார் என்பதை மகிழ்ச்சியோடு இவ்வரசு அறிவிக்கிறது.

அவர் எப்போதும் எழுந்ததும் தான் இருக்கும் மண்டபத்தை நடந்து சுற்றி வருவது வழக்கம். தன் அருகில் உயிர்த்திருப்பவர்கள், துயில்கிறவர்களின் நலம் பேணுவதில் அக்கறை மிகுந்தவர் என்பதால் அடுத்த பேழைக்குள் புதியவராக நீலன் வைத்தியர் உறங்குவது கண்டு சிறிது வியப்படைந்ததாகத் தெரிகிறது.

தன் அருந்தேள் ஆற்றலைப் பயன்படுத்தி நீலர் துயிலும் பேழையின் மூடியை தன் கரத்தால் தூக்கி நலம் விசாரித்தார் என்பதையும் அறிவிப்பதில் தேளரசு கூடுதல் உவகை எய்கிறது.

நலம் விசாரிப்பைப் பரிமாறிக் கொண்டபின் முதுபெருந்தேளரும் நீலன் வைத்தியரும் அடுத்து சஞ்சீவனி உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பதில் மனநிறைவு தெரிவித்தார்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

நடக்கவில்லை, ஓடுகின்றன என்று நீலன் வைத்தியர் மொழிந்ததை முதுவர் ரசித்தார். முதுவர் நம் பெருமதிப்புக்குரிய விருந்தினர் என்று நீலன் வைத்தியரைக் குறிப்பிட்டு, இந்தக் கவுரவப் பட்டத்தை ஏமப் பெருந்துயில் மண்டபத்திலோ பெருந்தேளர் அரண்மனையிலோ வைத்து நீலருக்கு வழங்குதல் சாலச் சிறந்தது என்று கருத்துத் தெரிவித்தார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 08, 2023 02:52

September 6, 2023

நெய் வடியும் கேசரியும், தோசைகளும், பயோ சில்லுகளும்

நாவல் தினை அல்லது சஞ்சீவனியில் இருந்து – அத்தியாயம் 30 சிறு பகுதி
சில்லு பதிக்கச் சொன்னா வல்ல பயகளும் மாட்டேன்னு ஓடிடுவான். இப்போ பாரு அவனவன் வந்து தோசை தின்னுட்டு ஆயுசுக்கும் அவனைக் கொத்தடிமை ஆக்கற சில்லு பதிச்சு விடு பதிச்சு விடுன்னு பிடுங்கி எடுத்து சில்லனாகி விட்டது மொத்த கோகர்மலைநாடே.

இந்தச் சில்லுகளை வைத்து ஒவ்வொரு தேள். கரப்பு, மனிதர், இதர ஜீவராசிகள் பெருந்தேளர்ப் பெருமான், அவரது அன்பு மனையாட்டி பெருந்தேள்ப்பெண்டான நீவிர் என இனி பிரஜைகளை ஒவ்வொருத்தரையும் கவனிப்பில் வைக்க முடியும்.

இது கேட்ட பெண்டு களி கூர்ந்து அப்போ, ஒரு சில்லு என்ன, ஒரு நூறு சில்லு பதிச்சுடலாமே என்றாளாம். உடம்பிலே அதை எல்லாம் பதிக்க இடம் வேண்டாமா என்று பெருந்தேளர் ஆட்சேபணை தெரிவிக்க அது நிற்கவென்று அப்போது கடந்தார்களாம்.

இதை அரண்மனை தினசரி நடவடிக்கை அறிக்கை சொல்கிறது. மேலும் இவற்றோடு சஞ்சீவனி மருந்தை எப்படி அதற்கான சிறப்புக் கோப்பையில் வார்த்து வாய்க்குள்ளோ, உதடு பட எச்சில் விழ வைத்தோ பருகாமல் ஒரு மடக்கில் எப்படிப் பிடித்து வாயில் ஒரு வினாடி சுவைத்து வயிற்றில் செலுத்தப்பட வேண்டும் என்று பயிற்சி தர சஞ்சீவனி பட்டறை முற்றிலும் காசு செலவின்றி இன்று முதல் நடத்தப்படுகிறது.

இந்தப்படி அறிவிக்கப்பட்டுள்ளதால் பயிற்சிக்காக ஓடோடி வந்து பழைய இரும்பு நாற்காலிகளை நிறைத்துக் காத்திருந்த பதவி ஓய்வு பெற்ற முதியோர் அதிகம் தட்டுப்பட்டார்கள்.

இந்தப் பயிற்சி இன்னும் நாற்பத்தைந்து நாளில் அடுத்த வட்டம் நிகழ்த்தப் படும். அப்போதும் இவர்கள் இந்தப் பயிற்சியில் இடம் பெறுவார்கள்.

வீடுகளில் சும்மா இருக்கப்பட்டவர்கள் என மானுட இனத்தில் மட்டுமில்லை, தேள், கரப்பு, ஈமு எனப் பல தரப்பட்ட உயிரினங்களிலும் மூத்தோர் விலக்கல் யாரும் சொல்லாமலேயே கடைப்பிடிக்கப்படுவதால் அனைத்து இன முதியோருக்கும் ஒன்றரை மாதத்துக்கு ஒருமுறை சஞ்சீவினி பருகும் பயிற்சி முகாம் கிரமமாக நடத்தப்படும்.

மருந்து எந்த நிமிடமும் வந்து சேரப் போவதால் இந்தக் கிழவரணி எதிர்பார்த்திருந்து வேண்டி முதல் வரிசையில் நிற்பார்கள். அந்த நேரத்தில் வயோதிகம் காரணமாக இறந்துபடவும் கூடும். அதற்குள் சஞ்சீவனி பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று அரசு சார்பில் அறிக்கைகள் சொல்லின.

அந்த நேரத்தில் தான் ஊடகங்களுக்குக் கொஞ்சம் சுதந்திரத்தை அனுமதித்தார் பெருந்தேளர். கர்ப்பூரத்தின் ஆலோசனைப்படி ஒரு நாளிதழில் மாதம் ஒன்றுக்கு ஐந்து பக்கத்தில் தேளரசை விமர்சித்து எழுதலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.

சஞ்சீவனி விளம்பரம் அந்தப் பத்திரிகைகளில் அரைக் கட்டணத்தில் அல்லது முழுவதும் விலையின்றி வெளியிட வேண்டும் என்று எழுதப்படாத ஒப்பந்தப்படி ஊடகங்களும் நிர்வாகமும் ஒருமித்து செயல்பட்டு சஞ்சீவனி விளம்பரமும் விமர்சனமும் ஒரே தினம் பரப்பிக்கப் பட்டு இரண்டுக்குமான நிலைபாட்டை எடுக்க மானுடர் மற்ற இதர இனத்தினரைத் தூண்டுவதாக அமையப் போகிறது.

சஞ்சீவனி குறித்த பிரக்ஞை உருவாக, அதன் நீட்சியாக சகல தளங்களிலும் பரந்துபட்ட நல்விளைவுகளை, அவை உருவாக்கி வளர்த்தெடுக்கும் விழுமியங்களைப் பற்றிய அனுபவ விதானம் விகாசமடையத் தேவையான சிறு மாற்றங்களின் அவசியத்தை உள்வாங்கி அவற்றைத் தேவையென்றால் பகுதியாகவோ முழுமையாகவோ ஏற்று சஞ்சீவனியின் ஆழ அகல நீள மற்றும் காலப் பரிமாணக் கூறுகளை மிகச் சரியாக அவதானித்து மாற்றி அலகிடப்படும். ஒன்றிலிருந்து ஒன்றாக நன்மைகள் தடையின்றிப் பெருகும் காலமாகும் இனி.

பிரபல இலக்கிய அரசியல், அரசியல் இலக்கிய விமர்சகர் கரடி இது குறித்துச் சொன்னது மேலே இருப்பது.

சஞ்சீவனி பிரக்ஞையின் பகுதியாக அவ்வொப்பற்ற மருந்து குறித்து புனைவு, அல்புனைவு தளங்களில் படைப்பாளிகளின் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. சஞ்சீவனி பற்றிய அறிவியல் கட்டுரைகள், வேதியியல், நுந்துகளியல், இயற்பியல், மருத்துவம் குறித்த ஆய்வுகளை விவாதிக்கும் கட்டுரைத் தொகுப்புகள் போன்றவற்றில் சிறந்த ஆக்கங்களுக்கு எழுபத்தைந்தாயிரம் பைனரி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும். சஞ்சீவனி தூலமாகவோ, பயன்பாட்டு விளைவாகவோ பங்குபெறும் சிறந்த ஒரு நாவலுக்கு நூறாயிரம் பைனரி நாணயங்கள் முதல் பரிசும் சற்றுக் குறைந்த தொகைக்கு அடுத்த நிலை வெகுமதிகளும் அளிக்கப்படும். (இந்த நாவல் ’தினை’ பரிசுப் போட்டிக்கு அனுப்பப் பட்டிருக்கிறது).

பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் ‘ இந்த சஞ்சீவனி அக்கப்போரை எல்லாம் அரசு ஏன் செய்து கஷ்டப்பட வேண்டும். செய்க என்று உத்தரவிட்டால், நாங்கள் உங்கள் சார்பில் செய்கிறோம். அரை விழுக்காடு கமிஷன் போதும்’ என்று வந்திருப்பதாக சஞ்சீவனி தொடக்க விழா தினத்தில் கர்ப்பூரத்திடம் பெருந்தேளர் கூறினார்.

நல்ல வேளை, அதற்கு சம்மதம் என்று தலையாட்டி விடாமல் போனீர்களே என்றான் கர்ப்பூரம்.

அந்த அரை விழுக்காட்டில் நாற்பது விழுக்காடு அல்லது கலந்து பேசிச் சம்மதித்த ஒரு பங்கு எனக்குத் தருவதாக ஆசை காட்டினார்கள் என்றும் கூறினார்.

கர்ப்பூரம் பூடகமாகச் சிரித்தான்.

நீங்களே பெருமுதலாளி நிறுவனம் நடத்த ஆரம்பித்தால் என்ன?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2023 03:53

September 4, 2023

ஆயுள் நீட்டிப்பு மருந்து பருகப் பயிற்சி அளித்தபோது

தினை அல்லது சஞ்சீவனி நாவல் அத்தியாயம் 30 இல் இருந்து ஒரு சிறு பகுதி

பெருந்தேளர் மாளிகை விழாக் கோலம் பூண்டிருந்தது. விடியற்காலையில் பெருந்தேளர் சஞ்சீவனி எதிர்கொள்ளுதலைத் தலையாய கடமையாகப் பிரகடனப்படுத்த இருக்கிறார். ஒவ்வொரு குடும்பமும் பெருமகிழ்ச்சியோடு சாவா மருந்து பருகி நீள உயிர்க்கப் போகிறார்கள். குடும்பம் இல்லாத ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் சஞ்சீவனி பெருமருந்தை உடலில் ஏற்று மரணமில்லாப் பெருவாழ்வு வாழத் தயாராக இருக்கப் போகிறார்கள்.

அதிகம் யாரும் செலவழிக்கக் கையைக் கட்டிக்கொண்டு தேளரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. வெறும் ஒன்றரை பைனரி காசு செலுத்தி என்ன என்ன எல்லாம் உடல் நலமூட்டப்படப் போகிறார்கள் ஒவ்வொருவரும்.

ஒரு பிஸ்கோத்து பாக்கெட்டின் விலையில் நான்கில் ஒரு பங்கு. ஒரு கோப்பை காப்பி விலையில் பத்தில் ஒரு பங்கு, ஓர் ஆணுறை விலையில் இருபதில் ஒரு பங்கு. ஒன்றரை பைனரி காசு, வயது நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் ஆளாளுக்கு ஒரு பைனரி காசு அடைத்தால் போதுமானது. எழுபது வயதிலிருந்து விலையின்றி இச்சேவை அளிக்கப்படும்.

என்ன எல்லாம் மருத்துவ சேவைகள் குடிமக்களுக்குக் கிடைக்கப் போகின்றன?

நகரும் ஊர்தியிலிருந்து ஒலி வாங்கியைக் கையில் பிடித்தபடி ஒரு பைனரி நாணயம், ஓராயிரம் நன்மை வெற்றிபெற வந்து பங்குபெறும்படி மறுபடி மறுபடி வேண்டி விரும்பும் உற்சாகமான குரல் கர்ப்பூரமய்யனது- ஒலிப்பதிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் குரல்.

அவன் சொல்கிறான் -வயிற்றை முதலில் சுத்தம் செய்ய தொண்டை வழியாகவும் ஆசனவாய் மூலமும் ஒரே நேரத்தில் காற்றைச் செலுத்தி ஜீரண அமைப்பு முழுக்கச் சுத்தமாகின்றது.

பெருங்குடல் எந்தக் கசடும் தூக்கிச் சுமக்காமல் கழிவெல்லாம் இறங்கி சோப்பு நீர்கொண்டு சுத்தப்படுத்தப்படுகிறது. மெல்லிய சக்தி பூண்ட கிருமிநாசினியை நல்ல நீரோடு கலந்து மேற்கொண்டு உடல் பரிசுத்தமாக்கப் படுகிறது.

அடுத்து தமனிகளிலும், சின்னஞ்சிறு ரத்தக் குழாய்களிலும் ஓடும் குருதி யந்திரத்தின் வழியே ரத்த ஓட்டம் செலுத்தப்பட்டுச் சுத்தமடைகின்றது.

சஞ்சீவனி மேடையில் விளக்குகள் எரிய, அறிவியலார் ஐந்து பேர் நாற்காலியிட்டு அமர்ந்திருக்கிறார்கள். செந்தேளர், மானுடர் வகையினர் இவர்கள்.

கரப்பு சிறப்பு அழைப்பாளி நகரின் பாதாளச் சாக்கடை உலகத்தில் நேற்று மாலை உலவப் போனவர், சொர்க்கம் இதுதான் இதுதான் இதுதான் என முழங்கி அங்கிருந்து வெளியே வரமாட்டேன் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டாராம்.

நாளை சஞ்சீவனி கருத்தரங்கு என்று கர்ப்பூரம் அவரிடம் நினைவு படுத்த, மயிர் அரங்கு போடா என்று துரத்தி விட்டான். பெருந்தேளரிடம் கர்ப்பூரம் இதைத் தெரிவிக்க, அவர் சினந்து மறுமொழி உரைத்தது இப்படி- கொட்டையை நெறிச்சு கொல்லுங்கடா அவனை.

அறிவியலார்கள் சஞ்சீவனி கருத்தரங்கின் ஒவ்வொரு அமர்விலும் பங்குபெற்றுத் தலையாட்டி பின்னர் ‘அற்புதமான ஆய்வு’ என்று மதிப்புச் சூட்டினார்கள்.

நாசி, பற்கள், நாவு, குறி, செவிகள், கண்கள் என ஒவ்வொரு அவயமாகச் சுத்தமாக்கப்பட்டு பரிசுத்தம் என வலது புறங்கையில் அடையாளம் ஏற்படுத்தும் சிலிக்கன் சில்லு செருகி, நெய் சொட்டும் கேசரியும், பாதாம் அல்வாவும், தோசைகளும் உண்ணக் கொடுக்கப்படுகின்றன.

பரிசுத்தப் படுத்தலுக்கு முன்பு இந்த உணவு உண்ணக் கிடைக்காது. பரிசுத்தப்படுத்துதலுக்கு அப்புறம் இந்த பைனரி விருந்து கொள்ளுதல் கட்டாயமானது.

பைனரி உணவின் அடக்க விலையே ஒரு பைனரி காசை விட அதிகமாக இருக்கும் என்று யாரிடமோ சொல்லியபடி கர்ப்பூரமய்யன் அரண்மனை விழா மண்டபப் படியேறிக் கொண்டிருக்கிறான்.

காசு சும்மா தண்ணீர் போல செலவழிந்தது. இது வீண் செலவு இல்லையா என்று பெருந்தேள்ப் பெண்டு கணவரிடம் குறைப்பட்டது மாற, இந்த காலம் தாண்டி வந்து குதித்த திருடன் சொன்னது எல்லாம் நடப்பாகிறது.

பெருந்தேளர் இவனது வசீகரத்தில் மயங்கி விட்டாரா என்று ஐயமுற்ற பெண்டு மனம் ஆறுதலடைய அவள் கணவர் சொன்னது –

சில்லில் இருக்குதடி சூட்சுமம் பெண்ணே.

பின்னே இல்லையா, அவர் பாட்டாகவே பாடிவிட்டார் –

சில்லு பதிக்கச் சொன்னா வல்ல பயகளும் மாட்டேன்னு ஓடிடுவான். இப்போ பாரு அவனவன் வந்து தோசை தின்னுட்டு ஆயுசுக்கும் அவனைக் கொத்தடிமை ஆக்கற சில்லு பதிச்சு விடு பதிச்சு விடுன்னு பிடுங்கி எடுத்து சில்லனாகி விட்டது மொத்த கோகர்மலைநாடே.

இந்தச் சில்லுகளை வைத்து ஒவ்வொரு தேள். கரப்பு, மனிதர், இதர ஜீவராசிகள் பெருந்தேளர்ப் பெருமான், அவரது அன்பு மனையாட்டி பெருந்தேள்ப்பெண்டான நீவிர் என இனி பிரஜைகளை ஒவ்வொருத்தரையும் கவனிப்பில் வைக்க முடியும்.

இது கேட்ட பெண்டு களி கூர்ந்து அப்போ, ஒரு சில்லு என்ன, ஒரு நூறு சில்லு பதிச்சுடலாமே என்றாளாம். உடம்பிலே அதை எல்லாம் பதிக்க இடம் வேண்டாமா என்று பெருந்தேளர் ஆட்சேபணை தெரிவிக்க அது நிற்கவென்று அப்போது கடந்தார்களாம்.

இதை அரண்மனை தினசரி நடவடிக்கை அறிக்கை சொல்கிறது. மேலும் இவற்றோடு சஞ்சீவனி மருந்தை எப்படி அதற்கான சிறப்புக் கோப்பையில் வார்த்து வாய்க்குள்ளோ, உதடு பட எச்சில் விழ வைத்தோ பருகாமல் ஒரு மடக்கில் எப்படிப் பிடித்து வாயில் ஒரு வினாடி சுவைத்து வயிற்றில் செலுத்தப்பட வேண்டும் என்று பயிற்சி தர சஞ்சீவனி பட்டறை முற்றிலும் காசு செலவின்றி இன்று முதல் நடத்தப்படுகிறது.

இந்தப்படி அறிவிக்கப்பட்டுள்ளதால் பயிற்சிக்காக ஓடோடி வந்து பழைய இரும்பு நாற்காலிகளை நிறைத்துக் காத்திருந்த பதவி ஓய்வு பெற்ற முதியோர் அதிகம் தட்டுப்பட்டார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 04, 2023 05:50

September 2, 2023

புது நாவல் ஆல்ட் சி பிரபஞ்சத்தில் அறிமுகமான கடவுள்

உல்லுலூ என்ற இளைய கடவுள் -ஆல்ட் சி பிரபஞ்சத்திலிருந்து

வந்தது தான் வந்தாய். அந்த அழுக்குச் சிறகுப் பெண்ணுக்கும் அவளது அடிவருடிகளுக்கும் நியாயத்தைச் சொல்லிப் போயேன்

பழுப்பு நிற முடை நாற்றச் சிறகடித்து ஊருணிக் கிணறுகளைச் சுற்றியபடி ஒருவருக்கொருவர் பேன் பார்த்து மிதக்கும் ஒரு பிரிவு பணியாளர் தேவதைகள் ஆதனின் கை பிடித்து இழுத்துக் கூறின.
அவன் தோள் பற்றி இரு வகைச் சிறகிகளும் அவனது கவனத்தை ஈர்த்து அவரவர்கள் தரப்பு நியாயத்தைச் சொல்ல முயன்றன.

அப்போது சுனையின் நடுவாந்திரமாக நீந்தி வந்த பெயர் தெரியாத பிரம்மாண்டமான ஏதோ உயிரினம், ஹூம்ம்ம் என்று கனைத்தபடி நீர்ப் பரப்புக்கு மேலே மிதப்பது போல் போக்குக் காட்டி சுனை உள்ளே நுழைந்தது.

உல்லுலு வந்திருக்கு. உல்லலு நீர்நிலைகளின் சிறு தெய்வம். ஆதன், மரியாதை செய் உல்லலுவுக்கு
தேவதைகள் சிறகு நீவிச் சீராக்கியபடி ஆதனை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டன. உல்லுலூ என்று ஒரு தெய்வமா, கேட்டதே இல்லையே என்று ஆச்சரியப்பட்டான் ஆதன்.

நீ பார்க்கிறாயே உல்லுலூ உண்டுதான். ஆல்ட் சி கிரகம் நூறாண்டு முந்திப் புதியதாக உருவாக்கிய கடவுள். கடைகளில் பொருள் வாங்குவோர்க்கான காவல் தெய்வமாக உருவான உல்லுலூ குடிதண்ணீர் தெய்வமானது தற்செயலாகத்தான் நிகழ்ந்தது. உல்லுலூ உருவமைப்பும், ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் அறிவும் இந்த ஆண்டு கடைசியில் இறுதிக்கட்ட சோதனைகள் முடிவுக்கு வரும்போது பரவலாகப் பேசப்படும் என்றாள் வாதினி ஆதனிடம்.

யட்சி யுத்தம் முடிவடைந்ததாக இரண்டு தரப்பும் வெள்ளைச் சிறகு உதிர்த்து கைமாற்றிக் கொண்டன, வாதினியும் சாதினியும் ஒருவரை ஒருவர் அணைத்து ஒரு நிமிடம் முத்தமிட்டுக் கொண்டனர்.

உல்லுலூ சுனைக்கு மேலே எழும்பி ஆதனை நோக்கி வாய் திறந்தபடி திமிங்கிலம் போல் மிதந்தது.
அதன் பற்கள் கூர்மையாக நான்கு அடுக்கில் முதலைக்கு வாய்த்தது போல் பயம் கொள்ள வைத்தன.
எல்லா ஜீவராசிகளும் அத்தியாவசியமானதாகப் பருகும் குடிநீர்க் கடவுளை ஒரு துளி தண்ணீர் கூட அருந்தாத, நெருப்புக் குழம்பு குடிக்கும் தெய்வமையாக கட்டமைப்பு செய்தது ஏன் என்பதற்கு ஆல்ட் சி பிரபஞ்ச அறிவியலார் மட்டக் குதிரைகளும் மானுடரும் காரணம் எதுவும் காட்டவில்லை.

உல்லுலூவை கடவுள் அடுக்கில் டிவைன் பாந்தியன் தகுந்த இடம் கொடுத்து அமர்த்த மூன்று மாதம் போனது. உல்லுலூவுக்கான லோர் தொன்மச் சரடு, பாடிப் பரவ கீதங்கள், மற்ற கடவுளரோடு தந்தை, சகோதரன்,சகோதரி, மாமன் என்று உறவு வலுவாக ஏற்படுத்துவதும் நிறைய நேரம் நீண்டது. ஒவ்வொரு புதுக் கடவுளும் பிரபஞ்சங்களினூடாகக் கட்டமைத்த அனைத்துக் கடவுளமைப்பில் இடம் பெற வைப்பதே இந்த உழைப்பின் நோக்கம். கனோனிகல் ஆக இந்த உறவுகளை அமைத்த பின் அவற்றை மாற்ற முடியாது. இத்தனை தகவலும் உல்லுலூ குடிநீர்த் தெய்வம் பற்றி வாதினி கோடி காட்ட ஒரு நிமிடத்திலும் பகுதிதான் எடுத்துக் கொண்டாள். அதுவும் இல்லாமல் பத்து விநாடியில் சொல்லி முடித்திருக்கலாம் தான் வாதினி. அவளை நெருங்கி நின்று விரல்களை சொடக்கிட்டு அவள் கவனத்தை சாதினி ஈர்த்ததுதான் கவனம் கலைந்து ஒரு நிமிடத்தில் சொல்ல வைத்தது.\

மறுபடி வாதினியோடு இதழ் கலந்து நின்றாள் சாதினி. போதும் இதைப் பார்க்க அலுப்பாகிப் போனது பெண்களே நீங்கள் யுத்தமிடும்போது நடுவண் நோக்கராக இருந்து தீர்ப்புத் தரவன்றோ என்னை அழைத்தீர்கள், யாண்டு நடப்பதென்ன என்று ஆதன் ஆச்சரியத்தோடு குறிப்பிட்டான்.

நாங்கள் சண்டையிடும்போது ஜன்ம விரோதிகள். பிற நேரம் ஒருவரை ஒருவர் வெறியோடு காமுறும் சிநேகிதிகள் என்றாள் சாதினிக்குப் பின்னாள் நின்று அவள் கொங்கை வருடி, வாதினி. உல்லுலூ நீரில் எச்சில் உமிழ்ந்தான்.

உல்லுலூ ஆதனைப் பார்த்து நீ எப்படி கடவுள்களோடு இடையாடிக் கொண்டிருக்கிறாய் மானுடனே என்று அதிகாரத்தோடு கேட்டது. வாதினி தலையை அப்படி இல்லை என்று மறுக்கும் படிக்கு அசைத்தது. ஆதன் தர்க்கப் பிழை மூலம் காஸ்மோஸ் பிரபஞ்சத்தில் மானுடனாகப் பிறந்தான். அவனும் உங்களைப் போல் சிறு தெய்வமாக காஸ்மோஸ் பிரபஞ்சத்தில் பிறந்து கடவுளமைப்பில் ஏறியிருக்க வேண்டியவன் என்று சொல்ல, அதைப் பாதி கூட கேட்காமல் உல்லுலூ வலுவில்லாத வெண்சிறகுகள் அடித்து மேலே உயர்ந்தான். சட்டென்று விழவும் செய்தான். அனுபவம் இல்லாத தெய்வமாக இருந்தான் உல்லுலூ.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2023 01:13

August 31, 2023

புது நாவல் அத்தியாயம் மூன்றில் இருந்து – ஒட்டகச் சிவிங்கி வந்தது

புது நாவலில் அத்தியாயம் மூன்றில் இருந்து

மருத்துவம் பார்க்க மந்திரவாதியை அழைக்க, ஒட்டகச் சிவிங்கி வந்து நிற்கிற அத்தியாயம்
ஆதன் நல்ல மனிதன். முழுநிலவு நாட்களில் மட்டும் மனம் தரிகெட்டு ஓட அவன் ஒரு பக்கமும் இடுப்பு முண்டு இன்னொரு பக்கமுமாக நடுராத்திரிக்கு ஊருணிக்கரையில் அமர்ந்திருப்பது தவிர்த்தால். அது குடிப்பதற்கான நல்ல தண்ணி ஊருணி. அங்கே இவன் குளிப்பான் பௌர்ணமி ராத்திரியில். அவனைத் தவிர ஊர்ணியை அடுத்த பிரசவ ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளின் பீத்துணியை அலசிப் போவதும் நடக்கிற காரியம்தான்.

ஒரு பௌர்ணமியன்று நடு ராத்திரிக்கு ஊருணிக்குள் இறங்கி முழுக்குப் போடும்போது நல்ல சிவப்பு நிறத்தில் நிலா வெளிச்சத்தில் நீர் கிடந்ததைக் கண்டான் ஆதன். ஆரஞ்சுப் பழச்சாறு வண்ணத்தில் நல்ல இனிப்பாக ஊறிவரும் ஊருணி நீர் இப்படிக் குருதி போல நிறமடித்துக் கிடப்பதேன்?

அவன் யோசித்த பொழுது பின்னால் படித்துறையில் நின்று யாரோ கையைத் தட்டுகிறது சப்த ரூபமாகக் காதில் விழுந்தது. திரும்பிப் பார்க்க புகை உருவமும், அதில் உள்வாங்கிய கண்ணும், நீண்டு நகம் வளைந்திருக்கும் கரங்களும் முழங்காலுக்குக் கீழ் உருவம் சிதிலமடைந்திருப்பதுமாக நின்றவர் ஆவியுலகப் பிரமுகராகத்தான் அவன் கண்ணுக்குத் தெரிந்தார்.

நல்ல தண்ணி ஊருணியிலே கால் கழுவறது மகா பாவம் தம்பி அஞ்சு நிமிஷம் கழிச்சு உனக்கே தாகம் தவிக்கும். அப்போ குடிக்க நல்ல தண்ணிக்கு எங்கே போவே? உன் குண்டி கழுவி நீயே எடுத்துக் குடிக்கறது சரிப்பட்டு வருமா சொல்லு.

மிதந்து கொண்டே பேசிய அந்த ஆவி ரூபம் தொண்டையில் கரகரப்பு தோன்ற நாலுமுறை இருமியது.
சொல்லு தம்பி. மறுபடி சொன்னது அது.

பெரியவரே நான் அவசர ஆத்திரத்துக்கு ஒரே ஒரு முழுக்கு போடறது உண்டுதான். மன்னிச்சுக்குங்க. அதுக்கு முந்தி வீட்டுலே நடு ராத்திரிக்கு எழுந்து குளிச்சுட்டு தான் வெளிக் கிளம்புவேன். எங்க அம்மா கிட்டே கேட்டுப் பாருங்க. கோட்டிக்காரப் பிள்ளைன்னு அது நான் ராத்திரி குளியல் போடும்போதெல்லாம் அழுவாங்க. இன்னிக்கு இன்னும் அழுதுட்டு இருக்காங்க.

அவன் நிறுத்தாமல் பேச ஆவி ரூபம் சொன்னது – நான் உடையப்பா. இன்னிக்கு முன்னூறு வருஷம் முந்தி இந்த ஊருணியை வெட்டி வச்சேன். அதுவரை சனம் முச்சூடும் பக்கத்திலே காஞ்சிரம்பட்டியிலே கிணற்றுத் தண்ணியை மொண்டுக்கிட்டு வந்து குடிச்சுட்டுக் கிடக்கும். கிணறு வத்தினா ஊரோட கஷ்டம். அதெல்லாம் ஓய்ச்சு வைக்க ஊருணி தோண்டினா நீ அதுக்குள்ளே இறங்கி அப்படித்தான் குளிப்பேன்னு அடம் பிடிக்கறியே நல்லா இருக்கா.

பெரியவரே நான் தலைபோகிற அவசரத்திலே இருக்கேன். ஒரு லக்குக்கு போக வேண்டி வருது. போய்ட்டு வந்து உம்மோட மீதிக்கதை கேட்கிறேன்.

ஆதன் ஈரங்காயாத தலைமுடியை கையாலே ஒதுக்கிக்கிட்டு பெரியவரோட புகை ரூபத்தைக் கடந்து அந்தப் பக்கம் போகப் பார்க்கிறான். இரும்புக் கதவு நடுவிலே வந்து அடைச்ச மாதிரி அவன் முகத்தில் அந்தத் தடை அறையுது.

சொல்லச் சொல்ல கேட்காம போறியே இந்த உடையப்பா சேர்வைக்காரனை அப்படி எல்லாம் எடுத்தெறிஞ்சுட்டு போக முடியாது.

அவர் குரல் உயர்த்த, ஆதன் அடிபணிகிறான். அய்யா அவசரமுங்க நான் போகலேன்னா கந்தர்கோளமாயிடும். நான் போய் மத்தியஸ்தம் செய்யணும்.
அப்படி என்னப்பா நடுராத்திரி பஞ்சாயத்து பண்ண அவசரம்?

உடையப்பரின் ஆவி விசாரித்தது.

வாதினிப் பேய்மகளுக்கும் சாதினிப் பேய்மகளுக்கும் யுத்தம் நடக்குது. ரெஃபரியாக நான் போனால்தான் ஆச்சு.

உடையப்பா நிறுத்தி நிதானமாகச் சிரித்தார். வாதினியும் சாதினியும் யட்சிங்க இல்லியோ என்று விசாரித்தார் அவர் தொடர்ந்து.

ஆமா அதே தான், சொல்லியபடி .

நனைந்த வேட்டி ராக்காற்றில் பறக்க ஆதன் ஊருணிக்கு உள்ளே கால் வைத்து மையம் நோக்கி அவசரமாக நகர்ந்தான்.

ஏழு கிணறுகள் வரிசையாகக் குழித்து வற்றாத ஊற்றுக்களாக குடிநீர் பொங்க வைத்துக்கொண்டிருந்த ஊருணியின் மையத்திலிருந்து குரல்கள் கேட்க ஆரம்பித்தன. எல்லாம் பெண் குரல்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2023 05:31

August 29, 2023

கடை திறப்பு – பெருநாவல் மிளகு – அத்தியாயம் 52-இல் இருந்து

லூசியா விடிந்து கொண்டிருக்கும்போதே போஜன சாலைக்கு வந்து விட்டிருந்தாள். வழக்கமாக பகல் பனிரெண்டுக்கு வாடிக்கையாளர்கள் உணவருந்த வர ஆரம்பிப்பார்கள். இன்றைக்கு காலை பத்து மணிக்கே ஒரு பெரிய கூட்டமாக பட்டாளத்துக்காரர்கள் வருகிறார்களாம். சாயந்திரம் சூரத்துக்கும், அங்கிருந்து லிஸ்பனுக்கும் கப்பல் பயணம் போகிறவர்கள் என்பதால் காலைச் சாப்பாடாகவும் இல்லாமல், பகல் உணவாகவும் இல்லாமல், ரெண்டுங்கெட்டான் நேரத்தில் உண்டுவிட்டுக் கப்பலேறுவார்கள்.

இவர்கள் அவசரத்துக்குக் கோழிகள் தாமே ஓடிவந்து கழுத்தறுத்துக்கொண்டு, மிளகு விழுதில் விழுந்து புரண்டு, மேலெல்லாம் மிளகுக் காப்பு புரட்டிக்கொண்டு, சுட வைத்த எண்ணெயில் சாடி முக்குளித்துப், பொரிந்து கொள்ளவேண்டும். அல்லது மீன்கள் தம் செதில் உதிரக் கல்லில் உரசி உரசித் தேய்த்துக் கொண்டு, கொதிக்கும் குழம்பில் விழுந்து நீந்தி, அந்திம நித்திரை போகவேண்டும். கோழி முட்டைகள், இரும்பு வாணலியில் ஒன்றை ஒன்று, அடித்து உடைத்துக் கிண்டிக்கொண்டு, மிளகாயும் வெங்காயமும் சேர முட்டைக்கறி ஆக வேண்டும்.

இதெல்லாம் நடக்க முடியுமானால் நூறு பேர் சாப்பிட வரும்போது அவசரமாகக் கிண்டிக் கிளறிக் கொட்டிப் பரிமாற வேண்டியிருக்காது. என்ன செய்ய, ஒஃபிலியா சாப்பாட்டுக்கடை உரிமையாளர் அல்வாரிஸ் காலை பத்து மணிக்கு விருந்து தயாராகி விடும் என்று வாக்குறுதி கொடுத்து விட்டார்.

கடைகண்ணியில் மாதச் சம்பளத்துக்குப் போய்ச் சேர்ந்தால் இந்த மாதிரி தொந்தரவுகள் எழும்பும் அவ்வப்போது. லூசியா அவற்றைச் சமாளித்தே ஆகவேண்டும். இது சரிப்படாது என்றால் கோவாவில் இருந்து ஹொன்னாவருக்கு வேலை தேடியே வந்திருக்கக் கூடாது.

கோவாவிலேயே இருந்தால் சதா வெற்றிலை பாக்கை மென்று துப்பிக்கொண்டு, வண்டித் துறையில் தலையில் சும்மாடு வைத்து பிரயாணிகளுடைய மூட்டை முடிச்சுகளைத் தூக்கிச் சுமந்து அரைப் பணமும் ஒரு பணமுமாகக் காசு கூலி வாங்கிக்கொண்டு, வீடு பெருக்கி எச்சில் தட்டு கழுவிக் காசு வாங்கிக்கொண்டுதான் ஆயுசுக்கும் இருக்க வேண்டிவரும்.

அப்படி இருந்தால், இன்னும் பத்து வருடத்தில் பல் காவி பிடித்துவிடும் அல்லது உபத்ரவமில்லாமல் விழுந்துவிடும். மூட்டை தூக்கித் தூக்கிக் குத்திருமல் வந்து யாரும் கூலிகொடுத்துக் கூப்பிட மாட்டார்கள். வீடு பெருக்கி, மெழுகி, துணி துவைத்து, பாத்திரம் கழுவுவது வேணுமானால் நாலைந்து வீட்டுக்கு செய்து கை காய்த்துப் போயிருக்கும்.

ஆனால் பழமை அழுத்தமாகப் பதிந்த கோவாவை விட்டு வெளியே ஹொன்னாவர், பட்கல், உடுப்பி, ஹம்பி என்று போய் உணவுக்கடை உத்தியோகம், துணி, காய்கறி-பழக்கடை, மிட்டாய்க்கடை வேலை என்று சேர்ந்துவிட்டால் பத்து வருடத்தில் அங்கே கிடைத்த அனுபவத்தையும், சேர்த்து வைத்த சம்பளப் பணத்தையும் கொண்டு சிறியதாக சொந்தக்கடை ஒன்று போட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற வாய்ப்பு உண்டு. அந்த நம்பிக்கை தான் காலை ஆறுமணிக்கு கோழி சமைக்க வரவழைக்கிறது.

லூசியாவுக்கு முகலட்சணம் கொஞ்சம் இருந்தால் போர்த்துகீஸ் பிரபுக்களின் மாளிகை நிர்வாகியாகக் கைநிறைய வருமானம் கிடைக்கும். ஆனால் அங்கேயெல்லாம் வேறு மாதிரி சிக்கல். தனியாக இருக்கும் நேரத்தில் வீட்டு ஆண்கள், விருந்துக்கு வந்த காமாந்தகர்கள் என்று அவனவன் கோவாப் பெண் உடம்பு கேட்பான்.
அதிலும், லூசியாவின் ஒன்றுவிட்ட அத்தை மகள் கஸாண்ட்ரா போன்ற ஒரு சிலருக்கு வீட்டையும், வீட்டு எஜமானையும் சேர்த்து நிர்வகிக்க வாய்ப்பு கிடைக்கும். அப்படியே பணிக்காலம் முடிந்து துரை திரும்ப லிஸ்பன் போகும்போது, பெண் நிர்வாகியும் போகவும், அங்கே ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கவும் சந்தர்ப்பம் நிறைய உண்டு,

எல்லாம் யோசித்தபடி வாசல் கதவை உள்ளே தாழ் போட்டுக்கொண்டு லூசியா மிளகை விழுதாக்க ஆரம்பித்தாள். நேற்றிரவே ஊற வைத்த மிளகு என்பதால் குழைந்து குழைந்து விழுதாகக் கஷ்டமில்லாமல் அரைபட்டுக் கொண்டிருந்தது.

”லூசியா, லூசியா” என்று வாசலில் கதவை அடித்தபடி யாரோ கூப்பிடும் சத்தம். மீன் வாடை பலமாகச் சூழ்ந்தது. வாசலுக்குப் போகாமலேயே லூசியாவுக்கு யார் வந்தது என்று தெரியும். மீன்கார அபுசாலி ராவுத்தர். இன்றைக்கு விருந்துக்கு ஆற்றுமீன் வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருந்ததால் வந்திருக்கிறார்.

லூசியா மிளகு விழுது அரைக்கும் அம்மிக் குழவியைக் கல்மேல் ஏற்றி வைத்துவிட்டு வாசலுக்கு வந்தாள்.
“அப்போ பிடிச்சு கூவிட்டிருக்கேன் உள்ளே கேட்கலியா?” என்றபடி அபுசாலி ராவுத்தர் பெரிய மீன்கூடையை கதவுக்கு இடையே உள்ளே தள்ள, கூடைக்குள் இருந்து, இன்னும் உயிர் இருந்த ஒரு மீன் துள்ளி வெளியே விழுந்தது.

எடுத்து உள்ளே போட்டபடி ”எல்லாம் நேத்து ராத்திரி பிடிச்ச மீன் இதுக்கு மேலே புதுசு வேணும்னா சோத்துக் கடையை சமுத்திரத்துக்கு உள்ளே உக்காந்துதான் நடத்தணும்” என்றார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 29, 2023 19:48

August 28, 2023

புது நாவல் அத்தியாயம் இரண்டில் இருந்து வரும் அஜயதியும் விஜயதியும்

புது நாவல் அத்தியாயம் இரண்டில் இருந்து

புது நாவல் அத்தியாயம் இரண்டு

மெழுகு திரிகள் பிரார்த்தனை நிலையம் போல் எரிந்து ஒளியைப் பரப்பும் குகை அது. பழையதாக சுவரெல்லாம் தண்ணீர் கசிந்து உப்புப் பூத்து பச்சையாக பாசி பிடித்த குடைவரை இருப்பிடம்.

இரண்டு மில்லியன் மனித இனமும், மற்றபடி மொத்தமாக ஒன்றரை மில்லியன் மற்று உயிரினங்களும் சுவாசித்திருக்கும் உள்வெளி இந்தக் குகை. அடுக்கக வசதி நிறைந்த குடியிருப்புகளில் தகுதி நோக்கி பலதரப்பட்ட உயிரினங்கள் வசிக்குமிடம் விநியோகிக்கப் பட்டிருக்கிறது.

முதல் மாடி கடைசி இரண்டு குடியிருப்புகள் குரங்கினக் குடும்பங்கள் சுக வாழ்வு வாழ ஒதுக்கப்பட்டவை. அந்த வசிப்பிடத்துக்கு முன்பு, சூரியனை முன்னிட்ட கிரகத் தொகுதியில், செவ்வாய்க் கிரகத்து இனத்தினர் வாழுமிடம்.

அதற்கு முந்திய மனை பாரம்பரியம் மிக்க கரடிக் குடும்பம் வசிப்பது. ஆறு தலைமுறையாக ஆசிரியர் மற்றும் இசை வல்லுநராக சமூகக் கடமை ஆற்றும் குடும்பம் அது.

சகவாழ்வு வாழும் தரை ஆமைக் குடும்பம் அடுத்து வசிப்பது. கதவு சதா திறந்தே இருக்கும் வசிப்பிடம் இது. வாசலில் மணி ஒலித்துக் கதவு திறக்கக் கிளம்பி வந்தால் அடுத்த நாள் காலை அநேகமாக வாசலுக்குப் போய்ச் சேர முடியும். எனவே அழைப்பு மணி இல்லாத இல்லம் இது.

ஆமைகளின் இயக்கத்தை வேகமாக்க மரபணு மாற்றம் செய்ய கரடி வைத்தியக் குடும்பம் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இளம் ஆமைகள் இந்தச் சோதனைக்கு உட்படுத்தப் படவில்லை.

நூற்றுப்பத்து வயதான முதிய ஆமைகள் முழு ஒத்துழைப்பு நல்கிட அவற்றில் மரபணு மாற்றம் செய்விக்க ஜெனடிக் ரீஎஞ்சினீயரிங் நடத்திய பிறகு அவ்விரு ஆமைகள் வேகம் கணிசமாகக் கொண்டன.

எனில் அவை பின் நோக்கி வேகமாகப் போகத் தலைப்பட்டன. அவற்றின் பசி கணிசமாகக் குறைந்து பின் போகும் அவ்வாமைகள் குகைப் பொழுதுபோக்கு மையத்தில் ஆடிப்பாடி, பின்னால் ஓடிக் குழந்தைகளுக்கு நகைச்சுவையான நேரம் நல்குகின்றன.

முடிந்தது போய் வாருங்கள் என்று பிரபஞ்ச அரசு அவர்களை நிறுத்திக் கொள்வதோடு இந்த ஆட்ட பாட்டமெல்லாம் முடியும். எவ்வளவு நேரம் தான் குழந்தைகள், பின்னால் நகரும் ஆமைக் கோமாளித்தனம் காண முடியும்? பாரவிப் பெண்களா அவை? மடியிலேற்றி சோறு ஊட்டும் விளையாட்டை ஆமையை வைத்து விளையாட முடியுமா?

பாரவிப் பெண்கள் அவ்வப்போது உயிர் கொண்டு குழந்தைகளோடு விளையாடி மறுபடி பொம்மையாகும் பகுதி உயிர்களாகும். அவற்றுக்குக் கூட விளையாடும் குழந்தை நல்கிய பெயர், பள்ளிப் பெயர், பெற்றோர் விவரம் ஆகியவற்றையும் சிநேகிதர் பெயர்களையும் எழுதி அழித்து மீண்டும் எழுதும் வசதியுள்ள மெமரியில் பதிந்து வேறு குழந்தைக்குக் கைமாறும் போது அத்தகவலும் அழிக்கப்படும்.

அப்படியான ஒரு சூழலில் குழந்தைகள் பொழுதுபோக்கு இல்லத்தில் தொடுமொழிக் கூச்சல் உயர்வதில் இதோ இந்த நிகழ்வு தொடங்குகிறது. பாரவிப் பொம்மையின் தொடு குரல் அது –
நான் கேத்தி இல்லை. எனக்கு ஏற்கனவே அல்லி என்று பெயரிட்டிருக்கிறாள் எனக்கு சிநேகிதியாக இருந்த ஆனைக்குட்டி கோதை.

பொம்மைக்கு முழு உயிர் வந்து தன் இருப்பை வலுவாக நிலைநிறுத்திக் கொள்ள முயல்வது வெளிப்படையாகத் தெரிகிறது. எனில் கேத்தி என்று பெயரிட்டாகி விட்டது, அந்த பாரவிப் பெண் அல்லி என்று வேறு யார் சொன்னாலும்.

சரி, நான் இரவு நேரங்களில் கேத்தியாகவும் பகலில் அல்லியாகவும் இருக்கிறேன். பிளவுபட்ட ஆளுமை பாரவிப் பெண்ணுக்கு இருக்கக் கூடாதா?

என்றும் இன்னும் பலவுமாக அரற்றிக் கொண்டிருக்கிறாள். எல்லாம் ராஜி என்ற மனிதச் சிறுமி, பாரவிப் பொம்மையை குகைப் பொழுதுபோக்ககத்தில் வாங்கி வந்ததில் தொடங்கியது.

பாரவிப் பொம்மையை வைத்து அதற்கு முன் விளையாடிய கோதை என்ற ஆனை இனச் சிறுமி பொம்மையைத் திருப்பித் தந்ததும் மெமரி சரியாக அழிபடாமல் போனது.

கோதை குகையின் எந்தப் பகுதியில் இருக்கிறாள் என்று ஏனோ பொழுதுபோக்ககத்தில் தகவலாகப் பதிந்திருக்கவில்லை. வாணி என்ற மானுடச் சிறுமியானால் இந்த பாரவிப் பெண் தவிர வேறு கருதினாளில்லை. பொம்மைக்குப் பெயர் வைக்காவிட்டால் விளையாட முடியாது.

பொழுதுபோக்ககக் காப்பாளர் தொல்வழக்குப்படி பெட்ரோமாக்ஸ் தான் வேணுமா எனக் கேட்டு வேறேதாவது பாரவிப் பெண்ணை அல்லது பகுதி உயிரியையோ எடுத்துப் போகலாம் என்று சிபாரிசு செய்தார்.

குழந்தை அல்லவா, பொம்மை கிடைக்காது என்று தெரிய வந்திடப் பிடிவாதமும் பிரிமுறுக்கலும் கூடிக்கொண்டே போகின்றது.

குகையின் ஒரு தெரு முழுக்க குழந்தைச் சத்தம் மேலெழுந்து வேறு எந்த வேலையும் செய்ய முடியாமல் சர்வ வியாபகமாகச் சூழ்ந்து நிற்கிறது.

நாங்கள் பெயர் சூட்டுகிறோம் என்று ஆர்வத்தோடு குகைத் தெரு முன்வருகிறது. அங்கேதான் மோதல் தொடங்கியது.

தெருவிலிருப்பவர்கள் இரண்டு பிரிவாகி ஒரு பிரிவு பொம்மைக்கு விஜயதி என்றும் மற்றது அஜயதி என்றும் பெயர் சூட்ட வேண்டும் என்றும் கண்டிப்பாகச் சொன்னார்கள்.

விஜயதி என்று பெயர் சூட்டாவிட்டால் குகையை விட்டே அந்தப் பிரிவினர் வேறு புதுக் குகைகளுக்குக் குடிபுகுந்து விடுவதாகச் சொன்னதும் சம்பவித்தது. அஜயதி என்று பெயர் சூட்டாவிட்டால் காஸ்மோஸ் பிரபஞ்சத்திலிருந்தே விலகி அதன் மாற்று அல்லாத வேறு பிரபஞ்சத்தில் நுழைந்திடுவோம் என்றது மற்ற பிரிவு.

யுத்தத்துக்கான முன்னறிவிப்பு கொடுத்து அடுத்த மாதம் எட்டாம் தேதி ஏழரை மணிக்கு இரவில் போர் நடத்தி விஜயதியா, அஜயதியா என்று பொம்மைக் குட்டிக்குப் பெயர் தீர்மானிக்கலாம் என்ற கருத்தில் மட்டும் இரு பிரிவும் ஒருப்பட்டிருந்தார்கள்.

யுத்த அறிவிப்பு பழைய சம்பிரதாயப்படி காகிதத்தில் தான் எழுதி அறிவிக்க வேண்டும் என்பதால் அதற்கான படிவத்தைப் பெற்று வர குகை நிர்வாக அலுவலகத்துக்குப் பிரிவுக்கு ஒருவர் ஆக இருவர் அனுப்பப்பட்டார்கள்.

ஒருவரை ஒருவர் அடித்து துவைத்துக்கொண்டு மூக்கை உடைத்துக்கொண்டு அவர்கள் குகை நிர்வாக அலுவலகம் இருந்த இருட்தெருவில் ஓவென்று அலறியபடி நுழைந்தபோது வீடுகள் ஜன்னல் திறந்து என்ன சமாசாரம் என்று கேட்டு சடுதியில் ஜன்னல் அடைத்தார்கள்.

அவர்கள் போர்ப் படிவம் பெற்றபோது யாரெல்லாம் யுத்தமிட இருக்கிறார்கள் என்று கேட்டது குகை அமைப்பு நிர்வாகியான ஒட்டகச் சிவிங்கி. யுத்தம் செய்தல், போரிடல் இப்படித்தானே சொல்வழக்கம் என்று வேடிக்கை பார்க்க வந்த யாரோ கேட்க, அரசு மொழிப் பயன்பாட்டைக் குறை சொல்லக் கூடாது என்று அவரிடம் ஒட்டகச் சிவிங்கி எடுத்துச் சொன்னது . நானும் வருகிறேன் என்று தெருவுக்குக் கிளம்பியது அது.

சாவதானமாக தெருவில் நுழைந்தபோதே தெருமுனை மரங்களை ஒட்டி நின்று கழுத்து உயர்த்தியது ஒட்டகச் சிவிங்கி. சதா இருட்டில் இருந்து வெளிச்சம் காணாமல் இலைகள் தடித்திருந்த அம்மரங்கள் DNA engineered photosynthesis மூலம் chlorophyl உண்டாக்கி உயிர் மூச்சு விட்டுக் கருத்து செழித்து வளர்ந்திருந்தன.

பாரவிப் பொம்மையை இடுக்கிக்கொண்டு அழுகை நிறுத்திய குழந்தை ஒட்டகச் சிவிங்கியைப் பார்த்து சிரித்து விட்டது. அதன் தகப்பனார் அப்படிச் சிரிப்பது body shaming-இல் பட்ட நாகரிகமும் பரிவுமற்ற செயல் என்று குழந்தை காதில் அவசரமாக ஓதிப் பாதுகாப்பாக அணைத்தபடி நின்றார்.

இதையொன்றும் கவனிக்காத ஒட்டகச் சிவிங்கி இன்னும் கழுத்து நீட்டி மரத்தின் மேல் கிளைகளின் இலை பறித்து சுவாரசியமாக மென்றது. ஆறு கார்பன் டை ஆக்ஸைட் மாலிக்யூல்களும் ஆறு தண்ணீர் மாலிக்யூல்களும் சேர்ந்தால் என்ன வரும் என்று பாடியபடியே கால்களை முன்னும் பின்னும் ஆட்டி நாட்டியமும் ஆட, குழந்தை என்றில்லை அங்கே குழுமிய சகல உயிரினங்களும் நகைத்தது அபூர்வமாகத் தோன்றியது.

நேசத்தோடும் கையில் இடுக்கிய பாரவி பொம்மைக் குட்டியுமாகக் குழந்தை சிவிங்கி அருகில் போய் நீயே இவளுக்குப் பெயர் வை என்று உரிமையோடு கேட்டுக்கொண்டது.

கருத்த மரங்களின் கிளைகளிலிருந்து இலைகளைச் சுவாதீனமாகப் பறித்து உண்டு இந்த பொம்மைக்கு க்ளோரொஃபில் என்று பெயர் வைக்கிறேன் என்றது ஒட்டகச் சிவிங்கி. கவனத்தில் எளிதாக நுழைகிறதாக பெயர் வேண்டும் என்றது பாப்பா.

அப்போ சிவிங்கின்னே பேரு வச்சுடு என்றது ஒட்டகச் சிவிங்கி.

ஓஓஓ என்று கூடியிருந்த எல்லாம் சிரிக்க குழந்தையும் நகைத்தது. யுத்தம் வரை போய் ஓய்ந்தது குறித்து போன நிமிடம் வரை தொடுமொழியாக கட்டைவிரல்களை இழுத்து நோவித்ததன் மூலம் கூச்சலிட்டு விரோதம் பாராட்டி நின்றவர்கள் ஒருவருக்கொருவர் உள்ளங்கைகளைச் சுரண்டி மகிழ்ச்சி தெரிவித்து களி கூர்ந்தார்கள்.

இந்தக் குகை பூமியே தொடுமொழி நகைப்பில் நிரம்பி வழிகிறது. நூறாண்டு முன் பயங்கரமான வாகினிப் பேய்களும் சாகினிப் பேய்களும் யுத்தம் செய்ததுபோல் நடந்திருந்தால் எப்படி இருக்குமோ தெரியவில்லை என்றது ஒட்டகச் சிவிங்கி.

அந்த யுத்ததில் நானும் பங்கெடுத்திருந்தேன் என்றது அது இன்னும் மேலே இருக்கும் கிளைக்கு கழுத்து நீட்டிப் பறித்தபடி.

பேய்களின் யுத்தத்தைப் பற்றி சிறுவர் சிறுமியர் இருந்தால் கேட்க வேண்டாம் என்று சொல்ல பாரவி பொம்மையோடு ராஜியும் இன்னும் நான்கு குட்டிப் பய்யன்களும் வீடு திரும்பினார்கள். அவர்கள் பல மாடி அடுக்கக வீட்டு மின்தூக்கியில் ஏறி மேலே போவதைப் பார்த்தபடி இருந்தவர்கள் சரி இப்போது சொல்லுங்கள் என்று ஒட்டகச் சிவிங்கியைச் சூழ்ந்திருந்தார்கள்.

சிவிங்கி தொடங்கியது அது சொன்ன பேய்ச் சண்டை கதை இப்படி இருந்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 28, 2023 22:45

புது நாவல் என்றொரு புது நாவல் தொடங்கிய நாள் இது

இன்று ஒரு முக்கியமான தினம் என்பதால் புது நாவல் (பெயரும் அதுதான்!) எழுதத் தொடங்கி இரண்டு அத்தியாயங்கள் எழுதினேன்.

தினை அல்லது சஞ்சீவனி என்ற என் முந்தைய ஃபாண்டஸி நாவலின் தொடர்ச்சியும் நீட்சியுமாக புது நாவல் அமையும்.

அவ்வப்போது இந்த இணையத் தளத்தில் ’ இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாக’ புது நாவல் எந்தத் திசையில் எப்படி நடக்கிறது என்று சூசனை காட்ட அத்தியாயங்களிலிருந்து ஒன்றிரண்டு பக்கங்கள் பிரசுரமாகும்.

கிருஷ்ணார்ப்பணம்
=======================================================================================================================
புது நாவல் அத்தியாயம் 1

புது நாவல் அத்தியாயம் ஒன்று

காலை இது, இந்த நிமிடம் பிற்பகல், தொடர்ந்து உடனே இரவு வந்தது, அது கடந்து மறுபடி இன்னொரு பகல் என்று தரி கெட்டு ஓடும் பொழுதுகள் இந்தப் பிரபஞ்சத்தை பொது ஆண்டு ஆறாயிரத்துப் பதினேழு முதல் பிடித்து நீங்காது சூழ்ந்துள்ளன.

இப்போது நடப்பில் உள்ள பொது ஆண்டு 6120.

குகைகள் நிரம்பி வழிய, எஞ்சிய மானுடமும், மற்ற விலங்கினங்களும் குகை இருட்டின், குகைப் பாறையின் பாதுகாப்பில் வெளியேற மனமின்றி சுருண்டு ஈரம் அப்பிய குகைத் தரையில் அங்கங்கே படுத்திருக்கின்றன. பிரபஞ்சம் முழுவதும் குகைகள் என்பதால் குடியேற இன்னும் குகையுண்டு.

அணுசக்தி ஆயுதங்கள் பொது ஆண்டு 5867-இல் நிலமழித்ததும், ஆலங்கட்டி மழை தொடங்கியது. அது கருத்த பெருமழை பெய்யும் பகலாக நூறாண்டு தொடர்ந்தது. அந்த நீண்ட பகல் பொழுது ஓய, அடுத்த நூறாண்டு தொடர்ந்தது இரவாக. இருட்டைத் தின்று இருட்டைப் பிறப்பித்த நீண்ட இரவு முடிய, அணுவிளைவு குறைந்து தணிந்தது.

அது ஓய்ந்து எங்கணும் குகைகள் புதியதாக முளைவிட்டன. பயிர்கள் செழித்தோங்கியிருந்த நிலங்களில் வந்த குகைகள். பழைய பெருஞ்சாலைகளைப் போர்த்தி முளைத்த குகைகள். கடற்கரைக் குகைகள். கடலுக்குள் எழுந்த குகைகள். அருவி, ஆறு, வாய்க்கால் எனச் சகல இடத்திலும் காளான் குடை விரித்ததுபோல் எழுந்து வந்த குகைகள்.

அவை அறிவு மிகுந்த குகைகள். எந்த திசை நோக்கி இருக்க வேண்டும், எத்தனை வளைவுகள் இருக்க வேண்டும், நீள, அகலங்கள் சுற்றுச் சூழலைப் பொறுத்து எவ்வளவு இருக்க வேண்டும் என்று தானே விதித்துக் கொண்ட கணிதச் சமன்பாட்டின்படி எழுப்பிக்கப்படுகிற குகைகள் அவை.

உயரம் மட்டும் பிரபஞ்சம் முழுக்க ஒரே அளவு, அதாவது எட்டடி தான் இருக்கும், எங்கும்.

குகை மனிதர்களுக்குப் பேச, கேட்க, அதன்படி நடக்க மட்டும் தேவையான அறிவு பிறவியிலேயே சிறுமூளை முகுளத்தில் பதிந்திருக்கும்.

அந்த அடிப்படை அறிவு, சைகை மற்றும் தொடுமொழி வழியாக பரஸ்பரம் தொடர்பு கொள்ளப் பயனாகும். பார்வை குறைந்த, அற்ற மாற்றுத் திறனாளிகளோடு தொடர்பு கொள்ள தொடுமொழி மட்டும் பயன்படும் என்பதால் அப்படியானவர்கள் குறைந்த அளவே பிறப்பிக்கப் படுவார்கள்.

சைகை மற்றும் தொடுமொழி, மானுடர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள மட்டுமானவை அல்ல. சகல விலங்கினம், பறவையினங்களோடும் சகஜமாகத் தொடர்பு கொள்ளப் பயனாகிறவை.

இந்த ஏற்பாடு சரிப்பட்டு வராததால் இப்பிரபஞ்சத்து ஊர்வனவான மற்றும் சற்றே எழும்பிப் பறக்கும் பூச்சிகள் எல்லா இனப் பூச்சிகளும், பாம்புகள் உட்பட அனைத்துப் பூச்சிகளும் பிரபஞ்சம் முழுக்க இயற்கை எய்யப்பட்டன.

தேள்கள் ஆயிரம் ஆண்டு முன்பு வரை இந்தக் காஸ்மாஸ் பிரபஞ்சத்தை ஆட்சி செய்து வந்தன. பொது ஆண்டு 5867இல் மானிட இனத்தோடு பகுதி தேளினம் கூட்டுச்சேர, அணு ஆயுதப் பிரபஞ்சப் போரில் அவை அழித்தொழிக்கப்பட்டன.

தேளினத்தோடு கூட்டணி அமைத்திருந்த கரப்புகள் அணு ஆயுதப் போரில் தப்பிப் பிழைத்து அடுத்த ஆயிரம் ஆண்டுகள் தலைமறைவாயின. பொது ஆண்டு 6005-இல் அவை நல்ல ஆரோக்கியமும் எதிர்ப்பட்டதை எல்லாம் மோதித் தகர்க்கும் வெறியுமாக குகை எங்கும் படை எடுத்துச் சூழ்ந்தன.

எல்லா உயிரினங்கள் மேலும் பறந்து போய்ப் பாய்ந்து ஒட்டிக்கொண்டு கத்தி போன்ற கால்கள் கொண்டு முகம், தலை, பிரத்தியோக உறுப்பு என்று தேடித்தேடி ஊர்ந்து ஆழமான காயங்களை உண்டாக்கின.

ஐக்கிய உயிரினக் கூட்டமைப்பு என்ற அனைத்துக் குகைகளயும் ஆட்சி செய்யும் அரசமைப்பு கரப்பினத்தை இரண்டு மாதம் நீண்ட யுத்தத்தில் வென்று இன அழிப்பு நடாத்தியது.

கிழக்கு திசையில் ஏற்பட்டிருந்த நீளம் மிகுந்த குகையில் கரப்புகளின் அழிபடாத இன மிகுதி இன்னும் உயிர்த்திருப்பதாகவும், அவை வேண்டிய காலத்தில் வெளிவரும் என்றும் தொடுமொழிக் கதையாடல் சொல்லும்.

கரப்புகளோடான பிரபஞ்ச மகாயுத்தம் ஐக்கிய உயிரினக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற நிகழ்வாக, கரப்பினத்துக்கு சைகை மொழி, தொடுமொழி என்ற இரண்டு வலிமையான ஆயுதங்கள் கிட்டாமல் போனது காரணம் என்று பொதுவாகக் கூறப்பட்டது. அவற்றுக்கான நெகிழி, அசுத்த ஜட வஸ்து, ஜல வஸ்து, அபான வாயு போன்ற உணவு கிட்டாமல் கரப்புகள் இறந்து பட்டன.

காஸ்மோஸ் பிரபஞ்சம் குகை தோறும் ஓய்வாக இயங்கும் விடுமுறை தின இரவுப் பொழுது இது.

இரவில் இயங்கிப் பகலில் உறங்கும் பிரபஞ்சம் இது என்று ஏற்கனவே குறிப்பிட்டு நாமும் கதையைத் தொடங்கினோம். இந்நானிலம் முற்றும் இருளில், நல்லின்பத்தில் வாழ்க.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 28, 2023 04:17

August 27, 2023

from my novel RAMOJIUM – Arrival of Ramoji Angre 1770

ராமோஜி ஆங்கரே – எலிப்பொறிச் சத்திரம் 1707

இரண்டு ஒட்டகங்கள். ஒரு மட்டக்குதிரை. ஒரு பல்லக்கு. பல்லக்குத் தூக்கிகளாகவும், ஒட்டகம் நடத்திக் கூட்டிப் போகிறவர்களுமாக மொத்தம் பனிரெண்டு காலாட்கள். மட்டக்குதிரையில் ஆரோகணித்து கெச்சலாக ஒரு காரியஸ்தன். கூடவே மூங்கில் கடகங்களைத் தலையில் சுமந்தபடி ஓடும் இரண்டு பேர். ஆக பதினைந்து பேர் சேர்ந்து வர சுவர்ணதுர்க்கத்தில் இருந்து புறப்பட்டது போன ஞாயிற்றுக்கிழமை காலையில். மராட்டிய சமுத்திர சேனையில் படைத் தளபதியான ராமோஜி ஆங்கரே யாத்திரையில் இருக்கிறான்.

மனைவி ரத்னா பாய் ஆங்க்ரேயும் பிரிய மகள் ஸ்வதந்த்ரா ஆங்க்ரேயும் ராமோஜியோடு வருவதாக இருந்தது, ரத்னா பாய்க்கு ஜூரம் கண்டதால் நிகழாமல் போனது. அவள் இன்னும் ஒரு மாதமாவது எந்த அலைச்சலும் இல்லாமல் ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என்றார் மருத்துவர். ஆக, ராமோஜி மட்டும் யாத்திரை போயாக வேண்டும். ஜோசியர்கள் பரிகாரங்கள் கற்பித்து அவற்றை நிறைவேற்றி ராமோஜி தனியாகப் போய்வர அனுமதித்தார்கள்.

தஞ்சாவூரில் நிசும்பசூதனி காளிமாதா கோவிலில் பிரார்த்தனையும் வழிபாடும் குலதெய்வம் கொண்டாடுதலும், தேவிபட்டிணம் வழியே திருப்புல்லாணியும், ராமேசுவரமும் தொழுது வருவதும் தவிர ராமோஜிக்கு கனோஜி ஆங்கரே சேர்ப்பித்த இன்னொரு காரியமும் உண்டு.

வழியில் இருக்கும் சத்திரங்களிலும் சாவடிகளிலும் தங்கி இருந்து நாட்டுநடப்பையும், ஜனங்களின் பேச்சையும் கவனிக்க வேண்டும். மராட்டா ஆட்சி கலகலத்துப் போய்க்கொண்டிருக்கும் நேரம். சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி போஸ்லே மறைவுக்கு அப்புறம் தொடங்கிய சிவாஜியின் இன்னொரு மகன் ராஜாராம் போஸ்லே ஆட்சி எல்லா சிரமங்களோடும் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நாள் தாக்குப்பிடிப்பார் என்பது தெரியவில்லை.

ராஜாராம் போன்ஸ்லே ஆட்சி விழுந்தால், தெற்கே கடலோடு நகர்ந்து வந்து நாகைப்பட்டணம் கடந்து தஞ்சாவூரில் மையம் கொள்ள கனோஜி ஆங்கரே நினைப்பது பகிரங்கமானது இல்லை. தஞ்சாவூரில் சத்ரபதி சிவாஜியின் சகோதரரான வெங்கோஜி போன்ஸ்லே அரசாண்டு முடிந்து, அவருடைய மகன் சாஹூஜி போன்ஸ்லே பட்டத்துக்கு வந்திருக்கிறார். நல்ல பெயர் எடுத்திருக்கிறார் என்றும், மதுரை நாயக்கர் அரசு தொல்லை கொடுத்தாலும் நிலையான ஆட்சியைத் தர சாஹூஜி எல்லா முயற்சியும் எடுப்பதாகவும் கேள்விப்பட்டார் கனோஜி. அது எவ்வளவு உண்மை என்று நம்பகமான தகவலாக ராமோஜி வழியே கேட்க நினைக்கிறார் அவர்.

இது தவிரவும், அவுரங்கசீப்பின் முகலாயப் பேரரசு, முதியவரான அவருக்கு அப்புறம் என்ன ஆகும் என்றோ, அவுரங்கசீப் சிறையில் வைத்திருக்கும் சிவாஜியின் பேரன் போஸ்லே சாஹு விடுவிக்கப்படுவாரா என்றோ யாருக்கும் தெரியவிலை.

பேரரசுகள் நிலை குலையும்போது அங்கங்கே அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதே ஆங்கரே போன்ற திறமைசாலிகள் வகுத்த வாய்க்கால்களாகும் என்பதை ராமோஜி அறிவான்.

எல்லா துறைமுகங்களிலும் நிச்சயமற்ற தன்மை தென்படும்போது கனோஜி நிலத்துக்கு வந்து ஆட்சி ஏற்படுத்த ராமோஜி போன்ற மற்ற இளம் தளபதிகளை நம்பி இருக்கிறார் என்பது ராமோஜிக்குப் புரியும்.

அவனுடைய ஒரு மனது கனோஜி ஆங்கரேயோடு போகச் சொல்கிறது. மற்றது, பிறந்த தஞ்சைக்குத் திரும்பி சாஹூஜியோடு இருக்கச் சொல்கிறது. இந்தப் பயணம் அதை ஓரளவுக்கு முடிவு செய்யவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கிறான் அவன்.

மராட்டிய கடற்படை அதிகாரியாக இல்லாமல் மராட்டிய யாத்திரைக்காரனாக ராமோஜி இந்தப் பயணம் புறப்பட்டிருக்கிறான்.

அரசியல் ஆலோசனைகளை இந்த யாத்திரைக் காலத்தில் கைக்கொள்ள மாட்டார் ராமோஜி என்று ஒற்றர்கள் மூலம் தகவல் பரப்பியதோடு, விட்டோபா கோலி மூலம் யாராரோ அரசியல் பேச வந்ததாகவும் ராமோஜி மறுத்துத் திருப்பி அனுப்பியதாகவும் சொல்ல நாலைந்து பேரையும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ராமோஜியின் உடுப்பும் அதிகார மிடுக்கு இல்லாமல் கைத்தறியில் நெய்த பருத்தித் துணி வேஷ்டியும், முகலாய பாணி குப்பாயமுமாக இருந்தது. தலையில் அலங்காரங்களோடு வீற்றிருந்த வண்ணத் தலைப்பாகை போய், சாதாரணக் கைத்தறித் துணிக் குல்லாயானது தலையலங்காரம்.

கடலோடும்போது அணிந்த கெட்டியான தோல் பாத அணிகளின் இடத்தில் இடத்தில் மர ஜோடுகளும், மெல்லிய தோல் செருப்புகளும் அணி செய்தன. கையில் குரல் வீசிப் பாடும்போது முழக்கக் கைத்தாளமும் தானே ஏறியது.

பாடிப் பரவி ஆண்டவனைத் துதித்துப் போகும் யாத்ரிகன் ராமோஜி. கனோஜி ஆங்கரே ஏற்பாடு செய்த ஒற்றர் குழு இவர்களுக்கு ஐந்து கல் இடைவெளி விட்டுத் தொடர்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 27, 2023 00:08

August 23, 2023

பெருநாவல் மிளகு – பிதார் ஜெயம்மாவின் மங்களூர் அடுக்ககம்

அத்தியாயம் 51 இல் இருந்து

சங்கரன் எழுந்து நின்றார். பாத்ரூம் போகணும் என்றார். அவரை தாங்கிப் பிடித்தபடி விமான டாய்லெட்டுக்கு நடத்திக் கூட்டிப் போனாள் வசந்தி.

“கதவை மூடலே. நானும் இருக்கேன். பயப்படாமல் போங்கோ. யாரும் துப்பாக்கி வச்சுண்டு நிற்கலே வாசல்லே” என்றாள் வசந்தி, டாய்லெட் கதவைத் திறந்தபடிக்கு வைத்து, சங்கரனை கமோடில் இருத்தியபடி.

இவர்கள் பத்து நிமிடம் வரவில்லையே என்று தெரிசா இருக்கைகளின் ஊடாக நடந்து கழிவறை வாசலுக்கு வந்தாள்.

“தெரிசா, அடல்ட் டயாபர் போட்டுவிட்டு பழக்கம் இருக்கா?” வசந்தி கேட்டாள். ”தெரிஞ்சுக்கிட்டா போச்சு” என்று வசந்தி சங்கரனுக்கு டயாபர் போட உதவி செய்தாள் அவள். ”கூல், இனி நான் பார்த்துக்கறேன்” என்றாள்.

இரண்டு அறுபது வயசுக்காரிகள் அதே வயசு வரம்பில் ஒரு ஆணுக்கு டாய்லெட் போக இப்படி விழுந்து விழுந்து உதவி செய்வதை ஏர் ஹோஸ்டஸ்களும் ப்ளைட் பர்ஸர்களும் விநோதமாகப் பார்க்க, அவர்களிடம் சுருக்கமாக முன்கதை சொன்னாள் தெரிசா. அதற்கப்புறம் அவர்கள் பார்வையே மாறிப் போனது.

மிட்டாயும், காதில் அடைக்கப் பஞ்சும், விமானம் ரன்வேயில் ஓடி வந்து உயரப் பறக்கும் முன் உபசரிப்பாகக் கொடுத்துக்கொண்டு வந்த ஹோஸ்டஸ் சங்கரன் பக்கம் வந்ததும் ”டாஃபி சார்” என்று கேட்டு பதிலை எதிர்பார்க்காமல் நாலைந்து மிட்டாய்களை அவர் கையில் கொடுத்து நகர்ந்தாள். குட்டிக் குழந்தைகளுக்கு மிட்டாய் உபசாரம் செய்வதுபோல் இருந்தது அது. சங்கரனும் சின்னப் பையனாக அந்த மிட்டாய்களை சட்டைப் பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

சாப்பாடு வைத்த ட்ராலிகளைத் தள்ளிக்கொண்டு ஏர் ஹோஸ்டஸ்கள் இருபுற இருக்கைகளுக்கு நடுவே நடந்த போது, சங்கரன் சிரித்துக் கொண்டார். எதற்காக என்று வசந்தி கேட்க நினைத்து வேண்டாம் என்று வைத்தாள்.

“முன் இருக்கை முதுகில் உங்கள் உணவு வைக்க பலகை மடித்து வைக்கப்பட்டுள்ளது. அதைத் தயவு செய்து தாழ்ப்பாள் திறந்து தட்டுகள் வைக்கும்படிக்கு படிந்து வைக்கவும்”. அறிவிப்பு வந்தபோது சங்கரன் நித்திரை போயிருந்தார்.

“பரவாயில்லே வசந்தி இன்னும் ஒரு மணி நேரம் தான், நான் பிஸ்கட் எடுத்துண்டு வந்திருக்கேன். ஆத்திலே போய் சாப்பிட்டுக்கட்டும்” என்று ஜெயம்மா சொல்ல, வசந்தி நானும் அப்புறம் சாப்பிட்டுக்கறேன் என்றாள்.

ஜெயம்மா தெரிசாவைப் பார்த்தாள். வேண்டாம் என்று பார்வையால் சுட்டினாள் தெரிசா. ”நான் சாப்பிடப்போறேன்” என்றாள் ஜெயம்மா. சங்கரன் கண் விழித்தார். கை வைத்துத் தடுத்தார் யாரை என்று இல்லாமல்.

“ஜெயம்மா, நீ மட்டும் ஏன் சாப்பிடணும்? இது கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் போகலாம். என் அனுபவத்திலே இருந்து சொல்றேன். போய் சாப்பிட்டுக்குவோம்”. ஹோஸ்டஸிடம் வேண்டாம் என்று ஜெயம்மாவும் திருப்பிக் கொடுத்ததும் தான் சங்கரன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

மங்களூர் விமான நிலையத்தில் கொச்சி – மங்களூர் விமானம் இறங்கும்போது இருகை கொண்டு இரு செவி பொத்தி, சீட்டில் சுருண்டு கிடந்தார் சங்கரன். இட்ஸ் ஆல்ரைட் என்று தெரிசா திரும்பத் திரும்பச் சொல்லியபடி அவர் தோளைத் தடவிக் கொண்டிருந்தாள்.

சங்கரன் அடுத்த சீட் பக்கம் சரிந்து தெரிசாவின் உதடுகளில் முத்தம் கொடுத்தார். அவளுக்கு எல்லா விதத்திலும் கூச்சத்தைக் கொடுத்த முத்தம் அது. வசந்தி தலை குனிந்து பார்த்தபடி இருந்தாள். பொது இடத்தில் கொடுத்த முத்தம், அறுபத்தைந்து வயசில் வாலிபம் திரும்பியது போல் கொடுத்தது, மனைவி பார்க்க சிநேகிதிக்குக் கொடுக்கப்பட்டது. ஜெயம்மாவுக்கு முன்னால் சிருங்காரம் காட்டிய நாகரிகமின்மை எல்லாம் தெரிசாவுக்கும் வசந்திக்கும் சங்கடத்தை உண்டாக்கியிருக்க வேண்டும்.

”ஜெயம்மா, ஏர் போர்ட்லே இருந்து வீடு ரொம்ப தூரம் இருக்குமா”?

வசந்தி சூழலை மாற்றக் கேட்டாள்.

“வசு, இறங்கி அரைமணி நேரத்தில் பேக்கேஜ் வாங்கிண்டு கார்லே உக்காந்து பாஜ்பே மெயின் ரோடுலே போனா, பத்தே நிமிஷத்திலே பேஜாய் தான். அதான் நம்ம பிரதேசத்துக்கு பேர். பேஜார் இல்லே, பேஜாய்” என்றாள் ஜெயம்மா. விமானம் ஓடி இறங்கி, வேகம் குறைந்து ஊர்ந்து, பின் நின்றது.
”மங்களூர்லே என்ன பார்க்கணும்?” சங்கரன் மங்களூர் பேஜாய் நகர்ப்பகுதியில் ஜெயம்மாவின் அபார்ட்மெண்ட்க்கு காரில் போகும்போது கேட்டார்.

“ஜெயம்மாவை பார்க்க வந்திருக்கோம். பார்த்துட்டு திரும்பிடலாம்” என்றாள் வசந்தி. தெரிசாவைப் பார்த்து உடனே, “அஃப் கோர்ஸ் அக்கம்பக்கத்துலே பீச், கோவில்னு நாலைஞ்சு ஸ்பாட் பார்த்துட்டு” என்று கொஞ்சம் போல் மாற்றினாள்.

ஜெயம்மா, ”இவ்வளவு தூரம் வந்து இந்த ஜெயம்மாவோட கிழட்டு மூஞ்சியைப் பார்த்துண்டு உக்காந்துட்டு, மறுபடி ப்ளேன் பண்ணிப் போகப் போறியா?” என்று கேட்க தெரசா சிரித்துவிட்டாள்.

“அது என்ன ப்ளேன் பண்றது?” தெரிசா கேட்டாள்.

ஜெயம்மாவும் சிரித்தாள். ”எங்க தமிழ்லே வண்டி பண்ணுவோம்னா வண்டியிலே போக ஏற்பாடு செய்வோம், பல் கழுவுவோம் என்னாக்க பல் ப்ரஷ் பண்ணுவோம், தலைய்லே எண்ணெ துடைப்போம் அப்படீன்னா தலையிலே எண்ணெய் தடவுவோம், ஏன் கேக்கறே போ!” என்று தெரசாவைத் தோளில் அணைத்து, வசந்தி மேல் காட்டிய அதே நேசத்தை தெரிசா மேலும் காட்டினாள்.

“தெரிசா, இங்கே நானே உங்க மூணு பேரையும் கூட்டிப் போக உத்தேசிச்சிருந்தது கத்ரி மஞ்சுநாத் கோவிலும் தன்னீர்பவி பீச்சும். எலிட் பீச் அது. பாபுலர் பீச்சுன்னா பனம்பூர் பீச் இருக்கவே இருக்கு. ரெண்டுக்கும் கூட போய்ட்டு வந்துடலாம். நம்ம வீட்டுலே இருந்து பக்கம் தான். மஞ்சுநாத் கோவில் ஆயிரம் வருஷம் முந்தி தஞ்சாவூர் கோவில் மாதிரி ரொம்பப் பழைய, அற்புதமான கோவில்”.

“ஷாப்பிங் எங்கே போகலாம்? என்ன வாங்கலாம்?” வசந்தி கேட்டாள்.

“ட்ரை ப்ரூட்ஸ், முக்கியமாக முந்திரிப் பருப்பு, ஏலம், பட்டை லவங்கம், மிளகு, டப்பாவிலே அடைச்ச மீன். சரி சாப்பிடலேன்னா வேண்டாம், மெல்லிசா பதினாலு காரட் தங்க நகை எல்லாம் வாங்கலாம்.. நாள் முழுக்க ஷாப்பிங் போகலாம். அவ்வளவு அங்காடி உண்டு” என்றாள் ஜெயம்மா.

வீட்டு வாசலில் கார் நின்றது. காவல் சிறந்த gated community. பல மாடிக் குடியிருப்பு. நாகரிகமும் வளமும் தெரியும் தனவந்தர் சூழல். எல்லாம் மூணு பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் தானா என்று கேட்டாள் வசந்தி. ஆமா என்று தலையசைத்தாள் ஜெயம்மா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2023 21:15

இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.