முன்னூறு வருடம் முன்பு கொல்லரிடம் சாவி வாங்க பணம் கொடுத்தவனின் ஆவி

வாழ்ந்து போதீரே -நான்காம் அரசூர் நாவல் பகுதி

ஊரில் போன மாதக் கடைசியில் பேய்களின் ஆராதகன் ஒருவன் குடியேறி இருப்பதாக அமேயர் பாதிரியாருக்குத் தெரிய வந்தது. பேயோட்டுகிறவன் இல்லை இவன். பிசாசு இருப்பதாகத் தெரிந்த இடங்களில் ராத்தங்கி, அவற்றோடு பேசவும் பழகவும், முடிந்தால் கேமராவில் அவற்றைப் படம் பிடிக்கவும் ஆர்வம் உள்ளவனாம். அம்மாதிரியான இடங்களில் தங்கி இருந்து நடவடிக்கைகளைக் கவனிக்க அவன் பணம் செலவழிக்கவும் தயாராம்.

 

அட்சன் முடுக்குச் சந்தில் முப்பது பரம்பரைக் கொல்லன் பெர்ரியின் வீட்டு முகப்பில்  ஒரு ஆவி உண்டு. முன்னூறு வருடங்களுக்கு முன் கோட்டைக் கதவுக்கு மாற்றுச் சாவி செய்யப் பணம் கொடுத்து இன்னும் அந்தச் சாவி  கிடைக்காமல் காத்திருக்கும் ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தனின் ஆவி அது. பௌர்ணமி இரவுகளில் சாவி வேணும் சாவி வேணும் என்று அது பாடுவது உண்டாம். அதைக் கேட்கக் கொல்லனுக்கு பத்து பவுண்ட் வாடகை கொடுத்து பிசாசு ஆராதகன் அந்த வீட்டில் தங்கினதாகக் கேள்வி. பூட்டி வைத்த எல்லா வீடுகளுக்கு உள்ளும் அவன் பிசாசு ஆராய்ச்சிக்காக நுழைய ஆர்வம் காட்டுகிறானாம். நல்லதிற்கில்லை இது என்று அமேயர் நினைத்தார்.

 

ஆராதகர்கள் ஒரு பக்கம் பிசாசுகளின் தோளில் கை போட்டு அணைத்துச் சேர்ந்து சுற்ற முன்வர, உள்ளூர்ப் பேய்கள் தங்கள் விளையாட்டுகளை மும்முரமாக்கிக் கொண்டிருப்பதாகவும் அமேயர் பாதிரியார் காதில் விழுந்தது.

 

கால்டர்டேல் நைட் கிளப்பில் சுற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டு விடலைப் பேய் ஒன்று உண்டு. ஆண் தான். நைட் கிளப்பில் இருந்து வந்து, அமேயர் பாதிரியாருக்கு இருபது பவுண்ட் தட்சணை வைத்து அந்தப் பேயை ஓட்ட வரச் சொன்னார்கள் ஒரு முறை. அது சில ஆண்டுகள் முன்பு நடந்தது.

 

அவர் சகல சாமக்கிரியைகளோடும் உதவியாளர்களோடும் அங்கே போக, அவசரமாக உள்ளே அழைத்த நைட்கிளப் உரிமையாளர் சொன்னார் –

 

அச்சன், நாலைந்து வாடிக்கையாளர்கள், எல்லோரும் கிழவர்கள், அவர்கள் சல்யம் பொறுக்கமுடியாமல் உங்களைப் பேயோட்டக் கூப்பிட்டது. உள்ளபடிக்கு அந்தப் பேய் பற்றிய வதந்தியால் தான் கிளப் நிரம்பி வழிகிறது. அதுவும் போன வாரத்தில் பெண்கள் கூடவே பிசாசு உள்ளே நுழைவதாகச் செய்தி. கடைசி வரிசை இருக்கையை அந்த ஆவி ஆக்ரமித்துக் கொள்ள அதன் மடியில் அமர்ந்து சிலீரென்று பிருஷ்டம் ஈரமாக, அரக்கப் பரக்க வெளியே ஓடி வரும் பெண்களைப் பின்னால் தொட்டுப் பார்க்கவே வெளியூர்க் குடிகாரர்கள் வந்து சேர்கிறார்கள் இருந்து விட்டுப் போகட்டும். வியாபார விருத்தி ஆகிறது. வந்ததற்கு ஒரு பிரார்த்தனையும் நன்றி அறிவிப்பும் சொல்லிப் போங்கள்.

 

அன்றைக்கு விரட்டாமல் திரும்பி வந்த விடலைப் பிசாசு இப்போது பெண்கள் கழிவறையில் தண்ணீர் திறக்க வேண்டிய நேரத்தில் நீர்ப் போக்கை அடைக்கிறதாம். காலிலும் தலையிலும் தண்ணீர்க் குழாய் திறந்து பெண்களின் உடுப்பை நனைக்கிறதாம். இன்னும் மோசமாக, பெண்கள் கழிவறைக் கதவுகளை, உள்ளே யாராவது இருக்கும் போதே மட்ட மல்லாக்கத் திறந்து வைக்கிறதாம். அது மட்டுமில்லை, இருக்கும் வெளிச்சமான விளக்குகளை எல்லாம் போட்டுக் கழிப்பறையைப்  பிரகாசப்படுத்துகிறதாம். கழிவறைச் சத்தங்களை ஒலி பெருக்குகிறதாம். கேட்பவர்களுக்கு மனக் கிளர்ச்சி உண்டாகும் படி அந்தரங்க பாகங்களைக் கிசுகிசுக்கும் குரலில் வர்ணிக்கிறதாம்.

 

மேற்படித் தகவலை பெர்னாந்தஸ் குறையாகச் சொன்னாலும் அவன் முகத்தில் சந்தோஷம் இருந்ததைக் கவனித்தார் அமேயர் பாதிரியார். வியாபாரம் இன்னும் அதிகமாக இதைவிட வேறே என்ன மார்க்கமுண்டு?

 

நேரம் கிடைக்கும் போது நைட் கிளப் வாசலில் ஒரு பிரார்த்தனை ஏற்பாடு செய்து நடத்தி விட்டு வந்தால் சர்ச்சுக்கு வரும் கூட்டம் அதிகரிக்கலாம். இன்னும் இரண்டு மாதத்துக்கு ஞாயிறு தோறும் இதைப் பற்றிப் பிரசங்கம் செய்து திருப்பலி தரலாம். இந்தச் சிந்தனையைப் பத்திரமாக நினைவில் மூடி வைத்தார் அவர்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2024 23:56
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.