இரா. முருகன்'s Blog, page 19
February 29, 2024
நிலக்கரி ரயில் இஞ்சின் போல சத்தமிடும் தீக்குச்சி திரை அழகி
வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசை 4 – அடுத்த சிறு பகுதி
பாட்டி அழ ஆரம்பித்தாள். கிழிசல் பாயில் கிழிந்த கோரை போலக் கிடந்த அம்மாவைத் திலீப் பார்க்க அவன் கண்ணிலும் நீர் திரண்டது. 29 ஃபெப் 2024
பாட்டி நான் பக்கத்து சால் தாய்டே மூலம் அட்டண்டர், அதான் அம்மாவைக் கவனிச்சுண்டு பகல் பூரா இங்கேயே இருக்க ஆள் ஏற்பாடு செஞ்சுடறேன். உனக்கும் உதவியா இருப்பா. இன்னும் ரெண்டே மாசம். பெரியம்மாவோட ஃபோல்க் ஆர்ட் ஃபோரம் ஆபீஸ் இங்கே திரும்பிடும். அப்புறம் ஆபீஸ் போய்ட்டு வந்து நானே பார்த்துப்பேன். பணம் எல்லாம் எதேஷ்டமா இருக்கு.
பாட்டி முகத்தில் கொஞ்சம் போல் நிம்மதி தெரிந்தது. புத்தி பேதலித்திருக்கும் பிரசித்தி பெற்ற மராட்டிய லாவணி நாட்டியக்காரி ஷாலினி மோரேக்குப் பணிவிடை செய்து ஓய்ந்து போயிருந்தாள் அவள். மருமகளானால் என்ன, சாதம் ஊட்டுகிறதும், பீ துடைக்கிறதும், உடுதுணி மாற்றுவதும் அலுக்காமல் எத்தனை வருடமாக அவள் செய்து வருகிறாள்! வீட்டுக்காரன், நாட்டுப் பெண் என்று அவள் சிஷ்ருஷைக்கு இதுவரை ரெண்டு பேர் வந்தாச்சு. அதில் ஒருத்தரை எல்லா உபசாரத்தோடும் மேலே அனுப்பியும் ஆனது.
இன்றைக்குக் காலையில் முதல் வேலையாக தாய்டே மூலம் அம்மாவுக்கு உதவி செய்ய ஆள் நியமித்து அட்வான்ஸ் பணமாக ஆயிரம் ரூபாயும் கொடுத்து ஒரு கடமை முடித்தான் திலீப்.
அடுத்து கட்சி ஆபீஸுக்குப் போய் கார்ப்பரேஷன் எலக்ஷனுக்கு கட்சி வேட்பாளர்களை முடிவு செய்கிறதைப் பற்றிக் கேட்க வேண்டும். எப்படியாவது அவன் இருக்கும் வார்டுக்கு நிற்க வைக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நின்று ஜெயித்தால் அவன் எங்கேயோ போய் விடலாம்.
எல்லா நினைவும் கனவுமாக லோக்கல் டிரெயின் ஏறப் போனபோது தான் ஸ்டேஷனில் கூட்டமே இல்லாததைக் கவனித்தான். ஸ்டேஷன் பெட்டிக்கடைக் காரன் சொன்னான் –
இன்னிக்கு புத்த பூர்ணிமா. லீவு நாளாச்சே. மறந்துட்டீங்களா திலீப் அண்ணா?
ஆர்வம் எல்லாம் உடனே தணிய, எடுத்த அடி திரும்ப வீட்டுக்குப் போகாமல் வேறே என்ன செய்யலாம் என்று யோசிக்க, கமர்தீன் நினைவில் வந்தான்.
கிராண்ட் ரோடு, பெடர் ரோடு வட்டாரங்களில் நயம் வெளிநாட்டு சரக்குகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கிற கமர்தீன் திலீப்பின் பால்யகால சகா.
அம்பலப்புழை வெக்கையும் உச்சி மண்டையில் துளைத்துப் புகும் கேரள வெய்யிலின் உஷ்ணமும் குறைக்க கூலிங் கிளாஸ் வாங்க கமர்தீனைப் பார்க்கக் கிளம்பினதும் தாமதமாகியது. அவன் மஸ்ஜித் பந்தர் சரக்கு கொள்முதலுக்குப் போயிருந்தான். இன்னும் ரெண்டு மணி நேரத்தில் வந்து விடுவான் என்றார்கள் அண்டை அயலில். குறைந்தது ரெண்டு மணியாகுமாம்.
சும்மா கிராண்ட் ரோடில் சுற்றி வருவதைத் தவிர்க்க சினிமா தியேட்டரில் புகுந்து இன்னும் இரண்டு மணி நேரம் இந்த நிழல் கதாநாயகியின் உருட்டித் திணித்த முலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க விதித்திருக்கிறது திலீப்புக்கு.
அம்பலப்புழை ஆபீசில் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள்? அவன் நினைத்துக் கொண்டபோது கூட்டமாக விசில் அடிக்கும் சத்தம். திலீப் திரையைப் பார்த்தான்.
ஊஊஊ என்று காண்டாமிருகம் போலவோ, நிலக்கரி பற்ற வைத்து ஓட்டும் ரயில் இஞ்சின் போலவோ ஊளையிடும் அந்தத் தீக்குச்சி அழகியைப் பின்னால் இருந்து அணைக்க அடி மேல் அடி வைத்து நெருங்கி வருகிறான் கதாநாயகன். அழகான முன்பாரம் கொண்ட பெண். அவளுக்கு வாய் நாறும். திலீப்புக்கு எப்படியோ தெரியும். அது கவலைப்பட விஷயமில்லை. எல்லா துர்வாடையோடும் அவளை விடிகாலைக் கனவுகளுக்கு இடைபட்ட போர்வை நேரங்களில் அவன் அனுபவிப்பான். அந்தக் கதாநாயகி அகல்யாவாக உருமாறிக் குதித்து வரும்போது அவன் அடுத்த தூக்கத்துக்குப் போயிருப்பான்
மழைக்காலமும் தீபாவளியும் முடிந்து அடுத்த குறுகிய வேனல் காலம் எட்டிப் பார்க்கும் பொழுது இது. கடகடத்துச் சுழலும் கூரை மின்விசிறிகள் வெக்கையைக் கூட்டிப் புழுக்கத்தை சர்வ வியாபகமாக நிறுத்தி வைக்க, குளோசப்பில் உதட்டைச் சுழித்து அழகு காட்டும் கதாநாயகி, குச்சியில் செருகிய ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி கண்ணடிக்கிறாள்.
February 28, 2024
புறநகர் சினிமா தியேட்டரில் திலீப் மோரே பாதி பார்த்த மராத்தி திரைப்படம்
வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து – நாலு நாவல் அரசூர் வரிசையில் நான்காவது நாவல்
ஒடிந்து விழுவது போல் கதாநாயகி. அவளைப் படைத்தவனோ, உடுப்புத் தைத்தவனோ, சரீர பாரத்தை எல்லாம் ஸ்தன பாரமாக மட்டும் உடம்பில் வடக்குப் பிரதேசத்தில் உருட்டி வைத்து மற்றப்படி குச்சிக் கால்களோடு அவளைப் புல் தரையில் வெட்டுக்கிளி போலத் தத்தித் தத்தி ஓட வைத்திருக்கிறான். அவளைக் கட்டி அணைத்துத் தூக்கித் தட்டாமாலை சுற்றுகிற மீசை மழித்த கதாநாயகனை ஒரு நூற்றுச் சில்லரைப் பேர் கிராண்ட் ரோடு சினிமா தியேட்டரின் பூச்சி ஊறும் நாற்காலிகளில் உட்கார்ந்து, பகல் காட்சியில் அசூயையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திலீப்பும் அந்தக் கூட்டத்தில் உண்டு.
அம்பலப்புழையில் திலீப் வேலை பார்க்கிற மங்களூர் ஓடு வேய்ந்த ஆபீஸில் பிஸ்கட் ராமா சாஸ்திரி என்ற நிர்வாகிக் கடன்காரனிடம் கையைக் காலை, பீஜத்தைப் பிடித்துத் தாங்கிப் பத்து நாள் மாத்திரம் லீவு சொல்லி பம்பாய் வந்தது நேற்று நடுப் பகலுக்குத்தான்.
உன் அம்மா உடம்பு ரொம்பவே படுத்திண்டு இருக்குடா திலீபா. சியாமளா கிட்டே நான் சொன்னேன்னு ஒரு வாரம் ரஜா சொல்லிட்டு வா.
பாட்டி எழுதிய இண்லண்ட் லெட்டரை மகா நிர்வாகியான சியாமளா பெரியம்மாளிடம் திலீப் காட்டியபோது திலீப் தனக்கு என்ன உறவு என்றே மறந்து போனவளாக அவள் சர்க்கார்த் தனமாகச் சொன்னாள் –
சாஸ்திரி சார் கிட்டே லீவு சொல்லிட்டுப் போ. அடுத்த மாதம் முதல் வாரம் கான்பரன்ஸ் இருக்கு. வேலை ஏகத்துக்கு உண்டு.
பாட்டி உனக்கு மாமியார் தானே பெரியம்மா? என் அம்மா உனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் உன் ஓரகத்தி தானே. அப்படி என்ன அலட்சியம் அவர்களைப் பற்றி? என்னைப் பற்றி? காசு இல்லாது போனதா?
கேட்க நினைத்ததை மனதிலேயே அடக்கிக் கொண்டு, பிஸ்கட் நாய் சாஸ்திரி காலை நேர ஏப்பத்தோடும், அவனுடைய அதிசுந்தரி வானரமுகி பெண்டாட்டி உடுத்திக் கிழித்த பட்டுப் புடவைத் துணியில் லாலேலா என்று கோமாளி உடுப்பு போல தைத்த கால்சராயோடும், வாயில் ஸ்கலித வாடை அடிக்கும் தாம்பூலத்தோடும் உள்ளே நுழைந்தபோது லீவுக்காகத் திலீப் மன்றாட ஆரம்பித்தது வெற்றியில் முடிய சாயந்திரம் ஆனது.
ரொம்ப நன்றி சாஸ்திரி மாமா. அயோக்கியா, உனக்கென்ன நன்றியும் நமஸ்காரமும் நபும்சகனே. போய்ட்டு ஒரு வாரத்துலே ஓடி வந்துடறேன். உன் மயிர்பிடுங்கி மேனேஜர் பதவிக்காக இல்லேடா அல்பமே, பெரியம்மா ஏதோ மாசாமாசம் சம்பளமா விட்டெறியறாளே அந்தப் பணத்துக்காகத் தான் திரும்ப ஓடி வரேன். பாவம் உங்களுக்கு ஒரு வாரம் கொஞ்சம் அதிகம் வேலை. சும்மா மரச் சாமானை மத்தது வச்சுத் தேச்சுண்டு தானே உக்கார்ந்திருக்கே. குண்டி வணங்கி வேலை செய்யடா குண்டுசட்டி நரகல் புழுவே.
வடக்கே சூலம் தெற்கே ஈட்டி கிழக்கே கத்தி என்று பஞ்சாங்கத்தில் போட்டதோ என்னமோ காரணாமாகக் கிட்டத்தட்ட காலியாக இருந்த கம்பார்ட்மெண்டில், அவன் சுகமாக யாத்திரை செய்து பம்பாய் வந்தது நேற்றுப் பகலில்.
விச்சியா இருக்கியா என்று வரவேற்ற கற்பகம் பாட்டியிடம் அம்மா எங்கே என்று கேட்க, குடியிருக்கும் சால் காம்பவுண்டு சுவரை காட்டினாள் அப்போது.
கக்கூஸ் போற வழியிலே படுத்து வெயிலோ மழையோ சதா தூங்கிண்டே இருக்காடா உங்கம்மா. சாப்பாடும் வேணாம்கிறா. பயமா இருக்கு எனக்கு.
பாட்டி அழ ஆரம்பித்தாள். கிழிசல் பாயில் கிழிந்த கோரை போலக் கிடந்த அம்மாவைத் திலீப் பார்க்க அவன் கண்ணிலும் நீர் திரண்டது.
February 27, 2024
யுத்த விமான பைலட் ஆகப் பணி புரிந்த அமேயர் அச்சன்
வாழ்ந்து போதீரே அரசூர் நாவல் நான்கு – சிறு பகுதி
நீங்க என்ன வாகனம் எல்லாம் ஓட்டியிருக்கீங்க அச்சன்?
கொலாசியம் மதுக்கடைக் காரனும் மறைந்த மெட்காபின் உற்ற தோழனுமான செபாஸ்தியன், தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அமேயர் பாதிரியாரிடம் விசாரித்தான். ஓவர்கோட்டை மேலே இழுத்து காது மடலை மறைத்தபடி அவர் ஒரு வினாடி யோசித்தார்.
வெறும் நாளில், நடக்கும்போதும், சைக்கிள் ஏறி கால்டர்டேல் பிரதேசத்துக் கல்பாளம் வேய்ந்த குறுகிய பாதைகளில் சுருதி கெடாமல் ரப்பர் டயரால் தட்டித் தட்டி ஓட்டிப் போகும் போதும் தெரியாத குளிரின் ஊடுருவும் தன்மை, லண்டன் போகும் நெடுஞ்சாலையில் விரையும் காரில் முன் வசத்து இருக்கையில் அமர்ந்து போகும் போது மனதில் பலமாக வந்து நிறைகிறது.
சிறுநீர் இந்த வினாடி போயே ஆகணும் என்று நெருக்கவும், கைகால்கள் கொஞ்சம் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கிடந்து சுகம் கொண்டாடி விட்டுப் போகலாமென ஒரேயடியாக ஓய்ந்து வரவும் குளிர் வாதனைப் படுத்துகிறது.
எனில், பயணம் போகாமல் தீராது. அழைப்பு விடுத்த அரண்மனைக் காரர்கள் அவரையும், மறைந்த மெட்காபின் அதிசயமான மோட்டார் காரையும் சேதன அசேதனப் பொருட்களுக்கான வேற்றுமை குறித்த போதமின்றி ஒரே நேர்கோட்டில் சீராகக் காண்கிறவர்கள். பாதிரியாரை ஒரு பென்ஸ் நாணயம் கூட யாத்திரைச் செலவுக்கென்று தராமல், அரண்மனைத் தோட்டத்துக்குக் காரோடு வரச் சொல்லி கூப்பிட்டு விட்டு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இந்தக் காரை ஓட்டத் தெரிந்திருந்தால் அமேயர் கூட்டுக்கு ஆள் சேர்த்துக் கொண்டு இப்படிக் கிளம்பியிருக்க மாட்டார் தான். இந்தக் கார் மட்டும் என்ன, வேறு எந்தக் காரையும் அவர் ஓட்டப் படித்ததில்லை இதுவரை. கொலாசியம் மதுக்கடைக் காரன் செபாஸ்தியனும் அவனுடைய நிழல் போல சதா கூட வரும் உதவியாளனும் இன்றைக்குக் கூட்டிப் போகாவிட்டால் அவரால் அரண்மனை விருந்துக்குச் சகல கம்பீரத்தோடும் கிளம்பி இருக்க முடியாது.
அப்பன், நீங்கள் ராணுவத்தில் இருக்கும்போது தண்ணீரிலும் தரையிலும் ஓடியபடிக்குக் கண்ணி வெடி விதைத்துப் போகும் புது மோஸ்தர் ஜீப் ஓட்டியவர் என்று கேள்விப் பட்டேனே. உண்மைதானா அது?
செபாஸ்தியன் தன் கேள்வியைச் சற்றே மாற்றி அவரிடம் கேட்டான். அவனுக்கு இந்தக் கேள்விக்காவது பதில் சொல்லியே ஆக வேண்டும்.
உலக மகா யுத்த காலத்தில் எங்களுக்கு விமானம் ஓட்டப் பயிற்சி கொடுத்தார்கள். நான் தலைகீழாக விமானத்தைத் திருப்பி நிதானம் தவறாமல் ஓட்டுவதில் சிறப்புப் பயிற்சி எடுத்திருந்தேன். அதை நடப்பாக்கிக் காட்டுவதற்குள் போர் ஓய்ந்து விட்டது.
அமேயர் பாதிரியார் தனக்கு வேதாகம கீர்த்தனம் எத்தனை பாடத் தெரியும் என்று யாராவது கேட்டால் சொல்கிற, விலகி நின்று தகவல் மட்டும் அறிவிக்கிற குரலில் போர் விமானம் பற்றிச் சொல்ல, செபாஸ்தியன் அவரைப் புது மரியாதையோடு நோக்கினான்.
அவன் விமானத்தின் இஞ்சின் அறைப் பக்கம் கூட போனதில்லை. வயதான ஒரு பாதிரியார் யுத்த விமான பைலட்டாக, சாகசங்கள் செய்யும் திறமை வாய்க்கப் பெற்றவராக இருந்திருக்கிறார் என்பது அவனை நிலைகுலைய வைத்துப் போட்ட தகவல்.
அமேயர் பாதிரியார், ஏற்கனவே மரித்து விழுந்தவர்களைத் துப்பாக்கி எடுத்துச் சுடவும், ஏன், ராணுவத் தாவளத்தில் பினாயில் கலந்த தண்ணீரை அடித்து அடித்து ஊற்றிக் கழிப்பறை கழுவவும் கூட லாயக்கற்றவர் என்று நினைத்ததற்காகத் தன்னையே சபித்துக் கொண்டான் செபாஸ்தியன்.
அடேயப்பா. என்ன ஆச்சரியம். கர்த்தருக்கு ஸ்தோத்ரம். விமானம் தவிரவும் வேறு நுட்பமான வாகனங்கள் ஓட்டி இருப்பீங்கன்னு நினைக்கறேன் ஃபாதர். மலைப் பாதையில் போகும் ராட்சச ட்ரக், போர்க் களத்தில் டேங்க் இப்படி.
அமேயர் பாதிரியார் சிரித்தார். அதெல்லாம் அவர் பரிசயப் படுத்திக் கொள்ளாதது. கொஞ்சம் யோசித்து மன்னிக்கக் கோரும் குரலில் அவர் தொடர்ந்தார் – மோட்டார் படகு அசுர வேகத்தில் ஆற்றில் ஓட்டிப் போயிருக்கேன். ரெண்டு தடவை படகு கவிழ்ந்து அடிபடாமல் தப்பிச்சேன். சோன் நதியில் ராத்திரி நேரத்தில் படகு ஓட்டினது ஒரு காலம். அது பிரான்ஸில் பெரிய ஆறு. எப்பவும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நதி.
செபாஸ்தியனின் உதவியாளன் ரெண்டு கையையும் வானத்தை நோக்கி உயர்த்தியபடி அமேயர் பாதிரியாருக்கு மங்களம் சொன்னான். பிரான்ஸ் என்ற ஒரு நாடு பக்கத்தில் கடல் கடந்து எங்கோ இருக்கிறது என்பதை மட்டும் தெரிந்த அப்பாவி மனுஷன் அவன். ஆற்றையும் படகையும் கூட அவன் அபூர்வமாகவே பார்த்திருக்கிறான்.
இவ்வளவு சிக்கலான யந்திர அமைப்பு இருக்கிற சமாசாரம் எல்லாம் ஓட்டி ஜெயித்து வந்திருக்கீங்க ஃபாதர். இந்தக் காரை ஓட்டறது சின்னப் பிள்ளை விளையாட்டாகத்தான் இருக்கும் உங்களுக்கு. வாங்களேன் ஒரு ஐந்து நிமிடம் ஸ்டியரிங் பிடியுங்க. நீங்களே ஓட்டிப் போயிடலாம்.
February 25, 2024
முன்னூறு வருடம் முன்பு கொல்லரிடம் சாவி வாங்க பணம் கொடுத்தவனின் ஆவி
வாழ்ந்து போதீரே -நான்காம் அரசூர் நாவல் பகுதி
ஊரில் போன மாதக் கடைசியில் பேய்களின் ஆராதகன் ஒருவன் குடியேறி இருப்பதாக அமேயர் பாதிரியாருக்குத் தெரிய வந்தது. பேயோட்டுகிறவன் இல்லை இவன். பிசாசு இருப்பதாகத் தெரிந்த இடங்களில் ராத்தங்கி, அவற்றோடு பேசவும் பழகவும், முடிந்தால் கேமராவில் அவற்றைப் படம் பிடிக்கவும் ஆர்வம் உள்ளவனாம். அம்மாதிரியான இடங்களில் தங்கி இருந்து நடவடிக்கைகளைக் கவனிக்க அவன் பணம் செலவழிக்கவும் தயாராம்.
அட்சன் முடுக்குச் சந்தில் முப்பது பரம்பரைக் கொல்லன் பெர்ரியின் வீட்டு முகப்பில் ஒரு ஆவி உண்டு. முன்னூறு வருடங்களுக்கு முன் கோட்டைக் கதவுக்கு மாற்றுச் சாவி செய்யப் பணம் கொடுத்து இன்னும் அந்தச் சாவி கிடைக்காமல் காத்திருக்கும் ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தனின் ஆவி அது. பௌர்ணமி இரவுகளில் சாவி வேணும் சாவி வேணும் என்று அது பாடுவது உண்டாம். அதைக் கேட்கக் கொல்லனுக்கு பத்து பவுண்ட் வாடகை கொடுத்து பிசாசு ஆராதகன் அந்த வீட்டில் தங்கினதாகக் கேள்வி. பூட்டி வைத்த எல்லா வீடுகளுக்கு உள்ளும் அவன் பிசாசு ஆராய்ச்சிக்காக நுழைய ஆர்வம் காட்டுகிறானாம். நல்லதிற்கில்லை இது என்று அமேயர் நினைத்தார்.
ஆராதகர்கள் ஒரு பக்கம் பிசாசுகளின் தோளில் கை போட்டு அணைத்துச் சேர்ந்து சுற்ற முன்வர, உள்ளூர்ப் பேய்கள் தங்கள் விளையாட்டுகளை மும்முரமாக்கிக் கொண்டிருப்பதாகவும் அமேயர் பாதிரியார் காதில் விழுந்தது.
கால்டர்டேல் நைட் கிளப்பில் சுற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டு விடலைப் பேய் ஒன்று உண்டு. ஆண் தான். நைட் கிளப்பில் இருந்து வந்து, அமேயர் பாதிரியாருக்கு இருபது பவுண்ட் தட்சணை வைத்து அந்தப் பேயை ஓட்ட வரச் சொன்னார்கள் ஒரு முறை. அது சில ஆண்டுகள் முன்பு நடந்தது.
அவர் சகல சாமக்கிரியைகளோடும் உதவியாளர்களோடும் அங்கே போக, அவசரமாக உள்ளே அழைத்த நைட்கிளப் உரிமையாளர் சொன்னார் –
அச்சன், நாலைந்து வாடிக்கையாளர்கள், எல்லோரும் கிழவர்கள், அவர்கள் சல்யம் பொறுக்கமுடியாமல் உங்களைப் பேயோட்டக் கூப்பிட்டது. உள்ளபடிக்கு அந்தப் பேய் பற்றிய வதந்தியால் தான் கிளப் நிரம்பி வழிகிறது. அதுவும் போன வாரத்தில் பெண்கள் கூடவே பிசாசு உள்ளே நுழைவதாகச் செய்தி. கடைசி வரிசை இருக்கையை அந்த ஆவி ஆக்ரமித்துக் கொள்ள அதன் மடியில் அமர்ந்து சிலீரென்று பிருஷ்டம் ஈரமாக, அரக்கப் பரக்க வெளியே ஓடி வரும் பெண்களைப் பின்னால் தொட்டுப் பார்க்கவே வெளியூர்க் குடிகாரர்கள் வந்து சேர்கிறார்கள் இருந்து விட்டுப் போகட்டும். வியாபார விருத்தி ஆகிறது. வந்ததற்கு ஒரு பிரார்த்தனையும் நன்றி அறிவிப்பும் சொல்லிப் போங்கள்.
அன்றைக்கு விரட்டாமல் திரும்பி வந்த விடலைப் பிசாசு இப்போது பெண்கள் கழிவறையில் தண்ணீர் திறக்க வேண்டிய நேரத்தில் நீர்ப் போக்கை அடைக்கிறதாம். காலிலும் தலையிலும் தண்ணீர்க் குழாய் திறந்து பெண்களின் உடுப்பை நனைக்கிறதாம். இன்னும் மோசமாக, பெண்கள் கழிவறைக் கதவுகளை, உள்ளே யாராவது இருக்கும் போதே மட்ட மல்லாக்கத் திறந்து வைக்கிறதாம். அது மட்டுமில்லை, இருக்கும் வெளிச்சமான விளக்குகளை எல்லாம் போட்டுக் கழிப்பறையைப் பிரகாசப்படுத்துகிறதாம். கழிவறைச் சத்தங்களை ஒலி பெருக்குகிறதாம். கேட்பவர்களுக்கு மனக் கிளர்ச்சி உண்டாகும் படி அந்தரங்க பாகங்களைக் கிசுகிசுக்கும் குரலில் வர்ணிக்கிறதாம்.
மேற்படித் தகவலை பெர்னாந்தஸ் குறையாகச் சொன்னாலும் அவன் முகத்தில் சந்தோஷம் இருந்ததைக் கவனித்தார் அமேயர் பாதிரியார். வியாபாரம் இன்னும் அதிகமாக இதைவிட வேறே என்ன மார்க்கமுண்டு?
நேரம் கிடைக்கும் போது நைட் கிளப் வாசலில் ஒரு பிரார்த்தனை ஏற்பாடு செய்து நடத்தி விட்டு வந்தால் சர்ச்சுக்கு வரும் கூட்டம் அதிகரிக்கலாம். இன்னும் இரண்டு மாதத்துக்கு ஞாயிறு தோறும் இதைப் பற்றிப் பிரசங்கம் செய்து திருப்பலி தரலாம். இந்தச் சிந்தனையைப் பத்திரமாக நினைவில் மூடி வைத்தார் அவர்.
February 23, 2024
பிரார்த்தனை நேரத்தில் பியானோ வாசித்தவர்களும் ப்லூட்டோ கிரகத்தை கண்டுபிடித்தவர்களும்
வாழ்ந்து போதீரே பதிவுத் தொடர் தொடர்கிறது
கால்டர்டேல் குரிசுப் பள்ளியில் ஒரு நூற்றாண்டு முன்னர் பியானோ வாசித்து வந்த ஒரு ஊழியக்காரன் சின்னஞ்சிறு கிரகமான யுரேனஸைக் கண்டுபிடித்தது உண்மையன்றோ. அதற்காக போப்பாண்டவரின் பாராட்டு பத்து வருஷம் கழித்து வந்து சேர்ந்தபோது அந்த ஊழியன் சர்ச் வளாகத்தில் அந்திம உறக்கத்தில் இருந்தான். இங்கிலீஷிலும் லத்தீனிலும் கடிதம் எழுத ஆள் தேடுவதில் தாமதமானதாக அப்போது அறிவிக்கப் பட்டது. அமேயர் பாதிரியாருக்கான திருச்சபை கடிதம் எழுத தெக்கே பரம்பில் போல் அங்கே எல்லா மொழியும் தெரிந்த பாதிரியார்கள் அருகே இருக்க வேண்டும்.
இந்த அக்கப்போர்கள் அல்லாமல் ரெண்டு மாசத்தில் கால்டர்டேலில் வேறு எந்த மாற்றங்கள் உண்டு என்பதை முதலில் அவதானிக்க வேணும். அதெல்லாம் இனி அவர் ஊழியம் செய்ய இருக்கும் முறையை மாற்றி வைக்க வழி செய்யக் கூடும். இல்லாவிட்டாலும் வம்புக்கு படி ஏறும் மந்தையின் மூத்த ஆடுகளோடு பேச விஷயத் தீவனம் தரும் அதெல்லாம்.
கசாப்புக் காரன் பெர்னாந்தஸ் சொன்னபடிக்கு, யார்க்ஷயர் நெடுக இந்த ரெண்டு மாசத்தில் ஒரு கொடூரன் உலாவி வந்தானாம். ராத்திரி வீடு புகுந்து கழுத்தில் ரேசர் பிளேடால் கீறி ரத்தம் வர வைத்துப் போவதே அவன் செய்ததாம். யாரும் ரத்தப் போக்கால் மரிக்கா விட்டாலும், சன்னமாகக் கழுத்தில் கீறி வந்த நாலைந்து துளி ரத்தத்தை அவன் தன்னுடைய ஆள்காட்டி விரலில் பூசிப் போனதாகக் கதை பரவியதாம். அப்புறம் கால்டர்டேல் நகர மன்றம் கூட்டம் கூடி, பாதிக்கப் பட்ட நூறு பேரை அழைத்து நாலு கதவையும் சார்த்தி வைத்து நல்வழி காட்ட வகுப்பு எடுக்கப் பட்டதாம். அது முடிந்து ஆளுக்கு பத்து பவுண்ட் காசும், நாலு மரக்கால் கோதுமையும், ரெண்டு ராத்தல் ஆட்டு இறைச்சியும் அளிக்கப்பட்டதாம்.
இப்படி வெகுமதி வாங்கிய அவர்கள் எல்லோரும் ஒருத்தர் போல் மற்றவர் கீசுக் கீசென்று கழுத்தில் யாரும் அவர்களைக் கிழிக்கவில்லை என்றும் ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் அவர்களே வீட்டில் இருந்த பழைய பிளேடு, பியர் பாட்டில் திறக்கும் சின்ன அறம் இவற்றால் தம்தம் கழுத்திலும் கையிலும் முதுகிலும் கீறிக் கொண்டதாகவும் அறிவித்தனர். இறந்து போன இரண்டு பேர் விஷயம் இன்னும் வினோதமானது. கழுத்தில் பிளேடோடு மாடத்தில் இருந்து குதித்துச் சவப்பெட்டியில் நேரே விழுந்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்காகத் அவர்கள் தாங்களே பெட்டிக்குள் விழுந்து மூடிக் கொண்டதாகச் சிலர் சொன்னார்கள். அவர்கள் சவப்பெட்டியின் சவுகரியத்தை விட்டுத் திரும்ப வெளியே வர முடியாது என்று சொல்லி விட்டார்களாம். எது எப்படியோ ரேசர் பிளேட் ராட்சசர்கள் இல்லாமல் போனதில் அமேயருக்கு ஆசுவாசம் கொஞ்ச நஞ்சமில்லை. அவர்களோடு சாத்தானும் ஒழிந்து போனான்.
February 22, 2024
பகிரத்தான் அனுபவங்கள் – பீங்கான் பரணியில் ஊறுகாய் போட்டு தொட்டுக்கொள்ள இல்லை
அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது = வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து
===========================================================================
கால்டெர்டெல் மார்க்கெட்டில் கசாப்புக்கடை வைத்திருக்கும் பெர்ணாந்தஸ். அமேயர் பாதிரியாருக்கு அன்போடு ஒரு குவளை தேநீர் தர முன் வந்தான்.
பாதிரியார் இரண்டு நீண்ட மாதங்கள் இந்தியாவில் சுற்றி வந்ததைக் குறிப்பிட்டு அவருடைய அனுபவத்தைப் பங்கு வைக்கக் கோரிக்கை விடுக்கும் கால்டர்டேல் மறைநில மந்தையின் அன்பான ஆடுகளை அவர் மகிழ்ச்சியோடு வரவேற்றார். அனுபவங்கள் எல்லாம் பங்கு வைக்கத் தானே. காடியில் அமிழ்த்தி சீனப் பரணியில் ஊறுகாய் போட்டுச் சேமிக்க இல்லையே
பெர்னாந்தஸ், பாதிரியாருக்குச் சிறப்பான டீத்தூளை அன்பளிப்பாக வழங்கினான். அது ப்ராட்ஃபோர்டில் இருந்து மாமிசம் எடுத்து வருகிற டிரக் ஓட்டும் சீனாக்காரன் சூ மின் பீஜிங்கில் விடுமுறைக்குப் போய் விட்டு வந்த போது கொண்டு வந்ததாம்.
இந்தியப் பெண் மாதிரி மல்லிகைப் பூ வாசனை அடிக்கிற சாயா என்றான் பெர்னாந்தஸ். வேண்டாம் என்று சொல்லி, சாயா இலைகளைக் கிள்ளிப் போட்டு உண்டாக்கிய பழைய மூணு ரோஜாப் புஷ்பம் டீ கேட்டு வாங்கிக் கொண்டார் அமேயர் பாதிரியார். அது நேற்று காலையில்.
வாடிகனில் இருந்து அவருடைய இந்தியப் பயணத்தைப் பற்றித் தொலைபேசியில் அழைத்து விசாரிக்காவிட்டாலும், கூப்பிடு தூரத்தில் மான்செஸ்டரில் இருந்து திருச்சபை அழைப்பு வந்தது. அது முந்தாநாள் மாலையில்.
அமேயர் பாதிரியார் தென்னிந்தியாவின் சிறப்பை, அங்கே ஏசு சபை நடவடிக்கைகள் இன்னும் மேம்பட வழி இருப்பதை எல்லாம் ஆர்வத்தோடு பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். சரிதான் என்று குறுக்குச் சால் போட்டு அந்தப் பக்கம் பேசிக் கொண்டிருந்த வயதானவரும் ஒரு நிமிஷத்துக்கு பத்து வினாடி நேரம் மட்டும் காது கேட்கிறவருமான கார்டினல் சொன்னார் –
தந்தையார் அவர்களே, நீங்கள் இரண்டு வருஷம் உங்கள் மந்தையைப் புறக்கணித்து, ஆடை துறந்த விக்கிரக ஆராதகர்களிடையே ஆனந்தக் களிப்போடு பாடி ஆடித் திரிந்து தேவ ஊழியத்தை ஒதுக்கி வைத்ததன் காரணம் என்ன? இப்போதாகிலும் திருந்தி வந்தீரா?
நான் இரண்டே இரண்டு மாதம் தான் எழுதி அறிவித்து விடுப்பில் போனது. இந்தியாவில் இருந்து ஆயர் கடிதம், திருச்சபை செய்தித் தொகுப்பு இரண்டு சேவைகளையும் செய்து தான் வந்தேன். தொழாமல் ஒரு நாளும் இருந்ததில்லை.
அமேயர் சொன்னது எல்லாம் கார்டினல் காதில் விழாமல், அருவி பொழியும் சீரான ஓசை மட்டும் அவருடைய உட்செவியில் நிறைந்து வழிந்தது.
வாரும், உம் மந்தைக்காக மன்றாடுவோம்.
நாத்தழதழக்க, கார்டினல் உரக்க லத்தீனில் திருவசனம் சொல்ல ஆரம்பித்து விட்டார். தனக்கு எதுவும் காதில் கேட்காத தோரணையில் நாலு ஹலோ, ஹலோவும் அவசரமான ஆமெனுமாக அமேயர் பாதிரியார் கார்டினலை அகற்றி நிறுத்த வேண்டி இருந்தது அப்போது.
பாதிரியார் இத்தனை வருடம் செய்த ஊழியமும் செய்ய இருப்பதும் இப்படி மறைவில் ஒளிக்கப் படுவது பற்றி அவருக்கு வருத்தம் இல்லை. அவருடைய பயணத்தைப் பற்றி வாடிகனில் ஊழியம் புரியும் தெக்கே பரம்பில் அச்சன் மூலம் அங்கே சரியான தகவலைப் போப்பரசர் வரை அறிவித்து வைத்திருக்கிறார். நாளைக்கே அவரை ரோமாபுரிக்குப் பதவி மாற்றமும் இட மாற்றமும் செய்து அழைத்துக் கொள்ளலாம். அப்பன் வீட்டில் ஆயிரம் அறை.
February 21, 2024
இரண்டு மார்ச் மாதங்கள் – ஜலஹள்ளி குல்கந்து
இரண்டு மார்ச் மாதங்கள் இரா.முருகன்
1982-ல் மகா வெப்பமான ஒரு மார்ச் மாதப் பகல் பொழுதில் சென்னை தியாகராய நகரில் என் கல்யாண மகோத்சவம் நடந்தது. தாலியைக் கட்டுங்கோ, தாலியைக் கட்டுங்கோ என்று புரோகிதரிலிருந்து நாதசுவரத்துக்கு ஒத்து ஊதின பையாலு வரை பொறுமையில்லாமல் சொல்ல, நான் கல்யாண மண்டபத்தின் வாசலையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஊஹும். அந்த மனுஷர் வரலே.
தாலியால் கட்டுண்ட அவளிடம் அடுத்த நாள் காலை சொன்னேன் – ஹனிமூன் போறோம். பெங்களூர்.
பொட்டுக்கடலை மாவு அதிக போஷாக்கு அளிப்பது என்று சொன்ன மாதிரி காதில் வாங்கிக் கொண்டு தலையசைத்தாள்.
என்ன என்ன எல்லாம் எடுத்து வைச்சுக்கணும்?
சட்டென்று நினைவு வராமல் விக்ஸ் வேப்பராப் மூக்கடைப்பு இன்ஹேலரில் தொடங்கி அப்புறம் சுதாரித்துக் கொண்டு என் பெட்டியைத் திறந்து பத்து தமிழ்ப் புத்தகங்களை எடுத்துப் போட்டேன்.
இதெல்லாம் பத்திரமா கொண்டு போகணும். சுஜாதாவுக்குத் தரணும். பெங்களூர் போறதே சுஜாதாவைப் பார்க்கத்தான். என்ன புரிஞ்சதா?
பத்தே நிமிடத்தில் பெண் வீட்டார் துஷ்டா துன்மார்க்கா என்று என்னை விரோதமாகப் பார்த்தபடி கட்டுச்சாதக் கூடையில் அடைத்த புளியஞ்சாதத்தை உருட்டி வாயில் போட்டுக் கொண்டார்கள்.
அவர்கள் சாப்பிட்டு முடித்து சண்டைக்கு வருவதற்குள் நானும் பெண்டாட்டியும் செண்ட்ரல் வந்து விட்டோம். நல்ல பசி. ரயில்வே காண்டீனில் புளியஞ்சாதம் வாங்கி வந்து கம்பார்ட்மெண்டில் உட்கார்ந்தபோது அவள் கேட்டாள் – முன்னாலேயே சொல்லியிருந்தா நான் விலகி இருந்திருப்பேனே.. புளியஞ்சாதத்திலிருந்தா? கேட்க நினைத்து சும்மா இருந்து விட்டேன்.
பெங்களூரில் ஆட்டோவில் போகிறபோது விலகித்தான் உட்கார்ந்திருந்தாள். அரை இருட்டில் மல்லேஸ்வரம் குல்கந்து கடையில் இலையில் வைத்து விளம்பும் எக்ஸ்ட்ரா ஸ்வீட் குல்கந்து கூட ‘ஊஹும் வேணாம்’.
ரெண்டு இலை நிறைய சாப்பிட்டு, என் கை எல்லாம் நசநசவென்று குல்கந்து பசையும் ரோஜாப்பூ வாடையுமாக, ஜலஹள்ளிக்கு வந்து சேர்ந்தோம். காலிங் பெல்லை அடிக்க நிமிர்த்திய விரல் பெல்லோடு ஒட்டிக் கொண்டு மணிச் சத்தத்தோடு மிச்ச சொச்ச குல்கந்து வாசமும் உள்ளே ஓங்கி அடித்திருக்கும்.
வாசல் கதவு திறந்தது. ஆறடி உசரமாக ஒரு நடு வயசு அரசாங்க அதிகாரி. இவர் பெண் தானா சுஜாதா? மனைவி பார்வை என் மேல் சந்தேகமாக விழுந்தது.
‘சுஜாதா சாருக்கு ஹலோ சொல்லு’.
புரியலை.
‘சார்தான் சுஜாதா.’
‘நீங்களும் குனியணும்’
அவள் புடவையை இழுத்துச் செருகிக் கொண்டாள். நல்ல வேளை தடுத்தாட்கொண்டேன். இல்லாவிட்டால் வாசல் படியிலேயே இசகு பிசகாக அவர் காலில் விழுந்து சரிந்து விழுந்து கும்பிட்டு ஆசிர்வாதம் வாங்கியிருப்பாள்.
சுஜாதா. புனைபெயராக பெண் பெயர் வைத்திருக்கும் ஒரு பொறுப்பான அரசு அதிகாரி, எழுத்தாளர், வெறும் எழுத்தாளர் இல்லை, பிரபலமான ரைட்டர் இத்யாதி விஷயங்களை சுஜாதா சார் வீட்டு வரவேற்பறையில் காத்திருந்தபோது சொன்னேன். தமிழ் படிக்கத் தெரியாத, மும்பைக்கார மனைவி பாதி புரிந்து சந்தோஷமாகத் தலையாட்டினாள். அவளுக்குப் போட்டி இல்லை.
அசல் சுஜாதாம்மா உள்ளே இருந்து கொறிப்புத் தீனித் தட்டுகளோடு வர, ‘என் ஒய்ப்’ என்று சுருக்கமாக அறிமுகப்படுத்தி விட்டு சோபாவில் ஓரமாக உட்கார்ந்து, நான் முன்னால் போட்ட புத்தக மூட்டையை ஆராய முற்பட்டார் சுஜாதா. எல்லாம் ரஷ்ய, சீன, ஜெர்மன் மொழிபெயர்ப்பு புதுக் கவிதைத் தொகுப்புகள். ஊஹும், நான் பெயர்க்கலை. யாராரோ. அவர் படிப்பாரோ?
‘இந்தக் கவிதையிலே குழந்தை செத்துப் போன அம்மாவோட அனுபவத்தை எத்தனை அழகா சொல்றார் பாருங்க’ என்று நான் அவர் விரித்துப் பிடித்திருந்த புத்தகத்தை நான் சிலாகிக்க, ‘ஆம்பளை பார்வை.. அது போலி’ என்றார் அவர். ஒரு தாட்டியான ரஷ்யக் கவிஞர் தாடியைத் தடவிக் கொண்டு சுவரில் சாய்ந்து சிரித்தார். பக்கத்தில் பல்லி கெக்கெக் என்று கூடவே சிரித்தது.
என் மனைவிக்கு சூழ்சிலை அலுப்புத் தட்ட ஆரம்பித்திருக்கும். மிசஸ் சுஜாதாவும் இப்படி எத்தனை பார்த்திருப்பாங்க? புதுசா வந்தவர்களிடம் என்ன பேச?
பெங்களூர்லே எங்கே எல்லாம் போனீங்க?
அவர் என் மனைவியைக் கேட்க, குல்கந்து சாப்பிட்டுட்டு கையைக் கூட துடைச்சுக்காம நேரே இங்கே தான் வந்திருக்கார் என்று பாதி புகாரும் பாதி அலுப்புமாகச் சொன்னாள் அவள்.
புரியறது. நான் இருபது வருஷமா எப்படி குடித்தனம் நடத்தறேன் தெரியுமோ? ஒரு வெகேஷன், ஒரு சினிமா, கோவில், உறவு, சிநேகிதம்னு வீட்டுக்குப் போறது.. ஒண்ணு கிடையாது. எப்பவாவது அபூர்வமா வாய்க்கும். அன்னிக்கு படிக்க புஸ்தகம் இருந்திருக்காது. இல்லே பத்திரிகைக்கு எழுதி முடிச்சிருப்பார்.
சுஜாதாம்மா குறையொன்றுமில்லை என்று கலகலவென்று சிரிக்க, இவர் மகா வெகுளியாக அங்கேயும் இங்கேயும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.
கட்டுரை, நாவல் என்று எல்லாம் போகாமல் கணையாழியில் வார்த்தையை மடித்து புதுக்கவிதையும் ஜாக்கிரதையாக சிறுகதையும் எழுதிக் கொண்டிருந்த நான் நேற்றுக்காலை வெப்பமான பகல் நேரத்தில் தாலிகட்டிய மனைவி சொன்னதை இருபது வருஷமாக ஒரு மகா எழுத்தாளரின் மனைவியாக வளைய வரும் சுஜாதாம்மா புரிந்து கொண்ட சூட்டிகை சுஜாதா சாருக்குக் கூடக் கைவராது.
அவரை நான் சந்தித்தது அப்போது முதல் தடவை இல்லை. என் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட பதிப்பாளர், ‘பண முடை.. ஒரு ரெண்டாயிரம் கொடுங்க, புத்தகம் வந்து வித்ததும் திரும்பக் கொடுத்திடறேன்’ என்றார். கொடுத்தேன்.
அடுத்த வினாடி, ‘வாங்க பெங்களூருக்கு ஒரு நடை போயிட்டு வந்துடலாம்’ என்றார் அவர். அவ்வளவு தூரம் நடக்க முடியாது என்று நான் தீர்மானமாகச் சொன்னபிறகு, ரஜினிகாந்த் படம் ஓடிய பெங்களூர் டூரிஸ்ட் பஸ்ஸில் பெங்களூர் போய்ச் சேர்ந்து, காராபாத், கேசரி பாத் சாப்பிட்டு விட்டு பார்க்கப் போனது சாட்சாத் சுஜாதாவைத்தான். அவருக்கும் இவர்தான் அன்றைய ஆஸ்தான பப்ளிஷர்.
நான் கொடுத்த ரெண்டாயிரத்தில் ஒரு ஆயிரத்தை ஒரு பிளாஸ்டிக் தட்டில் நாலு வெற்றிலை பாக்கோடு வைத்து சுஜாதாவிடம் நீட்டும்போது என்னையும் எதுக்கோ தட்டை ஓரமாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார். சுஜாதாவை அவ்வளவு பக்கத்தில் பார்த்த சந்தோஷத்தில் (காதில் முடியை ஏன் ஷேவ் செஞ்சுக்கலை?) நான் முழுத் தட்டையுமே ஏந்தத் தயாராக இருந்தேன். என் முதல் சிறுகதைத் தொகுப்பு எப்போ வரணுமோ அப்போ வரட்டும். இந்த சந்தோஷமே எதேஷ்டம்.
“நல்ல வேளை. மார்ச் மாசமில்லையா. ஆபீசுலே சம்பளத்திலே கிட்டத்தட்ட முழுசையும் இன்கம் டாக்சுக்குப் பிடிச்சுட்டாங்க. இந்த ஆயிரம் நிதி மாதிரி.”
சுஜாதா பணத்தை சட்டைப் பையில் வைத்துக் கொண்டார்.
இவ்வளவுக்கும் அவர் பி இ எல்லில் பெரிய அதிகாரி. ஆனால் என்ன? முப்பது வருடம் முன் அவர் சம்பளம் இன்கம் டாக்ஸ் போக அவ்வளவுதான். பி.எப் லோன் போட்ட எனக்கு மட்டுமில்லை, இன்கம் டாக்ஸ் பிடிக்கப்பட்ட அவருக்கும் ஆயிரம் ரூபாய் பெரிய தொகைதான். சுஜாதாவும் நானும் ஒரே நேர் கோட்டில் என்று அன்று தோன்றியதில் இருந்த ஆனந்தத்தைத் சொல்ல வார்த்தை ஏது?
சிறுகதைத் தொகுப்பின் காலி ப்ரூப்பை கடகடவென்று இருபது பக்கம் படித்தார் சுஜாதா. அவர் அளவு வேகமாகப் படிக்கிறவரை பார்த்ததே இல்லை.
‘நீ கவிதையா கதையான்னு முதல்லே முடிவு பண்ணிக்கோ’.
சிரிக்காமல் சொன்னார். இவ்வளவுக்கும் அசோகமித்திரன் முன்னுரையில் அந்தத் தொகுப்பைப் பாராட்டி இருந்தார்.
“ஜம்ப் கட் உத்தி எல்லாம் சரிதான். கதை எழுத வேறே ஜீன்ஸ் வேணும். கவிதை மாதிரி கதை எழுதினா ஒண்ணு படிக்கலாம், ரெண்டு படிக்கலாம்.. திகட்டிடும்”
நான் பரிதாபமாக அவரைப் பார்க்க, ‘சினிமாவுக்கு பாட்டு எழுதறியா? சொல்லு’ என்று ஆதரவாகக் கேட்டார். வேணாம் சார். கதை தான் எழுதணும்.
ஒரே மனிதர் மேல் பக்தியும் அவர் செய்யாததை செய்ய வேண்டும் என்ற வேகமும் ஏற்பட்டதற்கு அவருடைய விமர்சனமும் காரணம்.
பக்தி பின்னாட்களில் என் அறிவியல் கட்டுரைகள் வடிவத்தில் வெளிப்பட்டது. அறிவியல் கட்டுரைகளை எளிமையாக, சுவாரசியமாகத் தமிழில் எழுத சுஜாதா தமிழ் தவிர வேறே மார்க்கம் இல்லை. சுஜாதா மாதிரி எழுதறான் என்று இசையும் வசையும் எனக்குக் கிடைக்க என் கம்ப்யூட்டர் கட்டுரைகள் முக்கிய காரணம்.
சிறுகதை, நாவலில் சுஜாதா தொடாத மேஜிக்கல் ரியலிசம், காலமும் ஒரு பரிமாணாமாகக் கதை சொல்வது என்றெல்லாம் சோதனை செய்யும்போது, அவர் என் பின்னால் இருந்து ‘இதுக்கெல்லா ஒரு கோஷ்டியே அலையறது’ என்கிறார். சிரித்துவிட்டு நான் பாட்டுக்குத் தொடர்கிறேன்.
அவருக்கு இருந்த பிரபலத்துக்கு, தமிழ்க் கதையை உலகத் தரத்துக்கு எடுத்துப் போயிருக்கலாம். பத்திரிகைத் தொடர்கதையோடு அடங்கி விட்டார்.
வேணாம். மார்ச் மாசப் பகலில் கல்யாணமானதற்கு அடுத்த நாள் குல்கந்து பிசுக்கோடு பெங்களூர் போன நாளுக்குத் திரும்பப் போய்விடலாம்.
“கணையாழி, கதிர்லே எல்லாம் கதை பார்க்கிறேன்பா”.
படிக்கிறீங்களா சார்?
தொகுப்பு கொண்டு வா. சாவகாசமா படிக்கலாம்.
அவரும் சுஜாதாம்மாவும் வழி அனுப்பிய போது கையில் இன்னும் ரோஜா வாசனையோடு குல்கந்து பிசுபிசுத்தது.
இரா.முருகன்
(சாகித்திய அகாதமிக்காக நான் எழுதிய ‘இந்திய இலக்கியச் சிற்பிகள் – சுஜாதா’ நூல் முதல் வடிவம்)


February 20, 2024
குவளை தேநீரோடு ஷேம வர்த்தமானம் எழுத முற்படும் அமேயர் அச்சன்
வாழ்ந்து போதீரே – அரசூர் வம்சம் நாவல் வரிசையில் நான்காம் நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி
பிரியத்துக்கு பாத்தியதை உள்ளவர்களே, உங்களுடைய ஆத்மா ஜீவித்திருப்பது போல நீங்கள் அனைத்திலும் சுகமாக ஜீவித்திருக்க கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவின் திருநாமத்தால் வாழ்த்துகிறேன் (யோவான்).
நேசமான புத்ரி கொச்சு தெரிசா, கொச்சு தெரிசாளின் அன்பான கணவன் ஜனாப் முசாஃபர் அலி சாஹேப், நலம் தானே நீங்கள்? நான் இங்கே கால்டர்டேலுக்கு ஐந்து நாள் முன்பாக அதாவது கடந்த மாசம் இருபத்தெட்டாம் தேதி திங்கள்கிழமை காலையில் நலமாக வந்து சேர்ந்தேன்.
அமேயர் பாதிரியார் இங்கிலாந்து போய்ச் சேர்ந்த கையோடு கொச்சு தெரிசாவுக்கு எழுதிய கடிதம் இப்படி ஆரம்பித்தது. இந்த நாலைந்து வரியை எழுதவே அவருக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது.
வயோதிகம் தான் காரணம். அமேயர் பாதிரியாருடைய அறிவின் ஒரு கோடியில், இப்படிச் சுணங்கியதற்குக் காரணமாக வயது சொல்லப்பட்டது.
எனில், பசிக்கும் போது ஆகாரம் இவ்வளவு போதும் என்று தோன்றும் வரை சாப்பிடவோ, தேத்தண்ணீர் பெரிய குவளையில் அளவாகச் சர்க்கரை சேர்த்து நல்ல சூடாக வழங்கச் சொல்லிக் கோரிக்கை விடுத்துக் காத்திருக்கவோ எந்த விதமான தாமதமும் குறுக்கே வருவதில்லை என்பதையும் பாதிரியார் நினைத்துப் பார்த்தார்.
அதை எல்லாம் இயக்கும் இன்னொரு பகுதி மூளையில் இருந்தால் அதுவும் வயோதிகத்தால் தளர்ந்திருக்கும் இல்லையா? இல்லையே. பசியும் தாகமும் தீர்க்கத் தீர்க்க அதிகமாகிறதே தவிர, கொஞ்சமாவது குறைந்திருக்கிறதா?
பாதிரியாருக்குத் தெரியவில்லை. இதை எல்லாம் இன்னும் அதிகமாக ஆராய்ந்து புத்தகம் போட்டால், வாடிகனில் இருந்து சீரிய சிந்தனையாளர் என்று எழுதிய காகிதக் கிரீடத்தோடு வந்து யாரும் அவருக்கு அணிவித்து வாழ்த்திப் போகப் போவதில்லை.
அப்பன், சாயா எடுத்துக் கொள்ளணும். உங்களுக்காக இந்திய மோஸ்தரில் பாலையும் டீத் தூளையும் தனித் தனியாகச் சுட வைத்துக் கலந்தது.
கால்டெர்டெல் மார்க்கெட்டில் கசாப்புக்கடை வைத்திருக்கும் பெர்ணாந்தஸ். அமேயர் பாதிரியாருக்கு அன்போடு ஒரு குவளை தேநீர் தர முன் வந்தான்.
February 19, 2024
பணிமுடக்கு தினத்தன்று குளித்து அம்பலம் தொழ வந்தவர்கள்
வாழ்ந்து போதீரே நாவலின் அடுத்த ஈடு (அரசூர் நாவல் வரிசையின் நான்காவது நாவல்
குளித்து அம்பலம் தொழ வந்த ஒரு கூட்டம் பெண்கள் வர, பிடிவாதமாகக் கண்ணைக் கவிந்து கொண்டு பிரகாரம் சுற்றினான் திலீப். கூடவே வந்து, சூழ்ந்து, விலகிப் போன, அம்மே நாராயணா என்று நாமம் சொல்லிக் கொண்டு வந்த அந்தக் கும்பலில் இருந்து. குளத்து நீர்த் தாவர வாடையும் சந்திரிகா சோப்பு வாசனையும், ஈரத் தலைமுடி வாடையும், அரைத்த மஞ்சள் மணமும், பல்பொடி வாசனையும் தூக்கலாகக் கலந்து உயர்ந்து கொண்டிருந்ததை அனுபவித்தபடி வெடித் தரைப் பக்கம் நடந்தான். இவர்களுக்குப் பணி முடக்கு இல்லையென்று விதித்த எல்லோருக்கும் மனதுக்குள் நன்றி சொன்னான் அவன்.
ஓரமாகச் சுருண்டு படுத்திருந்தான் வெடிவழிபாட்டுக்காரன்.
முத்தச்சா முத்தச்சா
திலீப் எழுப்பி முழுசாக ரெண்டு நிமிஷம் கழித்து எழுந்து உட்கார்ந்தவனின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.
நீங்க போங்க தம்பி. என் கிட்டே வர வேணாம் இப்போ
திரும்பத் திரும்பச் சொன்னான் அவன். ஒன்றும் புரியாமல் நின்றான் திலீப். ஏதாவது தொற்றுநோய் பாதித்திருக்கலாம் என்று நினைப்பு.
இன்னிக்கு வேலைக்கு வரலே என்றான் வெடி வழிபாட்டுக்காரன்.
காலையில் ஒரு கூட்டம் வௌவால்கள் தாழப் பறந்து வந்து அவன் மேல் உட்கார்ந்து றெக்கை நாற்றத்தோடு அவனை எழுப்பினவாம். அப்போது அவன் கண்டு கொண்டிருந்த கனவில் திலீபும் வாட்டசாட்டமான ஒரு மதாம்மாவும், என்றால் சின்ன வயது வெள்ளைக்காரியும் வௌவால் தொங்கும் மண்டபத்துக்குள் போய்க் கொண்டு இருந்தார்களாம். அந்தப் பெண் திலீப்பின் இடுப்பில் தாழ்வாகக் கை வைத்து அணைத்திருந்த இடம் சரியில்லையாம். கண்ணூரில் வெடிக்காரனைக் கடித்த பட்டன் அப்படித்தான் ஆரம்பித்தானாம். இவள் பட்டன் இல்லை. பெண்பிள்ளை. கடிக்க எல்லாம் மாட்டாள் தான். ஆனாலும் ஜாக்கிரதையாக இருக்க வேணும் என்று எச்சரிக்கவே வெடிக்காரன் திலீப் பின்னால் வந்து கொண்டிருந்தானாம்.
வெடிக்காரன் கனவிலே, அந்த மண்டபத்துக்கு உள்ளே, பேப்பர் மில் மாதிரி என்னென்னமோ மெஷின் . ஆனா எதுவும் வேலை செய்யலே. எல்லா மெஷின் மேலேயும் அண்டங்காக்கா மாதிரி வௌவால் உட்கார்ந்திருக்கு. வாசல்லே கம்பி வலைக்கு அந்தப் பக்கம் ஆயிரம் பத்தாயிரம் பேர் கொடியோட நிக்குது. வேலாயுதன் நாயரும் தந்த்ரியும் அர்ஜுன நிருத்தத்துக்கு வந்த பதினேழு பேரும், செண்டையோடு மாராரும் அந்தக் கூட்டத்தில் அடக்கம். எல்லாரும் நின்று ஜிந்தாபாத் சொல்லி எதற்கோ போராடுகிற விஸ்தாரமான கனவாம் அது.
வெகு பின்னால் இருந்து கத்தியை ஓங்கிக் கொண்டு ஒருத்தன் நீலச் சட்டையும் கிழிந்த கால் சராயுமாக ஓடி வந்ததில் கனவு முடிந்ததாம். அவன் அலறிக் கொண்டே எழுந்திருக்கவும், வௌவால்கள் கருத்த அழுகி நாற்றமடிக்கும் சிறகு சிலிர்த்துப் பறந்து போனதாம்.
நீங்க போய் இன்னிக்கு ஆப்பீஸை அடைச்சுப் பூட்டுங்க. பணிமுடக்கு. யாரும் அர்ஜுன நிருத்தம் ஆடிக் காட்டவோ அரையிலே கடிக்கவோ வரப் போறது இல்லே. மதாம்மா யாரும் வந்தா பக்கத்திலே சேர்க்க வேணாம். பொம்பளை வேணும்னா நாளை ராத்திரிக்கு ஏற்பாடு செஞ்சு தருவானாம் அவன். சுத்தமா குளத்தில் குளிச்சு ஈரத் தலைமுடியோடு வர்ற, பல்லு விளக்கின பொண்ணு அது. சொன்னதைச் செய்யும். கண்ணூர் பட்டன் மாதிரி கடிச்சு கையிலே எடுக்காது.
வெடிக்காரன் பழைய கதையில் ஆழ்ந்து சுருண்டு படுத்துக் கொண்டபோது பணிமுடக்கு ஏற்படுத்தும் சந்தோஷத்துக்கு ஈடான இன்னொரு சந்தோஷத்தை அடைந்திருக்கிறதாக திலீபுக்குத் தோன்றியது. ஒரு ஆயுசுக் காலம் முழுவதும் அதுவே நினைப்பாகிப் போனது அந்தப் பாவம் மனுஷனுக்கு.
ஆபீசில் யாரும் வந்திருக்கவிலலை. வாசல் கதவில் ஏதோ செருகி இருந்தது கண்ணில் பட்டது. இண்லண்ட் லெட்டர்.
இந்த களேபரத்துக்கு நடுவிலேயும் போஸ்ட்மேன் வந்திருக்கிறார் போலிருக்கு. இல்லை, வேறே யாராவது நேற்றே வாங்கி இப்போது கொடுக்க வந்து, ஆள் இல்லையென்று கதவில் செருகிப் போயிருக்கலாம்.
அவனுக்கு வந்தது தான். அகல்யா எழுதிய இண்லாண்ட் லெட்டர். நுணுக்கி நுணுக்கி மராட்டியில் எழுதியிருந்த் கடிதம் அது.
பாண்டுரங்க விட்டலன், விடோபா, காண்டோபா சாமிகள் துணை. உங்க அட்ரஸ் சந்தேகமாக இருந்ததாலும் கேரளத்தில் அதுவும் நீங்க இருக்கும் கிராமத்தில் மலையாளமும் இங்கிலீஷும் இந்தியும் அல்லாத வேறே பாஷை தெரிஞ்சவங்க இருக்க வாய்ப்பு இல்லை என்பதாலும் நம் ரெண்டு பேருக்கு மட்டும் அர்த்தமாகும் மராத்தியில் எழுதியிருக்கேன்.
அம்மாவுக்கு ஈசனோபிலியாவுக்காக ஆஸ்பத்திரி போனது, திலீப்பை இறுகத் தழுவி கீழ் உதட்டைக் கவ்வி முத்தம் கொடுக்க ஆசை, தம்பி ஸ்கூல் பைனல் பரீட்சைகளில் வாங்கிய மார்க் விவரம், கூட்டம் இல்லாத ராத்திரி எலக்ட்ரிக் ரயிலில் திலீப் அவளிடம் செய்த விஷமங்களின் அட்டவணையும் அவற்றைப் பற்றிய நினைப்பும், தங்கை டைப் ரைட்டிங் படிக்க ஆசைப்படுவது, ஹால்டா டைப்ரைட்டர் சிலாக்கியமா ரெமிங்டன்னா, கல்யாணம் ஆனதும் ரெண்டு பேரும் தனிக்குடித்தனம் போக வேண்டிய அவசியம், பிட்மன் ஷார்ட் ஹேண்ட் புத்தகம் பழைய புத்தகக் கடையில் மலிவாகக் கிடைத்தால் வாங்கி வரணும், விவித்பாரதிக்கு போஸ்ட் கார்ட் போட்டு ஒலிபரப்ப வைத்த தேவ் ஆனந்த் சினிமா பாட்டு, ஆபீஸ் தோழியோடு சனிக்கிழமை சாயந்திரம் ரகசியமாகப் போன தாதா கோண்ட்கே மராத்திப் படம் ஐயே கர்மம், கேரளா சாப்பாடு தேங்காய் போட்டது ஆச்சே, ஒத்துக் கொள்கிறதா, அங்கே மதர்த்து திரிகிற பெண்கள் மயக்கிக் கூட்டிப் போய் ஆயுசு பூரா அடிமை ஆக்கி குளிக்கும்போது முதுகு தேய்த்து விடச் சொல்வார்கள் என்று மாடுங்கா சத்சங்கத்துக்கு ராஜிமாமியோடு திவசச் சமையலுக்கு ஆள் தேடிப் போனபோது பேச்சு அடிபட்டதால் கவனம் தேவை. இப்படி வளர்ந்து போன கடிதத்தை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான் திலீப். அகல்யாவை உடனே பார்க்கணும் என்று ஆசை மனதில் மூண்டெழுந்து வர, மேலும் படித்தான்.
கார்ப்பரேஷன் எலக்ஷனுக்கு கட்சி வேட்பாளர்களை முடிவு செய்கிறதாம். அடுத்த வாரத்துக்குள் திலீப் வந்தால் அவன் இருக்கும் வார்டுக்கு நிற்க வைக்க வாய்ப்பு இருக்குமாம். அவன் அரைகுறை மராத்திக்காரன் என்பதும் பூசி மெழுகப்பட்டு புது அடையாளம் கிடைக்கக் கூடுமாம். முடிந்தால் உடனே வந்து போகணும் என் ராஜா.
ராஜா ராணியைப் பார்க்கப் புறப்பட்டாச்சு.
February 16, 2024
சோபான சங்கீதமும் பிஸ்கட் சாஸ்திரி எடுத்தெறிந்த சோம்பேரி சங்கீதமும்
வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது நாவலில் இருந்து -ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு
முட்டை ரெண்டு கொடு நாயரே
சைக்கிளை நிறுத்திக் கேட்டான் திலீப்.
ஏய் அது பாடில்ல. கொடுத்தா என்னை நொங்கிடுவாங்க என்று உச்ச பட்ச மகிழ்ச்சியோடு சொல்லியபடி போனான் நாயர். ஒரு நாள் வியாபாரம் கெட்டது பற்றி ஒரு புகாரும் அவனுக்கு இல்லை போல.
கோவிலில் இருந்து செண்டை மேளம் சத்ததோடு மாரார் குரல் எடுத்துப் பாடுவதும் கேட்டது. அவரை திலீப் அறிவான். அர்ஜுன நிருத்தம் தெரிந்தவர்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்த அடுத்த தினத்தில் செண்டையோடு படி ஏறி வாசித்துப் பாடிக் காட்டி அது காரியத்துக்கு ஆகுமென்றால் சேர்த்துக் கொள்ளச் சொன்னார் சின்னச் சிரிப்போடு அவர். பிஸ்கட் சாஸ்திரி நிராகரித்தது மட்டுமில்லை, அவர் போன பிற்பாடு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விமர்சனம் வேறே வைத்தார் –
இதுக்கு பேரு சோபான சங்கீதமாம். சோம்பேறி சங்கீதம்னு வச்சிருக்கலாம். நல்ல வேளை இது கேரளத்துக்கு வெளியே வந்து புழங்கி, இதான் மதராஸி சங்கீதம்னு மானத்தை வாங்காமப் போச்சு
பிஸ்கட் மண்டையில் மேலே சுழன்று கொண்டிருந்த ஃபேன் விழுந்து மூஞ்சி நசுங்கிப் போவதைக் கற்பனை செய்தபடி அப்போது அடுத்து நிருத்தமாட வந்தவரைக் கவனித்தது திலீபுக்கு நினைவு வந்தது. மாராருக்கு இன்றைக்கு பணி முடக்கு இல்லை போல. என்றைக்கும்?
அம்பலமும் செண்டையும் மாராரும் கோவிலில் இருந்து கூப்பிடுகிறது கேட்கிறது. அங்கேயே போகலாம். பணிமுடக்கு பகவானுக்கு இருக்காது. பசியாற ஏதாவது கிடைக்கலாம்.
திலீப் நம்பிக்கையோடு சட்டையை அவிழ்த்து ஒரு தோளில் தாழத் தொங்க விட்டுக் கொண்டு கோவிலை நோக்கி நடந்தான்.
தரிசனம் முடிந்து எதிர்பார்த்தபடியே பிரகாரத்தில் உன்னியப்பம் நாலைந்து ஒரு இலை நறுக்கில் வைத்து கோவில் தந்த்ரி திலீப் கையில் போட்டார். வந்த ஒரு மாதத்தில் கோவில் ஊழியர்கள் யார் என்ன பதவி என்று தெரிந்து கொள்ள உதவி செய்தவர் உப புரோகிதரான தந்த்ரி தான். திலீப் பழகிய கொஞ்ச நஞ்சம் மலையாளமும் இவரும் மாராரும் சொல்லிக் கொடுத்தது தான்.
இன்னிக்கு பணி முடக்காமே மாமா? நான் பட்டினி முடக்க முடியுமோ?
திலீப் சோகமாகக் கேட்க, தந்த்ரி தாராளமாக இன்னும் நாலு உன்னியப்பமும் மிளகு புரட்டிய சாதமுமாக மீண்டும் அவன் கையில் தொப்பென்று இட்டார். வேலு நாயர் கடை முட்டை ஆப்பாயிலை விட அமோகமாக இன்றைக்குக் காலைச் சாப்பாடு திலீபுக்கு. சாயா கிடைக்காவிட்டால் என்ன? ஊரில் இருக்கப்பட்ட நெய், சர்க்கரை எல்லாம் கொட்டிக் கலந்து கிளறி கொதிக்கக் கொதிக்க அம்பலத்துப் பால் பாயசம் ஒரு கும்பா நிறையக் கிடைத்தது. இன்னும் நாலு நாள் பணிமுடக்கினாலும் பிரச்சனை இல்லை. சாயந்திரமும் இங்கே வந்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தான் அவன்.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

