பத்து நூறு ஆண்டுகள் துயில் கொண்டு கண்விழித்த நீலன் வைத்தியர் – தினை அல்லது சஞ்சீவனி நாவலில் இருந்து

தினை அல்லது சஞ்சீவனி நாவல் அத்தியாயம் 31-இல் இருந்து ஒரு சிறு பகுதி

நீலன் வைத்தியர் எழுந்து விட்டார்.

பெருந்தேளர்தம் பேரரசு நடாத்தும் நிலந்தரை எங்கணும் இதுதான் பேச்சு. கரடி குட்டிக்கரணம் அடித்தபடி பறந்ததைக் கூட யாரும் லட்சியம் செய்யவில்லை.

போன வாரம் வரை இப்படி ஆகியிருந்தால், எப்படி, கரடி கரணம் அடித்தபடி பறந்திருந்தால் வீடுகளில் கலவி செய்திருக்கும் மானுடரும் வளையில் புணர்ந்தபடி இருக்கும் தேள்களும் ரதி விளையாட்டு நிறுத்தி கரடியின் இடுப்பை ஆர்வமாக நோக்கி, ரசிக்க அங்கங்கே தலையுயர்த்தி நின்றிருக்கும்.

நீலன் வைத்தியர் எழுந்திருந்தால் கரடியை விட அவர் தான் கவன ஈர்ப்பு செய்யக் கூடியவர்.

அவர் எழுந்திருந்தார் என்ற பேச்சு தேளரண்மனையில் தான் முதலில் தொடங்கியது. அங்கே சாதாரணமாக முதுபெருந்தேளர் பற்றிய வம்பு, வதந்தி, அக்கப்போர் தான் அவ்வப்போது ஆரம்பிக்கும். ஏமப்பெருந்துயில் மண்டபத்தில் அவர் துயிலும் மாண்பு குறித்து வேடிக்கையாக விதந்தோதப் படுவதாக இது பெரும்பாலும் இருக்கும்.

இன்று காலை முதுவர் ஓய்விலிருக்கும் மண்டபத்தில் திடீரென்று அண்டங்கள் நடுங்க, தரை பிளக்க, சுவர் விரிசல் விட ஒரு பெரும் சத்தம் உண்டானது.

எல்லோரும் முதுவன் உறங்கும் பேழை அருகே போய்ப் பார்க்க, பேழை கிட்டத்தட்ட மின்னல் வெட்டி இடி இடித்து இரண்டும் ஒரே நபர் மேல் விழுந்தது போல் முதுவர் பேழைக்கு கேடு சூழ்ந்தது கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள்.

நுண்மான் நுழைபுலம் மிக்க அறிஞர்களும் தொழில் நுட்ப வல்லுனர்களும் பேழை புதியதாக மாற்றும் முன் என்ன ஆயிற்று என ஆராய்ந்தபோது தெரிந்தது என்ன என்றால் – முதுவர் வாயுப் பிரிந்ததே காரணம்.

அவர் துயிலரங்கில் பேழையுறங்கும் இந்த முன்னூறு ஆண்டுகளில் மொத்தம் ஏழு தடவை மண்டபத்தில் சூழ்ந்திருக்கும் பேழைகளில் உறங்கும் பெண்டிரைப் பார்த்துத் திரும்பிப் படுக்கவும், நூற்று முப்பத்தேழு முறை அதேபோல் உறங்கும் குமரரை நோக்கி காமம் மிக்கூரத் திரும்பிப் படுக்கவுமாக பெருஞ்சத்தமாக அப்போதெல்லாம் உடல் அசைத்திருந்தார் முதுவர்.

முன்னூறு ஆண்டில் முதலாவதாக வாயுத் தொல்லை காரணமாகப் பேழை பழுதடைய அதை மாற்ற வேண்டிப் போனதாக அரசறிவிப்பு கூறும்.

இனி தினமும் அவருடலுக்கு முன் பேழைக்கு அருகே வைத்து அடுத்த நாள் எடுத்து வேறு புதியதாகப் படைக்கும் உணவில் மொச்சைச் சுண்டல் வைக்க வேண்டாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மொச்சை புறம் பேசும் என்ற ஆன்றோர் மொழி கேட்டு இம்முடிவு எடுக்கப் பட்டது.

துயில் முழுக்கக் கலைந்து அவர் எழும்போது போர் முழக்கமாக எதிரிகளை நடுநடுங்க வைக்க அவர் நீட்டி நிமிர்ந்து கம்பீரமாக நின்று வாயு பிரியட்டும். இப்போது உறங்கட்டும்.

இதற்கான அறிவிப்பு இன்று காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனில், எதிர்பாராமல் கோகர் மலை அரசியல், சமூக, பொருளாதார அரங்கில் பெருமாற்றமெழ வைக்கும் வேறொரு சம்பவம் நிகழ்ந்தது கண்டீர்.

இது குறித்த அரசு அறிக்கை சொல்வது –

முதுபெருந்தேளர் தாற்காலிகமாக உயிர்கொண்டு எழுந்தார் என்பதை மகிழ்ச்சியோடு இவ்வரசு அறிவிக்கிறது.

அவர் எப்போதும் எழுந்ததும் தான் இருக்கும் மண்டபத்தை நடந்து சுற்றி வருவது வழக்கம். தன் அருகில் உயிர்த்திருப்பவர்கள், துயில்கிறவர்களின் நலம் பேணுவதில் அக்கறை மிகுந்தவர் என்பதால் அடுத்த பேழைக்குள் புதியவராக நீலன் வைத்தியர் உறங்குவது கண்டு சிறிது வியப்படைந்ததாகத் தெரிகிறது.

தன் அருந்தேள் ஆற்றலைப் பயன்படுத்தி நீலர் துயிலும் பேழையின் மூடியை தன் கரத்தால் தூக்கி நலம் விசாரித்தார் என்பதையும் அறிவிப்பதில் தேளரசு கூடுதல் உவகை எய்கிறது.

நலம் விசாரிப்பைப் பரிமாறிக் கொண்டபின் முதுபெருந்தேளரும் நீலன் வைத்தியரும் அடுத்து சஞ்சீவனி உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பதில் மனநிறைவு தெரிவித்தார்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

நடக்கவில்லை, ஓடுகின்றன என்று நீலன் வைத்தியர் மொழிந்ததை முதுவர் ரசித்தார். முதுவர் நம் பெருமதிப்புக்குரிய விருந்தினர் என்று நீலன் வைத்தியரைக் குறிப்பிட்டு, இந்தக் கவுரவப் பட்டத்தை ஏமப் பெருந்துயில் மண்டபத்திலோ பெருந்தேளர் அரண்மனையிலோ வைத்து நீலருக்கு வழங்குதல் சாலச் சிறந்தது என்று கருத்துத் தெரிவித்தார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 08, 2023 02:52
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.